மரணத்தின் பின் வாழ்வு.

Mar 6, 2014 11 comments

 

July_1983

“டொப்…” …

முதல் வெடி. பின்புறமாக. உரிக்கும்போது செட்டையை படக் படக்கென்று அடிக்கும் கோழி போல கைகள் இரண்டையும் அடித்துக்கொண்டு விழுகையில், இரண்டாவது வெடி. இம்முறை முதுகில்.  ஒரு அடி எட்டி வைத்திருப்பான். மூன்றாவது வெடி. பிடரியில்.

உதயன் இறந்துவிட்டான்.

காகங்கள் சூட்டுச்சத்ததுக்கு வானத்துக்கு எழுந்து கரைந்தன. நிமிட நேரத்தில் அடங்கின. அக்கம் பக்கங்களில் பேச்சுச்சத்தம் மீண்டும் தொடங்கியது. மீன்காரன் ஹோர்ன் அடித்தான். பஸ்கள், வாகனங்கள் இரைய தொடங்கின. நகரம் பழையபடி வழமைக்கு திரும்பியது.  உதயனின் வீட்டில் அழுகை ஆரம்பித்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்தது. அவர்கள் கண் முன்னாலேயே, அவர்கள் சுதாரிக்கும் முன்னரேயே. அவர்கள் என்றால், உதயனனின் அம்மா, அப்பா அப்புறம் மனைவி கௌரி. எல்லோர் முன்னிலையிலும் சுட்டுப்போட்டார்கள். முதலில் அவனை மெதுவாக நடந்து போ என்றார்கள். இரண்டு அடிக்கு ஒருமுறை நிற்கசொன்னார்கள். குடும்பஸ்தன். கொல்லமாட்டார்கள். உதயனை விடுவிக்கிறார்கள் என்றே கௌரியும் நினைத்தாள். அம்மாவும் அப்பாவும் கூட நினைத்தார்கள். துவக்கு ரேஞ்சுக்கு வசதியாக இருப்பதற்காக தான் அவனை நடக்கச் சொன்னார்கள் என்று பாவம் அதுகளுக்கு விளங்கவில்லை. அவன் இறந்தபின்னர், பிரேதத்தை இழுத்து வாகனத்துக்குள் எறிந்தார்கள். என்ஜினை ஸ்டார்ட் பண்ணி புறப்பட்டு போனார்கள். அவ்வளவு தான். பிரேதத்துக்கு என்ன ஆனது தெரியவில்லை? ஏன் கொன்றார்கள் தெரியவில்லை? கொன்றார்களா? என்று கேட்டால் கூட, யார் உதயன்? என்றார்கள்.  அவ்வளவு தான்.

சில நாட்களில் அந்த ஊரின் குளத்தடியில் உதயன் ஞாபகமாக அவன் தோழர்கள் ஒரு நினைவுக்கல் நாட்டினார்கள்.

**********

வாசிப்பதை நிறுத்திவிட்டு கண்ணை மூடி யோசியுங்கள். இந்தக்கதை கேள்விப்பட்ட கதையாக இருக்கிறதா? நாங்கள் கேள்விப்படாத கதையா என்ன? எண்பதுகளில் எங்கள் ஊர்களில் நிதம் நடந்தது. ஜேவிபி கிளர்ச்சி காலத்தில் இலங்கை முழுதும் நிகழ்ந்தது. இந்திய இராணுவத்தின் காலத்தில் நிகழ்ந்தது. புலிகள் காலத்தில் நிகழ்ந்தது. ஸ்ரீலங்கா இராணுவத்தின் காலத்தில் நிகழ்ந்தது. இறுதிப்போரில் நிகழ்ந்தது. இன்றைக்கும் நிகழ்கிறது. நாட்கள், திகதிகள், பெயர்கள் மாறலாம். இரண்டு விஷயங்கள் மட்டும் மாறவில்லை. சுடுபவனும் சுட்டுக்கொல்லப்படுபவனும். கொல்வதற்கும் கொல்லப்படுவதற்கும் எப்படியோ ஒரு காரணம் இருக்கும். காரணமே இல்லாமலும் கூட இது நிகழும். புதிதில்லை. தினம் பத்திரிகைகளில் வருவது. நாம் பார்ப்பது. ச்சோ கொட்டுவது. இரங்கல் செய்வது. கண்ணீர் அஞ்சலி, கவிதை, துளி கண்ணீர். எல்லாமோ செய்திருக்கிறோம். ஆனால் இதற்கு மேலே நமக்கு என்ன தெரியும்? கொலையை நேரில் பார்த்த கௌரி அப்புறம் என்ன ஆனாள்? உதயனின் தாய் என்ன ஆனாள்? தந்தை? உதயனுக்கு ஒரு அண்ணன் இருந்தானே? இந்தப்புரட்சியே வேண்டாம் என்று அமெரிக்காவுக்கு போனானே? அவன் இதனால் பாதிக்கப்பட்டானா? குளத்தடியிலே நினைவுக்கல்லுக்கு கீழே தூர்ந்து போய்க்கிடக்கும் உயிருக்கு பின்னாலே அவனுடைய தொலைக்கப்பட்ட வாழ்க்கை மட்டுமா இருக்கிறது? அவன் குடும்பமே சீர் குழைந்து அல்லவா போகிறது. அதை எண்ணிப்பார்க்கிறோமா? 94ம் ஆண்டில் ஏதோ ஒரு ஈழநாதத்தில் மேலே வீரவேங்கை என்று சொல்லி ஒரு பால் மணம் மாறாத இளம் மீசை இளைஞனின் படம் போட்டு அஞ்சலி. கீழே குடும்பத்தினர் கொடுத்த மரண அறிவித்தல். ஏகபுதல்வன் வீரமரணமடைந்தான் என்று பெற்றோரும் உற்றோரும் கலங்கியதான செய்தி. அந்த பெற்றோர்கள் என்ன ஆனார்கள்? இப்படி எத்தனையாயிரம் பேர். யாரென்றே தெரியாத, பெயர்கள் கூட பதியப்படாத இளைஞர்கள். அவர்களை குடும்பத்தில் இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள் இழப்பால் அந்த குடும்பத்துக்கு என்ன நிகழ்ந்தது. இந்த நாடு, சுதந்திரம், ஜெனீவா, புரட்சி, கவிதை எல்லாவற்றையும் அப்புறம் பார்ப்போம். அந்த வீட்டின் கதவைத் தட்டி அப்புறம் என்ன நிகழ்ந்தது என்று கேட்கவேண்டும்.

உதயனின் வீட்டுக்கதவை இப்போது தட்டித்திறந்து ஆராயப்போகிறேன். கூடவே வருகிறீர்களா?

******************

இடம் கல்கத்தா. காலம் அறுபதுகள்.

Capture

சுபாஷ். உதயன். அண்ணன் தம்பிகள். தம்பிக்காரன் எப்போதுமே ஒரு தேடலுடன் திரிபவன். உலகத்தில் சமவுடமை வேண்டும் என்று அலைபவன். அதற்காக போராடுபவன். ரெபல். சுபாஷ் கொஞ்சம் பயந்த சுபாவம். அமைதியானவன். எதற்கு வீண் சோலி? என் வேலையை பார்த்துக்கொண்டு போகிறேனே என்று நினைக்கின்ற சாமான்ய குணம் நிறைந்தவன். இயல்பாகவே துறுதுறுப்பான இளையவனைத் தான் எல்லோருக்கும் பிடிக்கும். அவன் குழப்படி செய்தாலும் திட்டமாட்டார்கள். ஒருமுறை வீட்டு முற்றத்துக்கு சீமெந்து போடுகிறார்கள். யாரும் கால் மிதிக்கவேண்டாம். காயவில்லை என்று சொல்லிவிட்டு மேசன் போய்விடுகிறார். சுபாஷ் கவனமாக கால் மிதிக்காமல் சுற்றி சுற்றியே வீட்டுக்குள் போனான். சின்னவனோ வேண்டுமென்றே ஏறி மிதித்து ஓட, பசுந்தான சீமெந்து தரையில் அவன் கால்பாதங்கள் பதிந்து கல்வெட்டு போல. அப்பா உதயனுக்கு அடிபோடுவார் என்று சுபாஷ் நினைத்தான். ஆனால் அப்பா சிரித்தார். தன் பையனின் கால்தடம் காலத்துக்கும் இந்த வீட்டில் நிலைத்து நிற்கும் என்றார்.

நின்றது.

images (1)அண்ணன் தம்பி இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழமுடியாது. அறுபதுகளில் கல்கத்தாவின் கிராமப்புறங்களில் எழுச்சிபெற்ற நக்சல்பாரி இயக்கத்தில் உதயன் அங்கத்தவனாகிறான். இந்த பொல்லாப்பே வேண்டாமென்று சுபாஷ் அமெரிக்காவுக்கு உயர்கல்வி படிக்கப்போகிறான். அண்ணன் தம்பிகளுக்கிடையே கடிதத் தொடர்பு நிகழ்கிறது. ஒருவரை பிரிந்து மற்றவரால் இருக்கமுடியாது. குணங்கள் மாறினாலும் சகோதரபாசம் இல்லாமல் போய்விடுமா என்ன?

ஒருநாள் உதயன் சுபாஷுக்கு போட்டோ ஒன்றை அனுப்புகிறான். புட்டிக்கண்ணாடி போட்டு, கொஞ்சம் திமிருடன், நிமிர்ந்து பார்த்து சிரிக்கும் பெண்ணின் போட்டோ. தத்துவவிஞ்ஞானத்தில் உயர்கல்வி படிக்கும் பெண்ணாம். புத்தகப்பூச்சியாம். ஆங்கில மீடியம். புரட்சிக்கருத்துகள் கொண்டவள். தனக்கு பிடித்திருக்கிறது. பெயர் கௌரி என்கிறான். கடிதத்தின் இறுதியில்,  இருவரும் மணம் முடித்துவிட்டதாகவும் சொல்கிறான். வீட்டில் சம்மதிக்கவில்லை. ஓடிப்போய் கல்யாணம் செய்தாலும் இப்போது மொத்தக்குடும்பமும் ஒற்றுமையாகி விட்டது  என்கிறான்.

அமெரிக்காவில் சுபாஷுக்கு தனிமை வாட்டுகிறது. அண்ணனுக்கு முன்னமேயே தம்பி தன் துணையை தேடியதை அவன் ஆழ்மனதால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னதான் இணைபிரியா சகோதரர்கள் என்றாலும் சின்னவயது முதல் தம்பிக்கு முன்னாலே, தான் இரண்டாம் பட்சமாக கவனிக்கப்படுகிறோமோ என்கின்ற தாழ்வுணர்ச்சி சுபாஷிடம்.

Kal-Penn-as-Gogol-Nikhil-in-The-Namesake-kal-penn-12716623-1024-576

அவன் ஒருநாள் கடற்கரை பக்கம் உலாவுகையில், ஹோலி என்கின்ற வெள்ளைக்காரப் பெண்ணை சந்திக்கிறான். அவளுக்கு பத்துவயதில் ஒரு மகன் இருக்கிறான். சுபாஷை விட பத்து வயது மூத்தவள். கணவனை பிரிந்து வாழ்பவள். இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது. அது கொஞ்சம் கொஞ்சமாக படுக்கை வரை முன்னேறுகிறது. சுபாஷின் முதல் உடலுறவு தன்னைவிட பத்துவயது முதிர்ந்த, ஒரு சிறுவனுடைய தாயுடன் நிகழ்கிறது. அவளது மகன் வார இறுதிகளில் தகப்பனோடு  போய்விடுவான். சுபாஷ் ஹோலி வீட்டுக்கு போவான். ஒருகட்டத்தில் ஹோலி மீண்டும் தன் கணவனோடு சேர்ந்துவிட, சுபாஷ் மீண்டும் தனியனாகிறான். மீண்டும் தோற்கடிப்பட்ட உணர்வுடன் கூடிய தனிமை. தன் வாழ்க்கையை மற்றவர்களே தீர்மானிக்கிறார்கள் என்று பொருமல். அந்த சமயத்தில் தான் கல்கத்தாவிலிருந்து ஒரு தந்தி வருகிறது.

“உதயனை கொன்றுவிட்டார்கள் .. உடனே வரவும்”

**************

கல்கத்தா போகிறான். போகும்போது சாவு முடிந்து நாட்களாகிவிட்டன. கௌரியை அப்போது தான் முதன்முதலில் சந்திக்கிறான். அவளை வீட்டில் ஒதுக்கி வைக்கிறார்கள். கணவன் இறந்ததால் அவள் அசைவம் சாப்பிடக் கூடாது. வெள்ளைப்புடவை தான் உடுத்தவேண்டும். இப்படி கட்டுப்பாடுகள் அவளுக்கு. சுபாஷின் தாயும் தந்தையும் மகனின் இழப்புக்கு பின்னர் பேயறைந்தவர்கள் போல திரிகிறார்கள். வீட்டின் நடுவே உதயனின் படம் மாட்டப்படுகிறது. குழந்தை பிறந்ததும் கௌரி குழந்தையை கொடுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிடவேண்டும் என்று தாய் சொல்கிறாள். “தாயை பிள்ளையிடம் இருந்து பிரிக்க நினைக்கிறீர்களே?” என்று இவன் கேட்க, “அவள் குணத்துக்கு குழந்தையை வளர்க்க மாட்டாள்” என்கிறாள் அவள். சுபாஷ் குழம்பிப் போகிறான். கௌரியை இந்த சதுப்பு நிலத்திலிருந்து மீட்பதற்கு ஒரே வழி அவளை அமெரிக்கா அழைத்துச்செல்வதே என்று நினைக்கிறான். என்னை திருமணம் செய்கிறாயா? என்று கௌரியிடம் கேட்க, ஆச்சரியத்தக்க வகையில் அவளும் மறுக்கவில்லை.  சுபாஷும் பிள்ளைத்தாச்சி கௌரியும் அமெரிக்கா வருகிறார்கள்.

**************

hqdefaultகௌரி தன்னை திருமணம் முடித்தது கல்கத்தாவின் கோரப்பிடியில் இருந்து தப்பவே என்று நாளடைவில் சுபாஷுக்கு தெரியவருகிறது. அவளுக்கு எதிலுமே பிடிமானம் இல்லை. அவள் அறையிலேயே ஒடுங்குவாள். இவன் அவள் அருகில் நெருங்கும்போதெல்லாம் வயிற்றில் உள்ள பிள்ளையை காரணம் காட்டி விலத்துவாள். அவளுக்கு கல்கத்தா ஞாபகங்கள் எல்லாவற்றையும் துடைத்து எறியவேண்டும் என்ற எண்ணம். உதயனின் நினைவு வேண்டவே வேண்டாம். அவன் இறந்த காட்சியை மறக்கவேண்டும். அதற்கு தடையாக இருப்பது சுபாஷும் வயிற்றில் வளரும் இந்த பிள்ளையும், இன்னமுமே இந்தியப்பெண்ணாக இருக்கும் அவளை அடையாளம் காட்டும் அவள் தோற்றமும் தான். சுபாஷை பிரிந்து அவளால் தனியே சமாளிக்க முடியாது. பிள்ளை இன்னமும் பிறக்கவில்லை. ஒருநாள் தலைமயிரை குட்டையாக வெட்டுகிறாள். மார்புகள் தெரிய பிளவுசும் டைட்டாக ஜீன்சும் போடுகிறாள்.

குழந்தை பிறக்கிறது. பெண் குழந்தை. பெயர் பெல்லா. அந்த பெயரையும் சுபாஷே ரசித்து ரசித்து வைக்கிறான். தம்பியின் பிள்ளைக்கு தகப்பனாகிறான். பெல்லா பிறந்த பிறகும் கௌரியின் போக்கில் எந்த மாறுதலும் இல்லை. அதே விட்டேத்தி தன்மை. அதற்கு உதயனின் இழப்புத் தான் காரணமா? என்றால் இல்லை. அவளிடம் இருந்தது ஒருவித கோபம். என்ன மயித்துக்கு இப்படி கட்டிய மனைவியை தவிக்கவிட்டுவிட்டு செத்துப்போனான்? என்கின்ற கோபம்.

உதயன் மரணத்துக்கு ஒரு உடனடிக்காரணமும் இருந்தது. ஒரு பொலீஸ்காரன் தன் பிள்ளையை பாலர்வகுப்பில் இருந்து வீட்டுக்கு அழைத்துச்செல்லும்போது உதயன் தான் அந்த பொலீஸ்காரனை குத்திக்கொன்றான். புரட்சி. பெற்ற பிள்ளை பார்த்துக்கொண்டிருக்க முன்னே தகப்பனை, கதறக் கதற குத்திக்கொல்கிறான். கொலைக்கு கௌரியும் உடந்தை. பிள்ளையை கூட்டிக்கொண்டு போகும்போது அந்த பொலீஸ்காரன் துப்பாக்கி வைத்திருக்கமாட்டான் என்பதை அவள் தான் துப்புத்துலக்கி உதயனுக்கு சொன்னவள். இப்போது அந்த போலீஸ்காரனின் குடும்பத்துக்கும் ஒரு கதை இருக்குமில்லையா. அந்தக்கதவை ஒருநாள் கௌரி போய் தட்டுகிறாள். நாம் தட்டவேண்டாம்.

******************

Lahiri1

பெல்லாவுக்கும் சுபாஷுக்குமிடையே அபரிமிதமான ஒரு பாசம் உருவாகிறது. பெல்லாவுக்கு சுபாஷ் தான் எல்லாமே. கௌரி அவளை கணக்கே எடுக்கமாட்டாள். சுபாஷின் மீதும் எந்தவித பாசமோ, காதலோ கௌரிக்கு ஏற்படவே இல்லை. மீண்டும் தத்துவ விஞ்ஞானம் படிக்க ஆரம்பிக்கிறாள். அதிலேயே நேரம் கடத்துகிறாள். பிள்ளையோடு நேரம் செலவிடுவதில்லை. சுபாஷோடு பேசுவதே குறைவு. ஆனால் உடலுறவுக்கு இப்போது அனுமதிக்கிறாள். அப்போதும் கூட மனதில் உதயனையோ, அல்லது பல்கலைக்கழகத்தில் தன்னை உற்றுநோக்கிய விரிவுரையாளரையோ மனதில் வைத்துக்கொண்டே சுபாஷோடு உடலுறவு கொள்வாள்.

சுபாஷின் தகப்பன் இறந்து போகிறார். செத்தவீட்டுக்கு சுபாஷும் பெல்லாவும் வருகிறார்கள். சுபாஷின் தாய் அறளை பேர்ந்தவள் போல வாழுகிறாள். சுபாஷை பார்க்கும்போதெல்லாம் அவளுக்கு உதயன் ஞாபகம். கூடவே அவன் இப்படி இறந்தானே என்கின்ற ஏக்கமும் கோபமும். கொஞ்சம் சுபாஷை வெறுக்கவும் செய்கிறாள். சுபாஷும் பெல்லாவும் அமெரிக்கா திரும்பியபின்னர், தாயோ தனியாக இருந்து விசரி போல தினமும் அந்த சதுப்பு நிலத்துக்கு சென்று உதயனின் கல்லறையை சுத்தம் செய்கிறாள். குளக்கரையில் ஆட்கள் கொண்டுவந்து போடும் குப்பைகள் தினமும் அந்த கல்லறையை மூடிவிடும். இவள் வெற்றுக்கைகளால் அவற்றை பொறுக்கி வீட்டுக்கு கொண்டுவருவாள். சிலவேளைகளில் சாப்பிட்ட வாழை இலைகள். சிலவேளைகளில் பழைய ஊத்தை பேப்பர், துணிகள். சானிடரி நாப்கின்கள். சேகரித்து வீட்டில் கொண்டுவந்து வைக்கலானாள். அவள் வாழ்க்கை அப்படியே போனது.

************

சுபாஷும் பெல்லாவும் அமெரிக்கா திரும்பி, அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் கௌரியை காணவில்லை. கடிதம் எழுதிவைத்துவிட்டு கலிபோர்னியாவுக்கு ஓடிவிட்டாள். அங்கே விரிவுரையாளர் வேலை. காசு வந்துவிட்டதால் சுபாஷ் இனி தேவையில்லை. பெல்லாவை சுபாஷ் பார்த்துக்கொள்வான். உதயன் சார்ந்த அத்தனை நினைவுகளும் இப்போது அவளிடம் இல்லை. அங்கேயும் விட்டேத்தியான வாழ்க்கை. இரண்டு மூன்று தத்துவஞான புத்தகங்கள். விரிவுரை. மாணவி ஒருவருடன் லெஸ்பியன் உறவு என்று அவள் வாழ்க்கை தறிகெட்டு பறக்கிறது.

miranda-and-her-lover

தாய் பிரிந்துபோனதன் குரூரம் பெல்லாவுக்கு முதலில் தெரியவில்லை. வளர வளர அது அவளை உளவியல் ரீதியாக பாதிக்கத்தொடங்குகிறது. பருவம் எய்துகிறாள். தாயின் அருகாமையை, தாயை அதிகம் வேண்டுகின்ற வயது. தாய் தன்னைவிட்டு ஓடிப்போனது அவளை ஒரேயடியாக வாட்டத்தொடங்குகிறது, வகுப்பில் பின் தங்குகிறாள். தந்தையிடம் இருந்து மனதளவில் விலகிச்செல்கிறாள். வேளாண்மை படிக்கிறாள். கொஞ்சம் புரட்சிக்கருத்துகள் உதயனை போலவே அவளுக்கும். நாடோடி போல அலைகிறாள். கண்டவனோடும் செக்ஸ். கண்ட இடத்தில் தங்குதல் என்று இளம் வயதிலேயே அவள் வாழ்க்கை சிதறுகிறது.

சுபாஷுக்கு இப்போது அறுபத்துச்சொச்ச வயது. கௌரியின் பிரிவுக்கு பிறகு மீண்டும் தோற்கடிக்கப்பட்டவனாக உணர்கிறான். இன்னொரு வாழ்க்கை வேண்டாமென்று முடிவெடுத்து ஒருந்தவனுக்கு இந்த வயதில் ஒரு நட்பு. அவள் பெயர் எலிஸ். அவளுக்கும் அறுபது வயது இருக்கலாம். அவள் கணவன், சுபாஷின் நண்பன் இறந்துபோன பின்னர் உருவான நட்பு. இருபது வயதில் இருவரும் சேர்ந்து ஐந்து நிமிடம் கூட கதைத்தே இருக்கமாட்டார்கள். அவ்வளவு வேற்றுமைகள் நிறைந்தவர்கள். வயோதிபமும் தனிமையும் அவர்களை ஒன்று சேர்க்கிறது. இருந்தாலும் ஒரே வீட்டில் வாழ்வதில்லை. கூட எங்கேயாவது காற்று வாங்க போவார்கள். பேசுவார்கள். ஒரு ஆதரவான அணைப்பு அவ்வப்போது. அவ்வளவே.

***************

நாடோடியான பெல்லா ஒருநாள் சுபாஷ் வீட்டு கதவை தட்டுகிறாள். ஆச்சர்யம் சுபாஷுக்கு. இனிமேல் இங்கே தான் இருக்கப்போகிறேன் என்கிறாள். சந்தோஷம் கலந்த ஆச்சர்யம் சுபாஷுக்கு. அடுத்ததாக தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்கிறாள். தந்தை யார் என்று கேட்டதற்கு, “அது தெரியவேண்டியதில்லை. எனக்கு குழந்தை மாத்திரமே தேவை” என்கிறாள். தன் தாயின் செயலால் தனக்கு குடும்ப வாழ்க்கையில் நம்பிக்கை அறவே போய்விட்டது என்கிறாள். சுபாஷுக்கு அதிர்ச்சி. கௌரியும் அப்படித்தானே அவன் வாழ்க்கையில் வந்தாள். இப்போது பெல்லாவும். ம்ஹூம்.

ஒருநாள் சுபாஷ் பெல்லாவும் தான் அவளின் நிஜமான தந்தை இல்லை என்று சொல்கிறான். அவள் கோபத்தில் அவனை திட்டுகிறாள். ஏன் எனக்கு இதை மறைத்தீர்கள்? என்று அழுகிறாள். வீட்டை விட்டு வெளியேறுகிறாள். சில நாட்களில் மீண்டும் அங்கேயே திரும்புகிறாள். அவளுக்கு சுபாஷின் அருகாமை தேவை. குழந்தை பிறக்கிறது. பெயர் மேக்னா.

பெல்லாவுக்கும் ஒரு பண்ணைவீட்டுக்காரனுக்கும் நட்பு வருகிறது. இருவரும் உறவு கொள்ளத் தொடங்குகிறார்கள். இருந்தும் பெல்லா சுபாஷோடு தங்குவதையே விரும்புகிறாள். மேக்னா பிறந்தபின்னர் தான் சுபாஷின் உண்மையான பாசம் தனக்கு புரிய ஆரம்பித்தது என்கிறாள். சுபாஷ் முன்னர் பெல்லாவை கவனித்தானோ அதே போலவே பெல்லாவின் மகள் மேக்னாவையும் கவனிக்கிறான்.

ஒருநாள் கௌரிக்கு சுபாஷிடம் இருந்து கடிதம் வருகிறது. அவசர அவசரமாக ஓடியதால் ஒழுங்காக விவாகரத்து பெறவில்லை. வீடும் அவள் பெயரில் இருக்கிறது. கல்கத்தா வீட்டிலும் அவளுக்கு உரிமை இருக்கிறது. இதிலிருந்து அவளை விடுவித்து எழுதப்பட்ட பத்திரத்தில் கையெழுத்து இடுமாறு கேட்டு வந்த கடிதம். கௌரி பத்திரத்தில் கை எழுத்து போட்டுவிட்டு, நேரிலேயே கொண்டுபோய் கொடுக்கலாம் என்று பொஸ்டனுக்கு பயணிக்கிறாள். சுபாஷின் வீட்டுக்கு போகிறாள்.

பெல் அடிக்கிறது. பெல்லா தான் கதவை திறந்தவள் கௌரியை கண்டதும் அதிர்ந்து போகிறாள். சுபாஷ் அப்போது அங்கே இல்லை. அவளுக்கு தாயை கன்னத்தைப் பொத்தி அறையவேண்டும் போல இருந்தது. மேக்னாவிடமும் அன்ரி என்றே அறிமுகப்படுத்துகிறாள். மகளை தோட்டத்துக்குள் விளையாட போகுமாறு சொல்லிவிட்டு கௌரியை பயங்கரமாக திட்டுகிறாள். “என்னைப்பொறுத்தவரையின் உதயனைப்போலவே நீயும் இறந்துவிட்டாய்” என்று ஒருமையில் இருவரையுமே விளிக்கிறாள். உண்மை தானே? அவள் என்ன பாவம் செய்தாள்? தாயும் தந்தையும் தங்கள் சுயநலத்துக்காக குடும்பத்தை கிஞ்சித்தேனும் நினைக்காத பாவிகள் அல்லவா?

கௌரி பெல்லாவின் கோரத்தாண்டவத்தை எதிர்கொண்ட பிறகு உடைந்து போனாள். என்ன மாதிரி மனிசி நான்? விசர் பிடித்தது அவளுக்கு. எல்லாமே காலம் கடந்துவிட்டது. அவள் கோபம் வழமை போல உதயனிடம் திரும்பியது. எதுக்காக? எதுக்காக என்னை காதலித்தான்? மணம் முடித்தான்? தன் போராட்டத்துக்கு என்னை பயன்படுத்தினான்? உயிருக்கு உத்தரவாதம் இல்லாதபோது குழந்தையை கொடுத்தான்? செத்தான்? சுபாஷ் மீது கொஞ்சம் கழிவிரக்கமும் வந்தது.

இன்டர்நெட்டில் உதயனை பற்றி தேடிப்பார்க்கிறாள். ம்ஹூம். ஒரு தகவல் கூட இல்லை. ஒரு மாவீரனை பற்றி ஒரு விக்கிபீடியா தகவல் கூடவா இல்லை? என்ன மாதிரியான போராட்டம் இது? அது சரி. யானைகளின் போராட்டத்தில் இறந்த எறும்புகளை எவர் எண்ணிப்பார்ப்பார்? பெயரையா விசாரிக்கப்போகிறார்கள்? உதயன் என்ற ஒரு போராளி இறக்கும்போது அதுவே செய்தியானது. இப்போது இறந்து நாற்பது வருடங்களில் அவனைப்பற்றி ஒரு தடயமும் இல்லை. அவன் விட்டுச்சென்ற குடும்பத்தின் வாழ்க்கையும் அந்த கோரச்சதுப்பு நிலத்தில் அகப்பட்டு திக்கிமுக்காடி சிக்கிப்போய்க் கிடக்கிறது.

***************

when-your-parent-with-alzheimers-goes-wandering_93817238-1

கௌரி அடுத்தகணமே போட்டது போட்டபடியே கொல்கொத்தா திரும்ப முடிவெடுக்கிறாள். அவர்கள் வாழ்ந்த ஊருக்கு போகிறாள். ஊர் நிறையவே மாறியிருந்தது. அவ்வப்போது நக்சல் இயக்கமும் குண்டுவைப்பதாக கேள்விப்பட்டாள்.  அவர்கள் இருந்த வீட்டில் ஒரு மாடி கூடியிருந்தது. யாரோ குடியிருந்தார்கள். மனிதமுகங்கள் மாறியிருந்தன. ஆனால் மனிதர்கள் மாறவில்லை. அதே கட்டாக்காலி நாய்கள், காகங்கள், மீன் காரன். ரிக்ஷாக்காரன். இப்போது செல்போன் புதிதாக. அவ்வளவே.

உதயன் கொல்லப்பட்ட இடமும் உருமாறி, அவள் கொஞ்சம் தள்ளிநின்று அதைப்பார்த்தாளே, எல்லாமே சுவடு இல்லாமல் மாறியிருந்தது. யாருக்காவது இங்கே என்ன நடந்தது என்று தெரியுமா? கேட்டுக் கூச்சலிட வேண்டும் போல ….

கௌரி குளத்தடியில் உதயனுக்காக தோழர்கள் நட்ட கல்லறையை தேடிப்போகிறாள். அவனின் தாய் இறந்தபின்னர் எவருமே அதை பராமரிக்கவில்லை. அந்த கல்லறையை நட்டவர்கள் எங்கே போயிருப்பார்கள். யார் இப்போது அதை பராமரிப்பார்கள்? நினைத்துக்கொண்டே போகிறாள். அந்த இடத்தை கண்டுபிடிக்கமுடியவில்லை. எங்கே தேடி அலைந்தாலும் ம்ஹூம். ஒரு வயோதிபரிடம் கேட்கிறாள். அப்போது தான் விஷயம் பிடிபடுகிறது. அந்த குளமே இப்போது இல்லை.  சதுப்பு நிலத்தையும் நிரவிவிட்டார்கள். குடிமனைகள் எழுந்துவிட்டன. அந்த கட்டடங்களுக்கு கீழே எங்கோயோ, ஏதோ ஒரு அத்திவாரத்துக்கு கீழே ஒரு கல்லாய் உதயனின் கல்லறை. அந்த கல்லறையை தினம் சுத்தப்படுத்திய அந்த விசர் பிடித்த தாயின் கைரேகைகள்.. தாண்டுபோய்க்கிடக்கும். கௌரி, சுபாஷ், பெல்லா, மேக்னா, அம்மா, அப்பா, அந்த போலீஸ்காரனின் குழந்தை… வாழ்க்கையும் அப்படியே.

ஏன் உதயன்?


பிற்குறிப்பு

இது ஜூஹூம்பா லாகிரியின் சென்ற ஆண்டு வெளியான “The Lowland” என்ற நாவலின் சாராம்சம். நாவல் 330 பக்கங்கள் நீளமானது. அவ்வளவும் இந்த வாழ்க்கைகள் தான். ஏன், எதுக்கு. எப்படி இதெல்லாம் நடக்கிறது? என்று புரிந்து கொள்ள, புரிந்து கொள்ள முள்ளந்தண்டு சில்லிடும். இதில் எந்தச் சனியன் பிடித்த அரசியலும் இல்லை. இது வெறும் யதார்த்த வாழ்க்கை. டிப்பிகல் லாகிரி நாவல்.

லாகிரி எனக்கு யார் என்று மீண்டும் மீண்டும் சொல்லப்போவதில்லை. என்னை நானாக இருக்கச் சொல்லித்தந்த, ஒருவிதத்தில் எனக்கு மீண்டும் பிறப்புக் கொடுத்த தாய் அவர். அவருடைய “The Namesake” வாசித்துவிட்டு இரவுமுழுதும் விழித்திருந்து வியர்த்து வழிந்திருக்கிறேன். அடுத்த நாள் காலையில், இருபத்தேழு வருடங்களுக்கு பிறகு மீண்டும் புதிதாக பிறந்த குழந்தையை போல உணர்ந்தேன். இது நடந்தது 2007ம் ஆண்டு. லாகிரியினுடைய அத்தனை நாவல்களும் அப்படிப்பட்டவையே.  இந்த நாவலிலே எனக்கு எந்த பாத்திரத்தையும் ஆதர்சமாக பிடிக்கவில்லை. ஆனால் எல்லா பாத்திரங்களிலும் கொஞ்சம் ‘நான்’ இருந்தேன். அதுவே இந்த நாவலின் ஆழ்ந்த கருவும் கூட.

அதனால் இந்த நாவலும் வாசிப்பவருக்கு ஒரு சதுப்பு நிலமே. The Low Land.

15-jhumpa-lahiri-IndiaInk-articleInline


தொடர்புடைய பதிவுகள்

The Namesake
அரங்கேற்ற வேளை

படங்கள் முழுதும் இணையத்தில் இருந்து எடுத்தது.

Comments

 1. On reading the title, it wud be yet venture like ur "naalai inru netru"..
  But, it has read the truth.. a life..
  Thank u for yet another nice stroke in writing..

  ReplyDelete
  Replies
  1. Thank you Mayilan. Watch out for something of that genre in coming weeks. Itching now :)

   Delete
 2. கொன்னுடீங்க போங்க!!! :) - ரெண்டாவது பந்தி சதுப்பு நிலம் அல்ல - அரிவி
  Uthayan

  ReplyDelete
  Replies
  1. நன்றி உதயன்!

   //ரெண்டாவது பந்தி சதுப்பு நிலம் அல்ல - அரிவி //
   எங்கே ... தவறு ஏதாவதா? பிடிபடவில்லை.

   Delete
  2. உண்மைகளை அருவி போல கொட்டியிருகிரீர்கள் என்று சொல்ல வந்தேன்

   Delete
  3. நன்றி தலைவரே .. உடனே பிடிபடவில்லை ... உண்மைகள் அருவிபோல பாய்ந்து சதுப்பு நிலத்தில் தேங்கிவிட்டன.

   Delete
 3. எமது மண்னில் நட‌ந்தவற்றுடன் ஒத்துபோகிறது....நன்றிகள் கதைக்கு

  ReplyDelete
 4. 330 பக்க நாவலை படித்தபின் தெளிந்த நீரோடை போன்ற நடையில் இப்படியொரு சாராம்சத்தை எழுதுவது எல்லாராலும் இயலாது. எழுதிய உங்களைவிட வாசித்த நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். மிக்க நன்றி ஜே.கே. இன்று புலம் பெயர்ந்த நாடுகளில் பல தெற்காசியர்கள் பன்னாட்டு நிறுவனங்களை தலைமையேற்று நடத்துகிறார்கள், பள்ளிக்குழந்தைகள் பல சாதனைகள் புரிந்து வருகிறார்கள், இவர்களையும், இவர்களின் குடும்பத்தையும் மையமாக வைத்து நீங்கள் (கட்டுரை விட புதினம் நன்றாக இருக்கும்) எழுதலாமே.

  ReplyDelete
  Replies
  1. நன்றி மோகன் ... புதினம் எழுதத்தான் வேண்டும்... யார் தொடர்ந்து வாசிப்பார்கள் என்பது பிரச்சனை. இயலுமானவரை சிறுகதைகள் மூலம் அவற்றை கொண்டுவரவேண்டும்.

   Delete
 5. உங்கள் வாசிப்பின் மிகச்சிறந்த சாராம்சம். இதை விட வேறு வார்த்தை தேவை இல்லை. மிக நீண்ட காலத்தின்பின் மீண்டும் "The lowland" ஞாபகத்தில்....

  ReplyDelete

Post a comment

Contact Form