Skip to main content

ஏகன் அனேகன்.

 

folder

"கடவுள்" கொல்லைப்புறத்து காதலியை புத்தகம் ஒன்று தொகுப்பதற்காக மீள செப்பனிட்டுக்கொண்டிருந்தேன். அந்த மூடு வரவேண்டுமென்று "ஆகாய வெண்ணிலாவே" யை மாற்றிவிட்டு பொல்லாவினையேனுக்கு மாறினேன்.

 

இந்த வசனங்கள் எழுதும்போது அந்த இசை ஏதோ செய்தது. இது அதிகாலை இறைவனுக்கு பூ கொய்யும் சிறுவனின் விவரிப்பு.

"நித்தியகல்யாணியில் தேடி தேடி ஆயும்போது காலை ஆறு மணி இருக்கும். மதிலுக்கு மேலாக வளர்ந்து நிற்கும் மரத்து கொப்பை, ஆட்டுக்கு குலை குத்தும் கம்பியால் எட்டி கொளுவி வளைக்கும் போது, சொட்டு சொட்டாக கொஞ்சம்பனித்துளி, தலை, முகம் கழுத்தடி என்று விழுந்து சில்லிடும். திருவிழாவில் வாங்கிய ஒரு சின்ன பனை ஒலைப்பெட்டியில் மொட்டு தவிர்த்து பூவெல்லாம் பிடுங்கி போட்டுக்கொண்டு, அப்படியே செம்பரத்தைக்கு தாவுகிறேன்"

எழுதிக்கொண்டிருக்கும்போது இளையராஜா குரல் ஒலிக்கிறது.

original_ilayaraja_4688a36fb93631"நமச்சிவாய வாழ்க .. நாதன் தாழ் வாழ்க"
"இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க"

கோரஸ் கேட்கும்போது மனது எங்கே போகிறது தெரியுமா?

"காதல் ஓவியம் காணும் காவியம்"
"தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்"

காதல் தான். கடவுள் என்றால் என்ன. காதலி என்றால் என்ன.

அடுத்த வரி.

"ஏகன் அனேகன் ... இறைவனடி வாழ்க"

என்னும்போது "அவன் வாய் குழலில் அழகாக.. " என்று யாரோ பிடறிக்குள் இருந்து இசைக்க "ஜகத்தாரிணி நீ பரிபூரணி நீ" என்று இன்னொரு இசை உச்சி மண்டைக்குள் இருந்து. இது எல்லாமே கல்யாணி என்று பேதை நெஞ்சங்களுக்கு புரியதேவையில்லை. அது நிகழும்.

இசை ஒருவித மனோபாவத்துக்குள் இட்டுச்செல்ல பின்வரும் வரிகள் வருகின்றன.

"கற்றை கற்றையாய் பூத்து தொங்கும் மஞ்சள் கோன்பூவை கொஞ்சத்தை இழுத்துப்போட்டுக்கொண்டே பின் வளவுக்கு சென்றால், அங்கே எக்ஸ்சோரா மரங்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை, பட்டர் கலர் என்று பல ரகம். கொத்தை அப்படியே அள்ளி, அம்மா செக் பண்ணுகிறாரா? என்று பார்த்து, இல்லை என்றால் அந்த சின்ன சின்ன ஸ்ட்ரோக்களில் வரும் தேனை உறிஞ்சி ப்ச்ச்..… தேன் என்னும் போது தான் ஞாபகம் வருகிறது. வாழைமரங்கள் உள்ள வீட்டுக்காரரா நீங்கள்? காலையில் பின் வளவில் வாழைப்பொத்தியின் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் இல்லையா. அணில் பிள்ளைகளுக்கு வரும் முன்னமேயே வாழைத்தோட்டத்துக்கு போனால், அந்த பூக்கள் வாழை மரங்களில் உதிராமல் இருக்கும். அவற்றை ஒவ்வொன்றாக கொய்து அதில் சொட்டாய் ஒட்டி இருக்கும் தேனை குடிக்கவேண்டுமே. சாதுவான வாழைக்கயரும் சேர்ந்து கொடுக்கும் சுவை ...அதை உண்டு களித்து, தேனினை சொரிந்து புறம்புறத் திரிந்த செல்வத்தை தேடி சுவாமி அறைக்குள் நுழைகிறேன் "

அட, திருவாசகம் எங்கே இருக்கிறது. எப்படி? யோசித்துக்கொண்டிருக்கும்போது “சிறு பொன்மணி” யை ஞாபகப்படுத்தியபடியே வருகிறது கோத்தும்பி. பவதாரிணி குரல் சொல்லுகிறது.

தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே!

அட! இது எப்படி?


மயில் போல பொண்ணு வந்து என்வீட்டு யன்னல் எட்டி ஏன் பார்க்கிறே எங்கிறது. இது தானோ சங்கமம்? காதல் கவிதை என்று இளையராஜா படம். அதிலே ஒரு பாடல். அர்த்தம் கூட கொஞ்சம் கோத்தும்பி பாணியிலேயே இருக்கும்.


இறை அனுபவம் எமக்குள் இருப்பது. அதை அடைய இறைவன் தேவையில்லை. இளையராஜா இசையே போதும். இங்கிவனை நாம் அடைய என்ன தவம் செய்துவிட்டோம்?

நானார் என்உள்ளமார் ஞானங்களாரென்னை யாரறிவார்?

 

&&&&&&&&&&&&&&&&&&&&&&

 

கடவுள் கொல்லைப்புறத்து காதலி.