Skip to main content

ஏ ஆர் ரகுமான் - பாகம் 2

 

முதல் பாகத்தை வாசிக்க இங்கே அழுத்துக.

topimg_19278_ar_rahman_600x400

“அல்லா ராக்கா ரகுமான்”

இந்த இசைத் தூதனை நான் நேரடியாக காணும் நாளும் வந்தது. இடம் சிங்கப்பூர். மனம் சஞ்சலத்தையும் அமைதியின்மையும் கூடவே காவிக்கொண்டு திரிந்த காலம். ரகுமான் வருகிறார் என்று தெரிந்ததும் கஜனுக்கு தொலைபேசி அழைத்தேன். “மச்சான் நூற்றைம்பது டொலர், டூ மச்” என்று தயங்கினான். “கடவுளுக்கெல்லாம் கணக்கு பார்க்கக்கூடாது, நீ வா, நான் டிக்கட் எடுக்கிறேன்” என்றேன். போனோம். அரங்கத்துக்குள் நுழையும்போதே ஒருவித பரவசம். “தில்சேரே…” என்று ரகுமான் உச்சஸ்தாயியில் முழங்க எம்மை அறியாமலேயே பரவசத்தில் எழுந்துவிட்டோம்.

நிகழ்ச்சியில் “கடவுளே லுக்கே சுப்பி பாட்டு எப்பிடியும் வரோணும்” என்று நேர்ந்துகொண்டு இருக்கிறேன். “லதா மங்கேஷ்கர் வராமல் எப்பிடிடா? பாடமாட்டாங்கள்” என்றான் கஜன். எனக்கு நம்பிக்கை இருந்தது. சிறிது நேரத்தில் அந்த கிட்டார் இசை ஒலிக்க .. அவ்வளவு தான். வேறு உலகத்தில் நான் . பிரமாண்ட லேசர் திரையில் லதா மங்கேஷ்கர் பாட, ரகுமான் மேடையில் அவரோடு சேர்ந்து பாட, இறுதியில் இருவரும் பாடும் சுரம் இருக்கிறதே.

Enter video caption here

அதெப்படி ரகுமானை இறைதூதன் என்கிறாய்? கொஞ்சம் அதிகப்படியாக இருக்கிறதோ என்று நினைப்பவர்கள், கண்மூடி எந்த தொந்தரவுமில்லாமல் கேட்டுப்பாருங்கள். இதற்கும் மேலே என்ன கடவுள் வேண்டிக்கிடக்கு?

ரகுமானின் பாடல்கள், பொதுவாக மெதுவிஷம் என்பார்கள்.ஆரம்பத்தில் கேட்கும்போது ஒன்றுமே தோணாது. ஒலிக்கருவி சரியில்லாவிட்டால் கொஞ்சம் இரைச்சல் போலவும் இருக்கும். இரண்டாம் தரம், மூன்றாம் தரமும் .. ம்ஹூம். “ரகுமான் சொதப்பிட்டார்டா. முன்ன மாதிரி அவர் இப்ப இல்ல” என்று அவசரப்பட்டு ஸ்டேடஸ் போடுவோம். இரண்டு நாள் கழித்து மீண்டும் கேட்க, “அட, ஏதோ சம்திங் இருக்கே”. திரும்பவும் கேட்க, “ஓ இது தானா”. அடுத்த தடவை, “ஓ இவ்வளவு இருக்கா..” என்று கொஞ்சம் கொஞ்சமாக ஆச்சரியங்கள் விரிய ஆரம்பிக்கும். அவதார் படத்து நாயகனுக்கு அந்த பண்டோரா காடு கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து, நள்ளிரவில் வெளிச்சமே இல்லாதபோது பளிச்சிடுமே. அந்த பிரவாகம் காதுகளுக்குள் கேட்கத் தொடங்கும். இது நடப்பதற்கு சில வேளைகளில் ஆண்டுக் கணக்கு கூட ஆகலாம். ஒரு பாட்டு என்னை ஆட்கொள்ள ஐந்து வருடங்கள் எடுத்தது. அது தான் “கண்களால் கைது செய்” படத்து “என்னுயிர்த் தோழியே”. முதலில் தோணவில்லை. ஒகே நல்ல பாட்டு என்றே நினைத்தேன்.

ஆனால் சில வருடங்களுக்கு முன்னர் அக்கா தான்.

“என்னடா இந்தப்பாட்டு பெரிசா நீ கேக்கேலயா?”

என்று ஒருமுறை ப்ளே பண்ணினார். கேட்டேன்.

Enter video caption here

“ஒற்றை ஜடையில் உன்னைக் கட்டி எடுத்து வந்து வைப்பேன்
எனது கள்ளச் சிரிப்பழகில் காயம் செய்து பார்ப்பேன்”

திரும்பி ப்ளே பண்ணுங்க.

“தீ பிடித்த தங்க மீனை பார்த்ததுண்டா?
என்னை நீயும்தான் பார்த்து கொள்வாய்
கத்தி வீசும் வானவில்லை கண்டதுண்டா?
என்னை வந்து நீ கண்டு கொள்வாய்”

இன்னொருக்கா ப்ளீஸ்.

“ஒரு நஞ்சும் உண்டு அமுதும் உண்டு கண்ணில்
நீ ரெண்டும் உண்டு மோட்சம் கொண்டு போ போ
என் ஆசை தீர்ந்தது”

அன்றைக்கு கேட்டது தான். நாடி நரம்பு மூளை, இண்டு, இடுக்கு எல்லாமே வியாபித்திருக்கும் பாட்டு இது. இதை புரிய வைக்கத்தானோ என்னவோ ரகுமான் பாட்டில் ஒரு வரியே இருக்கிறது.

“மெதுவாகத்தான் மெதுவாகத்தான் எனை ஈர்க்கிறாய், பழி வாங்கவா!”

"வெறும் இரைச்சல்". "கலாச்சார சீர்கேடு". "எல்லாம் கொஞ்சக்காலம் தான்" இதெல்லாம் ரகுமானுடைய இசைக்கு அரைவேக்காடுகள் ஆரம்பத்தில் கொடுத்த விருதுகள். புதுமையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களின் புலம்பல்கள். திறமையை ஜீரணிக்க முடியாமல் இவரின் இசையை கொம்பியூட்டர் கிமிக்ஸ் என்றார்கள். எல்லாவற்றையும் பொறுமையுடனும் மெல்லிய புன்னகையுடன் ரகுமான் தாண்டிச் சென்றார். தமிழை கொல்கிறார் என்பார்கள். என்னைக்கேட்டால் எம்எஸ்வி காலத்துக்குப் பிறகு இவர் காலத்திலேயே பாடல்களில் கவித்துவம் பெரிதும் மிளிர்ந்தது என்பேன்.

எண்பதுகளில், ஒரு வருடத்தில் இளையராஜாவின் பாடல்கள் இருநூறுக்கும் மேலே வெளிவரும். ஆனால் அதில் கவித்துவம் மிகுந்த பாடல்கள் ஒரு இருபது தேறுமோ தெரியாது. ராஜா வைரமுத்து கூட்டணி காலத்தில் இந்தச் சிக்கல் இல்லை. முதல்மரியாதை தொட்டு புதுமைப்பெண் வரை அவர்கள் கலக்கினார்கள். ஆனால் அவர்கள் கலக்காத பாடல்களின் வரிகள் நம் வயிற்றை கலக்கியது. உலகத்தின் சிறந்தபாடல்களின் ஒன்றான “பூமாலையே தோள்சேரவா” வின் வரிகள் மிகச் சாதாரணமானவை. “தேன்துளி பூவாயில் பூவிழி மான் சாயல்” என்று சந்தத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட வரிகள். இளையராஜா வைரமுத்து ஊடலுக்கு பின்னர் நிலைமை மோசமானது. "இரு விழியின் வழியே நீயா வந்து போனது?”, “காலையில் கேட்டது கோயில்மணி, கேட்டதும் பூத்தது கண்ணின் மணி" என்று வாலியும், கங்கை அமரனும், உதயகுமாரும் மானே தேனே போட்டுக்கொள்வார்கள். ஆனானப்பட்ட வீரா படத்துக்கே பாடல் வரிகள் சாதாரணம் தான். ஆனால் நல்ல காலம் ராஜா என்ற ஜாம்பவானின் இசையோடு கேட்கையில் சாதாரண வரிகளுக்கு கூட சாகாவரம் கிடைத்தது. அது வேறு.

ரகுமான் எப்போதுமே நேர்த்திக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். சமரசங்கள் செய்யாதவர். தன்னுடைய பஞ்சதன் ஒலிப்பதிவு கூடத்துக்கு வெளியே செல்லும் ஒரு சின்ன இசை நோட்டு கூட பக்காவாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர். வரிகளுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார். பாடலாசிரியர்களுக்கு கற்பனை செய்ய நேரமும் கிடைத்தது. வருடத்துக்கு ஐந்து படங்கள். இருபத்தைந்து பாடல்கள். ஆனால் அத்தனையும் அத்தை மக இரத்தினங்கள். அடியுள்ள பாட்டான சிக்குபுக்கு ரயிலே, ஊர்வசி ஊர்வசி வரிகள் கூட அவ்வளவு அழகாக இருக்கும். அவ்வப்போது வாலி முக்காலா முக்காலா என்று திருஷ்டிப் பொட்டு வைத்தாலும் அதிலும் ஒரு கியூட்நெஸ் இருக்கும்.

குறிப்பாக வைரமுத்துவின் மீள்வருகை. இவர் அவ்வப்போது தேவா கொடுக்கும் வாய்ப்புகளில் "வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்" என்று சவால் விட்டுக்கொண்டிருந்தவர். ஆனால் மனுஷனுக்கு ராஜாவுக்கு பிறகு தீனி போட ஆள் இல்லை. காய்ந்து கிடந்தார். அப்படிப்பட்டவரிடம் நிறைய டைம் எடுத்து எழுதுங்கோ என்று சொல்லி பாடலை வரி வரியாக செதுக்கும் ஒரு இசையமைப்பாளன் கிடைத்தால்? சிக்கென பற்றிக்கொண்டார். ரகுமானும் வைரமுத்துவும் அமைத்த கூட்டணி தமிழுக்கு மீண்டும் சங்ககால கவித்துவத்தின் நயத்தை அழைத்து வந்தது.

சங்க கால கவித்துவம் என்றால் கடும் தமிழில் இருக்கவேண்டு மென்பதில்லை. இயல்பாக ஆனால் நயமாக இருந்தாலே அது இலக்கியம் தான். ஒரு பாட்டு. காதலி, அவளைப்போல அழகு உலகில் எங்கும் இல்லை. உலக அழகி. அவளிடம் காதலை சொல்லுகிறான் அவன். இந்த சிட்டுவேஷனில் பாட்டு. அவள் பாடும் வரிகளை பாருங்கள்.

"செர்ரி பூக்களை திருடும் காற்று காதில் சொன்னது ஐ லவ் யூ.
சைப்பிரஸ் மரங்களில் தாவும் பறவை என்னிடம் சொன்னது ஐ லவ் யூ.
உன் காதலை நீ சொன்னதும்
தென்றலும் பறவையும் காதல் தோல்வியில் கலங்கியதே"

Enter video caption here

பாசத்தை பொழிகின்ற கிராமத்து அண்ணனும் தங்கையும் பேசிக்கொள்ள முடியாத நிலைமை. கண்ணீரால் பேசிக்கொள்வார்கள். அவர்கள் கண்ணீர் அந்த வறண்ட மண்ணில் விழுந்து மழைக்கால புழுதியை தட்டி எழுப்புகிறது. அப்படி ஒரு சிட்டுவேஷன். அப்படி ஒரு மெட்டு. வரிகள் அதற்கு ஈடு கொடுக்கும்.

“தெங்கிழக்குச் சீமையில செங்காட்டு பூமியில
ஏழப்பட்ட சாதிக்கொரு ஈரமிருக்கு.
காயப்பட்ட சொந்தத்துக்குக் கண்ணீர் விட்டா
சாயம்போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு.
இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசான மூலையிலும் மேகமெரம் இருக்கு.

நம்பிக்கை கொடுக்கும் வரிகளின் உணர்வுத் தொடுப்பை பார்த்தீர்களா.

இப்படி ஏராளம். “உன்விழியால் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தமே”, “நாளை வெறுங்கனவே, அதயேன் நம்பணும்? நான் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும்”, “இரவல் வெளிச்சமும் நீ, எழுத்துப் பிழையும் நீ” என்று சொல்லிக்கொண்டே போகலாம். ரகுமான் பாடல்களில் வைரமுத்து கவிதைகள் என்று தனியாக புத்தகமே போடலாம்.

இது போதும் எனக்கு.
இதுபோதுமே.
வேறென்ன வேண்டும்?
நீ போதுமே .. நீ போதுமே.

இசையில் ஆச்சரியங்களை நிகழ்த்துவதில் தலைவருக்கு நிகர் தலைவர் ஒருவரே. ஒருவர் நல்ல இசையை கொடுக்கலாம். சிக்கலான இசையை கொடுக்கலாம். ஆனால் “இப்படிக்கூட ஒரு இசை இருக்குமா” என்று மீண்டும் மீண்டும் எப்படி ஆச்சரியத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்கமுடியும்?

அது தான் ரகுமான்.

காதலன் படத்தில் ஒரு தாளம் போட வைக்கும் பாட்டு. “எர்தானி குர்தானி கோபாலா, முசக்குட்டி, மூடி போட்டு வச்சிருக்கேன்” என்று இரட்டை அர்த்தவரிகள். “சச்சிக் இதுவும் ஒரு பாட்டா?” என்று அடுத்த பாட்டுக்கு தாவ முயற்சிப்போம். அப்படி தாவாமல் இருந்தோமானால் சரணத்தில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது.

Enter video caption here

இந்த ஒரு பூவுக்குத்தான்
அம்முலு ஏழு மலைத் தாண்டி வந்தேன்
காமன் வந்து சண்டப் புடிக்க
மொத்தத்தில் காரம்புளிக் கொறச்சுக்கிட்டேன்

அடுத்ததை கவனியுங்கள். மெலடி பின்னும்.

அச்சாரம் போடத்தான் ஐநூறு கிலோமீட்டர் வந்தேனே
தேனே தேனே தேனே செந்தேனே தேனே னே
ஆதாரம் காட்டத்தான்
அதக் கொஞ்சம் இதக் கொஞ்சம் தந்தேனே

மீண்டும் பழைய மெட்டுக்கு பாட்டு போகும்.

யானைப் பசி எனக்கு
போங்கடி கீரைத்தண்டு எதுக்கு
இடைவேள முடிஞ்சு
பாரைய்யா என்னென்னமோ இருக்கு

திரும்பவும் தடம் மாறும்.

அடியே உன் தேகம் ரத்த ஓட்டம் பாய்கிற தந்தம்

அந்த அடியில் கிடைக்கும் அனுபவத்தை எழுதக்கூடாது. சும்மா கேட்டாலே புரியவேண்டும்.

லகான் படத்தின் “ஓரி சூரி” பாடல் அந்தவகை. “தத்தியாடுதே தாவியாடுதே” அந்த வகை. “தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை” பாட்டும் அப்படியே. “யாரைக்கேட்டு எந்தன் நெஞ்சில்”, “செப்டம்பர் மாதம்”, “நெஞ்சம் எல்லாம்”, “தேரேபினா” முதல் கடல் படத்தின் “அடியே” வரை ரகுமானின் பல பாடல்கள் விடுகதைகளான தொடர்கதைகள். அவற்றுள் இந்த வந்தே மாதரம் அல்பம் பாடல் என்னுடைய பேவரைட்.

Enter video caption here

ரகுமானின் பல பாடல்களில் ஒவ்வொரு சரணமும் ஒவ்வொரு மெட்டில் இருக்கும். மிக இலகுவாக அவர் அதை இரண்டு பாடல்களாக மாற்றியிருக்கலாம். ஆனால்ச  ெய்யமாட்டார். “பூங்காற்றிலே”, “சின்ன சின்ன மழைத்துளிகள்”, “சகியே நீ என் துணையே”, “கொலம்பஸ்”, “தென்றலே”, “என்னுயிரே” என்று இந்த பாடல்களில் ஒவ்வொரு சரணமும் ஒவ்வொரு மெட்டைக் கொண்டிருக்கும். விண்ணைத்தாண்டி வருவாயா, கடல் போன்ற படங்களின் பாடல்களின் மொத்தம் அமைப்பே மாறியிருக்கும். ஏன் நேற்றைக்கு வந்த கோச்சடையான் படத்து"  மெதுவாகத்தான் " பாட்டை கேட்டுப்பாருங்கள். எஸ்பிபி பாடுவதும் சாதனா பாடுவது வேறு வேறாக இருக்கும்.

  
Enter video caption here

இந்த பயலுகளுக்கு சவுண்ட் எஞ்சினியரிங் என்ற வஸ்து இருப்பதை சொல்லிக்கொடுத்ததே அவர் தானே. திருடா திருடாவின் “ராசாத்தி” பாடல். வெறும் ஹார்மனியை மாத்திரம் வைத்து செய்த ஜாலம். கூடவே ரகுமானின் வலது இடது கைகளான ஸ்ரீதரும் சிவக்குமாரும் அதிலே தெரிவார்கள். தாஜ்மகால் படத்தில் வரும் “குளிருது குளிருது” பாட்டை கேட்டால் எங்களுக்கும் குளிரும். “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” பாட்டின் ஆரம்பத்து புல்லாங்குழல் கேட்கும்போது காது கூசும்.

ரகுமானின் இசையை இரைச்சல் என்று சொன்ன அதே பிரகிதிகள் தான் அவரின் பின்னணி இசையும்  சரியில்லை என்பவர்கள். ரகுமான் பின்னணி இசையில் சிகரம் தொட்டவர். “ரோஜாவி”ன் அந்த தீவிரவாதிகள் முகாமுக்குள் கமரா நுழையும் போது வரும் இசை. பம்பாய் தீம் இசை. மனிஷாவை அவன் பார்க்கும்போது வருகின்ற சூபி துள்ளல் இசை. ஜீன்ஸ் “ரி ச நி ச” தீம் இசை. முன்பே வா, ஹோசன்னா மெட்டுகளை படத்தின் ஆதார காட்சிகளுக்கு பயன்படுத்திய விதம், பாபா படத்தில் ரஜனிக்கு கொடுத்த ராப் இசை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இதையெல்லாம் கேட்டபின்னரும் “ரகுமான் பின்னனி இசையில் சொதப்புவார்” என்று சும்மா லூசுத்தனமாக உளறக்கூடாது.

Enter video caption here
Enter video caption here
.

 

 

 

 

 


நான் அடிக்கடி ஒன்றை நினைத்துக் பார்ப்பதுண்டு. ரகுமானின் மனைவி கொடுத்துவைத்தவர். மனிஷனுக்கு என்னமா காதல் உணர்வு வருகிறது. “தொட தொட மலரந்ததென்ன பூவே, தொட்டவனை மறந்ததென்ன?” என்று உருகுவார். “வாழ்வோடு வளர்பிறை தானே வண்ண நிலவே நிலவே, வானோடு நீலம் போலே இணைந்துகொண்டது இந்த உறவே” என்பார். திடீரென்று “ஹவா சுன் ஹவா”, “ஏய் ஹாய்ரதே ஆஷகி” என்று இந்தியில் காதலிப்பார். “யன்னல் காற்றாகி வா” என்று பாடுவார். “கையில் மிதக்கும் கனவா நீ?” என்று கேட்பார். “நீரும் செம்புலச்சேறும் கலந்தது போல கலந்ததனால் முனபே வா” என்றழைப்பார். “நீராக நானிருந்தா உன் நெத்தியில மேலிறங்கி கூரான உன் நெஞ்சில் குதிச்சு அங்கு குடியிருப்பேன்” என்று கொஞ்சுவார். “இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன?”, லத்திகா தீம் இசை என்று நிஜத்திலேயே காதல் இளவரசன் ரகுமான் தான்.

இப்போது சடக்கென்று காதல் உணர்வு வரவழைக்கவா? ஹியர் யூ கோ. சோனா நஹிம் நா சகி. உதித்தின் மாயாஜாலத்தை சரணத்தில் கவனியுங்கள்.

Enter video caption here

திடீரென்று கோபித்துக் கொண்டே “தொலைவான போது பக்கம் ஆகிறாய்” என்று அரற்றுவார். “மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை” தேடுவார். “இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா? எனதல்ல அதுவும் உனதல்லவா?” என்று கெஞ்சுவார். “இது மாற்றமா தடுமாற்றமா?” என்று அழுவார். யோசித்துப் பாருங்கள். உங்கள் மனைவி, கணவன், காதலன், காதலி, சிங்கிள் என்றால் கனவுக் காதலன், காதலி, இப்படி யாராவது ஒருவருடன் ஒரு ரகுமான் மொமென்ட் கூட உங்களுக்கு இல்லாமல் இருந்திருக்குமா?

எனக்கு, என் தலைமுறைக்கு ஒரு தலைக்கனம் இருக்கிறது. ராஜாவும் ரகுமானும் கோலோச்சிய காலத்தில் பதின்மத்தை கழித்தவர்கள் என்ற பெருமை. கூடவே வித்யாசாகரும் தேவாவும் கூட கொடிகட்டிப்பறந்த காலம் அது. அதுவும் அந்த தசாப்தம் காதல் பாடல்களின் பீக் பீரியட். கேட்கவா வேண்டும்?

ஈழத்து இளைஞனின் பெருமையும் பொற்காலமுமான 90-95ம் ஆண்டு காலப்பகுதி. எதுவுமே எங்களுக்கு இலகுவாக கிடைக்காத காலம் அது. அதனாலேயே அதற்கு கொடுத்த விலையும் மதிப்பும் அதிகம். “முக்காலா” சோகப்பாட்டு கேட்டிருக்கிறீர்களா? நாங்கள் கேட்டிருக்கிறோம். டைனமோ சைக்கிளை மிதித்தபடி காசட்டில் பாட்டுக் கேட்போம். களைத்துப்போனால் சைக்கிள் மிதிப்பது ஸ்லோவாகும். காஸட் இழுபடும். “பூகம்பம் வந்தாலென்ன பூலோகம் சென்றாலென்ன? ஆகாயம் ரெண்டாகுமா? விண்வெளி துண்டாகுமா?” என்று படு ஸ்லோவாக பேய் அரற்றுவது போல இருக்கும். அக்கா திட்டுவாள். உடனே ஏறி இருந்து மிதிப்போம். இப்படித்தான் நாங்கள் “ஊர்வசி” கேட்டோம். “நேற்று இல்லாத மாற்றம்” கேட்டோம். “டெலிபோன் மணி”, “தில்லானா தில்லானா”, “அஞ்சலி அஞ்சலி” முதல் “ஒட்டகத்தை கட்டிக்கோ” எல்லாம் டைனமோவில் கேட்டோம். அப்போது பிரியா தன் வீட்டுக் கட்டிலின் இரண்டு புறமும் இரண்டு மண்பானைகளை கட்டி அதற்குள் சவுண்ட் பொக்ஸை வைத்திருப்பான். அப்பத்தான் பேஸ் நல்லா வருமாம். “தொட தொட மலரந்ததென்ன?” பாட்டின் இன்டர்லூட் தொடக்க இசை  “டிண் டிண் டிண்” பானை அதிர்ந்து வெடிக்கும்.

ரகுமான் மணிரத்னம் கூட்டணி என்றால் பாடல்கள் எப்படி வரும் என்று சொல்லத் தேவையில்லை. அதைப்பற்றி ஒரு தொடரே எழுதி முடிக்கலாம். அது போலவே ரகுமான் ராஜீவ்மேனன் கூட்டணியும் ஸ்பெஷல். இருவருமே நல்ல நண்பர்கள். அவர்கள் நட்பு சன்றைஸ் கோப்பி விளம்பர காலத்திலேயே ஆரம்பித்து விட்டது.

Enter video caption here

மின்சாரக்கனவு படத்தில் பெரிய திரைக்கு வந்தார்கள். கலக்கினார்கள். வெண்ணிலவே பற்றி எல்லாம் எழுதினால் சூரியனுக்கு வெளிச்சம் அடிக்கிறேன் என்று எள்ளி நகையாடுவீர்கள். ஆனால் அவர்களின் மாஸ்டர் பீஸ் “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்”. ரகுமானுடைய எல்லா படங்களிலும் எல்லா பாடல்களுமே மாற்றுக்குறையாத தங்கங்கள். ஆனாலும் ஒவ்வொரு படத்திலும் ஒன்றிரண்டு வைரங்கள் இருக்கும். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அத்தனை பாடல்களும் தனித்தனி வைரச்சுரங்கங்கள். “சந்தனத் தென்றலை”, “ஸ்மாயி”, “சுட்டும் விழிச்சுடர் தான்”, “கண்டுகொண்டேன்”, “எங்கே எனது கவிதை”, “கொஞ்சும் மைனாக்காளே”. அப்புறம் என்னை ஆண்டாண்டு காலமாக துவைத்துப்போடும் பாட்டு. “கண்ணாமூச்சி ஏனடா”. அதன் மெட்டு, இண்டர்லூட், சித்ரா, ஜேசுதாசின் குரல்கள், பாடல் வரிகள். “சனியன் பிடிச்ச பாட்டு!” ஆனால் பாருங்கள். இது ஒரு பக்திப்பாட்டு. கொஞ்சம் ஆண்டாள் டச் இருக்கும்.

Enter video caption here

வான்மழை விழும்போது மலை கொண்டு காத்தாய்
கண்மழை விழும்போது எதிலென்னைக் காப்பாய்
பூவின் கண்ணீரை ரசிப்பாய்.
நான் என்ன பெண்ணில்லையா? என் கண்ணா
அதை நீ காணக் கண்ணில்லையா?
உன் கனவுகளில் நானில்லையா?

ரகுமான் தன் வாழ்க்கையில் ஒவ்வொரு படியும் ஏறும்போதும் நம்மையும் கூட்டிப்போனார். அவர் கூட்டிப்போய் காட்டிய பிறகு தான் நமக்கு இந்தி இசை தெரிந்தது. கஸல், இந்துஸ்தானி, சூபி என்ற இசைவடிவங்களை ரசிக்கக் கற்றுக் கொண்டோம். அப்படியே கைப்பிடித்து மேற்கத்திய இசையையும் கொஞ்சம் கோடி காட்டினார். ஷானியாவையும், கோர்ஸையும் ஏன் மைக்கல் ஜாக்சனின் மெலடிகளைக் கூட ரகுமான் திறந்துவிட்ட பாதைக் கூடாக பயணித்தே ரசித்தோம். அதனாலேயே அவர் வெற்றிபெறும்போது அது எங்கள் வெற்றி போல, நாமே அடைந்த வெற்றி போல படுகிறது. இவரை வெறுப்பதற்கு பயங்கர கெட்டவனாக இருந்தால் மாத்திரமே முடியும்!

The Spirit of Music நூலிலே ரகுமானிடம் நஸ்ரின் சில முக்கியமான கேள்விகளை கேட்கிறார்.

“ஒரு மெட்டு நன்றாக இருக்கிறது என்று இயக்குனர் சொன்னால், அதையேன் பின்னர் மேலும் மேலும் திருத்துகிறீர்கள். அப்படியே விடவேண்டியது தானே?”

அதற்கு ரகுமானின் பதில்.

“ஒரு அப்பிளை வரைகிறோம். வெறும் அப்பிள். வேறொன்றுமில்லை. ஏ போர் அப்பிள். அதே அப்பிளுக்கு கொஞ்சம் டெக்ஸ்டர் சேர்க்கிறோம். பல லேயர்களில் நிறம் தீட்டுகிறோம். அதில் ஒரு அகத்தன்மை வருமல்லவா? எல்லாக் கலைகளுக்கும் இது பொருந்தும். ஆதாரமான மெட்டை சமரசம் செய்யாமல் பலவித இசைக் கோர்வைகளை அதன்மேல் செய்யும்போது அந்த இசை மேலும் அழகுறுகிறது. காந்தமேற்றுகிறது. “Don’t listen to anything else, this is it” என்று சொல்ல வைக்கிறது”.

என்று சொல்லி சிரிக்கிறார். அடுத்த கேள்வி.

“உங்களின் பல படங்கள் கவனிக்கப்படாமலேயே போயிருக்கின்றனவே, கவலைப்பட மாட்டீர்களா?”

அதற்கு ரகுமான் சொல்கிறார்.

“கவலை வரும் தான். ஆனால் வெற்றியை விட அந்தப் பாடல்களை உருவாக்கிய அனுபவம் அலாதியானது. அங்கீகாரம் எப்போது கிடைக்கும்? என்று சொல்லமுடியாது. 1998இல் தில்சே வெளியானபோது உடனடியாக கவனிக்கப்படவில்லை. ஆனால் இப்போது உலகம் பூராக அது கேட்கப்படுகிறது. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், வெற்றியையும் தோல்வியையும் பற்றியே நினைத்துக்கொண்டு இசையமைத்தால் நாங்கள் படைப்பில் அதிகப்படியாக அவதானத்துடன் இருந்து விடுவோம். பரிசோதனை முயற்சிகளைச் செய்யமாட்டோம். அது இசையில் இருக்கும் ஒருவித இன்னசன்ஸ் தன்மையை இல்லாமல் செய்துவிடும். எளிமையை தொலைத்துவிடுவோம். அதை தொலைக்காமல் இசையமைக்கவேண்டும. ஒருநாள் மைக்கல் அஞ்சலோ தன் ஓவியத்தின் பின்புறத்தை நிறம் தீட்டிக்கொண்டிருந்தாராம். அதைப்பார்த்த ஒருவர் யாருமே பார்க்காத ஒருபகுதியை எதற்கு நிறம் தீட்டுகிறீர்கள்? என்று கேட்க, அது யார் பார்க்காவிட்டாலும் கடவுள் பார்ப்பாரே என்றாராம் அவர்”

அது தான் ரகுமான். அவர் இதற்கு மேலும் சிறந்த இசை ஒருவனால் தரமுடியுமா? என்னுமளவுக்கு அவர் ஒரு உயரத்தை எட்டுவார். பின் அவரே அதற்கு மேலே ஒரு சிகரத்தை உருவாக்கி ஏறத் தொடங்குவார். அது அவரது உலகம். அங்கே யாருக்கும் அவர் தன்னை நிரூபித்துக்கொள்ளவேண்டிய தேவை கிடையாது. அவருக்கு தேவை purity. ரகுமானும் ஸ்டீவ் ஜோப்சும் ஒன்றிணையும் புள்ளி இது. Mac கணனியின் உள்ளே இருக்கும் வயர்கள், அதன் நிறங்கள் கூட படிமமாக, அமைப்பாக, ஒழுங்காக இருக்கவேண்டும் என்பதற்காக நீண்ட நேரத்தை ஸ்டீவ் செலவிடுவார். அதனாலேயே இவர்கள் perfectionists என்று அழைக்கப்படுகிறார்கள். தம் படைப்பு நேர்த்தியாக வருவதற்கு எந்த எல்லை வரையும் போகக் கூடியவர்கள். இது நமக்கெல்லாம் பாலபாடம். நாம் ரகுமான் அல்ல. ஸ்டீவ் ஜொப்ஸ் கிடையாது. ஆனால் அவர்கள் காட்டிய நல்ல வழியை பின்பற்றுவதில் தப்பில்லை. ஆதாரமான திறமையை மேலும் மேலும் செதுக்கி அலாதியாக்குவதை இவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

இசையமைப்பாளரை விடுங்கள். நல்ல மனிதராய் ரகுமானைப்போல எத்தனை பேரை உலகத்தில் காணமுடியும்? நல்லவனாக, பண்பாளனாக நடிப்பது ஒருவகை. நல்லவனாகவே இருப்பது இன்னொரு வகை. ரகுமான் இதில் இரண்டாம் வகை. எவரையுமே குறைத்து மதிப்பிடமாட்டார். அதை மனப்பூர்வமாக செய்வார். இந்த மனிதரிடம் இசையை மட்டுமல்ல எப்படி வையத்தில் வாழ்வாங்கு வாழவேண்டும் என்பதையும் படிக்கலாம். திருக்குறள் எல்லாம் தேவையே இல்லை.

மிதிலையில் இராமன் வீதிவலம் வரும்போது கம்பரின் ஒரு பாட்டு இருக்கிறது. தோள் கண்டார் தோளே கண்டார். தாள் கண்டார் தாளே கண்டார் என்பது போல. எனக்கு ரகுமானின் ஒவ்வொரு பாடல்களை பற்றியும் எழுதவேண்டும் போல இருக்கிறது. ஆனால் முடியாது. எவ்வளவு எழுதினாலும் எல்லாமே தப்பிப்போவது போல ஒரு எண்ணம். என்ன ஆகப்போகிறது. எழுதுவோமே? எவ்வளவு எழுதினாலும் போதவில்லை. எழுதிக்கொண்டே போகலாம். விடியாத இரவு முழுதும் இவர் இசையோடு சேர்ந்து எழுதிக்கொண்டே இருக்கவேண்டும்.

எத்தனை இரவு?
உனக்காக விழித்திருந்தேன்.
உறங்காமல் தவித்திருந்தேன்
விண்மீன்கள் எரித்திருந்தேன்.

மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்?

*************************************   இப்போதைக்கு முற்றும் *****************************************

பாகம் 1
பாகம் 2


தொடர்புடைய பதிவுகள்.

The sprit of music – A R Rahman
ஏகன் அனேகன்.
என் பதின்மத்து இளையராஜா

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட