Skip to main content

பாலு மகேந்திரா

 

balumahendra

அவள் பெயர் செல்வராணி என்று நினைக்கிறேன். ஒரு முப்பது முப்பத்தைந்து வயது இருக்கும். காதலன் வெளிநாட்டுக்கு அகதியாக போனவன். விசா கிடைக்கவில்லை. வருடக்கணக்காயிற்று. நாடு திரும்பமுடியாது. அவன் கடிதங்கள் வீட்டில் குவிந்துகிடக்கின்றன. தனிமையும் வயதும் பிரிவையும் தாண்டி தாபத்தை தூண்டுகிறது. காமத்துப்பாலில் பிரிவித்துயரால் வருகின்ற அத்தனை உடல் உபாதைகளும் செல்வராணிக்கு ஏற்படுகிறது. கட்டுப்படுத்த முடியவில்லை.

அவளின் முன்வீட்டில் ஒரு விடலைப்பையன் வசிக்கிறான். இவர்கள் வீட்டில் புத்தகம் வாங்க வருவான். இவளோடு சேர்ந்து விளையாடுவான். அக்கா அக்கா என்று கூப்பிடுவான். இவளது தாபம் அவன் மீது மோகமாய் திரும்புகிறது. ரீடர் படத்தின் கேட் வின்ஸ்லட்டின் நிலைமை. ஒருநாள் அவன் கிணற்றடியில் விளையாடிக்கொண்டிருக்கிறான். அவள் குளிக்கப்போகிறாள். சூழவும் வாழைமரங்கள் நிற்கின்றன. தென்னைமரங்களும் தான். அவள் குறுக்குக்கட்டு கட்டிக்கொண்டு குளிக்கிறாள். இவனை தூண்டும் வகையில் பாவாடையை சற்று மேலே இழுக்கிறாள் .. இப்படி போகும் கதையில், ஒரு இடத்தில் படீரென்று தெளிந்தவளாய் “என்ன காரியம் செய்யத்துணிந்தேன்” என்று ஓடிப்போய் காதலனின் படத்தை எடுத்து மடியில் வைத்து அழுதுகொண்டிருப்பாள் என்று அந்த கதை முடியும்.

இந்த சிறுகதைக்கு சொந்தக்காரர் பாலுமகேந்திரா. ஈழத்து சிறுகதைத்தொகுப்பு ஒன்றில் வெளியானது. இருபது வருஷத்துக்கு முதல் வாசித்தது. வயது கொஞ்சம் அப்படி என்பதால், சிறுகதையை மீண்டும் மீண்டும் வாசித்தது. இன்றைக்கும் அந்தக்கதை ஞாபகம் இருக்கிறது.  இந்தவகை genre பாலுமகேந்திராவுக்கு பாயாசம் போல. தான் முதன்முதலில் கமராவை தொட்டுப்பார்த்தபோது அடைந்த உணர்ச்சிக்கு ஒரு உவமானத்தை பேட்டி ஒன்றின்போது சொல்லியிருந்தார். அதை இங்கே எழுதமுடியாது. அது தான் பாலுமகேந்திரா.

அந்த பாணியை அவர் திரைப்படங்களிலும் புகுத்தினார். தமிழ் திரைக்கலைஞர்களில் இமேஜ் பற்றி யோசிக்காமல் கொஞ்சமே லத்தீன், பிரெஞ்சு பாணி கதைக்களனை எடுத்து ஆண்டவர் பாலுமகேந்திரா. ஜெயமோகனின் அனல்காற்று வாசித்தீர்களா? அதிலே சந்திரா என்ற மூத்த வயதுடைய பெண்ணோடு ஒரு இளைஞனுக்கு உறவு. சிக்கலான உறவுக்கூறுகளை கொண்ட நாவல் அது.   அனல்காற்று வாசித்தவர்களுக்கு தெரியும். அதிலே ஒரு பாலுமகேந்திராத்தனம் இருக்கும். ஜெயமோகன் அதை  பாலு மகேந்திராவுக்காகவே எழுதினார். ஏனோ அது படமாக்க ப்படவில்லை. வாசிக்கும்போது கொஞ்சம் சதிலீலாவதி காட்சிகள் கிளைமாக்ஸில் எனக்கு ஓடியது. அதுவே படமாக்கப்படாததற்கு காரணமாக இருந்திருக்கலாம். ஐம்பத்திரண்டு சிறுகதைகளை அவர் “கதைநேரம்” தொடராக டிவியில் கொடுத்தது முக்கியமானது. முன்னுதாரணமாகவும் கடைசி முயற்சியாகவும் போனது.

ilayarja_balu_mahendra

அவர் படங்களில் இயற்கை சத்தங்கள் அதிகமாக இருக்கும். அமைதியின் வெம்மையில் காது கிழியும். கேட்டடியிலிருந்து வீட்டுக்குள் போகும் மூன்று செக்கனுக்குள் தேவையில்லாமல் பேஸ் கிட்டாரும் வயலினும் முழங்காது. சருகு மிதிபடும் சத்தமே கேட்கும். ஸ்லோ மெலடி டிராமா வகை படங்கள் அவருடையது. நகைச்சுவையாக எடுத்த சதிலீலாவதியில் கூட இந்த பாணியே இருக்கும். அவர் இயக்கிய திரைப்படங்களில் “வீடு” இம்மை மறுமை இல்லாமல் எனக்கு பிடிக்கும்.   “மறுபடியும்” முடிவு என்ன என்று தனியாக ஒரு தீஸிஸ் எழுதுவேன். மூன்றாம் பிறை அதன் முடிவின் லொஜிக் இடிப்பதால் அவ்வளவு கவரவில்லை. பின்னை நாளில் அவர் படங்களில் இருந்த புத்திசாலித்தனம் மூன்றாம் பிறையில் இல்லை. ஆனால் மேக்கிங் மேக்கிங் தான். அது ஒரு கனாக்காலமும் டிபிக்கல் பாலுமகேந்திரா படம்.  சந்தியாராகம், கறுப்பு வெள்ளையில் எழுதப்பட்டிருக்கும். எவ்வளவு ஸ்பஷ்டமாக இருக்கிறது. போர்ட்ரைட் ஓவியங்களின் டைம்லாப்ஸ் போன்று அவ்வளவு படிமம்.

ராஜாவையும் இவரையும் பிடிக்கமுடியாது. “தும்பி வா” ஒன்றே போதும் இவர்கள் செய்த பரிசோதனைகளை அறிந்துகொள்ள. "ஏய் சிந்தகி களல காலே" பாட்டின் குளிர்மையை எவன் மறப்பான்? என் இனிய பொன் நிலாவே ,  ராஜ ராஜ சோழன் நான், கண்ணே கலைமானே, இள நெஞ்சே வா என்று ராஜா, ஜேசுதாஸ் பாலுமகேந்திரா கூட்டணி எப்போதுமே நெஞ்சை கொள்ளை கொள்ளும் கூட்டணி. ராஜாவின் "பொத்திவச்ச மல்லிகை"யையும், “காற்றில் எந்தன் கீதத்”தையும், "காதல் ஓவியத்தை”யும், “தும்பி வா” வையும் ஹிந்திக்கு கொண்டுபோக செய்தவர். இந்தக்கூட்டணியின் சின்ன சறுக்கல் என்றால் அது வீடு தான். உலகின் தலைசிறந்த படங்களில் ஒன்றான வீடு படத்துக்கு ராஜாவின் How to name it வயலின் பயன்படுத்தப்பட்டிருக்கும். அது கதையின் போக்கிற்கு குறுக்காக முழிந்துகொண்டு நிற்கும். பலருக்கு பிடித்தது. எனக்கு அந்த பின்னணி இசை ஒரு கவனக்கலைப்பான்.

ஒரு தேர்ந்த இலக்கியவாதி சினிமாவுக்குள்ளும் நின்று அடித்து ஆடலாம். தமிழிலும் கூட அது சாத்தியமானது என்று நிரூபித்தவர் பாலுமகேந்திரா. இவரும் மகேந்திரனும் இலக்கியரசிகர்களை திரைப்படம் பார்க்கவைத்தார்கள். சிறுகதைகளை, நாவல்களை திரையில் கொண்டுவந்தார்கள். திரைப்படம் ஒன்றும் தீண்டப்படத்தகாத ஜந்து இல்லை என்றார்கள். படைப்பிலே சமரசங்களை செய்யத்தயங்கினார்கள். இலக்கியத்தின் நீட்சி தான் சினிமா என்ற நிலைமையை ஏற்படுத்த முயன்றார்கள். அதற்காக நேர்மையான பாசாங்குகள் எதுவுமற்ற திரைப்படங்களை கொடுக்க முயன்றார்கள்.

பாலுமகேந்திரா என்ற கலைஞனின் படைப்புகளை கொண்டாடுவோம்.

Director-Balumahendhira-1

&&&&&&&&&&&&&&&&&&