Skip to main content

ஊரோச்சம் 2 : ஆட்டிறைச்சி

 

mutton2

தீபாவளிக்கு மிச்ச எந்தக் கொண்டாட்டங்களையும் விட ஒரு சிறப்பு இருக்கிறது.  எங்கள் ஊரில் மச்சம் சாப்பிடுவதற்கு அனுமதிக்கப்படும் ஒரே பண்டிகை அதுதான். தீபாவளி என்றாலே வேறு கதையே இல்லை, எங்கள் வீட்டில் ஆட்டிறைச்சி வாங்கியே தீரவேண்டும்.  அதுவும் கோண்டாவில் ஆட்டிறைச்சி. "உடுப்பு ஒண்டும் வேண்டாம், காசைத்தாங்கோ, கோண்டாவிலில பங்கொண்டு எடுப்பம்" என்று தீபாவளி புது உடுப்பை தியாகம் செய்யுமளவுக்கு கோண்டாவில் ஆட்டிறைச்சி மீதான காதல் அதிகம். தீபாவளி வருகிறதென்றாலே வாயில் பொரியல் துண்டு கடிபட்டு, மல்லி மிளகாய்க்காரத்தோடு சுரக்கும் அந்த இறைச்சிக்குழம்பு நாக்கில் புரளத்தோடங்கிவிடும். அப்படியொரு ஐட்டம் அது.

ஆட்டிறைச்சிக்கறி என்பது வெறும் சுப்பனோ குப்பனோ கிடையாது.

அரசாங்க உத்தியோகத்தர் குடும்பம் என்பதால், தொண்ணூறுகளில் எங்கள் வீடு வறுமைக்கோட்டில் தட்டுத்தடுமாறி நடந்துகொண்டிருந்தது. ஆறுபேர் உள்ள வீட்டின் மத்தியான சாப்பாட்டுக்கு அம்மாவின் பட்ஜெட் நாற்பது ரூபாய். அதற்கு கல்வியங்காட்டுச் சந்தையில் விலை குறைந்த சல்லித்திரளி மீனையோ அல்லது கெளிறு மீனையோதான் வாங்கமுடியும். அதுவும் சல்லித்திரளி கொஞ்சநேரத்துக்கு மேலே தாக்குப்பிடிக்காது. நாறிவிடும். அதனால் பன்னிரண்டு மணியளவில் அதன் விலை கிடுகிடுவென விழத்தொடங்கும். அந்தச்சமயம் போனால் நாற்பது ரூபாய்க்கு பேரம் பேசி ரெண்டு தூஷண ஏச்சும் கேட்டு நிறைய மீனை அள்ளலாம். அதில் ஒரு குழம்பு, சொதி வைத்து துணைக்கு கீரையோடு மத்தியானத்தை அம்மா சமாளித்து விடுவார். இரவு மிச்சக்குழம்பு,  சொதியோடு புட்டு அவித்து மனேஜ் பண்ணலாம். சமயங்களில் அடுத்தநாள் காலையில் பாணோடு தொட்டுச்சாப்பிட சட்டிகூட மிஞ்சுவதுண்டு. நாற்பது ரூபாய்க்கு மூன்று நேர சாப்பாட்டின் மெயின் ஐட்டம் கவர் பண்ணப்படுகிறது. இந்த சௌகரியம் ஆட்டிறைச்சியில் கிடையாது. விலை அதிகம். அப்போது எனக்கு ஆட்டிறைச்சிக்கறி என்பது வகுப்பில் கூடப்படித்த ராதிகாமாதிரி. நினைத்துப்பார்க்க நன்றாக இருக்கும். நெருங்க மட்டும் சந்தர்ப்பம் அமையாது.

எப்படியாவது மாதமொருமுறை அம்மாவிடம் கெஞ்சிக்கூத்தாடி ராதிகாக்கு ஓகே வாங்கிவிடுவேன். இறைச்சி எண்டதுக்காக அம்மா அந்த நாற்பது ரூபாவுக்கு அஞ்சு ரூபா கெஞ்சித்தும் கூடத்தரமாட்டார். அப்போது ஆட்டிறைச்சி விலை கிலோ நூற்றிநாப்பது ரூபா. தனியிறைச்சி என்றால் நூற்றியெண்பது ரூபா. தனியிறைச்சி என்று கேட்டு வாங்காமல் இறைச்சி என்று வெறுமனே வாங்கினால் முள்ளெலும்பு, கொழுப்பு, சவ்வு என்று நிறைய கலந்துவிடுவார்கள். அதுவும் சின்னப்பெடியன் எனறால் கேட்கவே வேண்டாம். சுத்திடுவாங்கள். அதனால் நான் எப்போதும் தனியிறைச்சிதான் வாங்குவது. தனியிறைச்சி கால் கிலோ நாற்பத்தைந்து ரூபா. கால் கிலோவில் கறி காய்ச்சினால் கரண்டியில்கூட சுவராது. ஆனாலும் வேறு வழியில்லை. இதற்கே பட்ஜெட்டில் இன்னமும் ஐந்து ரூபாய் இடிக்கிறது. அக்காமாரிடம் கெஞ்சிக்கூத்தாடி ஒரு பத்து ரூபா. சைக்கிள் காத்தடிக்கவென்று சேர்த்து வைத்திருந்த காசு ஐந்து ரூபா. களவாக அம்மாவின் பன்றி உண்டியலில் நகத்தை விட்டு வெளியே எடுத்த சில்லறைகளைச்சேர்த்து பத்து ரூபா என்று அறுபத்தைஞ்சு ரூபாவோடு மகாராஜாவின் சைக்கிள் வண்டி புறப்படும்.  முதலில் கோண்டாவில் கடை. அங்கு முடிந்திருந்தால் கல்வியங்காட்டுச்சந்தை. இல்லாவிட்டால் கொக்குவில் ஸ்டேஷனடி. அதுவுமில்லாவிட்டால் கஸ்தூரியார் வீதி. கட்டக் கடைசியாக வேறு வழியில்லாமல் தின்னவேலிச்சந்தி. தின்னவேலிச்சந்தி இறைச்சி வெறும் எலும்பும் சவ்வும்தான்.

போகும்போது கடையில் கூட்டம் அதிகமிருந்தால் தயங்கிபடி தள்ளி நிற்பேன். அங்கெ ஆளாளுக்கு ஒரு கிலோ, அரைக்கிலோ என்று வாங்குவார்கள். கால் கிலோவென்றால்? வெட்கம் பிடுங்கித்தள்ளும். அதுவும் சென்ஜோன்ஸில் படிப்பவன், கேவலம் கால்கிலோ வாங்குவதா? கூட்டம் கலையும்வரை கடையில் தொங்கும் ஆட்டின் துடையையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பேன். ரம்பா கூட நெருங்கேலாது. அவ்வளவு டேஸ்ட்டாக இருக்கும். கடவுளே, வாழ்க்கையில் படித்துப் பெரிய ஆளாக வந்து நிறைய உழைச்சு, ஒரு காலத்தில இந்த முழுத் துடையையுமே வாங்கி பொரியல் கறி வைக்கவேணும்.

"தம்பி என்ன ஏமலாந்திக்கொண்டு நிக்கிறாய், என்ன வேணும்?"

"அண்ணை நல்ல இறைச்சியா ஒரு ..."

"துடை ஒண்டை தட்டுவமா?"

"துடை எண்டா நல்லமண்ணே, ஆனா எனக்கு காக்கிலோதான் வேணும்"

"காக்கிலோக்கு ஆட்டிண்ட…"

என்று கடைக்காரர் புறுபுறுத்தபடி அங்கொன்றும் இங்கொன்றுமாய் பொறுக்கத்தொடங்கினார். நான் மெதுவாகச்சொன்னேன்.

"அண்ணே தனியிறைச்சியா போடுங்கோ"

கடைக்காரர் நிமிர்ந்து பார்க்காமல் ஒரிரு சதைத்துண்டுகளை பேப்பருக்குள் சுத்துகிறார். எனக்கோ வந்த நேரம் தொடக்கம் ஒரு மகா டவுட். கடைக்காரர் கோவத்தில் பேசியது உண்மையாகவிருந்தால் சந்தோசம். இல்லாவிட்டால் மறி ஆடல்லவா. கஷ்டப்பட்டு வாங்கிற இறைச்சி. நல்லா இருக்க வேணாமே.

"அண்ணை இது கிடாய்தானே?"

அந்தாள் ஒரு பதிலும் சொல்லாமல் இறைச்சியை நிறுத்து பேப்பரால் மீண்டும் சுற்றித்தர நான் சந்தை பாக்கை நீட்டுகிறேன். நாற்பத்தைந்து ரூபா. கையில் இன்னமும் இருபது ரூவாக்கள் இருக்கின்றன. எப்படிக்கேட்கலாம்…

"அண்ணே, வீட்டில ஒரு பெரிய அல்சேஷன் நிக்குது. எலும்பு வேணும். ஒரு அஞ்சு ரூவாய்க்கு தாறீங்களே?"

எலும்பும் தோலுமாய் நோஞ்சானாய் திரியும் ஹீரோ என்னைப்பார்த்து உறுமியது. “நாயே நான் உனக்கு அல்சேஷனா?”

"ஐஞ்சுரூவாய்க்கெல்லாம் கிடைக்காது .. இந்தா .. பத்து ரூவா குடு"

கடைக்காரர் இரண்டு மூன்று எலும்புகளை வெட்டிச்சுற்றித்தர, முதல் மிஷன் ஓவர். இப்போது கையில் வெறும் பத்து ரூபாய்தான் மிச்சம். மகாராஜாவின் வண்டி தின்னவேலிச்சந்தைக்குள் நுழைகிறது. உருளைக்கிழங்கு வாங்கவேண்டும். சின்னக் கிழங்குகளை பொறுக்கி தராசில் போட்டு, பத்து ரூபாய்க்கு வேணுமென்று கேட்டு, கிடைக்கும் நூறு கிராமையோ, இருநூறு கிராமையோ பையில் போட்டபடி வீடு திரும்பும்போது நேரம் பன்னிரண்டாகியிருக்கும்.

“அம்மா தனி இறைச்சியும் வாங்கினனான். எலும்பும் வாங்கினனான். ஒரு பொரியல் கறியும், ஒரு தண்ணிக்குழம்பும் வைப்பமே?”

அம்மா காத்துப்போல கனக்கும் இறைச்சிப்பையை தூக்கிப்பார்த்து, என்னையும் ஒரு முறைப்பு முறைத்துவிட்டு பதில் சொல்லாமல் வேலையைக் கவனிப்பார். இனி வெயிட்டிங் கேம்.

அம்மாவின் மெனு வெகு எளிமையானது. இறைச்சியும் உருளைக்கிழங்கும் அந்த எலும்பையும் ஒண்டாப்போட்டு ஒரு கறி, கத்தரிக்காய் வெள்ளைக்கறி, தனி ரசம். அவ்வளவுதான். ஆனால் இந்த மெனுவை அடிக்க உலகத்தில் வேறு எந்த மெனுவும் கிடையாது. அவாவில் சட்டியில் கறி கொதிக்கமுதலேயே தேங்காய்ச்சிரட்டையை கையில் எடுத்துவிடுவேன். “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” தொடங்கி “நானாக நானில்லைத்தாயே” என்று சென்டிமென்ட் குசினியை நிறப்பும். சிறிது நேரத்தில் அக்காமார்களின் பலத்த எதிர்ப்புக்கும் மத்தியிலும் அம்மா “இந்தா கொண்டோடு” என்றபடி  எப்பன் சொட்டுக் கறியை சிரட்டைக்குள் போட்டுத்தருவார். எடுத்துக்கொண்டு அக்காக்களுக்கு உச்சி, நெல்லி மரத்தடியில் போயிருந்து ஒவ்வொன்றாக, முடியப்போகுதே, முடியப்போகுதே என்று அங்கலாய்த்தபடியே சாப்பிடுவேன். முடிச்சு, வழிச்சு நக்கி, பிறகு சிரட்டையில் ஒட்டியிருக்கும் மீதி கறி ஊறிய தேங்காய்ப்பூக்களையும் சுரண்டி சாப்பிட்டால் ..ஸ்ஸ்ஸ் டிவைன்!

சாப்பாடு ரெடி என்றதும் சங்கக்கடையில் மண்ணெண்ணை வாங்கிறமாதிரி எல்லாரும் அடிபட்டு குசினிக்குள் ஓடிவருவோம். அம்மாதான் தானே பொறுப்பெடுத்து போட்டுத்தருவார். ஆளுக்கு ஒரு கரண்டி. “நீட்டு” எனறால் மறுகதை இல்லாமல் கோப்பையை நீட்டி சாப்பாட்டை வாங்கிக்கொண்டு போயிடோணும். என் கரண்டியில் எப்போதும் உருளைக்கிழங்கே அதிகமாக வரும். ஈரல் கிடைக்காது. இதே முறைப்பாட்டை வீட்டில் எல்லோரும் வைப்பார்கள். ஏனென்றால் கறியில் இறைச்சியைவிட உருளைக்கிழங்கின் ஆக்கிரமிப்பே அதிகமிருக்கும். இரண்டாம் தடவை கறி கொடுக்கப்படமாட்டாது. சோறு போட்டால் வெறும் குழம்புதான். அதனால் சொட்டுக்கறியோடு நிறையச்சோறு சாப்பிடும் திறமை இருக்கவேண்டும். அந்த ஒரு கரண்டி இறைச்சிக்கறியோடு ஒரு பானை சோறு சாப்பிடலாம்.

சாப்பாடு முடிந்து அம்மா குசினி எல்லாம் அடைத்தபின்னர் ஈசி செயாரில் லக்சுமியோடோ, சிவசங்கரியோடோ ஆழ்ந்துவிடுவார். நான் நெல்லி மரத்தடியில் விளையாடிக்கொண்டிருப்பேன். ஹீரோ சதையே இல்லாத எலும்புத்துண்டை கடித்துப்பார்த்து களைத்துப்போயிருக்கும். "எனக்கெண்டு சொல்லி வாங்கிட்டு, பண்டி, மச்சையைக்கூட உறிஞ்சி எடுத்திட்டியே" என்று திட்டும். நான் சட்டை செய்யாமல் பின்பத்தியால் குசினியடிக்கு மெதுவாக நுழைவேன். ஹீரோவும் வாலை ஆட்டியபடி வரும். குசினிக்கதவை மெல்லத்திறந்து, கறிச்சட்டியின் மூடியை சத்தம் எழுப்பாமல் திறந்து, உள்ளே இரவுக்கென்று வைத்திருக்கும் சொட்டுண்டு கறியில் எட்டிப்பார்க்கும் இறைச்சித்துண்டை தூக்கி வாயில் போட, பின்னாலே வெயிட் பண்ணிக்கொண்டிருக்கும் ஹீரோ ஆர்வ மிகுதியில் காலை திடீரெண்டு பிராண்டிவிட, அந்த அரவத்தில் “ணங்”கென்று கையிலிருந்த மூடி சட்டியில் பட்டு சத்தம் எழுப்பிவிடும்.

"அம்மா தம்பி மிச்சக்கறியை களவெடுக்கிறான்" – மாத்தையா

"அவனுக்கு இரவும் கறி  குடுங்களேன் பார்ப்பம், அப்ப இருக்கு விளையாட்டு" -- டக்ளஸ்.

அம்மா ஈசி செயாரிலிருந்தே குரல் கொடுப்பார்.

"இப்ப குசினியை விட்டு ஒராள் வெளிய போகாட்டி அகப்பக்காம்பு தேடி வரும்"

விஸ்க்கென்று நெல்லி மரத்தடிக்கு பறந்தால் அங்கே எனக்கு முன்னமேயே ஹீரோ ஓடிப்போய் நான் வருவதைக்கண்டு வாலாட்டும். துரோகி.

"எலும்பு கொண்டுவந்தியா"

கையை விரித்துக்காட்டினேன். அந்த அவசரத்திலும் மறக்காமல் எடுத்துவந்த கறி எலும்பு இருந்தது. ஹீரோ ஜம்மென்று பாய்ந்தது. ம்ஹூம். அவ்வளவு ஈசியாவா? அதில் ஒட்டிக்கொண்டிருந்த இறைச்சியை சாப்பிட்டு, மச்சையை உறிஞ்சி, வெறும் எலும்பு மட்டுமெ மிச்சம் என்பதை உறுதிப்படுத்திவிட்டே ஹீரோவிடம் கொடுப்பேன். முறைத்துக்கொண்டே வாங்கி கறுவிக் கறுவிக் கடித்தாலும் அதன் வால் ஆடிக்கொண்டேயிருக்கும். தன்னிச்சையாக.

இரவுச் சாப்பாடில் ஒரு பெரிய சங்கடம். இருப்பதே கொஞ்சக்கறி.  அதில் ஆளுக்கு காக்கரண்டி கறி கிடைத்தாலே அதிசயம். அதை வைத்து ஒண்டும் செய்யமுடியாது. ஆக, இறைச்சித்துண்டு கிடைக்காட்டியும் பரவாயில்லை என்று சட்டிக்குத்தான் நான் சண்டை பிடிப்பேன். வெறுஞ்சட்டி என்று பெயர்தான். ஆனால் அதற்குள் நிறைய குழம்பு ஒட்டியிருக்கும். கரண்டியிலும் ஒட்டிய கறியை சேர்த்தால் வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி அது. ஓமெண்டிடோணும். அவாவில் ஒரு நீத்துப்பெட்டி புட்டை அப்பிடியே சட்டிக்குள் கவிட்டுக்கொட்டிப் பிரட்டி ஏறக்குறைய வெறும் புட்டினை கறி வாசத்தோடே சாப்பிடுவேன். கடைசியா கொஞ்சம் புட்டு இருக்கையில் ரசத்தையும் விட்டு அடித்தால் … ஸ்ஸ்ஸ்.

mutton

தீபாவளி என்றால் இவ்வளவு நெருக்கடி இருப்பதில்லை. எப்படியும் வீட்டில் ஒரு கிலோ இறைச்சி வாங்கப்படும். அல்லது எங்காவது நவாலிப்பக்கமிருந்து பங்கிறைச்சி கிடைக்கும். இரத்தம்கூட வறுத்துச்சாப்பிட்டதுண்டு. தீபாவளிக்கு மெனு கொஞ்சம் மேம்படும். ஒரு பொரியல் கறி. ஒரு தண்ணிக்குழம்பு. கரட், போஞ்சி, பிளம்ஸ், இறால் பொரியல் எல்லாம் மிக்ஸ் பண்ணிய சம்பாச்சோறு புரியாணி. கூட்டுக்கு ஒரு தக்காளிச்சம்பல் அல்லது கரட் சம்பல். அவித்த முட்டையை பாதி வெட்டி மேலே மிளகுத்தூள் சொட்டு உப்பு. அந்தச் சாப்பாட்டுக்கு சொத்தையே அடகு வைக்கலாம்.

ஆனாலும் தீபாவளி என்றால் தாலி அறுப்பார், யாராவது விருந்துக்கு வருவார்கள். எனக்கு கொலை வெறி வரும். பாவிகளா, இறைச்சிக்கறியை முடிச்சிடாதீங்கடா என்று மனசுக்குள் இறைஞ்சுவேன். வருபவர்களும், “டேபிள் மனர்ஸ்” என்று சொல்லி என்னையும் சாப்பிட அழைப்பார்கள். கக்கூசுக்குள் ஓடிவிடுவேன். எனக்கு இறைச்சிக்கறி கடவுள்போல. எனக்கும் அதுக்குமிடையில் வேற யாரும் வரக்கூடாது. பப்ளிக்கிலும் நாலு பேர் பார்க்கும்போது என்னால் அதனை ருசிக்க முடியாது. தனியத்தான் கரும்புலித்தாக்குதல் நடக்கும். இன்னொண்டு, ஆக்களுக்கு முன்னாலே ஒருக்கா போட்டுச்சாப்பிடலாம். இரண்டாம் தரம் போட்டுச்சாப்பிடலாம். மூன்றாம் தரம் கூட ஓகே. நானோ நான்கு, ஐந்து என்று அம்மா திட்டும்வரைக்கும் அவுட்டாகவே மாட்டேனே. அதனால் வந்தவர்கள் போனபின்பு நாமளே குசினிக்குள் இருந்து ஆட்டத்தை ஆரம்பித்து மெதுவாகவும் பலமாகவும் முன்னேறுவோம்.

எங்கள் வீட்டில் வந்து சாப்பிடும் எவருக்கும் தெரியும். அம்மா சமையலில் நிஜமாகவே "மாதா"! அவர் எது சமைச்சாலும் நன்றாகவிருக்கும். வெறும் புட்டும் வெந்தயக்குழம்பும் வைக்கச்சொல்லுங்கள். போட்டுச் சாப்பிட்டுக்கொண்டேயிருக்கலாம். அம்மாக்கள்தான் நம் நாக்கின் உப்புச்சுவையையும், இனிப்புச்சுவையையும் உவர்ப்பையும் புளிப்பையும் தீர்மானிப்பவர்கள். வேறு எந்த சாப்பாட்டின் தரமும் அம்மாக்களின் சாப்பாட்டுச் சுவையோடே ஒப்பிடப்படுகின்றன.  அதிலும் என் அம்மாவின் சமையல் தனிரகம்!

முக்குழி அப்பம் என்று ஒரு ஐட்டம். வெறுமனே கோதுமை மாவை கரைத்து முக்குழிச்சட்டிக்குள் வார்த்து, அடுப்பில் கொஞ்சநேரம் மூடி வைப்பார். பின்னர் அதை எடுத்து சீனி-தேங்காய்ப்பால் கரைசலில் தோய்த்து சாப்பிட்டால் தேவாமிர்தம்.  முக்குழி அப்பத்தை நம் ஊரிலே வேறு எவரும் செய்து நான் கண்டதில்லை. இன்னுமொன்று இறைச்சிப்பொரியல் கறி. அம்மாவின் ட்றேட் மார்க் கறி அது. ஆட்டிறைச்சியை கழுவி கொஞ்சம் உப்பு போட்டு ஒரு சட்டிக்குள் போட்டு மூடி அவிக்கவேண்டும். தண்ணீர் விடலாகாது. இறைச்சி நீரிலேயே அது அவியும். நீர் எல்லாம் நன்றாக வற்றி இறைச்சி அவிந்தபின்னர், பின்னர் மிளகாய்த்தூள், வெங்காயம், மேலும் கொஞ்சம் உப்பு போட்டு நல்லெண்ணையில் கொஞ்சம் கொஞ்சமாக அடிப்பிடிக்காமல் வதக்கவேண்டும். நல்ல கோண்டாவில் ஆடென்றால் நல்லெண்ணையில் வதங்கி சிங்கன் முழிஞ்சுகொண்டு வருவார். அதை சம்பா அரிசிச்சோற்றோடு போட்டு அடித்தால் கமறும்.

ஆட்டிறைச்சியின் தரமும் ருசியும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய பின்னர் தானாகவே குறையத்தொடங்கியது. அதனால் எப்போது யாழ்ப்பாணம் வரும்போதும், அது எந்தக்கோயிலின் திருவிழாக்காலமாக இருந்தாலும் ஆட்டிறைச்சி சாப்பிடாமல் திரும்புவதில்லை. இம்முறை யாழ்ப்பாணம் சென்றபோதும் இறைச்சி, இறைச்சி, இறைச்சிதான். உலகப்புகழ் பெற்ற கோண்டாவில் இறைச்சிக்கடையை இப்போது மூடிவிட்டார்கள். கொக்குவில் ஸ்டேஷன் கடையும் பூட்டு. கஸ்தூரியார் வீதியிலும் கடையை கண்ட சிலமன் இல்லை. ஆட்டிறைச்சி வாங்குவதற்கு இப்போது பண்ணைக்கு செல்லவேண்டும். இல்லாவிட்டால் ஐஞ்சு சந்திக்கருகிலும் ஒரு கடையிருக்கிறது. கிலோ ஆயிரத்து முந்நூறு ருபாய்கள். தனியிறைச்சி என்ற ஒன்றே இப்போதில்லை.

 

mutton3

இப்போதெல்லாம் கடைக்காரர் எவ்வளவு என்று கேட்டால், ஒரு பெருமிதப்புன்னகையோடு ஆட்டின் துடையைக்காட்டுவேன். கிடாய் ஆடென்று புரூவ் பார்த்தபின்னரே வாங்குவது. கொழுப்பு, முள்ளு, சவ்வு எல்லாம் இல்லவே இல்லை. வீட்டிலும் அக்கா பார்த்து பார்த்து சமைத்துத்தருவா. கறி வேண்டாமென்றளவுக்கு தாராளமாக கிடைக்கிறது. அது அளவுக்கதிகமாகவே கிடைப்பதாலோ என்னவோ, அந்த அருமந்த ருசி கெட்டுவிட்டது. கொஞ்சக் கறிக்கு பானை சோற்றை சாப்பிட்டபோது கிடைத்த சுகானுபவம், கொஞ்ச சோறுக்கு கோப்பை கறியை சாப்பிடுவதில் கிட்டுவதில்லை. இப்போது எல்லோருக்கும் எல்லாமே கிடைக்கிறது. அதனால் அதன் அருமையை எவரும் அறிவதாயில்லை. “எண்ட பெடியனை கஷ்டம் தெரியாமல் வளர்க்கிறன்” என்று ஒரு நண்பன் பெருமைப்பட்டான் . “கஷ்டம் தெரியாமல் வளர்ப்பது பெருமையில்லை, உன் பிள்ளை வறுமை கொடுக்கும் உன்னதமான தருணங்களையும் உறவுகளையும் அனுபவங்களையும் இழக்கப்போகிறது” என்று வாய்வரைக்கும் வந்த வார்த்தையை மென்றுவிட்டேன். உள்ளூற நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு நன்றி சொன்னேன். ஒவ்வொரு மில்லி செக்கனையும் அனுபவித்து வாழ்ந்தோம்!

இன்று பண்ணைக்குப்போனால் அங்கே வரிசைக்கு ஐந்தாறு ஆட்டிறைச்சிக்கடைகள் இருக்கின்றன. இறங்கும்போதே “தம்பி இஞ்ச வாங்கோ”, “இப்பதான் அடிச்சது”, “நல்ல கிடாய்”, “துடையை அப்பிடியே வெட்டித்தாறன்” என்று வியாபாரிகள் கூவிக்கூவி அழைக்கிறார்கள். வருபவர்கள் எல்லாம் ஆளுக்கு இரண்டு கிலோ, மூன்று கிலோதான். எல்லாக்கடைகளிலும் ரம்பா தாராளமாக தொங்கியது. ஊருக்குப்போனதிலயிருந்து நாலைந்து தடவை இறைச்சி வாங்கிய கடை. கடைக்காரர் பரிச்சயமாகிவிட்டார். பேச்சுகொடுத்தேன்.

“அண்ணே … இப்பவும் ஆரும் சின்னப்பெடியள் காக்கிலோ இறைச்சி எண்டு வந்து வாங்கிறவங்களோ?”

“காக்கிலோ ஆருக்குத்தம்பி காணும்? அகப்பைக்க கூட ஆப்பிடாது”

இறைச்சியை வாங்கிக்கொண்டு அமைதியாக திரும்பினேன். காக்கிலோ கறி அகப்பைக்குள்ளேயே சிக்காதா?  எப்படி எமக்கு மட்டும், உலகமே அகப்பைக்குள் அகப்பட்டது?

 

*********************

ஊரோச்சம் பகுதி 1

படங்கள்
Charinda Perera

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட