Skip to main content

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 9 - காதலின் துயரம்


அன்றுதான் காட்டுத் தர்பாரைப் பார்க்கப்போவதற்கு நாம் திட்டமிட்டிருந்தோம்.

முந்தைய தினமே கம்பாலாவிலிருந்து புறப்பட்டு நான்கு மணி நேரம் பயணம் செய்து இந்த மச்சிசன் நீர்வீழ்ச்சியை அண்டிய வனப்பகுதிக்கு வந்திருந்தோம். ஜெகனின் உள்ளூர் நண்பர் ஒருவர்தான் இந்தச் சுற்றுலாவை ஒழுங்குபடுத்தியிருந்தார். இரண்டு சபாரி வாகனங்கள். நம் வாகனத்துக்கு சோபியா ஓட்டுநர். லௌமி, சுகி, அவர்களுடைய மகன்கள் இருவரும் பயணம் செய்த வாகனத்துக்கு வின்சன் ஓட்டுநர். மௌலீமா ஒரு பொதுவான வழிகாட்டி. எல்லோருமே வனவிலங்குகள் சம்பந்தமான உயர்கல்வி கற்றவர்கள். இருபதுகளில் இருக்கும் இளைஞர்கள். நாம் தங்கி நிற்கும் மேர்ச்சிசன் காட்டுப்பகுதியைப் பற்றிய தகவல்களை எல்லாம் அவர்கள் பயணம் நெடுகவும் சொல்லிக்கொண்டே வருவார்கள். காட்டில் அலைந்து களைத்திருக்கும்போது சாப்பிடலாம் என்று வழியில் ஒரு சந்தையில் நிறுத்தி வாழைப்பழச் சீப்புகளையும் அன்னாசிகளையும் அவர்கள் வாங்கினார்கள். ஆனால் மச்சிசன் காட்டின் நுழைவு வாயிலில் அனுமதி பெறுவதற்காக நாம் இறங்கி நின்ற வேளையில் பபூன் ஒன்று வாகனத்தின் யன்னல் வழியே உள்ளே நுழைந்து வாழைப்பழச் சீப்புகளை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டது. நல்ல காலம், நம்முடைய பைகள் எதற்குள்ளும் பழங்கள் வைத்திருக்கவில்லை. அல்லது அது பைகளோடு அப்படியே தூக்கிப் போய்விடுமாம். அப்புறம் அதனிடமிருந்து பாஸ்போர்ட்டை வாங்க காடு, மலை எல்லாம் அலையவேண்டி வந்திருக்கும்.
அன்றிரவு காட்டுக்குள்ளேயே ஒரு சுற்றுலா விடுதியில் நாம் தங்கி நின்றோம். உடம்பு முழுதும் அடித்துப்போட்டதுபோலக் களைப்பாக இருந்தது. மெல்பேர்னிலிருந்து புறப்பட்ட நாளிலிருந்து சிறு ஓய்வுகூட இல்லாமல் தொடர் பயணங்களும் திருமண நிகழ்ச்சிகளும் பார்ட்டிகளும் நிகழ்ந்துகொண்டேயிருந்தன. இத்தனை நாள்கள் திருமணம் செய்யாமலிருந்த குறைக்குப் பத்தே நாளில் ஆறேழு திருமணங்களை ஜெகன் செய்துவிட்டான். அன்றும் ஒரு திருமண நிகழ்வு இருந்தது. நாம்தான் காடு பார்க்கவேண்டும் என்று கிளம்பிவிட்டோம். அடுத்த நாள் அதிகாலை ஐந்தரை மணிக்கு எல்லோரும் புறப்படவேண்டும் என்று மௌலீமா அறிவுறுத்தியிருந்ததால் நான் பத்துமணிக்கே சென்று கண்ணயர்ந்துவிட்டேன். ஆனால் ஏனைய நண்பர்கள் அன்றும் பார்ட்டி போட்டார்கள். நடுச்சாமம் பன்னிரண்டு மணிக்குத் தூக்கம் கலைந்தபோது பக்கத்து நண்பர் குடிலிலிருந்து நான் தேடும் செவ்வந்திப்பூ சுருதி பிசகிக்கொண்டிருந்தது. இளையராஜாவிடம் மன்னிப்புக்கேட்டுவிட்டு, நான் மறுபடியும் போர்வையை இழுத்துப் போர்த்தியபடி தூங்கிவிட்டேன்.
ஆச்சரியமாக அத்தனை பேரும் காலை ஐந்து மணிக்கே ஜாம் என்று குளித்து ரெடியாகி நின்றார்கள். விடுதியில் காலை உணவும் தயாராகியிருந்ததால் இரண்டு ஓம்லட்டுகளோடு கோப்பியும் குடித்து உடலைச் சூடேற்றினோம். சரியாக ஐந்தரை மணிக்கு நம் வாகனம் புறப்பட்டது. காட்டை இன்னமும் இரவு விழுங்கி வைத்திருந்ததால் எதுவுமே சரியாகத் தெரியவில்லை. சோபியா மிக மெதுவாகவே வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தாள். வழியில் ஆங்காங்கே பபூன்கள் வீதியை மறித்துத் தர்ணா செய்துகொண்டிருந்தன. வாகனங்களின் ஹெட்லைட் வெளிச்சங்களுக்கும் அவை நகருவதில்லை. நாம்தான் இடைவெளிகளுக்குள்ளால் வண்டியை நகர்த்திச் செல்லவேண்டும். ஒரு அரை மணி நேரம் இப்படியே பயணித்திருப்போம்.
வெளிச்சம் சன்னமாகக் காட்டினிடையே ஊடுருவ ஆரம்பித்தது.
நாம் வாகனத்தின் கூரையை உயர்த்திவிட்டு, எழுந்து நின்றோம். குளிர் கூவிக்கொண்டு காதுகளைத் தீண்டிச் சென்றது. புலரலின்போதான காட்டுக்கு ஒரு அழகு உண்டு. பறவைகள் துயிலெழுந்து குரல் எழுப்ப ஆரம்பிக்கும் நேரம் அது. காடு முழுவதுமே கீச்சிக்கொண்டிருந்தது. எனக்கென்றால் கோயில் திருவிழாவின் அங்காடித்தெருவில் அலையும் சிறுவனின் மனநிலை. கொஞ்ச நேரம் நான் இடதுபுறம் திரும்பி அந்தப்பக்கக் காட்டுக்குள்ளே ஏதாவது பறவைகள் தெரிகின்றனவா என்று தேடுவேன். பின்னர் வலப்பக்கம் எங்காவது சிம்பன்சிகளோ சிறுத்தைகளோ அகப்படுகின்றனவா என்று பார்ப்பேன். அடர் காட்டுக்குள்ளே சிறுத்தையோ சிங்கமோ இருக்காது என்ற பிரக்ஞைகூட அப்போது தோன்றாது. முதல் நாள் காட்டின் அனுபவம் அப்படித்தான். காடு என்றில்லை. ஒரு புதிய நாட்டுக்குப் போனாலோ அல்லது ஒரு அலுவலகத்தில் சென்று இணைந்தாலோ, ஏன், புதிதாக ஒரு உறவோடு பழக ஆரம்பிக்கும்போதுகூட அந்த ஆரம்பப் பரவசம் அப்படித்தான் இருக்கும். அபத்தங்களும் எதிர்பார்ப்புகளும் முன்முடிவுகளும் இதெல்லாம் நான் பார்க்காததா என்கின்ற இகழ்ச்சியும் பெருமிதங்களும் எப்போதும் நம்மைச் சூழ்ந்திருக்கும். பின்னர் போகப்போக அது படிப்படியாக வடிந்துபோய்விடும். அது இயல்புதான். நான் அரக்கப் பரக்க அங்குமிங்கும் பார்த்துவிட்டுப் பின்னர் கொஞ்ச நேரம் நேரே காட்டினை அறுத்துச்செல்லும் வீதியையே பார்த்துக்கொண்டிருந்தேன். வசுதேவருக்கு யமுனை நதி பிரிந்து வழிவிட்டதுபோல இந்தக் காடும் வகிடு பிரித்து நமக்கு வழியமைத்ததுபோலத் தோன்றியது. ஆனால் அதுகூட அபத்தமான சிந்தனைதான் அல்லவா? காட்டைப் பிரித்து பாதை போட்டது என்னவோ நாம்தானே?
திடீரென்று வண்ண மயமான பெரும் பறவை ஒன்று தான் நின்ற மர உச்சியிலிருந்து இன்னொரு மர உச்சிக்குத் தாவியதைக் கண்டேன். அது என்ன பறவை என்று தெரியவில்லை. ஓரிரு கணங்கள் நீண்ட காட்சிதான் அது. அதற்குள் வாகனம் நெடுந்தூரம் தாண்டிவந்துவிட்டது. பறவை பறந்த கணம் மட்டும் கண்ணுக்குள் நின்றது. அந்தப் பறவையின் வாய் பெரிதாக, மஞ்சள் நிறத்தில் இருந்தாற்போல. வெள்ளை இறக்கை. நண்பர்களிடம் திரும்பி அதனைப் பார்த்தீர்களா என்று கேட்கலாமென்றால் அவர்கள் அசந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள். மௌலீமாவிடம் அது என்ன பறவையாக இருக்கலாம் என்று கேட்டேன். அவள் தான் கவனிக்கவில்லை என்றாள். சோபியா அது ஒரு ஹோர்ன்பில்லாக இருக்கலாம் என்று சொன்னாள். அவை இந்தக் காட்டில் அதிகம் புழங்குமாம். காலையிலேயே பழங்களைப் பிடுங்கித் தின்ன அவை மரம் விட்டு மரம் தாவ ஆரம்பித்துவிடும் என்றும் சொன்னாள். அடர் காட்டில் பெரும்பாலும் பபூன்களும் குரங்குகளும் பறவைகளும்தான் வசிக்கும். பெரும்பாலான விலங்குகள் ஆங்காங்கே ஒற்றையாக சில மரங்கள் மாத்திரம் வளர்ந்து நிற்கும் புல்வெளி நிலத்தில்தான் திரிகின்றன. Savannah என்று அதனைச் சொல்வார்கள். காட்டின் இராஜா சிங்கம் என்று சிறுவயதில் படித்தோம் அல்லவா? ஆனால் சிங்கம் காட்டிலேயே வசிப்பதில்லை என்பதுதான் உண்மை. அதன் வாழ்வும் சாவும் புல்வெளியில்தான். அடர் காட்டில் விலங்குகள் மேய்வதற்குப் புற்கள் கிடையாது. மேயும் விலங்குகள் இல்லை எனில் அவற்றை வேட்டையாடும் சிங்கம், புலி, சிறுத்தைகளுக்கும் அங்கு வேலை இல்லை. வேட்டையாடப்படும் விலங்கும் இல்லை, வேட்டையாடும் விலங்கும் இல்லை எனில் வேட்டையைப் பறித்துத் தின்னும் ஹயீனா போன்ற scavengersக்கும் அங்கு வேலை இல்லை. அதனால் அநேகமான விலங்குகள் புல்வெளியில்தான் குடும்பம் நடத்துகின்றன. ஆகவே நாம் உண்மையில் பார்க்கப்போவது காட்டுத்தர்பார் இல்லை. புல்வெளித் தர்பார்.
சடக்கென்று ஏதோ ஒன்று நம் வாகனத்தின் முன் கண்ணாடியில் வந்து மோதி விழுந்தது.
சோபியா விதுவிதிர்த்துப்போய் பிரேக் போட அனைவரும் குலுங்கிப்போய் நிமிர்ந்தோம். அது ஒரு பறவை. வாகனத்தில் பக்கக் கண்ணாடிக்குள் அந்தப் பறவையின் உடல் சிக்கிக்கிடந்தது. சோபியா ஒதுக்குப்புறமாக வாகனத்தைக் கொண்டுபோய் நிறுத்தி, பறவையைச் சோதனை செய்தாள். சற்றுமுன் நான் பார்த்த அதே ஹோர்ன் பில் இனத்துப் பறவைதான். கறுப்பும் வெள்ளையும் கலந்த இறக்கைகள். நீண்ட பெரிதான அலகு. அதற்குமேல் மஞ்சள் கலந்த இன்னொரு அலகுபோன்ற அமைப்பு. இறந்துபோய்விட்டது. சோபியா அதன் உடலைக் கொண்டுபோய்க் காட்டுப்பக்கமாக வீசிவிட்டு வந்தாள். அவளின் உடல் இன்னமும் உதறிக்கொண்டிருந்ததைக் கவனித்தேன். இந்தக் காட்டிலேயே பிறந்து வளர்ந்த, காலையில் பழங்களைப் பறித்துத் தின்னலாம் என்று பறந்து திரிந்த பறவையின் மரணத்துக்கு நாம் காலாகிவிட்டோம். சோபியா ஓட்டுநர் இருக்கையில் சற்று நேரம் தலை குனிந்து உட்கார்ந்திருந்தாள். தண்ணீர் குடித்தாள். நேரமாகிறது, புறப்படு என்று மௌலீமா தட்டிச் சொல்லும்வரைக்கும் அவளது தலை நிமிரவேயில்லை.
நம் வாகனம் மெதுவாக நகர ஆரம்பித்தது.
எனக்கு மனம் அந்தப் பறவை வீழ்ந்துபட்ட இடத்திலேயே தங்கிவிட்டிருந்தது. புலம்பலோடு ஹோர்ன்பில் பறவைகள் பற்றி இணையத்தில் தேடிக்கொண்டேயிருந்தேன். ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு வாய்கள் உள்ளதுபோன்ற அலகு இருப்பதால் தமிழில் இதனை இருவாய்ச்சி என்கிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலும் அதிகம் இதனைக் காணமுடியுமாம். கேரளத்தின் மாநிலப் பறவையாக இதனை அரசு அறிவித்திருக்கிறது. இந்த இருவாய்ச்சிகளை நாம் நம் பயணம் முழுதும் காணக்கூடியதாக இருந்தது. காணும்போதெல்லாம் நம்மால் அடிபட்டு இறந்த பறவை வந்து நம்மைத் துன்புறுத்திக்கொண்டேயிருந்தது. இருவாய்ச்சிகள் எப்போதும் சோடியாகத்தான் திரியும். அதுவும் ஒருவனுக்கு ஒருத்தி வகையான சோடி. அவற்றின் குஞ்சுகள் வளர்ந்து குமர்ப் பருவத்தை எட்டியதும் ஆண் பறவை தன் துணையைக் கண்டுபிடிக்கப் பாட ஆரம்பிக்குமாம். அதன் பாட்டுக்கென்று தனித்துவமான ஒரு மீடிறன் இருக்கும். அதே மீடிறனில் எந்தப் பெண் எசப்பாட்டு பாட ஆரம்பிக்கிறாளோ அவளைத் தேடிச்சென்று கண்டுபிடித்து அந்த ஆண் அவளோடு கூடிவிடுவான். அதன் பிறகு அவர்கள் காலத்துக்கும் இணை பிரியவேமாட்டார்கள். Hornbills are monogamous to the core. அப்படியானால் நம் வாகனத்தில் வந்து அடிபட்ட இருவாய்ச்சியின் துணை எங்கே போனது? அடிபட்டு விழுந்தபோது அதன் துணை அருகிலேயே வரவில்லையே? எந்த அழுகுரலும் எழுப்பவில்லையே? சின்னக் கேறல்கூட நமக்குக் கேட்கவில்லையே? ஏன்?
இதனை எழுதும்போதே குற்ற உணர்ச்சியில் விரல்கள் நடுங்குகின்றன.
ஜூலை, ஓகஸ்ட் காலப்பகுதிதான் இருவாய்ச்சிகளின் இனப்பெருக்கக் காலமாகும். இக்காலத்தில் முட்டையிட்டுக் குஞ்சுகள் பொரிப்பதற்காக அந்தப் பறவைகள் மர உச்சிகளில் இருக்கக்கூடிய பொந்துகளையே தேர்ந்தெடுப்பதுண்டு. அவ்வாறு உயரத்தில் அமைந்திருக்கக்கூடிய பாதுகாப்பான பொந்துகள் மிக அரிதாகத்தான் கிடைக்கும் என்பதால் இருவாய்ச்சி குடும்பங்களுக்கிடையே இடத்துக்கான சண்டை எப்போதும் இருக்குமாம். அதனால் ஒரு பொந்து சிக்கியதும் உடனே பெண் இருவாய்ச்சி அந்தப் பொந்துக்குள்ளே சென்று உட்கார்ந்துகொள்ளும். அப்புறம் பொந்தின் வாயிலை இருவரும் சேர்ந்தே களிமண்ணையும் சாணத்தையும் கொண்டு அடைத்துவிடுவார்கள். ஆண் பறவையின் அலகு உள்ளே நுழைவதற்கு மாத்திரம் சிறு துளையை அவை விட்டுவைக்கும். அவ்வளவுதான். அருகில் சென்று பார்த்தாலும் ஏனைய விலங்குகளால் அங்கு ஒரு பொந்து இருப்பதையோ, உள்ளே ஒரு பறவையும் முட்டைகளும் ஒளிந்திருக்கின்றன என்பதையோ கண்டுபிடிக்கமுடியாது. புத்திசாலிகளான பபூன்களுக்குக்கூட இதனைத் தெரிந்துகொள்வது கடினம் என்கிறார்கள். ஆனால் அந்த ஆண் இருவாய்ச்சிக்கு மாத்திரம் அவர்களது பொந்தின் தடம் நன்றாகத் தெரிந்திருக்கும். நாள் முழுதும் அது பழங்களையும் புழுக்களையும் பூச்சிகளையும் சேகரித்துவந்து தன் பெண்ணுக்கு அந்தத் துளை வழியாகக் கொடுக்கும். இவளும் வாங்கி உண்டுவிட்டு நிம்மதியாக ஓய்வெடுப்பாள்.
இன்னொரு ஆச்சரியமான செய்தி. உள்ளே பொந்துக்குள் சென்று உட்கார்ந்ததுமே பெண் இருவாய்ச்சி தனது அனைத்து இறகுகளையும் உதிர்த்துவிடுகிறது. ஒரு இறகு மீதமில்லாமல் உதிர்ந்து அவளது உடலை வெறுமனே தோல் மாத்திரமே மூடியிருக்கும். இந்த இயற்கை நிகழ்ச்சிக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பிறக்கப்போகும் குஞ்சுகளுக்கு மிருதுவான படுக்கை வேண்டும் என்பதற்காக இறகுகளை அது உதிர்க்கிறது என்பது ஒரு காரணம். இனி சில மாதங்களுக்குப் பறக்கவேண்டிய தேவை இல்லையாதலால் இறக்கைகளைப் புதுப்பிக்க இது ஒரு அரிய சந்தர்ப்பம் என்பது இன்னொரு காரணம். எது அப்படியோ, அடுத்த சில மாதங்களுக்கு அந்தப் பெண் இருவாய்ச்சி இறக்கைகள் ஏதுமின்றி அந்தப் பொந்துக்குள்ளேயே முடங்கிக்கிடந்து, முட்டைகள் இட்டு, அடை காத்து, குஞ்சுகளைப் பொரிக்கும். ஆண் இருவாய்ச்சிக்கு தினமும் இவர்களுக்கு உணவு தேடிக்கொடுப்பதுதான் வேலை. ஆரம்ப நாட்களில் நாளைக்கு மூன்று தடவையேனும் அது தன் பெண்ணுக்கு வந்து உணவு ஊட்டிவிடும். குஞ்சுகள் பொரித்ததும் நாளைக்கு இருபது விசிட்டுகளைக்கூட ஆண் செய்யுமாம். ஒன்றிரண்டு மாதங்களில் குஞ்சுகளும் நன்றாக வளர்ந்துவிடும். உள்ளே இடம் இட்டு முட்டாகும். இதற்கிடையில் தாய்க்காரிக்கும் இறகுகள் மறுபடியும் முழுமையாக முளைத்திருக்கும் என்பதால் அதுவே தடுப்பை உடைத்துக்கொண்டு வெளியே வந்துவிடும். பின்னர் தாயும் தகப்பனும் குஞ்சுகளை உள்ளே வைத்து மறுபடியும் தடுப்பைப் போட்டுவிடுவர். குஞ்சுகள் முழுமையாக வளர்ந்து தன்னிச்சையாகப் பறக்கும் நிலையை எட்டும்வரை பெற்றோர்கள் இருவரும் இணைந்து அவற்றுக்கு உணவு சேகரித்து வந்து கொடுப்பர்.
இயற்கையின் இவ்வகையான அற்புதக் கூர்ப்பு அம்சங்களை என்னவென்று சொல்வது? இந்த இருவாய்ச்சிகளின் காதலையும்தான் எப்படி விளிப்பது? நான் எம் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்கிறேன், நீ எமக்கு உணவுகளைத் தேடிக்கொண்டுவா என்று சொல்லி, தன் பறத்தலுக்கு ஆதாரமான இறகுகளையே ஒரு பெண் முழுதாக உதிர்த்துவிட்டு, மூடிய பொந்துக்குள் வாரக்கணக்கில் அடைந்து கிடக்கிறாள் என்றால் எந்தளவு நம்பிக்கையை அவள் தன் ஆணின்மீது வைத்திருப்பாள்? இதை அறிந்தபோது, ‘நசை பெரிதுடையர் நல்கலும் நல்குவர்’ என்கின்ற குறுந்தொகை பாடல்தான் நினைவுக்கு வந்தது. பாலைத் திணை. தலைவன் தன்னை நீங்கிச் சென்றுவிட்டான் என்று பிரிவில் வாடும் தலைவிக்குத் தோழி சொல்லிய கூற்றாக அந்தப் பாடல் அமைந்திருக்கும். அதன் சாராம்சம் இப்படியானது.
‘தோழி. தலைவன் உன்மேலே மிகவும் அன்புடையவன். நீ விரும்புவதை அவன் செய்வான். அவன் சென்ற வழியில் பெரிய துதிக்கையையுடைய ஆண்யானை, மெல்லிய கிளைகளை உடைய யாமரத்தைப் பிளந்து பெண்யானையின் பசியை அன்போடு களையும் இடமாக உள்ளது. பயப்படாதே.’
அதாவது ஆண் யானை பெண் யானையின் பசியினை அன்போடு களைவதுபோல உன் தலைவனும் உன் உன் விருப்புக்கமைய உன்னிடம் திரும்புவான், உன் பசியைக் களைவான் என்கிறாள் தோழி. இதில் இரண்டு அர்த்தங்கள் உண்டு. தலைவன் உன்னை மறக்கமாட்டான் என்று தோழி தலைவிக்கு உணர்த்துவது ஒன்று. மற்றையது, ஐயோ, அவன் போன பாதையில் யானைகள் எல்லாம் நிற்குமே என்று அஞ்சும் தலைவியிடம், பயப்படாதே அவை எல்லாம் அன்புள்ளம்கொண்ட யானைகள், உன் தலைவனை அவை ஒன்றுமே செய்யாது என்று ஆற்றுப்படுத்துவது.
பிரிவில் வாடும் சங்கத் தலைவிக்காவது ஆற்றுப்படுத்த அருகில் தோழி இருந்தாள். ஆனால் பொந்துக்குள்ளேயே இறக்கைகளை இழந்து தவித்திருக்கும் இந்த இருவாய்ச்சித் தலைவியை யார்தான் ஆற்றுப்படுத்துவார்கள்? தப்பித்தவறி அதன் ஆண் துணைக்கு ஏதேனும் இடர் நேர்ந்துவிட்டால் பொந்துக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் பெண் பறவையின் நிலைதான் என்ன? இறக்கை இல்லாத பறவை எப்படி இரை தேடமுடியும்?
பறக்கவும் முடியாமல், உணவும் இல்லாமல் அப்பறவையும் குஞ்சுகளும் அந்தப் பொந்துக்குள்ளேயே கிடந்து பட்டினியால் வாடி வதங்கி இறந்துவிடுமாம்.
இவர்களின் இந்த இனப்பெருக்கக் காலமான ஓகஸ்ட் மாதத்தில்தான் நம்முடைய பயணமும் அமைந்திருந்தது. அப்படியெனில் தனியாக நம் வாகனத்தில் அடிபட்டு விழுந்த அந்த இருவாய்ச்சி ஒரு ஆண் பறவையாக இருந்திருக்க சந்தர்ப்பம் உண்டல்லவா? அந்தப் பறவைக்கும் ஒரு குடும்பம் இருந்திருக்கும். எங்கோ ஒரு மர உச்சியின் பொந்து ஒன்றுக்குள் இறகு உதிர்த்துக் கிடக்கும் அதனது பெண் துணை, எங்கே இன்னமும் என் தலைவன் வரவில்லையே என்று ஏங்கித்தவித்திருக்குமல்லவா? பசிக்கிறது என்று கீச்சத்தொடங்கும் குஞ்சுகளுக்கு அது என்ன பதில் சொல்லியிருக்கும்? வருவான், வருவான் என்று நாள் முழுதும் எதிர்பார்த்து, அடுத்த நாளும் எதிர்பார்த்து, அதற்கடுத்த நாளும் எதிர்பார்த்து, அவன் இனி வரவே மாட்டான் என்று உணர்ந்த கணத்தில் அதிர்ந்து, பொந்தின் வாயிலை முட்டிப் பார்த்து, இறக்கை இல்லாத வெற்றுடல்கொண்டு பறக்க முயன்று, இந்த இறகு எனக்கு வேகமாக முளைக்காதா என்று ஏங்கி, அழுது, அரற்றி, பசியால் மிக வாடி, கொஞ்சம் கொஞ்சமாகத் தன் குஞ்சுகள் செத்து மடிவதைக் கண்டு, செய்வதறியாது திகைத்து, அந்தப் பெண் இருவாய்ச்சி எத்தகு துன்பம் எய்தியபடியே இறந்துபோயிருப்பாள்?
அதன் மரணத்துக்கு நாம்தான் முழுமுதற் காரணம் என்று சுட்டுணர்த்தும் தருணத்தை எப்படி நாம் கடந்துபோவது?

தொடரும்

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. கக்கூஸ்

                                          நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா பின்பத்திக்குள்ளே சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் கிடக்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரை கொள்ளும் அம்மாவைத் தட்டி எழுப்புவதுதான். முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார். “பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”