தூங்கா வனம்

Nov 11, 2015

 

thoonga-vaanam-poster-1

 

தூங்காவனம் உலகத்தரம்.

அதிலும் அலமேலு மாமி. அசத்திட்டேள் போங்கோ!

ஒரு திரைப்படம் உலகத்தரமாக மிளிர்வதற்கு பலர் காரணமாக அமைவதுண்டு.

அதில் மிக முக்கியமான காரணம்,

தியேட்டரில் பின் வரிசையில் அமர்ந்திருக்கும் பிரகிருதிகள்.


பின் வரிசையில் டிக்கட் புக் பண்ணியவர் ஒரு அவாளாக இருந்து தொலைத்து,

அதுவும் ஒரு வெள்ளைக்காரியை திருமணம் முடித்த அவாளாக இருந்து தொலைத்து,

அவாளின் அம்மாவும், அம்மாவின் ஆத்துக்காரர் ஜட்ஜு ஐயாவும் விடுமுறையில் வந்து தொலைத்து,

அந்த அலமேலு மாமி "மன்மதலீலை" கமல்ஹாசன் ரசிகராக இருந்து தொலைத்து,

அவாள் எல்லாம் தியேட்டருக்கு வருகையில்,

அந்த ஆஸிக்குயிலும் ஆத்தோடு இழுபட்டு வந்து தொலைத்து,

"உலக நாயகனை" குயிலுக்கு அறிமுகப்படுத்துகிறேன் பேர்வழி என்று,

மாமி தன்னுடைய ஆங்கிலத்திறமையை மொத்த தியேட்டருக்கும் பறைசாற்ற,

குயிலுக்கு ஸ்க்ரீனில் போகும் சப்டைட்டிலை பலோ பண்ணுவதா?

மடிசார் மாமியின் டப்பிங்கை பலோ பண்ணுவதா?

என்கின்ற குழப்பம் தீர்வதற்குள்,

கமலும் திரிஷாவும் பாய்ந்துவர,

மூதேவி வில்லன் துவக்கை வைத்துக்கொண்டு,

சுடாமல் முழுசிக்கொண்டு நிற்கும்,

கிளைமக்ஸ் சீன் வந்துசேர,

வெள்ளைக்காரி எந்த அறுப்பும் விளங்காமல்,

தான் அக்ரகாரத்துக்கு வாக்கப்பட்ட

உஞ்சவிருத்தியை நினைந்தழுந்த இரவுக் காட்சிக்கு, 

அன்றைக்கென்று டிக்கட் புக் பண்ணி,

அவாத்து வரிசைக்கு முன்னே உட்காருகின்ற

பிரம்மகத்தி தோஷம் இருக்கிறதே!


அது ஒரு திரைப்படம்  உலகத்தரமாக மிளிர்வதற்கு முக்கியகாரணம்.


எழுத்தோட்டத்துக்கு முன்னமேயே அலமேலு மாமியின் என்ட்ரி ஆரம்பித்துவிடுகிறது.

"தூங்காவனம் மீன்ஸ் எ ஜங்கிள் விச் நெவெர்  ஸ்லீப்ஸ் "

"oh"

"யூ நோ .. இட்ஸ் பொயடிக்.  எ நைட் கிளப் நெவெர் ஸ்லீப்ஸ். இட்ஸ் எ பிளேஸ் வேர் பீபிள் பிஹெவ் லைக் ஆனிமல்ஸ்"

குயில் சங்கடமாக சிரித்திருக்கவேண்டும். அலமேலுவின் வெள்ளைக்கார மாட்டுப்பொண்ணை பிள்ளையாண்டான் சென்கில்டா நைட் கிளப்பில் செட்டாகியிருக்கவும் சந்தர்ப்பம் உண்டு. இரைகள் மட்டுமல்ல இணைகளும் இந்த நாட்டில் இரவு கேளிக்கைகளின்போது ஒரு டக்கீலா ஷாட்டிலேயே மாட்டுவதுண்டு. மாமிக்கு அது தெரிந்திருக்க சாத்தியமில்லை. சாட்சாத் பகவானே சிவா விஷ்ணு கோவிலுக்கு கூட்டிக்கொண்டுவந்து கொடுத்த சரஸ்வதிதான் தன் வெள்ளைக்கார மருமகள் என்று மாமி ஸ்ரீரங்கத்தில் அக்ரகாரம் பூராக சொல்லிவைத்திருக்கலாம்.

"பார்த்தா என் மாட்டுப்பொண்ணு  அப்டியே சரஸ்வதியாட்டம் இருப்பா தெரியுமோன்னோ"

எழுத்தோட்டத்தில் கமல் பெயர் வரவும் மாமியின் டப்பிங் ஆரம்பித்தது. ஒரு பிரெஞ்சுப் படம் தமிழாகி மாமியின் கிருபையால் ஆங்கிலமானது.

"ஹீரோ கமல்ஹாசன் இஸ் அன் எர்த் ஸ்டார்"

எர்த் ஸ்டார் என்பது உலகநாயகனின் மொழிபெயர்ப்பு என்பதை புரிவதற்கு முன்னாலிருந்த எனக்கு இரண்டு நிமிடம் எடுத்தது. நல்லவேளை அது இளையதளபதியின் படம் இல்லை. இல்லாவிட்டால் யங் கமாண்டர் என்றிருப்பார்.

கமலஹாசனும் யூகி சேதுவும் ஒரு போதைக்கடத்தல் காரை மறித்து பையை சுருட்டுகிறார்கள்.  கடத்தல்காரன் கமலை கத்தியால் குத்துகிறான்.  கமல் பையனுக்கு ஆம்லெட்டு போட்டுக்கொடுக்கும் சிங்கிள் பேரென்ட்.  ஒவ்வொருநாளும் உதவத்த சாப்பாட்டைப்பார்த்து மகன் "புல் ஷிட்" என்கிறான். “அதையே தமிழிலே சொல்லிப்பாரு, எவ்வளவு அசிங்கமாகவிருக்கும்” என்று கமல் மகனை திட்டுகிறார்.

"ஹி டெல்ஸ் தட், புல் ஷிட் இன் டமில் மீன்ஸ் ஸோ டர்ட்டி!"

"I get it ma, its in the subtitles!"

"வீ பிராமின்ஸ் டோண்ட் ஸ்பீக்  பேட் லாங்குவேஜ்"

"That's great"

"யூ நோ கமல்ஹாசன் இஸ் ஆல்ஸோ எ பிராமிண்"

கமல்ஹாசனின் மகனை ஒரு நைட் கிளப் நடத்தும் பிரகாஸ்ராஜ் கடத்திவிடுகிறார். பிடித்துவைத்திருக்கும் போதைச்சரக்கை கொடுத்தால் மகனை விடுவிக்கிறேன் என்கிறார் .கமல் சரக்கோடு நைட் கிளப்புக்கு வருகிறார். திரிஷா பின் தொடர்கிறார்.

Thoongavanam"திரிஷா ஸ்டில் ஹாஸ் இட்"

"Yeah she is pretty"

"புவர் கேர்ல் .. ஷி கோன் துரூ எ லாட்… ஷி வாஸ் ஆல்ஸோ இன் த ஷவர் யூ நோ.. பட் இட் வாஸ் நாட் ஹேர். மீடியா இஸ் பேட்"

“அம்மா .. சித்த படத்தை பாருங்கோ.. டிஸ்டர்ப் பண்ணறது”

நைட் கிளபில் மூசிக் பின்னுகிறது. ஒரு ஸ்டெரெயிட் ஜோடி கட்டியணைத்து முத்தமிடுகிறது. ஒரு லெஸ்பியன் ஜோடியும் கட்டியணைத்து முத்தம் கொடுக்கிறது. கமலகாசன் கொண்டுவந்திருந்த சரக்கை ஆண்கள் கக்கூசில் ஒளித்து வைக்கிறார். தொடர்ந்துவந்த  திரிஷா அந்த சரக்கை எடுத்து பெண்கள் கக்கூஸில் ஒளித்து வைக்கிறார். திரிஷா வலு காசுவலாக ஆண்கள் கக்கூசுக்குள் நுழைகிறார். ஆண்கள் பெண்கள் கக்கூசுக்குள் நுழைகிறார்கள்.

“என்னடா இது பொம்மனாட்டிங்க எல்லாம் கட்டிக்கிறாங்க?”

“விடும்மா … இந்த ஊர்ல இல்லாததா?”

"அபச்சாரம் அபச்சாரம் … கமல் கான் பி நாட்டி ஆல்ஸோ"

பேசாமல் திரும்பி ஜட்ஜு ஐயாவின் ரியாக்சனை பார்க்கவேண்டும்போல இருந்தது. தியேட்டரிலியே மாமி பேசிப் பேசியே சாகடிக்கிறாரே. “எப்படி சார் சாந்திமூர்த்தம் எல்லாம் ஆச்சு? பாண்டிபஜார்தானா?”

பிரகாஷ்ராஜை சந்தித்து மகன் அங்கிருக்கிறான் என்பதை உறுதி செய்ததும் சரக்கை எடுத்துக்கொடுக்கவென கக்கூஸுக்கு வந்தால் அதைக்காணவில்லை. அதன் பின்னர் ஆட்டம் ஆரம்பிக்கிறது. கமல் மகனை மீட்க அலைகிறார். கமலைப்பிடித்து சரக்கை எடுக்க நல்ல பொலிஸ், கள்ள பொலிஸ், சின்ன வில்லன், பெரிய வில்லன் என்று அலைகிறார்கள்.

இந்த அவசரத்தில் கமலுக்கு மகன், வில்லன் பாத்ரூம்போன சமயம் செல்போனில் அழைக்கிறான்.

"எனக்கு உன்னைவிட எதுவுமே பெரிசில்லடா"

"இதயேன் நீங்க இவ்ளோ நாளா சொல்லலை?"

அலமேலு பீல் ஆவதற்குரிய கிளாசிக் மொமென்ட் அது.

"அச்சோ .. சோ.. சுவீட்.. பாதர் அண்ட் சன் ஆர் ஸோ இமோஷனல்"

குயில் இம்முறை பதிலுக்கு கூவவில்லை. அலமேலு விடவில்லை.

“யூ நோ … இன் எ கமலகாசன் மூவி, ஹி இஸ் ஸோ ரிச்”

“I … don’t think … I know…”

“யியா… ஹி ஹாஸ் எ போய் அண்ட் அ கேர்ல், தெ கேர்ல் வோஸ் டேக்கின் டு பிராத்தல்”

“You mean brothel?”

“யியா .. பிராத்தல் .. இன் கல்கட்டா .. டூ பார் புராம் ஸ்ரீரங்கம்”

“In this movie, you taking about?”

“நோ … நாட் திஸ் மூவி … ஸோ கமல்ஹாசன் கோ தெயார் அண்ட் சர்ச்.. அண்ட் ரெஸ்கியூ த கேர்ள்”

“That’s a relief”

“அம்மா .. சினிமாவை பார்க்க மாட்டேளா? ஸ்வீட்டி எதுவுமே புரியாம முழிக்கறா பாரு”

“அட, சித்த இருடா .. இதென்ன படம், அதுதான் கமல்ஹாசன் பையனை எப்டியும் மீட்டிருவான்னு தெரியுமேடா …”

“இங்க பாரு அலமேலு .. தியேட்டர்ல மனுஷா எல்லாம் படம் பாக்கறா, நீ டிஸ்டர்ப் பண்ணாத”

ஜட்ஜும் குரல் கொடுக்க அலமேலு மாமி கடுப்பாகிவிட்டார்.

“ஏன்னா வெள்ளைத்தோலை பார்த்துட்டு ஈன்னு வழியரேளா!”.

ஜட்ஜு ஐயா அமைதியானார். அலமேலு குசுகுசுத்தது ஆஸிக்கு கேட்டிருக்க சான்ஸ் இல்லை. அலமேலு டப்பிங்கைத் தொடர்ந்தார்.

“தெயார் இஸ் வன் சீன். ஹிஸ் டாட்டர் இஸ் டாக்கிங் இன் த ஸ்லீப்பிங் .. விடுங்கடா விடுங்கடா ஒரு நாளைக்கு எத்தினை பேர்டா வருவீங்க.. யூ நோ .. லீவ் மீ பாஸ்டர்ட்ஸ்.. ஹாவ் மெனி டைம்ஸ் வில் யூ கம் இன் எ டே?”

“Can we continue this after the movie?.”

“நோ .. ஷி வாஸ் பிளாபரிங் அண்ட் கமல்ஹாசன் ஸ்டார்டட் கிரையிங் .. ஸோ இமோஷனல் யூ நோ! ஐ கிரைட்”

அலமேலு அழ ஆரம்பிக்கையில் கமல்ஹாசன் நைட் கிளபில் ஒரு பெண்ணின் உதட்டோடு உதடு பதித்துக்கொண்டிருந்தார்.

“Ma, are you alright? Do you want a tissue?”

“நோ நோ .. ஐ ஆம் ஆல்ரைட் … ஐ லவ் கமல்காசன்… எங்காத்துக்காரரும் இருக்காரே. ”

வெள்ளைக்காரி எக்ஸ்கியூஸ்மீ சொல்லி பாத்ரூம் போவது கேட்டது.

சுட ஆரம்பிக்கிறார்கள். ஒவ்வொருவராக சாக ஆரம்பிக்கிறார்கள். கமல் ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்படுகிறார். ஆளாளுக்கு அவருக்கு ஒன்றுமாகாது, திடமாகவே இருக்கிறார் என்கிறார்கள். இறுதிக்காட்சியில் திரிஷாவும் கமலும் பாயும்போதே வெள்ளைக்காரி திரும்பிவந்தாள்.

“ஓ ஸ்விட்டி, யு மிஸ்ஸ்ட் இட் … திரிஷா வாஸ் ஷாட்”

“Is he survived?”

“ஹி இஸ் ஏ ஸ்ட்ரோங் காரக்டர்”

“How old is he?”

“ஹி மஸ்ட் பி சிக்ஸ்டி … பட் லுக் .. ஹி சூட்ஸ் டு திரிஷா”

ஜட்ஜ் ஐயா மெதுவாக இருமினார். “நீயே உனக்கு ராஜா” பாடல் ஆரம்பிக்கிறது.

“விஷ் தே ஹாட் எ ரொமாண்டிக் டூயட் வித் திரிஷா”

அலமேலு மாமி இன்னமும் இரண்டுமாதங்கள் இங்கிருந்தாலே வெள்ளைக்காரி அவாளுக்கு அல்வா கொடுத்துவிட்டு எஸ்கேப்பாகிவிடும் என்று புரிந்தது. படம் முடிந்து வெளியேறுகையில் ஆர்வம் தாங்காமல் குயிலின் முகத்தைப் பார்த்தேன்.

தோசைப்பானைக்குள் விழுந்தெழும்பிய கழுத்துவெட்டிக் கோழிபோல குயில் திரு திருவென முழித்தது.

தீபாவளி.

முதல் நாள் ஷோ.

கமல்ஹாசன் படம்.

படம் எப்பிடியண்ணே?


தூங்காவனம் உலகத்தரம்.

அதிலும் அலமேலு மாமி. அசத்திட்டேள் போங்கோ!

*******************

Contact form