Skip to main content

Life of Pi - என் குளத்தில் எறியப்பட்ட பாறாங்கல்!

 

lifeofpiவிலங்கும் மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே!
-- மாணிக்கவாசகர்

“கண்ணே கண் மணியே, கண்ணுறங்காய் பூவே” என்று ஜெயஸ்ரீ தன் மடியில் எங்கள் தலையை வைத்து 3D இல் வருடுவதோடு படம் ஆரம்பிக்கிறது. பாண்டிச்சேரியில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்து வாழும் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்று. அதை அவர் ஒரு எழுத்தாளருக்கு சொல்லுவதான கதை.

 

பை என்ற பிஸ்ஸிங்கின் குடும்பம் பாண்டிச்சேரியில் விலங்குகள் காப்பகம் ஒன்று நடத்துகிறது. இவனோடு சேர்த்து அம்மா அப்பா அண்ணன் என்று வீட்டில் நான்கு பேர். அழகான குடும்பம். பை இற்கு சிறுவயது முதலே யார் கடவுள்? என்ற தேடல் இயல்பாக ஆரம்பித்து எல்லா கடவுள்களிலும் தத்துவங்களிலும் ஈர்ப்படைகிறான். படுக்கைக்கு போகும் முன் விஷ்ணுவை வணங்குவான். சாப்பிடும் முன்னர் ஜெபித்து ஆமென் சொல்லுவான். அல்லாவை தொழுவான். யூதாயிசத்திலும் நம்புவான். ஏன் கடவுள் தன் குழந்தையை பூமிக்கு அனுப்பி இவ்வளவு கொடுமைப்படுத்தவேண்டும்? என்று இயேசுவை பற்றி கேட்பான். எம்மோடு சேர்ந்து எம்மை போலவே எல்லா துன்பங்களை அனுபவித்து எமக்காகவே தான் இறைவன் இருக்கிறார் என்று காட்டவே அவர் தன் மகனை அனுப்பி துன்பப்படவைத்தார் என்று பாதிரியார் சொல்ல, இவனுக்கோ இயேசுவை பார்க்க பரிதாபம் வருகிறது. அட, கடவுளின் நோக்கத்துக்காக ஏன் மகனை இந்த பாடு படுத்துகிறார்? என்ற பரிதாபம். இறைவன் மீது கொஞ்சம் கோபம்.

இறைவன் மீது உனக்கு இருக்கும் நம்பிக்கையின் ஆழம் அது பரிசோதிக்கபடாதவரைக்கும் விளங்காது(You don’t know the strength of your faith until it’s been tested) என்பதை யாரோ சொல்ல அதையும் பரிசோதிக்க துணிந்தான்.  புலிக்கூட்டுக்கு முன்னால் போய், ஒரு மாமிசத்துண்டை வைத்துகொண்டு அதன் கண்ணையே பார்த்துக்கொண்டிருந்தான். அந்த புலியும் அவனை ஓர்ந்து கவனித்துவிட்டு மெல்ல மெல்ல அணுகி மாமிசத்தை பறிக்கும் தருவாயில், தந்தை பாய்ந்து வந்து அவனை காப்பாற்றுகிறார். மிருகங்களுக்குள்ளும் ஒரு உணர்ச்சியுள்ள ஒரு ஜீவன் இருக்கிறது என்று இவன் சொல்லுவதை இல்லை என்று நிரூபிக்க, ஒரு ஆட்டை புலிக்கூண்டில் கட்டிவைத்து, அதை எப்படி புலி அடித்து சாப்பிடுகிறது என்று காட்டுகிறார். இப்போது தான் முதன்முறை பை பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான போராட்டத்தின் முதல் அனுபவத்தை பெறுகிறான்.

lifeofpi2

பைக்கு பதினேழு வயதாகும்போது மொத்த குடும்பமுமே விலங்குகளை ஒரு மிகப்பெரிய சரக்கு கப்பலில் ஏற்றியபடி கனடாவுக்கு குடிபெயருகிறார்கள். பயணத்தின் போது கப்பல் சமையல்காரன் இவர்களை “கறி” என்று திட்டுகிறான். இன்னொரு சீனத்தவன் நண்பனாகிறான். கடல் பயணம் எதிர்காலத்தை பற்றிய எதிர்பார்ப்புகளுடனும் கடந்தகாலத்தின் நினைவுகளோடும் பயணிக்கிறது. ஒரு நாள் இரவு புயலும் இடியும், எல்லோரும் கீழ் தளத்தில் நித்திரை. பை புயலை பார்த்து ரசிக்கவென மேல் தளத்திற்கு வருகிறான். அப்போது மிகப்பெரிய கடல் அலை கப்பலை கவிழ்க்கிறது. உள்ளே தூக்கத்தில் அவனின் மொத்த குடும்பமுமே இறந்துவிடுகிறது. பை மட்டும் சின்ன படகில் தப்ப முடிகிறது. படகில் அவனோடு சேர்த்து ஒரு காலுடைந்த வரிக்குதிரை, ஒரு ஒராங்குட்டான் குரங்கு, ஒரு ஓநாய்(spotted hyena) கூடவே அந்த புலி. அதற்கு பெயர் ரிச்சார்ட் பார்க்கர்.

புலி அந்த படகின் தரப்பாளுக்கு அடியில் படுத்துக்கிடக்கிறது. இது தெரியாமலோ என்னவோ ஓநாய் படகு முழுதும் தன் ஆட்டத்தை காட்டுகிறது. காயப்பட்ட வரிக்குதிரையை கடித்து கொல்கிறது. அந்த ஒரங்குட்டானுடன் சண்டைக்கு போய் அதையும் கொல்கிறது. பைக்கு பயம் பிடிக்கிறது. அடுத்தது அவன் தான் என்று நினைந்து நடுங்கும் தருவாயில் திடீரென்று புலி ஒரே பாய்ச்சலாக உள்ளிருந்து பாய்ந்து ஓநாயை அடித்துக்கொல்ல, இப்போது படகில் பையும் அந்த புலியும். கதை இங்கே தான் உள்ளே இறங்கி ஆட ஆரம்பிக்கும் தருணம்.

புலி இறந்த மிருகங்களை எல்லாம் சாப்பிட்டுவிட்டு உறுமிக்கொண்டு திரிகிறது. பை அங்கு கிடந்த துடுப்புகளை சேர்த்து கட்டி ஒரு குட்டி மிதவை செய்து அதை படகோடு கட்டி, அந்த மிதவையிலேயே தங்கிக்கொள்கிறான். இடையிடையே புலி அசரும் சமயம் பார்த்து படகுக்கு போவான். இவனுக்கு கொஞ்சம் சாப்பாடு படகில் இருந்தாலும், புலிக்கு மாமிச உணவு வேண்டும், இல்லாவிட்டால் நீந்தி வந்து தன்னை அடித்து சாப்பிட்டுவிடும் என்ற பயத்தில் மீன் பிடித்து கொடுக்கிறான். குடிக்க தண்ணீர் கொடுக்கிறான். ஒருநாள் ஒரு திமிங்கலம் பாய்ந்த பாய்ச்சலில் இவனிடம் இருந்த கொஞ்ச நஞ்ச உணவுகளும் அடிபட்டு போக, இவனும் மீனை பிடித்து சாப்பிட தொடங்கினான். இன்னுமே எவ்வளவு நாட்களுக்கு தான் மிதவையிலேயே கிடப்பது? என்று நினைத்து கொஞ்சம் கொஞ்சமாக புலியை பயிற்றுவித்து கட்டுப்படுத்த ஆரம்பிக்கலாம் என்று முயல்கிறான். புலியும் கட்டுப்படுகிறது. படிப்படியாக ஆரம்பித்து இப்போது பை நிரந்தரமாகவே படகில் தங்கிக்கொள்கிறான்.

life-of-pi2

மாதங்கள் கழிகின்றன. கொலைப்பட்டினி. இரண்டுபேருமே இறக்கும் தருவாயில் ஒரு மிதக்கும் தீவை அடைகிறார்கள். அங்கே நீர், கிழங்குகள் எல்லாமே கிடைத்தாலும், இரவில் தடாகம் எல்லாமே இரசாயன மாற்றங்களில் நச்சாகிறது. அங்கே இருந்த தாவரங்களும் விலங்குகளை உண்ணும் வகைகள் என்பதை அறிந்த பை, படகில் மீண்டும் பயணம் செய்ய ஆரம்பிக்கிறான். புலியும் இவனோடு தொற்றிக்கொள்கிறது.

இன்னும் சில மாதங்கள் கடல் பயணம். இறுதியில் ஏதோ ஒரு கரிபியன் தீவில் படகு கரையொதுங்குறது. 227 நாட்களுக்கு பிறகு இருவருமே தப்பிவிட்டார்கள். கரையில் பை அப்படி தள்ளாடி சரிந்துவிழுகிறான். புலியும் களைத்து விழுந்து தள்ளாடுகிறது. இத்தனை நாளாய் கூட இருந்த புலி இவனை திரும்பிப்பார்த்து ஒரு சொட்டு கண்ணீராவது விடாதா என்று இவன் ஏக்கத்தில் பார்க்க, அது அசட்டையே செய்யாமல் காட்டுக்குள் நுழைகிறது.

இப்போது பை ஒரு வைத்தியசாலையில். கப்பல் எப்படி கவிழ்ந்தது என்று இவனை விசாரிக்கிறார்கள். கதையை சொல்லுகிறான். அவர்கள் நம்பவில்லை. உண்மை கதையை சொல்லு என்கிறார்கள். என்னடா இது என்று பை வேறொரு கதை சொல்கிறான்.

படகில் தப்பியவர்கள் பையும், அவன் அம்மாவும், அந்த சமையல் காரனும் சைனீஸ் காரனும். சைனீஸ் காரன் காலில் காயம். அவனை அடித்து கொன்றுவிட்டு சமையல்காரன் அவனையே தூண்டிலாய் பயன்படுத்தி மீன் பிடிக்கிறான். நரமாமிசம் சாப்பிடுகிறான். இதை பார்த்த பையின் அம்மா, பையை ஒரு மிதவையில் தப்பச்சொல்லிவிட்டு சமையல்காரனுடன் சண்டைபோட்டு சாகிறார். இதை பார்த்த பை ஆவேசத்தில் திடீரென்று பாய்ந்து சமையல்காரனை கொன்றுவிடுகிறான்.

இரண்டு கதைகளையும் கேட்ட எழுத்தாளர் முதலாவது கதையே சிறந்த கதை என்கிறார். கப்பல் கம்பனியும் அதையே தெரிவுசெய்கிறது. “And so it goes with god” என்று பை சிரிக்கிறான். கதை முடிகிறது.

இரண்டு கதைகளுக்கும் உள்ள தொடர்பை கவனியுங்கள். அந்த காலொடிந்த வரிக்குதிரை தான் அந்த சீனத்துக்காரன். ஒரங்குட்டான் தான் பையின் அம்மா. அந்த ஓநாய் தான் சமையல்காரன். ஓநாயை அடித்துக்கொன்ற புலி? அது தான் இந்த பை. அப்படி என்றால் முதல் கதையில் வருகின்ற பை யார்? என்ற கேள்விக்கு பதில் தான் … கடவுள். உணர்ந்தபோது நான், கேதா, வீணா மூவருக்குமே மயிர்கூச்செறிந்தது. என்ர கடவுளே!

life-of-pi-movie-image-23

முதல்கதையை புலியின் கோணத்தில் பாருங்கள். உயிர்தப்ப நீந்திவந்த புலி தட்டுத்தடுமாறி கடவுள் இருக்கும் படகில் சிக்கென பற்றிக்கொள்கிறது. ஓநாய் அவ்வளவு அட்டகாசம் செய்தபோதும் தரப்பாளுக்குள் இருந்த புலி, தாமதித்தால் சங்கு, தனக்கு ஒரு ஆபத்து என்று தெரிந்தபிறகே அது ஓநாயை கொல்கிறது. அதற்கென்று நல்ல தண்ணீர் கிடைக்கிறது, மீன் கிடைக்கிறது. எல்லாமே கடவுள் தான் கொடுக்கிறார். அதைக்கூட அறியாமல் கடவுளையே பார்த்து உறுமி அவரை படகை விட்டு வெளியே போய் ஒரு மிதவையில் வசிக்கச்செய்கிறது. ஒரு கட்டத்தில் கடவுளின் கட்டுப்பாட்டுக்கு அடிபணிகிறது. ஆளில்லா தீவில் தண்ணீரும் உணவும் கிடைத்தபோது கடவுளை கணக்கெடுக்கவில்லை. கடவுளோடு சேர்ந்து கிடைக்கவில்லை. ஆனால் அந்த இடம் நிரந்தரம் இல்லை, ஆபத்தானது என்று தெரிந்தவுடன் மீண்டும் கடவுளுடன் படகில் தொற்றிக்கொள்கிறது. இறுதியில் கரைசேர்ந்து உயிர் தப்பிய பின, காப்பாற்றிய கடவுளை ஏன் நாயே என்று கூட கவனிக்காமல், ஒரு நன்றி, bye கூட சொல்லாமல் தன் பாட்டுக்கு சந்தோஷமாக காட்டுக்குள் புகுந்துவிட்டது.

முதல் கதையில் பையும் புலியும் தப்புகிறார்கள். அதாவது கடவுளும் பையும் தப்புகிறார்கள். ஆனால் இரண்டாவது கதையில் பை மட்டுமே தப்புகிறான். அங்கே கடவுள் என்ற பாத்திரம் அருவமாக இருந்து பையை காப்பாற்றியிருக்கிறது. ஆக இரண்டுமே ஒரே கதைதான். ஒன்றில் கடவுள் ஒரு பாத்திரம். மற்றயதில் கடவுள் அருவம். எதை நம்புவீர்கள்? உருவத்தை தானே. அதனால் தான் கப்பல் கம்பனியும் அதையே நம்புகிறது. எழுத்தாளனும் அதையே விரும்புகிறான். இந்த ஒரு காரணத்துக்காகவே கிரிஸ்துவத்தில் கடவுளின் குழந்தையாக இயேசு இங்கே வந்து கஷ்டப்பட்டார். இந்து மதத்தில் அவதாரங்கள் இடம்பெற்றன. எம்மோடு எப்போதுமே சேர்ந்தியங்கும், எம்மை இயக்கும், வாழவைக்கும் கடவுள்களை நாங்கள் உணருவதில்லை. எமக்கு எல்லாமே கிடைத்துவிட்டது என்று நினைக்கும் நேரத்தில் கடவுளை மறந்துவிடுகிறோம். “I still cannot understand how he could abandon me so unceremoniously, without any sort of goodbye” என்று புலி திரும்பியே பார்க்காமல் காட்டுக்குள் போன அந்த சந்தரப்பத்தை பை விவரிக்கிறான். எவ்வளவு உண்மை. ஆனால் அது தான் சாஸ்வதம் என்று உணர்ந்த ஏ ஆர் ரகுமான் “எல்லாப்புகழும் இறைவனுக்கே” என்று உணர்ந்து போற்றிப்பாடுகிறார்.

1352859256-3808271702

அதே சமயம் கடவுள் ஏன் எம்மையெல்லாம் இப்படி ஆட்கொள்ளவேண்டும்? அவருக்கேன் இந்த வேலை கெட்ட வேலை என்ற ஒரு விவாதத்துக்கும் பதில் இருக்கிறது. ஓரிடத்தில் பை(கடவுள்)சொல்கிறான் “Without Richard Parker, I wouldn’t be alive today to tell you my story. Caring for the tiger kept me alive”. இந்த இடத்தில் கொஞ்சம் agnostism கூட எட்டிப்பார்க்கிறது. அட கடவுளை நாம் தானே படைத்தோம். எங்களுக்காக கடவுள் அக்கறைப்படாவிட்டால் அவருக்கு தான் இருப்பு ஏது? என்ற ஒரு சிந்தனை. I care there for I am என்று சொல்லுவார்களே அது.

“நாமெல்லாம் நட்டநடு சமுத்திரத்தில் தனியனாக அல்லலுறும் சிற்றறிவு ஜீவன்கள். எங்களை காத்து மீட்க எப்போதுமே இறைவன் ஒருவனே எம்மோடு இருப்பான்” என்ற ஆன்மீகத்தின் ஆதார தத்துவத்தை இத்தனை தெளிவாக, உள்ளங்கை நெல்லிக்காயாக எந்த இடத்திலும் பிரச்சார நெடியில்லாமல் ஒரு படம் கொடுக்கிறது என்றால் .. what a film!

இந்த படத்தை நான் டெக்னிக்கலாக விமர்சிக்கப்போவதில்லை. அது கூடாது. ஒரு படம் அது சொல்லவேண்டிய கருத்தை ஆணி அடித்தது போல சொல்லி, என்னை இவ்வளவு நீளமாக அலச வைத்திருக்கிறது என்றால், அப்படிப்பட்ட படங்களை விமர்சனம் என்று ஒரு வார்த்தைக்குள் அடக்கவே கூடாது. என்னை இப்படிப்பட்ட எண்ண ஒட்டங்களுக்குள் அலைபாய வைத்த படக்குழுவினருக்கும், படத்தை சேர்ந்து பார்த்த நண்பர்கள் கேதாவுக்கும், வீணாவுக்கும், முடிந்தபின் கார்பார்க்கிலேயே மணிக்கணக்காக திருவாசகம் பைபிள் தொட்டு “கந்தசாமி கலக்ஸியின், “யார் யார் யாரவர் யாரோ”வை கூட முடிச்சுப்போட வைத்த அந்த அர்த்தமுள்ள கலந்துரையாடலுக்கும் … கூடவே வீணாவின் யாழ்ப்பாணத்து பால் கோப்பிக்கும் நன்றிகள்.

“என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன் .. உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்!”-- கடவுள்

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக