Skip to main content

MH 370

1500152521_1b9dadc4e3_z
சுப்புரத்தினம்,

கிராம சேவையாளர் கி/255
வட்டக்….”
“கச்சி” யை வாசிக்கக்கூட அவகாசம் கொடுக்காமல் படலையைத் திறந்துகொண்டு நுழைபவனுக்குப் பெயர் தம்பிராசா. பார்வைக்கு அறுபது. நிஜ வயதுஐம்பது. பெரும்போக விவசாயி. அவனின் ஒரே ஒரு ஏக்கர் வயல்காணி பனைமண்டிக்கு நடுவே தனித்துக் கிடப்பதால், அவன் எவ்வளவு மன்றாடினாலும், சிறுபோகத்தில் வாய்க்கால் திறந்துவிடுறாங்கள் இல்லை. முறைப்பாடு செய்து களைத்துப்போய் விட்டான். சோலி வேண்டாம் ன்று தம்பிராசா ஆடு வளர்க்கத்தொடங்கினான். ஆடென்றால் ஒன்று இரண்டு இல்லை. அது பெரிய பட்டி. எழுபது எண்பது தேறும். எண்ணக்கூடாது. எண்ணினால் தரித்திரம் பிடித்துவிடும். 

கடந்த இரண்டு நாட்களாக தம்பிராசாவின் பட்டியிலிருந்து ஆடுகள் காணாமல் போகத் தொடங்கியிருக்கின்றன. முதலில் அந்த சிவத்த செவியன் கிடாய். நேற்று இரண்டு மறிக்குட்டிகள். பட்டிக்குத் திரும்பவில்லை. இரவிரவாக தேடி, விசாரித்து; விடிய வெள்ளணை பன்னங்கண்டிப் பக்கம் தேடுவோம் என்றுபோனபோதுதான் ... 

விதானையாரின் வாசற்படி வந்துவிட்டது.
“ஐயா…..”
ஐயா; சுப்புரத்தினம் என்றால் பெயர் வைத்த தாய்வழி பூட்டனுக்கும், கந்தோர் கடுதாசிகளுக்கும் மட்டுமே அது யார் என்று தெரியும். மற்றவர்களுக்கு எல்லாம் அவர் சுப்பர், சுப்பரண்ணே, சுப்பு மாமா. என்ஜீஓகாரன் சப்பர் என்பான். மகாவித்தியாலயத்தில் புதிதாகப் படிப்பிக்க வந்திருக்கும் யாழ்ப்பாண டீச்சர் சுப்அங்கிள் என்கிறாள். சுப்புரத்தினத்தின் மனைவி திருமணமான புதிதில் அதிகாலை இரண்டு மணிக்கு சூப்பர் என்பாள். இப்போதெல்லாம் வெறும் “சூ”தான். அந்தவிஷயம் நமக்குத் தேவையில்லாதது. நமக்கும் தம்பிராசாவுக்கும் “சுப்பர்” என்ற பெயரே முக்கியமானது. சுப்பரில்லாமல் இந்தக் கதையே இல்லை. இப்போதுகொஞ்சம் ரிவைண்ட் பண்ணுவோம். 

தம்பிராசா வீட்டுவாசலுக்கு வந்துவிட்டான்.
“ஐயா..”
அவன் தயக்கமாக கூப்பிட்டபோது விதானையார், அவசர அவசரமாகத் தனது லப்டொப்பில் எக்ஸல் ஷீட் ஒன்றை நோண்டிக்கொண்டு இருந்தார். சனியன்பிடித்தது. கொலம் கொப்பி பண்ணும்போது போர்மட் மாறிவருகிறது. என்ன செய்யலாம்? தம்பிராசா மெல்ல செருமினான். விதானையார் ஒவ்வொரு செல்லாக போர்மட் பண்ணியபடியே அவனோடு பேசினார். நிமிரவில்லை.
“என்ன தம்பிராசா … மறுக்கா ஆட்ட காணேல்லையா? ஒரு ரெண்டு நாளைக்கு நல்லா தேடன் ... கிடைக்காட்டி போலீசிட்ட போலாம்”
“அதில்ல ஐயா .. இது வேற சங்கதி .. சொன்னா நம்ப மாட்டீங்கள்..”
“என்ன .. ஆட்டுக்கு பதிலா மனிசியை காணேல்லையா?”
அடித்த பகிடிக்கு தம்பிராசா சிரிக்காததால் நோண்டியான விதானையார், இன்னமும் வேகமாக எக்ஸல் ஷீட்டை நோண்ட ஆரம்பித்தார். வாசலில் ஹோர்ன்சத்தம் கேட்டது. மகள் யதுஷ்ரா. பாடசாலை சீருடை, தண்ணிப்போத்தல், இரட்டைப்பின்னல், மஞ்சள் ரிப்பன், வெள்ளைச்சப்பாத்து என்று ரெடியாகி, டபிள்ஸ்டாண்ட் மோட்டர்சைக்கிள் பின்னாலே ஏறிவிட்டாள். மேசையில் மாஜரின் பூசிய பாண்துண்டு அரைவாசி கடிபட்டு இலையான் மொய்த்தது. கந்தோருக்கு நேரமாகிறது. 

இன்றைக்கு இந்தியத் துணைத்தூதர் வருகிறார். அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும். சந்திரிக்கா டீச்சரின் காணிக்கு வீட்டு நிதியம் இன்னமும்ஒதுக்கப்படவில்லை. உறுதியில் ஏதோ பிரச்சனை. கேட்கவேண்டும். சோமரின் வளவின் பின்பக்கம் கண்டெடுக்கப்பட்ட பிரேத விஷயம் போலீஸ்விசாரணையில் இருக்கிறது. கருத்து தெரிவிக்க முடியாது. விஷ்ணு கோயிலடியில வொலிபோல் விளையாடத்தான் பெடியள் கூடினவங்கள். அது கூட்டம்இல்லை. எல்லாத்தகவல்களையும் எக்ஸல் ஷீட்டில் சரி பார்த்துக்கொண்டிருந்தார். 

தம்பிராசா கொஞ்சம் சத்தமாகவே பேசத்தொடங்கினான். 

“கறுப்பிக்குளத்தடில .. ” 

“ஹிஸ் எக்ஸலன்ஸி தெ ஹை கொமிஷனர், ஐ ஆம், கிராம சேவகா, கே255, வட்டக்கச்சி”. விதானையார் அன்றைய தின பிரசெண்டேஷனை ஒத்திகைபார்த்துக்கொண்டிருந்தார். கையோடு தன்னுடைய லெவலையும் காட்டினார். “தாங்யூ போர் தெ இண்டியன் கவர் …… ஓ எஸ் தம்பிராசா..” 

“ஐயா .. வந்து கறுப்பிக்குளத்தடில ..பிளேனு ஒண்டு இறங்கி நிக்கு” 

விதானையார் துணுக்குற்று நிமிர்ந்தார். இப்போதுதான் தம்பிராசாவை வடிவாகப் பார்த்தார். அவன் ஒரு பதட்டத்தோடேயே நின்றிருந்தான். வாராத பரட்டைத்தலை. மொட்டை பிளேட்டால் ஷேவ் பண்ணியதில் ஆங்காங்கே வெட்டுப்பட்ட முகம். வெற்றிலைப்பச்சை குத்திய பல்லிடுக்கு. ஷேர்ட் பொக்கட் மேலாலேஎட்டிப்பார்க்கும் பீடி பக்கட். போட்டிருந்த மார்டின் ஷேர்ட்டின் மேலிரண்டு தெறிகளையும் காணவில்லை. மூன்றாவதில் ஊசி குத்தியிருந்தது. சேர்ட் கீழ்ப்பகுதிசுருண்டிருந்தது. வெளிக்குப்போய் இடைநடுவில் அவசர அவசரமாகக் கழுவிவிட்டு வந்திருப்பதை ஈரச்சாரறம் சொல்லியது. நகம் வெட்டாத விரல்கள். பித்தம்வெடித்த கால்கள் என்று, வேறு எந்தக்கதை என்றாலும் இந்த இடத்தில் நீட்டி முழக்கி தம்பிராசா நின்ற நிலையை விவரித்திருக்கலாம். இப்போது அதற்குடைம் இல்லை. 

“என்ன அலம்புற?” 

“அம்மானை .. பிளேனுதான்.. கறுப்பிக் குளத்துக்கு மேக்கால, ஓவசியரிண்ட காணிக்கெண்டு தனி ரோட்டு போட்டிருக்கல்லோ..அதில …” 

அது தனபாலசிங்கம் வீதி. போன உள்ளூராட்சி எலக்சன் டைமில் அவசர அவசரமாகப்போட்ட மூன்று மைல் நீள கார்பட் ரோட்டு. தனியே ஓவசியர்தனபாலசிங்கத்தின் காணிக்கு மட்டுமே போகும் ரோட்டு அது. ஓவசியர் குடும்பம் இப்போது அவுஸ்திரேலியாவில் செட்டிலாகிவிட்டது. விதானையார்தான் பவர்ஒப் அட்டர்னி எழுதிவாங்கி, அந்தக்காணியில் ஒரு பழம்பெரும் அம்மாள்கோயில் இருந்ததாகவும், போரில் அது தரைமட்டமானதாக சொல்லி, நோர்வேநிதியத்தில் ஒதுக்கீடு எடுத்து, ஓவசியரிடமும் ஐந்து லட்சம் வாங்கி, ஆள் நடமாட்டம் இல்லாத பிரதேசத்தில் தார் ரோடு போட்டவர். அந்த ரோட்டுதான்ரஷியாவில் அவர் மகனின் மருத்துவக்கல்லூரி முதல் செமிஸ்டர் பீஸ் கட்டியது. அடுத்த செமிஸ்டர் வரப்போகிறது. கோயில்கட்ட அப்ளிகேஷன்போடவேண்டும். விதானையார் மீண்டுமொருமுறை எக்ஸல் ஷீட்டை பார்த்தார். தம்பிராசாவின் அலம்பலை பின்னேரம் பார்க்கலாம் என்றுநினைத்துக்கொண்டார். “போரினால் பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி சந்திரிக்கா அருளேஸ்வரன்… ” என்பதை அடித்து வேறு ஏதோஎழுதினார். எழுதியபடியே அவனோடு பேசினார். 

“கசிப்பு அடிச்சனியா? விடிய வெள்ளணையே தொடங்கீட்டீங்கள் .. கறுமம். .. ஆரு .. புவனேந்திரமா? அவன் கிரீஸ் ஒயில் கலக்கிறான் எண்டால்கேக்கிறீங்களா? .. எல்லாரும் ஒருநாளைக்கு ரத்தம் கக்கி.. ” 

“புளியம்பொக்கனை திருவிளா ஐயா … அந்தச் சனியனை தொட்டே பாக்கிறதில்ல .. மனியிக்கு பக்கத்தில கூட போறதில்ல .. முலு விதரம்” 

அவன் சொல்ல சுப்பருக்கு அரைவினாடி சபலம் ஒன்று எட்டிப்பார்த்தது. உமாராணி; தம்பிராசாவின் மனைவி. அவர்கள் வீட்டுக்கு மாவிடிக்க வருபவள். சின்னப்பெட்டை. கட்டக்கறுப்பு. கை மாற்றி கை அவள் மாவிடிக்கும் அழகில் உலக்கை ஏது உமாராணி எது என்று … நினைத்துக்கொண்டிருக்கும்போதே மகள் யதுஷ்ரா மீண்டும் ஹோர்ன் அடித்தாள். சுப்பர் லப்டொப்பை ஷட்டவுண் பண்ணிக்கொண்டே சொன்னார். 

“ஆர்மி பிளேன் ஏதுமா?.. அதான் ரெண்டு மூண்டு நாளா சுத்தித்திரியுது…” 

“இல்லன, அது ஒரு தாட்டான் பிளேனு , சகடையை விட பெருசு, … வெள்ளைக்கலர் .. நடுவுல இங்கிலீசுல என்னவோ எழுதிக்கிடக்கு..” 

“ஆமிக்காரன் நிக்கிறானா?” 

“எங்கட கறுவலுகள் மாதிரி ஒண்டுமே இல்ல .. எல்லாரும் அவிச்ச வெள்ளக்காரர் .. இறங்கி நிக்கிறினம்… இந்த சப்பைகளும் நிக்குது… பெண்டுகள் .. பெனியனோட .. வெக்கை எண்டதால .. விசிறிக்கொண்டு… நிக்கினம்” 

இலேசில் புறந்தள்ள முடியாதவகையில் தம்பிராசாவின் விவரணங்கள் இருந்ததால் விதானையார் கொஞ்சம் யோசித்தார். இந்த நாட்டில எவன் எதுக்குள்ளஇறங்குவான் என்றே தெரியுதில்ல. ஓவசியர் ரோட்டில என்ன மண்ணுக்கு பிளேன் இறங்கோணும்? பாவிக்காமல் விட்டதால் அரசாங்கம் அந்த ஏரியாவைசுவீகரிச்சு சர்வதேச விமான நிலையம் ஆக்கிவிட்டதா? வெறுமனே ஆர்ப்பாட்டம் செய்த வெளிநாட்டுக்காரர் திடீரென்று அடிபட வந்திறங்கிஇருக்கிறார்களா? எல்லோரும் வெள்ளைக்காரர் என்கிறானே. இவனை நம்ப ஏலாது. இவன் கலருக்கு, பனங்காயை கூட வெள்ளை என்பான். 

விதானையார் குழம்பிப்போனார். இதென்ன பெரிய குழப்பம்? அடுத்து தம்பிராசா சொல்லப்போகும் வார்த்தையில் அவர் அதிர்ந்தே போகப்போறார். 

“அவங்கள் உங்களத்தான் விசாரிச்சவங்கள்” 

விதானையாருக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப்போனது.. 

“என்ன விசர்க்கதை கதைக்கிற … ” 

“அய்யா சத்தியமா சொல்லுறன் .. உங்களத்தான் கேட்டவங்கள்” 

“நீ அவங்களோட கதச்சியா? இங்கிலீஸ்லையா” 

“அந்த அறுப்புத்தான் ஐஞ்சியத்துக்கும் நமக்கு தெரியாதே … ” 

“விளங்குதல்லோ .. பிறகேன் விடியவெள்ளன வந்து தாலி அறுத்துக்கொண்டு நிக்கிற” 

விதானையாருக்கும் தம்பிராசாவுக்குமிடையில் தொடர்ந்த இந்தச் சம்பாஷணை, நடுநடுவே விதானையார் துளித்துளியாக வியர்த்து, இறுதியில் ஷேர்ட் மாத்தி, யதுஷ்ராவை காய்ச்சல் என்று சொல்லி பள்ளிக்கூடம் போகாமல் தடுத்து, அவள் அழுது, மனைவியிடம் திட்டுவாங்கி, அரக்கப் பறக்க தம்பிராசாவை மோட்டர்சைக்கிளின் பின்னால் அள்ளிப்போட்டுக்கொண்டு, ஓவசியர் ரோட்டுக்கு வண்டியை விடும்வரைக்கும் …. நீண்டது. 

அதன் சுருக்கம். 

காணாமல் போன ஆடு ஒன்று ஹட்சன் ரோட்டுப்பக்கம் போனதாக மாதாகோவில் போதகர் சொன்னதைக்கேட்டு தம்பிராசா நேற்று முழுதும் கிருஷ்ணன்கோயில் வரைக்கும் அதைத் தேடிப்பார்த்தான். அலைந்ததுதான் மிச்சம். ஆட்டுப்புழுக்கை கூட மாட்டவில்லை. இரவு வீடு திரும்பும்போது முன்வீட்டு சுதாஇவனை மறித்து, பன்னங்கண்டியடியில் செவியன் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்ததைக் கண்டதாக சொன்னான். அதெப்படி இரண்டும் கெட்டான் திசையில்ஆடுகள் தொலைந்திருக்கும்? என்று கேட்ட மனைவியைத் திட்டிவிட்டு, இன்று விடியக் காலையிலேயே பன்னங்கண்டிக்கு சைக்கிளை விட்டான். வழியில்ஏழாங்கட்டை தாண்டியவுடனேயே வயிற்றைக் கலக்கிவிட்டது. வயற்கரையில் ஒதுங்கிவிட்டு, கழுவவென்று கறுப்பிக்குளத்துக்கு போனவன், மேற்குக்கரையில்நாயுருவிப்பற்றைக்குள் ஏதோ சரசரப்பதைக் கவனித்து, செவியன் சிங்கன்தான் நிக்கிறார் என்று நெருங்கிப்போனான். அப்போது யாரோ திடீரென்றுஓடுவதைக்கண்டு, துரத்தி … கிறவல் ரோட்டு தாண்டி வயல்வெளிக்குள் இறங்கியபோது தான் அந்த பிளேன் தெரிந்தது. 

முதலில் அது பிளேன்தானா என்று சந்தேகம். கிட்டப்போனான். பிளேன்தான். நெருங்கினான். சும்மா பிளேன் இல்லை இது. பயங்கர பெரிசு. இன்னமும்கிட்டப்போனான். அட, தம்பிராசா வாழ்க்கையில் இவ்வளவு பெரியபிளேனை டிவியில் கூடப் பார்த்ததில்லை. சுவாரசியம் எட்டிப்பார்க்க, இன்னமும்நெருங்கினான். இப்போது விமானத்துக்குக் கீழே ஆட்கள் நடமாட்டம் கொஞ்சம் தெரிந்தது. ஆர்மிக்காரனான இருக்கும். எதுக்கு வம்பு என்று சொல்லிதிரும்ப நினைத்தவன், மனம் கேளாமல் இன்னமும் கொஞ்ச நெருங்க … அட வெள்ளைக்காரர். இங்கே என்ன செய்கிறார்கள்? பிளேன் ஏன் இறங்கி நிற்கிறது? முன்னர் எல்லாம் பிக்கப்பில் வந்தவர்கள், இப்போது பிளேனில் வந்து இறங்குகிறார்களா? என்று எமக்கே ஆயிரம் கேள்வி என்றால் பார்த்த தம்பிராசாவுக்குஎப்படி இருந்திருக்கும்? 

கிட்டப்போனான். நெருங்க நெருங்க, ஒரு வெள்ளைக்காரன் .. ம்ஹூம் .. அது வெள்ளைக்காரி இவனைக் கண்டுவிட்டாள். ஏதோ சொல்லிச் சைகை செய்தாள். வரட்டாம். தயங்கி தயங்கி. வெள்ளைக்காரி எட்டும் தூரத்தில். பின்னாலே வீடு மாதிரி பிளேன். கீழே பத்திருபது பேர். பூவரசுக் கொப்பை முறித்து, தோலுரித்துபொல்லாங்கட்டையாக்கி கையில் வைத்திருந்தார்கள். தம்பிராசா சுற்றும் முற்றும் பார்த்தான். யார் இவங்கள்? பிளேனால இறங்கி தடி முறிச்சுவச்சிருக்கிறாங்கள். 

வெள்ளைக்காரி இவன் வந்த வழியே இரண்டுபைப்புகளை வைத்து, அது பைனாகுலர் என்று விதானையார் திருத்தவேண்டியிருந்தது, இவன் வந்தபாதையைதெளிவாகப் பார்த்தாள். பிறகு இவனை நோக்கி வந்தாள். இவன் வாய் வங்களா விரிகுடாவாகி சுனாமி பாய்ந்தது. மேலே வெறும் கறுப்பு பனியன் மட்டும்போட்டிருந்தாள். எதையும் மறைப்பதைப் பற்றி அதிகம் அக்கறைப்பட்டவளாய் தெரியவில்லை. ஜீன்ஸ் அணிந்திருந்தாள். தோட்டாட்டு வேலை செய்வாள்போல. உடம்பு இறுகிச் சிக்கென்று. செவலைப்பெட்டை. தம்பிராசாவுக்கு ஏனோ காணாமல்போன அவனின் செவியன் ஆடு ஞாபகம் வந்தது. இராவைக்குள்தேடவேண்டும். வெள்ளைக்காரி இங்கிலீஷில் அவனிடம் ஏதோ சொன்னாள். இவனுக்கு விளங்கவில்லை. பதில் சொன்னான். 

“எஸ் சேர் .ஐயோ .. வந்து .. மிஸ் .. ஐ தம்பிராசா .. வட்டக்கச்சி ஆறாம் வட்டாரம் .. யூ .. லண்டன்?” 

அவனுக்கு வெள்ளைத்தோல் எல்லாமே லண்டன்தான். அடுத்த பந்தி முழுதும் தம்பிராசாவுக்கும் வெள்ளைக்காரிக்குமிடையில் நிகழ்ந்தசம்பாஷணையினுடைய, தம்பிராசாவின் மொழிபெயர்ப்பு வந்திருக்கவேண்டும். ஆனால் அதற்கு விதானையார் இடம்கொடுக்கவில்லை. இப்படித்தான்தம்பிராசா ஒரு ஸ்லோ கோச்சி. வேகமாக ஒன்றும் செய்யமாட்டான். கக்கூஸ் போற அவசரத்திலும், சாறத்தை கவனமாகக் கதவிலே மடித்துப் போட்டுவிட்டேஉட்காருவான். கதைப்பதும் அப்படித்தான். எதையுமே வேகமாக, ஓட்டமாகச் சொல்லமாட்டான். சொல்லவும் தெரியாது. அவன் திரில்லர் கதை சொன்னால்கூட வெண்முரசுபோல இருக்கும். 

தம்பிராசாவின் அறுவையில் விதானையார் பொறுமை கெட்டுவிட்டார். 

“உண்ட அறுந்த இங்கிலீஷ விட்டிட்டு என்ன நடந்துது எண்டு டக்கென்று சொல்லு பார்ப்பம் … ” 

சுருக்கம் தொடருகிறது. 

வெள்ளைக்காரியோடு தம்பிராசாவின் இங்கிலீஷால் நீண்டநேரத்துக்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை. முழிக்க ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் ஒரு தடியன்விமானத்தினுள்ளே இருந்து இறங்கிவந்தான். ஒரே அடியில் நாலு பேரை விழுத்துவான்போல இருந்தான். கையில் ஏகே-47 வைத்திருந்தான். அது லோட்பண்ணுப்பட்டிருந்தது. தம்பிராசா அதை சொல்லவில்லை. ஆயுதப்பயிற்சி எடுக்கவில்லை என்றே காம்பில் பதிஞ்சு இருந்தவன். எதற்கு வீண் பிரச்சனை? வேண்டாம். 

அந்தத் தடி எருமை கையில் துவக்கு வைத்திருந்தான். தம்பிராசாவுக்கு அப்போதுதான் விஷயம் கொஞ்சம் ஆபத்தானது என்று புரிந்தது. எருமை இவனுக்குகிட்ட வந்து மீண்டும் மீண்டும் அறுத்து உறுத்து ஒரே விஷயத்தை சொன்னான். ஆனால் அவன் உச்சரிப்பு தம்பிராசாவுக்கு சுட்டுப்போட்டாலும் புரிவதாயில்லை. 

“ஐ .. வோன்ட் சபர் பேத்தல்” 

தம்பிராசா முழித்தான். அந்த உச்சரிப்புக்கு கிட்டவான எந்த ஆங்கில வார்த்தையையும் அவன் அறியான். ஐ மட்டும் தெரியும். 

“ஐ தம்பிராசா .. ஆட்டைத் தேடி வந்திருக்கிறன்” 

அந்தத் தடியன் மீண்டும் சொன்னான். 

“பெற்றல் .. சுபர் பெற்றல்” 

“பற்றல்?” 

மீண்டும் மீண்டும் மாறி மாறிச் சொல்ல, இருபதாவது தடவை அவனுக்கு ஒரு வார்த்தை புரிந்தது. 

“சுப்பர்?” 

“ஓ யே .. சுப்பர் பெற்றல்” 

“ஓ ..நம்மட சுப்பரண்ணையை கேக்கிறீங்களா?” 

கேட்டுக்கொண்டிருந்த விதானையாருக்கு இந்தக்கதை கொஞ்சம் லூசுத்தனமாக இருந்தாலும் தம்பிராசாவின் விவரிப்புகளில் சந்தேகம் எதுவும் வருவதாய்இல்லை. எதற்குத் தேவையில்லாத பிரச்சனை? போலீசுக்கு போகலாம் என்று தீர்மானித்தார். கந்தோருக்கு வேறு போகவேண்டும். ஆனால் போலீசிடம்சொன்னால், ஆதாரம் ஏதும் கேட்பார்கள். தம்பிராசாவிடம் கேட்டார். அவன் சட்டைப்பையில் இருந்து ஒரு நோட்டை எடுத்துக்கொடுத்தான். 

“உங்களிட்ட குடுக்கச்சொல்லி தந்தாங்கள்” 

நூறு டொலர். மாற்றினால் பத்தாயிரம் ரூவா தேறும். தம்பிராசா உண்மையைத்தான் சொல்லுகிறான். விதானையார் அவனை முதன்முறையாக நம்பினார். 

“வெளிநாட்டு காசு … ஐஞ்சு ரூவா கூட தேறாது” 

விதானையார் டொலர் நோட்டை வாங்கி பேர்சில் வைத்துக்கொண்டார். கந்தோருக்குக் கொஞ்சம் லேட்டாகவும் போகலாம். தன்னுடைய மீட்டிங்மத்தியானம் என்று கணக்குப்போட்டார். நல்லா காசு புழங்கும் போல. போலீஸ் வேண்டாம். என்ன விசயம் என்று தாமே போய் விசாரிக்கலாம். விதானையும்போலீஸ் தானே. வேணுமெண்டால் அரெஸ்ட்டும் பண்ணலாம். 

விதானையாரும் தம்பிராசாவும் பயணம் செய்த மோட்டர்சைக்கிள் கறுப்பிக்குளத்து அணைக்கட்டில் ஏறி, மேற்காலே போய், கிறவல் ரோட்டையும் தாண்டி, வயல்வெளிக்கு வந்துவிட்டது. விதானையார் மோட்டர்சைக்கிளை நிறுத்திவிட்டு இறங்கிப்பார்த்தார். வயல்வெளி, ஓவர்சியர் ரோடு. வெறுங்காணி, வயல்வெளி. அன்று சுற்றுவட்டாரம் ஒன்றுவிடாமல் பார்த்தார்கள். 

பிளேனை காணவில்லை. 

தம்பிராசாவை ஏற்றிக்கொண்டு ஓவசியர் ரோட்டுக்குள் இறங்கினார். ரோட்டு பாய்விரித்ததுபோல கிளீனாக இருந்தது. காற்றில் மோட்டர்சைக்கிள் அங்கேயும்இங்கேயும் உலாஞ்சியது. அந்தப்பக்கமும் வெளி. இந்தப்பக்கமும் வெளி. ஆள் அரவமே இல்லை. ஓவசியர் வளவு வாசலில் மோட்டர்சைக்கிளை மீண்டும்நிறுத்தினார். தம்பிராசா அங்கேயும் இங்கேயும் பரபரவென்று ஓடினான். வளவில் நின்ற பனைமரத்தில் வறுக்வறுக்கென்று ஏறி உச்சி வட்டிலிருந்தும் பார்த்தான். ம்ஹூம். ஒரு காக்காய் குருவியைக்கூட காணவில்லை. 

“இந்த ரோட்டில தானய்யா நிண்டது .. அதுக்குள்ளே துலைஞ்சு போச்சு” 

உச்சியிலிருந்து தம்பிராசாவின் குரல் சன்னமாய் ஒலித்தது. 

“இஞ்சதானா?” 

“புளியம்பொக்கனையான இஞ்சதான்” 

“சும்மா புளுகாத” 

“நான் எதுக்கு புளுகோணும் ஐயா?” 

அதானே? தம்பிராசா எதற்குப் பொய்சொல்லி ஏய்க்கவேண்டும் என்று அவருக்குப் புரியவில்லை. நூறு டொலர் வேறு வைத்திருந்தான். எப்படிக்கிடைத்திருக்கும்? கீழே கிடந்து எடுத்திருப்பானோ. ஆரும் என்ஜூஓகாரரிடம் கொத்தியிருப்பான். என்ன செய்யிறதெண்டு தெரியாம கொண்டுவந்துதந்திருக்கிறான். யாராவது சூனியம் வைத்திருக்கலாம். அவன் மனிசியே வைத்திருக்கும். ஆடு தொலைந்ததில் விசர் பிடித்திருக்கலாம். தன் ஆடுகளைவெளிநாட்டுக்காரர் களவு எடுத்ததாகச் சொல்லி காசுவாங்க முயற்சி செய்யலாம். 

“நீ துலைஞ்ச ஆட்டுக்கு நட்டஈடு எடுக்க நாடகம் ஆடுறாய்” 

“எண்ட கடவுளே .. இப்பிடியொரு புரளியை சொன்னா அம்மாளே தாங்கமாட்டா … அவளானை இஞ்ச இதிலதான் கண்டனான். வேணுமெண்டா இங்கனக்கவேலியளை ஒருக்கா பார்ப்பம். அவங்கள் கொப்பு முறிச்சதில பச்சை இல கிடக்கோணும் தானே” 

விதானையாருக்கு கோபம் முற்றிவிட்டது. 

“டேய் .. கண்ணுக்கு முன்னாலே பிளேன் நிண்டது எண்டு சொல்லீட்டு இப்ப என்ன சீலம்பாவுக்கு இலய தடவ சொல்லுற?” 

“இல்ல வந்து …” 

“உண்ட விழல் கதய நம்பி, விடிய வெள்ளணை வெளிக்கிட்டு வந்தனே .. எண்ட புத்தியை செருப்பால அடிக்கோணும்” 

சொன்னவர் மோட்டர் சைக்கிளில் ஏறியிருந்து ஸ்டார்ட் பண்ணினார். 

“நில்லுங்க ஐயா…” 

கத்திக்கொண்டே விறுவிறு என்று பனையிலிருந்து தம்பிராசா இறங்க முன்னரேயே, விதானையார் மோட்டர் சைக்கிளை முறுக்கியபடியே வேகமாகபுறப்பட்டுச்சென்றார். 

தம்பிராசா அயர்ச்சியாக பனையடியில் சாய்ந்து உட்கார்ந்தான். தனக்கு மெய்யாலுமே விசர் பிடித்துவிட்டதோ என்று குழப்பம் வந்தது. நாவூறு பிடித்துவிட்டது. இன்றிரவு உமாராணியிடம் சொல்லித் துடைத்துக்கொளுத்தவேண்டும் என்று நினைத்தான். கொஞ்சநேரம் களைப்பாறிவிட்டு ஆட்டைப்போய் தேடுவம் என்றுசாறத்தை உதறியபடி எழுந்தான். அப்போதுதான் பனைவேருக்குள் வெள்ளையாக ஏதோ செருகுப்பட்டுக் கிடந்தது. என்ன இது? எடுத்துப்பார்த்தான். வெள்ளைஅட்டையில் ஆங்கிலத்தில் என்னென்னவோ எழுதப்பட்டிருந்தது. ன்றுமே புரியவில்லை. விதானையார் ஓவசியர் ரோட்டு தாண்டி கிறவல் ரோட்டுக்குள்ஏறிவிட்டார். அட்டையைத் திருப்பிப்பார்த்தான். ஒரு ப்ளேன் படம் இருந்தது. “இந்த சனியனால தானே இவ்வளவு அலைச்சலும்” என்று கோபத்தில் அதையேவெறித்துப்பார்த்தான். 

அந்த மட்டை ஒரு போர்டிங்பாஸ் என்றோ, அதில் “MH370” என்றும், கேஎல், பீய்ஜிங் என்றும், சீட் நம்பர், கேட் நம்பர், பெயர், நேரம் என்று வேறு ஏதேதோஎல்லாம் எழுதியிருந்தது என்றோ எதுவுமே புரியாதவனாய் கொஞ்சநேரம் வெறித்த தம்பிராசா, பின்னர் ஏதோ நினைத்தவனாய் அதைக் கிழித்து கசக்கி தூர எறிந்தான். 

“சனியன் .. இண்டைக்கு ஆரிண்ட மூஞ்சில முழிச்சனோ” 

புறுபுறுத்துக்கொண்டே பன்னங்கண்டிப் பக்கம் நடக்கத் தொடங்கினான்.

***********************************************  யாவும் கற்பனை ***********************************************

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக