Skip to main content

ஆனந்தம் அண்ணைமனிதர்களை எப்படி இலகுவில் கடந்துபோய்விடுகிறோம் என்பது புரியாத புதிராக இருக்கிறது. 

ஆனந்தம் என்று ஒரு அண்ணை. அப்பாவின் உதவியாளர். நவாலியில் வசித்தவர். நெடுவல். நெடுவலுக்கேற்ப முகமும் நீளம். பற்களும் நீளம். அவற்றில் ஒன்றிரண்டைக் காணக்கிடைக்காது. மீதம் வெற்றிலைச்சாயம் படிந்திருக்கும்.  அண்ணை தன் ஒரு காலைக் கொஞ்சம் தாண்டித் தாண்டியே நடப்பார். ஏன் அப்படி என்று தெரியாது. போலியோவாக இருக்கலாம். அல்லது ... தெரியாது. அண்ணர் நன்றாகச் சிங்களம் கதைப்பார். சிங்களப்பாட்டு பாடுவார். 'சந்திராவே மேபாவே நாவா' என்று என்னைப் பாடசாலைக்கு அழைத்துச்செல்லும்போது பாடிக்கொண்டே சைக்கிள் மிதிப்பார்.

வீட்டில் என்ன வேலை என்றாலும் ஆனந்தம்தான். தோட்டம் கொத்துவதா, அடுப்படி மெழுகுவதா, சந்தைக்குப்போவதா, முற்றம் கூட்டுவதா, கோழி உரிப்பதா, பனை தறிப்பதா, கிணறு இறைப்பதா, எல்லாவற்றையும் ஆனந்தம் அண்ணைதான் செய்வார். கூடவே நான் விளையாடக்கூப்பிட்டாலும் வருவார். என்னை ஆகாயத்தில் தூக்கி எறிந்து விளையாடுவார். சாப்பாடுகூட எனக்கு அவர்தான் தீத்தவேண்டும். அவர் கடைக்குப்போகையில் என்னையும் கூட்டிப்போகவேண்டும். வெற்றிலை, சீவல் போடும்போது சின்ன நறுக்கு ஒன்றை அம்மாவுக்குச் சொல்லக்கூடாது என்று ‘உஷ்’ சொல்லித் தருவார். சுண்ணாம்பு தரமாட்டார். எங்கள் வீட்டுக்கு லச்சுமியைக் கொண்டுவந்ததும் அவர்தான். லச்சுமிதான் குட்டியனின் அம்மா.  கொல்லைப்புறத்துக் காதலிகளில் எழுதியிருப்பேன்.

முன்னேறிப் பாய்தல் சமயம் ஆனந்தம் அண்ணையின் குடும்பம் மொத்தமாக எங்கள் வீட்டுக்கு இடம்பெயர்ந்து வந்தது. நான்கைந்து குழந்தைகள். நிறைய ஆடுகள். இரண்டு கறவை மாடு. அவரின் இரண்டாவது மகன் ஒரு சுட்டி. நான் எங்கள் வீட்டு விலாட்டுமரத்தில் ஏறி மாங்காய் பிடுங்கிப்போட்டால் அவன் அதை உரப்பையில் தாங்குவான். மாங்காயை மதில்சுவரின் குற்றி உடைத்து, உப்பும் தூளும் போட்டுக்கொடுத்தால் உச்சுக்கொட்டிக்கொண்டே சாப்பிடுவான்.  அம்மா மீன் பொரித்தால் அண்ணருக்கும் மணந்துவிடும். வந்து நிற்பார். அன்றைக்கு என் பங்கில் இடி விழும்.

ஆனந்தம் அண்ணை நில அளவைத் திணைக்களத்தில் உதவி உத்தியோகத்தராக இருந்தவர். அப்பா தன்னை 'சேர்' என்று அழைக்குமாறு ஆனந்தம் அண்ணையிடம் சொல்லுவதுண்டு. அண்ணையோ சிரித்துவிட்டு ஐயா என்பார். அதிகம்போனால் சேவியர் என்பார். தலைகீழாக நின்றாலும் 'சேர்' வராது.

ஆனந்தம் அண்ணை பென்சன் காசு எடுக்கிற மாதத்தின் அந்த ஒருநாள் நமக்கெல்லாம் திருவிழா. பென்சன் நாள் வருகுது என்றால் நாம் எல்லோரும் ஆனந்தம் அண்ணைக்காகக் காத்திருப்போம்.  அண்ணர் அன்றைக்கு சாறத்துக்குப் பதிலாக வேட்டி அணிவார். முகமெல்லாம் சிரிப்பு இருக்கும். நேரே டவுண் மக்கள் வங்கிக் கிளைக்கு விடிய வெள்ளனயே போய்விடுவார். பென்சன் எடுத்த கையோடு நேரே கொர்ப்பறேசன்தான். அது முடிய மலாயன் கபேயில் பத்து தாட்டான் வடைகளை வாங்கியபடி போகிறவழியில் எங்கள் வீட்டில் கொடுத்துவிட்டுப்போவார். இன்னொரு பத்து அவர் வீட்டுக்குப் போகும். அதற்குமேல் அவரிடம் பென்சன் காசு ஏதும் மீதமிருந்திருக்கச் சாத்தியமில்லை. அவரின் மனைவிக்கு அண்ணருக்கு பென்சன் என்கின்ற ஒரு விடயம் வருவதே தெரிந்திருக்குமோ தெரியாது. மலாயன் கபே வடையும் சம்பலும் உலகின் அற்புதமான உணவுகளில் உண்டு. பென்சன் நாள்களில் அங்கே வடை அதிகமாகப் போடுவார்களாம். ஒரு வடை நான்கு மதிய சாப்பாடுகளுக்கு ஈடாகும். நான் இரண்டு வடைகளை அப்படியே விழுங்குவேன். 

வீட்டில் ஏதேனும் விசேசம் என்றால் அம்மா ஆனந்தம் அண்ணையைக் கூப்பிட்டு அனுப்புவார். பலகாரச்சூடு,  எட்டுச்செலவுச் சமையல் எல்லாம் கமறும். செலவுக்கு கிடாயும் அவரே கொண்டுவந்து அடிப்பார். பங்கு எல்லாம் கிடையாது. முழு ஆடும் சட்டிக்குள் போகும். ஆனந்தம் அண்ணை ஆட்டிறைச்சிக்கறி வைத்தார் என்றால் அப்படி ஒரு ருசி. பெரும் தாச்சியில் அண்ணர் கறியைத் துலாவி ரம்பை இலைகளைப் பிய்த்துப்போட்டால் கோட்டைவரை கொடி பறக்கும். நாமெல்லாம் கையில் சிரட்டைகளோடு வீணி வழிய சுற்றி நிற்போம். எல்லோருக்கும் பிரசாதம்போலக் கறி கிடைக்கும். கூடவே அம்மாவுக்குச் சொல்லக்கூடாது என்று ஒரு 'உஷ்'. சிரட்டையில் ஒட்டியிருக்கும் தேங்காய்ப்பூ கடிபட, வழிச்சு வழிச்சுக் கறியைச் சாப்பிட்டால்.. ஆ. கறிவேப்பிலையைக் கூட ஆறுநாள் சூப்பிக்கொண்டு திரியலாம். அவர் வறுக்கும் இரத்த வறையைப் பற்றி தனியாக ஒரு ஐம்பது நாள் கோயில் பிரசங்கம் வைக்கலாம். அவ்வளவு இருக்கு.

ஆனந்தம் அண்ணையை எப்போது மறந்தேன் என்று ஞாபகம் இல்லை. எப்போது அவருக்குப் பிரியாவிடை கொடுத்தேன்? தெரியாது. எல்லா மனிதர்களுக்கும் இப்படி நாங்கள் பிரியாவிடை கொடுக்கிறோம் என்பதே உண்மை. ஒருநாள் கைப்பிடி தளருகிறது. நாம் அறியாத தருணமொன்றில் அவர்கள் எட்ட விலகிச்செல்கிறார்கள். ‘போய் வருகிறோம்’ என்றுகூட அவர்கள் சொல்லிக்கொள்வதில்லை. Just like that. போய்விடுவார்கள். காலப்போக்கில் அவர்களின் முகங்கள் மங்கலாகி, குரல்கள் உடைந்து, ஞாபகங்கள் சுருங்கி. அவர்களை மீட்பது என்பது  பெரும்பாடாகிவிடுகிறது. அவரின் மகன் இப்போது வளர்ந்து திருமணம் முடித்திருக்கக்கூடும். குழந்தைகள்கூட இருக்கலாம். எல்லோரையும் நேரில் சந்திக்க ஆசைதான். ஆனால் தைரியமில்லை. அவர்கள் என்று என் நினைவுகள் சிருட்டித்து வைத்திருப்பது சமயத்தில் அவர்களாகவே இருப்பதில்லை. பலர் சேர்ந்த ஒருவர். அல்லது பலது விலக்கப்பட்ட ஒருவர். நினைவுகள் திட்டமிட்டு எனக்கே தெரியாமல் திருட்டுத்தனமாக இப்படியாக ஆள், அடையாளம், குணங்களை மாற்றிவிடுகின்றன. நிஜ வாழ்வில் அவர்களை மீளச் சந்திக்கும்போது நினைவுகளோடு நிஜம் முரண்படுகிறது. நிஜத்தை வெறுத்து நினைவை மீட்கவே அப்போது மனம் நாடுகிறது. இது வேண்டாம். கதையாகவே எழுதிக்கொள்ளலாம். கதைகளில் அவர்களோடு அளவளாவலாம். “அண்ணை எப்பிடி இருக்கிறீங்கள்?” என்று ஆனந்தத்திடம் கேட்கலாம் அல்லவா? “சீவல் இருக்கா அண்ணை?”. “இந்தா, அம்மாக்கு சொல்லாத என்ன, உஷ்”.

கதைகள் ஒரு காலநதிபோல. அவை கடந்தகாலத்தை நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் சுமந்து செல்கின்றன. ஆனந்தம் அண்ணையும்கூட தெரிந்தோ தெரியாமலோ இந்த நதியில் கலந்துவிடுகிறார். கதைசொல்லும் நான் நதிகளுக்குப் பாதை விரிக்கும் கரைகள்போல. நான் கதைகளுக்குத் தேவையில்லை. சொல்லுவதைத்தவிர எனக்கு அங்கு வேறு வேலை இல்லை. எப்போதாவது ஒருமுறை என்னுடைய சிறுதுகள் மாத்திரம் நதியில் சேர்ந்து கலக்கிறது.

ஆனந்தம் அண்ணையின் கதையில் வருகின்ற சீவல் கேட்கும் சிறுவனைப்போல.

Comments

  1. "நினைவுகளோடு நிஜம் முரண்படுகிறது" உண்மை தான்.மீண்டும் ஒரு கொல்லைப்புறத்து காதலியா?

    ReplyDelete
  2. உண்மை தான் நீங்கள் எங்கள் நதிகளுக்கு நிறைய கரை அமைத்து கொடுக்கிறீர்கள். காலப்போக்கில் கரைகளின் சுவடுகள் நதி வெள்ளம் காய்ந்த போதும் இருக்கின்றது. நினைவுகளோடு நிஜம் முரண்படும் போது ஒரு வெற்று புன்னகையுடன் அதனை கடக்கும் போது வலிக்கிறது.நினைவாகவே இருக்கட்டும்.
    இப்பொது திருவிழாக்களை நினைக்கும் போது வலி நிறைந்த ஏமாற்றம் வருகிறது நாம் ரசித்த சின்ன சின்ன விடயங்களை போனால் போகுது என்று படங்களாக பதிவேற்றும் பலரை பார்க்கும் போது......விட்டுவிடுங்கள் என்று கத்தவேண்டும் போலுள்ளது. இவ்வளவும் தானா ....நினைவுகளை நிழல்படத்தில் அடைத்து வைக்க முரண்டுபிடிக்கிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட