Skip to main content

உகண்டாவின் ஒன்பது நாட்கள் - பாகம் 5 - வரலாற்றின் சுவர்


குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்க்கையில் உள்ளே மூன்று தலைகள் மிரட்சியுடன் உறைந்து கிடந்தன.

இது தினமுரசு வார இதழில் வெளியாகிய இடி அமீன் தொடரில் வந்திருந்த வாசகம். அச்சொட்டாக இப்படித்தான் எழுதப்பட்டிருந்ததா என்று நினைவில்லை. ஆனால் அந்தக் காட்சி இன்னமும் ஞாபகம் இருக்கிறது. அப்போது எனக்குப் பதினேழு பதினெட்டு வயது இருக்கலாம். யாழ்ப்பாணம் மறுபடியும் ஶ்ரீலங்கா அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்த காலம். இயல்பாகவோ அல்லது வலிந்தோ சில விசயங்கள் நமக்குப் புதிதாகக் கொடுக்கப்பட்டன. பெப்சி, பஃன்டா போன்ற சோடாக்கள். பலாலியிலிருந்து இலவசமாக ஶ்ரீலங்கா இராணுவத்தினர் ஒளிபரப்பு செய்த HBO, Star, MTV, விளையாட்டு சானல்கள். வீதிக்கு வீதி வெளிக்கிளம்பிய மினி சினிமாக்கள்.
அப்புறம் வாரம் வாரம் வெளியாகிய தினமுரசு சஞ்சிகை.
அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை, பூலான் தேவி, இராஜதந்திரியின் அலசல்கள். ரசிகனின் கட்டுரைகள். கிளுகிளுப்பான சினிமாச்செய்திகள். இவற்றோடு மாக்சிம் கார்க்கி சிறுகதையின் மொழிபெயர்ப்பும் வெளியாகக்கூடிய ஒரு சஞ்சிகை அது. அதன் பிரதான ஆசிரியராக அப்போது அற்புதன் இருந்தார். பத்திரிகையை ஈ.பி.டி.பி கட்சி நடத்தி வந்ததாகப் பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது இயக்கத்துக்கு ஆதரவாகவும் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அற்புதன் படுகொலை செய்யப்பட்டார். பின்னர் அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை என்ற தொடர் அல்பிரட் துரையப்பா முதல் அற்புதன்வரை என்று மாற்றப்பட்டது என்று நினைக்கிறேன்.
இதே தினமுரசில்தான் இடி அமீன் என்ற தொடர் வெளியாகிக்கொண்டிருந்தது. இரசிகன், அழகன் என்ற பெயர்களில் எழுதியவரின் பெயர் வந்துகொண்டிருந்தது. பதின்மத்தவரைக் குறிவைத்து எழுதப்பட்ட தொடர் அது. இடி அமீன் குரல்வளையைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சுவான் என்றும் தலைகளை வெட்டி குளிர்சாதனப் பெட்டிக்குள் அடைப்பான் என்றும் அது எழுதியது. எண்டேபே விமான நிலையத்தில் இசுரேலியர்கள் பயணம் செய்த விமானம் தடுத்து வைக்கப்பட்டிருந்த சம்பவமும் அதன் பின்னணிகளும் சுவாரசியமாக எழுதப்பட்டிருந்தன. இடி அமீன் செய்த கொடுமைகளையும் பாலியல் வல்லுறவுகளையும் துஷ்பிரயோகங்களையும் தொடர் படு விறுவிறுப்பாகவும் கிளுகிளுப்பாகவும் பதிவு செய்தது. சிலது அபத்தமான கவித்துவத்தோடும் இருக்கும். நூலகம் இணையத்தளத்தில் தினமுரசின் வெளியீடுகள் இப்போது கிடைக்கின்றன. சும்மா உலாவியபோது இந்த வாசகம் கண்ணில் பட்டது.
நடனத்தை ரீனா கற்றுத்தரும்போதே அமீன் அவளிடம் தனக்குப் பிடித்த இடங்களைத்தொட்டுப்பார்க்க, அவளும் அனுமதிக்க, அமீனின் கட்டில் இருவரையும் எடை பார்த்தது.
அந்தப் பக்கத்தில், இடி அமீன், தருவது ரசிகன் என்று கொட்டை எழுத்துகள் அச்சடிக்கப்பட்டிருந்தன.
நகசேராவில் உடைகள் அளவு பார்த்துவிட்டு பின்னர் புளோவின் உதவியோடு அங்கேயே உகண்டா ஷில்லிங்கும் கொஞ்சம் வாங்கிக்கொண்டோம். வழியில் கைவினைப் பொருட்கள் விற்கும் அங்காடி ஒன்று வர, பொருட்களை எப்படிப் பேரம் பேசுவது என்று கேட்டோம்.
அவர்கள் ஐம்பதாயிரம் என்றால் நீங்கள் இருபதாயிரம் என்று ஆரம்பியுங்கள். முப்பதாயிரத்தில் முடியுங்கள். அதற்குமேலே போகவேண்டாம்.
பிறகு யோசித்துவிட்டுச் சொன்னாள்.
இல்லை, உங்களுக்கு அந்தப் பொருள் பிடித்திருந்தால் கொஞ்சம் அதிகம் கொடுத்தாலும் தவறில்லை. உகண்டாவுக்கு நீங்கள் ஒவ்வொரு வருடமும் வரப்போவதில்லைதானே?
நியாயம்தான். நாங்கள் நடந்தோம். புளோவின் தினசரி வாழ்க்கையைப் பற்றி அறிய ஆவலாக இருந்தது. நீ வழமையாக என்ன சாப்பிடுவாய் என்று கேட்டேன். மாட்டோக் என்றழைக்கப்படும் அவித்து மசித்த வாழைக்காய் உணவுதான் இவர்களுடைய பிரதானம். யாழ்ப்பாணத்தவருக்கு புட்டு, இடியப்பம்போல இவர்களுக்கு வாழைக்காய் மசியல். பல நாட்கள் மூன்று வேளைகளும் அதனைச் சாப்பிடுவார்களாம். வாழை இவர்களது தேசிய உணவுப்பொருள். உள்ளூர் சாராயம்கூட வாழைக்காயை நொதியப்படுத்தித்தான் செய்யப்படுகிறது. அதைவிட மரவள்ளி, சுட்ட இறைச்சிகளையும்கூட சாப்பிடுவார்கள். எங்களைப்போல சீரகம், மிளகு, மல்லி என்று ஸ்பைஸ் ஐட்டங்கள் அவர்களது உணவில் அதிகம் இல்லை. புதிய தலைமுறை அரிசி சாப்பிட ஆரம்பித்திருக்கிறது என்று புளோ சொன்னாள்.
பேச்சு வார இறுதிகளுக்குத் திரும்பியது. அவள் தனியாள் என்பதால் பயணங்கள் செய்வேன் என்றாள். உகண்டாவின் முக்கியமான ஊர்கள் அத்தனைக்கும் தான் சென்றுவிட்டதாக அவள் சொன்னாள். அருகிலிருக்கும் சில நாடுகளுக்கும் போயிருக்கிறாள். அண்மையில் தென் ஆபிரிக்காவுக்குப் போனேன் என்றாள். அந்த அனுபவம் எப்படி என்று கேட்டேன்.
அது ஒரு சிக்கலான அனுபவம். தென் ஆபிரிக்கர்கள் வெளிநாட்டவரைப் பெரிதாக விரும்புவதில்லை. அதிலும் ஒரு கறுப்பர் ஆங்கிலம் பேசுகிறார் என்றால் முகம் சுழிப்பார்கள். நான் என் நாடு என்பதற்காகச் சொல்லவில்லை. ஆபிரிக்காவிலேயே உகண்டர்கள்தான் மற்றவர்களோடு மிக அன்போடும் மரியாதையோடும் பழகக்கூடியவர்கள்.
தென் ஆபிரிக்கர்கள் பற்றிய இந்தக் கருத்து அண்மைக்காலத்தில் பரவிக்கொண்டிருப்பது என்னவோ உண்மைதான். அதற்குப் பல அரசியல், ஊடக காரணங்களும் உண்டு. வெள்ளையர்களின் ஒடுக்குமுறையிலிருந்து மீண்டெழுகின்ற சமூகத்தின் பெண்டுலம் கொஞ்சம் அந்தப்பக்கம் அதிகமாக நகர்ந்து வெள்ளையர் வெறுப்பாக மாறியிருப்பதை ஜே. எம். கோர்ட்ஸின் The Disgrace நாவல் பதிவு செய்திருக்கிறது. ஆனால் இது காலம் காலமாக அதிகாரத்தை அனுபவித்த வெள்ளையர்கள் அது இல்லாமல் போனதில் வடிக்கும் நீலிக்கண்ணீர் என்றும் ஒரு பார்வை இருக்கிறது. எனினும் புளோ போன்ற கறுப்பினத்துப் பெண், தான் ஆங்கிலம் பேசியதைத் தென் ஆபிரிக்கர்கள் வெறுப்புடன் அணுகினார்கள் என்று சொன்னபோது இந்த சிக்கலின் இன்னொரு பரிமாணம் புலப்பட்டது. பயணங்கள் மாத்திரமே கொடுக்கக்கூடிய தற்செயல் தகவல்கள் இவை.
சாப்பிடப்போனோம். அடுத்த நாள் திருமணம் என்பதால் உகண்டா உணவை உண்டு வயிற்றுக்கு சிக்கல் கொடுக்க நண்பர்கள் தயாராக இருக்கவில்லை. அதனால் புளோ நம்மை ஒரு மேற்கத்திய உணவகத்துக்கே அழைத்துச் சென்றார். உணவுக்காகக் காத்திருக்கையில் பேச்சு உகண்டாவின் சினிமா பற்றித் திரும்பியது. உங்களது பிரபலமான ஹீரோ யார் என்று கேட்டேன். டொக்டர் போஸா என்றழைக்கப்படும் சாம் பாகெண்டா என்பவரின் பெயரை அவள் சொன்னாள். அடிப்படையில் அவர் அரங்குக் கலைஞர். திரைப்படங்கள் பலவற்றிலும் நடித்திருக்கிறார். தேடிப்பார்த்தேன். அவர் ஒரு மலையாளத் திரையிலும் நடித்திருக்கிறார். Pearl Magic என்றொரு உள்ளூர் டிவி இருக்கிறது. உள்ளூர் நாடகங்கள், நிகழ்ச்சிகளை அது ஒளிபரப்புகிறது. யூடியூபிலும் இருக்கிறது என்று சில காணொளிகளை அவள் காட்டினாள். இதற்கிடையில் நண்பர்கள் என் பிறந்த நாளுக்காக கேக் வெட்டினார்கள். அந்தக் கடையின் ஊழியர்கள் சிறு மேளம், தப்பைகளோடு தாளம் போட்டபடி ஆடி வர, எல்லோரும் பிறந்த நாள் வாழ்த்துச்சொல்ல, எங்களது மேசையே அமர்க்களமானது. உகண்டர்கள் கொண்டாடி ஆடிப்பாட நான் மெழுகுதிரியை அணைத்து கேக்கை வெட்டினேன். பின்னர் லௌமியும் புளோவும் வேலை இருக்கிறது என்று போடாபோடாஸ் பிடித்து தத்தமது வழியில் போய்விட்டார்கள்.
மீதி நண்பர்கள் அரச அரண்மனையைப் பார்க்கப்போகலாம் என்று தீர்மானித்தோம். ஊபரின் அரை மணி நேரப் பயணம். வாகனத்தை ஒரு சிறுவந்தான் ஓட்டிவந்தான். பதினைந்து வயது இருக்கலாம். ஊபர் செயலி சொன்ன வாகன இலக்கமும் அவன் ஓட்டி வந்த வாகன இலக்கமும் வேறாக இருந்தது. அவன் ஊருக்கும் புதிது. ஆனால் கலகலப்பாகப் பேசினான். எங்களுக்காக சில உள்ளூர்ப் பாடல்களை இசைக்கவிட்டான். ஏசியைப் போடச்சொன்னோம். போட்டான். வேலை செய்யவில்லை. நாம் அதை சொன்னப்போது தனக்குக் குளிர்கிறது என்று நடுங்கிச் சிரித்தான்.
கபாகா மாளிகை என்றழைக்கப்படும் அந்த அரண்மனை பக்கிங்காம் மாளிகையின் பென்குயின் புத்தகப் பதிப்புபோல கட்டப்பட்டிருந்தது. யாரோ லண்டனுக்குப் போய் வந்த அரசர் பக்கிங்காம் மாளிகைபோலவே தனது மாளிகையும் இருக்கவேண்டும் என்று நினைத்துக்கட்டியதாம். அன்று மன்னர் அரண்மனைக்கு வந்திருந்ததால் நம்மை உள்ளே அனுமதிக்கவில்லை. மூன்று கொடிகள் பறந்தன. அதில் ஒரு கொடி மன்னர் உள்ளே இருக்கிறாரா இல்லையா என்பதைக் காட்டுவதற்கு என்று வழிகாட்டி விளக்கினார். மெங்கோ மலையில்தான் மாளிகை உட்கார்ந்திருந்தது. அங்கிருந்து பார்த்தால் மொத்தக் கம்பாலாவும் தெரிந்தது. ஒருபுறம் விக்டோரியா ஏரி. லுகண்டா மொழியில் இந்த மாளிகையின் பெயர் இணைந்து தொழிற்படுவோம் என்று பொருள் படுகிறது. புகண்டா எனப்படுகின்ற இந்த அரசில் 52 இனக்கூட்டங்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. உகண்டாவும் புகண்டாவும் ஒன்றல்ல. உகண்டாவின் பிரதான இராச்சியம்தான் புகண்டா. கம்பாலாவும் அதனை ஒட்டிய விக்டோரியா ஏரியின் ஓரங்களிலும் பரவியிருக்கும் இராச்சியம் அது. இதனைவிட நான்கு இராச்சியங்களும் ஏராளம் சிற்றரசுகளும் clans எனப்படுகின்ற இனக்கூட்டங்களும் உகண்டாவில் உண்டு.
1962ம் ஆண்டில் உகண்டாவுக்கு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கிடைக்கிறது. அப்போது இந்த ஐந்து இராச்சியங்களையும் மாநிலங்களாக அறிவித்து ஒருவித வெஸ்ட்மினிஸ்டர் பெடரல் அமைப்பு உருவாக்கப்படுகிறது. நாட்டின் பிரதமருக்கும் பாராளுமன்றத்துக்கும் அதிகாரம் செல்ல, சனாதிபதி வெறுமனே ஒரு மரியாதைக்குரிய பதவியாகிறது. அந்தப் பதவி மன்னருக்கு. அப்போதைய மன்னரான முட்டேசா சனாதிபதியாகிறார். பிரதமராக ஒபோடோ தேர்தல்மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பெடரல் அமைப்பு என்று குறிப்பிட்டேன் அல்லவா? அதில் புகண்டா மாநிலம் பெரிது என்பதால் அது சுயாதீனமாகவும் தொழிற்பட்டு மாநில சுயாட்சிக்காகப் போராடியது. புகண்டாவின் மன்னர்தான் நாட்டுக்கே சனாதிபதி என்பதால் அவரும் புகண்டா மாநிலத்தின் கோரிக்கைக்கு ஆதரவாக இருந்தார். அதே சமயம் முழு நாட்டின் பிரதமரான ஒபோட்டே மீது தங்கக் கடத்தல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. முக்கியமாக ஒபோட்டோவும் அவருடைய இராணுவத் தளபதியும் சேர்ந்து ஊழல் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு. அந்த இராணுவத் தளபதி வேறு யாருமில்லை.
அவன்தான் இடி அமீன்.
சொன்னாப்போல, ஒபோட்டோவும் இடி அமீனும் புகண்டாவைச் சேர்ந்தவர்களுமல்ல. இருவரும் உகண்டாவின் வடக்கு, மேற்குப் பகுதி இராச்சியங்களைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக ஒபோட்டோவின் கட்சி, உகண்டாவில் புகண்டாகாரரின் ஆதிக்கத்தை எதிர்த்தே ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு ஏனைய இராச்சியங்களின் ஆதரவும் கிடைத்தது. புகண்டாகாரர்கள் பெரும்பான்மை என்றாலும் அது வெறும் இருபது வீதமென்பதால் ஏனைய சிறுபான்மை இனக்குழுக்களின் கூட்டு ஆதரவில் ஒபோட்டோ ஆட்சியைப் பிடித்துவிட்டார். ஆக சுதந்திரம் கிடைத்து ஓரிரு வருடங்களிலேயே நாடு ஒன்றிய, மாநில அதிகாரப் போட்டிக்குள் சிக்கிவிட்டது. 1966ம் ஆண்டு, அதாவது சுதந்திரம் பெற்று நான்காவது வருடமே, புகண்டா மாநில அரசு ஒன்றிய அரசைத் தன் மாநிலத்தை விட்டே வெளியேறச் சொல்லிவிட்டது. அதாவது கம்பாலாவை விட்டு வெளியேறு என்று நாட்டின் பாராளுமன்றத்தையும் அரசாங்கத்தையும் மாநில அரசவை கட்டளை பிறப்பிக்கிறது. அப்புறமென்ன?
வெடித்தது சண்டை.
பிரதமர் ஒபொட்டோவின் உகண்டா படைகள் உகண்டாவின் அரண்மனையைச் சுற்றி வளைத்தன. இடி அமீன்தான் அவர்களுடைய தளபதி. ஆனால் எப்படியே மன்னர் மற்றும் சனாதிபதியான முட்டேசா லண்டனுக்குத் தப்பிச்செல்ல, இடி அமீன் படைகள் அரண்மனையைச் சூறையாடின. விரைவிலேயே நாட்டிலிருந்த இராச்சியங்கள் ஒழிக்கப்பட்டன. உகண்டா குடியரசாக மாற்றப்பட்டது. பெடரல் அமைப்பு முடக்கப்பட்டு நிறைவேற்று அதிகாரமுள்ள சனாதிபதி உள்ள ஒற்றையாட்சி கொண்டுவரப்படுகிறது. இராணுவத்தின் பலமும் அதிகரிக்கிறது. ஒபோட்டோ சனாதிபதியாகத் தன்னை அறிவிக்கிறார். வடக்கிற்கும் தெற்கிற்கும் தீராப்பகை மூள்கிறது. இடி அமீனின் படைத்துணையோடு அரசியல் எதிரிகள் கொல்லப்படுகிறார்கள். இடி அமீன் தனியாக கொங்கோவிலிருந்து தன் இராணுவத்தின் உதவியோடு தங்கக் கடத்தலில் ஈடுபடுகிறான். அவனுடைய சக்தி நாட்டில் அதிகரிக்கிறது. ஒபோட்டோவுக்கும் எதிரிகள் அதிகம் என்பதால் இடி அமினின் துணை தேவைப்படுகிறது. 71ம் ஆண்டு ஒபோட்டோ பொதுநலவாய நாடுகளின் கூட்டத்துக்கு சிங்கப்பூர் சென்ற சமயம், இடி அமீன் அவருடைய ஆட்சியைக் கலைத்து, நாட்டைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருகிறான்.
இடி அமீனுக்கு ஆரம்பத்தில் ஆதரவளித்தது இரண்டு நாடுகள். ஒன்று பிரித்தானியா. மற்றையது இசுரேல். What a combination.
அடுத்த எட்டாண்டுகள் இடி அமீனுடைய ஆட்சி. கிட்டத்தட்ட உகண்டாவின் கொலையுதிர்காலம் அது. புகண்டர்கள் மட்டுமின்றி ஒபோட்டோவின் ஆதரவு இனக்குழுக்களான வடக்கைச் சேர்ந்தவர்களும் கொல்லப்படுகிறார்கள். ஆபிரிக்காவின் முத்தில் நிகழ்ந்த கொடூரம் இந்து சமுத்திரத்து முத்தின் சிகரத்தில் வெளியான சிறிய வார இதழில் தொடராக வருமளவுக்கு இடி அமீன் அடித்த கொட்டத்தின் புகழ் உலகெலாம் பரவியது. குடும்பத்தில் ஒருவர் ஆட்சியை எதிர்த்தால் மொத்தக் குடும்பமுமே கொல்லப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று இலட்சம் உகண்டர்கள் அப்படிக் கொல்லப்பட்டார்களாம். அதைவிட இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டார்கள். அந்த எண்ணிக்கை எண்பதினாயிரமளவில் இருக்கலாம். அவர்களின் சொத்துகள் உகண்டர்களுக்குப் பங்களித்துக் கொடுக்கப்பட்டன.
எம்மோடு பல நாட்கள் சபாரி பயணத்தில் இணைந்துகொண்ட மௌலீமா என்கின்ற வழிகாட்டியிடம் இடி அமீனை எப்படி உகண்டர்கள் இன்றைக்குப் பார்க்கிறார்கள் என்று கேட்டேன். அது கலவையான பார்வை என்று அவள் சொன்னாள். அந்நியர்களை நாட்டை விட்டுத் துரத்தி, உகண்டர்களின் சொத்தை உகண்டர்களிடமே கொடுத்ததும் வீதிகள், பாலங்கள் என்று பல அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்ததும் அவன்தான் என்றாள். ஆனால் அதற்காக அப்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்களை நாம் மன்னிக்கமுடியாது என்பதும் தமக்கு இப்போது புரிகிறது என்றாள். அவளிடம் யாரை நீங்கள் உகண்டர்கள் என்று குறிப்பிடுகிறீர்கள் என்று கேட்டேன். மௌலீமா புத்திசாலி. என் கேள்விக்கு உடனே அவள் பதில் அளிக்கவில்லை. சற்று நேரம் யோசித்துவிட்டுச் சொன்னாள்.
உங்கள் கேள்வி புரிகிறது, இப்படிப் பொதுவான ஒரு எதிரியை மக்கள் மனதில் விதைத்து, அதன்மீது வன்மத்தை ஏவிவிடுவதன்மூலம் தன்னுடைய அதிகாரத்தை இடி அமீன் மேலும் வலுப்படுத்திக்கொண்டான். அது உண்மைதான்.
ஆரம்பத்தில் இசுரேலின் ஆதரவை அமீன் பெற்றான். அரச மாளிகைக்கு அருகிலிருக்கும் இராணுவத் தளபாடக் கிடங்கைக் கட்டிக்கொடுத்தது இசுரேல் அரசுதான். எண்டெபே விமான நிலையத்தைக் கட்டியதும் அவர்கள்தான். பின்னாளில் இடி அமீன் இஸ்லாமியராக மதம் மாறித் தன்னை அரபாத்தின் நண்பனாகவும் காட்டிக்கொண்டதும் எண்டெபே விமான நிலையத்தில் நிகழ்ந்த கடத்தல் களேபரமும் அனைவரும் அறிந்ததே. அதிகாரம் இப்படியான போலி முகமூடிகளை அவ்வப்போது அணிந்து பச்சோந்தி நாடகம் போடுவது ஒன்றும் புதிதல்லவே. ஒரு கட்டத்தில் அருகிலிருந்த தன்சானியாவை அவன் கைப்பற்ற முயல, தன்சானியப் படைகள் முன்னைய சனாதிபதி ஒபோட்டோவின் ஆதரவாளர்களோடு சேர்ந்து இடி அமீனை எதிர்த்துப் படையெடுத்து ஈற்றில் அவனது ஆட்சியையே ஒழித்துவிட்டார்கள். இடி அமீன் லிபியா, ஈராக் என்று ஓடித்திரிந்து ஈற்றில் சவுதியில் அடைக்கலம் புகுந்தோன். வயோதிபத்தில் அங்கங்கள் பல செயல் இழந்து ஈற்றில் அங்கேயே இறந்து போனான்.
இடி அமீனுக்குப் பின்னர் மறுபடியும் ஒபோட்டோ சனாதிபதியாகிறார். அதுவும் முறைகேடான தேர்தலில். அதன் பிறகு என்ன? You guessed it right. மறுபடியும் ஒரு உள்நாட்டுப்போர். முசேவ்னியின் தேசிய இராணுவம் ஒபோட்டோ ஆட்சியைக் கவிழ்க்கிறது. முசேவ்னி சனாதிபதியாகிறார். இப்போது கரண்டு கம்புகளிலும் குட்டிச்சுவர்களிலும் வெள்ளைத் தொப்பி அணிந்து வெள்ளை சட்டை, வெள்ளை பாண்ட்ஸ் அணிந்து வெள்ளையடித்து நிற்கும் முசேவ்னியின் ஆட்சி கடந்த முப்பது ஆண்டுகளாக உகண்டாவில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகளில் இன்னொரு இராணுவத்தளபதி நாட்டைக் கவிழ்க்காமல் இருப்பது என்னவோ உலக அதிசயம்தான். அதே சமயத்தில் மன்னர் குடும்பம் மறுபடியும் மாளிகையில் குடியேறிவிட்டது. அதிகாரம் இல்லை எனினும் பிரித்தானிய அரச குடும்பம்போல செல்வங்களையும் கௌரவங்களையும் அது அனுபவிக்கிறது. இப்போதும் பெண்கள் ஆட்சிக் கதிரையில் அங்கு உட்கார முடியாது. மன்னருக்கு மகன் இல்லை என்றால் மன்னரின் சகோதரனோ அல்லது சகோதரனின் மகனோ, யாரோ ஒரு ஆண்தான் ஆட்சியில் அமரமுடியும்.
அந்த இசுரேல் கட்டிக்கொடுத்த இராணுவத் தளபாடக்கிடங்கு இருக்கிறதல்லவா? இடி அமீனின் காலத்திலேயே அது ஒரு வதை முகமாக மாற்றப்பட்டது. ஆட்சிக்கு எதிரானவர்களை அங்கு கொண்டுவந்து அடைப்பார்கள். விக்டோரியா ஏரியிலிருந்து தண்ணீர் இறைத்து அந்தக் கிடங்குக்குள் பாய்ச்சுவார்கள். பின்னர் அதற்குள் மின்சாரம் பாய்ச்சப்படும். உள்ளே நீருக்குள் தத்தளித்திருக்கும் மக்கள் மின்சாரம் பாய்ந்து துடி துடித்து இறப்பார்கள். அதில் தப்பி மூர்ச்சையாகிக் கிடப்பவர்களை அதற்குள்ளிருக்கும் நிலவறைக் கூடுகளுக்குள் தள்ளி அடைத்துவிடுவார்கள். அதற்குள் ஏற்கனவே குற்றுயிரும் குலையுயிருமாய் பல உடல்கள் சுருண்டு கிடக்கும். சில பிரேதங்கள் அழுகவும் ஆரம்பித்திருக்கும். அங்கிருந்து கம்பி வேலிக்குள்ளால் அடுத்த தொகுதி மக்கள் தண்ணீரில் மின்சாரம் பாய்ச்சப்பட்டுக் கொல்லப்படுவதைக் காணும்போது மனிசருக்கு எப்படி இருக்கும்? அந்த நிலவறைக்குள் நாம் நுழைந்தபோது, ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இதே இடத்தில் எம்மைப்போலவே சாதாரண மனிதர்கள் அவர்தம் அரசியல் காரணங்களுக்காகச் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற சிந்தனை வந்து மூளையைச் சித்திரவதை செய்தது. அவர்களின் கதறல் அந்த நிலவறைக்குள்ளேயே அடங்கியிருக்கும் அல்லவா? இன்றைக்கும் அந்த நிலவறைச் சுவர்களில் இரத்தத் தீற்றல்களையும் கை அடையாளங்களையும் காண முடிகிறது. ஆங்காங்கே சில கிறுக்கல்களும் தெரிந்தன. சித்திரவதை செய்யப்பட்டவர்களும் பின்னாளில் அவர்களைத் தேடி வந்த குடும்பத்தினரும் எழுதிப்போன வாசகங்கள் அவை. சிலது இரத்தத்தால் தோய்ந்திருந்தன.
I never forgot my husband was killed.
Cry Far Help Me The Dead.
You have killed me, but what about my children?
பிறிதொரு நாளில் நிகழ்ந்த சம்பவமும் இக்கணம் நினைவில் வருகிறது.
சபாரி பயணத்தில் நாம் இருக்கிறோம். எம்முடைய வழிகாட்டிகளில் ஒருவத்தியான சோபியாதான் நம்முடைய வாகனத்தை ஓட்டிப்போகிறாள். அது ஒரு அதிகாலைப்பயணம். இன்னமும் பொழுது புலர்ந்திருக்கவில்லை. நாலாபுறமும் பறவைகள் ஓலமிட்டுத் திரிந்துகொண்டிருந்தன. பபூன்கள் குறுக்கும் மறுக்குமாக அலைந்தன. அப்போது திடீரென ஒரு பறவையை நம்முடைய வாகனம் இடித்துவிட்டது. அது மட்டுமின்றி வாகனத்தின் கம்பி வலைக்குள் சிக்கி அது இறந்துபோக, சோபியா பதைபதைத்துப்போனாள். வாகனத்தை உடனேயே நிறுத்தி பறவையின் உடலைத் தூக்கி ஓரமாக அப்பாலே போட்டாள். வாகனத்து இருக்கையில் வந்து உட்கார்ந்த பின்னரும் சோபியாவின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. ஆனால் வாகனத்துள் இருந்த நமக்கு ஒருவித பரபரப்புதான் தொற்றிக்கொண்டது. சோபியா அந்தப் பறவையை இடித்ததை சிறிது நக்கலும் அடித்தோம். அவள் நமக்கு முன்னர் சொன்ன வாக்கியமான born to kill ஐ அவளுக்கே நினைவுபடுத்திச் சிரித்தோம். ஒரு பறவை, அதன் காட்டில் அது பாட்டுக்கு வாழும் பறவை. அதன் மரணத்துக்கு எங்கிருந்தோ வந்த நாம் காலாகிவிட்டோமே என்ற சின்னச் சலனம்கூட நமக்குள் எழவில்லை. அது Marabou Stork எனப்படுகின்ற ஒருவகை நாரையினப்பறவை. நீண்ட அலகும் காலும் விரிந்த இறக்கையும் கொண்ட பறவை. முந்தைய தினம் அந்தப் பறவையைக் காட்டில் கண்ணுற்றபோது அதிசயப்பட்டு இந்தப் பறவை எது என்று சோபியாவிடம் நான் கேட்டிருந்தேன். அவள் திரும்பிப் பார்ப்பதற்குள் அந்தப் பறவை பறந்துவிட்டிருந்தது. அடுத்த நாள் நாந்தான் அந்தப்பறவை என்று சொல்ல சோபியா முன்னாலேயே வந்து அடிபட்டு இறந்துபோனது. நடுக் காட்டில் கூடு கட்டி, நைல் நதியில் மீன் பிடித்து, வானம் முழுதும் பறந்து திரிந்த பறவை அது. சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தில் அடிபட்டு இறந்துபோனது.
தினமுரசுக்கு வருவோம். தொண்ணூறுகளில் இடி அமீன் பற்றியோ பூலாந்தேவி பற்றியோ அந்தப் பத்திரிகை எழுதியபோது அதன் எழுத்தில் ஒருவித குதூகலமே பெரிதும் குடியிருந்தது. பாலியல் தொல்லைகளும் வல்லுறவுகளும் இச்சையைத் தூண்டும் வகையிலேயே எழுதப்பட்டிருந்தன. கொலைகளையும் அப்படியே விவரித்தார்கள். இராணுவ நடவடிக்கைகளும் பதில் தாக்குதல்களும் உதை பந்தாட்டப் போட்டிபோல விறுவிறுப்புடன் விவரிக்கப்பட்டன. உதயன் தணிக்கை காரணமாக ஒருமுறை ஒரு தாக்குதலை உதை பந்தாட்டமாகவே உருவகம் செய்து செய்தி வெளியிட்டது. மரணங்களையும் சித்திரவதைகளையும் பாலியல் வல்லுறவுகளையும் ஒருவித வன்மம் கலந்த குதூகலத்துடன் கடந்துபோக நம் சமூகம் பழகியிருக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் சமூகத்தை இரவோடு இரவாக ஆயுத முனையில் துரத்தியபோது அடுத்த நாளே அவர்களது வீட்டில் சூறையாடல்கள் இடம்பெற்றதற்குப் பின்னாலும் இந்த வன்மமே ஒளிந்திருக்கிறது. கந்தன் கருணை வீட்டைத் தம் சகோதரர்களையே சித்திரவதை செய்யும் முகாமாக மாற்றியதன் முரண்நகைக்கும் பின்னாலும் இது இருக்கிறது. ஒருத்தர் வீட்டுப் பந்தியில் உட்கார்ந்து அவர் கையால் சோற்றை வாங்கித் தின்று முடித்து கை கழுவிவிட்டுப் பின்னர் துவக்கை எடுத்து அவரையே சுட்டுக்கொன்றதும் நம் இனத்திலேயே நிகழ்ந்தது. நம் வீட்டில் நிகழாதவரை இவற்றையெல்லாம் எதிர் நிலை எடுத்து இரசிக்கும் வன்மம் எம் சமூகத்தில் எப்படியோ வேரூன்றிவிட்டது. மீசை என்பது வெறும் மயிர் என்ற ஆதவன் தீட்சண்யாவின் நூலில் இதனைச் சிறு குறிப்பாக அவர் எழுதியபோது எனக்கு முதலில் கொஞ்சம் கோபம்தான் வந்தது. யோசித்துப்பார்க்கையில் அது உண்மையும்தான். நாம் ஏன் இப்படி இருக்கிறோம் என்று சிந்தித்துப்பார்த்தேன். இந்த வன்மத்தை நான் வன்னி மக்களிடமோ, மலையகத்தினரிடமோ பெரிதாகக் கண்டதில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தாரிடம் இது மிக அதிகம். அதிகாரத்தில் திளைத்த சமூகம் ஒன்று பிறிதொரு அதிகாரத்தால் ஒடுக்கப்படுகையில் அதனுடைய எதிர்ப்பிலே இயலாமையின் வன்மமும் சேர்ந்துவிடுகிறது. ஈகோ தலைவிரித்தாடுகிறது. வன்மத்தை யாரிடமாவது காட்டியாகவேண்டிய நிலையில் தன் இனத்துள்ளேயே அது நலிவானவர்களை மேலும் கோரமாக ஒடுக்க ஆரம்பிக்கிறது. இது குறிப்பாக யாழ் சமூகத்தின் ஆதிக்க குழுமங்களின் மிகப்பெரிய உளவியல் பிரச்சனை. ஒரு புறம் ஒடுக்கப்பட்ட சமூகமாகவும் மறு புறம் ஒடுக்கும் சமூகமாகவும் நாம் இரு நிலைகளை எடுத்து நிற்பதன் விசித்திரம் இதுதான். ஒடுக்கப்படுவதை பல சமயங்களில் நம்மால் கட்டுப்படுத்தமுடியாது. அதை எதிர்த்துப் போராடவேண்டும். ஆனால் நாம் மற்றவரை ஒடுக்குவதை கட்டுப்படுத்தலாம் அல்லவா? அது நம் கையில்தானே இருக்கிறது?
நண்பர்களே.
பயணங்களின் வலிமை இது. பயணங்கள் நம்மை, நம் சமூகத்தை, நம் வரலாற்றை, நம் சுயத்தை கேள்வி கேட்க வைக்கின்றன. அவை வெறுமனே உல்லாசங்களுக்கானவை மட்டுமல்ல. புத்தகங்களைப்போலப் பயணங்களும் ஒருவகையில் நம் ஆசிரியர்கள். அது விலங்குகள் சபாரியாக இருக்கட்டும், வரலாற்றுச் சுற்றுலா ஆகட்டும் அல்லது வெறுமனே புளோவோடும் மௌலீமாவோடும் செய்த தேநீர் உரையாடல்களாக இருக்கட்டும். பயணங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்பவை ஏராளம். பயணக்கட்டுரைகள் எழுதுவதன் ஆதாரமும் அதுதான். அது எழுதுபவரான எனக்கு நான் செய்த பயணத்தை முழுமையாக உள்வாங்க வழி சமைக்கிறது. அந்தப் பாத்தி தண்ணியில் கொஞ்சம் வாசகர்களான உங்களையும் வந்து சேர்கிறது.
உகண்டாவின் அரசியல் வரலாற்றையும் இனப் பரம்பலையும் அறியும்போது எங்கோ நமக்கும் இடிக்கிறதல்லவா? நமக்கு நிகழும் அநியாயங்களும் நாம் நிகழ்த்தும் அநியாயங்களும் புத்தியில் உறைக்கிறதல்லவா? மறுபடியும் மறுபடியும் இவை எனக்கு உணர்த்துவது இதனைத்தான்.
எங்கு ஒரு சமூகமோ, தனி மனிதரோ ஒடுக்கப்படும்போது அவர்களுக்கு நாம் துணை நிற்கவேண்டும். அவர்களது போராட்டத்தில் முடிந்தால் நாமும் இணையவேண்டும். இல்லையேல் தார்மீகமான ஆதரவையேனும் கொடுக்கலாம். ஆனால் எந்தப் போராட்டங்களும் அதிகாரத்துக்கான குறுக்குவழியாக மாற்றமடைந்திடலாகாது. அதிகாரம் என்று ஒன்று வந்தாலே கூடவே ஒடுக்குமுறையும் இணைந்துவிடுகிறது. அந்தப் புள்ளியை நாம் அடைகையில் மறுபடியும் யாருடன் கூடவே நின்று குரல் கொடுத்தோமோ அவர்களுக்கெதிராகவே நம்முடைய குரல் எழுந்துவிடுதலும் வேண்டும். இதிலே ஆசா பாசங்களுக்கு இடமில்லை. ஒருவரை ஒரு புள்ளிக்காக ஆதரிக்கிறோம் என்பதற்காக அவர் செய்யும் அத்தனை அநியாயங்களையும் ஏற்றுக்கொள்வதோ அல்லது அமைதி காப்பதோ நியாயமான செயலும் அல்ல. இதை உணருவதற்கு நம்மை நாமே களிமண்ணை உருட்டி உருட்டி பொம்மை செய்வதுபோல, மறுபடியும் மறுபடியும் கேள்விக்குட்படுத்திக்கொண்டு சீர்படுத்துவது மிக அவசியமானது.
உகண்டாவின் வரலாறு சொல்லி நிற்கும் பாடம் இது. நம் இனத்து வரலாறும் இதுவே. சொல்லப்போனால் உலகமெல்லாம் வரலாறு இதனையே நமக்கு உணர்த்தி நிற்கிறது.
தொடரும்.

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. கக்கூஸ்

                                          நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா பின்பத்திக்குள்ளே சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் கிடக்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரை கொள்ளும் அம்மாவைத் தட்டி எழுப்புவதுதான். முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார். “பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”