வழியில் நைல் நதி குறுக்கிட்டது.
இந்தப் பக்கம் புகண்டா காடும் அந்தப் பக்கம் சவான்னா புல்வெளியும் பரவிக்கிடக்க, நடுவே நதி கடல்போல வியாபித்திருந்தது. நாம் பாலத்தைக் கடக்கும்போது சூரியன் காடுகளிடையே தலை தூக்க ஆரம்பித்திருந்தான். மொத்த ஆறுமே ஒரு வண்ணக்குழம்புபோல நகர்ந்துகொண்டிருந்தது. அதன் இரு புறங்களிலும் நீருக்குள்ளிருந்து தலை தூக்கியிருந்த நீர் யானைகளின் வழுக்கல் நெற்றிகளில் சூரியக் கதிர்கள் பட்டுத் தெறித்து மின்னின. ஆங்காங்கே சில முதலைகளையும் மௌலீமா காட்டினாள். நாங்கள் வாகனத்தைப் பாலத்தருகே நிறுத்தி இறங்கினோம். பொன்னிற மேனியுடன் நதியும் அதனுள்ளே முதலைகளும் பறவைகளும் நீர் யானைகளும் என்று அழகும் ஆபத்தும் ஒரு சேர்ந்த இயற்கை அது. நதி ஒரு நகரும் காடு. அதைப் பார்த்துக்கொண்டேயிருந்தால் நேரமாவதையே உணரமுடியாது. மௌலீமாதான் வா போகலாம் என்று வலிந்து அழைத்துப்போனாள். இப்பயணம் முழுதும் ஏற்பட்ட உணர்வு இது. ஒன்றில் மனம் தரித்துவிட்டால் பின்னர் அங்கிருந்து நகரவே அது இடம் கொடுக்காது. ஆனால் அதேசமயம் அடுத்ததையும் பார்த்தே தீரவேண்டும் என்று அது அடம் பிடிக்கவும் செய்யும். ஒரு பெரு நாவலின் அற்புத வரிகளில் இரசித்து நிற்கும் அதே கணத்தில் அடுத்த வரிகளும் என்ன என்று ஏங்கும் மனதில் அலைவு அது.
பாலம் தாண்டியதும் ஒரு இடைத்தங்கல் குடில் வந்தது. அங்கு நம் காவலுக்கென ஒரு வனக்காவலனையும் ஏற்றிக்கொண்டோம்.
கரீபு. கரீபு என்றால் அன்போடு வரவேற்கிறோம் என்று அர்த்தம். என் பெயர் சில்வா.
அவன் தன்னையும் அன்றைய பயண விவரங்களையும் அறிமுகப்படுத்த நாமும் நம் பெயர்களையும் ஊர்களையும் சொன்னோம். சில்வா கையில் துப்பாக்கி வைத்திருந்தான். சவான்னாக்குள் செல்லும் எல்லா வாகனங்களிலும் வனக்காவலர் இருக்கவேண்டும் என்பது விதி. எங்கெங்கே எந்தெந்த விலங்குகள் எந்நேரத்தில் நிற்கும் என்பது சில்வாவுக்குத் தெரிந்திருந்தது. நம் பயணம் தொடர்ந்தது. நாங்கள் கூரையை நன்றாக உயர்த்திவிட்டு எழுந்து நின்றோம்.
காடு சிறுத்து சவான்னாவாக உரு மாறிக்கொண்டிருந்தது.
முதலில் பார்த்தது கழுதைப்புலிகள் என்று நாம் அழைக்கும் ஹயீனாக்களைத்தான். நான் தொலைக்காட்சியில் பார்த்த ஹயீனாக்களைவிட நிஜத்தில் அவை பெரிதாக இருந்தன. அவை கூட்டமாக வந்து உறுமினால் சிங்கங்கள் பின்வாங்கக்கூடும் என்றுதான் தோன்றியது. இது ஒரு நல்ல சகுனம். பக்கத்திலேயே எங்கேயோ ஒரு வேட்டை நிகழ்ந்திருக்கிறது. நிச்சயம் நாம் சிங்கங்களைக் காணலாம் என்று சில்வா சொன்னான். ஹயீனா போன்ற விலங்குகள் வேட்டையாடுவதில்லை. மற்றைய விலங்குகள் கஷ்டப்பட்டு வேட்டையாடும்வரைக்கும் பொறுமை காத்து, பின்னர் அவற்றைக் கூட்டமாகச் சேர்ந்து விரட்டிக் கலைத்துவிட்டு அந்த வேட்டையைத் தாம் உண்ணக்கூடியவை. வல்லூறுகளும் அப்படித்தான். புல்வெளிக்குள் நம் வண்டி நுழைந்ததும் ஆங்காங்கே வளர்ந்து நின்ற மரங்களின் உச்சிகளில் வல்லூறுகள் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்திருந்தன. எங்குத் திரும்பினாலும் மான்கள் திரிந்தன. பொதுவாக antelope எனப்படும் இந்த மான் கூட்டத்திலும் deer, wobb, oridi என்று பல வகைகள் உண்டு. ஆங்காங்கே எருமைகளும் மேய்ந்துகொண்டிருந்தன. ஒரு நீர்த்திடலில் பல எருமைகள் சேற்றில் குளித்துக்கொண்டிருந்தன. சேறு மிருகங்களுக்கு ஒரு உடைபோல என்று சில்வா சொன்னான். வெயிலிலிருந்தும் பூச்சிக் கடியிலிருந்தும் அது அவற்றைக் காக்கிறது. எருமைகள்தான் சிங்கங்களின் விருப்புக்குரிய வேட்டையாகும். அதே சமயம் சிங்கத்துக்கு மிக அச்சுறுத்தலான விலங்கும் அதுதான். வேட்டையாடப்படும்போது எருமை சிங்கத்தைக் குதறி எடுத்துவிடவுங்கூடும். ஆயினும் ஒரு மானை விரட்டிப் பிடிப்பதைவிட எருமையைப் பிடிப்பது இலகு என்பதால் சிங்கம் அந்த ரிஸ்கை எடுக்குமாம்.
சற்று தூரம் தாண்டிப்போனதும் இராட்சத ஆபிரிக்க யானை ஒன்று தன் சுளகுகளை விசிறியபடி தனியாக நின்று மேய்ந்துகொண்டிருந்தது. ஆண் யானைகள் அனேகமாகத் தனியாகத்தான் அவ்விடம் இயங்குகின்றன. அதிலும் வளர்ந்த பெரிதான ஆண் யானைகள் கூட்டம் சேர்ப்பதில்லை. பெண் யானைகள்தான் கூட்டமாகத் திரிகின்றன. பருவ காலத்தில் மாத்திரம் காம வயப்பட்ட ஆண்களோடு இனப்பெருக்கத்துக்காகக் கூடுவதோடு சரி. அப்புறம் கர்ப்பக்காலம், பிள்ளைப் பேறு, பிள்ளை வளர்ப்பு என எல்லாவற்றையும் பெண் யானைகள் கூட்டமாகவே செய்துகொள்கின்றன. வயதான பெண் ஒருத்திதான் தன் கூட்டத்துக்குத் தலைமை தாங்குகிறாள். Matriarchal leadership உள்ள விலங்குக்கூட்டம் இது. எங்கே எப்போது தண்ணீர் கிடைக்கும். உப்பு கிடைக்கும். எந்தக் காலத்தில் எத்திசையில் புலம்பெயர வேண்டும் என்கின்ற தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் செய்திகள் எல்லாம் அப்பெண்ணுக்குத் தெரிந்திருக்கும். எத்தனையோ மைல்கள் தொலைவிலே கருக்கட்டும் முகில்களின் இடி விழுந்து அதிரும் நிலத்தை ஒற்றைக் காலில் நின்று உணரும் சூட்சுமத்தையும் அவளே தன் கூட்டத்துக்குக் கற்பிக்கிறாள். ஆண்களை இந்தப் பெண்கள் தம் கூட்டத்துக்குள் அண்டவே விடுவதில்லை. அதனால் சவான்னா புல் நிலம் முழுதும் ஆண் யானைகள் தனித்து அலைவதைப் பார்க்கமுடியும். ஆங்காங்கே பெண் யானைக் கூட்டங்கள் மரங்களுக்குக்கீழே ஓய்வெடுப்பதையும் கண்ணுற்றோம். அவர்களுக்கிடையே அலைந்து திரியும் யானைக்குட்டிகளைப் பார்க்கும்போது உள்ளுணர்வில் பேரன்பு ஒன்று திரண்டெழும். புல்வெளி நிலத்தின் தன்னிகரற்ற நகரும் மலைகள் அவை. ஆனால் அவை ஒருபோதும் தன் சுற்றாரிடத்தே அச்சத்தை ஏற்படுத்துவதில்லை. ஏற்படுத்தவேண்டிய தேவையும் அவற்றுக்கில்லை. ஏனைய விலங்குகள்போல நிலத்தைக் கட்டுப்படுத்தவும் தன் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தவும் அது பெரும் எடுப்புகளையும் செய்வதில்லை. அவற்றின் சிறு கண்கள் மாத்திரமே போதும். கருணைப் பெருங்கடலை ஏந்திய விழிகள் அவை. நாள் பூராக அவற்றையே பார்த்துக்கொண்டிருக்கலாம். ஆனால் நகரவேண்டும். ரோபேர்ட் புரொஸ்ட் கவிதை சொல்வதுபோல.
The woods are lovely, dark and deep.
But I have promises to keep.
And miles to go before I sleep.
And miles to go before I sleep.
தூரற்றே ஒரு மரத்தின் கொப்புகளுக்கிடையே பெண் சிங்கம் ஒன்று படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தது. இரவு வேட்டையாடித் தின்று தீர்த்த களைப்பு. அது ஓய்வெடுத்துக்கொண்டிருந்த மரத்தினை சொசேஜ் மரம் என்கிறார்கள். சவானா எங்கும் ஆங்காங்கே இந்த சொசேஜ் மரங்கள் வளர்ந்திருந்தன. அந்த மரங்களின் பழங்கள் நான்கைந்து அடிகள் நீளமான சோசேஜினைப்போலப் பழுத்துத் தொங்குவதால் அவற்றுக்கு அந்தப் பெயர் உருவாகியிருக்கிறது. பெரு விலங்குகள் உண்பதற்காகவே பிரத்தியேகமாகக் காய்க்கும் மரம் அது. யானைகளே பெரும்பாலும் அவற்றை உண்கின்றன. அதன் உச்சிக்கிளையில் ஏறி உட்கார்ந்தால் சவான்னா முழுதையும் கண்காணிக்கலாம் என்பதாலோ என்னவோ பகற் பொழுதுகளில் சிங்கங்கள் அதனை அண்டியே வசிக்கின்றன. அந்தச் சிங்கங்கள் எப்படித் திட்டமிடுகின்றன, எங்கே செல்லுகின்றன என்பதைப் பார்க்க இன்னும் மேலே தனிக்கிளைகளில் வல்லூறுகள் உட்கார்ந்திருக்கும். சவானா புல்வெளியின் அற்புத மரங்களுள் ஒன்று அது.
சற்று உள்ளே பயணமானதும் ஒட்டகச் சிவிங்கிகளது ஊர்வலத்தைக் காணும் பாக்கியம் கிட்டியது.
சவான்னாவின் இராணிகள் என்று ஒட்டகச்சிவிங்கிகளைச் செல்லமாக அழைப்பார்கள். அந்தப் பட்டத்துக்கேற்ப நெடித்த கழுத்தோடும் நீண்ட கால்களோடும் எடுப்பாகவே அவை வலம் வந்தன. ஒட்டகச் சிவிங்கிகள் எப்போதும் ஐந்தாறு சேர்ந்த கூட்டமாகத்தான் திரியும். ஆங்காங்கே நிற்கும் மரங்களின் கிளைகளை வளைத்து இலைகளைத் தின்னும். அவை நின்றுகொண்டே தூங்க வல்லன என்று சில்வா சொன்னான். படுத்துக்கிடந்தால் ஆபத்து வரும்போது உடனே எழுந்து ஓடுவதற்குச் சிரமம் என்பதால் இந்த ஏற்பாடாம். எழுந்து நிற்கும் ஒட்டகச் சிவிங்கியை இலகுவில் எந்த மிருகமும் வேட்டையாடிவிட முடியாது. உயரம் காரணமாகத் தூரத்திலேயே வேட்டை மிருகத்தை அவற்றால் கண்டறிந்துவிடமுடியும். வேகமாகவும் ஓடமுடியும். அப்படியே அருகில் வந்தாலும் ஒரே உதைதான். சிங்கம் சிப்பிலியாகிவிடும். இதனாலோ என்னவோ எருமைகளிடத்திலும் மான்களிடத்திலும் தெரிந்த, தாம் எந்நேரத்திலும் வேட்டையாடப்படலாம் என்கின்ற மிரட்சி யானைகளிடத்திலும் ஒட்டகச்சிவிங்கிகளிடத்திலும் இருக்கவில்லை. ஒருவித மிதப்பும் அலட்சியமும் அவற்றில் தெரிந்தது. வாகாக நம்மைத் தாண்டி நகர்ந்து செல்லும்போது அவை எம்மையும் விடுப்புப் பார்க்கும். ஆனால் மிரளுவதில்லை. நாம் புகைப்படம் எடுத்தால் திரும்பிப்பார்த்து போஸ் கொடுக்கும். எட்டில் அழகு. பதினெட்டில் அழகு என்று ஒரு பாட்டு இருக்கிறதல்லவா? அது ஒட்டகச்சிவிங்கிக்குத்தான் சாலப் பொருத்தம். பதினெட்டு அடிகள் உயரமான பேரழகு அது.
ஆபிரிக்காவின் ஐந்து பெரும் மிருகங்கள், big five, என்று சிங்கத்தையும் யானையையும் எருமையையும் சிறுத்தையையும் காண்டாமிருகத்தையும் அழைப்பார்கள். ஆனால் இது வெறுமனே சுற்றுலாப் பயணிகளைக் கவருவதற்காக உருவாக்கப்பட்ட பிரயோகம். இந்தத் திறந்த சவான்னா வெளியில் சில மணி நேரங்களைக் கழித்தாலே தெரிந்துவிடும். விலங்குகள் உலகத்தில் இராஜா, இராணி என்று ஒன்றுமே இல்லை. ஒரு மிருகம் இந்நிலத்தைக் கட்டுப்படுத்தி ஆழ்கிறது என்ற பேச்சே இங்கு கிடையாது. எல்லா மிருகங்களும் இங்கே உணவுக்காகவும் இனப்பெருக்கத்துக்காகவும் பிழைத்தலுக்காகவுமே கூடி வாழ்கின்றன. ஒன்று இன்றி மற்றையது இல்லை என்ற நிலை இங்குண்டு. இந்தச் சமநிலையை நாம் ஒவ்வொரு விலங்கினைப் பார்க்கும்போதும் அறியலாம். மான்களைச் சிங்கம் இலகுவாக வேட்டையாடிவிடும்தான். ஆனால் அந்த நிலத்தில் மான்கள் பல ஆயிரங்களில் திரிகின்றன. திரும்பிய இடமெல்லாம் மான் கூட்டம் மேய்ந்துகொண்டு நிற்கிறது. ஆனால் சிங்கங்கள் சில பத்துகள்தான் வாழ்கின்றன. எங்கு நோக்கினாலும் ஒட்டகச் சிவிங்கிகள் தலையை நிமிர்த்திக்கொண்டு திரிகின்றன. எருமைகள் தினவெடுத்து சேற்றை வாரிக்கொட்டியபடி காட்சி அளிக்கின்றன. யானைகள் தனியாக அலைகின்றன. டங் பீட்டில் என்கின்ற பூச்சியை அறிந்திருப்பீர்கள். யானையின் லத்தியைக் கொழுக்கட்டை பிடித்து, உருண்டையாக்கி, அதனை உருட்டிச்சென்று சேகரித்துவைக்கும் பூச்சி அது. தன் உருவத்தின் அளவைவிட ஐந்து மடங்கு பெரிய உருண்டையைக்கூட அது சரிக்கட்டித் தள்ளிச்செல்ல வல்லது. முடியாவிட்டால் இரண்டு பூச்சிகளாகச் சேர்ந்தும் உருட்டும். சில திருட்டுப் பூச்சிகள் மற்றைய பூச்சிகள் கஷ்டப்பட்டு உருட்டிய லத்தியைத் திருடவும் செய்யும். தாம் உருட்டிய லத்தி உருண்டைக்குள்ளேயே வாழ்க்கையை வாழும் பூச்சிகளும் உண்டு. மரங்களின் விதைகள் பரவ, லத்தியிலிருக்கும் ஊட்டச்சத்து மறுபடியும் மண்ணைச் சென்று சேர, கிருமிகள் பரவாதிருக்க இந்த டங் பீட்டில் பூச்சியின் செயல் மிக அவசியம். சவான்னாவின் வாழ்வு என்பதே ஒருவித சிம்பனி இசைதான். இங்கே ஒவ்வொரு விலங்கினதும் ஒவ்வொரு அசைவும் மொத்த வாழ்வியலுக்குமே தேவையானதொன்று. இதிலே சிங்கத்தின் பங்களிப்புக்குச் சற்றும் குறைவானதல்ல டங் பீட்டில் பூச்சியின் பங்கு. ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு புல்லினமும்கூட இங்கு முக்கியமானவைதான்.
சொல்லப்போனால், சவான்னாவுக்கு ஒரு இராஜாவை நாம் நியமித்தே ஆகவேண்டும் என்று கேட்டால் என்னுடைய தெரிவு மரமாகத்தான் இருக்கும். மரம் அளவுக்கு இந்த நிலத்தைத் தன் இட்டத்துக்கு ஆட்டிப் படைக்கும் எந்த உயிரியையும் காணமுடியாது. இங்கு வாழும் விலங்குகள் எல்லாமே மரங்களை அண்டிப் பிழைப்பவையே. மரங்கள் அவற்றைப் பயன்படுத்தித் தம் வாழ்வை அற்புதமாக மெருகேற்றிக்கொண்டிருக்கின்றன. அதன் பிறிதொரு பரிணாமத்தை நாம் மாலையில் சென்ற பயணத்தில் கண்கூடாகக் கண்டோம்.
காலையில் மூன்று மணி நேரமாக சவான்னா எங்கும் சுற்றிவிட்டு மதியம் விடுதிக்கு வந்தோம். விடுதியின் முகாமையாளர் பீகாரைச் சேர்ந்தவர். அவரது மனைவி ஒரு பெங்காலி. காதல் திருமணம். கடந்த பத்து ஆண்டுகளாக அந்தச் சுற்றுலா விடுதியைத் தாம் பராமரித்து வருவதாக அவர் சொன்னார். கணவன் முகாமையாளராக இருக்க மனைவி விடுதியின் பஃபே சமையல்களை ஒருங்கமைக்கிறார். ஒரு பீகாரியும் பெங்காலியும் காதலித்துத் திருமணம் முடித்து தத்தமது ஊரைவிட்டு வெளியேறி எங்கோ உகண்டாவிலிருக்கும் அடர் காட்டுப் பகுதி விடுதி ஒன்றில் வாழ்கிறார்கள் என்ற அவர்களது கதையே அற்புதமானது. அன்றைய மதிய உணவுக்கு பெங்காலி பாணியில் ஒரு மீன் கறியும் வைக்கப்பட்டிருந்தது. தவிர உள்ளூர் பலாப்பழங்களும் மாம்பழங்களும். நாம் நன்றாகச் சாப்பிட்டு சற்று நேரம் தூங்கி எழுந்தோம்.
நான்கு மணிபோல நாம் அந்தி நேரத்து சவான்னாவைப் பார்க்கப் புறப்படோம். காலையில் நாம் பார்த்த சம தரையான சவான்னாவிலிருந்து இது கொஞ்சம் மாறுபட்டு பள்ளத்தாக்குகளும் குன்றுகளும் நிறைந்த பெரு வெளியாகக் காட்சியளித்தது. நிறையப் பனை மரங்களும் வளர்ந்திருந்தன. பனை வடலிகளுக்கிடையே யானைக்கூட்டம் ஒன்று மேய்ந்துகொண்டிருந்தது. எங்கள் ஊர்ப் பனைகளைப்போல இந்தப் பனைகள் உயரமானவை அல்ல. ஆனால் நன்றாகச் சடைத்து வளர்ந்திருந்தன. காலையில் கண்டதைப்போலன்றி ஏன் இங்கு மாத்திரம் இப்படிப் பனை மரங்கள் பரவலாக வளர்ந்து நிற்கின்றன என்று சில்வாவைக் கேட்டோம். இது பருவகாலங்கள் மாறும்போது யானைகள் புலம்பெயர்ந்து செல்லும் பாதை என்று அவன் சொன்னான். யானைகளுக்குப் பனம் பழம் என்றால் மிகவும் பிடிக்குமாம். அவை தம் நெற்றியால் இடித்து, மரத்தைக் குலுக்கி, பழங்களை வீழ்த்தித் தின்ன வல்லவை. பனம் விதை பின்னர் யானையின் வயிற்றில் பல்லக்குப் பயணம் செய்து, லத்தி வழியே வெளியே வந்து பிறிதொரு இடத்தில் முளைத்து வளரும். மரங்கள் இப்படித்தான் தலைமுறை தலைமுறைகளாகப் புலம்பெயர்ந்துகொண்டே இருக்கின்றன. தம் பூக்களின் நறுமணத்தாலும் தேனாலும் தேனிகளையும் வண்டுகளையும் தூதாக்கி தமக்குள்ளே காதலிப்பது. பின்னர் கூடிக் கனியாகி விலங்குகளை வசியம் செய்து தம் அடுத்த தலைமுறையை உலகம் பூராவும் பரவலடையச் செய்வது. பார்த்தால் அசையாமல் ஒரே இடத்தில் நிற்கும் மரங்கள்போலத்தான் தெரியும். ஆனால் அவை உலகமெல்லாம் பரவி நிற்கின்ற சூட்சுமம் இதுதான். நமக்கு முன்னரே தோன்றி நமக்குப் பின்னரும் இந்தப் பூமியில் நிலைக்கப்போகும் உயிரி இது.
இதனைப் போய் ராஜா என்று சொல்லாமல் வேறு யாரை ராஜா என்பது?
ஆபிரிக்க சபாரி பயணம் என்பது வெறுமனே மிருகங்களைக் கண்டு களிக்கும் சுற்றுலா அல்ல. அதனை அனுபவித்துத் திரும்பும்போது வாழ்க்கைமீதான பார்வை கொஞ்சமேனும் நமக்கு மெருகேறியிருக்கும். மனதுள் ஆழ்ந்த அமைதி ஒன்று குடிகொள்ளும். வெறுமனே ஒரு புரதக் குழம்பிலிருந்து தோன்றிய, ஒற்றைக் கலங்களை இரட்டிப்பாக்கும் சக்தி பெற்ற உயிரி, புல்லாகிப் பூவாய் மரமாகி, பல் மிருகமாகி இன்று இப்பெரு இயற்கையாக வியாபித்து நிற்பது என்பது மில்லியன் கணக்கான ஆண்டுகளின் மெது கூர்ப்பாலும் தற்செயல்களாலும் தக்கனப் பிழைத்தலாலுமே சாத்தியமானது என்பதனை அந்த சில மணி நேர அனுபவத்திலேயே உணர்ந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். இப்படிப்பட்ட மிதமான கூர்ப்பின் வேகத்தை மனிதர்களாகிய நாம் வெறுமனே சில ஆயிரம் ஆண்டுகளில் மாற்றியமைக்க முற்பட்டதனால்தான் இயற்கையின் இருப்பும் நீட்சியும் சிக்கலடைகிறது. உயிரிகள் அழிந்துபோகின்றன. உலகின் சமநிலையும் குழம்புகிறது. அதற்குக் காரணம் மனிதர்களின் பேராசையே அன்றி வேறில்லை.
காந்தி சொன்ன பிரபலமான கூற்று ஒன்று உண்டு.
Earth provides enough to satisfy every man's needs, but not every man's greed.
சவான்னாவின் வாழ்வு கற்றுத்தந்ததும் அதுதான். இங்கே விலங்குகள் எதற்குமே பேராசை இல்லை. சிங்கம் பசிக்கு மாத்திரமே வேட்டையாடுகிறது. அதற்கு மேலே அது சிந்திப்பதில்லை. வேட்டை கிடைக்கிறதே, இரண்டை மேலதிகமாகக் கொல்லலாம் என்ற எண்ணம் அதற்கில்லை. நான்கு மான்களைத் தனியாக அடைத்து வளர்த்தால் நோய்வாய்ப்பட்ட காலத்தில் இலகுவாகத் தின்னலாம் என்று அது சிந்திப்பதில்லை. ஹயீனாக்கள் தொல்லை பண்ணுகின்றன என்று கூட்டுச்சேர்ந்து அவற்றை இரவில் சென்று சிங்கங்கள் தாக்குவதில்லை. சிறுத்தை தினமும் நம்மை அடித்துக் கொல்கிறதே என்று அது நீர் குடிக்கும் குட்டையில் எருமைகள் நஞ்சினைக் கலப்பதில்லை. யானைகள் பனம் பழங்களைப் பொறுக்கி பாத்தி போட்டு அடுத்த வருடத்துக்கு எனச் சேகரித்து வைப்பதில்லை. எந்த விலங்கும் தன் குட்டிகள் சுதந்திரமாகப் போவதையே தூண்டுகிறது. அவற்றுக்குச் செல்லம் கொடுத்து, அவற்றைத் தம் நிழலுக்குள்ளேயே வளர்த்தால் வயோதிபக் காலத்தில் அவை நம்மைப் பார்க்கும் என்ற எண்ணங்கள் அவற்றுக்கில்லை. தேவைக்கு உணவு. பிழைத்தலுக்கும் உயிரியல் நீட்சிக்குமான கலத்தல். அதற்கான இணைத் தெரிவு. இவை மாத்திரமே சவான்னாவின் அடிப்படை வாழ்க்கை. இப்படித்தான் நாமும் முன்னர் இருந்திருக்கவேண்டும். எங்கோ, எப்போதோ இயற்கைக்கு எதிராக எம்முடைய மூளையின் ஏதோ ஒரு கலம் தவறாக இரட்டிப்பாகித் தொழிற்பட ஆரம்பித்ததில் பகுத்தறிவு தோன்றி, அதுவும் எல்லோருக்கும் சமனாகத் தோன்றாமல் பலருக்குப் பிறழ்ந்ததில், இன்று நாம் நம்மையும் அழித்து, நாம் வாழும் பூமியையும் அழித்துக்கொண்டிருக்கிறோம். இது கூர்ப்பின் நீட்சியல்ல. கூர்ப்பு என்பது தன்னைப் பாதுகாக்க சூழலின் சமநிலையையும் தக்கவைக்கப் போராடும். இங்கு நாமோ சூழலை நாசமாக்கியபடி நம் இச்சைகளைத் திருப்திப்படுத்திக்கொண்டிருக்கிறோம். பேராசை என்பது நாமே நம் பகுத்தறிவால் உருவாக்கி வைத்திருக்கும் பிரான்கென்ஸ்டைன் பிசாசு. அது ஈற்றில் நம்மையும் அழித்து இந்தப் பூமியையும் சிதைக்காமல் ஓயப்போவதில்லை.
மாலை அந்தி சாயும் தறுவாயில் மூன்று மரங்கள் தனியாக வளர்ந்து நின்ற குடை மரங்களருகே வாகனத்தை சில்வா நிறுத்தச் சொன்னான். Umbrella Thorn Acacia எனப்படுகின்ற இந்தக் குடை மரங்களை நாம் டேவிட் அட்டன்பரோ காணொளிகளிலோ அல்லது லயன் கிங் திரைப்படத்திலோ நிச்சயம் பார்த்திருப்போம். சவான்னா புல் வெளியின் அடையாள மரங்களுள் ஒன்று இது. முட்கள் நிறைந்த, குடைபோன்ற மரக்கிளைகளைக்கொண்ட இம்மரங்கள்தான் அந்த வெப்ப வலய நிலத்தின் நிழல் தருக்கள். அந்தி வானில் வண்ணங்கள் குழம்பும் நிலையில் சவான்னா மிக அழகாக விரிவதைத் தரிசிக்கலாம். பச்சைப் புல்லும் ஆங்காங்கே வளர்ந்து நிற்கும் பனையும் குடை மரமும் அவற்றுக்கிடையே மேய்ந்துகொண்டிருக்கும் எருமைக்கூட்டங்களும் மான்களும் காட்டுப் பன்றிகளும் அழகை இன்னமும் அதிகமாக்கும். அமைதியாக இருந்தால் இரவுக்காகத் தயாராகும் மிருகங்களின் கர்ஜனைகளையும் கேட்கக்கூடியதாக இருக்கும். இரவில்தான் காடு துயில் எழுகிறது எனலாம். வேட்டைக்கு அப்போதுதான் சிங்கங்களும் சிறுத்தைகளும் தயாராகுகின்றன. வல்லூறுகளும் ஹயீனாக்களும் காதுகளைத் தீட்டிக்கொள்கின்றன. சிவிங்கிகளும் எருமைகளும் தத்தமது கூட்டத்தோடு நெருக்கமாகக் கூடி நின்று, கண்ணுக்குத் தெரியாமல் வரக்கூடிய ஆபத்தை எதிர்கொள்ள ஆயத்தங்களை மேற்கொள்ளும் சமயம் அது.
அன்று நாங்கள் நள்ளிரவு சபாஃரியும் செய்தோம்.
இரவு ஏழரைபோல நன்றாக இருட்டிய பின்னர்தான் அந்தப் பயணம் ஆரம்பித்தது. நதிப் பாலத்தருகே ஒரு கடையில் சபாரி டோர்ச்சுகள் இரண்டை சில்வா வாடகைக்கு எடுத்து வந்தான். பகல் முழுதும் வெக்கை காரணமாக நதிக்குள்ளேயே மூழ்கிக்கிடந்த நீர் யானைகள் இரவானதும் கரையேறி உணவுக்காக அங்கு அலைந்துகொண்டிருந்தது தெரிந்தது. நீர் யானைகளுக்குச் சருமம் இல்லாததாலோ என்னவோ, அவற்றைத் தரையில் காணும்போது குண்டான மனிதர்கள் நான்கு கால்களில் அம்மணமாகத் திரியுமாப்போலத் தோன்றியது. அவற்றுள் இரண்டுக்கிடையே ஏதோ சச்சரவுபோலும், தமக்குள் மூசி மூசி மோதிக்கொண்டிருந்தன. குளிர் காதுகளுக்குள் சிலுசிலுக்க ஆரம்பித்திருந்து. இரவு வானின் நட்சத்திர ஒளிச் சிமிட்டல்கள் சவான்னா நிலமெங்கும் துமித்துக்கொண்டிருந்தன. தூரத்தே அடிவானத்தில் நகரம் ஒன்று சன்னமாக ஒளிர்ந்தபடி தான் இந்த சவான்னாவின் வாழ்வைத் தின்று ஏப்பம் விடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று உணர்த்திக்கொண்டிருந்தது.
பிரதான சாலையிலிருந்து இறங்கி மண் பாதைக்குள் சென்றதுமே சில்வா டோர்ச்சு வெளிச்சத்தை ஒரு பக்கம் பாய்ச்சினான். திடீரென்று இரண்டு கண்கள் வெள்ளை நிறத்தில் மின்னின. நாம் எல்லோரும் ஆச்சரியத்தோடு அது என்ன என்று கேட்டோம். அண்டெலோப் என்கின்ற மானினம் என்று சில்வா சொல்ல எங்களுக்கு என்னவோ சந்தேகம். எப்படிக் கண்டுபிடிக்கிறாய் என்று கேட்டோம்.
கண்களின் நிறம்தான் முதன்மையானது. மான்களின் கண்கள் வெள்ளிபோல மின்னும். இதுவே சிங்கம், சிறுத்தை என்றால் மஞ்சள் வண்ணமாக இருக்கும். கண்கள் ஒளிரும் உயரத்தையும் கவனிக்கவேண்டும். எருமைகளின் கண்கள் உயரத்தில் தெரியும். அவற்றின் கண்களுக்கிடையேயான இடைவெளியும் அதிகம். எருமைகள் கூட்டமாக நிற்குமாதலால் நூற்றுக்கணக்கில் அவற்றின் கண்கள் ஒன்றாகத்தெரியும். இதோ பாருங்கள்.
சில்வா வெளிச்சத்தை அடிக்க, பட்டென்று பல நூற்றுக்கணக்கான கண்கள் நம்மை நோக்கி ஒளி பாய்ச்சின. நட்சத்திர வானம் காட்டில் இறங்கி மேய்வதுபோல. ஒட்டகச் சிவிங்கிகள் புற்களுக்கு மேலாக உயர்ந்து நிற்குமாதலால் அவற்றை இனம் காண்பது ஒன்றும் சிரமமாக இருக்கவில்லை. வழமைபோல தனித்த ஆண் யானைகளையும் பார்க்கக்கூடியதாக இருந்தது. சில்வா மான்களுடைய கூடல் திடலுக்கு நம்மை அழைத்துச்சென்றான். அது ஒரு ரோம் நகரத்து கொலோசியம்போல புற்கள் எதுவுமற்ற புழுதி நிறைந்த விளையாட்டு மைதானமாய்த் தெரிந்தது. வெளிச்சத்தை எங்கு அடித்தாலும் கண்கள் மின்னின. ஒன்றிரண்டு கண்கள் அல்ல. பல்லாயிரக்கணக்கான கண்கள். எங்கெனும் சோடி சோடியாக மான்கள். அவற்றுக்கிடையே எங்காவது மஞ்சள் நிறக் கண்கள் பளிச்சிடுகின்றனவா என்று தேடினோம். இத்தனை மான்கள் சூழ்ந்திருக்கும் வெளியில் ஒரு சிங்கம்கூடவா வேட்டைக்கு வந்திருக்காது? வெளிச்சம் எங்கெல்லாம் பாய்கிறதோ அத்திசையை நோக்கி மொத்த மான் கூட்டமும் வேகமாக ஓடியது. வெளிச்சம் அவற்றுக்கு ஆபத்தை உணர உதவியாக இருக்கிறது. அதனால் அது எப்படி வருகின்றது என்பதைப்பற்றி அவை கவலைப்படவில்லை. அவற்றின் நோக்கமெல்லாம் வேட்டையிலிருந்து தப்பவேண்டும். வேகம் கெடுத்துப் பின் தங்கும் மான்கள்தான் வேட்டையில் சிக்குவதுண்டு. You don’t need to be the fastest of the herd, just don’t be the slowest என்று சில்வா சிரித்தான். ஒரு மான் ஓடத்தொடங்கினால் போதும். அத்தனையும் அலறி அடித்துக்கொண்டு அதனை முந்தி ஓடின. இரவில் கண நேரம் நின்று நிதானித்துச் செயற்படுவதுகூட ஆபத்துதான். இப்படித் தன்னையும் பாதுகாத்தபடி சமயம் கிடைக்கும்போதெல்லாம் புற்களையும் மேயவேண்டும். அத்தோடு கூடுதலும் வேண்டும். அவற்றைப் பொறுத்தவரையில் இது ஒரு numbers game. சிங்கத்தின் இருப்பும் பிழைத்தலும் அதன் பலத்தாலும் நிலத்தின் உரிமையை நிலைப்படுத்துவதாலும் தீர்மானிக்கப்படுகிறது. மான்களின் இருப்பும் பிழைத்தலும் எண்ணிக்கைகளால் தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு உயிரிக்கு ஒவ்வொரு பிழைத்தல் வழிமுறைகள். மனிதக் குலத்தின் பிரிவுகளுக்கும் இதே நிலைதான். ஏன் மேற்குலக நாடுகளில் இந்தியக் குடியேறிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன என்று நினைக்கிறீர்கள்? இந்த எண்ணிக்கை வழி ஆதிக்கத்தை அவர்கள் உணர ஆரம்பித்ததே அதற்குக் காரணம். மனிதர்கள் இனம், மதம், மொழி, சாதி, பணம் போன்ற கட்டமைப்புகளால் தம் இருப்பையும் பிழைத்தலையும் உறுதிப்படுத்திக்கொள்ள முயல்கிறார்கள். கூட்டம் சேர்க்கிறார்கள். ஏனைய கூட்டத்தை எதிர்க்கிறார்கள். அதனால்தான் எல்லோருக்கும் ஒரு வாக்கு என்கின்ற சனநாயக அமைப்பு இந்நாட்களில் படு தோல்வியை அடைந்துகொண்டிருக்கிறது. இந்த அமைப்பு பெரும்பான்மைச் சமூகங்கள் தம்முடைய ஆதிக்கங்களை எந்நேரமும் நிலை நிறுத்திக்கொள்ளவே துணை புரியும். கூர்ப்பில் சனநாயக அமைப்புக்கு இடமில்லை. சவான்னாவில் சனநாயகம் மிளிர்ந்தால் அங்கே மான்களும் எருமைகளும் கோலோச்ச, சிங்கமும் புலியும் சிங்கியடித்து ஒழிந்துபோகும் சந்தர்ப்பமே அதிகம்.
இரவு மணி பத்தாகிவிட்டிருந்தது. வாகனத்தின் எஞ்சினையும் டோர்ச்சு வெளிச்சத்தையும் நிறுத்திவிட்டு ஒரு பத்து நிமிடங்கள் அமைதியாக சவான்னாவை உள்வாங்கலாமா என்று நான் யோசனை சொல்ல எல்லோரும் ஆமோதித்தார்கள். வாகனத்தின் இரைச்சல் நிற்க, இரவுக்குள் நாம் ஒளிந்துகொண்டோம்.
அன்று நிலவு இன்னமும் எழுந்தருளவில்லை. வானம் முழுக்க நட்சத்திரங்கள். கூர்ந்து பார்க்கையில் பால்வீதியையும் உள்வாங்க முடிந்தது. ஒரு வகையில் இரவு வானமும் இன்னொரு சவான்னாதான். அங்கே மான் கூட்டங்களும் வேட்டை மிருகங்களும் எருமைகளும் சிவிங்கிகளும் யானைகளும் தரித்து நின்றன. குளத்து நீரில் வானம் மிதப்பதுபோல இப்போது வானத்தில் கீழிருக்கும் சவான்னா படிந்திருக்குமாப்போலத் தோன்றியது. டோர்ச்சு இல்லாமலேயே அவற்றின் கண்கள் மின்னின. காது கொடுத்துக்கேட்டால் புற்களிடையே கிசுகிசுவென மான்கள் ஓடித்திரிவதை உணர முடிந்தது. தூரத்தில் எங்கோ ஒரு யானையும் பிளிறியது. இங்கு எங்கோதான் சிங்கங்கள் பதுங்கியிருக்கின்றன. அத்தனை பெரும் கூட்டத்தில் சிக்கப்போகும் ஒரே ஒரு மானுக்கான பதுங்கல். அந்தக் கூட்டத்திலிருக்கும் ஒவ்வொரு மானுக்கும் தான் அந்த ஒரு இரை மானாகிவிடக்கூடாது என்ற பதைபதைப்பு இருக்கலாம். எந்நேரத்திலும் தான் வேட்டையாடப்படலாம் என்ற அச்சத்தோடு வாழும் வாழ்க்கை நரகம்தான். ஆனால் மான்கள் அவற்றுக்கு இயைவாக்கப்பட்டிருந்தன. வேட்டையாடப்பட்டு வீழும் சக மான்களை நினைத்து அவை கவலைப்படுவதுமில்லை. அந்த வேட்டைக் களத்திலும் அவற்றின் கூடல் திடல் திருவிழாக்கோலம் பூண்டிருக்கிறது. இறப்பும் ஓரிடத்திலேயே நிகழ்ந்தேறும் அற்புதத் திடல் அது. ஊடலும், தன் பெண்ணைக் கவர ஆண்கள் நிகழ்த்தும் பலப் போரும், ஆணை அலைக்கழித்து ஈற்றில் தன் இணையைத் தெரிவு செய்யும் பெண்களும், எல்லாவற்றுக்கும் காலான சில கண நேரக் கூடலும், அப்புறம் மறுபடியும் மேய்தலும் அங்கு நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. அடுத்த கணம் அவர்களுள் எவரும் வேட்டையாடப்படலாம் என்ற அச்சம் அந்த இச்சைக் கணங்களில் மறக்கப்படுகிறது. இந்த அபத்தத்தைப் பார்த்து வானத்து சவான்னா விண் மீன்கள் புன்னகை பூக்கின்றன. நான் அந்தப் பேரிரவின் அன்பில் கண்கள் கலங்கி, நிலைதடுமாறிப்போயிருந்தேன். இரவை வாரி அணைக்க என் கைகள் பெருவெளி எங்கும் நீள ஆரம்பித்தது. கவிஞன் மெதுவாக என் காதுகளுக்குள் கவி பாட ஆரம்பித்தான்.
உன்னைத் தழுவிடலோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி.
தொடரும்

Comments
Post a Comment