ஓ காதல் கண்மணி

Apr 18, 2015

 

ok-kanmani

ஒரு இயல்பான நிச்சயத் திருமணம். பரஸ்பரம் அறிமுகமில்லாத இருவரின் ஈகோ, அதெல்லாம் கடந்து ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ளும்போது மலரும் இனிமையான காதல். திருமணத்துக்கு பின்னரான காதல்.

“மௌனராகம்”. எண்பதுகளில்.

காதலிக்கிறார்கள். இருவீட்டிலும் சம்மதமில்லை. தன்னிச்சையாக திருமணம் முடிக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியே வந்து குடும்பம் நடத்துகிறார்கள். ஈகோ. ஊடல். சின்னதாய் பிரிவு. அப்போது அவர்களுக்குள்ளேயே இருக்கும் அந்த ஈர்ப்பும் காதலும் புரியவே மீண்டும் சேருகிறார்கள்.

“அலைபாயுதே”. தொண்ணூறுகளில்.

காதலிக்கிறார்கள். சேர்ந்து வாழுகிறார்கள். திருமணம் எல்லாம் தேவையில்லாத கொமிட்மெண்ட் என்று சொல்லுகின்ற “லிவிங் இன் ரிலேஷன்ஷிப்” காதலர்கள். இருக்கும்வரைக்கும் சந்தோசமாக இருப்போம். எதுக்கு திருமணம் செய்து தேவையில்லாத சண்டை, ஊடல், கோபம், அங்கலாய்ப்பு எல்லாம் அனுபவிப்பான் என்கின்ற எண்ணத்தை பிரதிபலிக்கும் இளம் ஜோடி. வாழ்க்கை நன்றாகவே போகிறது. ஆனாலும் அதே சண்டை, ஊடல், கோபம் எல்லாமே லிவிங் இன் ரிலேஷன்ஷிப்பிலும் வருகிறது. ஒரு கட்டத்தில், தாம்பத்யம் என்பது வெறும் இருபதுகளோடு முடியும், வேண்டுமானால் பிய்த்துக்கொண்டு போகலாம் என்கின்ற “லிவ் இன்” உறவு அல்ல என்பது புரியவர, இருவருமே சந்தோஷமாக திருமணம் முடிக்கிறார்கள்.

“ஓகே கண்மணி”. இரண்டாயிரத்துப் பதினைந்து.

“இராவணனிடம்” அடிவாங்கி, திரும்பி தப்பி ஓடிவரும்போது “கடலில்” தவறிவிழுந்து தத்தளித்து, ஒருவாறு கரைசேர்ந்து, இப்போது எழுந்து நின்று சிரிக்கும் “யானை” மணிரத்னம். வெல்கம் பாக்.

எவ்வளவு நாளாச்சு இப்பிடி ஒரு மணிரத்னம் படம் பார்த்து! நன்றி தலைவா.

படம் பார்க்காதவர்கள் கூட  இதனை வாசிக்கலாம். கதை தெரியவந்தாலும் காரியமில்லை. ஏனென்றால் மௌனராகம் கதை தெரிவதாலோ, தளபதி கதை தெரிவதாலோ, அல்லது வேறு எந்த மணிரத்னம் படத்து கதை தெரிவதாலோ, அந்தப்படத்தை பார்க்கும் அனுபவத்தின் சுவை கொஞ்சமும் குறையப்போவதில்லை.  ஓகே கண்மணியும் அப்படித்தான். சாதாரண நூலிழைக்கதைதான். அதற்குள் காதல், குடும்பம் என்று இரண்டு நிறங்களை வைத்து மிக எளிமையாக இனிமையாக நெய்து நிறையவே தந்திருக்கிறார்கள்.

Just Beautiful.


ட்ரெயினில் படம் ஆரம்பிக்கிறது.

ஆதி(துல்குர் சல்மான்) ஒரு கேம் புரோகிராமர். அமெரிக்கா போய் பெரிய பணக்காரன் ஆகவேண்டுமென்பது அவனுடைய கனவு. சென்னையிலிருந்து மும்பைக்கு வேலை செய்ய வருகிறான். வந்திறங்கியவுடனேயே தாராவை (நித்யாமேனன்)  காண நேர்கிறது. பேசவில்லை. தாரா ஒரு ஆர்கிடெக்ட். பணக்கார அம்மா. அவர் நிழல் வேண்டாம் என்று சொந்தக்காலில் வாழும் பெண். பிரான்ஸ் சென்று மேலும் படிக்கவேண்டுமென்பது அவள் லட்சியம்.

மும்பையில் ஆதி தன்னுடைய அண்ணனின் நண்பரான கணபதியின் (பிரகாஷ்ராஜ்) வீட்டில் தங்குகிறார். வயோதிப கணபதிக்கு அல்ஸைமர் வியாதியுள்ள மனைவி பவானி (பிரபல பரதநாட்டிய கலைஞர் லீலா).

நண்பியின் திருமணம் ஒன்றில் ஆதியும் தாராவும் மீண்டும் சந்திக்கிறார்கள். பரஸ்பரம் ஹாய், பெயர், போன் நம்பர், முதலில் மாலை சூட்டி, பிறகு விலங்கு பூட்டும் இந்த கசாமுசா கலியாணம் தேவையில்லை  என்று எல்லாம் விசயமும் ஷேர் பண்ணுகிறார்கள். அடுத்த அரை மணிநேரம் டிபிக்கல் மணிரத்னம் காதல் காட்சிகள். பின்னணிப் பாடல்கள்.

கணபதி வீட்டிலேயே ஆதியின் அறையில் லிவிங் இன் ரிலேஷன்ஷிப்பாக, கூடவே தங்குவதற்கு தாரா வருகிறாள். வயோதிபர்களான கணபதி, பவானி இருவருக்குமிடையிலான கியூட்டான தாம்பத்திய உறவு மெல்ல மெல்ல ஆதி, தாராவின் மனங்களை மாற்றுகிறது. திருமணம் பற்றிய அவர்களின் சிந்தனை மாற்றமடைகிறது. குடும்ப வாழ்க்கையின் ஆதாரமான புள்ளிகள் புரியத்தொடங்குகிறது.

இறுதியில் அவர் அவர் இலட்சியங்களுக்காக ஒருவர் பிரான்சுக்கும், மற்றவர் அமெரிக்காவுக்கும் பிரிந்து செல்ல நேர்கையில் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை.

15suhasini1இதுக்கு நீ, இரண்டுபேரும் கடைசில கலியாணம் முடிக்கிறாங்க என்ற மீதிக்கதையையும் சொல்லவேண்டியதுதானே,  யூ அன்குவாலிபைட் இடியட்!”


“மௌனராகம்” திவ்யா ஒரு விறுமம் பிடித்தவள். ராங்கிக்காரி. அமுசடக்கி. “அலைபாயுதே” சக்தி, வெடுக் வெடுக்கென்று கதைப்பாள். பொஸஸிவ் பெண். “ஒகே கண்மணி” தாரா சுதந்திரமானவள். தான் நினைப்பதை மறைக்காமல் சொல்லுபவள். ஆனால் ஈகோவோ, பொஸஸிவோ இல்லாத சிம்பிளான, காதலையும் வாழ்க்கையையும் திகட்ட திகட்ட அனுபவிக்கவேண்டும் என்று நினைப்பவள். ஆதி வழமையான மணிரத்னம் ஹீரோ. ஹாண்ட்சமா, அரவிந்த்சாமி மாதிரி பேஸ் வொய்ஸில் பேசும் ஹீரோ. ஆனால் தமிழுக்கு மணிரத்னம் கொண்டுவந்திருக்கும் இன்னொரு மாதவன், அரவிந்த்சாமி டைப் ஹீரோவா என்றால், எங்கேயோ என்னவோ இடிக்குது. என்னென்று தெரியேல்ல. பெண்கள் முடிவு பண்ணட்டும்!

OK-Kanmani (1)

படத்தில் இன்னொரு ஹீரோ ஹீரோயின் என்றால் அது பிரகாஷ்ராஜும் லீலாவும்தான். கணபதி, பவானி பாத்திரங்கள் மூலம் படத்தை ஒரு சாதாரண காதல் கதையிலிருந்து கியூட்டான காதல் கதைக்கு நகர்த்தியிருக்கிறார்கள். சமயங்களில் கணபதி, பவானியின் காதல், ஆதி, தாரா காதலைவிட ரசனையாக இருக்கும். அவ்வப்போ நகைச்சுவை, அட்வைஸ், இமோஷன் எல்லாவற்றோடும் படத்தின் ஆதாரமான செய்தியை கொஞ்சம் கொஞ்சமாக பார்ப்பவர் தலையில் ஏற்றும் முக்கிய பொறுப்பு இந்த இரண்டு பாத்திரங்களுக்கும். அலை பாயுதேயின் அரவிந்த்சாமி, குஷ்புவின் எக்ஸ்டென்டட் வேர்ஷன்.

படத்தின் முக்கிய தூண் வசனங்கள்.

mani-ratnam-726x600வசனம் எழுத சுஜாதா இப்போது இல்லாததால்தான் மணிரத்னம் குளோஸ் ஆகிவிட்டார் என்று சொல்வார்கள். ஆனால் சுஜாதாவும் மணிரத்னமும் இணைந்தது சில படங்களில்தான். தளபதியாகட்டும், மௌனராகமாகட்டும், ஏன் அலைபாயுதே கூட வசனம் மணிரத்னம்தான். தலை சும்மாவே சலங்கை கட்டும். இதுவேறு காதல் படமா, வசனங்கள் பின்னுகின்றன. அதுவும் அவ்வப்போது டைமிங்காக பவானி பேசும் வசனங்கள் படத்தின் ஹைலைட்.

பவானி ஞாபகமறதியில் அடிக்கடி பாதைமாறிப் போய்விடுவார். இவர்கள்தான் தேடிக்கண்டுபிடித்து கூட்டிவரவேண்டும். ஒருமுறை சமையலறையில் பவானி தான் சமைக்கப்போகிறேன் என்று கிளம்புவாள். கணபதி, சமையல் பாத்திரத்தை எடுத்துக்காட்டி “நீ ஏற்கனவே சமைத்துவிட்டாய், சாப்பிட்டுமாயிற்று” என்பார். “அப்பிடியா, தீஞ்சுபோயிருக்கு, நல்லா கழுவணும்” என்றமாதிரி பவானி பதில் சொல்வாள். இதெல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த ஆதி கணபதியிடம் கேட்பான்.

“எப்பிடி சார் சமாளிக்கிறீங்க?”

கணபதி சிரிப்பார். டிபிக்கல் பிரகாஷ்ராஜ் சிரிப்பு.

“காலைல அவள் எழுந்து கணபதின்னு கூப்பிடும்போது … எல்லாமே மறைஞ்சிடும்”

படத்தைப்பாருங்கள். சும்மா போட்டுத்தாக்கும். மணிரத்னம் இஸ் ரியலி பாக்.

காட்சியமைப்புகளும் அப்படியே. வெறுமனே நாளாந்தம் நாம் பயணிக்கின்ற, வாழுகின்ற இடங்களில் நடக்கும் கதை. படம் முழுவதுமே அங்கேதான். பாடல் காட்சிகளும் அப்படியே. எல்லாமே கதையோடு பயணிப்பவை. எந்த பாட்டுக்கும் அவசர அவசரமாக் புல்வெளிகளையோ, மலைச்சாரலையோ தேடிப்போகாமல், உடை மாற்றாமல், இயல்பாக இழைத்திருப்பார்கள். அதிகம் இருட்டு இல்லாமல், இந்தா பாருடா பி.ஸி. ஸ்ரீராம் பின்னியிருக்கிறார் என்று சொல்லவைக்காமல் கதையோடு பிணைந்து பயணிக்கும் கமரா. பி. ஸி. ஸ்ரீராம் தெரிந்து செய்த அண்டர்பிளே.

கதையின் இன்னொரு பாத்திரம் ஆதியின் கார்ட்டூன் கேம். எழுத்தோட்டம் முதல் முடிவுவரை ஆங்காங்கே கேம் கார்ட்டூன்களால் கதையை நகர்த்தியிருப்பார்கள். அதனோடு இணைந்து  பயணிப்பது “காரா ஆட்டக்காரா” பாடல். புதுசு.

அடுத்தது நம் தலைவர்!

AR Rahman at the Oh Kadhal Kanmani aka OK Kanmani Audio Success Meet Photosஒரு காட்சியில் தாரா கண்கள் நிறைய சந்தோசத்தோடு ஆதியின் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு திரும்பி நடப்பாள். பின்னாலே “நா…னே வரு..கிறேன்” என்று சாஷாவின் காந்தக்குரல் ஒலிக்கத்தொடங்கும். அந்தக்கணத்துகாகவே படத்தை பத்து தடவைகள் பார்க்கலாம். கிளைமாக்ஸ் காட்சியில் “சின்னஞ்சிறு ஆசைக்கு பொய் சொல்லத்தெரியாதே” என்று பின்னணியில் ஒலிக்கையில் என்னவோ அடிவயிற்றை உருட்டும். “நனைந்து கொள்ளவா மழை இல்லாமலே, இணைந்து கொள்ளவா உடல் இல்லாமலே” என்ற கார்த்திக்கின் குரல் கேட்கையில் நீங்களும் ஆதி தாராவோடு ஆனந்த் லொட்ஜில் கட்டிலுக்கு மேலே மிதப்பீர்கள். எம்மை மீண்டும் மீண்டும் காதலிக்கவைக்கும் இசை. கூடவே வைரமுத்து பார்ட்னர் ஷிப். இதுதான் “காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்; கானமுண்டாம், ஆதலினால்,காதல் செய்வீர்” என்று பாரதி சொல்கின்ற விஷயமோ?

”“மலர்கள் கேட்டேன்” ஆகட்டும், “மெண்டல் மனதில்” ஆகட்டும், “சினாமிகா” ஆகட்டும், “ஆட்டக்காரா”, “தீரா” ஆகட்டும். அமீன் பாடிய “மௌலா” பாடலாகட்டும். அவ்வப்போது இந்த அல்பத்தில் இல்லாத ஒரு கர்நாடக சங்கீத பின்னணி இசை படத்தின் இரண்டாம்பாகத்தில் வருகிறது. இசை இந்தப் படத்தின் ஆதார ஜீவன்.

ரகுமான். மீண்டுமொருமுறை புதிதாய்.

படத்தில் குறைகளே இல்லையா என்று கேட்டால், இது என்ன பரீட்சைத்தாள் திருத்தும் வேலையா? பூதக்கண்ணாடி கொண்டுபோய், அந்தக்காட்சி இந்தப்படத்தில் இருக்கு, இந்த வசனம் அந்தக்காட்சியில் இருக்கு, படத்தில என்ன மெசேஜ் சொல்லுறான் என்று எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து, ரசனையை தொலைத்து, “படம் ஒகே, ஆனா இதைவிட அலைபாயுதே பெட்டர்” என்று சொல்லும் ஆகிருதி நான் கிடையாது. பிடிச்சிருக்கா? கொண்டாடுவோம். பிடிக்கேல்லையா, சொல்லுவோம். அவ்வளவுதான். பிரித்து மேய்வதற்கு இதுவென்ன ஒபரேஷன் தியேட்டரா என்ன?

OK Kanmani - Mental Manadhil (Single) shamusiq 

படம் பார்க்கையில் மனம் முழுதும் நிறைந்திருந்தது. ஒரு “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” மாதிரி. ஒரு “அலை பாயுதே” மாதிரி. ஒரு “அழகிய தீயே” மாதிரி. எம்மை காதலால் கட்டிப்போட்டு ரசிக்கவைத்த பீல் குட் படம். அவ்வளவுதான் விஷயம். முடிகையில் தியேட்டரில் இருந்தவர்கள் எல்லோருமே எம்மோடு சேர்ந்து தன்னிச்சையாக கைதட்டினார்கள். முகம் முழுதும் புன்னகையோடு வெளியேறினார்கள்.

என் மனைவி கைகளை இறுக்கிப்பிடித்துக்கொண்டாள். கண் பார்த்துச் சொன்னாள்

“நீண்ட காலத்துக்குப்பிறகு பார்த்த ஒரு சந்தோஷமான படம்”

ஓகே கண்மணி!


என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : மணிரத்னம்
மணிரத்னம் எழுதிய கவிதை
கடல்
அன்புள்ள சுகாசினிக்கு

 

Photo Credits
silverscreen.in
tamildiplomat.com
madrastalkies

Contact Form