Skip to main content

அபர்ணா - சிறுகதை

அபர்ணாவை எப்படி மனைவிக்கு அறிமுகப்படுத்துவது என்பது குழப்பமாகவே இருந்தது.

“கூடப்படிச்சவ எண்டா எப்பிடி? உங்கட காலத்திலதான் பெடி பெட்டையள் ஒண்டாயிருந்து படிச்சதேயில்லையே?”
நியாயமான கேள்வி. எனக்கு அபர்ணா அறிமுகமானது வன்னியில். நான் இடம்பெயர்ந்து இராமநாதபுரத்தில் வசித்தபோது அவள் குடும்பம் திருவையாற்றுக்குக் குடிபெயர்ந்திருந்தது. நாங்கள் உயர்தரம் படித்துக்கொண்டிருந்தோம். எங்கள் பாடசாலைகள் இணைக்கப்பட்டு கிளிநொச்சியில் ஒன்றாக இயங்க ஆரம்பித்திருந்தன. ஒரே வகுப்பில் நாங்கள் இருவரும். அப்போது ஆரம்பித்த பழக்கம். நாங்களிருவரும்தான் கிளிநொச்சி கிழக்கில் தங்கியிருந்தவர்கள். காலையில் நான் திருவையாற்றுக்குப் போய் அங்கே அபர்ணாவையும் கூட்டிக்கொண்டு ஒன்றாக கிளிநொச்சிக்குப் போவேன். அவளிடம் ஒரு ஹீரோ லேடிஸ் சைக்கிள் இருந்தது. என்னுடையது லுமாலா. அந்தச்சமயத்தில் சீருடை அணியவேண்டும் என்ற கட்டாயம் இருக்கவில்லை. இடம்பெயர்ந்தபோது அபர்ணா நான்கு செட் உடுப்புகளை எடுத்துவந்திருக்கவேண்டும். ஒரு சர்பத் நிற சட்டை. குட்டி குட்டி செக் போட்ட குடைவெட்டு பாவாடையும் ஒரு பிங் பிளவுசும். பின் நாரிக்கு மேலே பெல்ட் வைத்த இன்னொரு பொட்டு பொட்டு பட்டர் கலர் சட்டை. அவளது நான்காவது பாவாடை சட்டை நீல நிறத்திலிருந்தது என்று நினைக்கிறேன். திங்கள் கிழமைகளில் மட்டும் அவள் சீருடை அணிந்துவருவாள். எப்போதுமே ஒரு பிரவுண் லெதர் சாண்டில்ஸ் போடுவாள். கால் நகங்களுக்கு பிங்க் நிற தடித்த கியூடெக்ஸ். அவளது இடது கால் சின்னிவிரல் நகம் மட்டும் நசுங்கியிருக்கும். பாடசாலை இரண்டு மணிக்கு முடிந்ததும் நாமிருவரும் ஒன்றாகவே புறப்படுவோம். கிளிநொச்சியிலிருந்து திருவையாற்றிலிருக்கும் அபர்ணாவின் வீட்டுக்குச் சென்று அன்ரியின் கையால் ஒரு பிளேன்ரீயோ தேசிக்காய்த்தண்ணியோ குடித்துவிட்டு மேலே இராமநாதபுரத்துக்கு சைக்கிள் உழக்குவேன். அன்ரிக்கு என்மேல் ஏனோ ஒரு அலாதிப்பிரியம். சமயத்தில் சாப்பிட்டுப் போகவும் சொல்லுவார். அவருடைய வெந்தயக்குழம்பின் வாசம் இராமநாதபுரம்வரை கூடவருவதுண்டு.
“பிரசாரங்களுக்கு எடுப்பட்டுதாயுங்கோ பிள்ளையள், தம்பி நீர்தான் அவளைக் கவனிச்சுக்கொள்ளும், இவள் விசரிமாதிரி அவங்களிண்ட கதையளைக் கேட்டிட்டு வெளிக்கிட்டுப்போயிடுவாள்”
‘என்ன? லவ்வா?’ என்று மனைவி கேட்டபோது எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. இவளுக்கு அதை நான் எப்படிச் சொல்லிப்புரியவைப்பேன்? நான் அரியாலை இளங்கன்று உதைபந்தாட்ட அணி என்றால் அபர்ணா பார்சலோனாபோல. எங்கள் வகுப்பு என்றில்லாமல் ஏனைய உயர் வகுப்புகளுக்குமே அபர்ணாவைத் தெரிந்திருந்தன. அபர்ணாவோடு ஒன்றாக சைக்கிளில் போனேன் என்பதையே தாங்கமுடியாமல் எனக்கு சூனியம் வைத்த நண்பர்கள் ஏராளம். அதனால் கூடிப்பழகிய காலத்தில் அபர்ணாவை ரசித்திருக்கிறேன் என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். மற்றபடி காதல் ஒன்றும் கிடையாது என்றேன். என் மனைவிக்கு கொழும்பில் வேலை செய்த காலத்தில் ஒரு சாதாரணக் காதல் இருந்தது. அதைச் சமம் செய்ய எனக்கும் ஒரு காதல் அவளுக்கு வேண்டியிருக்கிறது. ஆனால் அவளிடம் இருக்கும் அந்தச் சின்னக் குற்றவுணர்ச்சிதான் என் பலம். மசிரைவிட்டேன் நான். அபர்ணாவை நான் சாதுவாக காதலித்தேன்தான். மழை கொட்டும் திருநாளில் கிறவல் புழுதி நாசியை அரிக்கும்போது ‘மண்ணைத் திறந்தால் நீரிருக்கும், என் மனதைத் திறந்தால் நீயிருப்பாய்’ என்று பாடலை முணுமுணுக்கையில் எனக்கு அபர்ணா முகம் வந்துபோயிருக்கக்கூடும். ஆனால் அவளிடம் சென்று சொல்லுமளவுக்குத் தீவிரமாகக் காதலிக்கவில்லை. அல்லது தைரியமில்லை. தவிர அப்போது கரடிப்போக்கில் ரஜீவன் என்றொரு நாயும் இடம்பெயர்ந்து வந்திருந்தது. எம்மை விட இரண்டு வயது மூத்தது அது. அதற்கு பொறியியல்பீடம் கிடைத்திருந்தது. நான்கு ஏ. அது எங்களுக்குப் பின்னேயே திருவையாறு காண தினமும் வந்து போய்க்கொண்டிருந்தது. எனக்கோ உதைபந்தாட்டம் ஏறிய அளவுக்குப் படிப்பு சுத்தமாக ஏறவில்லை. இரண்டு டி வந்த ஒரே காரணத்தால் டொக்டராகும் கனவில் பயோ படித்துக்கொண்டிருந்தேன். அதனால் அபர்ணாவை அந்த நோக்கோடு நான் பார்க்கவில்லை. ஆனால் என்றேனும் ஒருநாள் அவளுக்கு என் மீது ஒரு இது வந்து, என்னிடம் ஏதாவது கேட்டாள் என்றால் ஓம் சொல்லவேண்டும் என்று நப்பாசை இருக்கத்தான் செய்தது. அது நிகழ்வதற்குள் ஜெயசிக்குறு ஆரம்பித்து ஆளாளுக்கு இடம்பெயர்ந்து போய்விட்டோம்.
இப்போது இருபத்துமூன்று வருடங்கள் கழித்து அபர்ணா திடீரென்று என்னைத் தொடர்புகொள்கிறாள். பேஸ்புக் மெசஞ்சரில்.
“மைகிரேட் பண்ணி வந்திருக்கினமாம். புருசன் சார்ட்டட் எக்கவுண்டண்ட் என்று கேள்வி. இஞ்ச பெரிசா அவைக்கு ஒருத்தரும் இல்லபோல கிடக்கு. புது இடம்.”
“நீங்களே அவவை வீட்ட கூப்பிட்டிங்களா அல்லது அவவா வரப்போறன் எண்டாவா?”
“அவதான் நான் அவுஸ்திரேலியாவில இருக்கிறன் எண்டதா பள்ளிக்கூட குரூப்புக்குள்ளால கண்டுபிடிச்சு தனியா மெசேஜ் பண்ணினவா. பிறகு சரியில்ல எண்டு நான் கூப்பிட்டனான்”
நான் நிலத்தில் சரிந்து கிடந்து துடைக்க ஆரம்பித்தேன்.
“சும்மாதன்னும் வீட்டை கூட்ட மாட்டியள். ஆனா ஆரோ அபர்ணா எண்டோன டிவிக்குப் பின்னால கிடக்கிற தூசையும் போய்த் துடைக்கிறியள். உண்மையிலேயே லவ் பண்ணேல்லத்தானே?”
நான் அவள் பக்கம் திரும்பாமலேயே டிவி ரிமோட்டை அன்டி பக்டீரியல் வைப் துணியால் துடைத்து எடுத்தேன். வீட்டைத் துப்புரவாக்கி, குளித்து, தடித்த கோடுபோட்ட டிசேர்ட் ஒன்றை எடுத்து அணிந்துகொண்டேன். தலைமுடிக்கு ஜெல்லை அள்ளிக்கொட்டி நன்றாக வாரிவிட்டுக்கொண்டேன். தமிழ்க்கடையில் போய் எட்டு ரோல்ஸ் வாங்கிக்கொண்டு, டெனிஸ் வகுப்புக்குப் போன இரண்டு மகள்களையும் கூட்டிக்கொண்டு வீடு திரும்ப ஐந்து மணியாகியிருந்தது. துடைத்து வைத்திருந்த செற்றியில் வியர்வை நாற்றத்தோடு உட்காரப்போன இரண்டையும் குளித்து வெளிக்கிடுமாறு விரட்டினேன். அந்நேரம் அறைக்குள்ளிருந்து வெளியே வந்த மனைவியைப் பார்த்தபோது பிரமித்துப்போனேன். ஜீன்ஸ், பிளேய்ன் டிசேர்ட் மேலே மெல்லிய பட்டர் கலரில் கார்டிகன் போர்த்தி, தலைமுடியைத் தழையவிட்டு, சின்னதாகக் குங்குமப்பொட்டு வைத்து, she looked gorgeous. குற்ற உணர்ச்சியில் மனம் அப்படி வியக்கிறதா என்று எழுந்த கேள்வியை அப்படியே எங்கோ ஒளித்துவைத்தேன். ஒரு மனிசருக்கு பல மனங்கள் இருந்தால் இப்படித்தான். அதுகளே அடித்துக்கொண்டு அந்த மனிசரைக் கொன்று போட்டுவிடும்.
சரியாக ஆறு மணிக்கு அழைப்பு மணி அடித்தது. மூத்தவள்தான் போய்த் திறந்தாள். பின்னாலேயே நாங்கள் போனோம். அபர்ணா. முகத்தில் கண்ணாடி. தலை முடி ஐதாகிவிட்டிருந்தது. காதோரங்களில் இளநரையும் தோன்றியிருந்தன. பிங்க் நிறத்தில் சல்வார் அணிந்திருந்தாள். தோல் நிற சாண்டில்ஸைக் கழட்டும்போது கவனித்தேன். தடித்த பிங்க் நிறத்தில் கியூடெக்ஸ். சின்னிவிரல் நகம் இன்னமுமே நசுங்கியிருந்தது. கணவன் காரைப் பார்க் பண்ணிவிட்டு கார் சீற்றிலிருந்த இரண்டு வயதுக் குழந்தையைத் தூக்கிவந்தான். அவர்களுக்கு பதினான்கு வயதில் ஒரு பெண் குழந்தையும் இருந்தது. அவளை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்திருந்தார்கள். இரண்டு குழந்தைகளுக்கிடையே ஏன் இத்தனை வருட இடைவெளி என்பதற்கு மூன்றே கணங்களில் மனம் முப்பத்திரண்டு சாத்தியங்களை ஆராய்ந்து ஓய்ந்தது.
வழமையான பேச்சுகள்தான். வன்னிக்கதைகளை அபர்ணா தவிர்த்ததுபோலத் தெரிந்தது. அவள் அதிகம் பேசவில்லை. வீட்டை நன்றாக வைத்திருக்கிறீர்கள் என்றாள். மனைவியைப்பார்த்து நீங்கள் அழகு என்றாள். மகள்களோடு பேச்சுக்கொடுத்தாள். என் மனைவியும் அபர்ணாவும் ஒரே ஊர் என்பது ஐந்தாவது நிமிடமே தெரிந்துபோகவே பொதுவான சொந்தக்காரர்கள் பற்றிய பேச்சு வந்துவிட்டது. அவர்களிருவரும் உடனேயே ஒட்டிக்கொண்டுவிட்டார்கள். என் மனைவிக்கு பேச்சு என்றால் போதும். யாரேனும் கிடைத்துவிட்டால் விடவேமாட்டாள். இல்லாவிட்டால் தொலைபேசியிலாவது யாருக்கேனும் அழைப்பெடுத்து அலுப்படிப்பாள். ஆக அபர்ணாவுக்கு அதிகம் பேசவேண்டிய தேவை இருக்கவில்லை. எனக்குமே எதைப்பேசுவது என்ற குழப்பம் இருந்தது. ஒரு காலத்தில் ஒன்றாகப் பாடசாலை போய் வந்தோம் என்பதைத்தவிர எமக்குள் பொதுவானதாக எதுவுமே இருக்கவில்லை என்பதுதான் உண்மை. அப்படிப்போனபோதுகூட நாங்கள் பெரிதாக எதையும் பேசவேயில்லை என்பது இப்போதுதான் உறுத்தியது. என்னதான் பேசினோம்? வகுப்பறைப் பாடங்கள்பற்றி. உயர்தரத்தில் இரண்டாம் தடவை முயற்சி செய்வதுபற்றி. அபர்ணாவுக்குப் பிடித்த பாடல் எதுவென்றுகூட எனக்குத் தெரியாது. அவளுக்குப் பிடித்த நிறம், நடிகர்கள், அப்பாவுக்கு என்ன நடந்தது. எதுவுமே எனக்குத் தெரியாது. ‘என் இமையைத் திறந்தால் நீயிருப்பாய்’ என்ற பாட்டின் பல்லவிகூட அவளுக்குத் தெரிந்திருக்குமோ என்னமோ. எல்லாமே அபர்ணா பற்றி நானும் நண்பர்களும் கட்டியெழுப்பிய வெறும் பிம்பங்கள்தான். நிஜ அபர்ணாவை எம்மில் ஒருவருக்குமே தெரிந்திருக்கவில்லை என்பதுதான் நிஜம்.
அபர்ணாவின் கணவனுடைய பெயர் ‘மார்க்கம்’ என்று அறிந்தபொழுதில் என் ஆச்சரியங்கள் எல்லாமே அவளிடமிருந்து அவனிடம் தாவியிருந்தன. மார்க்கம் என்று யாரேனும் பெயர் வைப்பார்களா என்று வியப்புடன் அவனைக் கேட்டேன். மார்க்கண்டு என்கின்ற தாத்தாவின் பெயரை நவீனப்படுத்தி மார்க்கம் என்று வைத்துவிட்டார்கள். மார்க்கம் கொழும்பிலேயே பிறந்து வளர்ந்தவன் என்று தெரிந்தது. அபர்ணாவும் நானும் கிளிநொச்சியில் சைக்கிள் மிதித்த நாட்களில் அவன் ரோயல் கல்லூரியில் ரக்பி விளையாடியிருக்கிறான். தமிழர்களோடு தடக்காமல் ஆங்கிலத்தில் பேசும் வித்தை அவனுக்கு வாய்த்திருந்தது. வசதியானவன். கொல்பிட்டியவில் அவர்களுக்கு ஒரு பிளாட் இன்னமும் இருக்கிறது. அபர்ணாவும் அவனும் காதலித்துத் திருமணம் செய்தார்கள் என்பதைக் கேட்டபோது இலக்கை எட்டமுதலே, குறுக்கேபோன மோட்டர் சைக்கிளில் மோதி வெடித்த சக்கை லொறியின் சத்தம் அடி மனதில் கேட்டது.
மனைவி எல்லோருக்கும் டீ ஊற்றப்போனபோது அபர்ணாவும் அவளோடு கூடப்போனாள். அவர்களின் இரண்டு வயது மகனைத் தாக்காட்டமுடியாமல் என் இரு மகள்களும் அறைகளுக்குள் போய் ஒளிந்துகொண்டுவிட்டார்கள். அந்தப் பெடியனுக்கு நிறந்தீட்டும் பென்சில்களையும் பேப்பரையும் கொடுத்துவைத்திருந்தோம். அவன் பேப்பரிலும் தரையிலும் எதையோ கிறுக்கிக்கொண்டிருந்தான். தரையில் கீறவேண்டாம் என பெற்றோர்கள் அவனிடம் சொல்லாதது ஆச்சரியமாக இருந்தது. பரவாயில்லை போனதும் மொப் பண்ணிவிடலாம் என்று விட்டுவிட்டேன். மார்க்கம் எழுந்து டொய்லட் போனான். பின்னர் அவன் பாத்ரூம் சென்று கை கழுவாமலேயே ஹோலுக்குள் நுழைந்தபோது ‘ஹாண்ட் வோஷ் பண்ண பாத்ரூமைத் தேடுறீங்களா? அது பக்கத்திலேயே இருக்கு’ என்று சொல்லி அவனைத் திருப்பி அனுப்பினேன். அப்போதே அபர்ணா குற்ற உணர்ச்சியோடு என்னைக் கணம் திரும்பிப் பார்த்ததை நான் கவனிக்கத் தவறவில்லை.
பொழுது போகாவிட்டால் மார்க்கத்துக்கு வீட்டைச் சுற்றிக்காட்டுமாறு மனைவி சொன்னாள். நானும் கடமைக்கு அவனை ஒவ்வொரு அறையாகச் சுற்றிக்காட்டினேன். கராஜில் ஒரு தொகை உபகரணங்களைக் கண்டவன் ‘நீங்கள் மேசன் வேலை செய்வீர்களா?’ என்று கேட்டான். வேலி அடைப்பதுமுதல் நிலத்துக்கு புளோர்போர்ட் அடிப்பதுவரை எல்லாமே செய்வேன் என்றேன். என் தொழிலும் அதுதான். அதைவிட சனி ஞாயிறுகளில் தனியாருக்கும் செய்துகொடுப்பேன் என்றேன். விசிட்டிங் கார்ட் இருக்கிறதா என்று கேட்டு அவன் என்னிடம் ஒரு கார்டைக் கேட்டுப் பெற்றுக்கொண்டான். ‘உங்களைப் போன்ற தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவேண்டும்’ என்றான். பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு எப்படி வந்தீர்கள் என்று கேட்டான். நான் ஏஜென்ஸி மூலமாக என்று சொன்னபோது ‘படகுப் பயணம் கடினமாக இருக்கவில்லையா?’ என்று கேட்டான். என் காலத்தில் நாங்கள் விமானத்திலேயே வரக்கூடியதாக இருந்தது என்று சொன்னபோது ‘தட்ஸ் குட்’ என்றான்.
அவர்கள் கிளம்பும்போது மணி ஏழு ஆகியிருந்தது. மனைவிக்கு அபர்ணாவை நன்றாகப் பிடித்துப்போயிருந்தது. அவர்களை சாப்பிட்டுவிட்டுப் போகுமாறு கேட்டபோது அவர்கள் இன்னொரு விசிட் இருப்பதாகச் சொன்னார்கள். போகும்போது அபர்ணாவுக்கு மனைவி குங்குமப்பொட்டு கொடுத்தாள். சின்னவனுக்கு எங்கிருந்தோ எடுத்துவந்து ஒரு விளையாட்டுக்காரைக் கொடுத்தாள். என் மகள்களை நான் கூவி அழைக்க, அவர்கள் காதுகளில் இயர்போன் அணிந்தபடியே வெளியே வந்தார்கள். அபர்ணா அவர்களை அணைத்து உச்சி முகர்ந்தாள். தம் வீட்டுக்கு அவர்களையும் நிச்சயம் கூட்டிவரவேண்டும் என்று வற்புறுத்தினாள். வாசலில் அபர்ணா மீண்டும் சாண்டில்ஸ் போட்டபோதுதான் அவளோடு எதையுமே பேசவில்லை என்பதை உணர்ந்தேன். ‘சொன்னாப்போல அன்ரி எப்படியிருக்கிறா?’ என்று கேட்டேன். ‘கலியாணம் முடிஞ்சு நாலு மாசத்திலேயே அம்மா மோசம் போயிட்டா’ என்று அபர்ணா சொல்லக் கவலையாக இருந்தது. இந்த மார்க்கத்திடம் மகள் மோசம் போனதை நினைத்து அரற்றியே அந்த சீவன் மோசம் போயிருக்கும் என்ற மோசமான சிந்தனை ஒன்று உள்ளே வந்துபோனது.
அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு உள்ளே வந்தால், மகள்கள் இருவரும் டிவி முன்னே வந்து குந்தியிருந்தார்கள். மூத்தவள் அபர்ணா வாங்கி வந்திருந்த பாப்பிள்ளையைக் காட்டி ‘இதை என்ன செய்வது? மார்க்கட்பிளேசில் போட்டால் பத்து டொலர்கள் கிடைக்கும்’ என்றாள். என் குழந்தைகள் பதின்ம வயதை எட்டியிருக்கும் என்ற எண்ணம்கூட அபர்ணாவுக்கு வரவில்லை என்ற நினைப்பு எனக்குச் சந்தோசத்தையே கொடுத்தது. இரண்டாவது மகள் அந்தப் பாப்பிள்ளையை கேம் ஒஃப் துரோன்ஸில் வருகின்ற காலீஸிபோல ஒப்பனை செய்யப்போகிறேன் என்றாள். மனைவி உள்ளே சென்று உடுப்பு மாற்றிக்கொண்டு சோட்டியில் வந்து நின்றாள். சோட்டியிலும் அவள் அழகுதான். எனக்கென்று ஏதாவது கிப்டை அபர்ணா கொண்டுவந்தாளா என்று பார்த்தேன். ம்ஹூம். வீட்டுக்கு வருபவர்கள் எல்லாம் குழந்தைகளுக்கே கிப்டுகளை வாங்கிவருகிறார்கள். பெரியவர்களை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். மனைவி அவர்கள் குடித்து வைத்து டீ கப்புகளைக் கழுவத் தொடங்கினாள். அபர்ணா எங்களை அவர்கள் வீட்டுக்கு சாப்பிட அழைத்தாள், போகவேண்டும் என்று சொன்னாள். போகத்தான் வேண்டும் என்று நான் சொன்னாலும் இந்த நட்பைத் தொடருவதில் எனக்கு ஆர்வம் வடிந்திருந்தது. அபர்ணாவுடன் தொடர்ச்சியாக நான்கு வரிகள் பேசுவதற்கு என்னால் முடியாதிருந்தது. மார்க்கம் ஒரு வரி பேசினாலே ஆப்பை எடுத்து தொண்ண்டைக் குழிக்குள் செருகிவிடவேண்டும் என்று மனம் உந்தியது. நிறைய நெட்பிளிக்ஸ் ஹொரர் படங்கள் பார்ப்பதன் விளைவாக இருக்கவேண்டும்.
நான் அந்தப் பெடி கிறுக்கித் தரையில் போட்டிருந்த பேப்பர்களைப் பொறுக்கிக் குப்பையில்போட்டேன். மார்க்கம் பெற்ற மாணிக்கம் தரை டைல்ஸ் முழுதும் பென்சில் கலர்களால் கிறுக்கிவிட்டிருந்தது அப்போதுதான் தெரிந்தது. அவற்றை ஈரத்துணி போட்டு அழிக்க ஆரம்பித்தேன். டைல்ஸ் இடைவெளிகளில் கிடந்த நிறங்களை அழிப்பது கடினமாக இருந்தது. டைல்ஸ் அழுக்கைத் துடைக்கும் திரவத்தை எடுத்து வந்து ஊற்றித் தேய்க்க ஆரம்பித்தேன். இப்போது நிறங்கள் கொஞ்சம் மங்கியதுபோலத் தோன்றியது. ஆனால் மெல்லிய பிங்க் நிறம் மாத்திரம் எஞ்சிக்கிடந்தது. அபர்ணாவின் நசுங்கிய சின்னி விரல் நகத்து கியூடெக்ஸ்போல. நான் அதனைத் தேய் தேயென்று தேய்த்தேன். பின்னர் எழுந்து நின்று அந்த டைல்ஸ் இடுக்கைக் கவனித்தேன். சின்னதாக ஒரு பிங்க் கீறல் இன்னமும் வெளித்தெரிந்ததுபோலத் தோன்றியது. ஏனையவர்கள் அதனைக் கவனிக்கச் சந்தர்ப்பமில்லை. ஆனால் என்னால் அதனின்று கண்களை அகற்றமுடியாதிருந்தது. திரும்பவும் தேசிக்காய் பிளீச் போட்டு அதனைத் தேய்த்துப்பார்த்தேன். இப்போது டைல்ஸின் அந்தப்பகுதி மாத்திரம் பளிச்சென்று தெரிய மீதி தரையெல்லாம் அழுக்காகத் தோன்றியது.
அபர்ணாவின் இரண்டு வயது மகன் வரைந்த கிறுக்கல் திருவையாற்றிலிருந்து கிளிநொச்சிபோகும் கிறவல்பாதைபோல வளைந்து நெளிந்து சென்றது.
*** முற்றும் ***

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.