Skip to main content

ஊரோச்சம் 1 : செங்கை ஆழியான்

 

150px-1002

“அம்மா பத்து வரியத்துக்கு பிறகு வந்திருக்கிறன்”

“சரி ரெண்டு நாள் இருந்திட்டுப் போ!”

-- யாழ்ப்பாண இராத்திரிகள்.

யாழ்ப்பாண பயணம் அன்றோடு முடிகிறது.

நேரம் ஆறரை. ஒன்பதரைக்கு பதுளைக்கு பஸ். கடந்த மூன்று கிழமைகள் யாழ்ப்பாண அனுபவங்களை அசை போட்டபடி அப்போதுதான் இரண்டு உடுப்பை மடித்து பாக்கிற்குள் வைக்க ஆரம்பித்திருந்தேன். இந்த மூன்று கிழமைகளில் செய்யவேண்டும் என்று நினைத்தவற்றை ஓரளவுக்கு செய்தாயிற்று. போகவேண்டிய இடங்கள், சந்திக்கவேண்டிய நபர்கள் என்று போனில் குறித்து வைத்திருந்த லிஸ்ட் எல்லாம் டிக்காகி விட்டது. ஆனாலும் எதையோ ஒன்றை மிஸ் பண்ணியது போன்ற உணர்வு. யாரையோ சந்திக்காமலேயே போகிறோம் என்றது உள்மனது. குட்டி போட்ட பூனையாட்டம் அறையை சுற்றி சுற்றி வருகிறேன். திடீரென்று பொறி தட்டியது… எப்படி அவரை மறந்தேன்?

செங்கை ஆழியான்.

நாற்பத்தேழு நாவல்கள். இருநூறுக்குமதிகமான சிறுகதைகள். ஏராளமான கட்டுரைகள், நேர்காணல்கள், வரலாற்று ஆராய்ச்சிகள். செங்கை ஆழியானை வாசித்து முடித்ததாக நினைத்துக்கொண்டு ஒரு புத்தகக்கடைக்குள் இறங்கினால் அங்கே மேலும் புதிதாக வாசிக்காத அவருடைய புத்தகங்கள் பத்துக்கு மேலே மாட்டும். அதையும் வாசித்துவிட்டு மீண்டும் நுழைந்தால் மேலும் கிடைக்கும். செங்கை ஆழியான் ஒரு எழுத்து மெஷின். ஈழத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவரும் அவரே.

செங்கை ஆழியானின் சமகால இலக்கியவாதி சோ. பத்மநாதனுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் செங்கை ஆழியான் பற்றி  ஒரு வசனம் சொன்னார்.

"Sengai Aazhiyaan is the most prolific eezham writer todate".

இவ்வளவுதூரம் வந்தும் அவரைப்பார்க்காமல் போவது பெரிய பாவம் என்று தோன்றியது. உடனே அவசர அவசரமாக பிரவுண் ரோட்டில் இருக்கும் அவர் வீட்டுக்கு விரைந்தோம். வாசலில் அவரின் மனைவிதான் வரவேற்றார். செங்கை ஆழியான் ஒரு சாய்மனைக் கதிரையில் தளர்ந்துபோய் படுத்திருந்தார். நிறைய பேசுவதற்கு போயிருந்தேன். அவரை அந்நிலையில் பார்த்ததும் எதுவுமே பேசமுடியாமல் வாய் டைப்படித்தது.

“நான் உங்கட பயங்கர பாஃன்… வாசகன் .. அவ்வளவு பிடிக்கும் ..”

தலையசைத்து சிரித்தார். அவரால் இப்போது ஓரிரு வார்த்தைகள்தான் பேச முடிகிறது. படுத்த படுக்கை. எழுதுவது, வாசிப்பது எதுவுமே இப்போது இயலாது. எவ்வளத்துக்கு எழுதிக்குவித்த மனுஷன். அந்த நிலையில் அவரை பார்க்கவே முடியவில்லை. வாடைக்காற்று எழுதிய காலத்தில் திருவிழாபோல அவருக்கு விழா எடுத்தார்களாம்.

ஈழத்தின் எந்த வாசகனும் செங்கை ஆழியானை கடக்காமல் வந்திருக்கமுடியாது. என்னை மாதிரி ஆட்களுக்கு சிறு வயதிலேயே எழுத்தில் ஆர்வத்தை உண்டு பண்ணியதிலும் அவருக்கு நிறைய பங்குண்டு.  சின்ன வயதில் தமிழ் பேச்சுப்போட்டி ஒன்றிலே முதலிடம் பெற்றமைக்கு மூன்று புத்தகங்கள் பரிசாக கிடைத்தது. அதில் ஒன்று “கடல் கோட்டை”.  அன்றைக்கு தொடங்கியது. இன்றைக்கு என் வீட்டு நூலகத்தில் செங்கை ஆழியானின் முப்பதுக்குமதிகமான நூல்கள் இருக்கின்றன. என்னுடைய வாசிப்பனுபவத்தை  பதின்மத்தில் நாவல்களாலும் பின்னாளில் வரலாற்று நூல்களாலும் நிரப்பியவர் செங்கை ஆழியான்.  வாடைக்காற்று, முற்றத்து ஒற்றைப்பனை, கடல் கோட்டை, யானை, குவேனி, காட்டாறு, கங்கைகரையோரம், கிடுகுவேலி, சாம்பவி, ஜன்மபூமி, ஈழத்தமிழர் வரலாறு, கந்தவேள் கோட்டம் போன்றவை உடனே ஞாபகத்துக்கு வரும் அவரின் எனக்கு பிடித்தமான படைப்புகளில் சில. நாவல்களில் “யானை”யும் ஆராய்ச்சி நூல்களில் “ஈழத்தமிழர் வரலாறு”ம் அவருடைய பெஸ்ட் என்பேன். கடல் கோட்டை ஈழத்து சூழலுக்கு முற்றிலும் புதிது. கடல் கோட்டை ஒரு புனைவு சாராத நாவல் என்கிறார் செங்கை ஆழியான்.

DSC00706“அந்த வைரவ சூலத்தை ஒருவன் வழிபட்டான். என் குதிரையின் காலடிச் சத்தம் கேட்டதும் அந்த வைரவ சூலம் சிலுவையாக மாறிய அதிசயத்தைக் கண்டேன். எப்படியென்று அதிசயப்படுகிறீரா? அந்தச்சூலம் சிலுவையாகவும் சூலமாகவும் மாறக்கூடிய அமைப்பில் செய்யப்பட்டிருந்தது.”

பால்தேயஸ் வியப்புடன் வந்கொயனைப்பார்த்தார். அவருக்கு இருந்தாற்போல சிரிப்பு வந்தது. சற்று பலமாக நகைத்தார்.

“எனக்கும் அப்படியொரு அனுபவம். ஞாயிறு தேவாலயத்துக்கு ஒரு பிரமுகர் வரவில்லை. சென்றவாரம் ஏன் வரவில்லை என்று கேட்டேன். உடனே அவர் “சிவ சிவா இயேசுவை மறப்பேனா?” என்றார்.

வன்கோயன் புன்னகைத்தான்.

“இத்தலைமுறை கழியவேண்டும் … கிறிஸ்துவர்ளாக மாறுபவர்களை விட கிறிஸ்தவர்களாக பிறப்பவர்கள் உருவாகும்போதுதான் இப்பிரதேசத்தில் எங்கள் மதம் நிலைக்கும்.”

-கடல்கோட்டை

செங்கை ஆழியான் எங்கள் காலத்தில் ஈழம் முழுதும் கொண்டாடப்பட்ட “ஜனரஞ்சக” எழுத்தாளர். எளிமையான மேலோட்டமான எழுத்துக்கள் அவருடையது என்கின்ற விமர்சனம் அவர் எழுத்துக்கு எப்போதும் இருந்திருக்கிறது. அதற்கு அவர் “இலக்கியம் வாசிக்கப்படவேண்டும் என்று நம்புபவன் நான். ஒரு சிலருக்காக இலக்கியம் படைக்கப்படுவதில்லை” என்று நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருப்பார். “ஆரம்பத்தில் மார்க்சிய எழுத்தாளர்களின் எழுத்துக்களை முற்போக்கு இலக்கியமாக சீல் குத்துவதற்காக ஏனையவர்களின் எழுத்துக்களை வெறும் ஜனரஞ்சக எழுத்துக்கள் என்று படிக்காமலேயே முத்திரை குத்தி விட்டார்கள்” என்று அதே நேர்காணலில் விமர்சகர்கள் மீது அவர் ஒரு குத்து விட்டிருப்பார். எது எப்படியோ அவருடைய திறமைக்கு இன்னமும் ஆழமான படிநிலைகளைக்கொண்ட நாவல்களை எழுதியிருக்கலாம். ஏதோ ஒரு காரணத்தால் அவர் அதனை செய்ய முயலவில்லை.

“உங்கட வரலாற்று நூல்கள் மிக முக்கியமானவை. எல்லாளன் சோழ மன்னன் இல்லை, அவன் பூநகரியை ஆண்ட ஈழ மன்னன் என்ற விஷயம் கூட உங்கள் மூலமாகவே தெரியவந்தது. ஈழத்தவர் வரலாற்றை எளிமையாக எல்லோரும் வாசிக்கும் வண்ணம் குடுத்ததுக்கு நன்றி”

கேட்கையில் அவரின் கண்களில் சந்தோசம் தெரிந்தது.

“கந்தசாமியும் கலக்ஸியும்” நாவல் இறுதி அத்தியாயம் எழுதும் நாட்கள் நெருங்கிக்கொண்டிருந்த சமயம், நாவலை எப்படி முடிப்பது என்கின்ற குழப்பம். அந்த நாட்களில் “குவேனி” வாசித்துக்கொண்டிருந்தேன். குவேனி மட்டும் வந்தேறியை காதலிக்காமல்போயிருந்தால் என்னவாகியிருக்கும் என்ற கற்பனை வாசிக்கும்போது எழுந்தது. உடனேயே விறுவிறுவென்று இறுதி அத்தியாயம் எழுதி, அதில் சுமந்திரன் அவர்களின் காதலை தடுக்க முயல்வதாக நாவலை முடித்தேன். திடுப்பென்று வந்த ஐடியா. உபயம் செங்கை ஆழியான்!

“உங்கட வாடைக்காற்று, யானை, குவேனி எல்லாம் பிடிக்கும்… நானும் கொஞ்சம் எழுதுவன் .. உங்கட இன்ஸ்பபிரேஷனில நிறைய எழுதியிருக்கிறன் …”

உள்ளிருந்து அவருடைய மகள் ஹம்சா ஹோலுக்குள் வந்தார்.

“அவருக்குத் தெரியும் … ஜேகே .. நீங்க எழுதினதை அவருக்கு வாசிச்சு காட்டியிருக்கிறம்”

நிறைய சந்தோசம், கொஞ்சம் ஆச்சரியத்தோடு செங்கை ஆழியானிடம் திரும்பினேன். ஏதோ சொல்ல முயன்றார். புரியவில்லை. அவரிடம் கேட்கவென்று நினைத்தவற்றை அவர் மனைவியிடமே கேட்டேன். கிட்டத்தட்ட செங்கை ஆழியானின் உத்தியோகபூர்வ பயோகிராபர் போன்று தகவல்களை புட்டு புட்டு வைத்தார். நாற்பது என்று நான் சொன்ன நாவல் எண்ணிக்கையை நாற்பத்தேழு என்று திருத்தினார்.

செங்கை ஆழியான் கையால் எழுதுவதில்லை, டைப் பண்ணுவார் என்பது புதிய தகவலாக இருந்தது. அறுபத்தைந்தாம் ஆண்டே கை எழுத்திலிருந்து டைப் ரைட்டருக்கு மாறிவிட்டாராம். இரவிரவாக எழுதுவாராம். நடுச்சாமத்தில் அந்தவீட்டில் டைப் ரைட்டர் சத்தம்  வேகமாக ஒலித்தால் அடுத்தநாள் “சேர் என்ன கதை எழுதுறார்” என்று பக்கத்துவீட்டுக்காரர்கள் வந்து கேட்பார்களாம். தொண்ணூற்றொன்பதில் டைப்ரைட்டர் கொம்பியூட்டராகிவிட்டது.

வேலை முடிந்து ஆறு மணிக்கு வீடு வந்து சிறிது நேரத்திலேயே எழுதப்போய்விடுவாராம். சிலவேளை நடுச்சாமத்திலும் ஏதாவது ஒரு ஐடியா வந்து எழுத உட்காருவதுமுண்டு. “வாழ்நாளில் வீட்டுச்சாமான் என்று வாங்க அனுப்பியதில்லை, வீட்டு வேலை எதுவும் அவரிடம் வாங்கியதில்லை, அவருண்டு அவர் எழுத்துண்டு என்று விட்டுவிட்டோம்” என்று சிரித்தபடி அவர் மனைவி சொன்னார். “சிறுவயதில் அப்பா நாவல்கள் எதுவும் வாசிக்கத்தரமாட்டார். சுஜாதாவெல்லாம் கிடைக்கவே கிடைக்காது. கெட்டுவிடுவோமாம். அம்புலிமாமா, ராணி காமிக்ஸ்தான்” என்று சிரித்தார் அவரின் மகள்.

செங்கை ஆழியானைத் திரும்பிப் பார்த்தேன். குழந்தையாய் சிரித்தார்.

செங்கை_ஆழியான்

செங்கை ஆழியானின் தாயார் ஒரு தேர்ந்த கதை சொல்லி என்பதை அறிய முடிந்தது. நிறைய புராணக்கதைகள் சொல்வாராம். விக்கிரமாதித்தன், ஏழு கடல்கள் தாண்டிய இராஜகுமாரன் கதை, வேலைக்கு அமர்த்திய முனி என்று பல கதைகளை சிறு வயதில் குழந்தைகளுக்கு சொல்லியிருக்கிறார். ஒருநாள் மாலை அந்த அம்மையார் ராஜம் கிருஷ்ணனின் “மலர்கள்” நாவலை முற்றத்தில் கதிரைபோட்டு வாசித்துக்கொண்டிருக்கிறார். அந்தி சாய்ந்துகொண்டிருந்ததில் அவர் இருந்த இடத்திலிருந்து வெளிச்சம் விலகிக்கொண்டிருந்தது. வாசிப்பு சுவாரசியத்தில் அவர் வெளிச்சத்தோடே புத்தகத்தை நகர்த்தியபடி விடாமல் வாசித்துக்கொண்டிருந்தார். தன்னிலையறியாமல் இப்படி நகர்த்திக்கொண்டிருந்ததில் ஒரு கட்டத்தில் கதிரை தடுமாறி தவறி விழுந்துவிட்டார். காயப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோயிருக்கிறார்கள். அங்கும் அந்த நாவலின் அடுத்தபாகத்தை கொண்டுவா என்று கேட்டிருக்கிறார். கொண்டுபோய்க்கொடுப்பதற்குள் அந்த அம்மையார் இறந்துவிட்டாராம்.

“உங்கட பெரியக்காவைப்பற்றி கதைக்க நிறைய ஆசை. வீட்டுக்குப்பின்னாலிருந்த புளியமரம் ..வற்றாநதியில் நிறைய எழுதியிருக்கிறிங்க ..”

அதற்கும் சிரிப்புத்தான். வீட்டில் கடைசி என்பதால் வீட்டில் இவர் செல்லம் என்றார் மனைவி. செங்கை ஆழியான் நிறைய பேச முயன்றாலும் அவரால் ஒரு வார்த்தைக்கு மேலே பேச முடியவில்லை.

“நாங்கள் சாத்திரத்தைக்கூட நம்புறதில்லை தம்பி, ஆனா இவர் நல்லா எழுதிக்கொண்டிருந்தவர், சாகித்திய அகடமியில பெரிய போஸ்ட் எல்லாம் கிடைத்தது. இன்னமும் எவ்வளவோ எழுத இருக்கு. அநியாயத்துக்கு சூனியம் வச்சிட்டாங்கள்”

மனைவி கவலைப்பட்டார்.

பத்திரிக்கை ஒன்றிலே தொடராக வெளிவந்த  “நாக நாட்டு இளவரசி”தான் செங்கை ஆழியானின் முதல் நாவல். பின்னாளில் அதன் தரம் காரணமாக அவர் அதனை அச்சில் கொண்டுவரவில்லை. ஆனாலும் பேப்பர் கட்டிங்கை தொகுத்து இன்னமும் வீட்டில் வைத்திருக்கிறார்கள். இதைக்கேட்டபோது எனக்கு தேவையில்லாமல் ஹார்ப்பர் லீ ஞாபகத்துக்கு வந்து தொலைத்தார்.

அவர்களுடைய குடும்ப பதிப்பகமான “கமலம் பதிப்பகம்” மூலமே பெரும்பாலான நூல்களை வெளியிட்டிருக்கிறார்கள். ஒருகாலத்தில் அவரின் புத்தகம் வெளியான முதல் நாளிலேயே முந்நூறு புத்தகங்கள் வரையிலும் விற்பனையாகிவிடுமாம். ஆனால் இப்போதெல்லாம் யாருமே வாங்குவதில்லை, புத்தகம் வெளியிட்டு எங்களுக்கு நட்டமேயொழிய எந்த இலாபமுமில்லை என்றார் அவரின் மனைவி. கடைக்காரர்கள் புத்தகம் விற்றாலும் அதற்கான பணத்தை கொடுப்பதில்லையாம். ஒரு டிவி சானல்கூட அவருடைய நாவல் ஒன்றை தொலைக்காட்சித் தொடராக்க அனுமதி பெற்று, ஒப்பந்தத்தில் கையெழுத்தெல்லாம் வாங்கி, பணம் கொடுப்பதாகக்கூட சொல்லிச்சென்றிருக்கிறார்கள். டிவியில் தொடர்கூட வெளிவந்துவிட்டது. பணம் வரவில்லை. “காசு வேண்டாம் தம்பி, சிடியாவது கொடுங்கள்” என்று போன் பண்ணிக்கேட்டதுக்கும் பதிலில்லை.

செங்கை ஆழியான் இறுதியாக எழுதியது “யாழ்ப்பாணம் பாரீர்” என்ற சுற்றுலா நூல். அச்சிலேறுவதற்கு தயாராக இருக்கிறது. பதிப்பாளர்கள் அதிக பணம் கேட்பதால் தாமே பிரிண்ட் பண்ணுவோமா என்று யோசிக்கிறோம் என்றார் அவர் மனைவி. அவருடைய மனைவியை பேட்டி கண்டே செங்கை ஆழியானின் சுய சரிதத்தை தொகுத்துவிடலாம்போல் தோன்றியது. சொன்னேன். பார்ப்போம் என்றார். செங்கை ஆழியான் ஒரு தலைமுறையின் எஞ்சிய பிரதிநிதிகளில் ஒருவர். மிகச்சுவாரசியமான, சர்ச்சைக்குரிய ஏழு தசாப்தகால வாழ்க்கையின் சொந்தக்காரர். விரைவில் சுகப்பட்டு அவரே அதை எழுதவேண்டும்.

எழுதுவார் என்று நம்புவோம்.

விடைபெறும்போது கூட நின்று படம் எடுத்துக்கொண்டேன். உடம்பு தேறினதும் மீண்டும் வந்து படம் எடுத்து பேஸ்புக்கில் போடுகிறேன் என்று சொல்லி சிரித்தேன். பதிலுக்கு சிரித்தார். கிளம்பிவிட்டோம். நான் போகும்வழியையே அவர் கண்கள் பார்த்துக்கொண்டிருந்ததை அறிவேன். திரும்பிப்பார்க்க மனமில்லை.

வீடு போகும் வழியில், அவரிடம் நான் கேட்ட கேள்வி ஒன்று வட்டமிட்டுக்கொண்டிருந்தது.

“அடடா இதை எழுதாமல் போய்விட்டேனே என்று நினைத்து ஏங்கும் ஏதாவது கதை உள்ளதா?”

மறுபடி மறுபடியும் எதையோ முணுமுணுத்தார். மனைவியும் கேட்டுப்பார்த்தார். விளங்கவில்லை. ஹம்சாவும் கேட்டுப்பார்த்தார். ஒருவருக்கும் அவர் சொல்ல முயன்றது விளங்கவில்லை. மீண்டும் கேட்டேன்.

“அடடா இதை எழுதாமல் போய்விட்டேனே என்று நினைத்து ஏங்கும் ஏதாவது கதை உள்ளதா?”

இம்முறை அவர் மேலும் குரலை உயர்த்தி எதையோ சொல்ல முயன்றார். தான் சொல்ல விழைந்தது எமக்கு விளங்கவில்லையே என்கின்ற ஏக்கம் அவர் கண்களில்.

என்ன சொல்ல முயன்றிருப்பார்?

********************

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக