Skip to main content

வலியின் எல்லைக்கோடு


வலி உயிரைத் தின்ன ஆரம்பித்தபோது அதிகாலை இரண்டு மணியாகியிருந்தது. பல்லைக்கடித்துக்கொண்டு சிறிது தூங்கி எழலாம் என்று புரண்டும் திரும்பியும் படுத்து, பல மணி நேரம் கழித்து எழுகிறோம் என்று நினைத்து மறுபடியும் மணிக்கூட்டைப் பார்த்தால் வெறுமனே பத்து நிமிடங்கள்தான் கழிந்திருந்தன. வலிக்கு அந்தப் பண்பு உண்டு. அது காலத்தை மெதுவாக நகர்த்த வல்லது. எழுந்து சென்று கொஞ்சம் தண்ணீர் குடித்துப்பார்த்தேன். ஒரு நூலை எடுத்து இரண்டு பக்கங்களைப் புரட்டினேன். டிவி ரிமோட்டை உருட்டிக்கொண்டிருந்தேன். செல்பேசியின் செயலிகளுக்குப் போய் வந்தேன். இளையராஜா கேட்டேன். இசை ஒரு வலி நிவாரணி என்றவரைத் தேடிச் சென்று வெளுக்கவேண்டும்போல இருந்தது.

ஒருவாறாக மூன்று மணி ஆகிவிட்டது. இன்னமும் ஐந்து மணி நேரம் சமாளித்தால் வைத்தியரிடம் சென்றுவிடலாம். அவர் பார்த்து, மருந்து மாத்திரை கொடுத்து. அடுத்த இரண்டு மணி நேரத்தில் இவ்வலி குறைந்துவிடும். அதாவது சரியாக இன்னமும் சரியாக ஏழு மணி நேரங்கள். கொஞ்ச நேரம் டிவி பார்த்தேன். படித்த புத்தகத்தை மறுபடியும் எடுத்துப் படித்தேன். இன்ஸ்டகிராமில் பூனைகளின் விளையாட்டுகளை ரசித்தேன். ‘வெண் பஞ்சு மேகங்கள், உன் பிஞ்சுப் பாதங்கள், மண் தொட்டதால் இன்று, செவ்வானம் போலாச்சு’ கேட்டேன். இன்னமும் ஆறு மணி நேரங்கள். முன்னர் இப்படி வலி வந்து நடு இரவில் விழித்த போதெல்லாம் அதிகாலையில் மறுபடியும் தூக்கம் வந்ததுண்டு. இம்முறையும் அது நிகழலாம். இன்னும் ஒரு மணி நேரத்தில் வலியை மீறித் தூக்கம் வந்து சுழற்றலாம். அப்படியெனில் ஒரு மணி நேரத்தூக்கம். பின்னர் புறப்பட்டு வைத்தியரைப் போய் பார்க்கும் அமளியில் வலி கொஞ்சம் மறக்கப்படும். சமாளித்துவிடலாம் என்று தோன்றியது. இன்னமும் ஐந்து மணி நேரங்கள்தான். ஐந்து மணி நேரங்களாக வலியைச் சமாளிக்கமுடியாதா? வாழ்க்கை முழுதும் வலியைச் சுமப்பவர்களின் நிலை என்ன? இவ்வலி தீருமா, இதைவிடப் பெருவலி வந்து சேருமா என்ற அச்சங்களோடு வாழ்வதைக் காட்டிலும் ஐந்து மணி நேரங்களில் தீர்ந்துவிடும் என்று தெரிகையில் வலியைச் சமாளிப்பது இலகு ஆகிறது அல்லவா?
எமிலி டிக்கின்சனின் கவிதை ஒன்றிருக்கிறது.
Bound—a trouble—
And lives can bear it!
Limit—how deep a bleeding go!
So—many—drops—of vital scarlet—
Deal with the soul
As with Algebra!
Tell it the Ages—to a cypher—
And it will ache—contented—on—
Sing—at its pain—as any Workman—
Notching the fall of the Even Sun!
வலிக்கு எல்லை வகுத்து ஒரு சமன்பாட்டைத் தீர்ப்பதுபோல அணுகும் முறையிது. தெரிந்தோ தெரியாமலோ நம்மில் பலர் அதைப் பின்பற்றியிருக்கிறோம். இந்நாளில், இத்தனை மணிக்கு, இது நிகழ்ந்ததும் நம் வலி குறைந்துவிடும் என்று எல்லைகளை அறியும்போது வலியைக் கொஞ்சம் சமாளிக்கமுடிகிறது. அந்தி சாய்ந்தால் வீடு செல்லலாம் என்ற எண்ணம் பகல் முழுதும் உடலை வருத்திப் பணி செய்யும் தொழிலாளியின் அடி மனதில் இருப்பதுபோல. நிலத்தைப் பண்படுத்தி உழுது பயிர் செய்தால் அறுவடை செய்யலாம் என்ற பயன் நினைப்பில் இருப்பதுபோல. வலிக்கு ஒரு எல்லை, வலியினால் ஒரு பயன் எனும்போது வலியைச் சமாளிப்பது எளிதாகிறது.
எமிலி இக்கவிதையை 1861ம் ஆண்டு எழுதுகிறார். ஆனால் இரண்டாண்டு கழித்து கவிதையை மறுபடியும் திருத்தி வெளியிடுகிறார். எழுத்தாளர்களின் இயல்பு இது என்க. தன் எழுத்துகளை மீளத் திரும்பிப்பார்க்கும் சமயத்தில் எல்லாம் திருத்தங்களைத் தவிர வேறெதையும் அவர்கள் காண்பதில்லை. அலிஸ் மன்றோ தன் சிறுகதை ஒன்றின் முடிவை முப்பது வருடங்களுக்குப் பின்னர் மாற்றி எழுதியது ஆங்கில இலக்கிய உலகில் அடிக்கடி அலசப்படும் ஒரு விடயம்.
எமிலியின் மாற்றியமைக்கப்பட்ட கவிதை இது.
Bound a Trouble – and lives will bear it!
Circumscription – enables Woe –
Still to anticipate – Were not limit –
Who were sufficient to Misery?
State it the Ages – to a cipher –
And it will ache contented on –
Sing at its pain, as any Workman –
Notching the fall of the even Sun –
ஆரம்ப கவிதையில் ஒருவித அலட்சியம் இருக்கிறதல்லவா? வலியால் துடிப்பவரிடம் சென்று “Deal with the soul, as with Algebra” என்று சொன்னால் கோபம் வருமா இல்லையா? திருத்தி எழுதிய கவிதையின் “circumscription” சொல்லும் விசயமும் ஒன்றுதான். ஆனால் அதில் ஒரு மென்மை இருக்கிறது. உன் வலியைச் சுற்றி ஒரு வட்டம்போடு. அந்த வட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறுகி பூச்சியமாகிப்போய்விடும். அச்சம் வேண்டாம். சமாளி. கேட்கும்போது சற்று ஆசுவாசம் வருகிறதல்லவா?
இந்த வலிக்கு எல்லையே இல்லை. போகப்போக இது இன்னமும் பல மடங்காகும். இது ஒரு மீளாத்துன்பம். இப்படி ஒரு வலி ஏற்படின் நம்மால் சமாளிக்கமுடியுமா? அஸ்தமனம் எல்லாம் நிரந்தரம் என்றால், பனிக்காலத்துக்குப் பின்னர் வசந்தம் இல்லை என்றால், கோடையின் பின்னர் மழை இல்லை என்று தெரிந்தால் உயிர்கள்தாம் நிலைக்குமா? எல்லையற்ற வலி ஒரு ‘misery’ என்கிறார் எமிலி. பல தற்கொலை முடிவுகளின் மூலக்காரணமே எல்லையற்ற வலி என்ற புரிதல்தான். ஆன் ரணசிங்கவின் Plead Mercy கவிதையில் பெருஞ்சுமையை இழுக்கமாட்டாமல் நுரை தள்ளித் தவிக்கின்ற வண்டில் மாட்டைப் பார்த்த சிறுமி நினைக்கிறாள். ‘இப்படி வாழ்வதில் ஏதும் பயனுண்டோ?’. அந்தச் சிறுமிக்குப் போய் ‘சாவதைக் காட்டிலும் வாழ்தல் பயன்’ என்று எப்படி சொல்வேன் எனத் தாய் தவிப்பார்.
எல்லையற்ற வலி, மரணத்தின் துயர், தன் மரணத்தின்மீதான அச்சம் என்பவற்றின் வேலிகளை எப்படி அடைத்துக்கொள்வது. இவற்றுக்கான பரிவட்டம் என்ன? அவ்வலி துடித்திருப்போருக்கான நம்பிக்கைதான் என்ன? அதுதான் கடவுள். கடவுள் என்பது எல்லையற்ற வலிகளுக்கு நாம் போடுகின்ற அணைக்கட்டு. கடவுளைத் துதி பாடு, நம்பு, உன் வலியெல்லாம் தீர்ந்துவிடும் என்று சொல்கையில் அக்கண்களில் சிறு ஒளிக்கீற்று உருவாகிறது அல்லவா? அதுதான் எமிலி சொல்கின்ற Circumscription. கடவுள் என்றொருவர் இருக்கிறார் என்பதில் எனக்குத் துளியும் நம்பிக்கை இல்லை. வலிகள் என்னோடது. அதற்கு எல்லை இருக்குமானால் சமாளிக்கலாம். இல்லையெனில் வலியின் அளவைப் பொறுத்து வாழ்ந்து கழிக்கலாம். வலிக்கு எல்லையுமில்லை, துன்பம் பன் மடங்கு அதிகமாகும், வலி தாளவேமாட்டாத பெருந்துயர் எனும் நிலை வருமெனில் அந்தப் பதின்மூன்று வயதுச் சிறுமியின் முடிவுதான் என்னுடையதும். Life is not at all better than death. ஆனால் கடவுள் பக்தருக்கு சமயத்தில் அவர்தம் நம்பிக்கை வாழ்வதை ஊக்குவிக்கலாம். எல்லையற்ற வலிக்குத் திடீரென எல்லையும் வந்து சேரலாம். ஆக கடவுள் மறுப்பாளர்கள் இம்மனிதர்களுக்கு மாற்று கொடுக்காதவரை தம் கருத்துகளைக் கவனமாகக் கையாளுதல் அவசியம். மதங்களையும் அவை செய்யும் அதிகாரங்களையும் தோல் உரிப்பது என்பது வேறு. உலகின் எந்த மதமும் அதிகாரத்துக்கானது. கேவலமானது. அப்பாவி மனிதர்களின் இவ் அச்சம் கலந்த நம்பிக்கையை அவை பயன்படுத்திக் குளிர் காய்கின்றன. சந்தேகமே வேண்டாம். இதில் எந்த மதமும் விதிவிலக்கல்ல. ஆனால் எளிமையான தனி மனிதர்களின் கடவுள் நம்பிக்கை அவரவர் வலிகளுக்கான நிவாரணி. அவற்றைக் கேலி செய்வது தகாத செயலாம். அது பகுத்தறிவின் பண்புமல்ல.
எமிலியின் இக்கவிதைபற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது ஜீவிகா ஒரு ரூமியின் கவிதையை ஞாபகப்படுத்தினார்.
- The Guest House -
This being human is a guest house.
Every morning a new arrival.
A joy, a depression, a meanness,
some momentary awareness comes
as an unexpected visitor.
Welcome and entertain them all!
Even if they’re a crowd of sorrows,
who violently sweep your house
empty of its furniture,
still, treat each guest honorably.
He may be clearing you out
for some new delight.
The dark thought, the shame, the malice,
meet them at the door laughing,
and invite them in.
Be grateful for whoever comes,
because each has been sent
as a guide from beyond.
இந்த நம்பிக்கைதான் எமிலி சொல்கின்ற மீளாத் துயரின் எல்லையாம்.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட