Skip to main content

தீண்டாய் மெய் தீண்டாய் - நாணமில்லா பெருமரம்.

 

Digital Camera

முதலிரவில் கௌதம் வெறும் அணைப்போடு மட்டும் நிறுத்திக்கொண்டதை அகல்யா ஆரம்பத்தில் பெரிதாக கணக்கில் எடுக்கவில்லை. கடவுள் பக்தன். கைனோகொலஜிஸ்ட். காதல் என்பது உடலில் அல்ல, மனதில் என்று முதற்தடவை சந்தித்தபோதே சொன்னான். ஜென்டில்மன்.  அகல்யாவுக்கு உள்ளம் குளிர்ந்தது. இவன் காதலில் மென்மை பாராட்டுபவன். . பூவோடு உரசும் பூங்காற்றை போலே சீரோடு அணைத்தால் அது சைவம் பாட்டு சீன் ஞாபகம் வந்தது. அகல்யா தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டாள். எவ்வளவு நாளைக்கு என்று பார்ப்போம்.

நாளை, மறுதினம் .. திருமணம் முடிந்து மூன்று நாட்களாகியும் கௌதமின் கை அவளின் கன்னத்தை விட்டு கீழே தாண்டியபாடில்லை. இவன் பயப்பிடுகிறானோ என்று யோசித்தாள். சேச்சே இருக்காது. படித்தவன். கைனோகொலஜிஸ்ட், நிதம் நிதம் … அப்படி பயப்பிடுவானா? நான் தான் அவசரப்படுகிறேனோ? விவஸ்தை கெட்டவள். ச்சிக் .. என்ன மாதிரி மனிசி நான்? இப்படி எல்லாம் யோசிக்கலாமா?அதில் என்ன தப்பு? மூன்று நாட்களாகியும் மூதேவி முத்தம் கூட தரவில்லையே. இன்றைக்கேனும் ஏதாவது செய்யலாம் என்றால் எமர்ஜென்சி என்று ஆஸ்பத்திரிக்கு போய்விட்டான்.

மஹாகவி கவிதை. அகலிகை படலம். அகலிகை அதிகாலையில் தாபத்தோடு பக்கத்தில் படுத்திருக்கும் கணவனின் நெஞ்சில் கை போடுகிறாள். அந்த பேக்கிழவாண்டி இவள் கைபட்டதும், அட விடிஞ்சிட்டுது என்று நினைத்துக்கொண்டு திடுக்கிட்டு எழுந்து தவம் செய்ய கிளம்புது. பக்கத்தில மேலாடை சரித்து படுத்துக்கிடக்கும் அகலிகையை கணக்கே எடுக்கவில்லை. நம்மாளு எழுதுகிறார்.devibharathi-story-drawing-

அகலிகை தளிர்க்கை கொஞ்சம்
அசைந்ததும் அருகில் தூங்கும்
மிகுதியாய் நரைத்த நெஞ்சுக்
கோதமர் மேற்படர்ந்து
புக, இவர் விழித்துப் பார்த்துப்
பொழுதாயிற் றென்ப தெண்ணி
அகன்றதும் ஆனயாவும்
அவன் அங்கு நின்று கண்டான்.


“நரைத்த நெஞ்சுக்கோதம” ரிலேயே நம்மாளு அனைத்தையும் சொல்லிவிட்டார். “புக” வை புது வரியில் புகுத்தியதை கவனித்தீர்களா? மஹாகவி அல்லவா. அவ்வளவு டபிள் மீனிங் இருக்கும். அடுத்த பாடல். அகலிகை என்ன செய்கிறாள்?

ஆதரவு அயலில் தேடி
அலைந்தகை விரல்கள் மீண்டு
பாதிமூடா மென்மார்பில்
பதிந்தன. நெளிந்த வாயின்
மீதிபுன் முறுவல் மீண்டும்
விளைத்தனள். முயன்று பின்னர்
மாது குப்புறப் புரண்டு
மணையினை அணைக் கலானாள்.

இதில் இன்னமும் பச்சை. வரிக்கு வரி பச்சை நீலம் மஞ்சம் எல்லாமே. அலைந்தகை விரல்கள் மீண்டு அவள் மார்புக்கே வந்ததாம். அதில் அவள் செய்யும் காரியத்தில் அவளுக்கே சிரிப்பு. முயன்று பின்னர் கடைசியில் மாது மணையினை அணைக்கலானாள் என்கிறார் மஹாகவி. என்னா மனுசன்யா. சத்தம்போடாம அளவெட்டில இருந்து எழுதீட்டு மேலே போயிட்டு மனுஷன். வாசிக்க வாசிக்க, இவரை போய் கொண்டாடாமல் விட்டோமோ. ச்சிக்.

இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. கௌதம் இன்னமும் அதை தட்டிக்கழித்துக்கொண்டே வந்தான். ஏதாவது ஒரு காரணம். ஏதாவது. சிஸேரியன், கிரிட்டிகலான கேஸ், குழந்தையின் நரம்பு சிக்கிவிட்டது, இருந்து கண்காணிக்கவேண்டும். ஏதாவது சொல்லி லேட்டாக வருவான். வந்தவன் களைத்துப்போய் விழுவான். அகல்யா குழம்பிவிட்டாள். இவன் அவனா?

அன்றைக்கு சிவராத்திரி. கௌதம் புதினமாக வீட்டிலேயே இருந்தான். சமைத்தார்கள். சாப்பிட்டார்கள். டிவி பார்த்தான். சங்கக்காரா மாய்ந்து மாய்ந்து அடிப்பதை ஆவென்று பார்த்தான். மட்ச் முடிய நியூஸ் மாத்தினான். இவளை பார்த்தானில்லை. இவனை வழிக்கு கொண்டுவரவேண்டுமே?

நித்திரை வருகுது படுக்கப்போகிறேன் என்று அவள் சொல்ல,  போ, நான் வருகிறேன் என்கிறான் கௌதம். இவள் படுத்து இரண்டு மணிநேரம் கழித்து வந்து அருகில் கிடக்கிறான். அசையவில்லை. மரம். வெறும் மரம். மூச்சுக்காற்று கூட அண்டவில்லை. மார்பில் கைவைத்தால் எழுந்து சிவராத்திரி விரதம் இருப்பான் போல தோன்றியது. என்ன சனியனுக்கு என்னை கட்டினான்?  இவனுக்கு என்ன ஆயிற்று. தனக்கும் இல்லாமல் எனக்கும் இல்லாமல்.

En-Swasa-Katre

கன்றும் உண்ணாது கலத்தினுள் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்தில் உக்கா அங்கு
எனக்கு அகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே

 


குறுந்தொகை. பாலைப்பாட்டு. வெள்ளிவீதியார் மூன்றாம் நூற்றாண்டு.  என்னவாம்?  இதே தவிப்பு தான்.  தன் பாலை ஒன்று கன்று உண்ணவேண்டும். அல்லது கொண்டவர் கறந்து உண்ணவேண்டும். இரண்டுமே இல்லாவிட்டால், பால் பசுவின் மடியிலேயே கட்டிக்கொள்ளும். அந்த துன்பம் பசுவுக்கு தாளாது. அது தன்னாலேயே அந்த பாலை தரையில் சொரிந்துவிடும். அதேபோல இந்த பாழாய்ப் போன உடலால், தனியனாக இன்பம் துச்ச முடியுதில்ல. தலைவனும் அனுபவிக்கிறானில்ல. இப்படியான என் அல்குல், இடுப்பு, இடுப்புக்கு கீழே, எதுவெதுவோ அதுவெல்லாம் நிலம் கொட்டிய பாலாய் கிடக்கிறதே. பாலாய்ப்போன உடல்.

இந்தப்பாடல் என் சுவாசக்காற்றே திரைப்படத்திலும் வருகிறது. ரகுமானின் திரைப்பாடல்களில் எப்போவாவது நைஸாக இப்படிப்பட்ட சங்கப்பாடல்கள் வந்திறங்கும். இதில் முழுதாக வருவது ஆச்சர்யம். ஒரு பெண் முக்கல் முனகலோடு பாடுவார்.

 

தொடரும் வைரமுத்து பாடலில் ஆங்காங்கே கவிதை மிளிர்கிறது. தீண்டாய் மெய் தீண்டாய் என்ற வரியே ஆழமானது. எது மெய்? பொய்யே மெய்யா? பொய்யா மேனியளா? யோசியுங்கள். அதிலே இன்னொரு ரசிக்கவைக்கும் வரி.

நதியோரப் பூவின்மேலே ஜதிபாடும் சாரல் போலே
என்னில் இன்ப துன்பம் செய்குவதோ

ஓடிக்கொண்டிருக்கும் நதியின் சாரல் பட்டும் படாமலும் அடிக்கும்போது கரையில் வாடும்(?) பூவின் நிலை.  கொஞ்சம் யோசிக்க ஆச்சரியம் விரியும்.

ஆனாலும் வெள்ளிவீதியாரிடம் இருக்கும் எரோடிசம் வைரமுத்துவுடம் இல்லை. வெள்ளிவீதியார் நிச்சயமாக தலைவனை பிரிந்திருக்கவேண்டும். அல்லது அவன் அகலிகையின் முனிவர் கணவன் போல நம்பர் நைனாக இருந்திருக்கவேண்டும். இன்னொரு பாட்டும் அதே குறுந்தொகையில் எழுதுகிறார்.

இடிக்கும் கேளிர், நும்குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ, நன்றுமன் தில்ல!
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கையில் ஊமண் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கு அரிதே!

ஒருத்தனுக்கு இரண்டு கைகளும் இல்லை. போதாமைக்கு ஊமை. ஆள் அரவமற்ற ஒரு இடத்திலே பெரிய பாறாங்கல் ஒன்று இருக்கிறதாம். அதற்கு மேலே வெண்ணெய்க்கட்டி இருக்கிறது. அதை இந்த ஊமை காக்கவேண்டும். சூரியன் உதிக்கிறது. மேலெழுகிறது. அது உச்சியை நோக்கிச் செல்லச் செல்ல பாறையின் வெப்பம் மீந்து வெண்ணைக்கட்டி உருக தொடங்குகிறதாம். இதைப்பார்த்தவன் என்ன செய்வான்? கையால் எடுத்து உண்ணலாம் என்றால், பாவன் அவனுக்கு இரண்டு கைகளுமில்லை. கையாலாகாதவன். கத்தி யாராவது ஊரவரை கூப்பிடலாம் என்றால் அவனோ ஊமை. அந்த வெண்ணை உருகி உருகி அவன் முன்னாலேயே ஓடித்தீர்ந்ததாம். அதேபோல, தலைவியின் காமமும் வீணாய்ப்போகுத்து என்கிறார் வெள்ளிவீதியார்.

குறுந்தொகையின் உவமானங்கள் இப்படி அளவு கடந்தவை. அனேகமான சங்கப்புலவர்கள் இப்படி உட்கார்ந்து யோசித்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் பாடல்கள் தான் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஏனையவை எல்லாம் ஐந்தாறு லைக்குகளுடன் அப்படியே நின்றுவிட்டது.

பெண்களின் இப்படியான உணர்வு எழுச்சியை சங்ககாலம் இயல்பாக கையாண்டிருக்கிறது. பின்னாலே திருக்குறளும் அவ்வளவுக்கு அடித்து ஆடவில்லை. பெண்ணகளின் உணர்ச்சிகளை பெண்கவிஞர்களே பின்னியிருக்கிறார்கள். ஆண்கள் அல்ல. ஒரு சில ஔவையார்களும் எழுதியிருக்கிறார்கள்.

எண்ணாயிரத்தாண்டு நீரிற் கிடந்தாலும்
உண்ணீரம்பற்றாக்கிடையேபோற் - பெண்ணாவாய்
பொற்றொடி மாதர் புணர்முலைமேற்சாராரை
எற்றோமற்றெற்றோமற்றெற்று.

தன்னை வந்து மிரட்டும் பெண் பேயை பார்த்து, பெண்கள் மேல் இன்னமும் காமுறத்தெரியாமல் இருக்கும் பேடியரை போய் சுரண்டு. என்னை ஏன் சுரண்டுகிறாய் என்கிறாள். யார் அந்த பேடி? ஆழ யோசித்தால் ஔவை கூட ஒரு வெள்ளிவீதியார். பாவம் மனிசி. நாங்கள் ஆத்தி சூடி கொன்றை வேந்தன் என்று மனிசியை ஒரு கட்டுக்குள் அடக்கிவிட்டோம்.

அதற்கு பின்னர் வந்த ஆழ்வார்கள் சும்மாவா?

சுவரில் புராணநின் பேரேழுதிச்
சுறவநற் கொடிகளும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும்
காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவா

அவரைப் பிராயந் தொடங்கிஎன்றும்
ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுதுவைத் தேனொல்லை விதிக்கிற்றியே

இதை கீழிருந்து ரசிக்கவேண்டும். அடேய் மன்மதனே. எனக்கு கண்ணன் என்றால் உசிர். இந்தா இருக்கே என் முலைகள். பருவமடைந்த நாள் தொட்டு அவனுக்காகவே கிளர்ந்து பருத்தவை. அதை அவனிடம் கொண்டு சேர்ப்பாயா? அவன் இதை அனுபவிக்க ஏது செய்வாயா? அவனை அடைந்தவுடன் உன்னை மறப்பேன் என்று அஞ்சிடாதே! உன்னை மறக்கா வண்ணம் சுவரிலே மீன்களையும் குதிரைகளையும் கரும்பு வில், சாமரம் வீசும் பெண்கள் என்று எல்லாமே வரைந்து வைத்தேன். இது ஆண்டாள் காமனுக்கு வைக்கும் ஐஸ்.

ஆண்டாள் அவ்வையை விடுங்கள். அவர்களில் ஒரு குழப்பம் இருக்கிறது. பலதை சொல்லாமல் சொன்னார்கள். ஆனால் வெள்ளிவீதியார் உள்ளதை உள்ளபடியே சொல்லி அதன்மூலம் எல்லை மீறி வியாபிக்கிறார். கொஞ்சம் சில்வியா பிளாத், ஷரோன் ஓல்ட் வகை எரோட்டிசம். அந்த வகையில் தமிழின் முதலாவது பின்நவீனத்துவ எரோடிக் கவிதை சங்ககாலத்திலேயே உருவாகியிருக்கிறது. யோனி என்ற வார்த்தையை எழுதிவிட்டு, அதற்குபின்னரே எப்படி கவிதையை முடிக்கலாம் என்று நினைப்பவர்கள் வெள்ளிவீதியாரின் வலியை படிக்கவேண்டும்.

Satham-Podathey-e1371792149874

வெள்ளிவீதியாரைப்போல அகல்யாவுக்கும் மன்மதன் தான் இனி துணை. இதை இப்படியே விடமுடியாது. நாணமில்லா பெருமரம் தான் காமம் என்றார் ஔவையார். இதிலே ஆண் என்ன பெண் என்ன வேண்டிக்கிடக்கு? அகல்யா ஒரு முடிவெடுத்தாள். நாமாகவே ஆரம்பிப்போம். இதில் என்ன வெட்கம்? “அப்பா” என்று மெல்ல அணுக்கினாள். சத்தம் இல்லை. “கௌதம்”. கொஞ்சம் ஸ்டைலாக கூப்பிட்டாள். குறட்டை மெதுவாக வந்தது. வாட் த ஹெக், என்று எட்டிப்போய் அணைத்தாள். விருட்டென எழுந்தான் கௌதம். ஒன்றுமே பேசவில்லை. செம்பெடுத்து தண்ணீர் குடித்துவிட்டு அடுத்தபக்கம் ஒருக்களித்துப் படுத்தான். இவள் விடவில்லை. மீண்டும் கைபோட்டாள். கையை தூக்கி எறிந்துவிட்டு எழுந்து, கட்டிலுக்கு கீழே பெட்ஷீட் போட்டு படுத்தான் அவன். இன்றோடு ஒரு முடிவு கண்டே ஆகவேண்டும். இவளும் கீழே இறங்குகிறாள். இறங்கியவளை உதறித்தள்ளிவிட்டான். இவளுக்கு அவமானம். கேட்டே விட்டாள்.

“எதுக்கு இப்பிடி பிஹேவ் பண்ணுறீங்கள்? விசரா?”
”இல்ல .. எனக்கு இது பிடிக்கேல்ல”
”ஏன்?”
”என்னால முடியாது”
”அதான் ஏன்?”
”ஏனெண்டா .. நான் .. நான் ஒரு .. மகப்பேறு .. கைனோகொலஜிஸ்ட் .... எனக்கு பெண்ணுறுப்பு ஒரு கருவறை .. கோயில் மாதிரி .. அங்கெல்லாம்..”
”வாட் த?”
”ஐ ஆம் சொறி அகல்யா”

அகல்யாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. ஏமாற்றப்பட்டுவிட்டேன். அவ்வளவு தானா வாழ்க்கை. இவனால் முடியவே முடியாதா? கைனோ ஆனதால் இப்படியானானா? இப்படியானதால் கைனோ ஆனானா? புல்லானாலும் … ஷிட் இவன் புல்லுக்கூட இல்லையே. பிளடி ச்சீட். கௌதமை அந்தக்கணமே தூக்கிஎறிந்தாள்.

இந்த சிட்டுவேஷன் திரையிலும் வந்திருக்கிறது. அவளுக்கு திருமணமாகிறது. கணவன் ஒரு impotent. மறைத்து கல்யாணம் செய்கிறான். கொஞ்சநாளில் அவன் வண்டவாளம் தெரியவருகிறது. வெள்ளிவீதியார் நிலைமை தான். ஆனால் அவளுக்கு ஒரு இணை கிடைக்கிறது. இது சிட்டுவேஷன். பாடலை பாருங்கள்.

காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னைக் காக்கவே தானாய் வளருமே
பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்ச நேரம்தானே
உன்னைத் தோண்டினால்
இன்பம் தோன்றுமே
விடியாமல்தான் ஓர் இரவேது
வடியாமல்தான் வெள்ளம் கிடையாது
வருந்தாதே வா...
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா..

பாடலில் வரிகளை அகலிகை, இந்திரன் ஜோடியை மனதில் வைத்து கேட்கும்போது மஹாகவியின் பாடலுக்கு முழு உருவம் கிடைக்கும்! அதை ஆதாரமாக வைத்து கேதா ஒரு முழு நீள கவியரங்கமே செய்தான். பலமுறை அதன் வரிகளை எழுதித்தா என்று கேட்டேன். இதற்குப்பிறகாவது இரண்டு வரிகள் வருமா?

‘நேரிழையைக் கலந்திருத்தே புலனைந்தும் வென்றான்’ என்று அப்பர் சுவாமிகள் ஈசனை பார்த்து பாடுவார். ஆனால் நிஜத்தில் சிலவேளைகளில் அது தவறுவதுண்டு. ஒரு சில வைத்தியர்களும், கடும் கடவுள் போக்காளர்களும் இந்த விஷயத்தில் வீக்காக இருப்பதுண்டு. வைத்தியர்களும், சாமியார்களும் தான் இதிலே கொஞ்சம் டீப்பாகவும் இறங்குவதும் உண்டு.

பட்டினத்தாரின் ஒரு கதை இருக்கிறது. ஒரு அரசனும் துறவியும் கவிதையில் அடிபடுவது போல. அதை கொஞ்சம் மாற்றி அகல்யாவும் கௌதமும் அடிபடுவதாக பார்ப்போமா. கௌதம் கடவுள் கருவறை என்று டகால்டி விட்டன அல்லவா. அகல்யா சொல்கிறாள்.

'செப்பளவு கொங்கை சேயிழை யாரைத் திரட்டி வந்து
முப்பொழு தென்றும் முகத்தோடு சேர்த்து முத்தமிட்டு
கொப்புளந் தொட்டு குளத்தினில் மூழ்கிக் குளிப்பதைப்போல்
அப்பனைப் பாடித்துதிப்பதில் ஏது ஆனந்தமே!'

இப்போது கௌதம் முறை. எடுத்து விடுகிறான் ஒரு பாடலை. இதற்கு மட்டும் குறைச்சல் இல்லை.

'சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம் பலம்தேடி விட்டோமே- நித்தம்
பிறந்தஇடம் தேடுதே பேதை மடநெஞ்சம்
கறந்தஇடம் நாடுதே கண்'

இதை கேட்டவுடன் அகல்யா ஒரே ஒருவரிக்கவிதை சொன்னாள்.

ஷிட்.

15satham2

மீண்டும் மெய் தீண்டுவோம்!

&&&&&&&&&&&&&&&&&&&&&&

உசாத்துணைகள்.
அகலிகை – மஹாகவி
401 காதல் கவிதைகள், குறுந்தொகை ஒரு எளிய அறிமுகம் – சுஜாதா
The Immigrant – Manju Kapoor (தொடுப்பு கதையின் மூலம்)
ஆண்டாள் பாசுரங்கள், அவ்வை பாடல் -
http://www.tamilvu.org

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட