குரங்குகள் கிரகத்தின் வைகறை (Dawn of the Planet of the Apes)

Jul 17, 2014

 

dawn_of_the_planet_of_the_apes_42291

பால்வீதி, அன்றோமீடா மற்றும் நெபுலா பெருவெளிகளில் வலிமை மிகு சக்திகளின் எழுச்சி என்பது எப்போதுமே புரட்சிகளின் மூலமே அரங்கேறியிருக்கிறது. ஒரு புரட்சி இன்னொரு புரட்சிக்கும், அது மீண்டுமொரு புரட்சிக்கும் வித்திட்டுக்கொண்டே இருக்கிறது. இது பிரபஞ்சத்தின் பெருவெடிப்பு இயக்கத்தை ஒத்தது. சூனியவெளியில் ஆரம்பிக்கும் பெருவெடிப்பு எரிகுளத்தில் தெறித்து பறக்கும் தீமுகிழ்கள் போல பிரவாகம் எடுத்து விரிந்து ஈய்ந்து எல்லை மீறி மீண்டும் சூனியப் புள்ளியை அடையும்.   அங்கே மீண்டும் பெருவெடிப்புக்கான முன் ஏற்பாடுகள் நிகழும். அது போன்றதே புரட்சியும். இங்கே புரட்சிக்கான தேவை வெளியே சூனிய வெளி. அந்த தேவைவெளியில்  புரட்சிக்கான ஆரம்பம் அதிகார கட்டுகளை எதிர்த்து துளிர்விடும். கொஞ்சம் கொஞ்சமாக புரட்சி பெருநதியாக அலைபாயும். அடிமைத்தனத்திலிருந்து கட்டுடைத்து எழுதவதற்காக பீறிடும். புரட்சி மலரும்.  பின்னர் புரட்சியின் மலர்ச்சி இன்னுமொரு அதிகார மையத்தை உருவாக்கி, அதன்பால் அத்தனை இயக்கங்களும் சடத்துவங்களும் ஈர்க்கப்பட்டு இறுதியில் புரட்சி கட்டுடைந்து மீண்டும் சூனிய வெளியை நோக்கி தள்ளப்படும். இதுவே பிரபஞ்ச இயக்கமாகும். இதுவே புரட்சியின் இயக்கமுமாகும்.

பகுத்தறிவுள்ள மனிதன் என்கின்ற விலங்கினம் எப்போது கூட்டு வாழ்க்கை கட்டமைப்பை தன்னகத்தே அமைத்துக்கொண்டதோ அப்போதே புரட்சியின் முதல் விதை தூவப்பட்டது. முடியாட்சி, குடியாட்சி, கூட்டாட்சி, கம்யூனிசம், ஜனநாயகம், ஏகாபத்தியம் போன்ற ஏக காலத்து ஆட்சி கட்டமைப்புகள் இவ்வகை புரட்சி சங்கிலிகளில்  இருந்து உருவானதே.   பொருளாதார புரட்சிகளுக்கும் அடிப்படை இதுவே. கார்ல்மார்க்ஸ் அனுமானித்த முதலாளித்துவத்தின் வெடிப்பு நிகழ்ச்சியும் இதன் அடிப்படையிலான ஒரு எதிர்வுகூறலே. இதை இன்னமும் சீர்நோக்கி பார்த்தோமென்றால் இந்த தத்துவத்துக்கும் மார்க்ஸ் சொன்ன சுரவேக கிளர்ச்சிக்கும் ஒரு அதீத ஒற்றுமை இருக்கிறது. மூலதனத்தின் வளர்ச்சியும், திரட்சியும், ஒன்றுகுவிப்பும், எவ்வாறு மென்மேலும் நுண்ணிய உழைப்புப் பிரிவினையையும், பழைய எந்திரங்களை மென்மேலும் கூடுதலாக மேம்படுத்துவதையும், புதிய எந்திரங்களைத் தொடர்ந்து புகுத்துவதையும் கூடவே கொண்டு வருகின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்த நடைமுறை எவ்விதக் குறுக்கீடுமின்றி சுர வேகத்தில் மென்மேலும் மிகப் பிரம்மாண்டமான அளவில் நடந்தேறுகிறது. இதுவே சுரவேகக் கிளர்ச்சி.  இதுபோன்றே ஒவ்வொருதடவையும் புரட்சி நுண்ணிய அளவில் தன்னை திருத்தியமைத்து மீளுருவாக்கம் செய்கிறது. கார்ல் மார்க்ஸ் எழுதிய "கூலியுழைப்பும் மூலதனமும்" என்கின்ற நூல் இகுது பற்றி மேலும் பிரஸ்தாபிக்கிறது. அகுதைப்பற்றி "குடி மயக்க நிலை பகுதி 5 (Hangover part 5)" திரைவிமர்சனத்தின்போது அலசுவோம். 

இப்போது "குரங்குகள் கிரகத்தின் வைகறை (Dawn of the Planet of the Apes)" திரைத்திறனாய்வு பகுப்புரையை விரிவாக்குவோம்.

“குரங்குகள் கிரகத்தின் வைகறை” திரைப்படத்தின் கதை, இதற்கு முன்னர் எழுந்தருளிய  "குரங்குகள் கிரகத்தின் எழுச்சி (Rise of the Planet of the Apes)" திரைப்படத்தின் நீட்சியாக அமைந்திருக்கிறது. சீசர் என்கின்ற பகுத்தறிவாக்கம் நிரம்பப்பெற்ற வாலில்லா குரங்கு, தன் சக தோழர்களின் உதவியோடு ஒரு சமவுடைமை சமூக கட்டமைப்பை அடர்காட்டிலே நிறுவியமைக்கிறது. மொழி, கூட்டுவாழ்வு, சமவுடைமை பொருளாதாரம், எல்லோருக்கும் கல்வி என்கின்ற பிரடெரிக் அன்ஜெல்ஸ்   கூறி நிற்கும் செழிப்பான வாழ்வியலின் ஊடாக செவ்வியல் சமூகத்தை அதை முன்னிறுத்தி ஓரளவுக்கு வெற்றியும் பெறுகிறது. ஆனாலும் உயிரினங்களின் அடிப்படை உளச்சிக்கலான வலியவரின் கொண்டாட்டங்கள் என்பது இங்கேயும் தவிர்க்கப்பட முடியவில்லை. வலிமை குன்றிய உயிரினங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை.  துருவ கரடி ஒன்று தக்க காரணங்களோ, விசாரணைகளோ இன்றி கொல்லப்படுகிறது. அறிவியல் ரீதியான பாலியல் காட்சிகளின் பற்றாக்குறை, புரட்சிகளுக்கிடையிலான மலர்ச்சி பற்றிய சில பக்கங்களை புரட்டவும் தவறிவிட்டது. முக்கியமாக பெண்கள்  என்கின்ற சமூக ஆளுமைகள் வெறும் குழந்தை பெறும் கூறாகவும் வலிமை குன்றியவர்களாகவும் காட்டப்படுகிறார்கள். போருக்கோ, உணவு தேடலுக்கோ பெண்களின் உதவி பயன்படுத்தப்படவில்லை. பெண் எழுத்தாளர்கள் என்று எவரும் இங்கே அடையாளப்படுத்தப்படவில்லை. கல்வி அவர்களுக்கு போதிக்கப்படவில்லை. அவர்களை அழகாக காட்டுவதன்மூலம் பெண்கள் வெறும் அழகியல் வடிவங்களுக்கே யோக்கியமானவர்கள் என்கின்ற தவறான ஆணாதிக்கவாத சிந்தனை குரங்கினத்திலும் மேலோங்கி நிற்கிறது.   குரங்கினத்தின் புரட்சிக்கான தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாக இயக்குனரால் முன்னிறுத்தப்படுகிறது.

குரங்கினத்தின் பண்புகள் இவ்வாறு இருக்கையில் ஏக காலத்தில் நகரவாழ்வு வாழும் மனித இனத்தின் நிலை அடிமட்ட நிலைக்கு உள்ளிழுக்கப்பட்டுவிட்டது. பதினாலாம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பாவில் இடம்பெற்ற முதலாளித்துவ புரட்சி உலகம் முழுதும், பெருகி பரவி, காலாவதியாகி மனிதகுலத்தின் அழிவுக்கு இட்டுச்சென்றுவிட்டது. ஜோசய்யா சைல்டின் நிறுவன முதலாளித்துவம் உக்கி உருக்குலைந்து இடிபாடுகளாய் காட்சிப்படுத்தப்படுகிறது. இதனை ஒருவித உயிர்கொல்லி வைரஸ் என்ற குறியீடுமூலம் இயக்குனர் உணர்த்துகிறார். தொழிலாளர் வர்க்கமே வேரோடு அழிக்கப்பட்டு முதலாளிகள் கூட்டம் எஞ்சியிருந்த ஒரு சில வசதிகளை வைத்துக்கொண்டு அடுத்துவரும் புரட்சிக்கு முன்னரான சூனியவெளியை நோக்கி பயணிக்கிறார்கள். 

இந்த பயணத்தின் குறுக்கே நுழையும் குரங்கினத்திற்கும் மனித குலத்துக்குமிடையான விழுமிய யுத்தமே "குரங்குகள் கிரகத்தின் வைகறை (Dawn of the Planet of the Apes)".

மீதியை திரையில் கண்டு பூரணத்துவம் அடையுங்கள்.

Dawn-of-Apes-Maurice-teachingஇந்த திரைப்படத்தின் வெற்றி என்பது பல்வேறு கோட்பாட்டு நெறிகளை குறியீடுகளால் முன்னுறுத்தி அதன் சாதக பாதகங்களை உணர்த்துவதால் அடையப்படுகிறது. ஒரு கம்யூனிச சமுதாயத்தின் ஒருசில சுயநலம் சார்ந்த நோய்க்கிருமிகளால் மொத்த கட்டமைப்பே சுக்கல் நூறாவது இயல்பாக காட்டப்படுகிறது. கோபா என்ற குரங்கின் சில நடவடிக்கைகள் சோவியத் ரூசியா, ஸ்டாலின் காலத்தில் எப்படி கம்யூனிச பாதையிலிருந்து விலகியது என்பதை தெளிவாக விளக்குகிறது. "Ape Not Kill Ape", "Apes Together Strong", "Knowledge is power" என மலை மேடுகளில் எழுதப்பட்ட வாக்கியங்கள் ஜோர்ஜ் ஒர்வலின் விலங்குப்பண்ணையில் வரும் ஏழு கட்டளைகளை ஞாபகப்படுத்துகிறது. மோரிஸ், ஆஷ் போனற குரங்குகள் ஒர்வலின் நெப்போலியனை நினைவுபடுத்துகிறது. இதன் மூலம் அந்த சமுதாயம் சோவியத் ரூசியா போன்று வீழ்ச்சியை சந்திக்கபோகிறது என்கின்ற சமிக்ஞையை இயக்குனர் பார்வையாளர்களுக்கு ஆரம்பத்திலேயே உருவாக்குகிறார் என்பது திண்ணம்.

இரண்டு கால் பகுத்தறிவு பிறழ்வு கொண்ட மிருகங்களை (தமிழில் மனிதர்கள்) எடுத்துக்கொள்வோம். அங்கே முதலாளிகள், வீழ்ச்சிக்காலத்திலும் முதலாளித்துவ கட்டுமானத்தையே கடைப்பிடிப்பார்கள் என்பது வலியுறுத்தப்படுகிறது.  தனிமனிதனுக்கு உணவில்லாத உலகில் ஆயுதக் கிடங்குகள் நிரம்பிவழிவது ஏகாபத்தியத்தின் கேலிக்கூத்தை எள்ளி நகையாடும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. அளவுக்கதிகமான ஆயுத வளமும் பயிற்சியும், வன்முறையின்பால் மேலாதிக்க சக்திகளிடம் இருக்கும் தொடர்ச்சியான பிரேமையை காட்டுகிறது. அவர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட குரங்கு கோபா, அந்த ஆயுதங்களையே கையகப்படுத்தி, தம்மினத்தையும் மனித இனத்தையும் கழுவறுக்க முனைவது சர்வதேச போரியல் பண்புகளை சுட்டி நிற்கிறது. இவ்விடத்தில் அல்கைதா, ஐசிஸ் போன்ற இஸ்லாமிய அடிப்படை இயக்கங்களின் தோற்றுவாய்களும் அவற்றின் எழுச்சிகளும் ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. ஈழப்போராட்டத்தின் ஆரம்ப நிலைகளையும் இது ஞாபகப்படுத்த தவறவில்லை. மாவிலாறு அணைக்கும் இந்த திரைப்படத்திலிருக்கும் அணைக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. கோபா சீசரை கொல்ல முயற்சிப்பது சகோதர படுகொலைகளையும், "I thought we had a chance", "Humans will not forgive" போன்ற வாக்கியங்கள் எரிக் சொல்ஹெய்ம் அன்டன் பாலசிங்கம் இருவரிடையான உரையாடல் தளங்களையும் ஞாபகப்படுத்துகிறது. 

குரங்கினத்தின் தலைவனாக வரும் சீசர் நெற்றியில் மெல்லிய குங்கும தீற்று வைத்திருக்கிறது. இதுவும் ஒரு குறியீடுதான். இந்துத்துவாவின் பாசிச நெறிமுறைகளை நரேந்திரமோடி போலவே மிதவாத வலதுசாரி போர்வைகொண்டு இந்த குரங்கு நடைமுறைப்படுத்துகிறது என்பதை சாதாரண பார்வையாளரே விளங்கிக்கொள்ளமுடியும். குரங்கினத்தை ஒருவித மோனநிலைக்கு இட்டுச்செல்லும் மேலாண்மை கூட மோடியினுடைய குணவியல்பையே காட்டி நிற்கிறது

இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல ஒவ்வொரு புரட்சியும் வெடித்து விரிவடைந்து மீண்டும் சூனிய வெளிக்கு சென்றுவிடும். மீண்டும் அங்கிருந்து ஒரு புரட்சி வெடிக்கும். இந்தப்படத்தில் ஏக காலத்தில் மனித இனத்தின் முதலாளித்துவ புரட்சியும், குரங்குகளின் சமவுடமை புரட்சியும் சூனியவெளியை நோக்கி பயணிக்கின்றன. திரைப்படத்தின் ஒரு காட்சியில் ஒரு மனிதன் ஒரு குரங்குக்கு சாள்ஸ் பேர்னின் சித்திர நாவலான "Black Hole" ஐ வாசித்து காட்டுவான். அது சூனிய வெளிக்கான குறியீடு ஆகும். இந்த சூனிய வெளிக்கு பின்னரான புரட்சி என்ன? என்ற  கேள்வியோடு இந்தப்படம் முடிவடைகிறது. திரையரங்கை விட்டு வெளிவரும்போதும் அதே கேள்வியே எம்மை ஆட்கொள்கிறது. கொக்ககோலா பானத்தின் தாக்கத்தில் வேகமாக கழிப்பறைக்கு சென்று ஆசுவாசப்படும்போதும் அந்த புரட்சியின் விதை கண்முன்னே விரிகிறது. நாமே ஏன் அந்த புரட்சியின் விதையை தூவக்கூடாது? என்ற கேள்வி மலர்கிறது. அதுவே இந்தப்படத்தின் வெற்றியுமாகும்.

karinkonovalasmauriceindawnoftheplanetoftheapesphotocourtesyof20thcenturyfox

இந்த திரைப்படம் நகர்ச்சி பிடிப்பு (தமிழில் மோஷன் கப்ஷர்) தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஏலவே இந்த தொழில் நுட்பத்தில் உச்சம் கண்ட டின்டின், அவதார் மற்றும் கோச்சடையான் போன்ற உலக திரைப்படங்களோடு ஒப்பிடுகையில் இதன் நேர்த்தி சற்றுக்குறைவே. கோச்சடையானின் நாயகன் ரஜனியின் கண்களும் முக அசைவும் எது நிஜம்? எது நகர்ச்சி பிடிப்பு? என்கின்ற குழப்பத்தை ஏற்படுத்தும்.  அவ்வளவு தத்ரூபமாக அது இருந்திருக்கும். ஆனால் இந்தத்திரைப்படத்தில் குரங்குகள் அவ்வளவு தத்ரூபமாக இல்லை. இது இந்த திரைப்படத்துக்கு ஒரு பின்னடைவே. சௌந்தரியா ரஜனிகாந்த் போன்ற நகர்ச்சி பிடிப்பு தொழில்நுட்பத்தில் துறைபோன வல்லுனர்களை அழைத்து பயிற்சி பட்டறைகளை ஒழுங்குபடுத்தி, தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்ட பின்னர் இந்தப்படத்தை எடுத்திருந்தால் குறைந்த காலப்பகுதியில் நேர்த்தியான ஒருபடத்தை இந்த குழுவினர் கொடுத்திருக்கலாம்.

 

 

இறுதியாக நான் ஏன் இந்த திரைக்கு ஒரு விமர்சன பார்வையை முன்வைக்கவேண்டும்? என்ற கேள்வியும் எழுகிறது. இன்றைக்கு விமர்சனங்கள் என்பது நிறுவனமயப்படுத்தப்பட்டு, விஷம் தூவப்பட்டுவிட்டது. பார்வையாளர்களுக்கு எது நல்ல படம்? எது தீய படம்? என்பதை எடுத்துகாட்டுக்கின்ற பெரும் பொறுப்பையும் என் தலையில் இந்த சமூகம் தூக்கி வைத்துவிட்டது. இந்த சமூக பொறுப்பை, அடிப்படையில் தார்மீக விழுமியங்களை கடைப்பிடிக்கும் என்னால் தட்டிக்கழிக்க முடியவில்லை. இதனால் இத்தகைய முன்னெடுப்புகளையும் நான் என்னுடைய ஏனைய போராட்டங்களுக்கு மத்தியிலும் முன்னெடுக்க வேண்டியவனாகிறேன்..

இந்த பார்வையும் வார்த்தை பிரயோகங்களும் மிகச்செறிவாக உள்ளது என்று எவருக்கும் தோன்றலாம். தேவைக்குமேல் செறிவாக உள்ளதா? என்று சந்தேகம் வரலாம். இதை பலமுறை வாசித்தபின்புதான் ஓரளவேனும் பொருள்கொள்ளமுடியும்.  இது ‘அனைவருக்காகவும்’ எழுதப்படவில்லை. இந்த விமர்சனம் தகுதிவாய்ந்த சிலருக்காக மட்டுமே எழுதப்படும் படைப்பு. ஒரு தலைமுறையில் தகுதியான சிலர் மட்டும் வாசித்தால் போதும். ஆனால் இந்த விமர்சனத்தை சிலதலைமுறைக்காலம் வாசிக்கப்படுமென்றே எண்ணுகிறேன்.எவர் இதன் வாசகர்கள்? அன்றாடவாழ்க்கையின் எளிய சிக்கல்களை, எளிய சித்தரிப்பை வாசிக்க விரும்பும் வாசகர்கள் இதற்குள் வரவேண்டியதில்லை. அவர்களுக்குரிய படைப்புகள் நவீன இலக்கியத்தில் ஏராளமாக உள்ளன.மாறாக என்றுமுள்ள வாழ்க்கைச்சாரங்களை, ஒருபோதும் பேசித்தீராத மையங்களை, காலம்தோறும் மறுவிளக்கம் கொள்ளும் அறப்பிரச்சினைகளைப் பற்றி வாசிக்கவிரும்பும் வாசகர்களுக்காக மட்டுமே இது எழுதப்படுகிறது. ஒட்டுமொத்த நோக்கை அறிய விரும்புகிறவர்களே இதன் வாசகர்கள். அவர்களே பேரிலக்கியங்களின் வாசகர்கள். தல்ஸ்தோயை தஸ்தயேவ்ஸ்கியை புரூஸ்தை வாசிப்பவர்கள். ஒற்றைவரியில் இயம்புவதென்றால்,

இது ஒரு செவ்வியல் இலக்கியம்.

6zuwttlipgjbtwl6


தொடர்புடைய பதிவுகள்

கோச்சடையான் - வடை போச்சே  
கோச்சடையான் -  இது சும்மா ட்ரைலர் கண்ணு.
கடல்
விஸ்வரூபம்
ரோஜா
Life Of Pi

Contact Form