Skip to main content

சியாமா

 

baby_sketch_4

சியாமா இப்போது அவனுக்கென்று அடைக்கப்பட்டிருந்த இரண்டடி உயர விளையாட்டு வேலிக்கூட்டுக்குள் இருந்தான். தரை முழுதும் பொம்மை படங்கள் போட்ட ரப்பர் விரிப்பு. கூடு எங்கும் விளையாட்டுப்பொருட்கள். அண்ணர் எதை எடுக்க? எதை விட? என்று தெரியாமல் குழம்பினார்.

"சியாமா கண்ணா .. அம்மாவை இஞ்ச ஒருக்கா பாருடா"

தாய்க்காரி சியாமாவின் கவனத்தை இந்தப்பக்கம் திருப்பப் பார்க்கிறாள். சியாமா கணக்கே எடுக்கவில்லை. நண்பர்கள் வந்திருக்கிறார்கள். அவனைப் பார்ப்பதற்கென்றே வருவார்கள். சியாமா உறவு வட்டாரத்தில் அவ்வளவு பிரபலம். பொதுவாக ஈழத்தில் குழந்தைகள் இவ்வளவு வாளிப்புடன், கொழுகொழுவென, வெள்ளை வெளீரென்று சியாமா போல இருப்பதில்லை. ஆனால் ஆஸியில் நேரத்துக்கு தகுந்த உணவு, பால், சீஸ், பட்டர், மாடு, ஆடு என்று எப்போதும் புரதம், கொழுப்பு அதிகம் உள்ள உணவு வகைகளையே கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரஸ்தாபிப்பார்கள். தெற்கு ஆசியர்கள் அந்த புதிய உணவுப்பழக்கத்துக்கு திடீரென்று மாறுவதால், பொதுவாக ஆஸி போன்ற நாடுகளில் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எல்லாமே சியாமா போன்று மொழுமொழுவென்றுதான் இருக்கும். வைத்தியர் தசெவ்ஸ்கி இந்த விஞ்ஞான விளக்கத்தை சியாமாவின் தாயிடம் சொன்னபோது அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. “மாஸிடொனியன் டொக்டருக்கு எப்படி இந்த வேலணையானின் பரம்பரை தெரியும்? சியாமா தன் பாட்டனார் 'இம்மானுவல் போல்' போன்றவன்” என்று அவன் தாய்க்காரி எல்லோருக்கும் சொல்லிக்கொள்வாள். அவனுக்கும் பாட்டனாரை பிடிக்குமோ என்னவோ. அழும்போது சியாமாவை “ஜோன் போல்” என்று அழைத்துப்பாருங்களேன்.

"ஜோன் போல் கண்ணா... "

சியாமா திரும்பிப்பார்த்து பகீர் என்று சிரித்தான். ஒன்று இரண்டு மூன்று. மூன்று பாற்பற்கள். ஒன்பது மாதங்களில் மூன்று பாற்பற்கள். பிள்ளைக்கு கொழுக்கட்டை கொட்டவேண்டும். அவர்கள் குடும்பம் ஒரு கிறிஸ்தவ குடும்பம். அதிலும் புதுமையான கிறிஸ்தவ குடும்பம். ஞானஸ்தானம், ஏடு தொடக்குதல், பல்லுக்கொழுக்கட்டை, பிறந்தநாள்  என்று எல்லாவித கொண்டாட்டங்களையும் மதவேறுபாடு இன்றி செய்வார்கள். அதற்கு காரணம் ஒன்றேயொன்றுதான். எட்ட எட்ட வசிக்கும் நண்பர்களை எல்லாம் அழைத்து, சந்தித்து, கூடிப்பேசி ஒரு நாளை மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும். அதற்கு ஒரு சாட்டு வேண்டும். அவ்வளவே. சியாமாவின் ஞானஸ்தானமும் அப்படித்தான் செய்தார்கள். காலையில் தேவாலயத்தில் சடங்கு. பின்னர் வீட்டுக்கு போதகர் அங்கிள் வந்து தமிழில் சடங்கு. சியாமாவின் தாய்க்கு இதுபோதாது. மதியம் பன்னிரண்டு மணிக்கு சிவா-விஷ்ணு கோவிலுக்கு சென்று சியாமாவின் அஸ்வினி நட்சத்திரத்துக்கு பூசையும் செய்தாள். அவளுக்கு கடவுள் எந்தமதத்திலும் இருக்கலாம். ஆகவே எதையுமே புறக்கணிக்கக்கூடாது என்பதில் அதீத நம்பிக்கை.

சியாமாவுக்கு கூடிய சீக்கிரமே பல்லுக் கொழுக்கட்டை கொட்டவேண்டும் என்று அவன் தாய் தீர்மானித்தாள்.   பெரிதாக கொண்டாடவேண்டும். சியாமாவுக்கு பாவாடை சட்டை போட்டு நெற்றியில் கறுப்புப்பொட்டு வைத்து பெண்பிள்ளை போல உடுத்தி போட்டோகிராபரை வாடகைக்கு அமர்த்தி, படம் எடுத்து, கன்வாஸ் அடித்து, வரவேற்பரை கிழக்குப்பக்கச் சுவர் முழுக்க, எப்போதுமே விஸ்தாரமாக அவன் சிரித்துக்கொண்டே இருக்கவேண்டும். காலம் பூராக. அவன் வளர்ந்து பெரியவனாகி வெட்கப்பட்டாலும் அகற்றக்கூடாது.

இப்படி அந்தவீட்டில் எதைப்பற்றி பேசினாலும் சியாமா. சியாமா. சியாமா. அவன் இன்றி அங்கே அணுவும் அசையாது. இத்தனைக்கும் சியாமாவுக்கு அண்ணன்கள் மூன்று பேர் உண்டு. ஆனால் நான்காவதாக பிறந்த சியாமாதான் அந்த வீட்டின் ஹீரோ. காரணம் இருக்கிறது.

சியாமளா, சியாமாவின் தாய்க்காரி, அன்றைக்கு கர்ப்பம் தரித்து இருபதாவது வாரம். ஆஸ்பத்திரிக்குள் நுழையும்போதே அடைக்கல மாதாவை வணங்கியபடியே போனாள். "மாதா.. ஆளுயர மெழுகுதிரி அடுத்த திருவிழாவில் ஏற்றுகிறேன், நீயே வந்து பிறந்துவிடு. கணவன் பெயர் கூட வைத்து கூப்பிடுகிறான். என் பெயரையே கொஞ்சம் மாற்றி “சியாமா” என்று. தாயே.. இந்த வீட்டில் ஒரு பெண் வேண்டும். எங்களுக்கு வேண்டும். தனியன் பெண்ணாக குடும்பம் நடத்தும் எனக்கு வேண்டும்". வைத்தியர் ஸ்கான் கருவியை பொருத்திக்கொண்டிருக்கும்போது சியாமளா அடைக்கல மேரியிடம் நேர்த்திக்கடன் வைத்தபடி இருந்தாள். வைத்தியர் வயிற்றை ஸ்கான் பண்ணுகிறார். திரையில் குழந்தையின் சிலமன் தெரிகிறது. இவளுக்கு இது புதுதில்லை. ஆனால் ஆணா? பெண்ணா? என்று கண்டுபிடிக்கத் தெரியாது. வைத்தியர் சொல்லவேண்டும். "மாதா...சியாமாதான் வேண்டும், வேறு யாரும் வேண்டாம், பெண் குழந்தைதான்… ”.

"வாழ்த்துக்கள் ... இது ஆண்குழந்தை"

சியாமளாவின் முகத்தில் ஈயாடவில்லை. நான்காவதும் ஆண்குழந்தையா?  இப்போது என்ன செய்வது? ரெஜினோல்ட், ரெமீடியாஸ், ரிச்சார்ட் என்று ஏற்கனவே காலுக்குள் ஒன்று, கையிற்குள் ஒன்று, கமக்கட்டுக்குள் ஒன்று என மூன்று குழந்தைகள்.  இது போதாதென்று கணவன் வேறு இன்னொரு குழந்தையாய். இதில் இன்னொரு ஆண் குழந்தையா? மயக்கம் வருமாப்போல. "மாதா என்ன இப்படி செய்திட்டாய்? நான் என்ன செய்வன்? என் கணவனுக்கு என்ன சொல்லுவன்? இந்த நேரம் பார்த்து அவர் அருகில் இல்லையே". சியாமளா தனக்குள் அரற்றியபடியே வைத்தியர் அறையை விட்டு வெளியே வருகிறாள். ஒருவித அயர்ச்சியில் தன் காரை நோக்கிப் போய்க்கொண்டிருந்தாள். “மாதா நீ இப்பிடிச் செய்யலாமா?” என்று நொந்துகொண்டாள். அப்போது வயிற்றின் உள்ளே இருந்து ஒரு உதை. என்ன இது? குனிந்து அடிவயிற்றை தடவிப்பார்த்தாள். மீண்டும் ஒரு உதை. அட குழந்தையேதான். உதைக்கிறான். இருபதாவது வாரத்தில் குழந்தை உதைக்குமா? அப்படியே உதைத்தாலும் தாய் நினைப்பது புரிந்து, அது பிடிக்காமல் உதைக்கும் குழந்தையும் இருக்குமா? மீண்டும் ஒரு உதை. அடி வயிற்றில் உருளல், மீண்டும் உதை. "இது மாதாவேதான். இல்லாவிட்டால் கருவிலேயே, குழந்தைக்கு தாய் தன் மனதில் நினைப்பதை கிரகிக்கும் உணர்வு வருமா? மாதா … நீயே வந்து பிறக்கப்போகிறாயா? என்னே உன் கருணை”

மீண்டும் குழந்தை உதைத்தான்.

"கண்ணம்மா அம்மாவுக்கு உதைக்கிறியா? ஏண்டா?"

தொம்.

"அம்மாடி ... அம்மா உன்னை வேண்டாம் எண்டு சொல்லிடுவன் எண்டு பயந்திட்டியா?"

தொம். நிஜம்தான். குழந்தைக்கு நான் பேசுவது விளங்குகிறது. கோபத்திலேயே உதைக்கிறது. அந்த மாதாவே ஆண் குழந்தையாய் அவதரித்திருக்கிறாள். தாயே. சியாமளாவுக்கு கண் கலங்கியது. யாருக்கு வேண்டும் பெண் குழந்தை? அடைக்கல மேரியே கருவில் தரித்திருக்கிறாள். வேறென்ன வேண்டும் எனக்கு?

"நீ தாண்டா எண்ட செல்லம். ... எங்கட சியாமா நீதாண்டா. சியாமா"

பெண் குழந்தைக்கு வைக்கவென யோசித்திருந்த பெயரையே அவள் அழைக்க, அட ஆச்சரியம். குழந்தை இந்தமுறை உதைக்கவில்லை. பதிலுக்கு ஒரு சின்ன அசைவை செய்தது. மெல்லிதாக. அடிவயிற்றினுள்ளே மயிலிறகால் வலமிருந்து இடமாக மெலிதாக வருடும் ஒரு உணர்வு. ஐயோடா. என்ன ஒரு அனுபவம் இது. மீண்டும் அழைத்தாள். "சியாமா குட்டி..". மீண்டும் மயிலறகு. இம்முறை இடமிருந்து வலமாக.

அந்த நிமிடம் முதல் சியாமா அவர்களின் ஹீரோவானான்.

பின்னர் என்ன? வயிற்றில் உள்ள குழந்தைக்கு பேசினால் புரியும் என்று அந்த வீட்டில் எல்லோரும் நல்லதையே பேசத்தொடங்கினார்கள். தாய் கெட்டவிஷயங்கள் எதையும் நினைக்கக்கூட மாட்டாள். எந்நேரமும் பைபிள், கீதை என்றே வாசிப்பாள். சினிமாப்படம் பார்ப்பதென்றால்கூட “மொழி”, “சூரியவம்சம்” போன்ற உறுத்தாத படங்களைத்தான் பார்ப்பது. குழந்தை பிறந்தபின்னரும் அது தொடர்ந்தது.

பிள்ளை எல்லாவற்றையுமே வேகமாக செய்தது. கண் திறந்து, தலை நிமிர்த்தி, உடம்பு பிரட்டி, உடும்பு பிடித்து, பிடித்துக்கொண்டு நின்று, தத்தி தத்தி நடப்பது முதல் “அம்மா”, “அப்பா”, “மாமா” சொல்லுவதுவரை எல்லாவற்றிலும் வேகம். வைத்தியர்களே ஆச்சரியமாக பார்த்தார்கள். அக்கம்பக்கத்தவர் பொறாமையாய் பார்த்தார்கள். அனுதினமும் குழந்தைக்கு நாவூறு கழித்துச் சுற்றுப்போட வேண்டியிருந்தது. பத்து மாதங்களில் இப்படி ஒரு ஆரோக்கியமான புத்திசாலிப் பிள்ளையை பார்த்ததே இல்லை என்று வைத்தியர்களே வியந்து சொல்லுவார்கள். இவனை சரியாக வளர்த்தால், ஒருநாள் விஞ்ஞானியாகவோ, சிறந்த தலைவனாகவோ, கலைஞனாகவோ எதில் இவன் கால்வைத்தாலும் அதில் உச்சம் காண்பான் என்று வாழ்த்திப் புகழ்ந்தார்கள். சியாமளாவுக்கும் கணவனுக்கும் அதையெல்லாம் கேட்கும்போது பூரிப்பில் பெருமை பிடிபடாது. மாதாவே பிறந்து தம் வாழ்க்கையில் ஒளி ஏற்றியிருக்கிறாள் என்று தினம் தினம் பிரார்த்தனைகள் செய்தார்கள்.

சியாமா ஒருநாள் இறந்துவிட்டான்.

****************

குழந்தை இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் நடந்த சம்பவங்களின் தொகுப்பு.

06-05-2014  6:00 AM

இரவு முழுவதுமே பிள்ளைக்கு மெதுவான சளி இருந்தது. காலையில் சின்னதாக காய்ச்சல். வழமையாக ஆறுமணிக்கே எழுந்துநின்று, வேலைக்கு புறப்படும் தகப்பனிடம் முத்தம் வாங்கிவிட்டு படுக்கும் சியாமா அன்றைக்கு கண் முழிக்கவே கஷ்டப்பட்டான். பாலைக்கொடுத்தால் சத்தி எடுத்தான். சியாமா இப்படி ஒருநாளும் நோயென்று படுத்ததில்லை. வேலைக்கு போன தகப்பனும், மனம் கேளாமல்,   மேலதிகாரியிடம் சொல்லிவிட்டு அன்றைக்கு வீடு திரும்பிவிட்டார். ஒன்பது மணிக்கு அவர்களுடைய பொது வைத்தியரிடம்(GP) கூட்டிச் செல்கின்றனர். சியாமாவை சோதித்துப் பார்த்தபின்னர், இது வழமையாக பருவமாற்றத்தின்போது ஏற்படுகின்ற சாதாரண தடிமன் காய்ச்சல்தான் என்று குழந்தைகளுக்கான நியூரோபின் கொடுக்கப்படுகிறது.

வீடு திரும்புகிறார்கள்.

07-05-2014 6:00 AM

பிள்ளை மூச்சுவிட சிரமப்படுகிறான். விடிய வெள்ளன பொதுவைத்தியரின் கிளினிக் திறந்திருக்காது. எதற்கு ரிஸ்க்? என்று இவர்கள் பிராங்ஸ்டனில் இருக்கும் வைத்தியசாலைக்கு விரைந்தனர். எமர்ஜென்சி என்று சொல்லி அங்கே போனாலும் இரண்டுமணி நேர காத்திருப்பு. புதிதாக ஒரு வைத்தியர். இரண்டுநாட்களாக சளி மாறவில்லை என்றதும் எக்ஸ்ரே எடுக்கிறார். ம்ஹூம். எக்ஸ்ரேயில் ஒன்றுமில்லை. இது சும்மா சளிதான், நியூமோனியா இல்லை என்று சொல்லி வீட்டுக்கு திரும்பி அனுப்புகிறார். மீண்டும் நியூரோபின்.

வீடு திரும்புகிறார்கள்.

08-05-2014 6:00 AM

சியாமாவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. குழந்தை கடைசியாக சிரித்தே இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. சியாமளாவுக்கு பயம் பிடித்துவிட்டது. இது சரிவராது. தனியார் மருத்துவமனைக்கு போவோம் என்று டண்டினோங் மருத்துவமனைக்கு போகிறார்கள். மீண்டும் காத்திருப்பு. வைத்தியர் வந்தார். குழந்தையை மேலோட்டமாக பார்த்துவிட்டு, “எதற்கு ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மருத்துவமனைக்கு கொண்டு போகிறீர்கள்?” என்று மெதுவாக கண்டித்துவிட்டு மீண்டும் பிராங்க்ஸடனுக்கே போகச்சொல்லி திருப்பி அனுப்புகிறார். வைத்தியம் செய்யவில்லை.

வீடு திரும்புகிறார்கள்.

08-05-2014 10:00 AM

பெற்றோருக்கு என்ன செய்வது? என்று விளங்கவில்லை. சியாமா எப்போதுமே சோர்ந்து இருக்கமாட்டான். ஒரு தாய்க்குத்தானே தெரியும் தன் குழந்தைக்கு வருத்தமா? இல்லையா? என்று. சியாமாவுக்கு நிச்சயமாக ஏதோ ஒரு வியாதி. இது சாதாரண தடிமன் காய்ச்சல் கிடையாது. தாய்க்குத் தெரிகிறது. ஆனால் மருத்துவர்களோ ஆளாளுக்கு பந்து பறிமாற்றம் செய்கிறார்களே ஒழிய, இன்னமுமே வைத்தியம் என்ற ஒன்றையும் செய்யவில்லை. வெள்ளைக்காரன் என்றால் விசுக் விசுக்கென்று ஆங்கிலத்தில் திட்டியோ ,என்னவோ காரியம் சாதித்துவிடுவான். தமிழ் குடும்பங்கள், ஆங்கிலத்தில் தட்டுத்தடுமாறி, எல்லாவற்றுக்கும் ஓம் சொல்லி, வருத்தமே இல்லை என்று வைத்தியர் சொல்லும்போது மறுக்காமல் அதை நம்பி, எல்லாவற்றுக்கும் நியூரோபின் என்ற மருந்தையே வாங்கி… மீண்டும் பொதுவைத்தியரிடமே போவதென்று தீர்மானித்தார்கள். அவர் தமிழர். குறைந்தது தமிழிலாவது பிரச்சனையை விளக்கலாம்.

சியாமா மிகவும் சோர்ந்துபோயிருந்தான். உடல் சோகையாகி, தொண்டை எல்லாம் சிவந்துபோய்.   “அடைக்கலமாதா இது நீ, உண்ட பிள்ளை, எதுவுமே வராதமாதிரி பாத்துக்கொள்ளு”.

சியாமளா வழியில் சேர்ச்சில் இறங்கி பிரார்த்தனை செய்கிறாள்.

08-05-2014 10:30 AM

பொதுவைத்தியர் குழந்தையை கண்டதுமே திடுக்கிட்டுப்போகிறார். உடல் முழுதும் சின்ன சின்ன கொப்புளங்கள். காய்ச்சல். மூன்று நாட்கள் கடந்தும் மாறாமல். “இது சீரியஸ். வைத்தியசாலைக்கு போயே ஆகவேண்டும். இரத்த பரிசோதனை செய்யவேண்டும். இம்முறை மொனாஷ் வைத்தியசாலைக்கு அனுப்புகிறேன். அம்புலன்ஸை கூப்பிடவா? உங்களிடம் அம்புலன்ஸ் அழைப்பதற்கான காப்புரிமை இருக்கிறதா?” என்று பொதுவைத்தியர் கேட்கிறார். “எவ்வளவு காசானாலும் பரவாயில்லை, அம்புலன்ஸை கூப்பிடுங்கள்” என்று இவர்கள் அழாக்குறையாக சொல்லுகிறார்கள். அம்புலன்ஸ் வந்து குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்கிறது.

இப்போது மணிக்கு மணி சியாமாவின் உடல் நிலைமை மேலும் மேலும் மோசமாகிக் கொண்டு போகிறது.

08-05-2014 11:30 AM

குழந்தைக்கு உணர்வே பெரிதாக இல்லை. உடல் முழுக்க சிவந்து, நெறி கட்டி, ஒரு மணித்தியாலத்திலேயே நோய் நன்றாக முற்றிவிட்டது புரிகிறது. ஆனால் மருத்துவமனையில் இன்னமுமே டெஸ்டுகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். சியாமளா மாத்திரம் குழந்தையோடு பேசிக்கொண்டிருந்தாள். சியாமா கண்ணே திறக்கவில்லை. மூச்சுமட்டும் கஷ்டப்பட்டு பெரிதாக இழுத்து இழுத்து விடுகிறான். சியாமளா மாதாவை பிரார்த்தனை செய்தபடியே சியாமாவை ஒராட்டிக்கொண்டு இருக்கிறாள்.

08-05-2014 12:30 PM

வைத்தியசாலை பரபரக்கிறது. சியாமாவைத் தேடி பலர் ஓடிவருகிறார்கள். எங்கிருந்தோ இருந்து ஒரு பெரிய மருத்துவர் வருகிறார். சியாமாவை ஐசியூவிற்குள் கொண்டுபோகிறார்கள். தாய் மட்டும் கூடப்போக அனுமதிக்கப்படுகிறது. குழந்தைக்கு ஒக்சிஜன் கொடுக்கப்படுகிறது. முதுகில் குத்தி குத்தி எதையோ எடுக்கிறார்கள். அதே சமயம் குட்டி குட்டி ஊசிகளில் எதையோ ஏற்றுகிறார்கள். சியாமா எதற்கும் உணர்ச்சியை காட்டவில்லை. அழக்கூட இல்லை. தாய் இதைப்பார்த்து தாங்கமாட்டாமல் கதறுகிறாள். “சியாமா கண்ணா .. உனக்கு நோகுதா? .. இன்னும் கொஞ்ச நேரம்தாண்டா .. எல்லா வைத்தியம் முடிஞ்சிடும், நாங்க திரும்பி வீட்டபோய் விளையாடலாம். உனக்குப் பிடிச்ச பச்சை அப்பிள் அம்மா தீத்திவிடுறன்”. தாய்க்காரி அழுது அழுது பிள்ளைக்கு தேற்றுகிறாள். இரத்த அழுத்தம் செக் பண்ணுகிறார்கள். தலையில் பொருத்தியும் செக் பண்ணுகிறார்கள். நெஞ்சில் வைத்தும் செக் பண்ணுகிறார்கள். ஆங்கிலத்தில் புரியாத மருத்துவ வார்த்தைகளால் பேசிக்கொள்கிறார்கள். தாய்க்கு ஒன்றுமே புரியவில்லை. அடைக்கலமாதாவே இவன் உன் குழந்தை. காப்பாற்று. ப்ளீஸ். ஊசிகளால் அவசரமாக ஏறக்குறைய அவன் உடலை குதறுகிறார்கள். வேறு என்னவெல்லாமோ செய்துபார்த்தும், பலனளிக்காமல், சரியாக,

08-05-2014 2:31 PM

சியாமாவின் இறுதி மூச்சு நிற்கிறது.

12-05-2014 11:30 PM

சியாமாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வருகிறது. எந்த நோய் என்று கண்டறிந்தாயிற்று. “மெனின்ஜைடிஸ்”. தமிழில் “மூளை அழற்சி”.

அதென்ன மெனின்ஜைடிஸ்?

நமது மூளையின் நரம்புத்தொகுதியை பாதுக்காக்கவென அதைச்சுற்றி போர்வை போன்ற ஒரு படை இருக்கிறது. முள்ளந்தண்டைச்சுற்றி இருப்பதும் அதே போர்வைதான். இதை ஒட்டுமொத்தமாக மெனின்ஜெஸ் என்கிறார்கள். அந்தப்படைக்கும் நரம்புத்தொகுதிக்கும் இடையில் உராய்வு ஏற்படாமல் தடுக்கவென ஒரு திரவம் இருக்கிறது. உராய்வு நீக்கித்திரவம். நரம்புத்தொகுதி தளம்பல் இல்லாமல் ஒரு சீர்நிலையில் இருப்பதற்கும் இது உதவும். நிறமற்ற தண்ணீர்போன்று இருக்கும். பெயர் Cerebrospinal Fluid. Cerebro என்றால் மூளை. Spinal என்றால் முள்ளந்தண்டு. Fluid என்றால் திரவம். Cerebrospinal Fluid என்றால் மூளை முள்ளந்தண்டில் இருக்கும் உராய்வு நீக்கித்திரவம். சுருக்கமாக CSF.  மூளை தொடங்கி முள்ளந்தண்டு வரைக்கும் இந்தத்திரவம் வியாபித்து இருக்கும். இந்த இடத்தில் வைரஸோ, பாக்டீரியாவோ தொற்றிவிட்டால் வரும் நோயைத்தான் மெனின்ஜைடிஸ் என்கிறார்கள்.

மெனின்ஜைடிஸ் கவனிக்கப்படாவிட்டால் ஆளையே கொன்றுவிடும் உயிர்கொல்லி நோய். காரணம் இது தொற்றும் இடம் அப்படிப்பட்டது. மூளை, முள்ளந்தண்டு நரம்புத்தொகுதி. குழந்தைகள் என்றால் பரவி சில மணிநேரங்களிலேயே நிலைமை சிக்கலாகிவிடும். சியாமாவுக்கு நிகழ்ந்ததும் அதுதான். இந்த தொற்று சாதாரணமான தடிமன் காய்ச்சல் போன்று காற்று மூலமே பரவக்கூடியது. இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் பரவலாக இருந்தாலும் நோய் எது? என்று கண்டுபிடிக்கப்படாமலேயே பல குழந்தைகள் அங்கே இறப்பதுண்டு. அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இதன் தாக்கம் மிகவும் குறைவு. ஒன்றிரண்டு பேருக்குத்தான் தோற்றும். சியாமா அதில் ஒருவனாகிவிட்டான்.

இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகள் வெறும் காய்ச்சல் தடிமன் அறிகுறிகளாகவே இருக்கும். அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் அரிதாகவே தொற்றுவதால் மருத்துவர்கள் நிஜமான மெனின்ஜைடிஸ் அறிகுறிகளையும், வெறும் தடிமன், சளி என்று நினைக்கவே சாத்தியம் அதிகம். சியாமாவை முதன்முதலில் பிராங்ஸ்டன் மருத்துவமனைக்கு கொண்டுபோனபோது, அங்கிருந்த வைத்தியர் வெறும் நியூரோபினோடு திருப்பி அனுப்பியமைக்கும் இதுவே காரணம்.

இந்த நோய் பரவ ஆரம்பித்தால், அடுத்ததாக உடம்பு பூராக சிவந்து, பொக்குளம் போன்றோ வியர்க்குரு போன்றோ போடும். தொண்டை கட்டும். காய்ச்சல் அதிகரிக்கும். இந்த அறிகுறிகளைக் கண்டறிந்து, இது மெனின்ஜைடிஸ்தானோ என்ற ஒரு சின்னச் சந்தேகம் அவனை பரிசோதிக்கும் வைத்தியருக்கு வந்தால்கூட உடனேயே ஊசிபோடவேண்டும். யோசிக்கக்கூடாது. போட்டுவிட்டுத்தான் இரத்த பரிசோதனையோ அல்லது CSF மாதிரி பரிசோதனையோ செய்தல்வேண்டும். அது வைத்தியர்களுக்கான ஒருவித கட்டளை. ஏனென்றால் உடனடியாக வைத்தியம் செய்யாவிட்டால் அடுத்த சில மணிநேரங்களிலேயே மெனின்ஜைடிஸால் உயிரிழப்பு ஏற்படலாம். சியாமாவை அனுமதிக்க மறுத்து, திருப்பி அனுப்பிய டாண்டினோங் வைத்தியசாலை, மாறாக அவனை அனுமதித்து பரிசோதனை செய்திருந்தால், உடனேயே அண்டிபயோடிக் மருந்துகளை கொடுத்திருக்கலாம். குழந்தை உயிர் தப்பியிருக்கும்.

அது முதல் தவறு. தவறுகள் வரிசையாக அங்கிருந்தே ஆரம்பித்திருக்கின்றன.

மீண்டும் சியாமாவை பொதுவைத்தியரிடம் கொண்டுபோனபோது, அவரும் இந்த அறிகுறிகளை அவதானித்து உடனேயே மருந்து கொடுத்துவிட்டுத்தான் அம்புலன்ஸில் ஏற்றியிருக்கவேண்டும். நடக்கவில்லை. அம்புலன்ஸ் ஊழியர்கள் கூட இங்கே தேர்ந்த வைத்திய நிபுணர்கள்தான். அவர்களும் கண்டறியவில்லை. மொனாஷ் மருத்துவமனைக்கு கொண்டுசென்றபின்னரும்கூட, உடனேயே சியாமாவின் அறிகுறிகளை அவதானித்து வைத்தியத்தை அசுரகதியில் தொடங்கியிருக்கலாம். செய்யவில்லை.

இறுதியில் இரத்தப் பரிசொதனை முடிவுகளை அறிந்தபின்னரேயே சியாமாவின் நோய் பாரதூரமாக உடல் முழுதும் பரவியிருக்கிறது என்று வைத்தியர்கள் அனுமானித்திருக்கிறார்கள். அவனுடைய தாய் இதைத்தான் மூன்று நாட்களாக சொல்லிக்கொண்டுஇருந்திருக்கிறாள். ஒரு குழந்தையொடு நீண்டநேரத்தை செலவிடும் தாய்க்கே குழந்தையின் உடல்நிலை பற்றிய அறிவு இருக்கிறது. வைத்தியருக்கு அல்ல. தாய் சொல்வதை மறுக்காமல் கேட்கவேண்டிய கடமை வைத்தியருக்கு இருக்கிறது. அது இங்கே நடக்கவில்லை. நோய் முழுதும் பரவியபிறகே வைத்தியர்கள் சுதாரித்திருக்கிரார்கள். அதன் பின்னரேயே நோயின் மூலம் மெனின்ஜைடிஸ் ஆக இருக்கலாம் என்று ஊகித்து,CSF பரிசோதனை செய்ய முனைந்திருக்கிறார்கள். எல்லோரும் பரபரத்து சியாமாவை ஐசீயூவுக்குள் கொண்டுபோயிருக்கிறார்கள். அங்கேயே ஏக சமயத்தில் அண்டிபயோடிக்கை ஏற்றிக்கொண்டு, CSF திரவத்தையும் பரிசோதனைக்காக எடுத்திருக்கிறார்கள். இவர்கள் வைத்தியம் பார்த்துகொண்டிருக்கும்போதே குழந்தையின் மூளையின் தொற்று ஏற்பட்ட இடத்தில் அழுத்தம் அதிகரித்திருக்கவேண்டும். ஆனால் இரத்த அழுத்தம் சடுதியாக குறைந்திருக்கும். அதைக்கூட்டவென இதயம் வேகமாக அடிக்க முயன்றிருக்கும். முடியாமல் போய், இரத்த அழுத்தம் மேலும் மேலும் குறைந்து, இரத்தம் உடலின் எல்லா இடங்களுக்கும் பாய்ச்சமுடியாமல்போய், இரத்தம் கட்டிப்பட்டு, அடைபட்டு, அடிரினல் சுரப்பி பாதிக்கப்பட்டு,  உடல் குளிர தொடங்கி, இரத்த அழுத்தம் குறைந்து குறைந்து உடல் முழுதும் நோய் வியாபித்து.. இப்படி மருத்துவ விளக்கம் கொடுத்துக்கொண்டே போகலாம். ஆதாரமான விஷயம் ஒன்றுதான்.

அந்தக்குழந்தையை காப்பாற்றியிருந்திருக்கலாம்.

30-06-2014 3.00 AM

சியாமளா வீட்டின் வரவேற்பறை கிழக்கு உட்புறச் சுவரையே வெறித்துப்பார்த்துக்கொண்டு இருக்கிறாள். சுவர் பூராக பிரமாண்டமான கன்வாஸ் படம். சியாமா. குட்டியாக பாவாடை தாவணி போட்டு, கறுப்புப் பொட்டு வைத்து, பல்லுக்கொழுக்கட்டை நிகழ்வு அன்று எடுத்தபடம். சியாமளா அழவில்லை. அவள் இப்போதெல்லாம் அழுவதில்லை. ஏன் அழவேண்டும்? சியாமா என்னோடுதானே இருக்கிறான். ஏதோ ஒரு வருத்தம் வந்து சேட்டை விட்டது. ஆனால் என் மகன் யார்? சாவை வென்றவன். இந்த வேலணையானின் பரம்பரை பற்றி யாருக்கு என்ன தெரியும்? சியாமா தன் பாட்டனார் 'இம்மானுவல் போல்' போன்றவன்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வாள். அவனுக்கும் பாட்டனாரை பயங்கரமாக பிடிக்கும். அழும்போது சியாமாவை “ஜோன் போல்” என்று சொல்லிப்பாருங்களேன்.

"ஜோன் போல் கண்ணா... "

படத்தில் இருந்த சியாமா “பகீர்” என்று சிரித்தான்.

 

****************

 

உசாத்துணைகள்
Meningitis
Cerebrospinal Fluid
நன்றி : வைத்திய நண்பர்கள்
ஓவியம் : pencilsketch.co.uk

குறிப்பு : இது ஒரு சில உண்மைச்சம்பவங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட கற்பனைக்கதை. கதையில் வரும் பெயர்கள், ஊர்கள், மருத்தவமனைகள் எல்லாமே கற்பனைக்காக சேர்க்கப்பட்டது.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட