ஏனைய எந்த நட்பிலும் இல்லாத பெரு விசயம் ஒன்று பாடசாலை நட்பில் இருக்கிறது.
ஆறாம் ஆண்டில் நான் பரியோவான் கல்லூரிக்குள் நுழைந்தபோது எனக்கு அந்தச் சூழலே புதிது. அதிலும் எண்பதுகளில் தின்னவேலியில் பிறந்து வளர்ந்தவனுக்கு அரியாலைப் பகுதியே புதிதாகத்தான் இருந்தது. யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையில் முதலாம் ஆண்டிலிருந்து கூடப்படித்த பப்பாவைத் தவிர வேறு எவரையும் அப்போது அங்கே எனக்குத் தெரிந்திருக்கவில்லை. என்னோடு சேர்ந்து எங்கள் வகுப்பில் முப்பத்தாறு பேர் ஆறாம் ஆண்டு அனுமதிப் பரீட்சையில் தெரிவாகி வந்திருந்தார்கள். பண்டத்தரிப்புமுதல் அச்சுவேலி, இருபாலை, சாவகச்சேரி என்று யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்கிலிருந்த ஆரம்பப் பள்ளிகளில் படித்தவர்கள் எல்லோரும் அங்கு வந்து இணைந்திருந்தார்கள். அவர்களோடு பரியோவானிலேயே பாலர் கல்வியிலிருந்து கற்று வந்த இரண்டு வகுப்புகளும் சேர்ந்து, ஏ பி சி என மொத்தமாக மூன்று வகுப்புகள். கொஞ்சம் பயம். கொஞ்சம் குழப்படி. கொஞ்சம் படிப்பு. நிறைய விளையாட்டு என்ற எளிமையான பதினொரு வயது சிறுவர்களைக்கொண்ட மூன்று வகுப்புகள் அவை.
அப்படி ஆரம்பிக்கும் நட்புகளில் பெரும் பந்தம் ஒன்று இருக்கிறது.
பாடசாலை நட்புகள் பின்னணிகள் பார்த்து உருவாவதில்லை. எப்படி நாம் பெற்றோர் சகோதரர்களைத் தேர்ந்தெடுக்கமுடியாதோ அதுபோலத்தான் பாடசாலை நட்பும். ஏனைய நட்புகள் அப்படியல்ல. பல்கலைக்கழகத்தில் எங்களுடைய துறை, கல்வித்திறன், ரசனைகள், எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்புகள், இருபதுகளுக்கேயான அதீதங்கள், நம்பிக்கையீனங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் துளிர் விட்டிருக்கும். அந்த வயதுக்குரிய பக்குவமற்ற ஈகோக்கள் எழுந்திருக்கும். நண்பர்கள் அங்கே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர் குணமும் அறிவும் பண்பும் நமக்குத் தகும் என்று நினைத்து பலர் நட்புகளை அங்கே ஏற்படுத்துவர். அதற்குப் பின்னே வருகின்ற அலுவலக நட்புகளும் அப்படித்தான். தேவைகளினூடாக உருவான நட்புகள் அவை. இப்போது எழுத்து, வாசிப்பினூடாக இணைந்த நட்புகள்கூட ஒருவித persona அறிந்து உருவாகும் நட்புகள்தாம். இவர் எழுதுவது பிடிக்கிறது. இவருடைய இரசனை கொஞ்சம் ஒத்துப்போகிறது. கருத்தியலும் சற்றே பொருந்துகிறது. ஆகவே நட்புப் பாராட்டலாம் என்கின்ற வகை நட்புகள். முழுமையான persona அறியாத, யானையின் வாலைப் பார்த்து அது பாம்பு என்றும் குஞ்சம் என்று நினைக்கக்கூடிய நட்புகள்.
பள்ளி நட்பு அப்படியல்ல. நீ கெட்டிக்காரனா, ஏழையா, பணக்காரனா, புத்திசாலியா, உனக்கு இளையராஜா பிடிக்குமா, நீ காப்காவை வாசித்தாயா என்றெல்லாம் பார்த்து அங்கே நட்பு உருவாவதில்லை. உன்னை அப்படியே ஏற்றுக்கொண்டு உள்வாங்கும் நட்பு அது. நீயும் நானும் ஒரே சீருடைதான். உன் தோற்பையும் என் தோற்பையும் ஒன்றுதான். இரண்டு பேருமே ரெனோல்ட்ஸ் பேனாதான் பாவிக்கிறோம். உன்னுடைய நடராஜ் கொம்பாசுப்பெட்டிக்குள் அடைக்கல மாதா இருந்தால் என்னுடைய பெட்டிக்குள் அம்மாளாச்சி இருப்பார். இதிலென்ன persona வந்துவிடப்போகிறது? நமக்குள் யார் கெட்டிக்காரர் என்பதைக் கணக்கிலேயே எடுக்காத பருவம் அது. அப்போது ஏற்படுகின்ற நட்பிலே சொல்லொணா சீவன் ஒன்று இருக்கிறது. ஈகோ, பொறாமைகள், ஏளனங்கள் என்ற எந்த சனியன்களும் மண்டைக்குள் புகாத இளங்கன்றுகள் நட்பு கொள்ளும்போது அதில் வெள்ளந்தியான உறவு இருக்கிறது. இன்றைக்கு முப்பத்தைந்து ஆண்டுகள் கழிந்து, மொட்டை விழுந்து, எழும் சில மயிர்களும் வெள்ளையாய் வெளிப்பட்டாலும் அந்த வெள்ளந்தித்தனம் மாத்திரம் பாடசாலை நட்புகளிடையே மாறுவதில்லை. ஆண்டு ஆறில் பரஸ்பரம் நம்மை நாம் எப்படிப் பார்த்தோமோ அப்படித்தான் பார்ப்போம். பழகுவோம்.
சில வருடங்களுக்கு முன்னர் நியூ யோர்க் சென்றபோது மயூ விமான நிலையத்தில் என்னைக் கூட்டிப்போக வந்திருந்தான். முப்பத்தைந்து ஆண்டுகால நட்பு அவனோடானது. உபரித்தகவல் ஒன்று. எனக்கு என் ஆதர்ச ஜூம்பா லாஹிரியை அறிமுகப்படுத்தி அநியாயம் செய்த நண்பன் அவனேதான். ஒரு நாள் பூராக நியூ யோர்க்கை நாமிருவரும் சுற்றி வந்து கதைகள் பல பேசினோம். அப்போதுதான் உகண்டாவுக்கு நாமெல்லோரும் செல்லவேண்டும் என்ற பேச்சு எழுந்தது. எம்முடைய இன்னொரு பாடசாலை நண்பனான ஜெகன் சில ஆண்டுகளாக உகண்டாவில் பணி புரிந்து வருகிறான். அவன் உகண்டாவில் இருக்கும்போதே நாம் போனால்தான் அந்த நாட்டின் நிஜமான வாழ்வையும் நிலத்தையும் ஓரளவுக்கு உள்ளூர்க்காரரின் துணையோடு அறியமுடியும் என்று மயூ சொன்னான். சரி என்று நானும் தலையசைத்தாலும் அது சரிவருமா என்ற சந்தேகம் எனக்கிருந்தது. ஏனெனில் நாம் இப்படிப்போட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்றைக்கு அந்தார்டிகா முதல் ஆக்டிக்வரை எங்கள் கொடி பறந்திருக்கும் என்ற விசயம் எனக்குள் நெருடிக்கொண்டிருந்தது.
இரண்டு வருடங்கள் கழித்து இப்போது ஜெகன் உள்ளூர் உகண்டாகாரியையே காதலித்துத் திருமணம் செய்யப்போகிறான் என்று அறிந்ததும் முதலில் அழைத்தது மயூதான்.
டேய். வெறும் சுற்றுலா மட்டுமில்லை. ஜெகண்ட கலியாணம். அவன் மாப்பிள்ளையெண்டா நாங்கள் எல்லாம் மாப்பிள்ளைத் தோழர்கள். வெளிக்கிடு.
ஒரு மாதத்துக்கு முன்னர்தான் வேலை நிமித்தமாக லண்டனுக்குப் போகவேண்டியிருந்தது. போன கையோடு அப்படியே பாரிஸ், எடின்பேர்க் என்று சுற்றியதில் வங்கிக்கணக்கும் கொஞ்சம் பல்லிளித்தது. வேலையிலும் அதிகம் விடுமுறை இல்லை. ஜீவியும் ஆய்வுப்பணி இருப்பதால் தன்னால் வரமுடியாது என்று கைவிரித்துவிட்டாள். என்ன செய்வது என்ற குழப்பம். ஒரு பக்கம் உகண்டா வா வா என்றழைத்தது. இன்னொரு பக்கம் அன்றாடம் வேண்டா வேலை, வீட்டிலேயே இரு என்றது.
ஜெகனும் விடுவதாயில்லை.
மச்சி. நீ வந்தியெண்டா நல்லா இருக்கும். உனக்கு ஆறு மாதத்துக்கு எழுத விசயம் நாங்கள் கொடுப்போம். செங்கா, சிம்பன்சி என்று பல மாட்டர் இருக்கு. வந்து சேரு.
மண்டை குடைந்துகொண்டேயிருந்தது. போலாமா, விடலாமா என்று குழம்பினேண். மயூவிடமே என் தயக்கத்தைச் சொன்னேன். அவன் அலட்டிக்கொள்ளாமல் பதில் அனுப்பினான்.
மச்சி. வாழ்க்கைல பிரச்சனை எண்டுறது முனிசிபாலிட்டிண்ட குப்பைக்கூழம் மாதிரி. ஒரு நாளும் அது குறையப்போறதில்லை. அதில இரண்டு நாள் குப்பையைக் கொண்டுபோய்க் கொட்டுறதால அது நிரம்பப்போறதுமில்லை. ஆட்டாமல் டிக்கட்டைப் போடு.
அவன் வீரன்தான். எத்தனை பெரிய தத்துவத்தை அவ்வளவு இலகுவாக சொல்லிவிட்டான். நான் உடனேயே டிக்கட் போட்டுவிட்டேன்.
போலாம் ரைட்.
அப்புறமென்ன. விசயங்கள் கடகடவென நிகழ்ந்தன மஞ்சள் காமாலைக்கு வக்சீன் போட்டு, விசா எடுத்து, சபாரிக்கு என உடுப்புகள் வாங்கி, நான்கு விதமான கலியாணங்களுக்கு நான்கு உடுப்புகள் தேடி, சூட்கேசையும் நிரப்பியாச்சு. பயண நாளும் வந்தது. விமான நிலையத்தில் குடியகழ்வு எல்லாம் முடித்து, விமானத்தில் ஏறும் முன்னர் மூக்குச்சளியை நன்றாகச் சீறி, டிசியூவை குப்பைத்தொட்டியில் போடும்போதுதான் மயூவின் மாநகரசபை உவமானம் மறுபடியும் ஞாபகத்துக்கு வந்தது.
பரீட்சையில் படித்துவிட்டுப் போகாத தேவாரத்துக்கு எழுதிய பொருள் விளக்கம்போல அந்தத் தத்துவத்தில் எந்த லொஜிக்குமில்லை என்பது அப்போதுதான் எனக்கு உறைத்தது.
அதற்குள் ஒரு எத்திகாட்காரி வெல்கம் சின்னப்பு என்று என் செத்துப்போன தாத்தாவைக் கூப்பிட்டு இருக்கையில் உட்காரச் சொல்லிவிட்டாள்.

Comments
Post a Comment