Skip to main content

ஷாஜகானின் காட்டாறு




அண்மைக்காலங்களில் தமிழில் வாசிப்பது என்பது பெரும்பாலும் அயர்ச்சியையே கொடுத்து வந்திருக்கிறது. அதற்குக் காரணம் அவை வாசிப்புக்கு உகந்ததாகாமல் போய்விட்டன என்பதல்ல. அவற்றை வாசிக்கும்போது என் மனநிலை தளம்புகிறது. தமிழில் வாசிக்கும்போது கதைக்களனுக்குள் நுழைந்து ஒன்றிணையமுடியாமல் வாசிப்பு மனநிலை அலைக்கழிக்கப்படுகிறது. நூல்களையும் அவற்றை எழுதிய எழுத்தாளர்களையும் உள்ளடக்கிய புறச்சூழ அரசியலும் விவாதங்களும் அவர்களை வாசிக்கும்போது முழித்துக்கொண்டு ஒவ்வொரு பக்கங்களிலும் நிற்பதைத் தவிர்ப்பது கடினமாக இருக்கிறது. அதனால் அவற்றிலிருந்து வலிந்து விலகி நின்று, எழுத்தாளர்களின் பொதுவெளிகளை அவதானிக்காமல், அவர்களுடைய முகநூல், இணையத்தள, காணொலிப்பதிவுகளைக் கவனிக்காமல் நூல்களை மாத்திரமே தேடி வாசிக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. வேற்றுமொழி இலக்கியங்களை வாசிக்கும்போது இந்த மனநிலை ஏற்படுவதில்லை. அந்தப் புத்தகங்களை அவற்றின் புறவெளி விவாதங்களைப்பற்றி அறியாமலேயே அணுகமுடிகிறது. அதனால் புத்தகங்களின் உள்ளடக்கங்களோடு நெருங்குவது என்பது இலகாகிறது.  கேட்கப்படாத பாடல்கள்போல வாசிக்கப்படாத புத்தகங்களும் கொஞ்சம் அதிகம் அழகுதான்.

ஆச்சரியமாக ஷாஜகானின் “காட்டாறு” தொகுப்பை வாசித்தபோது மிக இயல்பாக அந்தக் கதையுலகத்துக்குள் நுழைய முடிந்தது. அவரைப்பற்றி அதிகம் அறியாமலிருந்ததும், தன்னைப்பற்றி அவர் அதிகம் பேசாமல் அமைதியாக இருப்பதும் அதற்குக் காரணங்கள் என்று நினைக்கிறேன். மிக நுணுக்கமான, பல மடிப்புகளைக்கொண்ட கதைகளைச் சொல்லும் இயல்பான கதை சொல்லி ஷாஜகான். இதற்குமுதல் அசோகமித்திரனிடம் இந்தக் கதைசொல்லல் பாங்கை அவதானித்திருக்கிறேன். மூலக்கதைகளில் போகிற போக்கிலே பட்டும்படாமலும் ஷாஜகான் வீசிப்போகும் கிளைக் கதைகள் ஏராளம் கிடைக்கின்றன. பறவைகள் சுமந்துசெல்லும் வேப்பம் விதைகளைப்போல. கதைகள் என்றாலே அவை சொல்லப்படவேண்டியவைதாம். ஆனால் சொல்லப்படும் கதைகளில் பெரிதும் தேடி உணரப்படுவது அவற்றில் சொல்லாமல் விடப்படும் கதைகளே. ஷாஜகானின் கதைகளில் அப்படிச் சொல்லாமல் விடப்படும் கதைகள் ஏராளம் கிடைக்கின்றன. அவை நம்மை அடிக்கடி புத்தகத்தை மூடிவைத்துவிட்டுச் சிந்திக்க வைக்கின்றன. அதுவும் மிக எளிமையான கதைகளில் இவ்வகை உணர்வுகளை விட்டுச்செல்லும்போது அவற்றின் வலிமை இன்னமும் அதிகமாகிறது. 

சென்றமுறை வாசகர் வட்டத்தில் உந்தக் ‘காட்டாறு’ நூலை எடுத்து உரையாடிக்கொண்டிருந்தோம். காட்டாறு நம்மை நிறையப் பேச வைத்தது. நூலை விடுத்து நம் கதைகளையும் வெளியே கொண்டுவந்தது. அப்போதுதான் உணர்ந்தேன், ஷாஜகான் தன் கதைகளில் சொல்லாமல் விட்டுப்போனவை எல்லாமே நம் கதைகள்தாம் என்று. 

வழமைபோல அன்றைக்கும் எழுத்தாளரைத் தொடர்புகொண்டு பேசுகின்ற சங்கடமான காரியத்தை நாங்கள் மீளவும் செய்தோம். இனிமேல் அவரை வாசிக்க முயலும்போது அவர் குரலும் ஒருசேர ஒலிக்கப்போகிறதே என்று கவலையாக இருக்கிறது. போகட்டும். அவர்  அதிகம் எழுதுவதில்லை என்பதால் காரியமில்லை. 

எழுத்தைப்போலவே ஷாஜகானின் பேச்சும் நிறைய உண்மைகளோடு கூடி வந்தது. மிக நேர்மையுடனும் அதே சமயம் ஒரு குழந்தைபோலவும் நம்முடைய பேச்சுகளை அவர் கேட்டுக்கொண்டிருந்தார். கேள்விகளுக்குப் பதில் சொன்னார். அபத்தமான கேள்விகளை சிரித்து ஒதுக்காமல் விட்டார். சின்னதாக ஒரு மமதை, அதிகாரம் என எதுவுமே இல்லாமல் உரையாடினார். கடைசியில் ராஜா அண்ணன் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதிலை மிக நெருக்கமாக உணரமுடிந்தது. 

“எழுத்தாளர் என்பவர் ஒரு coward என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஒரு செயற்பாட்டாளர் தெருவில் இறங்கிப்போராடிக்கொண்டிருக்கும்போது வெறுங் குற்ற உணர்ச்சியைப் போக்குவதற்காக இரண்டு வரி எழுதித்தப்பிப்பவர்தான் எழுத்தாளர்” 

ஷாஜகான் ஏன் தொடர்ச்சியாக எழுதுவதில்லை என்பது அப்போது விளங்கியது.

000

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.