Skip to main content

ஊரோச்சம் : வட்டக்கச்சி 1

ADseventeen ROAD (1)

நன்றாக இருட்டி விட்டிருந்தது. படகிலே ஒரு நாற்பது ஐம்பது பேர் இருந்திருப்போம். எல்லோரும் கடல் தண்ணீர் தெறிக்காவண்ணம் துவாயையோ சாரத்தையோ சுற்றிக்கொண்டு அமர்ந்திருந்தோம். ஒரு சிலர் ஒல்லிக்கோம்பைகளை இடுப்பில் கட்டியிருந்தனர். சிலர் இடுப்பில் தேங்காய் மட்டைகள். சந்நிதியானுக்கும் அம்மாளுக்கும் அவசர நேர்த்திகள் வைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. குழந்தைகள் அழ ஆரம்பித்திருந்தன. சிறுவர்கள் பாணும் வாழைப்பழமும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். பெரியவர்கள் எவருமே பேசவில்லை.  

அக்காவும் நானும் அம்மாவின் கைகளை இறுக்கப்பற்றியிருந்தோம். அல்லது அம்மாதான் எங்கள் கைகளை பற்றியிருந்தாரா என்று தெரியவில்லை. எம்மிடம் பேசுவதற்கு எதுவுமே இருக்கவில்லை. வாயைத் திறக்கும்போதெல்லாம் தாடைகள் தம்பாட்டுக்கு அடித்துக்கொண்டன. பயத்தாலும் மார்கழி கடல்காற்றின் குளிராலும் உடல் நடுங்கியது.   படகின் ஓரமாக கட்டப்பட்டிருந்த டயர்களில் பட்டுத்தெறிக்கும் கடலலைகளின் சத்தம்மட்டும் அவ்வப்போது உப்புத்தண்ணியோடு காதுகளில் விழுந்துகொண்டிருந்தது.

எம் படகுக்குப்பின்னே இரண்டு படகுகள் கட்டி இழுக்கப்பட்டு வந்தன. ஒரு படகு முழுதும் சைக்கிள்களும் சில மோட்டார் சைக்கிள்களும். மற்றையதில் பயணிகளின் சாமான் சக்கட்டுகள் குவிக்கப்பட்டு படங்கு ஒன்றினால் மூடிக்கட்டப்பட்டிருந்தது. எங்களது ஒரு ஒரேன்ஜ் கலர் சூட்கேஸ். இருட்டில் தெரியவில்லை. ஏற்றும்போது அதனை ஒழுங்காக அடுக்காமல் சும்மா மேலே வைத்தே கட்டினார்கள். புறப்படும்போதும் ஒரேன்ஞ் படங்கினூடாக பாவமாய் எட்டிப்பார்த்தது. படகு ஆடிய ஆட்டத்தில் அது கடலுக்குள் சரிந்து விழுந்துவிடுமோ என்று யோசனையாயிருந்தது. அதற்குள்தான் என் சொத்து அத்தனையும் இருக்கிறது. சில் புத்தகங்கள். உடுப்புகள். டபிள் கொம்பாஸ் பெட்டி. டெனிஸ் போல். பிக் மட்ச் தொப்பி. செஸ் போர்ட்…  சித்தி வாங்கித்தந்த சந்தனக்கட்டையில் செய்த ஒரு குட்டிப்பிள்ளையார். ஒவ்வொரு அலையின்போதும் படகு ஏறி விழுகையில் பிள்ளையாரும் கடலுக்குள் போயிடுவாரோ என்கின்ற கவலை எனக்கு.

அந்த சூட்கேஸ் அப்பா சவூதியிலிருந்து கொண்டுவந்தது. அது முதன்முதலில் வீட்டுக்கு வந்தபோது அடித்துப்பிடித்து திறந்தது நான்தான். திறந்தபோது உள்ளிருந்த அத்தர் போத்தில் உடைந்துகிடந்ததில் சவூதி வாசம் வீடெங்கும் பக்கென்று அடித்தது. அது செய்த பாவமோ என்னவோ,  இத்தனைக்கும் சவுதி கடையிலே யாராவது வெள்ளைக்காரனால் வாங்கப்பட்டிருந்தால் பத்திரமாக இன்னமும் விமானப்பயணங்கள் செய்துகொண்டிருக்கும். அப்பா வாங்கியதால் எம்மோடு சேர்ந்து கிளாலியில் PP பைகளோடு பயணம் செய்கிறது. இடம்பெயர்வு அதற்கு புதிதல்ல. இந்தியன் ஆர்மி டைம் நல்லூர் கோயிலிலே தங்கியிருந்தபோதும் கூடவந்தது. இந்து மகளிர் பாடசாலை முகாமில் தங்கியிருந்தபோதும் கூடவந்தது. மானிப்பாய்க்கு இடம்பெயர்ந்தபோதும், தாவடிக்கு இடம்பெயர்ந்தபோதும் வந்தது. சாவகச்சேரிக்கு சைக்கிள் உருட்டிக்கொண்டுபோனபோது என் காரியரில் இருந்ததும் அந்த சூட்கேஸ்தான். அதன் வழுவழுப்பான மேற்பரப்பில் நைலோன் கயிறு பிடிமானமில்லாமல் நழுவி அடிக்கடி சரிந்து தொந்தரவு கொடுக்கும். பின்னர் சாவகச்சேரியிலிருந்து பளை. இடக்கையால் அதைப்பிடித்துக்கொண்டு ஒரு கையாலேயே ஹாண்டில் பிடித்து சைக்கில் ஓடவேண்டிவந்தது. இப்போது வன்னிக்குப் படகுப்பயணம். அது இனி வட்டக்கச்சி, மாயவனூர், ஒலிமடு, நெலுக்குளம், லங்காமுடித்த, யாழ்ப்பாணம் என்று இன்னும் பல பயணங்களை மேற்கொண்டு இறுதியாக எங்கள் சாமியறைப்பரணிலே ஓய்வெடுக்கப்போகிறது என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. எவ்வளவுதான் அது எம்மோடு ஊரடிபட்டாலும் எப்போது அந்த சூட்கேசை திறந்தாலும் அந்த அத்தர் வாசம் பக்கென்று மூக்கில் அடிக்கும். இடையில் எத்தனையோ பூச்சி போளைகளை போட்டிருப்போம். எலி பீச்சியிருக்கும். கரப்பான் ஓடியிருக்கும். அந்த அத்தர் வாசம் மட்டும் விலகவேயில்லை. சில வாசனைகளை நினைவுகள்போல. நாற்றமோ நறுமணமோ, எப்போதுமே எம்மை விட்டு அகலாமலேயே இருக்கும்.  ஒவ்வொருமுறையும் அந்த வாசம் முகத்தில் அடிக்கும்போதும் அத்தனை நினைவுகளையும் கூடவே சேர்த்து அடிக்கும். வெறுமனே யோசித்தாலே வாசனை வரும்.  எப்படி?

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறியபோது மிரட்சியாய் இருந்தது. எங்கே போவது? எவரிடம் போவது? எங்களுக்கு யாரையும் தெரியாது. சாவகச்சேரி போனபோது அது நிரம்பி வழிந்தது. தங்குவதற்கு இடமில்லை. எங்கள் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவி சந்திரா அக்கா பளையைச்சேர்ந்தவர். உடனே பளைக்குப் போகலாம் என்று முடிவெடுத்தோம். மீண்டும் சைக்கிள் பயணம். பளை எந்தத்திசை என்றே தெரியாது. எவ்வளவுதூரம் என்றும் தெரியாது. சைக்கிள் மிதித்துக்கொண்டேயிருக்கிறோம். தூக்கம், பசி. அடுத்தது என்ன என்கின்ற ஆயாசம். சைக்கிள் நகருவதாயில்லை. ஓரிரவு முழுதும் சைக்கிள் உருட்டிய அயர்ச்சியை விட ஆறுமடங்கு அயர்ச்சியை ஆசைப்பிள்ளை ஏற்றம் கொடுத்தது. மூன்றரை மணிநேர சைக்கிள் பயணம். பளையில் போயிறங்கியவுடன், நமக்காகவே காத்திருந்ததுபோல சந்திரா அக்கா வீட்டுக்காரர் சோறும் கும்பளா மீன் குழம்பும் சமைத்துத்தந்தார்கள். ருசி. அதற்காகவே இன்னொருமுறை சைக்கிள் மிதிக்கலாம் எனுமளவுக்கு அவ்வளவு ருசி. 

பளை வாழ்வு அதிக நாட்கள் நீடிக்கவில்லை. ஆர்மி அனேகமாக இயக்கச்சிப்பக்கமிருந்தே முன்னேறுவான் என்று பத்திரிகைகள் ஆரூடம் கூறின. பெருத்த சண்டை வரப்போகிறது, எல்லோரும் வன்னிக்கு நகருங்கள் என்றார்கள். இயக்கமே இலவசமாக கிளாலிப்பயணங்களை ஒழுங்கு செய்திருந்தது. ஒருமாதம் தங்கியிருந்திருக்கமாட்டோம். ஆர்மி வரப்போகிறான் என்பதை அறிந்ததும் பயத்தில் அக்கா தவிக்கத்தொடங்கிவிட்டார். 

வன்னிக்குப் போவதென்று தீர்மானித்தோம்.   

அமாவாசை இரவை பயணத்துக்கு தேர்ந்தெடுத்திருந்தோம். பளையிலிருந்து கிளாலி அதிகம் தொலைவில்லை. சைக்கிளிலேயே போகலாம். சந்திரா அக்காவின் மொத்தக்குடும்பமும் கிளாலிக்கரைக்கு வழியனுப்பவந்திருந்தது. படகுத்துறை மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தது. யாழ்ப்பாணம் கொஞ்சம் கொஞ்சமாக படகேறிக்கொண்டிருந்தது. வெகுதூரத்தே நேவி பராலைட் அடித்திருந்தான். கிளாலிப்பயணங்களின்போது பலதடவைகள்  நேவிக்காரன் கடனீரேரிக்குள்ளே ஊடுருவி படகுகளை இடை நிறுத்தி பொதுமக்களை சுட்டுக்கொன்ற சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. வாள் வெட்டும் நடந்திருந்தது. எல்லாமே அடுத்தநாள் பத்திரிகையில் முதல்பக்க செய்தியாக சம்பவம் வரும். இறந்தவர்களின் பெயர் விபரம்கூட போடமாட்டார்கள். இரண்டு நாட்களுக்கு படகுச்சேவை இடை நிறுத்தப்படும். அவ்வளவுதான் பின்னர் மீண்டும் படகுப்பயணம் தொடங்கிவிடும்.

ஆனால் நாம் பயணம் செய்த சமயத்தில் கடல்புலிகள் ரோந்துப்பாதுகாப்பு கொடுப்பதாக சொல்லியிருந்தார்கள். ஆக மிஞ்சிப்போனால் இடியன்கள் தயாராக இருப்பதாகவும் சொன்னார்கள்.  இடியன்கள் என்றால் கரும்புலிப்படகுகள்.  நிலைமை கட்டுமீறிப்போனால் வெடிமருந்துப்படகோடு போய் நேவிக்கப்பலை முட்டி வெடிக்கவைப்பார்கள். டோறாவோ அல்லது சிறுவிசைப்படகோ மூழ்கடிக்கப்படும். கூடவே ஐந்து பத்து நேவிக்காரரும் மூழ்கடிக்கப்படுவர். அதே அடுத்தநாள் பத்திரிகையில் வெற்றிச்செய்தி. கண்ணீர் அஞ்சலி. லவுட்ஸ்பீக்கர்போட்டு சோககீதம். இறந்தது யாராவது தளபதிகளாக இருந்தாலோ, அல்லது டோறாவோடு ஒரு பெரிய கப்பலும் சேர்ந்து கவிழ்ந்திருந்தாலோ இரண்டே நாளில் புதுவையின் வரிகளில் பாடலும் வெளிவரும். மேஜர் நிலவன். கப்டன் மதன். இப்படி கிளாலியில் மரணமடைந்தவர்கள். இருவருமே மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள். மட்டக்களப்பில் வடமுனை, கள்ளிச்சை என்ற ஊருக்குப்போய் கந்தசாமி இராஜேந்திரனை தெரியுமா என்று இப்போது கேட்டுப்பார்த்தால் எவருக்கும் தெரிந்திருக்காது. எனக்கும் தெரியாது. படகில் ஏறியவர்களுக்கும் தெரியாது. இன்றையதேதியில் இராஜேந்திரனின் தாய்க்கும் சகோதரங்களுக்கும் மாத்திரமே அவர் முகம் ஞாபகம் இருக்கலாம். இறக்கும்போது வயதும் ஆவருக்கு இருபத்திச்சொச்சம்தான். எதைப்பற்றியும் யோசிக்காமல் கடற்படையின் நீரூந்து விசைப்படகை மோதும் அக்கணப்பொழுதில் கந்தசாமி இராஜேந்திரன் மனதில் என்னவெல்லாம் ஓடியிருக்கும்? அவர் ஏன் இன்றில்லை? அவரை சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்த்தால் ஒன்றேயொன்றுமட்டும் சொல்லவேண்டும். 

“நீங்களெல்லாம் உயிரைக்கொடுக்குமளவுக்கு இங்கு எவனும் உத்தமனில்லை அண்ணை”

படகுகள் புறப்பட்டன.

எல்லோரிடத்திலும் அக்கரையைச் சேரும் எண்ணம் மட்டுமே வலுத்திருந்தது. இன்னும் எவ்வளவு தூரமிருக்கிறதென்று தெரியவில்லை. படகு நகர்வதாயும் தெரியவில்லை. எல்லோரும் மணிக்கூட்டை அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தனர். அங்கே நேரம்தான் தூரம். நேரம் சுருங்கிவிட்டால் தூரமும் சுருங்கும். நீண்டுவிட்டால் தூரமும் நீளும். ஒவ்வொரு செக்கனும் அக்கரையை அண்மிப்பதற்கான சமிக்ஞை. ஆனால் மணிக்கூடு அசையாமல் மண்டியிட்டிருந்தது. ஒவ்வொரு செக்கனுக்குமிடையில் ஒரு மணி நேர இடைவெளியிருந்தது. ஐந்தாறு மணிநேரம் சமாளித்துவிட்டால் அக்கரையை அடைந்துவிடலாம். நேரத்தைக் கடத்தவேண்டும். ஐந்தாறு நீண்ட மணித்தியாலங்களை  எப்படிக்கடத்துவது?

வானம் முழுதும் நட்சத்திரங்கள் இறைந்து கிடந்தன.

எல்லாமே நம்மைப்பார்த்துச் நமுட்டுச்சிரிப்பு சிரித்தன.  இந்தப் பிரபஞ்சமே பரந்து விரிந்து தேடலுக்காக தன்னை திறந்துவிட்டிருக்கிறது. நீங்களோ கால்தூசு பெறாத விடயங்களுக்காக அலைந்துகொண்டிருக்கிறீர்கள் என்று நக்கல் அடித்தன. வீட்டு முற்றத்தில் சாப்பிட்டுவிட்டு கதிரையில் உட்கார்ந்து அண்ணாந்து பார்க்கும்போது தெரிந்த அதே நட்சத்திரங்கள்தான் கிளாலிக்கடலிலும் தெரிந்தன. நாளைக்கு வன்னியிலும் இவையே தெரியும். மட்டக்களப்பிலும் அதுதான். கொழும்பிலும் அதுதான். எந்தநாட்டிலும் இதே நட்சத்திரங்கள்தான். எங்கே ஓடினாலும் இவற்றிடமிருந்துமட்டும் தப்ப முடிவதில்லை. எட்டவேமுடியாத பல்லாயிரக்கணக்கான ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்கள். அவ்வளவு தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் பார்வையிலிருந்தே எம்மால் தப்பமுடியவில்லை. இந்நிலையில் யாருக்காக தப்பி எங்கே ஓடுவது? ஏன் ஓடவேண்டும்? எப்படித்தப்புவது?

கண்ணயர்ந்து தூங்கிவிட்டேன்.

படகுகள் வன்னிப்பெருநிலப்பரப்பின் நல்லூர்க்கரையை அண்மித்தபோது காலை நான்கு மணி தாண்டியிருந்தது. திரும்பி குடாநாட்டுப்பக்கம் பார்த்தால் வெறும் கடலே தெரிந்தது. நல்லூரிலிருந்து ஒரு டிரக்டரில் பெரிய பரந்தனுக்கு கூட்டிப்போனார்கள். அங்கிருந்து வட்டக்கச்சிக்குப் பயணம். அத்தனை சூட்கேஸ், பைகளோடு போவதற்கு ஒரு பறணை மொரிஸ் மைனர் வாடகைக்கு சிக்கியது. அதன் ஒரு கதவு சரியாகப் பூட்டுப்படாது. ஓடும்போது கைகளால் கதவை இழுத்துப் பிடித்துக்கொண்டிருக்கவேண்டும். எம்மோடு சேர்த்து கிளிநொச்சியில் இறங்கவென இன்னும் நான்குபேரை டக்சிக்காரர் சவாரி பிடித்திருந்தார். முன்னுக்கு, டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் நெருக்கி அடித்துக்கொண்டு இருவர். பின்னுக்கு ஐந்துபேர். டக்சிக்கு மேலே சூட்கேசுகள் தொடர்மாடி கட்டியிருந்தன. டிக்கி கதவு ஆவென்று திறந்துவைக்கப்பட்டு சைக்கிள்கள் கயிற்றினால் இழுத்துக்கட்டப்பட்டிருந்தன. டக்சி புறப்படவும் கிறவல் புழுதி முகம் முழுதும் சூடு மிதிக்கத்தொடங்கியது. நேரம் காலை ஆறு மணி.   

ஒவ்வொரு சந்திகளிலும் கடை போர்டுகளில் வட்டக்கச்சியை தேட ஆரம்பித்தேன். கரடிப்போக்குச்சந்தி தாண்டுகையில் அம்மாவிடம் வட்டக்கச்சி வந்திட்டுதா என்று பத்தாவது தடவையாக கேட்டேன். “சத்தம்போடாம இரு”  என்ற அதே பதில். அம்மாவுக்கும் அதே கேள்வியே மனதில் இருந்திருக்கலாம். அக்கா எதுவுமே பேசாமல் யன்னலுக்கு வெளியே வெறித்துப்பார்த்தபடி அமர்ந்திருந்தார். எங்கள் எவருக்கும் வட்டக்கச்சி எந்தத்திசையில் இருக்கிறதென்றுகூடத் தெரியாது. போகின்ற வீட்டுக்காரரையும் தெரியாது. அப்பாவின் நண்பரான சுந்தரம்பிள்ளை அங்கிள் ஆக்கள் வட்டக்கச்சிக்கு இடம்பெயர்ந்திருந்தார்கள். அவர்களின் உறவினர்கள் வட்டக்கச்சியில் வசிப்பவர்கள். அவ்வளவுதான் தொடுப்பு. அவர்கள் யார், எப்படிப்பட்டவர்கள்? முன் பின் தெரியாதவர்களை வீட்டுக்குள் எடுப்பார்களா? குறைந்தபட்சம் ஒரு பிளேன்ரீயாவது கிடைக்குமா? இடமில்லை என்று சொன்னால் வேறு எங்கு போய் ஒதுக்குவது? எதுவுமே தெரியாது.  

“நீங்கள் போயிறங்கேக்க அவையள் இடமில்லை எண்டு சொல்லியிருந்தா என்ன செய்திருப்பீங்கள்? எந்த நம்பிக்கையில் அவ்வளவுதூரம் வெளிக்கிட்டுப் போனீங்கள்?” 

பக்கத்திலிருந்து மனைவி கேட்டபோது உடன் பதில் சொல்ல முடியாமல் விழித்தேன். நாங்கள் பயணித்துக்கொண்டிருந்தது மொரிஸ் மைனர் இல்லை பஸ் என்பதை உணர சிறிது நேரம் பிடித்தது. இவ்வளவுநேரமும் அவளுக்கு பழைய கதை சொல்லிக்கொண்டிருந்திருக்கிறேன். இருபது வருடங்கள் ஆகிவிட்டன. மொரிஸ் மைனர் புழுதி இன்னமும் முகத்தில் அடித்தது. இந்த வட்டக்கச்சிப்பயணம் எனக்கொரு காலப்பயணம். என் பயணங்கள் எல்லாமே காலப்பயணங்கள்தான். முன்னரெல்லாம் மணித்தியாலக்கணக்கில் இடம்பெறும் பயணங்கள் இப்போது வருடங்களில் நடைபெறுகிறது. இருபது வருடங்களை இருபது நிமிடங்களில் எட்டிப்பார்த்துவிட்டு வரமுடிகிறது. காலத்தை வளைத்து இரண்டு காலங்களிலும் ஒருசேர வாழமுடிகிறது.

“சொல்லுங்கோ .. வேற பிளான் ஏதும் வச்சிருந்தனீங்களா? வேற யாரையும் தெரியுமா?”

யோசித்துப்பார்த்தேன். அவர்கள் இடமில்லை என்று சொல்லியிருந்தால் என்ன செய்திருப்போம்?

"அந்த வட்டக்கச்சி குடும்பத்தை காணும்வரைக்கும் தொடர்ந்து இடம்பெயர்ந்துகொண்டேயிருந்திருப்போம்"

மனைவி சிரித்தபடியே மீண்டும் யன்னல்வழியே பராக்குப்பார்க்கத்தொடங்கினாள். பஸ் கிளிநொச்சியை நெருங்கியிருந்தது. வைப்பகம், அரசியல் பணிமனை என்று இல்லாத மைல்கற்களை கவனமாக தேடிக்கண்டறிந்து காக்கா கடைச்சந்தியை ஞாபகப்படுத்தி இறங்கினோம். 

வட்டக்கச்சி கிளிநொச்சியிலிருந்து கிழக்கே ஒருமணிநேர சைக்கிள் பயணத்தில் இருக்கிறது. எனக்கு ஊர்களின் தூரம்கூட கால அளவிடையிலேயே தெரியும். தின்னவேலி வீட்டிலிருந்து சென்ஜோன்ஸ் கல்லூரிக்கு இருபது நிமிட சைக்கிள் ஓட்டம். பளையிலிருந்து சாவகச்சேரி மூன்று மணித்தியால சைக்கிள் ஓட்டம். கிளாலி நல்லூர் படகுப்பயணம் ஆறு மணித்தியாலம். யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி பன்னிரண்டு மணிநேர நடைப்பயணம்.  

vaddakachchi 

"வட்டக்கச்சிக்கு ஓட்டோ ஐநூறு ரூபாதான், கூடக்குடுத்திடாதயும்" என்று சுந்தரம்பிள்ளை அங்கிள் சொல்லியனுப்பியிருந்தார். காக்காகடைச் சந்தியில் ஒரேயொரு ஓட்டோவே நின்றது. சிவிக் செண்டருக்கு எவ்வளவு எடுப்பீங்கள் என்று கேட்டேன். ஓட்டோக்காரர் நானூறு ரூபா கொடுங்கள் என்றார். சிரித்துக்கொண்டே ஓட்டோவுக்குள் ஏறினோம். இந்த மண்ணும் மனிதர்களும் மனிதமும் மரணப்படுக்கையிலும் மாறாதவை.  

கிறவல்பாதை தார் ரோட்டாகியிருந்தது. ஓட்டோ அதன் சாரதிபோலவே நிதானமாக ஓடியது. கிளிநொச்சிக்குளம் தாண்டிப்போய்க்கொண்டிருந்தோம். கிளிநொச்சி வட்டக்கச்சி வீதியை நான் இம்மி, இம்மியாக, இம்மை மறுமையில்லாமல் அளந்திருக்கிறேன்.  ஒரு வாரத்தில் ஏழு நாட்களும் வட்டக்கச்சியிலிருந்து கிளிநொச்சி சென்று திரும்பியிருக்கிறேன்.

தொண்ணூற்றைந்தாம் ஆண்டு கிளிநொச்சி கருணா நிலையத்தில் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து தங்கியிருந்தன. அனேகமானவை சென்ஜோன்ஸ், சுண்டுக்குளி பாடசாலைகளின் ஆசிரியர் குடும்பங்கள். ஏனையவர்கள் அரியாலையைச் சேர்ந்த, வீட்டுக்குள்ளும் செருப்பு போட்டு நடக்கும் கொஞ்சம் பொஷ்ஷான அங்கிலிக்கன் கிறிஸ்தவ குடும்பத்தவர்கள். அரியாலை அங்கிலிக்கன் கிறிஸ்தவ குடும்பங்களின் பெண்களுக்கு வடிவை பரிசுத்தர் வகை தொகையில்லாமல் அள்ளிக்கொடுத்துவிட்டார். வடிவென்றால் அப்படியொரு வடிவு. சிவலையாக, நிமிர்ந்து நடப்பதால் கொஞ்சம் உயரமாக, யாழ்ப்பாண ரேஞ்சுக்கு லிபரலான உடுப்புப்போட்டு, எண்ணெயைத் தப்புதப்பென்று தப்பாமல் சலூனிலேபோய் ஹெயார்ஸ்டைல் செய்து, கண்ணுக்கு ஐ-புரோ, மிருதுவான லிப்ஸ்டிக், நெயில் பொலிஷ் என்று அந்த கதீடிறல் தேவதைகள் நடந்துபோகும்போது ஜொலிக்கும் திமிர் இருக்கிறதே. இயற்கையாலா, செல்வச்செழிப்பாலா என்று தெரியாது. அவர்களின் திமிர் கூட அழகாகவிருக்கும்.

ஆனால் அவர்களோடு பேசிப்பழகும் தைரியம் எனக்கு எப்போதும் வந்ததில்லை. ரேஞ்சும் இல்லை. என் பொக்கட்டில் காற்றடிக்க ஒரு ரூபாய் மாத்திரம் இருக்கும். அவர்களோ றிக்கோவில் ஐஸ்கிறீம் குடிப்பவர்கள். நமக்கெல்லாம் சான்சே இல்லை. சைக்கிளில் போகையில், காசுகூடின பாசையூர் மிதிவெடியை கண்ணாடிப்பெட்டிக்குள்ளால் பார்த்து ஏப்பம் விடுவதுபோல, அப்படியே அவர்களுக்குத் தெரியாமல் பின்னாலேயே மேய்த்துக்கொண்டுபோய் வீடுவரைக்கும் கொண்டுபோய் விட்டுவிட்டு பின்னர் எங்கள்வீட்டுக்குப்போய் செம்புத்தண்ணி குடிப்பதே நாம் செய்யக்கூடிய அதிகூடிய ரொமான்ஸ்!

இந்தநிலையில்தான் கருணா நிலையத்தில் சென்ஜோன்ஸ் கல்லூரியும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியும் இணைந்து செயற்படப்போவதாக அறிவித்தல் வருகிறது. ஒரு மரத்திலே கரும்பலகையை அறைந்துவிட்டு முன்னே நான்கு பனஞ்சிலாகை வாங்குகள் அடித்தால் அது பாடசாலை வகுப்பு.  இரண்டு பாடசாலை ஆசிரியர்களும் படிப்பிப்பார்கள். மாணவர்களும் ஒன்றாகச்சேர்ந்து அமருவார்கள். “வட்டக்கச்சியிலிருந்து கிளிநொச்சி கனதூரம். நீ அக்காவிடமே கேட்டுப்படி” என்று அம்மா சொல்லிப்பார்த்தார். சுண்டுக்குளியோடு சேர்ந்து படிப்பதென்றால், அதுவும் ஒரே வாங்கில் ஆறு இஞ்சி இடைவெளியில் ஒரு அரியாலை அங்கிலிக்கன் கிளி அமருமென்றால், கிளிநொச்சியென்ன, மல்லாவிக்கே ஒவ்வொருநாளும் சைக்கிள் ஓடிப்போக நான் தயாராகவிருந்தேன்.   

இடம்பெயர்ந்து இருந்தாலும் சுண்டுக்குளிக்காரிகளின் செடிலும் சிலுப்பும் கொஞ்சம்கூட குறையாமல் இருந்தது.  எனக்கும் இலுப்பைப்பூ சர்க்கரைபோல ஓரிரு கணக்குகள் வகுப்பில் சரிவந்ததால் சுண்டுக்குளியின் சில சிட்டுக்குருவிகள் என்னையும் பரா லைட்டு அடித்துப்பார்த்தன. அல்லது நானே அப்படி கற்பனை செய்தேனோ தெரியாது. பள்ளிக்கூடத்துக்கு சீருடை அணியத்தேவையில்லை. என்னிடம் இருந்த உடுப்புகள் எல்லாமே  இடம்பெயர்வோடு இழுபட்டு பழுதாகிப்போயிருந்தன. அம்மாவிடம் அழுது குழறி ஒரு ஜீன்ஸ் தைத்தேன். பிரபுதேவா ஜீன்ஸ். இடுப்பில் பாவாடைபோல பறந்து காலடியில் ஒடுங்கும் ஜீன்ஸ். காலடியில் மடிப்பு வைத்து தைக்கப்பட்டிருக்கும். இடுப்பு பெல்ட்டுக்கு அஞ்சு இஞ்சி அகலம் விடுவார்கள். ஆனால் கட்டும் பெல்ட் மிகச்சிறிதாக அரை இஞ்சிதான் அகலம் வரும். இடதுபக்கம் எட்டு, வலதுபக்கம் எட்டு என்று மொத்தம் பதினாறு பிளீட்டுகள். ஷேர்ட் "டாங் டாங்". “சிறு பாவாடை சூடும் பூந்தேரு, இது பூவாடை வீசும் பாலாறு, அட மூசுக்கு .. ” என்று பாடிக்கொண்டே கருணாநிலையத்தில் ஜீன்ஸ் பறக்க சைக்கிளிலிருந்து இறங்கின ஸ்டைலுக்கு, எண்ணி இரண்டே வாரத்தில் அங்கிலிக்கன் ஒன்று தேடிவந்து ஹாய் சொல்லியிருக்கும், ஓல்மோஸ்ட் நெருங்கியாச்சு. ஆனால் அறுந்த சுப்பர்சொனிக் அடுத்த கிழமையே கிளிநொச்சியில் என்னுடைய அங்கிலிக்கன் கனவுகளை தாறுமாறாக குண்டுபோட்டு தகர்த்துவிட்டது.  

பாடசாலை ஆரம்பித்த சூட்டோடே நிறுத்தப்பட்ட கவலையை போக்கும்வண்ணம் எடிசன் அக்கடமி கிளிநொச்சியில் டியூட்டரி கொட்டில் ஒன்று போட்டார்கள். பாஸ்கரன் கணிதம், சூரி விஞ்ஞானம் என்று ஈழநாதத்தில் அறிவித்தல் வந்தது.  எடிசனிலும் கூட்டம் அள்ளியது. எம்மக்கள் எங்கே இடம்பெயர்ந்து சென்றாலும் எதுவுமே நடக்காததுபோல வாழ்க்கையை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடுவார்கள். ஓரிடத்தில் குண்டுவெடித்தால், இரண்டு மூன்று மணிநேரங்களில் அந்தவிடம் வழமைக்கு திரும்பிவிடும். ஒவ்வொருமுறையும் இடம்பெயர்ந்து செல்லும்போது அந்தப்புது ஊர்தான் தமது நிரந்தரம் என்று வீடுகள் கட்டுவார்கள். அங்கிருந்தும் இடம்பெயரவேண்டிவருமே என்கின்ற எண்ணம் வராது. உடனேயே பாடசாலை, டியூஷன், வேலை, வங்கி என்று எல்லாமே வேகமாக ஆரம்பித்துவிடும். விடுப்புகளும், காதல்களும் ஆரம்பிக்கும். திருமணங்கள், சாமத்தியவீடுகள், தீபாவளி, பொங்கல், கோயில் திருவிழாக்கள் எல்லாமே நடைபெறும். வேலிச்சண்டைகள் பரிமாணமடைந்து கிணற்றடியிலும் கக்கூஸ் கியூவிலும் நடக்கும். ஒரு சுப்பர்சோனிக் தாக்குதலில் எல்லாமே குலைந்துவிடும் என்கின்ற நிலைமையிலும் ஊர் மீளக்கட்டுப்படும். எடிசன் கொட்டிலும் அப்படித்தான். இருநூறு மாணவர்களைக் உள்ளடக்கக்கூடிய பெரிய கொட்டில்களை ஏதோ ஒரு நம்பிக்கையில் போட்டார்கள். ஆச்சரியமாக மாணவர்களும் அந்த அடிபாட்டுக்குள்ளும் படிப்பதற்கு தேடி வந்தார்கள்.   

அப்போதெல்லாம் வகுப்புகளில் அமோகமாக இயக்கப்பிரச்சாரமும் நடக்கும். ஒருநாள் ஆங்கில வகுப்பு நடக்கும்போது சிட்டுவும் வேறு சிலரும் பிரசாரம் செய்ய வந்தார்கள். கிட்டத்தட்ட இரண்டு மணிநேர பிரச்சாரம். இராமநாதன், செல்வநாயகத்திலிருந்து பேச்சு ஆரம்பித்து சந்திரிகா எப்படி மக்களை ஏமாற்றுகிறார் என்பதுவரை விடயங்கள் நீண்டன. இனி நடைபெறப்போவது இறுதிப்போர் என்றார். அவ்வாறான பிரச்சாரங்களில் மாணவர்கள் துண்டுச்சீட்டு அனுப்பி கேள்விகள் கேட்பதுண்டு. அன்றைக்கு சிட்டு என்றபடியால் அடிக்கடி “ஒரு பாட்டு பாடுங்கள்” என்றவகையான துண்டுகளே அதிகம் போய்க்கொண்டிருந்தன. நானும் என் பங்குக்கு ஒரு துண்டுச்சீட்டை அனுப்பினேன்.  

“கேணல் கிட்டு ஞாபகமார்த்தமாக தாங்கள் பாடிய 'தளராத துணிவோடு களமாடினாய்' பாடலை பாடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்”

சிட்டு அன்றைக்குப் பாடவில்லை. இயக்கத்துக்கு இணைகின்ற மாணவர்களுக்கு மட்டுமே பாடுவேன் என்றார். ஏழெட்டு மாணவர்கள் இணைந்தார்கள். இணைந்த மாணவர்களின் சைக்கிள்களை நண்பர்களிடம் கொடுத்து வீட்டில் சேர்க்கச்சொல்வார்கள். வீட்டுக்கு சைக்கிளைக்கொண்டுபோய்க்கொடுத்துவிட்டு ரமேஷோ, கீதாவோ இயக்கத்தில் சேர்ந்ததை சொல்லி, அவர்களை அழுவ்தைப்பார்த்துவிட்டு திரும்பவேண்டும். அன்றைக்கு எனக்குத்தெரிந்த இரண்டே நாள் பழக்கமான ஜெயந்திநகர் பெடியன் ஒருத்தனும் சிட்டுவோடு சென்றான். நான் ஜகா வாங்கிவிட்டேன். எனக்கு இளங்கன்று பருவத்திலேயே துவக்கு என்றால் புழுத்த பயம். பொயிண்டிலே நிற்கும்போது திடீரென்று ஆர்மி வந்துவிட்டால் என்ன செய்வது என்று யோசிக்கின்ற கணங்களில் கனவு கலைந்து எழுந்து தண்ணீர் குடித்திருக்கிறேன். அதைவிட வடிந்தெடுத்த சுயநலம்வேறு இருந்தது. அடிபட்டு நான் செத்துப்போனால் சுதந்திரத்தை நான் அனுபவிக்கமுடியாதே. நானே இல்லாமல்போனபின்னர் தமிழீழம் கிடைத்தும்தான் என்ன பயன் என்கின்ற சுயநலம். மற்றவனுக்காக உயிரை விடுகின்ற தியாக மனப்பான்மை எப்போதுமே என்னிடம் கிஞ்சித்தும் இருக்கவில்லை.  

இன்னொரு தடவையும் எடிசனில் பிரச்சாரம் நடந்தது. இந்தமுறை பிரச்சாரத்துக்கு வந்தவர் துவக்கையும் கையில் வைத்திருந்தார். பார்க்க ஆள் முரடனாட்டம் இருந்தார். போராட்டம் மாணவர்களின் கையில் என்றார். எனக்கு கை துறு துறுத்தது. உடனே ஒரு துண்டுச்சீட்டு எழுதினேன். அப்போதெல்லாம் என் எழுத்துலக ஆர்வங்கள் பிரச்சார துண்டுச்சீட்டுகளிலேயே நிறைவேறிக்கொண்டிருந்தன.   

“அண்ணே நான் கொஞ்சம் நல்லா படிப்பன். நான் படிச்சு பெரிய ஆளா வாறன். தமிழீழம் கிடைக்கும்போது நான் நாட்டின் சேவைக்காக என்னையே அர்ப்பணிப்பேன். படிச்ச ஆக்களும் நாட்டுக்குத்தேவைதானே?"

துண்டுச்சீட்டை வாசித்ததும் அந்தாள் துவக்கை ஒருக்கா லோட் பண்ணியது. ஏதோ தவறாக எழுதிவிட்டோம் என்று விளங்கியது. கழுசான் ஏறக்குறைய ஈரம்.  

“ஆரடா இதை எழுதினது?”

பக்கத்தில் இரண்டு அடி இடைவெளி விட்டு தாரணி அமர்ந்திருந்தாள். அக்சுவலா நான்தான் இரண்டு அடி தள்ளி அமர்ந்திருந்தேன். என் கேள்வி வாசிக்கப்பட்டு, என்னை அந்த அண்ணா பாராட்டி “தம்பி நீ நல்லாப் படி” என்று சொன்னாரென்றால், தாரணிக்கும் எனக்குமிடையேயான அந்த இரண்டு அடி அடுத்தவகுப்பில் ஓரடியாக மாறலாம் என்ற ஒரு உபநோக்கமும் துண்டுச்சீட்டுக்கு இருந்தது. ஆனால் இப்போது தர்ம அடி கிடைக்கப்போகிறது. தாரணி திரும்பிப்பார்த்தாள். “அப்பிடி என்னடா எழுதினனி? நான் வீட்ட பத்திரமா போகணும்” என்றது அவள் மைண்ட் வொய்ஸ். 

பிரச்சாரம் செய்த அண்ணாவிற்கு கோபம் ஏறிவிட்டது. 

“சொல்லுங்கடா. எந்த மூதேவிடா இதை எழுதினது?”

மூதேவி எதையும் காட்டிக்கொள்ளாமல் கர்மவீரனாட்டம் இருந்தேன். வட்டக்கச்சி மத்தியான வெயிலுக்கும் உடம்பு நடுங்கியது. காலமை கடலை அவிச்சு குருமண்ணுக்குள்ள போட்டுத்தருவாங்கள். ஒரு மண்கூட மிச்சம் வைக்காமல் சாப்பிடவேண்டும். சாப்பிடாட்டி அடி விழும் என்று கேள்விப்பட்டிருந்தேன். பங்கருக்குள்ளேயே முழுநாளும் இருக்கவேண்டும். பாழாய்ப்போன துண்டுச்சீட்டு.  

“டேய் ... நீங்க படிச்சு பெரிய ஆளா வருவீங்கள். அதுக்காக மத்தவன் போராடி தமிழீழம் எடுத்து தரோணுமா? படிச்சா பட்டம் மட்டும்தான் கிடைக்கும். போராடினாத்தாண்டா தமிழீழமே கிடைக்கும். அது கிடைச்சாத்தான் அங்கால எல்லாமே. உங்களை மாதிரி அறுவாங்களாலதானே நாங்கள் போராடவேண்டியே வந்தது. வந்திட்டாங்கள் கொப்பி புத்தகத்தோட படிக்கவெண்டு. நான் இப்பச் சொல்லுறன். நீங்களெல்லாம் படிச்சும் எங்கட நாட்டுக்கு ஒரு அறுப்பும் பண்ணப்போறதில்லை. போய் வீட்டில உங்கட …”

கூடவே நிறைய தூஷணங்கள் வந்து விழுந்தன. தலையை குனிந்தபடி அமர்ந்திருந்தேன். எனக்கு அதற்குப்பிறகும் இயக்கத்தில் சேரும் எண்ணமோ தைரியமோ துளியும் வரவில்லை. ஆனாலும் அந்த அண்ணா சொன்ன வார்த்தைகள் பதினைந்து வயதுப்பெடியன் மனதில் ஆழமாய் வேரூன்றி விட்டிருந்தன.   

இந்த இருபது ஆண்டுகளில் அவர் ஏதாவது ஒரு அடிபாட்டில் இறந்துபோயிருக்கலாம். அவர் யார், என்ன பெயர் என எதுவுமே எனக்குத்தெரியாது. அவர் பெருத்த அறிவாளியாகவும் படிப்பாளியாகவும் இருந்திருக்கலாம். அவர் இன்று இல்லை. அவரைப்போல பலர் இல்லை. ஆனால் அவர் சொன்ன மூதேவிகள் இன்னமும் இருக்கிறார்கள். படித்து பட்டம் பெற்று ஊரிலும், உலகமெங்கிலும் பரந்து வாழுகிறார்கள். சிலர் உணர்வுடன் நன்மைகளும் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் எதனை தம் மக்களுக்கு செய்தாலும் தம் சுயநலங்களை மீறிச் செய்வதில்லை.  அவர்களின் முதன்நலம் சுயநலம். நான், என் வீடு, என் குடும்பம். என் சந்தோசம். அப்புறம்தான் பொதுநலமோ பொதுவுடமை என்கின்ற புறம்போக்கோ. எதுவோ.  

யோசித்துப்பாருங்கள். உயிரை எல்லாம் கொடுக்கவேண்டியதில்லை. நாங்கள் நினைத்தால் எங்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களை வெறும் கேக்கு மிக்ஸரோடு நிறுத்திவிட்டு ஏனையதை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவலாம். வீடு கட்டும்போது இரண்டு அறைகள், குறைந்தபட்ச தேவைகளோடு நிறுத்திவிட்டு மீதிப்பணத்தைக் கொடுக்கலாம். கார், போன், கலியாணவீடு, கண்டறியாத சாமத்தியவீடு, செத்தவீடு என்று எல்லாவற்றிலும் இந்தவேலையை செய்யலாம். ஆனால் செய்யமாட்டோம். ஏனென்றால் சுயநலம் என்பது எம் இச்சை. இச்சையை அறிவால் ஒடுக்கமுடியாது. இல்லாததுபோல காட்டத்தான் முடியும். பெண்ணின் மார்பிடைவெளியை அறிவு பார்க்காதே என்று சொல்லாது. “பாரு. ஆனா தெரியாமல் பாரு” என்றுதான் அது சொல்லும். நம் சுயநல இச்சைகளும் அப்படித்தான். நம் இச்சைகளை மீறமுடிகின்ற பக்குவம் எம்மிடத்தில் இருப்பதில்லை. ஆகவே அது கொடுக்கும் குற்றவுணர்ச்சிகளை மூடிமறைக்க பல முகமூடிகளை வசதிக்கு அணிந்துகொள்கிறோம். சமயத்தில் மற்றவர்களுக்கும் அணிவிக்கிறோம். தேசியவாதி, யதார்த்தவாதி, உணர்வாளன், எதிர்ப்பாளன், நடுநிலைவாதி, இடதுசாரி, வலதுசாரி என பலப்பல முகமூடிகள். ஏன் பட்டவர்த்தனமாக இப்படி தன்னிலை விமர்சனம் செய்து நிர்வாணப்படுத்தி எழுதுவதுமே ஒருவித முகமூடிதான். நிர்வாணம்  சமயத்தில் புத்திசாலித்தனமான முகமூடியாகிவிடுகிறது. எங்காவது அத்திபூத்தாற்போல எம்மிடையேயிருந்து பிறர்நலத்தை தன்னலமாக்கி வாழ்பவர்கள் உருவாகிறார்கள். அந்த டியூஷன் பிரசாரத்தில் என் கேள்விக்கு தூஷணத்தால் பதிலளித்த அந்த ஊர் பேர் தெரியாத அண்ணா அப்படிப்பட்டவராக இருந்திருக்கக்கூடும்.  

ஓட்டோ கோவிந்தன் கடைச்சந்தியிலிருந்து மூன்றாம் வாய்க்கால் சந்திக்குப்போகும் வீதியில் இறங்குகிறது. ஓட்டோக்காரர் அதிகம் பேசாமல் தன்பாட்டுக்கு ஓட்டிக்கொண்டிருந்தார். இடையிலொருதடவை எனக்கு மறைக்கிறது என்று தறப்பாளை நன்றாக சுருட்டிக்கட்டிவிட்டார். எந்த விடுப்புக்கதைகளும் கிடையாது. இடையிடையே போன் கதைக்கவில்லை. நான்தான் பேச்சுக்கொடுத்தேன்.

“இதைத்தானே இராமநாதன் கமம் எண்டுறவை?”

“ஓமண்ணை . கிட்டடில மைத்திரிகூட வந்து நாற்று நட்டிட்டுப்போனவர்”

“ஓ … மைத்திரி இஞ்சயும் வந்தவரா? அவருக்கு பொலன்னறுவையிலதானே வயல் இருக்கு?”

மனைவி முழங்கையால் ஒரு இடி இடிக்க அமைதியானேன். அந்தப்பக்கம் உள்ள பெரும்பாலான வயல்களை இராமநாதன் கமம் என்பார்கள். வீதி தார்போடப்பட்டு பளிச்சென்று இருந்தது. நான் சைக்கிளில் செல்லும் காலங்களில் கிறவல் றோட்டின் நடுப்பகுதி எப்போதுமே கல்லும் கிடங்குமாகவிருக்கும். றோட்டுக்கரையிலேயே சைக்கிள் ஓட்டுவதற்கு தகுந்த ஒரு குறுகலான மண் பாதையிருக்கும். அதனூடாக வெட்டி வெட்டி ஓடவேண்டும். மிகவேகமாக சைக்கிளை அப்படி குழிக்குள் விழுத்தாமல் வெட்டி ஓடுவதில் ஒரு பரவசம் இருக்கிறது. குறிப்பாக இந்த கோவிந்தன் கடைச்சந்தியிலிருந்து மூன்றாம் வாய்க்கால் சந்திவரைக்குமுள்ள வீதியின் இருமருங்கிலும் வயல் காணிகள். ஒருபக்கம் நெல் கதிர்கள். விதைக்காத நிலங்களில் மேய்ந்துகொண்டிருக்கும் மாடுகள். ஒருபுறம் தண்ணீர் ஓடும் இரணைமடு வாய்க்கால். அதில் வட்டவலை வீசும் மீன்பிடிகாரர். குளிக்கும் உரிஞ்சான் குண்டி சிறுவர்கள். கோவணங்கள். குறுக்குக்கட்டுகள். ஒவ்வொன்றாகப் பார்த்து ரசித்துக்கொண்டே இளையராஜா பாட்டை முணுமுணுத்துக்கொண்டே சைக்கிள் சவாரி செய்தால் மூன்றாம் வாய்க்கால் தாண்டியதையும் மறந்து விசுவமடுப்பக்கம் போய்விடுவோம்.  

கிளிநொச்சி பயணம் என்றால் அம்மா பத்து ரூபாய் தருவார். சைக்கிள் காற்றுப்போனால் ஓட்டுவதற்கு தேவையான பத்துரூபாய். செலவழிக்காமல் கொண்டுவந்துவிடு என்று சொல்லித்தான் அனுப்புவார். வட்டக்கச்சியிலிருந்து கிளிநொச்சி செல்லும்வரைக்கும் காசு வெளியே எடுபடாது. திரும்பும் வழியில் கிளிநொச்சிக்குளம் தாண்டும்வரையும் மனக் கட்டுப்பாடு இருக்கும். ஆனால் அங்காலே முழத்துக்கு முழம் கச்சான் கடைகள் வந்துவிடும். வைகாசி என்றால் பாலைப்பழம் சீசன். ஆச்சிமார் றோட்டுக்கரையில் அமர்ந்து பாலைப் பழங்களை சுளகுகளில் குவித்து விற்றுக்கொண்டிருப்பார்கள். ஐந்து ரூபாய்க்கு ஒரு குட்டிச் சரை. ஒரு கையால் பாழைப்பழத்தை சாப்பிட்டபடி மற்றக்கையால் நைட் ரைடர் மாதிரி சைக்கிளை ஓடுவதுண்டு. அவ்வப்போது யாராவது மறிப்பார்கள். “தம்பி பன்னங்கண்டியில் இறக்கிவிடும்”, “பாமடியில் இறக்கிவிடும்” என்பார்கள். யாரென்று தெரியாது. ஆனாலும் தொற்றிக்கொள்வார்கள். டபிள்ஸ் போட்டபடி அவரின் சொந்த சோகத்தை கேட்டபடி பயணிப்பதுகூட சுகம். அதேபோல ஏதாவது டிரக்டர் மிஷின் அந்தப்பக்கம் வந்தால் பெட்டியில் கை பிடித்தபடி இழுபட்டுக்கொண்டு போவோம். தெரிந்தவர் மிஷின் என்றால் சைக்கிளைத்தூக்கிப் பெட்டியில் போட்டுவிட்டு மட்கார்டில் இருந்தும் பயணிப்பதுமுண்டு.

யாவரும் கேளிர்.  

பன்னங்கண்டிப்பாலத்தை ஓட்டோ தாண்டியது. பாலத்தின் கரையோரமெங்கும் சுமந்திரன் மூன்றாம் இலக்க புள்ளடியோடு சிரித்துக்கொண்டிருந்தார்.  

“இந்தாளுக்கு இஞ்சவரைக்கும் செல்வாக்கு இருக்கா அண்ணை?”

“நிறையக் காசு செலவழிச்சவர் அண்ணை. ஆனா சனமெல்லாம் சிறிதரன் அண்ணைக்குத்தான் போட்டதுகள். ஏதாவது பிரச்சனை எண்டால் அண்ணைதான் வந்து நிப்பார்”

சிறிதரன் அந்த ஓட்டோக்காரருக்கு அண்ணை. ஒட்டோக்காரர் எனக்கு அண்ணை. நான் ஒட்டோக்காரருக்கு அண்ணை. எல்லோருமே எல்லோருக்கும் அண்ணை. 

“ஆனா சிறிதரன்மேலே ஒரு குற்…”

மனைவியின் முழங்கை மீண்டும் பதம்பார்த்தது. அமைதியானேன். பன்னங்கண்டி ஆற்றுத்தண்ணீரில் மாடுகளை இரண்டு சிறுவர்கள் பொச்சுமட்டையால் தேய்த்துக்குளிப்பாட்டிக்கொண்டிருந்தார்கள். இரணைமடு வான் பாய்ந்தால் அந்தப்பாலத்தால் வெள்ளம் மேவியோடும். ஒருகாலத்தில் விக்கி மாமா மேவிப்பாயும் வெள்ளத்தை கடக்க படகுச்சேவை நடத்தினவர் என்ற பழைய கதையை மனைவியிடம் சொன்னேன். நிறைய மண்ணெண்ணெய் பரல்களை ஒன்றாக சேர்த்துக்கட்டி பாஜ் மாதிரி ஒன்றைச் சரிக்கட்டி, கயிற்றைக்கட்டி இழுத்து நடத்தப்பட்ட படகுச்சேவை.  

பாம் என்று அழைக்கப்படும் விவசாயப்பண்ணையைத்தாண்டி ஓட்டோ பயணிக்கிறது. அந்த விவசாயப்பண்ணைதான் வட்டக்கச்சியின் “நந்தாவில் அம்மன்”. அதாவது எந்தநேரமும் அங்கே பொம்மர் குண்டு போட்டுக்கொண்டேயிருக்கும்.  பண்ணையில் இயக்கத்தின் மிகமுக்கிய முகாம் இருந்தது. பெரிய தலைகளும் அடிக்கடி வந்துபோகும். அதனால் இருந்தால் தும்மினாலெல்லாம் சுப்பர்சொனிக் வந்துவிடும். குண்டுபோட்டால் பண்ணையில் விழாமல் பக்கத்திலிருக்கும் கறுப்பிக்குள வயல்களிலோ அல்லது குடியிருப்புகளிலோ விழும். பண்ணையடியால் சைக்கிள் மிதிக்கும்போதும் கொஞ்சம் வேகமாகவே மிதிப்பதுண்டு. அந்தநேரம் பார்த்து பொம்மர் வந்துவிட்டால் ஓடுவதற்கும் இடம் கிடைக்காது.

இந்தப் பதட்டம் எதுவுமே இல்லாமல் ஓட்டோ பண்ணையைத்தாண்டி சிவிக்சென்டருக்குள் நுழைகிறது. 

கூடவே புழுதி பறக்க அந்த ஒரேன்ஜ் நிற சூட்கேஸை தலையில் தாங்கியவண்ணம் எங்கள் மொரிஸ் மைனர் டக்சியும் சிவிக் சென்டருக்குள் நுழைகிறது.

தொடரும்


ஊரோச்சம் தொடர்

ஓவியம்
Anura Dahanayaka
பிரசன்னா பாலா

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட