நான் மணலானால்
நீ அலையாகிறாய்.
நான் விழி திறந்தால்
நீ இரவாகிறாய்.
நான் மடை திறந்தால்
நீ சுரமாகிறாய்.
நான் உலையானால்
நீ திரையாகிறாய்.
நான் திரையானால்
நீ வெளியேறுகிறாய்.
நான் வெளியாகையில்
நீ சிறை போகிறாய்.
நான் சிறை பூணுகையில்
நீ சிற்றறை ஆகிறாய்.
நான் நினைக்க மறக்கையில்
நீ நிலவு ஆகிறாய்.
நான் நிலவு ஆகையில்
நீ கறையாய் மாறுவாய்.
நான் கறையாய் மாறினால்
நீ தரையை மெழுகுவாய்.
நான் தரையாய் மாறினால்
நீ வலசை போயினாய்.
நான் மறை தேடினால்
நீ மனை ஏகுகிறாய்.
நான் வினை ஆற்றையில்
நீ சிலை ஆகிறாய்.
நான் சிலை ஆகையில்
நீ சிட்டாகிறாய்.
நான் சிட்டாகையில்
நீ சிறுகூடு பிரிக்கிறாய்.
நான் இயல் ஆகையில்
நீ இசையாகிறாய்.
நான் இசை மீட்டையில்
நீ செவி மூடுவாய்.
நான் கவி வரைகையில்
நீ உரை என்கிறாய்.
நான் உரை எழுதினால்
நீ எழுத்துப்பிழை ஆகிறாய்.
நான் வளைந்தபோது
நீ நாணேற்றுவாய்.
நான் நிமிர்ந்தபொழுதில்
நீ சரம் தொடுப்பாய்.
நான் மலர் கொடுத்தால்
நீ இதழ் பிரிப்பாய்.
நான் இதழ் பதித்தால்
நீ முகம் சுழிப்பாய்.
நான் வனம் புகுந்தால்
நீ கனல் ஏற்றுவாய்.
நான் கனல் குளித்தால்
நீ மனம் குளிர்கிறாய்.
நான் குளிர் நடுங்கினால்
நீ துகில் உரிகிறாய்.
நான் துகில் நீக்கையில்
நீ துயில் கொள்கிறாய்.
நான் கடை திறக்கையில்
நீ கதவடைக்கிறாய்.
நான் இடை தழுவினால்
நீ விடம் பொழிகிறாய்.
நான் இடம் கொடுக்கையில்
நீ தடம் மறுக்கிறாய்.
நான் சடை தரித்தால்
நீ விடை கொடுக்கிறாய்.
நான் குடை பிடித்தால்
நீ மழை நனைகிறாய்
நான் மழை நனைகையில்
நீ நனைவிடைகிறாய்.
நான் மனையிருக்கையில்
நீ வெயில் தின்கிறாய்.
நான் உயிர் ஒறுக்கையில்
நீ உளம் ஈர்க்கிறாய்.
நான் சேயாகையில்
நீ செவிலி சேர்க்கிறாய்.
நான் தாயாகையில்
நீ தாரமாகிறாய்.
நான் தாரமாகையில்
நீ பாலையாகிறாய்.
நான் வாலை தாவையில்
நீ வருவேன் என்கிறாய்.
நான் இராமனானால்
நீ இராவணாகிறாய்.
நான் கண்ணனாகையில்
நீ கம்சனாகிறாய்.
நான் கடவுளாகையில்
நீ கடிவரம் கேட்கிறாய்.
நான் அவதாரமானால்
நீ ஆகுபொருள் ஆகிறாய்.
நான் பறந்து செல்கையில்
நீ இறகு முறிக்கிறாய்
நான் நடந்து செல்கையில்
நீ முட்கள் விதைக்கிறாய்
நான் கனவு காண்கையில்
நீ தூக்கம் தொலைக்கிறாய்.
நான் நனவு வாழ்கையில்
நீ கனவு கன்னியாகினாய்.
நான் நெல்லு விதைக்கையில்
நீ கிளிகளாகிறாய்.
நான் கிளியாய் மாறினால்
நீ இலவு ஆகிறாய்.
நான் கதிராய் சிலிர்க்கையில்
நீ பருவம் பொய்க்கிறாய்.
நான் மருதம் எய்தினால்
நீ எளியர் ஆகிறாய்.
நான் முடிவானால்
நீ முனை திறக்கிறாய்.
நான் முடிவிலியானால்
நீ முற்றுப்புள்ளி ஆகிறாய்.
நான் கற்பனை திறந்தால்
நீ மொழிகள் மறுக்கிறாய்.
நான் கருவுள் நுழைந்தால்
நீ கர்ப்பம் கலைக்கிறாய்.
நான் தேடும்போதல்லாம்
நீ தொலைந்துபோகிறாய்.
நான் தொலைந்துபோகையில்
நீ வாளாவிருக்கிறாய்.
நான் நீயாகும் வேளையிலே
நீ வேறாகச் செல்லுகிறாய்.
நான் நானாகும் தருணங்களில்
நீ நீயாகவே இருக்கிறாய்.
நானாகிய நீ.
ஓவியங்கள் : ரவிவர்மா
/****நான் தரையாய் மாறினால்
ReplyDeleteநீ வலசை போயினாய்.
நான் நனவு வாழ்கையில்
நீ கனவு கன்னியாகினாய்.
நான் கற்பனை திறந்தால்
நீ மொழிகள் மறுக்கிறாய்.
நான் தேடும்போதல்லாம்
நீ தொலைந்துபோகிறாய்.
நான் தொலைந்துபோகையில்
நீ வாளாவிருக்கிறாய்.***/
(Y)
நன்றி தல.
Deleteஎன்னாச்சு? நல்லாத்தானே எழுதிக்கொண்டிருந்தீர்கள்?
ReplyDeleteநல்லா எழுதுறதுக்கு இந்த இரண்டுபேரும் வேணும் அண்ணே.
Deleteஆழமான கவிதைகள். பல முறை படிக்க வேண்டி இருந்தது. புதிய சொற்கள் பல அறிமுகம் ஆகியிருக்கின்றன. ஒரு தளத்தில் பார்த்தால், இது புலவி நுணுக்கம், இன்னொரு தளத்தில் பார்த்தல் இது அகப்போராட்டம். கொஞ்சம் கடவுள் பாதி மிருகம் பாதி மனம். ஆக மொத்தம் நான் நானாக இருக்க நீ நீயாக வேண்டும். நீயின்றி நானில்லை. ரவிவர்மாவின் ஓவியங்கள் எப்போதும் அழகானவை, இந்த கவிதைகளோடு சேர்ந்து ஒரு ஆழக்கடலின் அழகாய் போல தெரிகின்றன. புரிந்து கொள்ள முடியாதது பெண் மனது மட்டுமல்ல எம் மனதும்தான்.
ReplyDeleteஎன்ன சார் இப்படி திடீர்னு இப்படி ஒரு ஏக்கம்? :)
ReplyDeleteஎன்னை கவர்ந்த வரிகள் கீழே:
நான் மழை நனைகையில்
நீ நனைவிடைகிறாய்
நான் உயிர் ஒறுக்கையில்
நீ உளம் ஈர்க்கிறாய்
என்ன அற்புதமான வரிகள். எங்கேயோ போயிட்டீங்க.
சரி அதென்ன
நான் உரை எழுதினால் நீ எழுத்துப்பிழை ஆகிறாய்?
பிழை காண்கிறாய் என்பது சரியாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது
ஏதோ எனக்கு தெரிஞ்சுத சொன்னேன். கோவிச்சுகாதீங்க :)
நன்றி
ஜகன்
//நான் தொலைந்துபோகையில்
ReplyDeleteநீ வாளாவிருக்கிறாய். //
ம்ம் ...
கவிதையை போல் ஓவியமும் அருமை