Skip to main content

தமிழர் திருநாள் கொண்டாட்டம்



கடந்த சனியன்று விக்டோரிய மாநிலத்தில் தமிழ் அமைப்புகள் கூட்டுச்சேர்ந்து நடத்திய தமிழர் திருநாள் கொண்டாட்டம் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது.

பெருந்திருவிழாபோல வடிவமைக்கப்பட்ட அந்நாளில் வெளியரங்குகள், உள்ளரங்குகள் என பல தளங்களில் நிகழ்வுகள் இடம்பெற்றன. அரங்குகள் என்று பன்மையில் சொல்வதன் காரணம், வெளியரங்குகளிலேயே விளையாட்டுகளுக்கான மைதானம் ஒன்று, அங்காடிகளுக்கான ஒழுங்குகள், பொதுமேடை எனப் பலவும் இருந்தன. உள்ளரங்குகளிலும் இரண்டு மண்டபங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதற்கான திட்டமிடலே பிரமிக்கவைத்தது.


இந்த ஆண்டில் என்னை மிகக் கவர்ந்த அம்சம் என்னவென்றால், எல்லோருடைய ரசனைக்கும் தீனிபோடக்கூடிய வகையில் அரங்குகள் அமைந்ததுதான். சடுகுடு, கிளித்தட்டு என்று ஒரு பக்கம். பொங்கல் பொங்கி கும்மியடித்தபடி ஒரு கூட்டம். பவுன்சி காசிலில் விளையாடிய சிறுவர்கள் இன்னொரு பக்கம். ஏராளமான கடைகள். அதைவிட மேடையில் நிகழ்ச்சிகளும் உரைகளும். மாலையில் தேர்ந்த கீபோர்ட் இசைக்கலைஞரான கார்த்திக் தேவராஜுடன் சில பாடகர்கள் இணைந்து பெரும் இசை நிகழ்வையும் செய்தார்கள். உள்ளரங்குக்கு வந்தால் சிறுவர் கதைப்புத்தக நிரலி தொடர்பான ஒரு அங்காடி. கைவினைகள் அங்காடி. புகைப்படக் கண்காட்சி. NDIS அரங்கு. ஒரு பக்கம் டீக்கடை. இப்படி ஏராளமான விசயங்கள். இவையெல்லாம் என் கண்ணில் பட்டவை. நாள் முழுக்கச் சுற்றினாலும் தவறவிட்டுவிடக்கூடிய விசயங்கள் ஏராளம் இருந்தன என்பதுதான் உண்மை.
தனிப்பட்ட முறையில் எனக்கு என் ரசனைக்கு உகந்த விசயங்கள் இத்திருநாளில் அமைந்ததும் திருப்தியாக இருந்தது. இளவேனில் சஞ்சிகை வெளியீட்டின்போது நான் வெளியரங்கு மேடைக்கருகே நின்றிருந்தேன். அப்போது எமக்கு முதல் அரங்கேறிய நிகழ்ச்சியைக் காணும் சந்தர்ப்பம் அமைந்தது. அது ஒருவித அக்கபெலா(acapella)போன்ற நிகழ்வு. கீழைத்தேய மேலைத்தேய கலைஞர்கள் இணைந்த இசைக்குழு ஒன்று அந்நிகழ்வைச் செய்தது. அதன் பெயர் தெரியவில்லை. இரண்டு மிருதங்கக் கலைஞர்கள் குரலிசையோடு இணைந்து ஹார்மனி பாடுகையில் இதமாக இருந்தது. அந்த நிகழ்வு தரமாக அமைந்ததுக்கு முக்கிய காரணம் அந்த மேடையில் நின்ற கலைஞர்கள்தான். அவர்கள் தம் துறையில் தேர்ந்த பயிற்சியைக் கொண்டவர்கள். தாம் செய்யும் கலையை மிக ஆழமாக நேசிப்பவர்கள். திருவிழாக்கூட்டத்தில் தனித்திருக்கத் தெரிந்த கலைஞர்கள். நான் ஒரு அரை மணிநேரம்தான் அந்த நிகழ்வைப் பார்த்திருப்பேன். அந்த அரை மணிநேரத்தில் அந்த மேடை இரண்டடி மேலும் உயர்ந்தாற்போலத் தோன்றியது. தேர்ந்த கலைஞர்களுக்கு அந்தத் திறன் உண்டு. அவர்கள் தம்மையும் உயர்த்தி ரசிக்கும் நம்மையும் உயர்த்தும் வல்லமை படைத்தவர்கள். அந்த நிகழ்வு முடிந்ததும் இளவேனில் சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டது. கடந்த இரண்டு இதழ்களில் ஆக்கங்களை எழுதிய இரகமத்துல்லா இதழை வெளியிட்டு உரையாற்றினார். இளவேனிலின் தொடர்ச்சியான வாசகரான யமுனா அதனைப் பெற்றுக்கொண்டு தன் வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்தார். இந்நிகழ்வை நம் ஆசிரியர் குழுவைச்சேர்ந்த சரண்யா இரு மொழிகளிலும் தொகுத்து வழங்கினார்.
இத்தனை அமளிகள்கொண்ட தமிழர் திருநாளில் வெயிலாக இருக்கிறதே என்று உள்ளரங்குக்குள் நுழைந்தால் அங்கே கீழடி கண்காட்சி நடந்துகொண்டிருந்தது. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களின் புகைப்படங்களோடு அவற்றின் விளக்கங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பெருந்திரையில் கீழடி பற்றிய ஒரு காணொளி ஓடிக்கொண்டிருந்தது. அரை மணிநேரத்துக்கு ஒரு தடவை அ. முத்துக்கிருஷ்ணன் கீழடிபற்றி விளக்க உரை கொடுத்துக்கொண்டிருந்தார். சங்க இலக்கியம் பறைகின்ற வாழ்வின் சாட்சியமாக கீழடி திகழ்கிறது என்பதை உதாரணங்களுடன் சொல்லச்சொல்ல கூட்டம் வாய் விரிந்து கேட்டுக்கொண்டிருந்தது. முத்துக்கிருஷ்ணன் மொத்தமாக பன்னிரண்டு உரைகளை ஒரே நாளில் செய்திருக்கிறார். மனுசனுக்குத் தொண்டை வறண்டுவிட்டது. நிச்சயம் அவ்வுரைகளைக் கேட்டவர் சிலர் வீடு சென்று கீழடி பற்றியும் சங்க வாழ்வு பற்றியும் தேடியிருப்பர். ஒரு சிலர் தமிழ்நாடு செல்லும்போது கீழடிக்கும் பயணம் செய்யக்கூடும். இந்நாள் கொடுத்த பெரும் பயன்களில் ஒன்று அவ்வரங்கு.
இன்வர்லொக் கிராமம் என்று நினைக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்னர் எதேச்சையாக அக்கிராமத்தின் வழியே கடந்து செல்லும்போது ஒரு தற்காலிக சந்தை தென்பட்டது. கிராம மக்கள் இணைந்து அவ்வப்போது நடத்துகின்ற கூட்டுச் சந்தை அது. அங்கே ஒரு பழைய புத்தகங்களை விற்கும் அங்காடி இருந்தது. சில வயதானவர்கள் இணைந்து அக்கடையை அமைத்திருந்தனர். ஒரு சின்ன ஒலிவாங்கியைப் பிடித்தபடி ஒரு தாத்தா அவ்வப்போது கூவிக்கொண்டிருந்தார். எங்கள் புத்தகக் கடைக்கு வந்து பாருங்கள். பன்னிரண்டு மணிக்கு ஜேன் ஒஸ்டினின் லேடி ஸூசன் கதையை நாங்கள் சொல்லப்போகிறோம். வாருங்கள். ரசியுங்கள். இப்படி ஐந்து நிமிடத்துக்கொருமுறை அவர் கூவுவார். கூட்டமும் நேரத்தைக் குறித்துவைத்துக்கொண்டு சரியாக பன்னிரண்டு மணிக்கு அந்த அங்காடி முன்னே கூடிக் கதையைக் கேட்டது. அப்புறம் அங்கிருந்த புத்தகங்களை ஆராய்ந்தது. சிலர் புத்தகங்களை வாங்கிப்போனார்கள். அன்றுமுதல் அந்த அங்காடி மனக்கண்ணில் அப்படியே ஒட்டிக்கொண்டுவிட்டது.





தமிழர் திருநாள் ஒரு கொண்டாட்டம்போல நிகழ இருப்பதை அறிந்ததும் இப்படியொரு அங்காடியை செய்யலாமா என்று அமைப்பாளர்களிடம் கேட்டேன். அவர்களும் சம்மதம் சொல்ல, உடனேயே மெல்பேர்ன் வாசகர் வட்டத்திடம் இதுபற்றிக் கலந்துரையாடினேன். அவர்களுக்கும் ஐடியா பிடித்துப்போக, துரித கதியில் அங்காடியை ஒழுங்கு செய்தோம். முருகபூபதி அங்கிள் தானும் தன்னுடைய புத்தகத் தொகுப்பைக் கொண்டுவருகிறேன் என்று இருநூறு கிலோமீற்றர்கள் காரில் பயணம் செய்து வந்து சேர்ந்தார். வாசகர் வட்டத்தில் நாம் வாசித்த புத்தகங்களை வரிசைப்படுத்தினோம். நம்மிடம் மேலதிகமாக இருக்கும் புத்தகங்களை விற்கலாம் என்றும் முடிவு செய்தோம். நாம் இப்படித் திட்டமிடுகையில் உள்ளக அரங்குக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட மது எமக்கு அழைப்பு எடுத்து என்னெல்லாம் உதவிகள் வேண்டும் என்று கேட்டார். அமைதியான ஒரு மூலையில் இடம் ஒதுக்கவேண்டும் என்றோம். ஒதுக்கினார். ஒலிவாங்கி வேண்டும் என்றோம். கொடுத்தார். வைபை வேண்டும் என்றோம். கொடுத்தார். அவ்வப்போது அறிவிப்பு செய்யவேணும் என்றோம். செய்தார். வாசகர் வட்டத்தினர் அனைவருக்கும் தனியாக வீடு கட்டிக்கொடுங்கள் என்று கேட்டிருந்தாலும் செய்திருப்பார். அவர் இதனை நமக்கு மட்டுமல்ல. அங்காடிகளை அமைத்த அனைவருக்கும் செய்துகொடுத்தார். மனுசி ஒரு கலக்கு கலக்கிட்டுது. சுத்திப்போடோணும்.
அரங்கிலே அந்த இன்வர்லொக் சந்தையில் செய்ததுபோல கதைகளைச் சொல்வது என்று முடிவாயிற்று. ஒலிவாங்கியில் கூவோ கூவென்று கூவினோம். அந்தக் காணொளியை பின்னர் பகிர்கிறேன். அந்தக் கூவு கூவினதுக்குப் பலன் கிடைத்தது. ஆச்சரியமாக, பலர் கதை சொல்லும் நிமிடத்தில் கண்காட்சியில் வந்து கூடினார்கள். முதல் சிறுகதையை பத்து வயது சிறுவனான அரன் சொன்னான். அவனே இளவேனில் சஞ்சிகைக்காக ஆங்கிலத்தில் எழுதிய சிறுகதையை தமிழில் மாற்றி உரையாற்றினான். ஒரு மணி நேரம் கழித்து திவா என்ற பதின்மத்து சிறுவன் தன்னுடைய கதை ஒன்றைப் பகிர்ந்தான். அதன்பிறகு ஜெயமோகனின் ‘அறம்’ சிறுகதையை அசோக் சொன்னார். அம்பையினுடைய ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ சிறுகதையை கலா அக்கா பகிர்ந்தார். பிரபஞ்சனின் ‘பிரும்மம்’ சிறுகதையை சாந்தி அக்கா பகிர்ந்தார். இதைவிட தாட்சாயிணியின் ஒரு சிறுகதை. இரகமத்துல்லாவின் சிறுகதை. லாகிரியின் ‘the boundary’ என்ற சிறுகதை எனப் பல கதைகள் எம் லிஸ்டில் இருந்தன. நேரம் நான்கைத் தாண்டிவிட்டது. கால்கள் வலிக்க ஆரம்பித்தன. இதற்குமேல் தாங்கமுடியாது என்று கடையை மூடிவிட்டோம்.
சங்க நிலத்தின் இந்திர விழாபோல மெல்பேர்ன் நகரில் ஒரு பெருங்கொண்டாட்டம். தமிழ் அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அதை நடத்துகின்றன. எல்லோருக்கும் அவரவர் ரசனைக்குகந்த விசயங்கள் அங்கு இருக்கின்றன. ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம். அந்த அமளிக்குள் ஒரு புத்தகக் கண்காட்சி. அதிலே பிரபஞ்சனின் பிரும்மம் பேசப்படுகிறது என்பது எவ்வளவு பெரிய உவகையைக் கொடுக்கக்கூடியது. அக்கதையில், செழித்து வளர்ந்து பயன் கொடுத்த ஒரு முருங்கை மரம் ஈற்றில் முறிந்து விழுந்துவிடுகிறது. அது அழிந்துவிட்டது என்று நினைக்கும் தறுவாயில் கதை முடியும்போது அதன் அடியிலிருந்து சிறு துளிர் முளைவிட்டிருக்கும்.
சிறுவர்கள் அங்குமிங்கும் ஓடித்திரிய, முன்னாலே இருபது பேர் கூடியிருக்க, கண்காட்சிக் கூடத்தில் புத்தகங்களுக்கு நடுவே நின்று, சாந்தி அக்கா பிரபஞ்சனின் பிரும்மத்தை விளக்கும்போது எனக்கு அந்த முருங்கையின் துளிர் மனம் முழுதும் வியாபித்து வளர ஆரம்பித்தது.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக