Skip to main content

இரண்டாயிரத்துப் பத்தொன்பது, மே, இருபத்தியேழுகுளிர் ஆரம்பித்துவிட்டிருந்தது. இலையுதிர்காலம் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. கடந்த தடவை வசந்தகாலத்துக்கும் இதுதான் நிகழ்ந்தது. வசந்தத்தையும் இலையுதிரையும் கோடையும் குளிரும்தான் நமக்கு ஞாபகப்படுத்தவேண்டியிருக்கிறது.

வீட்டில் அப்பிள் மரம் காய்த்துக்கொட்டிக்கொண்டிருந்தது. கொழும்பிலிருந்து அப்பா ஓமந்தையால் கொண்டுவரும் நான்கு அப்பிள்களை முன்வீடு பின்வீடு என்று எல்லோருக்கும் பிரித்துக்கொடுத்தக் காலம் என்று ஒன்றுண்டு. நான்காய், எட்டாய்ப்பிரித்து அதிலொரு துண்டு கிடைக்கும். தீர்ந்துவிடுமே என்று நன்னி நன்னி சாப்பிட்டது. காலையில் காருக்குள் ஏறும் முன்னர் மரத்தில் எட்டி ஒன்றைப் பிடுங்கி, பக்கத்துப் பைப்பிலேயே கழுவி, கடித்தபடி புறப்படுகிறேன். இதனை முன்வீட்டு லலிக்குச் சொன்னால் புன்னகைப்பான் என்று நினைக்கிறேன்.

‘குட்மோர்னிங் சன்’ என்று சொல்லிச் சிரித்தபடி ஒரு பாட்டி கடந்துபோனார். விடியவெள்ளனையே நடைப்பயிற்சி. கம்பளியைச் சுற்றிக்கட்டிக்கொண்டு. பின்னாலேயே அவருடைய கணவர். அல்லது துணை. ‘ஹவ் ஆர் வி?’ என்றார். ‘பிரீஸிங்’ என்றேன். ‘வெல் இட்ஸ் விண்டர்’ என்று அவரும் சிரித்தபடி போனார்.

வழியிலிருக்கும் பூங்காவில் ஒரு பள்ளி மாணவியும் மாணவனும் வாங்கில் அமர்ந்திருந்து முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். காலை ஏழு நாற்பத்தைந்து. மெல்பேர்ன் குளிர். இருவருக்குமே பன்னிரண்டு பதின்மூன்று வயதுதான் இருக்கும். இரண்டுபுறமும் புத்தகப் பைகள். நடுங்கும் குளிரில் பிரஞ்சு முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். யாரும் பார்ப்பார்களோ, வீட்டில் போய்ச் சொல்லிவிடுவார்களோ என்ற பயமெல்லாம் அவர்களிடத்தில் இல்லை. அல்லது முத்தம் கொடுக்கும் கிளர்ச்சி அப்பயத்தை மறக்கடிக்கிறதோ தெரியாது. நான் ஆண்டு எட்டு படிக்கும்போது காலை நேரங்களில் என்ன செய்துகொண்டிருந்தேன் என்று யோசித்தேன். உதயன் வாசித்திருக்கலாம். “பழஞ்சோற்றுக்கு எப்பன் சம்பல் அரைச்சுத்தா” என்று அம்மா சொல்லியிருப்பார். அம்மியில் செத்தமிளகாய்ச்சம்பல் அரைச்சு முத்தாய்ப்பாய் அங்கேயே தேசிக்காய்ப்புளியும் பிழிந்து குழைத்து, இரண்டு சப்பு சப்பியிருப்பேன். பாடசாலை செல்லும் வழியில் பிள்ளையார் கோயிலில் இறங்கி சுற்றிக்கும்பிட்டிருப்பேன். அதிகப்பட்சம் கோகிலவாணி றக்காவீதியால்தான் சுண்டுக்குளிக்குப்போவாள் என்று நானும் அவ்வீதியால் சென்றிருப்பேன். அவ்வளவுதான். அதைக்கூட றக்காவீதியில் வசிக்கும் மாமா குடும்பத்தில் யாராவது பார்த்துவிட்டால் அவ்வளவுதான் என்று பயந்திருப்பேன். இந்தத்தேதி வரைக்கும் கோகிலவாணிக்கு இப்படி ஒரு ஐந்து பூமிக்கிரகத்தில் இருப்பதே தெரிந்திராது. கோகிலவாணிக்கு பூங்காவில் அமர்ந்திருந்து முத்தம் கொடுப்பதெல்லாம்.

ரேடியோவில் சாபரா லேன் பிரியாவிடை கொடுத்து ஜோன் பெய்ன் பேச வந்திருந்தார். விக்டோரிய மாநில பொலிஸ் ஆணையாளரை குடைந்து எடுக்க ஆரம்பித்திருந்தார். நகரத்தில் எங்கோ ஒரு பூங்காவில் ஒரு பெண் கொலைசெய்யப்பட்டு விட்டார். எப்படிப்பட்ட சமூகமாக நாங்கள் மாறிக்கொண்டிருக்கிறோம் என்று குமுறினார்.

கார் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைந்தது. என் பின்னே வந்துகொண்டிருந்த பென்ஸ் காரை ஒரு சீன இனப்பெண் ஓட்டிக்கொண்டிருந்தாள். வேகம் நூற்றுப்பத்தில் இருக்கும்போதே அவ்வப்போது லிப்ஸ்டிக்கால் உதட்டை டச் பண்ணிக்கொண்டிருந்தாள். அவள் நிச்சயம் புரோகிராமிங் துறையில் இருக்கச் சாத்தியமில்லை என்று தோன்றியது. நான் கடைசியாகச் சவரம் செய்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தன.

சிட்னி வீதி எக்ஸிட்டைக் கடந்ததும் நெரிசல் அதிகமாகியது. முன்னே ஒரு விபத்து நிகழ்ந்துள்ளதாக வானொலியில் அறிவித்தார்கள். எக்ஸிட் கடந்துவிட்டதால் இனித்தப்பவும் முடியாது. வாகனங்கள் இப்போது மிக மெதுவாக ஊர ஆரம்பித்துவிட்டிருந்தன. சீனத்துப்பெண் கன்னத்தை இப்போது பஞ்சுபோன்ற ஒன்றால் ஒற்றிக்கொண்டிருந்தாள். ஏலவே அவள் ஒரு மஞ்சளழகிதான். எதற்காக வெள்ளைக்காரி ஆகவேண்டும் என எதிர்பார்க்கிறாள் என்று தெரியவில்லை. எவ்வளவு முயன்றாலும் மூக்கு காட்டிக்கொடுத்துவிடப்போகிறது. அதனை சேர்ஜரி செய்து தொலைத்தாலும்கூட கண்களை என்ன செய்வாள்? அவளுக்கும் ஏதாவது ஒரு காரணம் இருக்கலாம். யாரோ ஒருவர் அவளை ரசிக்கலாம். அல்லது ரசிக்காமல் விட்டிருக்கலாம். கோகிலவாணிக்கு என்ன பிரச்சனை இருந்திருக்கும் என்று எனக்கெப்படித் தெரியும்? விடியக்காலமை கறுப்புக்கன்னங்களில் மெது பவுடரும், சீயாக்காய் தோயலின் பின்னர் தழையவிட்டுப் பின்னிய இரட்டைப்பின்னலும்.

விபத்து நிகழ்ந்த இடம் தாண்டிப்போய்க்கொண்டிருந்தது. சிறிய விபத்துதான். ஒரு மாஸ்டாவை ஒரு டொயாட்டோ முட்டியிருந்தது. ஒரு பெண்ணும் ஆணும் சிரித்தபடி பரஸ்பரம் மற்றவரது கார்களை படம் பிடித்துக்கொண்டிருந்தார்கள். விபத்து நிகழ்ந்துவிட்டதே என்று எந்த பதட்டமும் அவர்களிடத்தில் இல்லை. மற்றவரது லைசன்ஸ்களை வாங்கிக் குறிப்பெடுத்தார்கள். அவன் அடித்த ஒரு பகிடிக்கு அவள் விழுந்துவிழுந்து சிரித்தாள். கொழும்பில் வேலை செய்த காலத்தில் என் நண்பனொருவன் ஒரு ப்ரியஸ் வாங்கியிருந்தான். புத்தம்புது கார். ஜப்பானிலிருந்து வருவித்திருந்தான். தெரிந்த டொக்டர் ஒருவரின் கோட்டாவில் எடுத்தது என்றான். வேலை முடிந்து வீடு திரும்பும்போது என்னை வெள்ளவத்தையில் இறக்கிவிடுவான். கார் ரேடியோவில் ஆங்கில எப்.எம் போடுவான். அதில் அமர்ந்திருக்கும்போது புதுக்காரின் வாசம். உள்ளே திரவியத்தின் வாசம். என் பொறாமையின் வாசம். எல்லாமே கலந்தடிக்கும். ஒருமுறை லிபர்டி சுற்றில் ஒரு முச்சக்கரவண்டிக்காரன் இவன் காரை இடித்துவிட்டான். காரின் வலதுபக்க பின்மூலையில் சிறு நெளிவு. இவன் காரை அப்படியே நிறுத்திவிட்டு விறுவிறுவென்று முச்சக்கரவண்டிக்காரனிடம் ஓடினான். சிங்களத்தில் ஏதோ பேசினான். நான் காரிலிருந்து இறங்கும்போகும்முன்னரே முச்சக்கரவண்டிக்காரனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டிருந்தான். விட்டவன் திரும்பி காருக்குள் வந்தான். ‘சொறி மச்சாங்’ என்றான். ‘அவனை ஏன் அறைந்தாய்?’ என்று கேட்டேன். ‘லைசன்ஸ் இல்லை, இன்சூரன்சும் இல்லை, இவன் என் காரைத் திருத்தித் தரப்போவதுமில்லை. அதற்கான வசதியும் அவனிடமில்லை. அவனை அடித்தால் கொஞ்சமாவது நிம்மதியாக இருக்கும்’ என்றான். அவரவருக்கு அவ்வக் கணங்களுக்கென அவசர அவசரமாக பல நியாயங்கள்.

விபத்துப்பகுதியைக் கடந்ததும் எல்லோரும் விட்ட நேரத்தைப் பிடிக்கவேண்டும் என்று வேகமாக ஓட ஆரம்பித்தார்கள். எனக்கும் தாமதமாகிவிட்டிருந்தது. சிரியிடம் நிர்வாக இயக்குநருக்கு அழைப்பு எடுக்கச்சொன்னேன். எடுத்தாள். ‘ரிங் ரோட்டில் ஒரு விபத்து, கொஞ்சம் தாமதமாகிறது, நானில்லாமலேயே மீட்டிங்கை ஆரம்பியுங்கள்’ என்றேன். ‘அப்படியா, ஆறுதலாக வா. நாங்கள் எல்லோரும் கோப்பி குடிக்கப்போகிறோம். உனக்கும் வாங்கவா?’ என்றான். ‘லோங் பிளக்’ என்றேன்.

அலுவலகத்துக்கு அருகிலேயே குழந்தைகள் காப்பகம் ஒன்று உள்ளது. ஒரு தாத்தாவும் பாட்டியும் தம் பேரனை குழந்தைகள் காப்பகத்துக்கு அழைத்துச்சென்றுகொண்டிருந்தார்கள். வீட்டிலே தாத்தாவும் பாட்டியும் இருக்கும்போது எதற்காகக் குழந்தையை காப்பகத்துக்கு அனுப்பி காசு செலவழிக்கிறார்கள் என்று என்னுடைய பனங்கொட்டை மூளையில் ஒரு கேள்வி எழுந்து மறைந்துபோனது. அந்தச்சிறுவன் அவர்கள் இருவரது கைகளையும் பிடித்தபடி ஆடி ஆடி சென்றுகொண்டிருந்தான். நல்லூரான் பச்சை சாத்தியபடி ஆடிக்கொண்டு இருப்புக்குப் போவதுபோல. அந்த மூவருக்கும் இந்த உலகத்தில் எந்த அவசரங்களுமே இல்லை என்று தோன்றியது. ஏன் என் தாத்தாக்களும் பாட்டிகளும் நான் பிறக்குமுன்னேயே இறந்துபோனார்கள் என்று ஏக்கமாக இருந்தது. கூடவே அந்தச்சிறுவனும்தான்.

காரை பார்க் பண்ணிவிட்டு அலுவலகத்துக்குள் நுழைகிறேன். வரிசையான ‘ஹாய் ஜேகே’களுக்கும் ‘ஹவ் ஆர் யூ’க்களுக்கும் பதில் சொல்லியபடியே என் இருக்கைக்கு வருகிறேன். ‘தெயார் யூ ஆர்… ஹியர்ஸ் யுவர் லோங் பிளக்’ என்று பீட்டர் சிரித்தபடி வந்து கோப்பியைத் தந்தான். எங்கிருந்தோ டேர்போ ஓடிவந்து என் சப்பாத்தை நக்கியது. கணினித்திரையில் முன்னையநாள் செய்த வேலையின் மிகுதி, பாதியில் விடப்பட்ட சதுரங்க ஆட்டம்போல காய்களுடன் அன்றைய நாள் விளையாட்டைத் தொடரக் காத்திருந்தது.

இரண்டாயிரத்துப் பத்தொன்பதாம் ஆண்டு மே மாதம் இருபத்தியேழாம் திகதி நன்றாகவே ஆரம்பித்தது.

நான் ஞாபகம் வைத்திருக்கவேண்டும்.
***

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட