வரலாறு என்கின்ற பசப்புக்காரி

Oct 19, 2015


அவள் மரணித்தபோது
வரலாற்றுக் கிடங்கை கிளறி
அவளை
வெளியே தூக்கிப்போட்டார்கள்.
உடல் துடித்தது.
வெளிச்சம் பாய்ச்சினார்கள்.
அவள் நிர்வாணம் கூசியது.
குறிப்பெடுத்தார்கள்.
ஒலி பரப்பினார்கள்.
ஒளி பரப்பினார்கள்.
சொல் பரப்பினார்கள்.

அவள் நிர்வாணத்தை தரிசித்தவர்

யாவரும் நிர்வாணியாயினர்.
தம் கைகளைக் கட்டி மறைத்துப்பார்த்தனர்.
உடை அணிந்தனர்.
உடைகள் அனைத்தையும் அணிந்தனர்.
ஊரவர் உடைகளையும் அணிந்தனர்.
அவர்தம் நிர்வாணம் இன்னமும் பட்டவர்த்தமானது.

பதறிப்போய் அனைவரும்
கிடைத்த இடங்களில்
கிடங்குகளை கிண்டினார்கள்.
ஒருவன் ஆறடி ஆழத்தில் கிண்டினான்.
ஒருவன் ஓரடியில் கிண்டினான்.
ஒருவன் வெறுமனே புழுதி கிளறினான்.
எல்லோரும் அவளை தத்தமது
கிடங்குகளில் போட்டு நிரவினார்கள்.
தமது கிடங்கே அவள் வரலாறு என்றார்கள்.
ஒரு வரலாற்றுக்கிடங்கு
ஒருத்தியின் மரணத்தோடு
ஆயிரம் கிடங்குகளாகியது.
எது நிஜம்?
எந்தக்கிடங்கில் அவள் உடல் கிடந்தது?
எதில் இல்லையோ அதில்!
அது முரண்.
நிஜம் முரண்.
வரலாறு முரண் நகை.
வரலாறு ஒரு பாலியல் தொழிலாளி போன்றது.
உனக்கு வேண்டினாப்போல அது உடல் நெளிக்கும்.
வரலாற்றில் அவள் வீராங்கனையா?
ஆகட்டும்.
துரோகியா?
நன்று.
கொடுமைக்காரியா?
வைத்துக்கொள்.
வரலாற்றுக்குத் தேவை
நாளைக்கான நீட்சி.
அதற்கு அது யாரோடு
வேண்டுமானாலும் புணரும்.
புணர்தலுக்காக யாரையும் கவரும்.
உனக்கும் வரலாற்றில் இடம்
கொடுப்பதாகச் சொல்லி
ஆசை காட்டும்.
முதலில் நெருங்குவாய்.
பின்னர் தழுவுவாய்.
ஈற்றில் புணருவாய்.
புணர்ச்சி முடிந்த
அயர்ச்சியில்தான் வரலாறு
உன்னை வஞ்சித்தது விளங்கும்.
அப்போது நீ ஏலவே
வரலாறு ஆகியிருப்பாய்.

நாளை உனக்கும் மரணம் உண்டு.
உன்னையும் தோண்டுவர்.
நிர்வாணப்படுத்துவர்.
உன் உடலையும் கிடங்குகளில் பிரித்துப்போடுவர்.
நீ யார் என்பதை மற்றவர் தீர்மானிப்பார்.
திருத்தம்.
நீ பாவி என்பதை மற்றவர் தீர்மானிப்பர்.

வரலாறு என்கின்ற பசப்புக்காரி
எப்போதாவது உன்னைப்பார்த்து
சிரித்து வைத்தால்,
வேண்டாம், அது ஒரு சனியன்.
ஒதுங்கிவிடு.

Contact Form