விஸ்வரூபம்!

Jan 26, 2013

 

viswaroopam-movie-photos-1382“அண்ணே இண்டைக்கு நிச்சயமா ஓடுது, டிக்கட் புக் பண்ணீட்டேன்” என்று கேதா மதியமே சொன்னபோது நம்பமுடியவில்லை. இறுதிநேரத்தில் ஏதாவது முன்னேற்ற குழுவோ, முக்கா குழுவோ தடையுத்தரவு வாங்கிவிடுமோ என்ற அச்சம் இருந்தது. பெடரர் முரே செமி பைனல் வேறு. பெடரரா கமலா என்று ஒரு கணம் குழப்பம். “உன்னை பாராமலே.. நான்” என்று சங்கர் மகாதேவனின் ஆலாப் மனதுக்குள் இழுக்க, கமல் என்று முடிவுசெய்தாயிற்று. மாலை ஆறுமணி ஷோ. ஆஸியில் முதல் ஷோ!

படத்தின் கதை? பூஜா மருத்துவம் சார்ந்த அணு ஆராய்ச்சி(Nuclear Oncologist?) துறையில் பிஎச்டி செய்து அது சார்ந்த நிறுவனத்தில் வேலை செய்பவள். அங்கே அவளின் மேலதிகாரியுடன் காதல். கள்ளக்காதல். பூஜா ஏற்கனவே திருமணமானவள். கணவன் கதக் நடன கலைஞன். அன்ரியா தவிர இன்னும் நாலு சப்பை பிகருகளுக்கு நடனம் சொல்லிகொடுப்பவன். கொஞ்சம் ஒன்பது ரூபாய் நோட்டு. அவனுக்கும் ஏதாவது தகாத உறவு, அது சாத்தியமில்லை என்றால் ஏதாவது ஒரு கறுத்த பக்கம் இருந்தால் தன்னுடைய கள்ளத்துக்கு குற்ற உணர்ச்சி இருக்காதே என்று நினைத்து கணவனின் குறைபிடிக்க ஒரு டிடெக்டிவ்வை ஏற்பாடு செய்கிறாள். அதிலிருந்து தான் கதையின் முடிச்சு கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்கிறது. அல்லது ஆரம்பிக்கிறது.

big_Kamal_is_an_Universal_Hero__Pooja_Kumar_-81c7f7d25c06d53bf2c33aaa66dd7be0கமல் வெறும் கதக் டான்சர் கிடையாது, ஒரு ஆர்மி ஏஜென்ட், ஒரு இடத்தில் ஏதோ நியூகிளியர் ரிசெர்ச் அனலிஸ்ட் என்று கூட சொல்வதாக ஞாபகம். அதுவும் அல்கைடா தீவிரவாதிகளை ட்ராக் பண்ணும் ஏஜென்ட். அவரோடு நாலைந்து கூட்டாளிகள். அல்ஹைடா தீவிரவாதிகள் சீஸியத்தை கொஞ்சம் கொஞ்சமாக கடத்தி லோக்கலிலேயே தயாரித்த ஒரு விதமான டவுன் க்ரேடட் நியூகிளியர் குண்டால் நியூயோர்க்கை வெடிக்க வைக்கப்போகிறார்கள். அதை எப்படி கமலும், அவர் குழுவும் நியூயோர்க் போலீஸும் விறுவிறுப்பில்லாமல் முறியடிக்கிறார்கள் என்பது தான் கதை!

பிளாஷ்பக்கில்  கமல் ஒரு அண்டர் கவராக ஏஜண்டாக ஆப்கான் தீவிரவாதிகளுக்குள் நுழைகிறார். அங்கே தீவிரவாதிகளுக்கு (அவர்கள் அல்கைடாவா? தலிபானா? முஜாஹிதீன்களா? என்ற குழப்பம் இருந்தது) பயிற்றுவிக்கிறார். ஒரு காட்சியில் ஒசாமாவை கூட தூரத்தில் இருந்து பார்க்கும் சந்தர்ப்பம் அமைகிறது. ஆப்கானில் நடக்கின்ற மரணதண்டனைகள், கசையடி, சிறுவர் போராளிகள், பெண்கள் ஒடுக்குமுறை, நேட்டோ குண்டுத்தாக்குதல்கள் என்று அவசர அவசரமாக எல்லாமே ஒரு அரை மணிநேரம் படத்தில் வருகிறது. இந்த காட்சிகளை மூலக்கதைக்கு நடு நடுவே காட்சியை பிஃரீஸ் பண்ணிவிட்டு சொல்லுகிறார்கள்.

ஆ அப்புறம்? .. படம் முடிஞ்சுது பாஸ். இவ்வளவு தான் கதை. ஆப்கானிலும் நியூயோர்க்கிலும் நடைபெறும் கதைகள் மாறிமாறி வந்து, கடைசியில் விஸ்வரூபம்2 வருகிறது என்று மெசேஜை போட்டுவிட்டு படத்தை முடிக்கிறார்கள்.

viswaroopam-movie-latest-stills-8ஆரம்ப காட்சிகளில் கதக் கலைஞராக நடை உடை பாவனைகளில் நளினம் காட்டுகிறார். அதை தவிர்த்து மிகுதி இடங்களில் கமல் வெகு இயல்பாக நடித்திருக்கும் படம். தேவையே இல்லாமல் எல்லா வேடங்களிலும் தானே வர முயலாமல், ஒரு அக்ஷன் திரில்லருக்கு எது வேண்டுமோ அது, அந்த டைமிங், “அவருடைய நடிப்பு பெரிதாக ஒன்றுமில்லை” என்று படம் முடிந்து போகும்போது எவனோ ஒருவன் சொல்லிக்கொண்டு போனான். கமல் நடித்திருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு பாராட்டு தேவையில்லை. Mr and Mrs Iyer இல் நடித்த ராகுல் போஸ் தான் பிரதான் வில்லன். ஒக்கே. நாசர் கூட ரொக்கட் லோஞ்சரை ஏதோ ஒரு காட்சியில் தூக்குகிறார். டெல்லிகணேஷ் மிஸ்ஸிங்! பூஜாகுமாருக்கு கொஞ்சம் நெகடிவ், infidelity  செய்யும் ரோல் ரோல். ஆனால் நைட்டியில் வரும்போது வில்லியாக இருந்தாலும் ஹூ கேர்ஸ்? கிடைத்த ஒன்றிரண்டு காட்சிகளில் காட்டக்கூடிய அளவுக்கு மக்ஸிமம் காட்டுகிறார். “விழுந்து விழுந்து” பர்போர்மன்ஸ். நடிப்பு கூட நன்றாகவே வருகிறது. நம்ம ஆன்ரியா “பின்னிருந்து வந்து என்னை பம்பரமாய் சுழற்றிவிட்டு” என்னும்போது சடக்கென்று கமலை கட்டியணைக்கிறார். “உலகுண்ட பெருவாயன் எந்தன் வாயோடு வாய் பதித்தான்" வரிகள் வரும்போது முத்தமிடுவார் என்று சீட்டு நுனிக்கு போனேன். மைக்ரோவேவ் விசில் அடித்துவிட்டது. அடச்சிக்.

படத்தில் வசனங்கள் கமல் ரகம். “கடவுள் தான் எங்கள காப்பத்தனும்”, “எந்த கடவுள சொல்லுற?”, “சரி விடு மீண்டும் ஆரம்பிக்கவேணாம்” எல்லாம் கிளாசிக். முதலில் “ரசியா, முஜாஹுதீன், அமேரிக்கா, தலிபான் … குரங்குகள் .. நீங்கள் எல்லாம் முன்னுக்கு வால் இருக்கும் குரங்குகள்”  என்று ஒரு கிழவி திட்டும்போது கூட்டம் சிரித்தது. ஆப்கானின் வரலாறை படித்திருந்தால் சிரிக்கமாட்டீர்கள். ஏனென்றே புரியாமல் எங்கேயோ எப்போதோ ஒரு சண்டை நடந்துகொண்டிருக்கும் தேசம் அது.  பனிப்போரின் போதே இது ஆரம்பித்துவிட்டால், போர், ஆயுதம், ஏகே47 தவிர வேறொன்றையும் அறியாத ஒரு தலைமுறை அங்கே உருவாகிவிட்டது. படித்த, படிக்க முயல்பவர்களையும் போட்டுவிடுவார்கள். Radical thinking உள்ள ஒரு சிலரும் காபுல் அல்லது ஏனைய தேசங்களுக்கு ஓடிவிட்டார்கள். யாதை Kite Runner இல் அழுத்தமாக காட்டுவார்கள். விஸ்வரூபம் அரசியல் படமல்ல. அக்ஷன் படங்களில் இதை காட்டவும்முடியாது. ஆனால் கமல் அவ்வப்போது கிடைக்கும் சந்தர்ப்பங்களில் முயல்கிறார். அரை அவியல் தான்.

Viswaroopam-Movie-Preview-300x168

சில முஸ்லிம் உணர்வாளர்கள் ஏன் தடையுத்தரவு வாங்கினார்கள்? என்ன தான் முஸ்லிம்களுக்கெதிராக படத்தில் வருகிறது? அப்படி ஏதும் இருப்பதாக தெரியவில்லை. போதாததுக்கு கமல் கூட படத்தில் முஸ்லிமாக தான் வருகிறார். படத்தில் ஆப்கான் தீவிரவாதம் வருகிறது. இஸ்லாமிய தீவிரவாதிகள் வருகிறார்கள். அவர்கள் இஸ்லாத்தின் பெயரால் செய்யும் அநியாயங்கள் வருகிறது. அதை பார்க்கும்போது யாருக்காவது உணர்வு பாதிக்கப்பட்டால் அவர்கள் உணர்வின் அடிப்படையில் ஏதோ ஒரு தவறு இருக்கிறது. நித்தியானந்தா இந்துத்துவத்தின் பேரால் செய்யும் அநியாயங்களை பத்திரிகைகள் எழுதும்போதோ, சிவசேனா கொடுமைகளை புத்தகத்தில் படித்தபோதோ எனக்கு அந்தந்த நபர்கள் மீது கோபம் வந்ததே ஒழிய அதை புட்டுவைத்த பத்திரிகைகள் மீது கோபம் வரவில்லை. நீ எப்படி சொல்லலாம் என்று ஊடகங்கள் மீது தடையுத்தரவு வாங்க தோன்றவில்லை!

kamal-hasan-sekhar-kapoor-viswaroopam-gallery35

தலிபான் அல்கைடா வருகின்ற ஒரு அக்ஷன் திரில்லர் படத்திரைக்கதையில், “எல்லாப்புகழும் இறைவனுக்கே” என்று எல்லா பாத்திரங்களும் சொல்லிக்கொண்டு இருக்கமுடியாது. “கொடுக்கிறேன் என்று நினைப்பவனே, கொடுப்பதற்கு நீ யார்” என்று கவிதை எழுதமுடியாது. “கனவு காணுங்கள், திருக்குறள் படியுங்கள், முன்னேறலாம் சிறுவர்களே!” என்று அறிவுரை செய்யமுடியாது.  படத்தில் ஆப்கானில் கசையால் அடிக்கிறார்கள். பெண்களை கொடுமைப்படுத்துகிறார்கள். சிறுவர்களை வெளியுலகமே தெரியாமல் ஜிகாதிகளாக வளர்க்கிறார்கள். அமெரிக்கர்கள் குண்டு போட்டு தன் பங்குக்கு மக்களை கொல்லுகிறார்கள். எடுத்த கதைக்கு கமல் இதை காட்டியே ஆகவேண்டும். கதைக்கு தான் காட்சிகள். நீ ஏன் அந்த கதையை தேர்ந்தெடுத்தாய் என்று கேட்டு நாங்கள் ஒரு கலைஞனின் உரிமையை நெரித்து கொல்லமுடியாது. அது தீவிரவாதம். “Davincy code”, “Angels and Demons”, “வேதம் புதிது”, “இரத்தக்கண்ணீர்”, “பம்பாய்”, “ஹேராம்” போன்ற படங்கள் போல தான் இதுவும்.  சொல்லும் கருத்தை கிரகித்தால் இந்த குழப்பம் வர சான்ஸ் இல்லை. அப்படியே குழப்பம் வந்தாலும் கூட, ஒரு நாகரிக சமுதாயத்தில் இயல்பாக விமர்சிக்கவேண்டுமே ஒழிய கமல் போன்ற கலைஞனை முடக்கக்கூடாது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒரு விழிப்புணர்வு அரங்குகளை கூட அந்த முன்னேற்ற கழகங்கள் செய்யலாம். செய்யமாட்டார்கள். அவர்கள் நோக்கம் விழிப்புணர்வு அல்ல. விழிமூடி  குருடராய் இருப்பதே. நல்ல வருவீங்கடா.

ஒகே, பாக்டு விஸ்வரூபம். ஹேராம் படத்தில் அம்ஜத்தோடு சாகீத் பேசுகின்ற ஒரு காட்சி. இந்து முஸ்லிம் தீவிரவாதிகள் தங்களுக்குள் அடிபட்டுக்கொண்டிருக்கும் சமயம். “ஹைபர் கணவாயால் வந்த சுதேசி தானே நீ” என்று சாகீத் சொல்ல “ராமன் மட்டும் யாரு” என்பான் அம்ஜத். சர்க்கென்று குத்தும். என்னளவில் தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த திரைப்படம் ஹேராம். விருமாண்டியில் அந்த சிறைச்சாலை கலவரம். point of view காட்சிகள் மூலம் மரணதண்டனை பற்றிய அழுத்தமான விமர்சனத்தை வைத்த முத்திரை. மாதவன் அழும்போது “ஏகாதசம் பூர்ண சநாதனம் துவாதசம் பரிபூர்ண சநாதனம்”, “நீ தாண்டா கடவுள் “என்று கமல் சொல்லும் அன்பேசிவம். கேயாஸ் தியரியை அசாத்திய விறுவிறுப்புடன் சொன்ன தசாவதாரம். நகைச்சுவை படத்தில் கூட "the matrimony was bad but the alimony was good” போன்ற வசனங்களை புகுத்தும் இலாவகம். தேவர்மகன், மகாநதி என்றில்லை பஞ்சதந்திரம் காதலா காதலா போன்ற படங்கள் கூட கமல் என்ற கலைஞனால் மாத்திரமே முடியக்கூடிய விஷயங்கள். கமலை எங்கள் சொத்தாக நினைப்பதற்கான காரணங்கள்.

viswaroopam_movie_stills_n_wallpapers_3012120930_020

விஸ்வரூபத்தில் இது எல்லாமே இல்லை என்று இல்லை. ஆனால் இது எல்லாவற்றையும் இணைக்கும் திரைக்கதை அவ்வளவு அழுத்தமோ வேகமோ இல்லாமல் போய்விட்டது. அழுத்தமில்லாத ஆப்கான் காட்சிகள். ஏன், என்ன சொல்லவருகிறார் என்பதை அவ்வளவாக பூரணபடுத்தவில்லை. இரண்டரை மணிநேர திரைப்படம் கிளைமாக்ஸை நோக்கி செல்லும் பாதை, எல்லா இடமும் தறிகெட்டு பயணிக்கிறது. கூடவே எங்களால் விறுவிறுப்புடன் பயணிக்கமுடியவில்லை. கிளைமேக்ஸ் காட்சி கூட, சீட்டு நுனி ரகம் இல்லை. மிக சாதாரணமான காட்சிகள். இனி தான் மெயின் சீன் இருக்கு என்று ரிலாக்ஸா இருக்கும்போதே படம் முடிந்துவிட்டது. ஒவ்வொரு காட்சிகளின் தரமும் ஹோலிவுட் ரகம் தான். ஆனால் ஸ்க்ரீன்ப்ளே கடுகதியில் இருந்தால் தான் எந்த வுட்டையும் பார்க்கமுடியும். இந்த படமும் களமும் கமல் ஹோலிவுட்டுக்கு தன்னைப்பற்றி அனுப்பிய Resume. இஸ்லாமிய தீவிரவாதம், நியூயோர்க்கில் வெடிக்கப்போகும் குண்டு, அக்க்ஷன் திரில்லர் எல்லாமே அமெரிக்கர்களுக்கு பிடிக்கும் என்று நினைத்தது ஒகே. ஆனால் அமெரிக்கர்களுக்கு இதை எல்லாவற்றையும் விட ஒரு அக்ஷன் படத்தில் விறுவிறுப்பான திரைக்கதை மிகவும் பிடிக்கும். Speed இல் ஒரு சின்ன பஸ்ஸை வைத்து அதகளம் பண்ணிய இன்டஸ்ட்ரி அது. கமல் அந்த திரைக்கதையை மிஸ் பண்ணிவிட்டார்! ம்ம்ம். இட்ஸ் ஒகே. அடுத்த படத்தில பார்த்துக்கலாம் தல.

 

&&&&&&&&&&&

பின்குறிப்பு

“கொடுக்கிறேன் என்று நினைப்பவனே, கொடுப்பதற்கு நீ யார்” என்ற கவிதை எழுதியது கவிக்கோ அப்துல் ரகுமான்.

ரோஜா
மணிரத்னம்
Life of Pi - என் குளத்தில் எறியப்பட்ட பாறாங்கல்!
மணிரத்னம் எழுதிய கவிதை!

Contact Form