Skip to main content

பாடசாலையை விட்டு வெளியே வாருங்கள்



ஜேகே ஒரு ஜொனியன் என்பதில் பெருமையடைகிறேன் என்று ஜூட் அண்ணா தன் உரையில் சொன்னார். அந்த உரிமையில் இதை எழுதுகிறேன். இது பிரபல பாடசாலைகள் எல்லாவற்றுக்கும் பொருந்தும் என்றாலும் முதலில் நம் பாடசாலையைத்தான் சுட்டவேண்டும் அல்லவா?

பரி. யோவான் கல்லூரி உருப்பட வேண்டும் என்று ஜொனியன்ஸ் எவரும் உண்மையிலேயே நினைக்கிறீர்கள் என்றால் முதலில் பாடசாலையை விட்டுக் கொஞ்சக்காலம் தள்ளி நில்லுங்கள்.
Get the hell out of there and leave the school alone.
பாடசாலை என்பது மாணவர்கள் கல்வி பயிலுவதற்கான இடம். அங்கே தற்போதைய மாணவர்கள் நிம்மதியாகப் படிப்பதற்குரிய சூழலுக்கு இடம்கொடுங்கள். ஆசிரியர்களின் வேலை அம்மாணவர்களுக்குக் கல்வி புகட்டுவதே. அதற்கும் அனுமதியுங்கள்.
பாடசாலை என்றால் பாடங்களைப் போதிக்கும் சாலை. அங்கே படிப்புத்தான் முக்கியமானது. ஏனைய நடவடிக்கைகள் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். “Curricular Activities”தான் ஒரு பாடசாலையில் தலையாய விசயம். அதை விடுத்து “Extra Curricular Activities”தான் மாணவப் பருவத்திலேயே சிறந்தது என்ற எண்ணத்தை உருவாக்காதீர்கள்.
நீங்கள் அறுபது வயதில் ஒரு நிறுவனத்தை நடத்தலாம். அற்புதமாக பாஸ்டா செய்யலாம். எட்டு விதமான நீச்சல் தெரிந்தவராக இருக்கலாம். வெள்ளை மாளிகையின் சுவர்ப் புகைப்படங்களுக்கு வானிஷ் போடும் வேலையில் இருக்கலாம். ஆண்டவரின் ஆசியை நேரடியாக அனுபவித்திருக்கலாம். ஆனால் இதையெல்லாம் பதின்மத்திலிருக்கும் மாணவர்களின் தலையில் ஏற்றவேண்டும் என்று நினைக்கவேண்டாம். உங்களுக்கு ஒரு வெளிச்சம் கிடைக்கிறது என்பதற்காக மாணவர்கள் தலையில் எல்லாவற்றையும் திணிக்காதீர்கள்.
ஊருக்குப் போனால், ஊரிலிருந்தால், பாடசாலைக்கு சனி, ஞாயிறுகளில் செல்லுங்கள். அல்லது பாடசாலை முடிந்தபின்னர் செல்லுங்கள். பாடசாலை நேரத்தில் சென்று அதிபர், ஆசிரியர், வகுப்புகளைக் குழப்பாதீர்கள். கவனக் கலைப்பான்களாக செல்பி எடுத்து தொந்தரவு செய்யாதீர்கள்.
பாடசாலையில் நீங்கள் படித்தது ஒரு பத்து வருடங்களாக இருக்கும். இப்போது உங்களுக்கு அறுபது வயது என்றால் நாற்பது வருடங்கள் நீங்கள் வெளியுலகில் வாழ்ந்திருக்கிறீர்கள். உங்களை உருவாக்கியது பாடசாலை மாத்திரமல்ல என்பதை மறந்துவிடாதீர்கள். எல்லாவற்றுக்கும் பாடசாலையை இழுக்காதீர்கள். அப்படியே பாடசாலைதான் நம்மை வளர்த்துவிட்டது என்று நினைத்தால், வீழ்ந்து கிடப்பவர்கள் என்று நீங்கள் நினைப்பவர்களையும் பாடசாலைதான் வீழ்த்தியது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். அடுத்த தடவை யாராவது ஜொனியன் சிறுவர் துஷ்பிரயோகம் செய்தாலோ, போதைப்பொருள் கடத்துபவராகவோ அறியப்பட்டாலோ, நீங்கள் உங்கள் பாடசாலைப் பக்கங்களில் “நான் ஒரு ஜொனியன் என்பதற்காக வெட்கப்படுகிறேன்” என்று அச்செய்தியைப் பகிரவேண்டும். மாட்டீர்கள் என்றால் இந்தப் பாடசாலைப் பெருமைகளைக் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். இது பெருமைப் படுபவர்கள் எல்லோருக்கும் பொருந்தும். தமிழனாக, யாழ்ப்பாணியாக, பனங்கொட்டையாக, அத்தனை பெருமைகளுக்கும் பொருந்தும்.
நீங்கள் தொலைத்த இளமையை மீளக்கொண்டுவருவதற்காக நடப்புப் பாடசாலையை அடகு வைக்காதீர்கள். பழைய மாணவர்கள் கூடிக் கொட்டமடிப்பது என்பது வேறு. அது அவரவர் ஊர்களில் அவரவர் காசைப்போட்டுச் செய்வது. அவரவர் விருப்பம். ஆனால் பழைய மாணவர் சங்கம் என்பதற்காக பாடசாலைக்கு ஏதும் செய்யவேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. நம் பாடசாலையைவிட நலிவுற்ற நிலையில் பல பாடசாலைகள் இருக்கின்றன. அவற்றுக்கு செய்யலாம். அல்லது உதவி எதுவும் செய்யாவிட்டால்கூட ஓகேதான். எல்லா சங்கங்களும் எந்நேரமும் உதவி செய்துகொண்டேயிருக்கவேண்டும் என்று விதியா என்ன? உபத்திரவம் செய்யாதவரைக்கும் ஓகே.
சமூகத்தில் அந்தஸ்து, அடையாளம், பெருமை என்பதெல்லாம் வெறும் மாயை என்பதை நீங்கள் உணரவேண்டும். அப்படியே அதை நீங்கள் அடைந்தாலும் அதற்குப் பாடசாலை மாத்திரம் காரணம் அல்ல. வீடு, பக்கத்து வீடு, புத்தகங்கள், தனியார் கல்வி ஆசிரியர்கள், நண்பர்கள், சூழ்நிலை, பணியிடம், உங்கள் திறன் எனப் பல காரணங்கள் அவற்றுக்கு உண்டு. Don’t give undue credits to school alone.
பரி. யோவான் கல்லூரியின் ஒரு நிகழ்வுக்கு பிரதம விருந்தினர் ஆகவேண்டும் என்ற ஆசையில் பாடசாலையோடே படுத்துக்கிடக்கவேண்டாம். உங்களுக்கு ஒரு அடையாளம் வேண்டுமென்பதற்காக பாடசாலையைப் பயன்படுத்தவேண்டாம். Try to find your own personal legend. முடியவில்லையா? Just be yourself. You don’t have to be somebody all the time. லங்கா சிறியில் போய் எத்தனை செத்தவீட்டு செய்திகள் ஒரு நாளில் வருகின்றன என்று பாருங்கள். எல்லோருமே சாதாரண ஆனால் அவரவர் குடும்பங்களில் சாதனை செய்த மனிதர்கள். இந்தப் பிரபஞ்சத்தில் எங்களின் இடம் என்பது கடற்கரை மணற்றுகளைவிட பல்லாயிரம் மடங்கு சிறியது. அதற்குள் எதற்காக இந்த அடையாளச் சில்லெடுப்பு?
நான் கடைசியாகப் பாடசாலைக்குப் போய் பல வருடங்கள் ஆகிவிட்டன. போனது பாடசாலை முடிந்த ஒரு மாலை நேரத்தில். என் ஆசைக்கு நான் படித்த வகுப்பறைகளைச் சென்று பார்த்தேன். எனக்குத் தெரிந்த ஆசிரிய நண்பர் ஒருவர் வந்து நூலகத்தைத் திறந்துவிட்டார். பத்து நிமிடம் அதற்குள் அமர்ந்திருந்து ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டினேன். பழைய ஹண்டி நூலகக் கட்டடம் ஞாபகம் வந்தது. அது இப்போது இல்லை. வில்லியம் மண்டபம் இல்லை. அதிபர் பங்களா இல்லை. உப அதிபர் வீடும் உடைக்கப்பட்டது. எல்லாமே தொன்மையான கட்டடங்கள். Heritage buildings. ஜொனியன் ஜொனியன் என்று சொல்லிச் சொல்லி, தொன்மையான கட்டடங்கள் எல்லாவற்றையும் இடித்துவிட்டீர்கள். Restoration என்ற வஸ்துபற்றிக் கேள்வியேபடவில்லையா? இப்படியே போனால் இருநூறு வருசப் பாடசாலையையும் இடித்துவிடுவீர்கள்போலத்தான் தெரிகிறது.
நான் படித்த காலத்தில் இப்படிப் பழைய மாணவர்கள் பாடசாலையை இலையான் மொய்ப்பதுபோல மொய்த்ததில்லை. படிப்புத்தான் அப்போது பிரதானமாக இருந்தது. அதைத்தவிர்த்து சில extra curricular activities. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வினைத்திறன் பயிற்சியை ஒவ்வொரு வல்லுநர் வந்து சொல்லித்தந்ததாக ஞாபகம் இல்லை. எனக்குப் படிக்க நிறைய நேரம் இருந்தது. நூலகத்தில் வாசிக்க நேரம் கிடைத்தது. விளையாட நேரம் கிடைத்தது. சின்னச் சின்ன சந்தோசங்கள் நிறையவே இருந்தது. எல்லாவற்றையும்விட இன்றைக்கும் ஈகோ, எதிர்பார்ப்பு இல்லாத பல உயிர் நண்பர்களைப் பாடசாலை கொடுத்திருக்கிறது. நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் அல்லவா?
பாடசாலை மாணவர்களுக்கானது. அவர்களுடைய பதின்மங்களின் நினைவுகளுக்கானது.
Let's get the hell out of there and leave the school alone.

Comments

Popular posts from this blog

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .