Skip to main content

அன்புள்ள கம்பவாரிதி ஐயாவுக்கு

 

jeyaraj

கம்பன் விழா நிகழ்வுகள் இனிதே நிறைவேறியிருக்கும் என்று நம்புகிறேன். விழாவிலே கலந்துகொள்ளமுடியாவிட்டாலும் விழா நாட்களை நானும் கம்பனோடே கழித்தேன். இம்முறை விழா நாட்களில் மிகச்சிரத்தை எடுத்து படிக்க முயன்ற பாடல்கள் வாலி வதை சார்ந்தவை. எனக்கு நீங்கள் அடிக்கடி சொல்லுவதொன்று ஞாபகம் வருகிறது. இராமனது அம்பு தோற்ற ஒரே இடம் வாலிவதை. “செம்மை சேர் இராம நாமம்” எனும் இடத்தில் கம்பன் கூட சற்றே சறுக்கினான் என்று சொல்வீர்கள். வாலிமீது மறைந்திருந்தேனும் கணை வீசும் தகுதியும் துணிச்சலும் எவருக்கும் கிடையாது. அதானாலே தன்மீது ஒரு சரம் பாய்ந்ததும் அவன் ஆச்சரிய மிகுதியில் குழம்புவான். யாரவன் என்று வினவுவான்.

'தேவரோ?' என அயிர்க்கும்; 'அத்
தேவர், இச் செயலுக்கு
ஆவரோ? அவர்க்கு ஆற்றல்
உண்டோ?' எனும்; 'அயலோர்
யாவரோ?' என நகைசெயும்;
'ஒருவனே, இறைவர்
மூவரோடும் ஒப்பான், செயல்
ஆம்' என மொழியும்.

“ஒருவனே, இறைவர் மூவரோடும் ஒப்பான், செயல் ஆம்” எல்லாம் கம்பன் மாத்திரமே பண்ணக்கூடிய நுட்பங்கள். நீங்கள் சொல்லச்சொல்ல, தெரு மணலில் உட்கார்ந்து கேட்டதில் கையில் வைத்திருந்த கச்சான் பக்கற் இளகிப்போன காலம் ஞாபகம் வருகிறது. இப்போது தனியனாக உட்கார்ந்து கம்பனை படிக்கப் படிக்க தோன்றுவதெல்லாம் ஒன்றே.

இங்கிவனை நாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம்?

நிற்க.

உங்களுக்கும் எனக்குமான பந்தம் மண்ணோடு மழை கொண்ட சொந்தம். நீங்கள் மழையாய்  தமிழை பாரபட்சமின்றி எங்கெலாம் பொழிந்தீர்களோ அங்கெலாம் போய் ஏந்திக்கொண்டவன் நான். சொல்லிய பாட்டின் பொருளுணர முயன்றவன்..  எம்மிடையே எவரும் புகமுடியாத மகன்றில் உறவு நாம் கடலினால் பிரிந்திருந்தாலும் உளது என்பது என் மனசுக்குத்தெரியும். இந்த கடிதத்தை பகிரங்கமாக எழுதுவதன் நோக்கம், இந்தக்கடிதத்தின் ஆதார சங்கதிகள் உங்களுக்கு தெரியவேண்டியதைவிட மற்றவர்களுக்கு போய்ச்சேரவேண்டியதே அவசியம் என்று கருதியதால்தான். இந்த துணிச்சல்கூட நீங்கள் கொடுத்ததுதான்.

இந்த கடிதத்தால் சில கம்பன் கழக உறவுகள் என்னை பகைக்கக்கூடும். நான் வெளிநாட்டில் குளிர் காய்பவன். ஊரில் இருப்பவனுக்கே உரிமை எல்லாம் என்று என் வாதத்தை புறம் தள்ளக்கூடும்.  சிலர் நடைமுறை யதார்த்தம் அறியாதவன் என எள்ளி நகையாடலாம். ஏலவே தனியன் நான், மேலும் தனிமைப்படுத்தப்படலாம். இந்தக்கடிதத்தை உங்கள் எதிரிகள் தமக்கு சார்பாகக்கூட பயன்படுத்தலாம். தங்கள்மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக இக்கடிதத்தை அவர்கள் கொண்டாடவும் கூடும். இவையெலாம் அறிவேன். ஆனால் நான் எப்போதுமே சுடுமணலில் உட்கார்ந்து விழாப்பார்த்த ஏகலைவனே. கட்டைவிரலை கேட்டாலும் ஏன் என்று திருப்பிக்கேட்கச்சொன்னவர் நீங்கள். அந்த தைரியம்தான் இக்கடிதம். தனித்து ஒலிப்பதால் மடியிலும் எனக்கு கனமில்லை. எனினும் நீங்கள் என்னை மற்றவர்போல புறம்தள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.  

வெறுமனே எள்ளி நகையாடுவதிலோ, எதிர்ப்பரசியல் செய்வதிலோ, விமர்சித்தே வாழ்வதிலோ எனக்கு ஈடுபாடு கிஞ்சித்துமில்லை. இக்கடிதத்தைக்கூட விழா முடிந்தபின்னர் எழுதுவதன் நோக்கமும் அதுவே. ஆனால் என் கருத்தியலுக்கு மாறாக இருப்பதை, நான் மதிக்கும் ஒரு அமைப்பு செய்கையில் வாளாவிருப்பது நேர்மையான செயலன்று. கம்பன் கழகத்தின் ஒவ்வொரு வளர்ச்சிப்படிகளையும் கொண்டாடிவிட்டு, என் மனச்சாட்சிக்கு விரோதமாக ஒன்று நடக்கையில் அமைதி காப்பது அழகல்லவே. குருவை கேள்வி கேட்பதாலோ, குருவோடு முரண்படுவதாலோ உங்கள் மீது நான் கொண்டிருக்கும் அபிமானம் துளியும் குறையப்போவதுமில்லை என்பதையும் அறிவீர்கள். என் இறுதிச் சிறுகதை “தீராக்காதலன்”கூட நீங்கள் போட்ட பிச்சைதான். வாசித்தால் அது உங்களுக்கும் தெரியும். உங்களை ஆழ அறிந்த எவருக்கும் தெரியும். உங்கள் ஆசியுடனேயே மீதி கடிதத்தை தொடர்கிறேன்.

இந்த நீண்ட முன்னுரைக்கு காரணம் ஒன்றே.

அண்மையில் கொழும்பு கம்பன் விழாவில் நெஞ்சை வருத்தும் சில காட்சிகளை கண்ணுற்றேன். ஸ்ரீலங்கா சனாதிபதி திரு மைத்திரிபால சிறிசேனா அவர்களுக்கு கம்பன் கழகம் கொடுத்த அதி உச்ச கௌரவமும் பாராட்டும் என்னை, என்னையே தடுமாறவைத்து விட்டது.

maithree

ஏன்?

இந்த சின்ன க்கேள்வியைத்தான் இனி மேலும் விரிவாக்கப்போகிறேன்.

'குலம் இது; கல்வி ஈது; கொற்றம் ஈது; உற்று நின்ற
நலம் இது; புவனம் மூன்றின் நாயகம் உன்னது அன்றோ?
வலம் இது; இவ் உலகம் தாங்கும் வண்மை ஈது; என்றால் – திண்மை
அலமரச் செய்யலாமோ, அறிந்திருந்து அயர்ந்துளார் போல்?

கம்பன் கழகத்தின் பெருமை என்று நான் எப்போதுமே சொல்லிக்கொள்வது இது. கம்பன் போன்றே கர்வத்தோடு தலை நிமிர்ந்து நிற்கும் கழகம் அது. விடுதலைப்புலிகள் யாழ் மாவட்டத்தை ஆட்சிசெய்த காலமான தொண்ணூறுகளில், அவர்களின் குகையிலே, அவர்கள் ஆயுதங்களோடு நடமாடிய வீதிகளில், யாழ்ப்பாணத்தின் அத்தனை கழகங்களும்(கோயில்கள், விளையாட்டுக்கழகங்கள் உட்பட) பிரசாரங்களுக்கும் இயக்க நடவடிக்கைகளுக்கும் துணை நின்றபோது, இது இலக்கிய கழகம், இங்கே அரசியல் வேண்டாம் என்று கம்பனை மட்டுமே மாட்சிமை செய்து மேடையேற்றிய, எந்த அரசியல் பூச்சும் பூசாத கழகம் இந்தக் கம்பன் கழகம். அந்த திமிரை விடுதலைப்புலிகள் கூட உள்ளூற ரசித்தார்கள் என்பதே உண்மை.  கம்பன் விழா மேடைகளில் நானறிய விடுதலைப்புலிகளின் தலைவர்கள் தோன்றி பார்த்ததில்லை. புதுவையும் இளங்குமரனும் அவையோரோடு அவையோராக விழாவை ரசித்துவிட்டு போவார்கள். ஆனானப்பட்ட கவிஞரான புதுவைகூட மேடை ஏற்றப்பட்டு கௌரவிக்கப்பட்டதில்லை. அத்தனை கர்வம் மிக்கது கம்பன் கழகம். ஒருவரும் அதைக்குறை சொன்னதுமில்லை. ஏனெனில் கழகத்தின் நோக்கம் தெளிவானது.

அந்த கர்வத்தின் மாற்று கொஞ்சம் குறைந்துவிட்டதோ என்கின்ற சந்தேகம் இச்சிறியேனுக்கு தற்சமயம் வந்துளது.

'கார் இயன்ற நிறத்த களங்கம் ஒன்று
ஊர் இயன்ற மதிக்கு உளதாம் என,
சூரியன் மரபுக்கும் ஒர் தொல் மறு,
ஆரியன் பிறந்து ஆக்கினையாம் அரோ!

என்னாயிற்று?

அரசுப்பீடத்தில் இருப்பவருக்கு பகிரங்க ஆதரவு தெரிவிக்கவேண்டிய கட்டாயம் நானறிந்து கம்பன் கழகத்துக்கு என்றைக்கும் இருந்ததில்லை. இருக்கவும் கூடாது. காரணம் கம்பனின் பெயரிலான கழகம் இது. கம்பன் அளவுக்கு கர்வமான கவிஞன் உலகில் கிடையாது. பாரதிகூட இரண்டாமிடம்தான். என் கேள்வி இதுதான்.  அரசு மரியாதையை உதறிவிட்டு ஒரு வள்ளலின் தயவில் மொத்த காவியமும் பாடி பெருமை சேர்த்தவன் கம்பன். அந்த கம்பன் மைத்திரிக்கு மகுடம் சூட்டியிருப்பானா? பாரதி நம்மை வேடிக்கை மனிதர் என்று எள்ளி நகையாடியிருக்கமாட்டானா?

மைத்திரியை கம்பன் கழகம் அழைக்கவேண்டிய தேவைதான் என்ன?

மைத்திரிக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது என்பதற்காகவா? தொண்ணூறு வீதமான தமிழ் மக்கள் ஆதரித்த தலைவரை கௌரவிக்கிறோம், உமக்கென்ன ஆயிற்று? என்று கழக உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். மைத்திரிக்கு விழுந்த வாக்குகள் மகிந்தவுக்கு எதிரானதும், மாற்றத்துக்குமான வாக்குகளே ஒழிய, மைத்திரிக்கு ஆதரவான வாக்குகள் அல்ல என்பதை சின்ன குழந்தையும் சொல்லுமே. தமிழ் மக்கள் இரண்டாயிரத்தைந்தாம் ஆண்டு செய்த தவறை மீண்டும் செய்யலாகாது என்று எண்ணியே மைத்திரியை ஆதரித்தனர். அது மக்கள் மாற்றுவழி இல்லாத நிலையில், மீண்டுமொரு முள்ளிவாய்க்கால் தாங்கமாட்டோம், முதலுக்கு மோசம் வேண்டாம் என்று எடுத்த இராஜதந்திர நகர்வு. மற்றும்படி மைத்திரி தமிழ் மக்களுக்கு என்ன நம்பிக்கையை கொடுத்துவிட்டார்? பிரசாரத்தின்போதும், ஆட்சி கட்டிலுக்கு வந்த பின்னரும் அவர் தமிழ்மக்கள் மீது நிகழ்ந்த சொல்லொணா கொடுமைகளை ஏற்றுக்கொண்டாரா? இறுதி யுத்த சமயத்தில் தானே பாதுகாப்பு அமைச்சர் என்று கூட மார்தட்டிக்கொண்டார். மற்றும்படி பேரினவாதத்தை எதிர்த்து அவர் துளியேனும் குரல் கொடுத்தாரில்லை. ஆளுனரை மாற்றினாலும் அதிகாரம் அவர் கையில்தானே. அதை மாற்றியமைத்தாரா? பத்தொன்பதாம் சட்டத்திருத்தம் கொண்டுவந்த வேகத்தில் ஒரு சதவீதத்தையேனும் அவர் தமிழர் பிரச்சனையில் காட்டினாரா? அரசியல், இராஜதந்திர ரீதியில் கூட்டமைப்பு அரசுக்கு கொடுக்கும் ஆதரவுக்கேனும் ஏதாவது ஒரு காரணம் கூறலாம். ஆனால் ஒரு இலக்கிய கழகம், தமிழ்க்கழகம், இளைய தலைமுறையை தமிழ்பால் வழிநடத்தும் கழகம், அரசியல் இராஜதந்திரம் செய்யலாமா? செய்ய வேண்டிய தேவையும்தான் என்ன?

'ஒலி கடல் உலகம் தன்னில் ஊர் தரு குரங்கின் மாடே,
கலியது காலம் வந்து கலந்ததோ? - கருணை வள்ளால்! -
மெலியவர் பாலதேயோ, ஒழுக்கமும் விழுப்பம் தானும்?
வலியவர் மெலிவு செய்தால், புகழ் அன்றி, வசையும் உண்டோ?

எந்த அடிப்படையில் கம்பன் கழகம் அவருக்கு கிரீடம் சூட்டியது? மைத்திரி நல்லவர், எளிமையானவர் என்பதாலா? ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியானவுடன் அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு கொடுத்தார்கள். ஏனென்று காரணம் கேட்டபோது, “அவர் நன்றாக பேசுகிறார், பார்த்தால் நல்லவராகத் தெரிகிறார், எதற்கும் கொடுத்து வைப்போம்” என்றார்கள். ஒபாமா உலக சமாதானத்துக்காக என்னத்தைக் கிழித்தார்? இஸ்ரேல் அதிபர் அமெரிக்க சபையிலேயே பாலஸ்தீனியர்களுக்கு எதிராக பேசிவிட்டுபோகும் நிலையில்தான் ஒபாமாவின் ஆட்சி இருக்கிறது? பட்டமும் கௌரவமும்  சாதித்தவர்களுக்கல்லவோ கொடுக்கவேண்டும். சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையில் யாரும் கொடுப்பார்களா? இதைத்தான் கம்பன் கழகமும் செய்கிறதா? இவரைவிட பல நம்பிக்கைகளை சுமந்து வந்தவர்தான் சந்திரிக்கா. இறுதியில் நடந்தது என்ன? அவருக்கும் கிரீடம் சூட்டலாமா? நாகர்கோவில் பாடசாலையில் கொல்லப்பட்ட குழந்தையின் தாய்க்கு நாங்கள் என்ன பதில் சொல்லப்போகிறோம்?  

நானே இப்படி எழுதவேண்டிய சூழ்நிலையை எண்ணி மனம் வெம்புகிறேன்.

மைத்திரியை நாங்கள் அழைக்கவில்லை, தாமாகவே அவர் விழாவுக்கு வந்தார் என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. சனாதிபதி தாமாக வந்தார் என்கின்ற வாதத்தை சிறு குழந்தையும் நம்பாது. அழைப்பிதழில் பெயர் போடாததற்கு பாதுகாப்பு, அல்லது சர்ச்சைகளை தவிர்ப்பது காரணங்களாகலாம். அப்படியே அவர் வந்தாலும் புதுவை உட்கார்ந்திருந்ததுபோல அவரை முன்வரிசையில் அமர்த்தியிருக்கலாமே? கம்பனை ரசித்துவிட்டுப் போகட்டும். யார் தடுத்தார்? அவரை சிம்மாசனம் ஏற்றி அழகு பார்க்கவேண்டிய காரணம்தான் என்னவோ? அந்த சிம்மாசனத்தில் அப்துல் ரகுமானும், சாலமன் பாப்பையாவும், கம்பவாரிதியுமன்றோ அமர்ந்திருந்தார்கள். இராயப்பு யோசப் அவர்கள் இருக்கப்போகும் இருக்கை அல்லவா. அன்றைக்கு செங்கை ஆழியானை அல்லவா அதில் அமர்த்தி அழகு பார்த்திருக்க வேண்டும்? மனுசன் சாகக்கிடக்கிறார்.

'நூல் இயற்கையும், நும் குலத்து உந்தையர்
போல் இயற்கையும், சீலமும், போற்றலை;
வாலியைப் படுத்தாய் அலை; மன் அற
வேலியைப் படுத்தாய் - விறல் வீரனே!

இல்லை, அரசியல்வாதிதான் மேடை ஏறவேண்டும் என்றால், தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்ற வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா அங்கே அமர்ந்திருக்கவேண்டுமல்லவா? நானறிந்த கொழும்பு கம்பன் விழாக்கள் அவரின்றி நடந்ததில்லையே. நீங்களே ஒருமுறை எழுதியிருக்கிறீர்கள். முதலமைச்சருக்கு அழைப்பிதழ் அனுப்புவோமே ஒழிய நேரில் அழைப்பதில்லை என்று. முரண்பட்டாலும் அவருக்குரிய அங்கீகாரத்தை கொடுக்க வேண்டுமல்லவா? சனாதிபதியோடு நெருக்கமான சுமந்திரன்,  சனாதிபதியை அழைத்துவந்த சுமந்திரன், தன் கட்சிக்காரரான முதலமைச்சரை அழைத்துவராமலா போயிருப்பார்? நாம் ஒரு தனியினம். நமக்குண்டு ஒரு நனிநிலம் என்றுவிட்டு, நாமே முதலமைச்சரை அழைக்காமல் சனாதிபதியை அழைத்தால், நமக்கேன் ஒரு நாடு? ஒரு சுயாட்சி?  எனக்கு பாரதி, புதுவை, காசியானந்தன் என்று அத்தனைபேரின் கவிதைகளும் ஒருசேர வருகின்றன. தவிர்க்கிறேன்.

பொதுவில் யோசித்துப்பார்க்கிறேன். கம்பன் மேடையிலே இப்போதெல்லாம் மேடையேறும் அரசியல்வாதிகள் யார் யார் என்று. டக்ளஸ் தேவானந்தா தாமாக வந்து நன்கொடை கொடுத்தார் என்ற உங்கள் பதிலை யார் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். ஆனால் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாண கம்பன் கழக மேடையில் தோன்றியதன் தாற்பரியம்தான் என்ன? அவர் இலக்கியவாதியா? அந்த சனகன் வில்லை உடைத்தது யார் என்ற பகிடியை அவரிடம் சொல்லிப்பாருங்கள். "எங்கட பெடியள விட்டு தேடிப்பார்க்கலாம், இல்லாட்டி ஆர்மி இண்டெலிஜண்டகூட கேட்டுப்பார்ப்பம்" என்று சீரியசாக உங்களுக்கே பதில்சொல்லுவார். டக்ளஸ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்ற அரசியல்வாதியா எனறால் அதுவும் சுத்தம்.  நான் இந்த விவாதத்தில் ஹக்கீமை விலக்கிவிடுகிறேன். அவர் தமிழறிவும், கவிப்புலமையும் கம்பன் மேடையேறும் தகுதியைக் கொடுக்கின்றன.

douglas

ஆக, கேள்வி மைத்திரி, டக்ளஸ் என்ற நிலையைக்கடந்து கொஞ்சம் பொதுமையடைகிறது.

கம்பன் கழகம் அரசியல்வாதிகளுக்கு மேடை அமைக்கவேண்டிய தேவை என்ன? அவர்களுக்குத்தான் போதுமான மேடை உள்ளதே. கம்பன் மேடை இலக்கியவாதிகளுக்கானதல்லவா? இலக்கிய கழகத்துக்கு சமூகப்பொறுப்பு இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறது. கம்பன் கழகமும் ஆரம்பநாட்களில் அதனை செவ்வனே செய்தும் வந்தது. சமூகத்துக்கு அளப்பரிய சேவை செய்தவர்களையும் பாராட்டியது. வைத்தியர் சிவகுமார், பேராசிரியர் துரைராஜா, வைத்தியர் ஜெயகுலராஜா என்ற வரிசையை மறுக்கமுடியுமா? இராயப்பு யோசப் அடிகளாருக்கு விருது கொடுப்பதற்கு ஒரு துளி சலசலப்பு வந்ததா? ஆனால் அதே மேடையில் டக்ளஸும் மைத்திரியும் உட்காரும்போது  இடிக்கிறதல்லவா? இல.கணேசனைக்கூட பா.ஜ.க தலைவர் என்றே அறிமுகம் செய்யுமளவுக்கு கழகமேடையில் அரசியல் நெடி உச்சத்தை இப்போது எட்டியிருக்க்கிறதே.  

இது நான் பார்த்து ரசித்து வளர்ந்த கம்பன் கழகம் இல்லை ஐயா.

இம்முறை மைத்திரியை பாராட்டும் மேடையில் நீங்கள் இல்லை. அந்த மேடையை தவிர்த்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது. பிடிக்காமல் தவிர்த்திருந்தீர்கள் எனறால், நீங்கள் சூழ்நிலைக்கைதியாகிவிட்டீர்களோ என்ற கவலையும் கூட உருவாகிறது. என் பேரன்பிற்கும் மரியாதைக்குமுரிய ஆசான்கள் மைத்திரிக்கு பொட்டு வைத்து பொன்னாடை போர்க்கிறார்கள். பொன்னாடைகளுக்கான மதிப்புமீது சந்தேகம் வருகிறது. மனிதர்களே விருதுகளை சிறப்பிக்கிறார்கள்.  இனி அதே பொன்னாடையை கம்பனுக்கும் போர்த்தும்போது …. உங்களை மீறி முடிவுகள் எடுக்கப்படுகின்றனவோ? உங்களைச்சுற்றி உங்களையறியாமலேயே திரை வீழ்ந்துவிட்டதா? “சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான், சுற்றமாச் சூழ்ந்து விடும்” என்ற வள்ளுவன் வாக்கு மனதில் தோன்றுகிறது. இதற்கு பதில் பொதுவில் சொல்லவேண்டிய தேவையேதுமில்லை. ஆனால் எட்ட நின்று ரசிப்பவனுக்கு எழும் இயல்பான சந்தேகம் இது.

இப்படி கேள்விகேட்ட ஒருவரிடம், “நீயெல்லாம் வெளிநாட்டில் இருந்தபடி என்ன வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் தமிழ் வளர்ப்பது நாங்கள் அல்லவா” என்று கழக நண்பர் ஒருவர் சாடியிருந்தார். எப்போதுமே எங்கள் குரல்களை அடைப்பதற்கு பயன்படுத்தும் வாய்மொழி அது. அதிலே இருக்கும் நியாயத்தால் இராமன் வாலிக்கு பதிலிறுக்காமல் நின்றதுபோல நிற்கிறேன்.  

ஆனால் என் வாயை அடைப்பது, நான் அந்த கேள்விகளை கேட்கமுடியாமல் பண்ணுமே ஒழிய, ஊரிலே இருக்கும் இலக்குவன்கள் பதிலிறுக்கவே செய்வார்கள். அப்போது அந்த கழக நண்பர் மறுமொழி சொல்லியே ஆகவேண்டும்.

'மறம் திறம்பல், "வலியம்" எனா, மனம்
புறம் திறம்ப எளியவர்ப் பொங்குதல்;
அறம் திறம்பல், அருங் கடி மங்கையர்
திறம் திறம்பல்; - தெளிவு உடையோர்க்கு எலாம்.

ஒருமுறை காரைநகரில்  உங்கள் பிரசங்கம் நடக்கிறது. தூரத்தே வயல்வரப்புகளில் அரிக்கன் லாம்பு வெளிச்சங்கள். யார் என்று விசாரித்ததில், அவர்கள் கோயில் நிர்வாகத்தால் ஒதுக்கிவைக்கப்பட்ட சாதியர் என்று தெரிகிறது. நீங்கள் உங்கள் எதிர்ப்பை காட்டுவதோடு, கோயிலால் ஒதுக்கிவைக்கப்பட்டாலும் தூரத்தே வயல்கரையில் உட்கார்ந்து பிரசங்கம் கேட்கிறானே, அவனே சிறந்த சைவன் என்று நீங்கள் அவர்களை புகழ்ந்தீர்கள்.

கம்பன் விழாக்கள், மேடையில் இருப்பவருக்காக அல்ல. பண முதலாளிகளுக்காக அல்ல.  தன் புகழ் சேர்க்க மேடையேறுபவருக்காக அல்ல. தனக்கு ஒரு முகம் வேண்டுமென்று கம்பனை பயன்படுத்துபவருக்காக அல்ல. ஏன் கம்பனுக்காகக் கூட அல்ல. அவை கீழே தரையில் உட்கார்ந்து தமிழ் ரசிக்கும் பாமரனுக்கானது.  அவனுக்கே கம்பன் காவியம் படைத்தான். அவனே கிரீடத்துக்குமுரியவன். அவனுக்கு கம்பன் கழகம் பதில் சொல்லவேண்டியது  கழகத்துடைய தார்மீக கடமையாகிறது.

செயலைச் செற்ற பகை தெறுவான் தெரிந்து,
அயலைப் பற்றித் துணை அமைந்தாய் எனின்,
புயலைப் பற்றும் அப் பொங்கு அரி போக்கி, ஓர்
முயலைப் பற்றுவது என்ன முயற்சியோ?

சிறுமை கண்டில் பொறுத்தருள்க.

என்றும் அன்புடன்,
ஜேகே


என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : கம்பவாரிதி

படங்கள்
https://www.facebook.com/maithripalas/posts/10153204202536327?pnref=story
யாழ்ப்பாண கம்பன் கழகம்

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக