என் கொல்லைப்புறத்து காதலிகள் : கம்பியூட்டர்

 

time_pilotகௌஷல்யா அக்கா, பெரியம்மாவின் மகள். அத்தான் இன்ஜினியர். 80களிலேயே யாழ்ப்பாணத்தில் கம்பியூட்டர் வைத்திருந்தவர். நான் அறிந்த இன்ஜினீயர்களில், அந்த திறமையை வீட்டிலும் பயன்படுத்துபவர். அவர் வீட்டில் அழுக்குத்தண்ணி போகும் குழாயும் கிடங்கும் கூட ஒரு இன்ஜினியரிங் டச்சுடன் இருக்கும். பத்து வயசிலேயே அவர் மகன் சின்ன circuit இல் LED எல்லாவற்றையும் இணைத்து எனக்கு காட்டுவான். பளிச் பளிச் என்று ஒவ்வொரு கொமாண்டுக்கும் ஒவ்வொரு வரிசை காட்டும். நான் சொல்வது 88ம் ஆண்டு கதை. அப்போது தான் கணனியில் கேம் விளையாட பழக்கினார். போர் விமானம் ஒன்றை ஒரு குறுகலான கரடுமுரடான வழியில் செலுத்தவேண்டும். கல்லு விழும். மற்ற விமானங்கள் குண்டு பொழியும். தப்பவேண்டும். ஓடவேண்டும். அவர்கள் இப்போது கனடாவில் இருக்கிறார்கள்!  நான் ஆஸ்திரேலியாவில்!

 

Computer_Lab

1999 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை எடுத்தாயிற்று. இனி என்ன செய்ய என்று அக்காவிடம் கேட்ட போது அடுத்த முறைக்கும் இப்போதே தயாராகு என்று சொன்னா! என் ரிசல்ட்டை பற்றி வீட்டில் அவ்வளவு நம்பிக்கை! ரிப்பீட்டுக்கு டே கிளாஸ் எல்லாம் எப்போது ஆரம்பிக்கும் என்று Science hall சென்று விசாரித்ததை பார்த்த சிவத்திரன் மாஸ்டர் ஓடிவந்து திட்டினார். பேசாம போய் கம்பியூட்டர் படி என்றார். அட அக்காவாவது ரிப்பீட் ட்ரை பண்ணு என்று சொல்ல, இவர் ஆணியே புடுங்க வேண்டாம் என்று சொல்லுறாரே என்று நினைத்துக்கொண்டு நேரே பிரியா வீட்ட போனேன். மேகலாவும் Informatics ல தான் படிக்கிறாள். நாங்களும் ஜாய்ன் பண்ணுவோம் என்றான். போய் கேட்டோம். Diploma in Computer Science என்று ஒன்றை படிக்க சொன்னார்கள். பக்கத்தில் இருந்த லாப்பில் எட்டிப்பார்த்தேன். யாரோ ஒருத்தன் கையில் ஒரு டென்னிஸ் பாலை உருட்டிக்கொண்டு இருந்தான். பிரியாவிடம் கேட்டபோது மச்சி அது தான் ரிமோட் கன்ட்ரோல் என்றான். கம்பியூட்டருக்கு எங்கேயடா ரிமோட் என்றேன். டிஸ்ப்ளே இருக்கும் போது ரிமோட் இருக்ககூடாதா என்று டிப்பிக்கல் யாழ்ப்பாணத்து ஜோக் அடிச்சான். நானும் கம்பியூட்டர் படிச்சன்.

அப்போது எல்லாம் கம்பியூட்டர் லாப் போவதென்றால் சிலிப்பர் கழட்டி வெளியில் வைக்கவேண்டும். முதல் முதல் மௌஸ் பிடிக்கும் போது சனியன் ஒரு இடத்தில நிற்க மாட்டேன் என்றது. பக்கத்தில் இருந்த மேகலா தான் எப்படி என்று சொல்லித்தர தாங்க்ஸ் என்றேன். டோன்ட் மென்ஷன் என்றாள். இரண்டு கதிரை தள்ளி உட்கார்ந்திருந்த ப்ரியா உடனே ஓடிவந்து தன்னுடைய C++ ப்ரோக்ராம் compile பண்ணுதில்ல என்று மேகலாவிடம் அட்வான்ஸ் டவுட் கேட்க, windows media player இல்  “ஒ வெண்ணிலா இரு வானிலா”?

2000ம் ஆண்டு கொழும்பு. ஆன்ட்டி வீட்டில் விபிதன் கம்பியூட்டரில் எப்படி CD ப்ளே பண்ணுவது என்று சொல்லித்தந்தான். Solitaire கேம் விளையாடிப்பார்த்தேன். துரும்பே இல்லாமல் எப்படி கார்ட்ஸ் விளையாடுவது புரியவில்லை. மூடிவைத்துவிட்டேன். பல்கலைக்கழகத்தில் என்ன பிரிவு என்று தெரியவேண்டும். சுபாகரன் அண்ணா கேட்டார். நான் ஸ்ரீதர் போல வரப்போகிறேன் என்றேன். யாரது என்று கேட்டார். A R Rahman இன் sound engineer என்றேன். electronics செய்யப்போகிறேன் என்றேன். விராட் கோலிக்கு ஆஸ்திரேலியாவில் விழுந்த திட்டை விட மோசமாக திட்டினார்.  கொலைவிழும்! எல்லோரும் எதை போடுகிறார்களோ நீயும் அதைப்போடு என்றார்! நாறும் என்று தெரிந்தே கணணி பிரிவுக்கு போனேன். ரகுமான் தப்பினார்!

கணணி படித்துக்கொண்டு வீட்டில் கணணி இல்லை என்றால்? அப்பாவிடம் கேட்டேன். கேட்டுக்கேள்வி இல்லாமல் அறுபதினாயிரம் எடுத்து வைத்தார். இன்றைக்கு நான் ஐம்பது டாலர் எடுத்து வைக்கவே யோசிக்கிறேன். தகப்பன் எப்போதும் தகப்பன் தான். கணணி வாங்கவேண்டும். யாரைப்பிடித்து வாங்குவது! கொழும்பிலே படிச்சு வளர்ந்த ஜெயரமணன் தனியா ஒரு கம்பனி நடத்துறான். நேர்மையானவன் என்று கஜன் சொன்னான். கேட்டேன். வாங்கித்தந்தான். கூடவே இரண்டு கேம் போட்டுத்தாந்தான். கேம் விளையாடி கீபோர்ட் தேய்ந்தால் வாரண்டி இல்லை என்றான். எவ்வளவு என்றேன். மற்ற ஆக்களுக்கு அறுபது. உனக்கு அம்பத்தாறு என்றேன். யாரு அந்த மற்ற ஆக்கள் என்றேன். யாரும் இல்லை என்றான்!

27593864_1Pentium III Processor

40GB Hard Disk

256MB RAM

Windows 2000

15 Inch CRT Monitor

56000 Rupees (~650 Dollars)

 

முதல் கணனி. முதல் காதலி! தொட்டவுடன் கரண்ட் டர்ர்ர் என்று அடித்தது. பயந்துவிட்டேன். ரமணன் ஏமாற்றிவிட்டான் பாவி. கால் போட்டேன்.

மச்சான் கரண்ட் அடிக்குது. இது என்னைய சாகடிச்சிடும் போல இருக்கேடா.

பயப்படாத. உங்க வீட்டில எர்த்த்திங் லிங்க் ப்ராப்ளம். எதுக்கும் ஸ்லிப்பர் போட்டுக்கொண்டு கம்பியூட்டர் யூஸ் பண்ணு

ஸ்லிப்பர் போட்டேன். கொஞ்சகாலம் கரண்ட் அடிக்கவில்லை. DSL மூலம் இன்டர்நெட் கனெக்ட் பண்ண அஜீத்தன் பாஸ்வோர்ட் தந்தான். முதலில் பார்த்த வெப்சைட் globaltamil.com. அப்போது அது பேமஸ். ஷக்தி எப்எம் க்கு என்ன பாடல் வேண்டும் என்று மெசேஜ் எல்லாம் அனுப்பினேன். கொஞ்சநாளில் வைரஸ் அடித்துவிட்டது.

2004ஆம் ஆண்டு. Software company வேலை புது அனுபவம். சும்மா ஒரு கலக்கு கலக்கவேண்டும் என்ற வெறி. ஆபீஸ் டைம் போதாது. வேலையை வீட்டுக்கும் கொண்டு வரவேண்டும். லாப்டாப் ஒன்று வாங்கினால் சனி ஞாயிறும் அதிலேயே வேலைசெய்து Tech Lead ஐ இம்ப்ரெஸ் செய்யலாம். தேடத்தொடங்கினேன். செந்தில் அண்ணா தான் DELL இல் offer போடுவதாக லிங்க் அனுப்பினார். எனக்கு எந்த லேப்டாப் சரிவரும் என்றும் சொன்னார். கருப்பாக, ஸ்லிம்மாக அலைபாயுதே ஷாலினி போன்று வெப்சைட்டில் லாப்டாப் சுழன்று அடிக்க வாங்கினால் இதை தான் வாங்குவது என்று தீர்மானித்தேன். நான் வாங்கும் சம்பளம் போதாது. அக்காதான் நீ அப்புறம் தாடா என்று சொல்லி காசு போட்டு சிங்கப்பூரில் இருந்து வாங்கி அனுப்ப என் தேவதை வந்தாள்.

Dell Celeron

1.1 GHz

512 MB RAM

80GB Hard Disk

14Inch Screen

1099 சிங்கப்பூர் டாலர்கள்

2006ம் ஆண்டு சிங்கப்பூருக்கு மாற்றல் ஆகிறேன். சம்பளம் எடுத்தவுடன் என்ன செய்யபோகிறாய் என்று அக்கா கேட்க லாப்டாப் வாங்கபோகிறேன் என்றேன். இப்போது DELL எனக்கு போதவில்லை. ஹீட் அதிகம். புதுசு தேடுகிறேன்.  அப்போது எல்லாம் SONY VAIO பிரபலம். FZ series.

sony-vaio-fz-1Sony VAIO FZ Series

1.2GHz Processor

1GB RAM

100GB Hard Disk

15Inch Screen

2000 சிங்கப்பூர் டாலர்கள்

 

Sony ஒரு சுப்பர் லேப்டாப். ஹீட் அதிகம் இல்லை. வைட் ஸ்க்ரீன். வேலை செய்வது இலகு. டிஸ்ப்ளே கூட நல்லது தான்.

2008ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு படிக்க போகிறேன்.  இரண்டு வருடங்களில் SONY அலுத்துவிட்டது. திடீர் திடீர் என்று பவர் ஓப் ஆகிறது. திருத்தமுடியவில்லை. மேகலாவைப்போல unpredictable. என்னை விட்டு விடேன் என்று கெஞ்சியது. வேறு ஆள் தேட ஆரம்பித்தேன். டேபிலேட் கணணி கண்ணில் மாட்டியது. ஆய்வு செய்ய தொடங்கினேன். HP Tablet சிறந்தது என்றார்கள். Pen பாவிக்கலாம். லெக்சர் நோட்ஸ் எடுக்கலாம். மடியில் வைத்து அழகாய் கொப்பியில் எழுதுவது போல எழுத அது தானே word document இல் ஆங்கிலத்துக்கு மாறும். அட நன்றாக இருக்கிறதே என்று நம்பி வாங்கினேன்.

hp-pavilion-tx2500-entertainment-notebook-pc_400x400HP Pavilion  Tablet PC

1.2GHz

2GB RAM

100GB Hard Disk

13Inch Screen

1650 சிங்கப்பூர் டாலர்கள்

 

கொஞ்ச காலம் நன்றாக தான் போய்க்கொண்டு இருந்தது. நான் அப்போது படித்துக்கொண்டு இரவு நேரங்களில் ரிமோட்டாக வேலையும் செய்துகொண்டிருந்த காலம். ஒரு நாள் திடீரெண்டு நின்றுவிட்டது. அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு விட, HP சப்போர்ட்டுக்கு கால் பண்ணினேன். ஒரு பெண் தான் எடுத்தாள். அழகாக பேசினாள். சிஸ்டம் போர்டு ரிப்ளேஸ் செய்யவேண்டும் என்றேன்.  பெங்களூரில் இருந்து பேசியிருக்கவேண்டும். ஓவர் த போனிலேயே கழட்ட சொன்னாள். RAM ஐ மாற்றிப்பார்க்கசொன்னாள். அவள் சொன்னதெல்லாம் செய்தேன். இறுதியில் சிஸ்டம் போர்டு மாற்றவேண்டும் என்று கண்டுபிடித்தாள். அதைத்தானே நான் முதலிலேயே சொன்னேன் என்றேன். சாரி சார் என்று கலகலவென சிரித்தாள். கவிதைகள் படித்தது. குளு குளு தென்றல் காற்றும் வீசியது. கோபம் வரவில்லை. அடுத்தநாள் அவர்களே வீடு தேடி வந்து எடுத்துச்சென்றார்கள். ஒருவாரம் தாமதமாகும் என்றார்கள். பத்து நாளில் வந்த லாப்டாப் மீண்டும் பிரச்சனை கொடுக்க, மீண்டும் பெங்களூர் காரி. மீண்டும் கழட்டினேன். பூட்டினேன். ஆனபாடில்லை. மீண்டும் சிரித்தாள். அடுத்த நாள் வந்து எடுத்தார்கள்.

இப்போது எனக்கு லேப்டாப் வேண்டும். ஒருவாரம் வேலைசெய்யாமல் இருக்கமுடியாது. எதை வாங்குவது. அப்போதெல்லாம் நான் Steve Jobs ஐ தீவிரமாக follow பண்ணிக்கொண்டு இருந்த நேரம். 2009. Mac வாங்கவேண்டும் என்பது நீண்டநாளைய விருப்பம். உடனடியாக போய் JB HIFI இல் Macbook ஒன்று வாங்கினேன்.

apple-care-for-macbooksMacbook

1.2 GHz

2G RAM

100G Hard Disk

14 Inch Screen

1700 Australian Dollars

அழகாய் இருந்தது. OS Ubuntu போல இருந்ததால் அடித்து ஆடலாம் என்று நினைத்தேன். முதல் அடி அது! UNIX ஐ அடிப்படையாக கொண்டு இருந்தாலும் ஆப்பிளுக்கே உரிய க்ளோஸ் கான்செப்ட். அதாவது நீங்கள் நினைத்தமாதிரிக்கு சிஸ்டம் லெவல் செட்டிங் செய்யமுடியாது.  VMWare போட்டு Virtual Box இல் Ubuntu பாவிக்கதொடன்கினேன். அதற்கு எதற்கு ஆப்பிள் என்று நண்பன் கேட்க ஆமாமில்ல என்றேன். இரண்டு நாள் ஆராய்ந்த பிறகு தான் delete button ஏ ஆப்பிளுக்கு கிடையாது என்றுகூட தெரிய, கொஞ்சம் பீதி கிளம்பியது.

இப்போது service க்கு போன HP லாப்டாப் திரும்பிவிட்டது. கைவசம் இரண்டு லாப்டாப் கள். மீண்டும் சிங்கப்பூர் திரும்புகிறேன். iPad ரிலீஸ் ஆகிறது. Steve Jobs ஓய்யாசாமாய் சோபாவில் இருந்து internet browse பண்ணியது அட!  Singapore இல் release ஆகவில்லை. Black market இல் 900 டாலர்கள். என் Macbook ஐ ஆபீஸ் காரன் ஒருவனுக்கு விற்றுவிட்டு ஓடிப்போய் வாங்கிவிட்டேன்.

 

steve-jobs-ipad-apple-apiPad1

Wi-Fi Only Model

900 Dollars 

 

 

 

iPad வந்தது ஒரு கை வந்தது போல. கட்டிலில், couch இல், train இல் எங்கேயும் பாவிக்கலாம்! வீடியோக்கள் பார்க்கலாம். ஒன்றிரண்டு ப்ளாக் கூட அதிலிருந்து  எழுதியிருக்கிறேன். இன்றைக்கும் இரண்டு வருடங்களாக iPad1 ஐ தேய தேய பாவிக்கும் ஆள். காலையில் தூங்கி எழும்போது கண் மூடியபடிய கை iPad ஐ தான் நாடும். என் ப்ளாக்கில் என்னென்ன கமெண்ட் வந்து இருக்கு என்று பார்க்கும். smh.com.au உலாவும். Shave எடுக்கும் போது குளியல் அறையில் “ஆகாய வெண்ணிலாவா, தரை மீது வந்ததேனோ” என்று என்னோடு சேர்ந்து பாடும். She is a great companion.

இந்த நேரம் தான் ஆபீஸில் ஒரு லாப்டாப் தந்தார்கள்.

Dell XPS

2.2 GHz Dual Core

4G RAM

120GB Hard Disk

2100 Dollars

இது ஒரு சூப்பர் கம்பியூட்டர். எத்தனை சேர்வர்களும் கூட ரன் பண்ணலாம். Gun போல கம்பியை பிடிக்காமலே பஸ்ஸில் நிற்கும். இரண்டு வருடம் இதோடு குடும்பம் நடத்தியாச்சு. மீண்டும் ஆஸ்திரேலியா போகவேண்டும். வேலையை விட்டாயிற்று. லாப்டாப் வாங்கவேண்டும். Singapore IT show ஒன்று நடந்தது. நானும் அஜீத்தனும் விரைந்தோம். அப்போது வாங்கியது தான் இந்த லாப்டாப். நான் இப்போது இந்த பதிவு எழுதும் லாப்டாப்.  மீண்டும் Dell XPS.

Dell XPS,

i7 Intel Core 2GHz Processor

6G RAM

120G Hard Disk

1600 Dollars

இப்போது ஆபிசிலும் ஒரு லாப்டாப் தந்து இருக்கிறார்கள். High End சிஸ்டமும் தந்து இருக்கிறார்கள்.   பத்து கம்பியோட்டர்கள் பத்து வருடங்களில். 2000ம் ஆண்டு Mouse என்றால் என்னவென்று தெரியாது. இப்போது கணனியில் நான் புடுங்கும் ஆணி எல்லாமே தேவையில்லாதது தான் என்று ப்ரோஜக்ட் மனேஜர் முகத்தில் கரி! கணணி வாழ்க்கையின் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. ஒரு நாளைக்கு பதினாலு மணிகள் கணணியோடு இருக்கிறேன். எழுதும் நாட்களில் அது இன்னும் கூடும். இந்தத்துறை மட்டும் இல்லை என்றால் சோற்றுக்கு சிங்கி தான். நன்றி Steve Jobs. நன்றி Bill Gates.  இருவரும் தான் இதை இத்தனை பெரிய துறை ஆக்கியவர்கள்.

 

photo (3)

 

 

2010 Wimbledon, internet இல் மூன்று மேட்ச்கள் மூன்று சிஸ்டம்களில் ஒரே நேரத்தில் பார்த்த படம் இது.

 

 

இந்த பதிவு என் வழமையான காதலி இல்லை. உங்களுக்கு பிடிக்க வேண்டிய தேவையும் குறைவு தான். ஆனால் எழுதும் போது எனக்கு ஆச்சரியாமாய் இருக்கிறது. பத்து வருஷங்களில் நிறைய பார்த்துவிட்டேன். ஒவ்வொரு கணணியம் ஒவ்வொரு நினைவை சுமந்து வந்திருக்கிறது. இந்த பதிவு மீண்டும் கடந்த பத்து வருட nostalgic memories க்குள் கொண்டு போய்விட்டது.

பிடிச்சிருக்கா?

படிச்சதென்ன பிடிச்சதென்ன? : புத்தனின் ஊரில் புத்தர்கள்!


இன்று காலை ஏதன்ஸ் நகரத்து வாலிபனின் வீட்டுக்கு போனேன். “புத்தனின் ஊரில் புத்தர்கள்” என்று ஒரு கதை. சிறுகதை. சார் கவிஞர் என்பதால் கதை எழுதினாலும் கவிதை போல இருக்கிறது. நான் எழுதும் கவிதை கதை போல இருப்பது போல! கதையை அங்கே போய் வாசியுங்கள். கதைக்கு நான் போட்ட கமெண்டும் அவன் பதிலும் பதவில் ஏற்றப்படவேண்டியது போல தோன்றியதால் காப்பி பேஸ்ட் டீ!


ஜேகே சொன்னது…
//ஒரு காய்ந்து போன அரசமிலை காற்றில் நடமாடியது, மிதந்தது, ஒய்யாரமாய் ஊஞ்சலாடியது, கொஞ்சம் முன் சென்று பின் காட்டியது, சட்டென அம்பாகி நோக்கி நகர்ந்தது, வளையம் வளையமாய் சுழன்று பின் சட்டென நிலத்தில் சரண் புகுந்தது. அரசமிலைக்கு நிலம் சரணா சமாதியா ? என் கற்பனை செரியா ? //

சங்ககால உவமானம் இன்றைக்கும் நின்றுபிடிக்கிறது!
உங்கள் அளவுக்கு தமிழறிவு இல்லை. இருந்தாலும் சொல்கிறேன். ஒரு நல்ல கவிதையை கதையாக எழுதி அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் ஆக்கிவிட்டீர்களோ? உரைநடை கவிதை என்றும் சொல்லமாட்டேன். சிறுகதை தான். 70 களின் சிறுபத்திரிகைக்கதை.
ஒரு உண்மை, எழுதுபோருளை, சிறுகதையாக்கினால், அப்பட்டமாக முகத்தில் அடிக்கும். ஏர்போர்ட்டிலும் அடிக்கும்! கவிதையாக்கினால், ஜேகே போன்ற சாதாரண வாசகர்களுக்கு புரியாது. ஆக இரண்டும் கெட்டானான இந்த பாணிக்கு தாவிவிட்டீர்களா?


ஏ.எ.வாலிபன் சொன்னது…
//உங்கள் அளவுக்கும் தமிழறிவு இல்லை. //
ஜே.கே இந்த சம்பிரதாயங்களை இனி விட்டு விடுவோம். இது கவிதை மாதிரி உங்களுக்கு தோன்றியது எனக்கு கொஞ்சம் வியப்பே, சிறுகதை வடிவம் தான் ஒருத்தனின் சிந்தனை ஓட்டத்தை செரியா தீட்ட உதவும். கவிதையில் சந்தங்களுக்காக நான் சமரசம் செய்ய வேண்டி இருந்திருக்கும்.... என் மொழி அறிவு இதை இதே தாக்கத்தில் கவிதையாய் தர காணாது. இது எழுதி சுமார் 5-6 வருடமிருக்கும். அண்மைக்காலமாக வலைத்தலங்களுக்குள் என் வாசிப்பை சுருக்கியதால் வீரியம் இழந்தவனாக உணருகிறேன். இந்தக் கதையே விளங்குமா எனும் சந்தேகத்தில் - பழைய பாடம் - படம் பார் பாடம் படி என்று ஆக்கியிருக்கிறேன். மற்றபடி உங்கள் வாசிப்பு ரசனை blog-அறிந்த உண்மை, நான் சாட்சிக்கு வரத் தேவையில்லை.
அந்த உதாரணம் " காற்றின் தீராத பக்கங்களில் தான் கதை எழுதிய போது" மறு ஜென்மம் எடுத்தது. நான் சும்மா பிச்சையில் இருந்து சொச்சை போடுகிறேன்.
 

ஜேகே சொன்னது…
அங்கு தான் பிரச்சனை. சந்தம் கவிதையில் இருந்தால் அழகு. ஆனால் கவிதைக்கு சந்தம் தேவையில்லை என்பது என் கருத்து. கருத்து முகத்தில் அடிக்கும் போது அங்கே சந்தம் இருந்தாலும் தொலைந்து விடுகிறது!

இந்த வகை சிறுகதைகள் குறிப்பாக கணையாழியில் வாசித்து இருக்கிறேன். ஈழத்தில் 90களின் ஆரம்பத்தில், இந்தியாவில் 70களில் இந்த பாணி சிறுகதைகள் தான் இலக்கியப்பட்டியல் ஆகி இருக்கிறது. அண்மையில் "Australian Short Stories" என்ற 70களின் கதைத்தொகுப்பில், யாரென்று தெரியாத ஒரு கூலியின் சாவு வீட்டை மையமாக வைத்து ஒரு சிறுகதை. இதே உணர்வுகள் தான். ரசித்தேன்.
இப்படி எழுத முயலும் போதெல்லாம், சுஜாதா என்னை தடுத்துவிடுவார். இந்த வகை எழுத்தில் ஒரு சிக்கல், வாசகனுக்கு அந்த மனநிலையை நாங்கள் create பண்ண வேண்டும். அந்த context புரிய வேண்டும். பெரும்பாலான பதிவுலக வாசகர்கள் அந்த பக்கமே போவதில்லை. தனக்கு பிடித்ததை வாசிப்பான். வித்தியாசமான எழுத்தை தனக்கு பிடித்தமானதாக்க அழும்பு பண்ணுவான். நீங்கள் சொன்னது போல், வாசிப்பு என்பது web surfing என்ற கட்டுக்குள் அடங்கிவிட்டது. ஜெயமோகனால் இன்னொரு விஷ்ணுபுரம் எழுதமுடியாது. இன்னொரு பொன்னியின்செல்வன் இந்த தலைமுறையில் சான்ஸ் இல்லை. வாசகர்கள் இல்லை. பொறுமை இல்லை. கொஞ்சப்பேர் மிச்சம் சொச்சம்! என் வீட்டு லைப்ரரி புத்தகத்தில் அம்மாவினதும் என்னுடையதும் கைரேகைகள் மட்டுமே!

எழுத்தாளர்களில் இரண்டு வகை.இசையை எடுத்துக்கொள்ளுங்கள். யாருமே இல்லாத அமேசன் காட்டுக்குள்ளும் ஏதோ ஒரு குயில் சங்கீதம் பாடிக்கொண்டு தான் இருக்கிறது. ரசிகர்களே இல்லாவிட்டால் இளையராஜா?

இங்கே இந்த பதிவுக்கு வராத கமெண்ட்கள் மீது கோபம் வருகிறது. உங்கள் facebook நண்பர்கள் share பண்ணும் links ஐ பார்க்கும் போது இன்னும். பக்கத்து இலையாகவும் எடுத்துக்கொள்ளுங்கள்!
சிலவேளை காட்டுக்குள் இளையராஜா போல இருக்கிறோமோ என்று தோன்றுகிறது! எசப்பாட்டு கேக்குதா?

ஏ.எ.வாலிபன் சொன்னது…
//எசப்பாட்டு கேக்குதா?//
வசைப்பாட்டும் கேக்குது நண்பரே.... நான் என் அம்மாக்கு அடிக்கடி சொல்லும் பஞ்ச் இது "குயில்களின் கச்சேரியை மனிதர்கள் சில சமயம் கேட்பதுண்டு ஆனால் மனிதக் கச்சேரிகளை குயில்கள் கேட்பதில்லை". குயில் மனிதர்களுக்காகவன்றி தனக்காகப் பாடும் விட்டேத்தி தனம்தான் அதன் அழகு.
நிற்க, நானும் கொமேன்ட்களுக்கு ஆசைபடுகிறேன் தான், ஆனால் நிறைய கொமென்ட்களை விட இந்த மாதிரி ரசனையான ஒரு கொமென்ட் தருகிற திருப்தி தனி. என்னுடைய கோபம் நான் ரசிக்கப் படாமல் போவதிலும் ஒரு நல்ல தொழில்முறை எழுத்தாளன் ரசிக்கப்படாமல் போயிடுவானோ என்பதுதான்.
பட்டிமன்றங்களுக்கும் கலக்கப்போவது யாருக்கும் வேறுபாடற்றுப் போனது போல, எல்லாம் மாறும், மாறியே வந்துள்ளது. வேறு வழியில்லை.வியாழமாற்றம் (26-01-2011) : கனவு காணுங்கள் Guys


கனவு காணுங்கள் Guys

இலங்கை அரசாங்கத்தின் மும்மொழித்திட்டம் நிகழ்ச்சிக்கு அப்துல் கலாம், தமிழ்நாட்டின் தென்னிந்திய விஞ்ஞானிகள் சங்கம், மற்றும் ஜனாதிபதிகள் சங்கத்தின் தடையை மீறி இலங்கை வருகை தந்திருந்தார்! அவரிடம் படலை ஒரு பேட்டி எடுக்க அப்பாய்ண்மன்ட் கேட்ட போது போடாங்கோ என்று சொல்லிவிட, அவர் விஜயம் சம்பந்தமான ஒரு whatever!

கவிதையும் வேண்டாம் கன்சிகாவும் வேண்டாம் :(

 

சென்ற ஞாயிறு மெல்பேர்னில் பொங்கல் விழா.  கேஸி மன்றம் நடத்தியது. மன்றத்து தலைவர் call பண்ணினார்.

hansika-motwani-New Photos-09“ஹலோ மேகலாவா”

“சாரி டீ இன்னும் வரல”

“ஆ நான் அப்புறமா பேசறேன்”

“கொய்யால, நீ எப்ப பேசினாலும் மேகலா இருக்கமாட்டா!!, தெரியும்டா ஒங்கள பத்தி!”

“இல்ல ஒரு கவியரங்கம், மேகலா தான் கவித எழுதுவாளே அதான்”

“ஓ சாரி , ஹன்சிகாவ ட்ரை பண்ணுங்களேன்”

“ஓ ஓகே, ட்ரை பண்ணுறன், சாரி போர் த டிஸ்டர்பான்ஸ்”

தலைவர் போனை வைத்துவிட, இந்த வாரம் யாரு கொல்லைப்புறத்து காதலி என்று ஐ ஆம் திங்கிங், போன் எகைன்!

“ஜேகே .. நீயும் எழுதுவ தானே”

“எழுதினான், பட் சரி வரல!”

“ஆனா பதிவு சிலது நல்லா இருக்கே!”

“ஓ அதுவா, அது சும்மா அள்ளுது, கொலை செய்யுது, அபாரம் என்று ஒரு சில வாரத்தைகள போட்டு எழுதுறது”

“கவியரங்கத்துக்கு ஆறுபேரு தேவை. ஒரு கை குறையுது! அப்பிடியே ஒரு பதிவ கவிதையா எழுதி வாசிக்கிறயா?”

“What the …  கவிதை என்றாலே நான் நாளு நாள் டாய்லட் போவேன். அவ்வளவு அலெர்ஜி”

“இல்ல உன்னோட கேதா, உதயா கௌரி எல்லாம் கவிஞர்கள் தானே”

“நான் எப்பவாச்சும் அவங்க கவிஞர் எண்டு சொன்னேனா?”

“இல்ல, அவங்கட பதிவ பார்த்தா அப்புடித்தான் தெரியுது”

“ஏண்டா கோர்த்து விடுறீங்க, ஒங்களுக்கு கவுஜ தானே வேணும் பாஸ்!”

எனக்கு இந்த கவிதை மாட்டார் என்றாலே ஸ்ரீலங்கா ஆர்மிக்கு ஐடென்டிட்டி கார்ட் காட்டுவது போல வயத்த கலக்கும்! இதுக்காக தான் ஏதன்ஸ் வாலிபன் உலகக் கவுஜ எல்லாம் பதிவில போட்ட போது ஒரு சின்ன கமெண்ட்டுடன் நான் எஸ்கேப்பு. சிங்கை கவிஞர் கௌரியிடம் இயல்பாக இருக்கும் கோபம் அவரை ஒலக கவிதை எழுத தடுக்குது என்று வாலிபன் எனக்கு ஒருமுறை சொன்னாப்ல!(கோர்த்து விட்டாச்சு)! இத்தனை ரவுடிங்க இறுக்கிற தெருவில பேஸ்மண்ட வீக்கான நமக்கு ஹன்சிகா வேண்டாம் என்று தான் தோன்றியது.  பக்கத்து தெருவில தான் கவிஞர் கேதா வேறு இருக்கிறான். அவனும் அவன்ட மனிசியுமா சேர்ந்து நம்மட ஹன்சிகாவை நாறடிச்சிடுவாங்களே என்று டிக் டிக்.

விதி வலியது! எனக்கும் ஹன்சிகாவுக்கும் ஏன் ஆகாமப்போனது என்று ஊரே கேட்டுது! சொல்லணுமா? சுஜாதா தான். யாப்பு படிச்சு தேர்ந்தா பிறகு தான் மீறி புதுக்கவிதை எழுதணுமாம். போங்கடா போக்கத்த பசங்களா எண்டு கவுஜ பக்கமே போறதில்ல! வேணுமின்னா நீ ஹன்சிகாவ வச்சுக்க. எனக்கு மேகலாவே போதும். ஒலக கவிஞர் கேதாவ கோர்த்து விடலாம் எண்டா, மச்சி நீ கவித பாடியே தீரனும் என்று கொலைவெறில தலைவரு. நானும் பாரத்த ஹன்சிகா மேல போட்டிட்டு கவுஜய எழுதீட்டன். பொண்ணும் நல்லா தாங்குது! எழுதி முடிச்சா பீம் பீம் என்று யாரோ ஹாரன் அடிக்கறான், கவிஞர் கேதா வாசலில. வாசிச்சிட்டு சொன்னாரு,

மாப்பிள, இந்தா நாத்தம் நாறுது, ரொம்ப டீப்பா லவ்வு பண்ணுற. இப்படி பாடினா பொண்ணு போடாங்கோனு சொல்லீட்டு போய்க்கிட்டே இருக்குமே! 

டீப்பா லவ்வு பண்ணினா நாறுமா பாஸ்?

காதல் என்பது துர்நாற்றம் வீசும் பூ!

நம்ம கவிதை?

அது குப்பை கூட மூக்கைப்பொத்தும் நாற்றம்!

என்ன கொடுமை சரவணா. இதுக்கு சுஜாதா தேவலாம் என்று சொல்லி நானும் கவித பாடியாச்சு. பாருங்கள் மக்களே. குப்பை ரொம்ப நாறுதா? அட்லீஸ்ட் அகற்ற சொல்லி ஒரு கமெண்ட் ஆவது போடுங்க மகா ஜனங்களே. இனி கவுஜைக்கு போவோமா?

 

ஒரு சின்ன கிளிப்பிங்! நாங்களும் டிவில வரணும் இல்லையா?

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ValmikiIrudayam2கேசியில் பொங்கல் விழா

பானை பழம் ரெடி

பாக்கு வெற்றிலை ஊதுபத்தியும் ரெடி

கும்பம் வைக்க தேங்காய் முடியும் ரெடி

அடடா பிள்ளையார் பிடிக்க வேண்டுமே!

ஆஸி முழுக்க மூசி மூசி மாடுகள் தேட

மாடுகளை தேட!

கடைசியில் நான் மாட்டினேன்!

பிள்ளையார் பிடிக்க போய் கவிஞராய் ஆன கதை இது!

நல்ல காலம்,

வாலி கூட கவிஞன் தானே!

 


dhanushமாச்சீர், விளச்சீர், காய்ச்சீர் கனிச்சீர் என்னும்

கடிச்சீர் எண்ணம் கடுகளவும் இல்லை!

மண் வாசனை, மாவீரர் மறைவு, வெருகல் என்னும்

நினைவிடை தோய்தலுக்கு கறாராய் அனுமதியும் இல்லை!

டிஸ்டன்ஸ்ல மூனு,

மூனு கலரு வைட்டு,

வைட்டு பேக்ரவுண்டு நைட்டு

என்று சந்தம் பாட நான் தரணி போற்றும் கவிஞனும் இல்லை!

 

அக்கம் பக்கம் பார்க்கிறேன்!

அதிரதர் ஆர்ப்பரிக்கும் மேடை.

அற்பன் எனக்கு ரதமும் களமும் கொடுத்ததே

ஆப்பு வைப்பதற்கு தானோ என்று ஒரு சந்தேகம்

அர்த்தரதன் போல் அனைத்தும் இழந்து,

அனாதையாய் நின்றாலும்,

அகதியாய் வந்தவனை அள்ளி அணைக்கும் தேசம் இல்லையா!

ஆசையில் கவிபாட வந்த பூசை நான்

கவியில் நிறை இருந்தால் கர ஓசை தாருங்கள்

குறை இருந்தால் கல்லெறியுங்கள்!

அறை எனக்கு புதிதில்லை,

அறை எமக்கு புதிதில்லை

இறை பிதா இயேசுவையும் அது விடவில்லை!

 

557150தமிழுக்கென்று தனிமாசமாம்! முதல் நாளில் பொங்கலாம்

தையல் அவள் வரவுக்கு அத்தனை ஆரவாரம் ஏனோ?

வெளிக்கிடும் போது மருமகள் வியாக்கியானம் கேட்டாள்!

அள்ளி அணைத்தேன் அக்காவின் உறவை

ஆசையாய் சொன்னேன் தை மகளின் கதையை

உழைக்கும் மக்களாம் உழவர்,

ஆடிப்பட்டம் தேடி விதைத்து,

அல்லும் பகலும் ஓடி உழைத்து,

ஆறாம் மாசம் அரிவி வெட்டி

புதிர் எடுத்து அது குழைத்து

புதுப்பானை அடுப்பில் வைத்து

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்

இவை சேர்ந்து பொங்கல் பொங்கி

மகிழும் நாளாம் தை முதல் நாள்.

உப்பிட்டவன் உள்ளளவும் நினைக்கும் நாள்

உதயனையும் உழவனையும் வணங்கும் நாள்

தை மகள் தமிழனின் முதல் மகள் மூத்த மகள் என்றேன்

முழுசிப்பார்த்தாள் மூன்று வயது தத்தை.

இத்தனை விளக்கம் எதுக்கு எனக்கு ?

முட்டாள் மாமா தெரியாதாம் உனக்கு!

தை தான் தமிழர் புத்தாண்டு என்றாம் ஒரு கணக்கு!

சொன்னபோது உணர்ந்தேன், மடியில் சுவாமி நாதனை!

 

தை பெண்ணே! உன்னை தாய் என்று சொல்லவா?

சங்கடமான கேள்வி!

தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி!

தமிழ் புத்தாண்டு உனக்கு பிறந்தானா?

இல்லை சித்திரைக்கு பிறந்தானா?

அப்பா உன்னது என்கிறார்

அம்மா சித்திரை என்கிறார்

ஒரு டிஎன்ஏ சாம்பிள் கொடேன்

தகப்பன் போன இடம் தெரியவில்லை!!

தாய் யார் என்பதும் புரியவில்லை!

தமிழனே!

தாய் நாட்டை தொலைத்தது போல பெற்ற தாயையும் தொலைத்து விடாதே!

 

தை பெண்ணே! உன்னை காதலி என்று சொல்லவா?

தென்மேற்கு பருவமழை, திருவையாறு இசை கச்சேரி,

முத்திவிநாயகர் கோயிலில் திருவெம்பாவை பஜனை,

உன்னை வரவேற்க மார்கழி தயாராகும்

என் பெண்ணை வரவேற்க வீட்டில் பொங்கல் பொங்கும்

வஞ்சியை கொண்டாட வண்டுகள் வெடிகள் கொழுத்தும்

மோகம் முப்பது நாளில் முழு உலகமும்

காதலர் தினம் கொண்டாடும்

நீயும் மாசமாவாய்,

மாசியும் வரும் கையோடு மகமும் வரும்

தாட்சாயினியும் பிறப்பாள்

முருகன் கைப்பிடிப்பான்!

தக்கனுக்கு வந்து தண்டனையும் கொடுப்பான்

அன்று தமிழர் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கானது

இன்று குரங்கு பிடிப்பதெல்லாம் பிள்ளையார் ஆகிறது!

நம்பியாரும் நார்வேயும் கைவிட்ட நமக்கு

நம்பிக்கை இருக்கு கடைசி வரை துணைக்கு!

தையல் பெண்ணே வருக

திகட்ட திகட்ட காதல் செய்க!

 

அது ஒரு அழகிய கனாக்காலம்

அதிகாலையில் ஆல் இந்தியா ரேடியோ

திருப்பினால்

தென் கச்சியின் - இன்று ஒரு தகவல்

குன்னக்குடி - சிறப்பு வயலின்

ஒற்றை எண்ணில் மாவிலைத்தோரணம்

முற்றத்து மண்ணில் அரிசிமாக்கோலம்

வெடி கொளுத்தும் அண்ணன்மார்!

வெடியோடும் அண்ணன்மார்!

அக்காவும் வந்து இணைய ஆட்டம் சூடு பிடிக்கும்!

ஆதவன் மெல்ல எழுகிறான்

ஆவின் பால் பொங்கி வழிகிறது

அம்மா பால் நினைந்தூட்டியவனை பண்ணிசைக்க

கரும்பும், கறுத்தகொழும்பானும், கதலியும் சேர்த்து

புட்கை சாப்பிட்டோம்!

சிங்களவன் சிரிப்பான் அதையும் பொங்கல் ஆக்கி விட்டோம்

TNA in Indதமிழன் பொங்குவது தைப்பிறப்புக்கு மட்டும் தானே!

நாமார்க்கும் குடியல்லோம்! நமனை அஞ்சோம்

கைலையில் சிவன் ஆட அப்பர் பாடினார்!!

இலங்கையில் கிருஷ்ணா பாட சம்மந்தர் ஆடுறார்!!!

 

மேல்போர்னில் தைப்பொங்கல்!

அதிகாலையில் அலாரம்,

அடிக்கும் போது பத்து மணி!

எழுந்தவுடன் சண் டிவியில்

எந்திரன் சிறப்பு காட்சி

பொங்கல் எங்கயடி? எண்டு பொண்டாட்டியிடம் கேட்டால்

மங்களம் தான் தருவாள் மதுரைக்கு அரசி!

முற்றத்து அரிசிக்கோலமும் திரிஷா மார்பில் டாட்டு ஆனது

தேங்காய் மஞ்சள் கும்பம் எல்லாம் ஹன்சிகா மோத்வானி உருவம் ஆனது

பொங்கலுக்கு சிக்கின் சேர்த்து பெப்சியுடன் பேத்தி

அங்கலாய்க்கும் பெரிசுகள் பெயர் வாங்கினர் நோட்டி


சூரியனை தேடி கிழக்கே நோக்கினேன்!

யுகம் யுகமாய் தன்னை எரித்து எம்மை அணைப்பவன்

அவன் அனல் பார்வை தாங்கோணாமல்

ஆஸி வரை ஓடி ஒளிந்துவிட்டு

குளிருக்காய் .. ஆஸி வரை ஓடி ஒளிந்துவிட்டு

தூர நின்று துதி பாடும்

எட்ட நின்று கவிபாடும்

என்னை நினைத்து எள்ளி நகையாடி

நிலம் விரல் கிளைந்திட நிற்கிறேன்

அஸ்தமனம் எல்லாம் நிரந்தரம் அல்ல

மேற்கில் விதைத்தால் கிழக்கினில் முளைக்கும்

என்றான் கவிஞன் ஒருவன்

முளை வர நிலம் உழுதல் வேண்டும்

களைகள் படுதல் வேண்டும்

தமிழர் எழுதல் வேண்டும்

இது எம் கடன்

அக்கடன் தீரும் வரை

தை பெண்ணே

நாம் பொங்குவோம்

பொங்கிக்கொண்டே இருப்போம்

தமிழையும் பொங்கலையும்!

வியாழமாற்றம் (19-01-2011) : எஸ் எம் கிருஷ்ணா நீ பேகனே


எஸ் எம் கிருஷ்ணா நீ பேகனே

5828305575_bced9595d5கார்ட்டூன் போல political satire எழுதலாம் என்று ஒரு விவகாரமான ஐடியா. கூடிய சீக்கிரம் இலங்கை போகவேண்டிய தேவை இல்லாததால் எனக்கும் திடீரென்று டமில் உணர்வு பீறிட்டுவிட்டது! உடனே வயலுக்கு வந்தாயா, நாற்று நட்டாயா என்று ஆரம்பிக்கவேண்டாம் ப்ளீஸ். நான் ஒரு காமெடி பீஸ்! என்னை எல்லாம் விமர்சித்து அமைதிப்படை சத்தியராஜ் ஆக்கவேண்டியதில்லை! பட் இந்த வகை எழுத்துக்களையும் கொஞ்சம் அனுமதியுங்கள்.

யாழ்ப்பாணத்தில் திமுக தலைவர்!

 

இராமசாமி தண்டவாளத்தடியில் ஒன்றுக்கு போய்விட்டு வந்து சொன்னார்.

“வெங்காயம் வெங்காயம்! தமிழனுக்கு யாரிட்டையாவது ஏமாறிக்கொண்டு இருக்காட்டி பத்தியப்படாது. யாராவது இன்சூரன்ஸ்காரன் பல்சரில வந்து ஏமாத்துவான்! இல்லாட்டி கொழும்புல பிளாட் கட்டலாம் எண்டு உறுதியில்லாத காணிக்கு காசு குடுப்பியல், அதுவும் இல்லாட்டி பிள்ளையார் கோயிலுக்கு தங்கத்தில மணி மகுடம் வைப்பியல் .. விளங்காம தான் கேட்கிறன் கடவுள் ஆரடா?”

“சாமியண்ணே, கதைய விட்டிட்டு மேசைய பார்த்து விளையாடன! விசுக்கொப்பன் துரும்பு, மசிர்.. அத பிடிக்க ஏலாதே? அடுக்கி விளையாடுற தாள், இத்தினி வருஷமா விளையாடுற, இன்னும் துரும்பு பிடிக்க மாட்டியாம், கடவுள் இல்லையெண்டு கண்டுபிடிக்க வந்திட்டார் பேராசிரியர் சிவத்தம்பி!”

உங்களோட  தாள் விளையாடுற என்ன போய் செருப்பால அடிக்கோணும், சிவத்தம்பிக்கும் கடவுளுக்கும் என்னடா சம்பந்தம்?

மத்தியானம் சாப்பாட்டு நேரம் தாண்டிக்கொண்டு இருந்தது. இராமசாமி பேசியதை மற்றவர்கள் கணக்கெடுத்ததாக தெரியவில்லை. எல்லோரும் ஒத்த வயதுக்காரர்கள். “ஹிட்லர் சாகிறதுக்கு முதல் கலியாணம் முடிச்சது”, “ஜி ஜி பொன்னம்பலம், பிரிட்டிஷ் மகாராணிக்கு chapman படிப்பிச்சது” காலத்தவர்கள்!  கிழமை நாள் எண்டால் பத்து மணிக்கு நந்தாவில் அம்மன்கோயில் வேப்பமரத்தடிக்கு ஒவ்வொருத்தராக வருவினம். ஆளுக்கு ஒரு பேப்பர். உதயன், வீரகேசரி, வலம்புரி. இராமசாமி பழைய ரீடர்ஸ் டைஜெஸ்ட் கொண்டுவருவார். “Western bureaucracy is bullshit” என்பார்.  “Putin should go” என்று ரஷ்யா பக்கம் திரும்புவார். “இந்த சுமந்திரனுக்கு யாழ்ப்பாணம் தெரியுமே?” “அம்பேத்கர் மதம் மாறினது கடவுள் இருக்கிறார் எண்டத ஆக்சாப்ட் பண்ணினமாதிரி போயிட்டுது” பலதும் சொல்லுவார்.  பதினொரு மணிக்கு சீட்டாட்டம் ஆரம்பிக்கும். ஆறுபேர் ஆட்டம். எட்டுத்தாள், பன்னிரெண்டு துரும்பு. அரசியலும் கார்ட்ஸ் ஆட்டமும், யாழ்ப்பாணத்து கள்ளும் சூடு கிளப்பும்.

நயினாதீவு தபாற்கந்தோரில் வேலை பார்த்த இராமசாமி அந்த காலத்து பெரியார் தொண்டன்.  நயினாதீவு அம்பாள் கோவில் தர்மகர்த்தா சபையில் மச்சான் குணரத்தினம் இருப்பதால் இராமசாமிக்கு இடம் இல்லை.  ஒருமுறை இந்தியாவுக்கு ஸ்தல யாத்திரை சென்றபோது தான் பெரியார் புகழ் கேள்விப்பட்டார். திரும்பி வந்தபோது யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர் மற்ற சாதிகளை அடிமைப்படுத்துவதை கண்டு மனம் வெதும்பிப்போனார்.  வெள்ளாளர் கொட்டத்தை அடக்க “திமிலர் முன்னேற்ற கழகம்” என்று ஒரு கழகத்தை 1974ம் ஆண்டு  அமைத்தார். நயினாதீவு அம்மாள் கோயிலுக்கு முன் வளவில் இருந்த பொட்டல் காணியில் ஒரு சின்ன கொட்டில் போட்டு அதில் அம்மாள் கொடியேற்றம் அன்றே திராவிட கொடியேற்றி கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

“என் மதிப்பிற்குறிய திமிலர் பெருமக்களே! நான் வெள்ளாளனாக இருக்கலாம். ஆனால் உங்களில் ஒருவன். பெரியார் யாரு என்று தெரியுமா? நாயக்கர். ஆனால் அவர் தலித்துகளுக்காக தன்னையே அர்ப்பணித்த்தார். நோர்வே முதல் சவுத் ஆபிரிக்கா வரை, வெள்ளைக்காரன் தான் மீன் பிடிக்கிறான்! ஆனா யாழ்ப்பாணத்தில் மட்டும் திமிலன் பிடிக்கவேண்டுமா? தமிழன் சிந்திக்கவேண்டிய தருணம். வெள்ளாளனுக்கு பெண் சிக்கும் போது மீன் சிக்காதா? உங்களுக்கு தேவை ஒரு பெரியார். இதோ உங்கள் முன்னால்!”

பெரியார் யார் என்றே தெரியாத கூட்டம் இராமசாமியை பெரியார் என்று சொல்ல ஆரம்பித்தது. இராமசாமியின் முதல் டார்கட், அம்பாள் கோயில் தான். அம்பாள் கோயில் தர்மகத்தா சபையில் திமுகவும் உறுப்பினர் ஆகவேண்டும். எல்லா சாதிகளுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கவேண்டும் என்று போராடினார். கழகத்தின் முன்னே ஒரு வாங்கு போட்டு கீமாயிண பிரசங்கம் திருவிழா பதினைந்து நாளும் செய்வார். அந்த நேரத்தில் தான் முத்தவேளியில் உலகத்தமிழ் ஆராய்ச்சி விழா ஆரம்பித்தது. ஜனவரி பத்தாம் திகதி மாநாட்டில் குழப்பம், குண்டுவீச்சு. ஒன்பது பேர் பலி. இதெல்லாம் தெரிஞ்ச விஷயம். ஆனால் அடுத்தநாள் இரவு, நயினாதீவு மகாவித்தியாலயத்துக்கு பக்கத்தால இராமசாமி நடந்து வந்துகொண்டிருந்த போது, பத்து எருமைமாட்டு தடியன்கள் வந்து இருட்டு அடி அடிச்சாங்கள். வந்தவங்கள் சிங்களத்தில கதைச்சதால இராமசாமி பொலிசில கம்ப்ளைன் பண்ணேல்ல. மச்சான் குணரத்தினம் தான் நேவியை செட் பண்ணி தன்னை அடிச்சுப்போட்டதா இராமசாமி புலம்பிக்கொண்டு இருந்தார். திமுகவின் நிர்வாக சபை கூட்டம் ஒரு வாரத்தில் நடப்பதாக இருந்தது. அடுத்த நாள், நாய் ஒன்று அவர் வீட்டு வாசலில் வெட்டி துண்டு துண்டாய் போடப்பட்டு  கிடக்க. இராமசாமி அதற்கடுத்த நாளே, யாழ்ப்பாணம் கொக்குவிலில் வெள்ளாளர் கொட்டத்தை அடக்க நிரந்தரமாக மூவ் பண்ணிவிட்டார்!  

இராமசாமி கவிதையும் எழுதுவார். குடியரசு பத்திரிகைக்கு “வெள்ளாளனே வெளியேறு” என்று ஒரு உணர்ச்சிக்கவிதை அனுப்பியிருந்தார். பிரசுரமாகவில்லை. இண்டைக்கு கேட்டாலும் தான் குடியரசுக்கு கவிதை எழுதியதாக சொல்லிக்கொள்வார்!

துரும்பு விசுக்கோப்பன். மணலோட நாலு துரும்பு. இரண்டடுக்கு தாள்.

“இவன் எடுபட்ட சுந்தர், எங்கட பிரின்சிபல் ஆறுமுகத்தின்ர மூத்தது, முந்தநாள் சுவிஸ்க்கு போன கையோட அவருக்கு பக்தி வந்திட்டாம். வைரவருக்கு தங்கத்தில் சூலம் செய்து போடப்போறாராம். பேப் புடுக்கர், அந்த காலததில கோவிலுக்கு பின்னாலே ஒன்னுக்கு அடிச்சிக்கொண்டு இருந்தவர், இப்ப யாருக்கு படம் காட்டுறார் எண்டு தெரிய இல்லை”

“இராமசாமி, அவன் என்னத்த செய்தா உனக்கென்ன, அவனிட்ட இருக்குது செய்யிறான், நீயும் இருந்தா செய்யன்?”

என்று வேலாயுதம் இன்னும் ஏத்திவிட்டான்

“சனம் அந்த பாடு படேக்க இவங்கள் என்னத்த செய்தவங்கள்? இந்த கோயில் குளத்துக்கு கொட்டுற நேரம் ஒவ்வொரு வன்னி குடும்பத்தை சுவீகரிச்சு வளர்த்துவிடலாம். வெங்காயம் தமிழருக்கு கடவுள் இப்ப என்னத்துக்கு வேணும் என்று கேட்கிறன்? காணியும் போலீசுமே இல்லையாம்? கடவுள் இருந்து மட்டும் …”

இராமசாமி கெட்டவார்த்தையால் கடவுளை திட்டத்தொடங்கினார். ராமசாமிக்கு சலரோகம் இருக்குது. அடிக்கடி தனியே போய் தண்டவாளத்தடியில் ஒதுங்குவார்.

இராமசாமிக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் ஆனையிறவு அடிபாட்டில் செத்துப்போனான். பிரேதம் கிடைக்கேல்ல. பகுத்தறிவால இராமசாமி மகனுக்கு கிரியை ஒண்டும் செய்யேல்ல. கமலாம்பிகை, அவரின்ட மனைவிதான் தம்பிக்காரனை வச்சு களவாக அம்பாள் கோயிலில் அபிஷேகம் செய்தாள். இண்டைக்கு வரைக்கும் இராமசாமிக்கு இந்த விஷயம் தெரியாது.  இரண்டு வருஷத்துக்கு முன்னால கமலாம்பிகையும் செத்துப்போனா. இராமசாமி இப்போது மகளோட தான் இருக்கிறார்.  நயினாதீவில் ஐஞ்சு பரப்பில தோட்டக்காணி இருக்குது. அதையும் திமிலர் பெடியன் ஒருத்தனுக்கு எழுதிக்கொடுக்கப்போறதா சொல்லிக்கொண்டு இருந்தவர். மகள் வீட்டை விட்டு துரத்திப்போடுவன் என்று சொன்னதால பம்மிக்கொண்டு இருக்கிறார். வேலை ஒன்றும் செய்யிறதில்ல. பென்ஷன் வருது.  எட்டு மணிக்கு பேரனை பள்ளிக்கூடம் கூட்டிப்போவார். ஒரு மணிக்கு திரும்பி கூட்டிவருவார்.  

“சும்மா எதுக்கு எடுத்தாலும் கடவுள குற்றஞ் சொல்லாத சாமி, கடவுளும் தான் எவ்வளத்த எண்டு கவனிக்கிறது?”

“என்னத்த கவனிக்கிறார்? அவ்வையாருக்கு வெட்டியா நாவல் பழம் புடுங்கி குடுக்க டைம் இருந்திருக்கு … இப்ப பத்து நூறு வருஷமா ஒண்டையும் புடுங்கினதா கதை இல்ல .. நல்லா சம்பந்தர் மாதிரி ஆக்கள் பாடி  ரீல் விட்டு இருக்கிறாங்கள், நீங்களும் அவங்களிண்ட பாட்ட பாடுங்க, தோடுடைய செவியன்! அவன் பார்த்து தான் வெள்ளைக்காரன் காதில தோடு போடுறான் போல”

“நீ மகன் போன சோகத்தில கடவுள் இல்லை எண்டு சொல்லிறாய், வெள்ளைவத்தல விசா பிள்ளையார் தெரியுமே? ஒரு தேங்காய், ஆயிரம் ரூவா அர்ச்சனை தான், எண்ட சின்னவனுக்கு அவுஸ்திரேலியா  ஸ்டுடண்ட்  விசா அடுத்த கிழமையே கிடைச்சிட்டு, போய் இறங்கின உடனே கையை தூக்கிட்டார், நல்ல பொம்பிள பார்க்கோணும் இப்ப!”

மகனை இழுத்தது இராமசாமிக்கு கோபம் கோபமாய் வந்தது. கார்ட்ஸ் தாள்களை விசுக்கென்று சுழற்றி எறிந்தார்.

“டேய், யாழ்ப்பாணத்திலேயே பகுத்தறிவு இருக்கிறது எனக்கு மட்டும் தாண்டா! நீ எல்லாம் ஸ்ரீமாவுக்கு கொடி பிடிச்ச காலத்திலயே நான் திராவிட கொடி பிடிச்சவண்டா! அந்தகாலத்தில நான் மேடையில பேசினா, ஆயிரம் பேர் பின்னால வருவாங்கடா! வெங்காயம், போங்கடா நீங்களும் உங்கட கள்ள தாள் விளையாடும்”

“அதான் அடிக்கடி மூத்திரத்துக்கு தனியே தண்டவாளத்துக்கு போறாய் ஆக்கும்? உண்ட பகுத்தறிவு பம்மாத்து எங்களுக்கு தெரியாதா ராமசாமி! வாளி தூக்க கூட ஒரு ஆள் கிடையாது!”

இராமசாமி எதுவும் பேசாமல் தண்டவாளத்தடிக்கு ஒன்றுக்கடிக்க விரைந்தார்.

தனியாக!

The Namesake


நண்பர் சுகத் ஒரு பதிவுக்கு ஒரு போட்டிருந்த கமெண்ட் இது.
“The books are like Guru's, most of the good books will find you, you don't have to go and find them.”
உண்மை தான். வாழ்க்கையில் சில புத்தகங்கள் நம்மை தேடிவரும். அப்படியே போட்டுதாக்கும். இது போல் ஒரு உறவு இனி இல்லை என்று அவை ஒன்றாக எம்மோடு கொள்ளும். இரவு பகல் பார்க்காது.  கடவுள் ஒவ்வொருவருக்கும் துணையாக ஏதாவது ஒன்றை அனுப்புவாராம். கணவனாக, மனைவியாக, சில கலைஞர்களுக்கு துணைவி கூட அமைவதுண்டு! சிலருக்கு அம்மா, சிலருக்கு அப்பா, ஒரு சிலருக்கு செய்யும் வேலை, சிலருக்கு பணம். துணை பல வகை. எனக்கு அது புத்தகமா என்று சில நேரங்களில் நினைப்பதுண்டு. அப்படியென்றால் கடவுளுக்கு நன்றி. உனக்கும் ஒரு புத்தகம் அனுப்புகிறேன் கடவுளே!
என்னை அப்படி, கார்த்திக்குக்கு ஒரு ஜெஸ்ஸி போல போட்டு தாக்கியது இரண்டு நபர்கள். முதல் நபர் எண்டமூரி. அப்போது நான் பளையில் இடம்பெயர்ந்து அகதியாக இருக்கிறேன். 1995ம் ஆண்டு. பாடசாலை இல்லை. படிப்பு இல்லை. ஆனால் எண்டமூரியின் “ஒரு பறவையின் விடுதலை” இருந்தது. பளையில் இருக்கும் வரை மீண்டும் மீண்டும் வாசித்த புத்தகம். சாதாரண காதல் கதை தான். ஆனால் அந்த செடேடிவ் ஆன ஆண் பெண் உணர்வுகளை எண்டமூரியால் மாத்திரமே தர முடிந்தது. சுசீலா கனகதுர்காவுக்கும் இந்த இடத்தில் ஒரு ஹாட்ஸ் ஆப்!

102635728சில வருடங்களுக்கு முன்னர், எல்லாமே ஒரு blacked out ஆனது போன்ற உணர்வு. எந்த புத்தகமும் என்னை அண்டவில்லை. அப்போது ஒரு வித identity crisis இல் தத்தளித்துக்கொண்டு இருந்த காலம். பத்து வயது பள்ளித்தோழன் மயூரதன், அடிக்கடி என்னோடு பேசுவான். அவன் இருப்பது நியூயோர்க்கில், நான் மெல்போர்னில். அவனும் நானும் பேசும் விஷயம் எப்போதும் புத்தகங்களே. ஒருமுறை கேட்டான் “The Namesake” வாசிச்சிட்டியா என்று. இல்லை என்றேன். அதை முதலில் வாசி, அப்புறம் உன் பிரச்சினைக்கெல்லாம் நீயே முடிவுகள் எடுப்பாய் என்றான். எனக்கு ஆச்சரியம். உடனேயே “Augustan and Robertson” புத்தகக்கடையில் ஆர்டர் பண்ணி வாங்கியது தான் “The Namesake”.
article00லண்டனை பிறப்பிடமாக கொண்ட ஜோஹும்பா லாஹிரி எழுதிய நாவல் தான் இது. லாகிரி தன்னுடைய “Interpreter of Maladies” என்ற சிறுகதை தொகுப்புக்கு புலிட்சர் பரிசு வாங்கியிருக்கிறார். அதற்கப்புறம் எழுதியது தான் “The Namesake”. அப்புறம் “Unaccustomed Earth”. மூன்றுமே இன்றைக்கு என் வீட்டின் குட்டி நூலகத்தை அலங்கரிக்கின்றன. வாழ்க்கையில் சிலரை சந்திக்கும் பாக்கியம் எப்போதாவது தான் கிடைக்கும். அந்த சந்திப்பு உங்கள் வாழ்க்கையே மாற்றிப்போடும்.  “The Namesake” அந்த வகை புத்தகம். என்னை தேடி வந்து கொண்டாடிய தேவதை!

கதை என்ன?
ஆஷிமா கொல்கத்தாவை சேர்ந்த இளம்பெண், அசோக்கை மணம் முடிக்கிறாள். அசோக் MIT இல் fellowship செய்யும் இன்ஜினியரிங் மாணவன். ஒரு ரயில் விபத்தில் கால் ஒன்று ஊனமாகிறது. அவன் உயிரை, அவன் வாசித்துக்கொண்டிருக்கும் ருசிய சிறுகதையான் “Overcoat” காப்பாற்றுகிறது. கால் ஊனமான அசோக், மணமகன் கிடைக்காத ஆஷிமா, இயல்பாக திருமண தரகர் மூலம் இணைகிறார்கள். ஆஷிமாவும் அசோக்கும் அமரிக்கா வருகிறார்கள்.
namesakeஇங்கு தான் கதை வேகம் பிடிக்கிறது. ஆஷிமா பெங்காலி கலாச்சாரத்தில் ஊறித்திளைத்த பெண். அசோக் ஒரு introvert intellect! நல்லவன் தான். ஆனால் இயல்பாக அவர்களின் வயது வித்தியாசம் அசோக்கை ஒருவித godman ஆக ஆக்குகிறது. ஆஷிமா அமெரிக்க கலாச்சாரத்தை கண்டு மிரள்கிறாள். கர்ப்பமாகிறாள். குழந்தை பிறக்கிறது. குழந்தைக்கு பாட்டி தான் பெயர் வைக்கவேண்டும். பாட்டி அனுப்பிய கடிதம் கிடைக்கவில்லை. பெயர் வைக்காமல் ஹாஸ்பிடலில் டிஸ்சார்ஜ் பண்ணமுடியாது என்று சொல்ல, அசோக் தன் உயிரை காப்பாற்றிய “overcoat” கதை எழுத்தாளர் “Gogol” பெயரை வைக்கிறார். வீட்டுப்பெயர் நிக்கில். Gogol வளர்கிறான்.

Gogol குடும்பம் விடுமுறைக்கு போகும் இடம் எப்போதுமே கொல்கத்தா தான். அவனுக்கு இயல்பாக, இரண்டாம் தலைமுறை குடியேறிகளுக்கே உரித்தான identity crisis வருகிறது. Gogol  பெயரை எல்லோரும் கேலி செய்கிறார்கள். Gogol தன் குடும்பத்தை ஒவ்வாமையோடு பார்க்கிறான். அவர்களை விட்டு விலகிச்செல்கிறான். தன்னுடைய identity crisis ஐ மறைக்க அமரிக்கர்களுடன் நட்பு நாடுகிறான். சிகரட், மரிஜுவானா என எல்லா கெட்டபழக்கங்களுக்கும் அடிமை ஆகிறான். முதல் உடல் உறவு ஒரு அமரிக்கப்பெண்ணுடன், ஒரு பார்ட்டியில். குடிபோதையில் அந்த பெண் முகம் கூட அவனுக்கு ஞாபகம் இல்லை. இப்படி போகிறது அவன் வாழ்க்கை.

விரக்தியில் Gogol அவன் பெயரை நிக்கில் என்று மாற்றுகிறான். தந்தை ஒரு சந்தர்ப்பத்தில் அவனுடைய பெயரின் namesake ஐ விளக்குகிறார். Gogol அதை கேட்டு வருந்துகிறான். கொஞ்சம் கொஞ்சமாக தன் குடும்பத்தோடு நெருக்கமாகிறான்.

namesake1_lGogol முற்போக்கு சிந்தனை கொண்ட மாக்சின் என்ற அமரிக்க பெண்ணை காதலிக்கிறான். அவள் வீட்டிலேயே டேரா போடுகிறான். அவள் அம்மா, அப்பா இருக்கும் ஒரே வீட்டில் இருவரும் வாழுகிறார்கள். அமரிக்க கலாச்சாரத்தில் சிக்கலான கூறுகள், இரண்டாம் தலைமுறை குடியேறியான Gogol, இவர்கள் மன உணர்வுகள் இந்த பகுதியில் அழகாக காட்டப்படுகிறது.

ஆஷிமாவுக்கு மாக்சினை Gogol அறிமுகப்படுத்தும் நேரம். ஆஷிமா இப்படியான அதிர்ச்சிகளை தாங்கிக்கொள்ள இப்போதெல்லாம் பழகிவிட்டாள். இந்த உறவும் கடந்து போகும் என்று நினைக்கிறாள். சில நாட்களில் அசோக்குக்கு ஹார்ட் அட்டாக் வந்து இறந்துபோகிறான். இங்கே தான் கதையின் முதலாவது உச்சம் உருவாகுகிறது. Gogol இது வரை கொண்டிருந்த அந்த identity crysis  நொறுங்கி அவன் தான் யார் என்று உணர்கிறான். இங்கே அவனுக்கும் காதலிக்கும் சண்டை. பிரிகிறார்கள்.
image_06ஆஷிமா, சிலநாட்களில் Gogol க்கு மௌஷ்மியை அறிமுகப்படுத்துகிறாள். அவளும் ஒரு பெங்காலி இனத்துப்பெண். இரண்டாம் தலைமுறை குடியேறி. அவனுக்கு போலவே அவளுக்கும் அதே identity crisis. அதை உடைக்க, பிரெஞ்சு இலக்கியம், ஆணுக்கு மேல் ஆண் என தொடர்ந்து பல உறவுகளை தாண்டி வந்தவள். நிலையற்றவள். இருவருக்கும் பொருத்தமேயில்லை. ஆனாலும் பெங்காலி கலாச்சாரத்தின் படி திருமணம் முடிக்கின்றனர், டேட்டிங் கூட அதிகம் செய்யவில்லை. இரண்டு coffees, ஒரு நாள் மௌஷ்மி வீட்டில் விருந்து. அங்கே உடல் உறவு கொள்ளும்போது அவள் oven இல் வைத்த bacon தீய்ந்து விடுகிறது! லாஹிரியின் நுட்பமான எழுத்தின் அடையாளங்கள் இவை!

namesake5Gogol  ஓரளவுக்கு இந்த புது வாழ்க்கைக்கு தயாராகிவிட்டான். மௌஷ்மிக்கு முடியவில்லை. ஒரு நாள் அவளுக்கும் அவளின் முன்னாள் காதலனுக்கும் தொடர்பு என்ற அதிர்ச்சி Gogol க்கு தெரியவருகிறது.

இந்த சமயம் தான், Gogol இன் தங்கை சோனாலியின் திருமணம் நடக்கிறது. அவள் ஒரு யூத இனத்து ஆணை மணம் முடிக்கிறாள். ஆஷிமாவும் வீட்டை விற்றுவிட்டு கொல்கத்தா போக முடிவு எடுக்கிறாள். அப்போது தான் Gogol இன் நிலை அவளுக்கு புரிகிறது. அவள் அமரிக்காவிலேயே தங்க தயாராக, Gogol இல்லை என்று சொல்லி தாயை அனுப்பிவைக்கிறான்.

220px-Gogol_Paltoஇப்போது Gogol தனியே. அமரிக்காவில், பிறந்து வளர்ந்து, எல்லாமே இருண்டு போய் தனிமையை உணர்கிறான். அப்பாவின் குட்டி நூலகத்துக்கு போகிறான். அங்கே “Overcoat” புத்தகம் கண்ணில் புலப்படுகிறது. அந்த புத்தகம் அவனுக்காய் அப்பா எப்போதோ பரிசாக வாங்கி, கொடுக்க முடியாமல் போன புத்தகம். Gogol வாசித்துக்கொண்டு இருக்கும்போது ……
எனக்கு இதற்கு மேல் கதையை விவரிக்க முடியவில்லை. மன்னிக்கவும்!

இந்த புத்தகம் ஒரு நாள் மாலை ஆறு மணிக்கு வாங்கிக்கொண்டு வந்தேன். வாசிக்க ஆரம்பித்து, போக போக, உடம்பு பட படக்க ஆரம்பித்து குளிரத்தொடங்கி விட்டது. ஹீட்டர் போட்டும் பயனில்லை. அதிகாலை நான்கு மணியளவில் மௌஷ்மியின் infidelity சம்பவம் வாசிக்கிறேன். என்னை அடித்துப்போட்டது. எப்படி என்ற கேள்வியும் ஏன் என்ற கேள்வியும், Gogol எப்படி அதை தாங்கிகொள்கிறான் என்பதும் புரியவில்லை. புத்தகம் முடியும் போது அதிகாலை ஏழு மணி, என்னை அறியாமல் மனம் இறுகி, கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது. Gogol இன் தனிமை மிரட்டியது. கண்ணாடியில் Gogol ஐயே பார்த்தேன். இப்படி ஒரு நாவல், இனி என்னை தேடி வருமா?
அசோக் மரணம் சம்பவிக்கும் இடமும் கனக்கவைக்கும் பயங்கரம். ஆஷிமா அடைந்த அந்த உணரச்சியை லாகிரி விவரிக்கும் இடம். நோபல் பரிசு ஏன் கொடுக்கவில்லை? அபாரம்.
"She stares at her empty teacup, and then at the kettle on the stove, which she'd had to turn off in order to hear her husband's voice just a few hours ago. She begins to shiver violently, the house instantly feeling twenty degrees colder. She pulls her sari tightly around her shoulders, like a shawl. She gets up and walks systematically through the rooms of the house, turning on all the light switches, turning on the lamppost on the lawn and floodlight over the garage as if she and Ashoke are expecting company. She returns to the kitchen and stares at the pile of cards on the table, in the red envelopes it had pleased her so much to buy, most of them ready to be dropped in the mailbox. Her husband's name is on all of them" .... excerpt from "The Namesake", the book I will live, only live with throughout my life!”
நான் ஒரு உல்டா பேர்வழி. என்னுடைய “Girl Is Mine” என்ற ஆங்கில சிறுகதையிலும் இந்த உணர்வுகளை கடன் வாங்கியிருப்பேன்! எழுதும்போது காப்பி பண்ணுகிறேன் என்ற உணர்வு ஏற்படவில்லை. ஏனெனில் சிறுகதையில் வரும் அந்த உணர்வை நானும் அனுபவித்து இருக்கிறேன். நிஜத்தை லாஹிரியும் சொல்லலாம். நானும் சொல்லலாம்!
"Please Jake ..."
I stared at the car audio player, which I just paused in order to talk to Jessie. I began to shiver rather violently, the car instantly feeling ten degrees colder even though the cooler is switched off. I put my seat belt on suddenly, lowered the window glass and started staring outside. Its morning still, students just started  to gather inside the campus compound and chit chat. Some students are talking to themselves with some notes in hand. They must be memorizing something, it should be an exam period.”
அதுமட்டுமல்ல, தமிழில் எழுதிய சிறுகதை சுந்தரகாண்டத்திலும் இந்த காட்சியை விட்டு வைக்கவில்லை!
“மேகலா அமைதியாய் இருந்தாள். அவளுக்கு புரிந்துவிட்டது. அவள் இது நாள் வரை எதை எண்ணி பயந்தாளோ அதுவே தான். ஜன்னல் வழியே வெறித்துப்பார்த்தாள். வவுனியா வெயில் சுட்டு எரித்தது. மேகலா சற்றே குளிருவது போல உணர்ந்தாள். கைகள் இரண்டையும் இறுக்கமாக மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டாள். அறை திடீரென்று நிசப்தமானது போல தோன்றியது. தந்தையின் கையில் இருந்த குழந்தை இன்னும் அழுதுகொண்டிருந்தது.”

“The Namesake” என்னை எப்படி மாற்றியது என்பதை அறியவேண்டுமானால் நண்பன் கஜனிடமோ அல்லது என் அக்காவிடமோ கேட்டுப்பாருங்கள். என் வாழ்க்கையில் “The Namesake” க்கு முன்னர், “The Namesake” பின்னர் என்ற முற்றிலும் மாறுபட்ட இரண்டு ஜேகேகள் இருக்கிறார்கள். Gogol க்கு இயல்பாக் இருந்த Identity crisis ஐ நான் எனக்கு வலிந்து திணித்துக்கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். அவனுக்கு உடைந்த அதே கணம், நானும் அதை உடைத்துவிட்டேன். நன்றி லாகிரிக்கு!
The Namesake, எனக்கு நெருக்கமான நண்பர்களையும் பெற்றுத்தந்தது. அமுதாவுக்கும் எனக்கும் உருவான நட்பு The Namesake இல் ஆரம்பித்தது தான். அவள் கணவன் ஒரு பெங்காலி, ஒருமுறை அவர்கள் வீட்டில் இந்த புத்தகம் இருந்ததை கண்டு, அது பற்றி கேட்டபோது, இன்னும் வாசிக்கவில்லை என்றாலள். மயூரதன் எனக்கு சொன்னதை அவளுக்கு சொன்னேன். கணவனும் மனைவியும் ஒன்றாக ஒருமுறை விடுமுறைக்கு சென்றபோது வாசித்துவிட்டு சொன்னார்கள் “It was an epic”. அன்று உருவான நட்பு தான், இன்றைக்கு நான் சிங்கப்பூரில் சம்பாதித்தது எது என்று கேட்டால், அவர்கள் இருவரும் தான். எனக்கு ஒரு சிக்கல் என்றால் call பண்ணி பேசுவதற்கு இருக்கும் ஒரு சில நண்பர்களுள் அவர்களும் அடங்குவர்.
namasakeஇந்த புத்தகத்தை மீரா நாயர் அதே பெயரில் திரைப்படமாக எடுத்தார்.  தேர்ந்த நடிகர்களான இர்பான் கான், தபு, கல் பென் போன்றோர் நடித்து இருந்தார்கள். படம் என்ன மாதிரி மூட் கிரியேட் பண்ணவேண்டுமோ அதை சரியாகவே கிரியேட் பண்ணியது என்று நினைக்கிறேன். ஆனாலும் புத்தகங்கள் எப்போதுமே சிறப்பு தான். எங்கள் பாத்திரங்கள், எங்கள் லோகாஷன்கள். அவை தரும் உணர்வை எந்த திரைப்படமும் தர முடியாது.
இது இலக்கியம்!
இந்த புத்தகம் வாசித்த சூட்டிலேயே, லாகிரியின் ஏனைய இரண்டு புத்தகங்களையும் வாசித்து முடித்துவிட்டேன். எனக்கு மனது கணக்கும் போதெல்லாம் கையில் எடுக்கும் புத்தகம் The Namesake தான். அப்படி ஒரு பாசம் அதன்மேல். லாகிரி போல ஒரு வாழ்க்கையை, புலம்பெயர்ந்த வாழ்க்கையை எழுத முடியுமா? என்று தெரியவில்லை. ஆனால் இந்த வகை இலக்கியங்கள் எமக்கு வேண்டும். எமக்கு என்பதை விட, எம் அடுத்த தலைமுறைக்கு வேண்டும். வாசகர்கள் நாங்கள் தான் இப்படியான எழுத்தை கொண்டாட வேண்டும். அப்போது தான் நம் அடுத்த தலைமுறை Youtube இல் கழிக்கும் நேரத்தை விட புத்தகங்களில் கழிக்கும் நேரம் அதிகமாகும்.

மீண்டும் அடுத்த வாரம் இன்னொரு காதலியுடன்!

ஆம்பிளைங்க டூயட்!!!


இந்த இசைத்தொடர் குசேலன் படத்தை விட ப்ளாப்! கடந்த பதிவுக்கு வெறும் நூறு ஹிட்ஸ் தான். மற்றவர்களுக்கு எழுதாதே, உனக்கு பிடிச்சத எழுது என்றான் மன்மதகுஞ்சு. இந்த வாரம் என் வாசகர் தமிழினி ஒரு ஈமெயில் அனுப்பினார்.
“இப்போது நீங்கள் இசைப்பதிவு எழுதுவதில்லையா? நீங்கள் முன்பு சொன்னது போல் சனி அல்லது ஞாயிறில் எழுதலாமா? ரசித்துப்படித்துக் கெற்க பலர் உள்ளோம்!!!”
இந்த வாரம் என்னை கவர்ந்த ஆண்கள் இணைந்து பாடும் டூயட்கள் சில. ஸ்டார்ட் ரெடி மியுசிக்!

தென்றலே தென்றலே, இதை feel பண்ணி கேட்காத ஒருவர் தானும் இருந்தால் நான் பாடல் கேட்பதையே நிறுத்திவிடுகிறேன். அருமையான பியானோ இசையுடன் ஆரம்பிக்கும் பாடல். உன்னியின் ஹம்மிங் இழையாய் தென்றலே தென்றலே என்று ஆரம்பிக்கும்.
தூரத்தில் நிலா, பக்கத்தில் காதலி தூங்குகிறாள். இரண்டுமே எட்டாத தூரத்தில். இரண்டும் அவனை எரிக்கிறது. ஆனாலும் தூங்க வைக்கிறான். நல்ல பாடல் உருவாக வேறு என்ன situation வேண்டும்?
முதலாவது இண்டர்லூட்டில் கொஞ்சம் சறுக்கல். இசையும் காட்சியும் கவரவில்லை. சரணம் ஆரம்பிக்கும் போது ரகுமான் comes back again. இரண்டாவது இண்டர்லூட். அமிர்தம். ரகுமானின் மாஸ்டர் பீஸ் பியானோ. அது முடிய கொஞ்சம் பான் ப்ளூட் ரிதம், மனோ ஆரம்பிக்கிறார். மனோவா இது? “அதோ மேக ஊர்வலம்”  பாணி குரலில் பாடியிருப்பார்.  இந்த பாடலை ஹிந்தியில் சோனுநிகமும், எஸ்பிபியும் பாடி இருப்பார்கள். சோனுநிகம் சொதப்பி இருப்பார். ஆனால் எஸ்பிபி ஹிந்தியில் பாடும்போது, ஹிந்தி ஏன் இசைக்குகந்த மொழி என்பதை நிரூபிப்பார். Beautiful!


அடுத்த பாடல் தலைவர் பாடல்! தலைவரும் எஸ்பிபியும் சேர்ந்து பாடியது. பாலச்சந்தர், சிந்துபைரவிக்கு பின்னர், இளையராஜா இருக்கும் தைரியத்தில், இசைக்கலைஞர் சார்ந்த புது புது அர்த்தங்கள், புன்னகை மன்னன் என்று அடுத்தடுத்து எடுத்தார். அப்புறம் ரகுமானை வைத்து டூயட் கூட எடுத்தார். ஆனால் கதை அவரின் ஒரே டெம்ப்ளேட் தான். ஒரு ஆணுக்கு இரு பெண்கள். அல்லது ஒரு பெண்ணுக்கு இரு ஆண்கள். இரு கோடுகளில் ஆரம்பித்தது. ஆசாமி நிறுத்தவேயில்லை! அவ்வப்போது “வறுமையின் நிறம் சிகப்பு” போன்ற பாரதி இன்ஸ்பிரேஷன்ஸ் வருவதும் உண்டு!

இந்த பாடல் புது புது அர்த்தங்கள் படம். இசையில் சர்ப்பரைஸ் சேர்ப்பது பற்றி ஒருமுறை எழுதி இருந்தேன். இது அந்த வகை பாடல். சாதரணமான குத்து வகையில் ஆரம்பிக்கும். எஸ்பிபி ராஜா சேரும்போதே ஏதோ இருக்கவேண்டும் இல்லையா? அது சரணத்தில் புரியும்! கவனமாக கேளுங்கள்.
இளையராஜா : ஏ நான் பாட பிறந்தது ஷோ..ஷோ..ஷோ..ஷோக்கு
                               ஆனாலும் தடுக்குது நா.. நா.. நாக்கு
                              என் பாடல் இனித்திடும் தேன் தேன் தேன்
                              அட தென் பாண்டி குயிலினம் நான் தான்.
         எஸ்பிபி : நான் பாடவே ஏழு ஸ்வரங்களூம் தான் தாவிடும் மேவிடும்..
இளையராஜா : ஒ ஹோ (நக்கலை பாருங்கள்)
எஸ்பிபி : ஊர்கோடியே மாலை அனிந்திட தான் தாவிடும் ஆடிடும்
இளையராஜா : ஓ.ஓ (again!)
எஸ்பிபி விடவில்லை. அடுத்த வரியில் பாவத்தையும் மெலடியையும் கவனியுங்கள்
எஸ்பிபி : என்னிசையை கேட்டாலே வெண்ணிலா வாராதா?
இளையராஜா : அடடாடா.....(இது தனக்கு தானே சொல்லுவது!, மெலடி அவரது அல்லவா)
எஸ்பிபி :ள்ளிரவில் நான் கொஞ்ச தன்னையே தாராதா?

இளையராஜா : ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் (again)
பாருங்கள். எத்தனை நயம், இசை, நேசம் எல்லாமே இருக்கும். Very authentic ராஜா இசை. எஸ்பிபி குரல். இராட்சசர்கள்!

அடுத்த பாடல், எஸ்பிபி யேசுதாஸ் இணைந்து பாடியது. எல்லோருக்கும் உடனே ஞாபகம் வருவது “காட்டு குயிலு” தான். அதை விட இந்த பாடல் ஒரு படி அதிகம் தான்! படம் கௌரி மனோகரி. இசை மலையாளத்து இனியவன்! மெல்லிசை கர்நாடக இசைகளுக்கு இடையேயான போட்டி. இந்த இருவரை தவிர போட்டிக்கு வேறு யார் தகுதியானவர் என்று நினைக்கிறீர்கள். Amazing!
ஜேசுதாஸின் ஆலாபனையுடன் ஆரம்பிக்கிறது. எஸ்பிபி பல்லவி எடுக்க பாடல் மெதுவாக டேக் ஒப் ஆகிறது. எஸ்பிபியும் சின்ன சின்ன ஆலாபனைகள் முயற்சி செய்தாலும் ஜேசுதாஸ் முன்னால் அது வான்கோழி effort ஆகிவிடுகிறது!  இண்டர்லூட் முழுதும் இனிமையான ஜேசுதாஸ் சுரவரிசைகள். எனக்கு இந்த ராகம் மாட்டர் ஒன்றும் தெரியாது. அதை தான் எஸ்பிபியும் சரணத்தில் பாடுகிறார். சரணத்தில் எஸ்பிபி சிக்ஸ் அடித்துவிட இப்போது ஜேசுதாஸ் அண்டர் ப்ரெஷர்!
இரண்டாவது சரணத்தில் கடும் போட்டி. சுரமும் பாடலும் போட்டி போடுகிறது. இங்கே தான் எஸ்பிபி தப்பு செய்கிறார். தன் குரலில் பாவத்தை கை விட்டுவிட்டு கர்நாடக பாணிக்கு தாவுகிறார். எஸ்பிபி தன் பாணியில் பாடியிருந்திருக்கவேண்டும், இனிமை இப்போது கொஞ்சம் மிஸ்ஸிங். ஜேசுதாஸ் இரண்டாவது சரணத்தில் கொஞ்சம் பீட் பண்ணி விடுகிறார். அந்த சந்தோஷ ஸ்தாயி முடிக்கும் போது குரலில் தெரிகிறது. இறுதி பல்லவியை ஆலாபனையுடன் ஜேசுதாஸ் பாடுகிறார்!
இந்த பாடலை பேராதனை பூங்காவில், நண்பர்கள் உறவினர்களுடன் ஒருமுறை சென்றபோது பாடச்சொல்லி பாட முயற்சித்து மூக்குடைபட்டது ஞாபகம் வருகிறது! தேவையில்லாமல் பல்ப் வாங்குவதில் என்னைப்போல ஒரு ஆளை வேறு எங்கும் காண கிடைக்காது.
இரண்டு ஜாம்பவான்கள் பாடும் பாடல். இனி வருமா? ஐயோடா!அடுத்த பாடல் அதிகம் அறிமுகம் தேவை இல்லை. படம் “படித்தால் மட்டும் போதுமா”. பிபிஸ் டிஎம்எஸ் இணைந்து கலக்கிய எவர்கிரீன் எம்எஸ்வி பாடல்.  பாடல் காட்சியில் அளவுக்கு அதிகமான நாடகத்தன்மை. கொடுத்த காசுக்கு மேலாகவே நடித்து இருக்கிறார்கள். இருவருக்கும் ஐம்பது வயது மேக் அப் வேறு போட்டு இருக்கிறார்கள்!!
இந்த பாடலுக்கு விளக்கம் தேவையில்லை. எல்லோரும் தேவையான அளவு பிரித்து மெய்ந்துவிட்டார்கள். சிவத்திரன் மாஸ்டரும், குமரன் மாஸ்டரும் 1997 ம் ஆண்டு சென்ஜோன்ஸ் கல்லூரியில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் பாடி அசத்தியது இந்த இடத்தில் ஞாபகம் வருகிறது.
அடுத்த பாடல், என்னுடைய all time favourites களில் ஒன்று. “Girl Is Mine”. பாடல் எந்த அளவுக்கு பிடிக்கும் என்றால், என்னுடைய ஒரு சிறுகதைக்கு Girl Is Mine என்று வைக்கும் அளவுக்கு பிடிக்கும். தலைவர் மைக்கல் ஜாக்சனின் த்ரில்லர் ஆல்பத்து பாடல்.  திரில்லரில் பெஸ்ட் என்று நான் நினைப்பது “wanna be starting something” என்ற பாடல் தான். ஆனால் இந்த மெலடியும் அது அளவுக்கு பிடிக்கும். மைக்கல் ஜாக்சன் ஒரு கம்போஸர், பாடலாசிரியர் மாற்றும் நடனமேதை. இப்படி ஒரு டாலேன்ட் எப்போது பார்க்கபோகிறோமோ தெரியாது.
Beatles புகழ் Paul McCartney யுடன் மைக்கல் ஜாக்சன் சேர்ந்து பாடியது. இருவரும் ஒரே பெண்ணை காதலிக்கிறார்கள். அவளும் தன்னை தான் காதலிக்கிறாள் என்று இருவருமே உரிமை கோருகிறார்கள்.  Paul இன் குரலில் அருமையான பேஸ் இருக்கும். நம்ம ஜேசுதாஸ் போல. MJ பற்றி சொல்லவே தேவையேயில்லை. ஹை பிட்சில் பிச்சு உதறுவார். இருவருமே சேரும்போது அற்புதமான இசை ஹார்மனி ஒன்று உருவாகுகிறது.
MJ இந்த பாடலை ஒரு நடுராத்திரியில் திடீரென்று எழுந்து கட கடவென எழுதியதாக கூறுவர். MJ க்கு மிகவும் பிடித்த பாடல் என அவரே சொல்லியிருக்கிறார். இந்த பாடலில் ஒரு அரசியலும் இருக்கிறது. இது த்ரில்லரில் இருந்த ஒரே ஒரு மெலடி பொப் பாடல். உயர்குடி வெள்ளையர்களை திருப்திப்படுத்த MJ உருவாக்கிய பாடல் என்றும் சிலர் சொல்லுவார்கள்.
மைக்கல் பாடலாசிரியாராக மிளிரும் இடங்கள் ஏராளம். அவரின் பாடல்களில் வரிகள் எப்போதுமே high quality இல் இருக்கும். இந்த பாடலும் குறைவில்லை. பாடலை கேட்கும் போது வரிகளையும் கவனியுங்கள்! இசையும் கவிதையும் சங்கமிக்கும் பாடல். இயல்பாக இருக்கும்.
"The Girl Is Mine"
[(Michael)]
Every Night She Walks Right In My Dreams
Since I Met Her From The Start
I'm So Proud I Am The Only One
Who Is Special In Her Heart
[Chorus]
The Girl Is Mine
The Doggone Girl Is Mine
I Know She's Mine
Because The Doggone Girl Is Mine
[(Paul)]
I Don't Understand The Way You Think
Saying That She's Yours Not Mine
Sending Roses And Your Silly Dreams
Really Just A Waste Of Time
[Chorus]
Because She's Mine
The Doggone Girl Is Mine
Don't Waste Your Time
Because The Doggone Girl Is Mine
[Bridge (Paul)]
I Love You More Than He
(Take You Anywhere)
[Michael]
But I Love You Endlessly
(Loving We Will Share)
[Michael & Paul]
So Come And Go With Me
To One Town
[Michael]
But We Both Cannot Have Her
So It's One Or The Other
And One Day You'll Discover
That She's My Girl Forever And Ever
[(Paul)]
I Don't Build Your Hopes To Be Let Down
'Cause I Really Feel It's Time
[Michael]
I Know She'll Tell You I'm The One For Her
'Cause She Said I Blow Her Mind
Chorus (Michael)
The Girl Is Mine
The Doggone Girl Is Mine
Don't Waste Your Time
Because The Doggone Girl Is Mine
[Michael & Paul]
She's Mine, She's Mine
No, No, No, She's Mine
The Girl Is Mine, The Girl Is Mine
The Girl Is Mine, The Girl Is Mine
[Paul]
The Girl Is Mine, (Yep) She's Mine
The Girl Is Mine, (Yep) She's Mine
[Michael]
Don't Waste Your Time
Because The Doggone Girl Is Mine
The Girl Is Mine, The Girl Is Mine
[Paul]
Michael, We're Not Going To Fight About This, Okay
[Michael]
Paul, I Think I Told You, I'm A Lover Not A Fighter (சூப்பர்)
[Paul]
I've Heard It All Before, Michael
She Told Me That I'm Her Forever Lover, You Know, Don't You Remember
[Michael]
Well, After Loving Me, She Said She Couldn't Love Another
[Paul]
Is That What She Said?
[Michael]
Yes, She Said It, You Keep Dreaming
[Paul]
                                                               I Don't Believe It (என்ன ரேஞ்சு இது! பாடவே முடியாது)

வியாழமாற்றம் (12-01-2011) : வடக்கு தேய்கிறது, தெற்கு வளர்கிறது


வடக்கு தேய்கிறது, தெற்கு வளர்கிறது

1948ம் ஆண்டு ஜனநாயக குடியரசாக இந்த நாடு மாறுகிறது. சீனாவையும் ரஷியாவையும் காக்கா பிடிக்கிறது. அந்த நாடுகளும் அமரிக்காவை ஏய்க்க ஒரு நல்ல துரும்பு சீட்டாக இதை பயன்படுத்துகின்றன. முதலில் ஒரு ஜனாதிபதி வந்தான். நாய்க்குட்டி வளர்ப்பது போல, நாட்டுக்கு தானே ஒரு கொள்கை ஒன்றை உருவாக்கி வளர்த்தான். கொள்கையா? எத்தனை கிலோ? வெறும் கொள்ளை தான்!

கக்கூஸ்

 

யிலில் இருந்து இறங்கும்போதே வயிற்றை கலக்க ஆரம்பித்துவிட்டது. அடக்க முடியவில்லை. இந்த டக்கீலா கருமத்தை இரவு அடிச்சாலே இதே பிரச்சினை தான். அவதானமாக இருந்திருக்கவேண்டும், இருக்கத்தான் டக்கீலா விடவில்லையே! காலையிலேயே ஒரு மாதிரி மார்க்கமாக தான் இருந்தது. கொஞ்சம் இஞ்சி போட்டு கோப்பி குடிச்சதால அவ்வளவு தெரியவில்லை. ஆனால் ரயில் ஜோலிமொன்ட் ஸ்டேஷன் கடக்கும் போது வயிறு கொஞ்சம் மக்கர் பண்ண தொடங்கியது. அட இதெல்லாம் நமக்கு சாதாரணம் என்று அதை பற்றியே யோசிக்காமல் பாட்டு கேட்டுக்கொண்டு வந்ததில் ஒருமாதிரி சமாளித்தாயிற்று. மெல்போர்ன் சென்ட்ரல் ஸ்டேஷனில் இறங்கும்போது புரிந்துவிட்டது. இன்றைக்கு சங்கு தான்.

அலுவலகத்துக்கு பதினைந்து நிமிடங்கள் நடக்கவேண்டும். இந்த வயிற்றோடு தாம் தாம் என்றும் நடக்கமுடியாது. கொஞ்சம் கவனமாக நடக்கவேண்டும். நின்று அடக்கிப்பார்த்துவிட்டு போகலாமா? வேண்டாம் யோசிக்காதே. அதைப்பற்றி யோசிப்பது தான் எமன். ஏதாவது பாட்டு. ம்ஹூம். புத்தகம். ஆ, புத்தகம் பற்றி யோசிக்கலாம். என்ன புத்தகம். “The Namesake”? சுத்தம்! இந்த நேரத்தில அந்த  புத்தகத்தை எல்லாமா யோசிப்பது? “Too Perfect” , போன வாரம் வாசித்த புத்தகம். உணர்வுகளை கட்டுப்படுத்தலை எத்தனை அழகாக சொல்கிறது. “When being in control gets out of control...” அய்யய்யோ, இப்ப நான் என்ன கன்ட்ரோல்ல இருக்கிறேன்? ஷிட், எது யோசிச்சாலும் அங்க தான் போய் நிற்கிறது. அட, அவசரத்திலேயும் என்ன “சுத்த தமிழ்” வேண்டி இருக்கு? “நிக்குது”. என்னப்பா இது! ஒண்டையும் யோசிக்கவேண்டாம். முதலில் ஆபீஸ் போவம். முருகப்பெருமானே அது வரைக்கும் என்னோட கக்கூசை கட்டுப்படுத்தும் வரம் தா. அடுத்த நல்லூர் தேருக்கு காவடி தூக்கிறேன்!

அலுவலகம் வந்துவிட்டது. கால்களை ஒருக்களித்தே ஒரு மார்க்கமாக நடந்தபடியே உள்ளே நுழைகிறேன். ரிசப்ஷனில் இருந்த பெண் சிரித்தாள். பதிலுக்கு சிரித்துவிட்டு எதுவுமே காட்டிக்கொள்ளாமல் கொஞ்சம் மெதுவாகவே நடந்தேன். கக்கூஸ் இடது பக்க மூலையில் இருந்தது. திரும்பும்போது தான் ஜிம் எதிரே வந்தான்.

“Hey maite … how are ya?”

இந்த ஆஸ்திரேலியர்கள் தொல்லை தாங்க முடியாது. எங்கே கண்டாலும் “How are you?” சொல்லுவார்கள். பற்றாக்குறைக்கு “mate” என்பதை “maite” என்று உச்சரிப்பார்கள். அது புரிவதற்கே எனக்கு ஆறு மாசம் எடுத்தது. எது சொன்னாலும் பதிலுக்கு ஒரு “Thanks” சொல்லி வைப்பார்கள்.

“I am good .. Jim … yourself?”

“I am great … Thanks, How was your weekend…?”

அடடா weekend பற்றி விசாரிக்க ஆரம்பித்துவிட்டான். இவனுக்கு பதில் சொல்லி, பதிலுக்கு இவன் weekend இல் என்ன செய்தான் என்று கேட்பதற்குள் இங்கேயே ஆய் போய் விடும்! வெட்ட வேண்டியது.

“Sorry Jim, I gotta make an urgent call.. catcha in a while”

“No worries maite ..…”

ஜிம் ஏதோ சொல்ல ஆரம்பிக்கும் முன்னரேயே கழிப்பறை நோக்கி ஓட ஆரம்பித்தேன். ஓடும்போது தான் லேப்டாப் பை இன்னமும் தோளில் கிடந்தது ஞாபகம் வர, அட லாப்டாப் பையுடன் கக்கூசுக்குள் போனால், அத்தனை அவசரமா என்று எல்லாரும் சிரிப்பார்களே என்று துணுக்குற்றேன். ம்ஹூம், வேகமாக என் காபினுக்கு திரும்பி வந்து பையை வைக்கும் போது தான் பார்த்தேன். பக்கத்தில் பீட்டர் உட்கார்ந்திருந்தான். அடடா ..இவனா, தொடங்கினால் நிறுத்தமாட்டானே!

“Hey buddy … How’s thing? Had a great weekend?”

“Was cool Peter …. Excuse me mate... I really have to make this call urgently”

பீட்டர் என்ன பதில் சொன்னான் என்பதை கேட்கும் நிலையில் நான் இல்லை. மெதுவாக ஆனால் வேகமாக கக்கூஸ் நோக்கி நடந்தேன். ஓடினேன் என்று தான் சொல்லவேண்டும். கதவை திறந்தபோது தான் பெருத்த நிம்மதி வந்தது. அப்பாடா ஒருவரும் உள்ளே இல்லை. மொத்தமாக ஐந்து அறைகள் காலியாக இருந்தது. நேரே வரிசையில் கடைசியில் இருந்த அறைக்கு ஓடினேன். திறந்து பார்த்தால் யாரோ ஒரு நாதாரி பயல் டாய்லெட் சீட்டை மடிக்காமல் ஒன்றுக்கு போயிருக்கவேண்டும். சீட் முழுதும் மஞ்சள் நிறத்தில் திட்டு திட்டாய் ஈரம். இவர்கள் எல்லாம் எப்படி பெண்கள் இருக்கும் வீடுகளில் வாழ்கிறார்களோ தெரியாது. ஒன்றுக்கு போகும்போது சீட் தூக்கி விட்டு தான் போகவேண்டும் என்று கூட தெரியாதவனுக்கு எல்லாம் எப்படி இங்கே வேலை கிடைத்தது? அது சரி, இண்டர்வ்யூ என்றால் மினுக்கிக்கொண்டு பேசத்தேரிந்தவர்கள் தானே!

எந்த ஒரு பொது கக்கூஸ் அறைகளிலும் முதலாவதாக இருக்கும் அறைக்கு தான் போகவேண்டுமாம். உளவியல் ஆராய்ச்சிப் படி பொதுவாகவே எல்லோரும் கடைசியில் இருக்கும் அறையை தான் நாடுவார்களாம். அதனால் அது அசுத்தமாகவும், முதலாவது அதிகம் பாவிக்கப்படாமல் சுத்தமாகவும் இருக்குமாம். அந்த அவசரத்திலும் எங்கோ வாசித்தது மூளையில் புலப்பட, உடனடியாக, வரிசையில் முதலாவதாக இருந்ததுக்கு ஓடினேன். சுத்தமாக இருந்தது. டிஷு உருண்டையும் புதுசாக இருக்க, சீட்டை விரித்து அதை சர சரவென்று இழுத்து சீட்டில் இன் மீது கவனமாக விரித்தேன். அப்படியே திரும்பி, ஜீன்ஸை இறக்கி ஆயாசமாய் உட்காரும்போது தான் போது அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. ச்சே யாரோ வந்துவிட்டான்!

யாராக இருக்கும்? மெலிதான விசில் சத்தம். நான் இருக்கும் கக்கூஸ் கதவிடுக்கால் வெளியே பார்க்கலாம். வெளியில் இருந்து பார்த்தால் உள்ளே தெரியுமா? இந்த நிலையில் என்னை பார்த்து விடுவானா? இதை எல்லாம் கட்டும்போது கவனிக்கமாட்டார்களா? சரி, யார் தான் வந்தவன்? இந்த விசில் எங்கேயோ கேட்ட விசில் ஆச்சே! கதவிடுக்கினை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன். கலிங்கத்து சிறையில் அகப்பட்டிருந்த கருணாகரபல்லவன், சிறை நடமாட்டங்களை, தான் தப்புவதற்காக உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருந்தது தான் ஞாபகம் வருகிறது. கூடவே இருந்த கூலவாணிகனின் அசட்டை ஆச்சரியாமாய் தோன்றியது. அவனைப்போய் எப்படி சோழர் ஒற்றனாக நியமித்தார்கள்? அட கருமமே! கக்கூஸில் இருக்கும் போது கடல்புறாவா? மற்றவனும் இப்படித்தான் ஆய் போகும் போது ஏறுக்கு மாறாக சிந்திப்பானா? இடுக்கினூடாக பார்க்கும் பொது அந்த ஆள் கடந்து போவது தெரிந்தது. கடவுளே இது அதே ஜிம் தான். சந்தேகமேயில்லை. இவன் ஏன் இங்கே வந்தான்? நான் இருக்கும் நேரம் பார்த்து தான் வரவேண்டுமா? எனக்கு தான் யாராவது அருகில் இருப்பது தெரிந்தால் ஒன்றுமே போகாதே! பக்கத்து அறைக்கு தான் போகிறான். ஐயோ இவனுக்கு நான் இங்கே இருப்பது வேறு தெரிந்திருக்குமோ? நான் கக்கூஸ் போகும்போது டர் புர் என்று சத்தம் வந்து அவன் கேட்டுவிட்டால்? ஐயோ  அவமானமாய் போய்விடுமே! ஆண்டவா ஏன் இப்படி மீண்டும் மீண்டும் என்னை சோதிக்கிறாய்?

இரண்டு காதுகளையும் தீட்டிக்கொண்டேன். ஜிம் அவசர அவசரமாக அவன் டாய்லட் சீட்டினை டிஷ்ஷு பேப்பரால் துடைக்கும் சத்தம் கேட்கிறது. ம்ம்ம் வெள்ளைக்காரன், வெட்கம் மானம் இல்லாதவன். பக்கத்து கக்கூஸில் ஒருத்தன் இருக்கிறான் என்ற விவஸ்தை இல்லாமல் கர் குர் சத்தத்தோடு சிவனே என்று போவான். அட அவனுக்கு எப்படி சிவனை தெரியும்? கக்கூஸில் எதுக்கு கடவுளை நினைக்கிறேன்? ஆக்கப் பொறுத்தவன், ஆறப்பொறுப்பது தான் உசிதம். ஜிம் முடித்துவிட்டு போகட்டும். இரவு வேறு டக்கீலாவுடன் பப்பாளி பழம் சேர்த்து சாப்பிட்டது. நாற்றத்தில் கண்டுபிடித்துவிடுவான். கொஞ்சநேரம் தான், அடக்கிவிடலாம். ஆனால் ஜிம் நான் இருப்பதை சட்டை செய்வதாய் தெரியவில்லை. அவன் பாட்டுக்கு யேசுவே என்று போய்க்கொண்டு இருந்தான். அவன் சப்பாத்து கூட மர அடைப்புக்கு கீழால் தெரிந்தது. அடிடாஸ் பிராண்ட். இவனுக்கு எவ்வளவு சம்பளம் வரும்? என்னை விட அதிகம் தான். என் சப்பாத்தின் பிராண்ட் எனக்கே தெரியவில்லை. சப்பாத்தை கொஞ்சம் உள்ளே இழுத்துக்கொண்டேன். ஏன்தான் இந்த கக்கூஸ் பக்கத்து மர அடைப்புக்கு கீழே இத்தனை இடைவெளி விடுகிறார்களோ!

எனக்கு இதற்கு மேல் அடக்க முடியவில்லை. கொஞ்சம் வியர்க்கவும் ஆரம்பித்துவிட்டது. ஜல்லிக்கட்டில் காளையை அடக்குவதை வீரம் என்கிறார்கள். இதை எவன் அடக்க முடியும்? நான் வீரனா கோழையா? வேண்டாம். இன்னும் கொஞ்சநேரம் தான். ச்சே ஜெஸ்ஸி தான் என்னை தவிக்கவிடுகிறாள் என்றால் ஜிம் கூடவா! மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்! பேசாமல், வெட்கம் பார்க்காமல் ஆய் போய் விட்டால் தான் என்ன? ஐயோ வேண்டாம் இந்த விஷ பரீட்சை! எனக்கென்று அலுவலகத்தில் ஒரு மரியாதை இருக்கிறது. அவமானமாக இருக்கும். இத்தனை அடக்கிவிட்டு இனி ஆய் போனால் சத்தம் வேறு இன்னும் பெருத்து கேட்கும். அப்புறம் எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவனை பார்ப்பது. வேண்டாம். மனிதனாய் பிறந்தால் எப்போதும் dignity மிக முக்கியம்.

ஜிம் முடித்துவிட்டான். வெட்கம் கெட்டவன். இப்படியா ஒருத்தன் கக்கூஸ் போகும்போது சத்தம் போடுவது? அது வேறு அந்த நாற்றம் நாறுகிறது. என்ன கருமத்தை நேற்று சாப்பிட்டானோ! இருந்து முடித்த ஆயாசத்தில் பெருமூச்சு வேறு. ச்சே நாடு விட்டு நாடு வந்து நிமமதியாய் கக்கூஸ் கூட போகமுடியாத நிலைக்கு போய்விட்டென். ஆ, டிஷ்யூ உருண்டை உருளும் சத்தம். இனி போய் விடுவான். சப்பாத்தும் அசைகிறது. போடா ராசா போடா.

புறப்பட்டு விட்டான். இன்னும் முப்பது செகண்ட்ஸ் தான். கையை கழுவி, துடைத்துவிட்டு போய்விடுவான். இனி ஒருத்தரும் இல்லை. நிம்மதியாய் போகலாம். பத்து செகண்ட்ஸ் தான். பத்து, ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து, ஒன்று! ஜிம் கதவு திறக்கும் சத்தம் கேட்க, அப்பாடி இனி வாழ்க்கையில் நிம்மதி. ஆயாசமாய் கண்ணை மூடிக்கொண்டு ஆய் போகலாம் என்று ரெடியாகும் போது தான் புதிதாக ஒரு பேச்சு குரல் கேட்டது.

Hi Jim, how are ya?

Great Thanks .. Yourself  Peter?

ஐயோ பீட்டரா? எண்ட கடவுளே!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 

பிற்குறிப்பு: இந்த கதையில் காட்டப்படும் உணர்வை Parcopresis என்று உளவியல் நிபுணர்கள் அழைப்பார்கள். பக்கத்தில் யாராவது இருந்தாலோ, இருப்பது போல பிரமை கொண்டாலோ அவர்களால் இயல்பாக இயற்கை கடன்களை கழிக்கமுடியாது. இது பற்றிய மேலதிக விவரங்களுக்கு!

http://en.wikipedia.org/wiki/Parcopresis

பண்புடன் இணைய இதழுக்காக

என் கொல்லைபுறத்து காதலிகள்: முதல் கொழும்பு! முதல் ரயில்! முதல் பெண்!

 

riotsதேதி    : ஆகஸ்ட் 15, 1977

நேரம் : இரவு 9.00 மணி

இடம்  : நுகேகொட

பக்கத்துவீட்டு செனவிரத்ன உள்ளே நுழைகிறார்.  வந்த வேகத்தில் அவசரமும் படபடப்பும். கால்கள் நடுங்குகின்றன. சிங்களத்தில் சொல்லும்போதே வாய் குழறுகிறது.

சந்திரா … மோடயங்கள் ஒவ்வொரு தமிழர் வீடாய் வந்துகொண்டு இருக்கிறாங்கள். எல்லா இடமும் அடியும், கொள்ளையும். நீங்க உடனடியாக இந்த இடத்தை விட்டு போய் விடுங்கள்

எங்க போவம் செனவி? இங்க தானே பத்து வருஷமா இருக்கிறோம், இப்ப போகச்சொன்னா? போலீசில் போய் ஒரு என்ட்ரி போடுவோமே? ஓஐசியை எனக்கு தெரியும்

நோ யூஸ், நினைத்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. செய்வது எல்லாமே அரசாங்கத்து ஆட்கள் தான். நுகேகொட எம்பியின் மகன் தான் இந்த ஏரியா தமிழர்களை கொள்ளையடித்துக்கொண்டு வருகிறான். ஒன்று செய்யுங்கள். முக்கிய சாமான்களை கட்டுங்கள். எங்கள் வீட்டில் வைக்கலாம்.

பிள்ளைகள்?

சொறி சந்திரா, அது எங்களுக்கு ரிஸ்க்,  என் அண்ணன் ஒரு தமிழ் குடும்பத்தை டாய்லட்டில் ஒளித்து வைத்ததை கண்டுபிடித்து விட்டார்கள். அவன் வீட்டையும் சூறையாடி விட்டார்கள். ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி சொறி சந்திரா

ஐ அண்டர்ஸ்டாண்ட் செனவி, சாமான்களை முதலில் மூவ் பண்ணலாம்

அவர்கள் அவசர அவசரமாக பெறுமதியான பொருட்களை பொதிப்படுத்தினர். சந்திராவின் மனைவி தாலிக்கொடியை தன் பாவாடை நாடாவோடு சேர்த்து செருகுகிறார். ஏனைய நகைகள் எல்லாவற்றையும் ஒரு கைப்பையில் போட்டுக்கொண்டு வீட்டு வாசலால் வெளியே வரும்போது தான்,

நுகேகொட எம்பி யின் மகனும் அவனின் தடியாட்கள் ஐம்பது பேரும் கையில் தடி பொல்லுகளுடன் திடுப் திடுப் என்று வீட்டு கேட்டை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைகிறார்கள்!

 

தேதி : ஜனவரி 7, 2012

நேரம் : மாலை 6.00 மணி

இடம் : மெல்பேர்ன்

77 கலவரத்தை அப்பாவும் அம்மாவும் லைவ் கவரேஜ் போல, அக்கு வேறு ஆணி வேறாக அந்த நூறு தடவைகளுக்கு மேல் சொல்லியிருப்பார்கள். அம்மாவிடம் இன்றைக்கும் கேட்டேன். சொல்லும்போது அதே கோபம். அறையில் ஒளிந்திருந்த அவரிடம் தான் நகை இருக்கும் என்று நினைத்த ஒரு சிங்கள காடையன், அவரை தர தர வென இழுக்க, இழுத்த இழுப்பில் ஒரு வயது கைக்குழந்தையான அக்கா மூலையில் போய் தொபுக்கடீர் என்று விழுந்து மண்டை உடைய, சோகம் என்னவென்றால் எங்கள் குடும்பத்தோடு சேர்ந்து செனவிரத்னவும் அன்று அடி வாங்கியது தான்.

என்ன, இண்டைக்கு இத தான் எழுதப்போறாய் போல, நல்லா எழுது, கொஞ்சம் கூட குறைக்காமல்  அப்படியே எழுது. நாய்களுக்கு எப்பிடியும் உறைக்கவேணும்.

அம்மா நான் தமிழில் தான் எழுதுறன், அவங்களுக்கு போய் சேராது

சேர்ந்தாலும் ஒன்றும் அவன் வெட்டி விழுத்தப்போறது இல்லை தான், பழையபடி இங்கிலீஷ்ல எழுது, எங்கட பிரச்சனையை மற்றவனுக்கு தான் எழுதோணும். எனக்கெழுதி என்ன பிரயோசனம்?

நான் ஜர்னலிஸ்ட் இல்லை. வெறும் எழுத்தாளன் தான் என்று சொல்ல வாயெடுத்தேன். சொல்லாமல், மீண்டும் என் கணணி அறைக்குள் நுழைந்து எழுத ஆரம்பிக்கிறேன். அவர்கள் மனதில் இருந்து இதை அழிக்கமுடியாது என்று புரிந்தது. ஆழமான ரணங்கள்.  அப்பா தான் இந்த சம்பவத்தை முதன் முதலில் சொன்னவர். ஞாபகம் வருகிறது.

 

Palaiதேதி : ஏப்ரல் 4, 1990

நேரம் : இரவு 7.00 மணி

இடம் : ஆனையிறவு

கொக்குவில் ஸ்டேஷனில் ஏறியவுடனேயே “அப்பா பசிக்குது” என்று நான் சொல்ல, “ஆனையிறவு கடக்கட்டும், சாப்பிடலாம்” என்றார் அப்பா.  அம்மா கட்டித்தந்த புட்டும் கோழி இறைச்சிக்கறியும் ரயிலின் பெட்டி முழுதும் மணம் வீசியது. வாழையிலையில் பார்சல் கட்டி சின்ன கரித்துண்டு ஒன்றையும் அம்மா சேர்த்து வைத்திருப்பார். கெட்ட ஆவிகள் அண்டாதாம். அது தான் என்னுடைய முதல் ரயில் பயணம். யாழ்தேவி பயணம். பத்து வயது. அடுத்த பத்து வருடங்களுக்கு மீண்டும் யாழ்தேவி ஏறும் சந்தர்ப்பம் கிடைக்காது என்று அப்போதே தெரிந்திருந்தால், பெட்டியின் படுக்கையில் அன்று ஏறித் தூங்கியே இருக்கமாட்டேன். கொழும்பு! என் கனவு தேசம். வீரகேசரியிலும் உதயனிலும் மட்டுமே பார்த்த உயர்ந்த கட்டிடங்களை எல்லாம் இதோ காலையில் பார்க்கப்போகிறேன். காலிமுகத்திடல் பார்க்கவேண்டும். புகழ்பெற்ற மியூசியத்தில் நயினாதீவு அம்பாள் கோயிலில் இருந்த சோழர் காலத்து கல்வெட்டை நானாவது வாசிக்கவேண்டும். பலர் வாசிக்க முயன்றும் முடியவில்லையாம். எனக்கு தெரியாத சோழர் தமிழா என்ன? எப்படியும் வாசித்துவிடுவேன்!

எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரவேண்டும் இல்லையா? அது இந்த வாரம் தான் வந்தது. இந்திய இராணுவத்திற்கு டாட்டா கொடுத்தாயிற்று. புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையே இப்போது இதயம் கனிந்த, கண்கள் பனித்த தேனிலவு காலம். ரயில் மீண்டும் ஓட ஆரம்பித்துவிட்டது. கட கட கட கிரீச் கிரீச் கிரீச். 

imagesஅப்பா ஓய்வுபெற்ற அரசாங்க சேவையாளர். ரயிலில் அரசாங்க சேவையாளர் குடும்பங்கள் போவதற்கும் வாரண்ட் இருந்தது. வருடத்துக்கு இரண்டு முறை இலவச பெர்த் பயணம். படுக்கையறை கொண்ட பெர்த் கம்பார்ட்மென்ட். ரயிலில் கூட படுக்கையா? என்னால் பார்க்கும் வரை நம்பவே முடியவில்லை. எங்கள் வீட்டில் இருந்து கோண்டாவில் ஸ்டேஷனுக்கு டாக்ஸி பிடித்து போனோம். ரயில் பெட்டியில் நான்கு படுக்கைகள். ஒரு பக்கம் இரண்டு படுக்கைகள். மற்ற பக்கம் இரண்டு. கழிப்பறை ஒன்று. அதற்கு இரண்டு கதவுகள். இரண்டு பெட்டிகளுக்கு பொதுவாக ஒரே கழிப்பறை தான். யன்னல் ஓரம் ஏறி உட்கார்ந்தேன்.  இருண்டு விட்டதால், கோயில் வெளிச்சங்களும், யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் வந்திருந்த லக்சபான மின்சாரமும் ஒளிபரப்பிக்கொண்டு இருந்தன. யன்னலை மெதுவாக திறந்து வைத்து யாழ்ப்பாணத்து ஊதல் காற்றை முகத்தில் அடிக்கவிட்டவாறே யாழ்தேவி பயணம்.  அதிர்ஷ்டக்காரன் நான். நாவற்குழி பாலம் கடக்கும் போது, தூரத்தில் சைக்கிள்கள் மெதுவாக டைனமோ வெளிச்சத்தில் ஊர்ந்துகொண்டு இருந்தன. பாவம்! ரயிலில் எல்லாம் படுக்கை வசதி இருக்கும் என்றெல்லாம் கூட தெரியுமோ என்னவோ? சைக்கிள் மிதித்துகொண்டு போகிறார்கள். கொழும்பை பேப்பரில் மட்டுமே கேள்விப்பட்டு இருப்பார்கள். நான் நாளைக்கே நேரில் பார்க்கப்போகிறேன். பெருமையாக இருந்தது. அப்பாவிடம் திரும்பினேன்.

“ஏன் அப்பா நாங்க திடீரென்று கொழும்பு போறம்?

“ஓ இப்ப தான் கேட்கிறியா?” அப்பா சிரித்துக்கொண்டே

“ஜூவுக்கு கூட்டிக்கொண்டு போவீங்களா?”

“போவம்டா, எங்கட கொழும்பு வீட்டுக்கு பக்கத்தில தான் இருக்கு”

“கொழும்பில எங்களுக்கு வீடு இருக்கா?”

“இருந்துது…”

“இருந்துதா? அப்ப இப்ப இல்லையா?”

“துரத்தீட்டாங்கள், 77ல தடி பொல்லுகளோட வந்து, அம்மாவை அடிச்சு, அக்காவை தூக்கி எறிஞ்சு, மோட்டர் சைக்கிள எரிச்சி. சேர்த்து வச்ச நகை எல்லாம் போச்சுடா, பத்து வருஷ வாழ்க்கை, ஒரு உரைப்பையோட தான் யாழ்ப்பாணம் வந்தம்”

அபூர்வசகோதரர்கள் படத்தில் அப்பா கமலின் குடும்பத்தை மூன்று வில்லன்கள் சேர்ந்து அழித்தது ஞாபகம் வந்தது.

“சாரிப்பா, நான் எல்லாத்தையும் மறந்திட்டன்”

“நீ அப்ப பிறக்கவே இல்லையடா!”

அப்பா அந்த சம்பவத்தை விலாவாரியாக சொல்லத்தொடங்கினார். நான் புட்டை குழைத்து சாப்பிட தொடங்கினேன். கதை நீண்டது. யாழ்ப்பாணம் ஓடி வந்தது. விசாரணை கமிஷன் நடந்தது. யாழ்தேவி மாங்குளத்தில் நின்ற போது அப்பா கொழும்பில் விசாரணை கமிஷன் முன் சாட்சி சொல்கிறார். அறுபத்துமூவாயிரம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்கசொல்லி தீர்ப்பாம்.

“ஜே ஆர், கள்ளன் ஒரு சதம் கூட தராமல் ஏமாற்றிவிட்டான்”

என்று அப்பா சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அயர்ச்சியாய் இருந்தது. தூங்கிவிட்டேன்.

 

தேதி : ஏப்ரல் 5, 1990

நேரம் : காலை 6.00 மணி

இடம் : புறக்கோட்டை ரயில் நிலையம், கொழும்பு

கொழும்பு ஆச்சரியப்படுத்தியது. வான் பார்க்கும் கட்டிடங்கள். சாரை சாரையாய் பஸ்கள். எல்லோரிடமும் ஒருவித பதட்டம். ஒரு கலவர அவசரம் எப்போதுமே இருக்குமோ?  காலிவீதி பஸ்சில் ஏறினோம். “கொடேஹெனா, கொல்லுப்பிட்டிய, வெள்ளவத்த, பம்பலப்பிட்டிய,  தெகிவள, கால, கால கால” என்று ஏதோ ஒரு வரிசையில் பஸ் கண்டக்டர்கள் கூவியதை, அடுத்த பத்து ஆண்டுகளாக தப்பு தப்பாய் சொல்லிக்கொண்டு திரிந்தேன். நாங்கள் போகவேண்டிய இடம் பம்பலப்பிட்டியவில் இருக்கும், GSA என்று அழைக்கப்படும் Government Surveyors Association விடுதி தான். அங்கே இறங்கும் போது, அப்பா பசிக்கிறது என்றேன். பக்கத்தில் இருந்த சாம் சாம் என்ற முஸ்லிம் ஹோட்டலுக்கு அழைத்துச்சென்றார். அரைக்கோழியை ரோஸ்ட் செய்து கண்ணாடிப்பெட்டியில் வைத்திருந்தார்கள். அடம்பிடித்து வாங்கி, எடுத்து ஒரு வாய் கடித்தேன். அவியவே இல்லை! திட்டிக்கொண்டே அப்பா தான் மிச்சத்தை சாப்பிட்டு முடித்தார்.

4446944103_7bbf007f7a_zகொழும்பில் பார்த்த இடங்களை இன்று முழுக்க பட்டியல் இடலாம். சில தருணங்கள் மறக்கமுடியாதவை. மியூசியத்தில் ஆவலுடன் எதிர்பார்த்த கல்வெட்டு தமிழில் இல்லாமல் ஏதோ புராண மொழியில் கிறுக்கி இருந்தது. புரியவேயில்லை. சோழர்கள் உண்மையில் தமிழர்கள் தானா என்ற சந்தேகம் வந்தது! காலி முகத்திடலில், இறால் வடை, ஒன்றுக்கு இரண்டாய் வாங்கி சாப்பிட்டதால் அன்று முழுதும் வயிற்றால் பேதி போனது!  கிரீன்லாண்ட் உணவகம் தான் கொழும்பிலேயே சிறந்த சாப்பாட்டுக்கடை என்று அப்பா சொல்லி அங்கே போக, அது சைவக்கடை என்று தெரிந்து அப்பாவிடம் சண்டை போட்டு வேறு கடை போனது இப்போது யோசிக்க சிரிப்பாய் இருக்கிறது.

தெகிவளை மிருககாட்சி சாலையில், கிடங்கில் கிடந்த சிங்கங்கள் எல்லாம் பூனைகள் கணக்காய் நொந்து போயிருக்க அப்போதெல்லாம் புலிகள் உறுமிக்கொண்டு திரிந்ததை வெளியில் பாதுகாப்பாக நின்றுகொண்டு ரசித்தேன்! என்னோடு சேர்ந்து பல வெளிநாட்டவர் கூட ஆச்சரியமாக வேடிக்கை பார்த்தது ஞாபகம் இருக்கிறது. சில இந்தியர்கள் சிங்கத்துக்கு மாமிசம் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்!

இன்னொன்று மறந்துவிட்டேன். விகாரமாதேவி பூங்காவில் ஒரு புது ஐந்து ரூபாய் நாணயக்குற்றியை தொலைத்துவிட்டேன். அப்பாவிடம் திட்டு வாங்கிக்கொண்டே அரை மணிநேரமாய் தேடியும் அது கிடைக்கவில்லை. அன்றைக்கு தொலைக்க தொடங்கினேன். தொலைத்துக்கொண்டே இருக்கிறேன். எங்கு தேடியும் கிடைப்பதேயில்லை. கருமம் பிடித்தவன்!

 

தேதி : ஏப்ரல் 7, 1990

நேரம் : மாலை 6.00 மணி

இடம் : ஜா எல, கொழும்பு

நண்பர் ஒருவர் வீட்டில் விருந்து என்று அப்பா சொன்னார். அவரோடு ஒன்றாக வேலை செய்தவராம். அன்றிரவு அவர் இருக்கும் யாஎல என்ற இடத்துக்கு சென்றோம். மழையிருட்டு. ஏழு மணியிருக்கும். ஆட்டோவில் போய் இறங்கும்போது தான் தெரிந்தது அப்பாவின் அந்த நண்பர் சிங்களவர் என்று. அப்பா ரயிலில் சொன்ன கதை ஞாபகம் வர அடி வயிற்றில் ஒரு பயம் உருளத்தொடங்கியது. ஆட்டோ டிரைவர் வேறு சிங்களவரா? பார்க்கும் போதே அடியாள் போல இருந்தான். என் விரலில் போட்டிருந்த மோதிரத்தை கழட்டி அவசரம் அவசரமாக சட்டை பாக்கெட்டில் போட்டேன்.

அவர்கள் வீட்டில் சிரித்துக்கொண்டே எங்களை வரவேற்றார்கள். அந்த வீட்டில் அப்பாவின் நண்பர், மனைவி, அவர்களின் மூத்தமகன், என் வயது பெண் ஒருத்தி. அவர் மனைவி சிங்களவர் போலவே சேலை தலைப்பை வலப்பக்கம் செருகி உடுத்தியிருக்க, பார்க்கும் போது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க போலவே எனக்கு தெரிய பீதி இன்னும் அதிகமானது. அவர்களின் மகனை ரக்பி பிளேயர் என்று அறிமுகப்படுத்தினார்கள். கட்டுமஸ்தான உடல். இவனுக்கெல்லாம் தடியும் பொல்லும் தேவையில்லை என்று தோன்றியது. இன்றைக்கு எப்படியும் எம்மை அடிக்கப்போகிறார்கள். காப்பற்ற வர செனவிரத்னவும் கிடையாது. அப்பா பாவம், நான் தான் காப்பாற்றவேண்டும். அப்பா வேறு சிங்களத்தில் உரையாட தொடங்கினார். “நீயுமா அப்பா” என்ற பாணியில் அப்பாவை பார்த்தேன். அவர் கவனிக்கவில்லை. எனக்கு பயத்தில் புரைக்கேறியது.

“What’s your name puththaaa?”

அவர் கேட்க, என்னை ஏன் புத்தா என்கிறார்? என்னையும் சிங்களவராய் மாற்றபோகிறார்களா? அலெர்ட் ஆனேன். பதில் ஒன்றும் சொல்லவில்லை. அபூர்வசகோதரர்கள் அப்பு போல புத்தியாக தான் இவர்களை கையாளவேண்டும்!

“Where do you study?”

….

“Have you met Menikaa? duwa! go and play with him.”

மேனிக்கா ஷார்ட்ஸ் போட்டிருந்தாள். சோடாபுட்டி கண்ணாடி. கொழு கொழு உடம்பு. தின்று தீர்த்திருக்கிறாள் என்று புரிந்தது. என்னை பார்க்கும்போது ஏதோ ஒரு பட்டிக்காட்டில் இருந்து வந்தவனை பார்ப்பது போல் ஏறெடுத்து பார்த்தாள். இரண்டு அடி எட்டவே நின்றாள், தாயுடன். ரக்பி ப்ளேயரை சமாளித்தாலும் இவளை சமாளிக்கமுடியாது என்று புரிந்தது.

“Show him your new video games Duwa, play the car race with him”

வீடியோ கேம்மா? அப்படியென்றால்? எங்களை அடிப்பதை காமெராவில் படம் பிடிக்கப்போகிறார்களா? எங்கள் வதை சிங்களவனுக்கு விளையாட்டா? அவள் முகத்தில் அதே ஏளனப்பார்வை. அண்ணன்காரனும் உள்ளே வர, அப்பா என்னை தனியே விட்டுவிட்டு, நண்பருடன் ஏதோ ஒரு வரைபடத்தை எடுத்து டிஸ்கஸ் பண்ண ஆபீஸ் அறைக்குள் நுழைந்து விட்டார். அபாயக்கட்டம். பிரித்தாளும் சூழ்ச்சி. இன்னும் அலெர்ட் ஆக இருக்கவேண்டும்.  மேனிக்கா மெதுவாக என்னிடம் வந்தாள்.

“You like video games?”

….

“Can’t you speak English?”

…..

“தாத்தே இங்கிலீஷ்  தன்னாலு”

….

“No no, he can speak, he is just shy”

அப்பா அறைக்குள் இருந்து சொல்ல, மேனிக்கா இன்னும் என்னை நெருங்கி வந்தாள். கைகள் கால்கள் எல்லாமே ஸ்ட்ராங்காக இருக்குமாப்போல இருந்தது. அடித்தால் திருப்பி அடிக்கமுடியாது. திருப்பி அடித்தாலும் நின்று பிடிக்க திராணி இல்லை. புத்தியை பாவிக்கவேண்டும்!

“Come I will show the game”

என்று அவள் என் கையைப்பிடிக்க, வீல்ல்ல்…… என்று காட்டுகத்து கத்த ஆரம்பித்தேன்!

அப்பாவும் நண்பரும் அறையில் இருந்து ஓடி வந்தார்கள். அப்பா எவ்வளவு சொல்லிப்பார்த்தார். நான் நிறுத்தவில்லை. கத்தல் என்றால் அப்படி ஒரு கத்தல். செவிடு கிழியும் கத்தல். அப்பா அழுதால் அடி போடுவேன் என்று மிரட்தினார். அப்பாவின் காலில் தொபுக்கடீர் என்று விழுந்தேன்.

“அப்பா கும்பிட்டு கேக்கிறன், வாங்க ஓடிடுவம். அம்மான, இவங்கள் எங்கள அடிக்கப்போறாங்கள்”

 

TheNamesake-Still5CRதேதி : ஜனவரி 8, 2012

நேரம் : இரவு 9.00 மணி

இடம் : மெல்போர்ன்

பதிவை வாசித்து முடித்த அப்பா சிரித்தபடியே என்னைப் பார்த்தார்.

“அண்டைக்கு என்ன  ஒப்பாரி வச்சாய் தெரியுமா? ஜா எல தாண்டும் மட்டும் நிறுத்த இல்ல”

“ரொம்ப எம்பராசிங்கா இருந்திச்சா அப்பா? அந்த அங்கிள் அப்புறம் ஒன்றுமே சொல்ல இல்லையா?”

“எனக்கு வர இருந்த நல்ல வேலை போச்சுடா!”

“What?”

“நான் கொழும்பு வந்ததே அவரை மீட் பண்ண தாண்டா. அடுத்த நாள் எங்களுக்கு ட்ரெயின் இருந்துதா! அன்றைக்கு தான் அவரோட புது ப்ராஜெக்ட் ஒன்றுக்கு சேர்ந்து வேலை செய்யிறத பற்றி பேச இருந்தன்! நீ அழுது எல்லாத்தையும் குழப்பி விட்டாய்”

“நீங்க அடுத்த ட்ரெயின் பிடிச்சு போய் மீட் பண்ண இல்லையா?”

“எங்க போறது, அதுதான் சண்டை தொடங்கி பாதையே மூடியாச்சே! ட்ரெயினும் இல்ல, டெலிபோனும் இல்ல!”

“சொறி அப்பா, மறந்திட்டன்!”

“சரி அத விடு,  இன்னொண்டும் மறந்து போனாய்?”

என்னவென்று ஆச்சரியாமாய் அப்பாவை பார்க்க

“அண்டைக்கு உண்ட மோதிரத்தையும் தொலைத்துவிட்டாய்!”

                                      -------------

 

சிங்கள சொல் பயன்பாடு:

Puththaa : மகன்

Duwa : மகள்

தாத்தே : அப்பா

தன்னாலு : தெரியாதாம்