Skip to main content

கனக்ஸ் மாமா வளர்த்த ஆட்டு மரம்

 

i_165

கனகநாய்கம் J.P
விவசாய விஞ்ஞானி
புத்தூர்.

கனக்ஸ் மாமாவினுடைய வீட்டுப் படலையை திறக்கும்போதுதான் கவனித்தேன். யாரோ அவருடைய பெயர்ப்பலகையில் 'ய'வில் குத்துப்போட்டு அவரை நாய்கம் ஆக்கியிருந்தார்கள். சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தேன்.

கனக்ஸ் மாமா வீட்டு முற்றத்துக்குள் நுழையும்போதே ஒரு வித்தியாசத்தை உணரலாம். அவரின் தோட்டம் முழுதும் புதினமான மரங்களே நிற்கும். எந்த செம்பரத்தையிலும் ஒரே நிறப்பூ பூக்காது. விதம் விதமான செம்பரத்தைகள் ஒரே மரத்திலேயே பூத்துத்தொங்கும். செம்பரத்தையின் கொப்புகள் எல்லாம் டிஷ்ஷு பெப்பர் சுற்றி ஒட்டப்பட்டு கிடக்கும். அருகில் இருந்த எலுமிச்சையின் கிளைகளில் சுற்றிக்கட்டப்பட்டிருந்த பொச்சுமட்டை பதியங்களில் தண்ணீர் எந்நேரமும் வடிந்தபடியே இருக்கும். வாழைமரத்தண்டுகளில் எல்லாம் சிறிய சிறிய பொந்துகள் அடித்து அதில் ரோசாச்செடிகள் நட்டு வளர்த்திருப்பார். வாழைக் குலை போட்டிருக்கும். அரையில் ரோசா பூத்திதிருக்கும். ஒரு வாழை பூராக மஞ்சள் கோன்பூ பூத்துக்கிடந்தது. ஒரு பக்கம் அரை அடியில் பிலாமரம் காய்த்திருந்தது. எல்லாவற்றுக்குமேலாக வாசலில் இரண்டு நீளமான தென்னை மரங்கள் எதிரெதிரே வட்டவடிவில் ஓலை நிலத்தில் முட்டும்வகையில் அலங்கார வளைவாய் நின்று வரவேற்கும். தேங்காயை கையாலே பிடுங்கலாம். மரம் ஏறத்தேவையில்லை. உச்சி வளைவில் ஒரு பொன்மொழி பெயிண்டால் எழுதப்பட்டிருக்கும்.

"ஐம்பதில் வளைக்கமுடியாது. ஆறிலிருந்தே வளைக்கத்தொடங்கு!"

மாமி விளக்குமாற்றால் முற்றம் கூட்டிக்கொண்டிருந்தார். நான் வந்ததை கவனித்தும் நிமிர்ந்து பார்க்கவில்லை. விளக்குமாற்று வேகத்தில் புழுதி நாசியில் அடித்தது. அவர் நல்ல மூடில் இல்லை என்று புரிந்தது.

மாமா வீட்டில இல்லையே?”

கழுதை கெட்டா குட்டிச்சுவர்”

நானா மாமாவா கழுதை என்ற டவுட்டை கிளியர் பண்ணாமல் மெதுவாக சைக்கிளை நிறுத்திவிட்டு பின்கோடியில் இருந்த மாமாவின் ஆய்வுகூடப்பக்கம் நழுவினேன்.

“கனகு வேளாண் ஆய்வுகூடம்” என்று மட்டைப்பேப்பரில் பெயிண்டிங் ஸ்டிக்கால் எழுதிக்கிடந்தது. மூன்றடி அகல தடுப்பு வாசல். பத்தடிக்கு பத்தடி வடலி அடைப்பு. கூரை என்ற சமாச்சாரத்துக்கு மாமியின் பழைய வெள்ளை சேலைகள் இரண்டு போர்த்திக்கட்டப்பட்டிருந்தன. ஆங்காங்கே வெளிச்சம் வர ஓட்டைகள் சேலைகளில் போடப்பட்டிருந்தன. சரியாக வேயாத அடைப்புக்குள்ளால் உள்ளே எல்லாமே தெரிந்தது. படலை என்கின்ற குட்டி அடைப்பை தூக்கி நகர்த்திவிட்டு நுழைந்தால், உள்ளே கனகு வேளாண் ஆய்வுகூடத்தின் மூலையில் ஒரு சின்ன மேசை. கதிரை போடக்கூட இடம் போதாது. விதம் விதமான அங்கர் பை மரங்கள், மண் வகைகள், ஜாடிகளில் செத்த எலிகள், கரப்பான்கள், மண் புழுக்கள், நிறைய நெருப்புப்பெட்டிகள், பட்டுப்பூச்சிகள் என்று ஆய்வுகூடம் எங்கனும் சாமான்கள் பரவிக்கிடந்தன.உடைத்து குடித்து முடிக்காமல் ஒரு கோக் டின் இருந்தது. உள் வேலியில் உதயனில் வெளிவந்த, மாமா டக்ளஸ் தேவானந்தாவிடம் “பசுமை வேளாண்” விருது வாங்கும் படம் லேமினேட் பண்ணப்பட்டு தொங்கியது.

எதிர் மூலையில் மாமா முதுகுகாட்டி குந்தியிருந்தார். வெறும் மேல். வெள்ளை பாண்ட்ஸ். பாண்ட்ஸ் பின் பக்கம் நடுவாலே மாமியில் தையலோடு சண்டைபோட்டு பிரிந்திருந்தது.

மாமா குனிந்து பூதக்கண்ணாடியால் ஒரு செடியின் உச்சியை நுணுக்கமாக அவதானித்துக்கொண்டிருந்தார்.

கூப்பிட்டேன்.

“மாமா…”

“மாமோய்”

“உஷ்ஷ் ...”

சொல்லிக்கொண்டே திரும்பினார். கண்ணிலே மலர்ச்சி தெரிந்தது. பூதக்கண்ணாடியை என் கையில் வைத்தார்.

”தெரியுதா எண்டு பார்”

”என்ன மாமா?”

“வால்… பத்து கிழமைல வால்தான் முதலில வரும்”

குனிந்து அந்த செடியை கவனித்தேன். ஒற்றை தண்டில் ஆங்காங்கே இலைகள் இருந்தன. இந்த செடியை இதற்கு முன்னே எங்கேயும் கண்டதாக ஞாபகம் இல்லை. ஐந்தடிக்கு வளர்ந்திருந்தது. கிளைகள் இல்லை. உச்சியில் மொட்டு போல ஒன்று மொத்தமாக இருந்தது.

“இது என்ன மரம் மாமா?”

“டார்டாரி லாம்ப் பிளான்ட் … வெஜ்ஜிக்ரோஸ் பாமிலி”

“அப்பிடி எண்டால்?”

“அந்த மொட்டைக் கவனி”

“மொட்டுல என்ன மாமா?”

“மொட்டிண்ட நுனி சாதுவா ..”

“விரிஞ்சிருக்கு .. அதுக்கு?”

“அதுக்குள்ளால இந்த பூதக்கண்ணாடியால பாரு.. ஒரு வால் தெரியும்”

”வாலா?”

“ ஒரு ஆட்டிண்ட வால்”

திரும்பி மாமாவை பேசாமல் பார்த்தேன்.

“ஓமடா .. ஆட்டிண்ட வால்தான் தெரியும் .. வடிவா பாரு”

மாமா கொஞ்சம் தயங்கினார். போய் ஆய்வுகூட தடுப்பை அகற்றி வெளியே எட்டி அக்கம்பக்கம் பார்த்துவிட்டு மீண்டும் கவனமாக மூடிவைத்துவிட்டு வந்தார். காதுக்குள் கிசுகிசுத்தார்.

”இந்த செடியில இருந்து ஒரு ஆட்டுக்குட்டி காய்க்கப்போகுது!”

“என்ன கொட்..” என்று ஆரம்பித்துவிட்டு படக்கென்று நிறுத்தினேன். மாமாவை கொஞ்சம் பதட்டத்தோடேயே பார்த்தேன். அவரில் எந்த சலனமும் தெரியவில்லை.

“புறநானூறில இது இருக்கு .. தமிழன் என்னெல்லாம் கண்டு பிடிச்சிருக்கிறான் தெரியுமா .. ஆறுமாசமா குத்தி முறிஞ்சு .. மொட்டு வந்திருக்கு.. பார்த்தியா?”

பகீர் என்றது. மாமா ஒரு லூசர் என்று குமரன் அப்பவே சொன்னவன். நான்தான் கேட்கவில்லை. “அந்த ஆளுக்குள்ள ஏதோ இருக்கடா” என்று சொல்லியிருந்தேன். இந்த கதையை குமரனிடம் போய் சொன்னால் கதையே கந்தல். மாமாவை மாமா வழியிலேயே போய் மடக்கலாம் என்று நானே ஆரம்பித்தேன்.

“என்ன சொல்லுறிங்க மாமா? இந்த செடில காய்க்கிறத ஆட்டுக்குட்டியள் சாப்பிடுமா?”

“இல்ல தம்பி .. இந்த செடில ஆட்டுக்குட்டியே காய்க்க போகுது”

“இதென்ன விழல் கதை” என்று வாய்நுனி வரைக்கும் வந்தாலும் அடக்கிக்கொண்டேன்.

”என்ன மாமா லூசுத்தனமா கதைக்கிறீங்கள்… எங்கையாவது ஆடு மரத்தில காய்க்குமா?”

“நான் லூசன்தாண்டா … உன்ர மாமி கூட இத தான் சொன்னவா”

மாமி யாரை கழுதை என்று சொன்னார் என்ற டவுட் கொஞ்சம் கிளியர் ஆனது. மாமா பயங்கர கோபத்தில் இருந்தாற்போல தோன்றியது.

“ஐன்ஸ்டீனை கூட லூசு எண்டு தான் முதலில சொன்னவை."

“ஆரு?”

மாமா என் கேள்விக்கு பதில் சொல்லாமல் ஜாடியில் இருந்த ஒரு சில மண்புழுக்களை எடுத்து செடிக்கு போட்டார். பின்னர் ஒருவகை திரவத்தை எடுத்து ஊற்றினார். மீண்டும் ஒருமுறை அந்த மொட்டை உற்றுப்பார்த்தார்.

“முதலில வால் வரும் .. மூன்றாம் வாரத்தில் பின்னங்கால் தொடங்கி இரண்டு நாளில் தலை வந்திடும் ..”

என்பக்கம் திரும்பாமலேயே சொல்லிக்கொண்டிருந்தார்.

“எங்க கிடந்து இந்த மரத்தை கண்டு பிடிச்சீங்கள்?”

“இது ஒருவித ரைசொம் ப்ரோசஸ். இஞ்சி, உள்ளி, பருத்தி விதைகளையும் எலியின் கல்லீரலையும் பிணைஞ்சு, மூண்டு நாளு ஊறவிட்டு.. ச்சே .. இதுக்கு பேட்டண்ட் எடுக்கோணும் .. அமைச்சரோட கதைக்கோணும்”

“ஆடு காய்ச்சா பாரத்தில தண்டு முறிஞ்சிடாதா மாமா?”

நான் கேள்வி கேட்க மாமாவுக்கு உற்சாகம் தாளவில்லை.

”ஆடு வளர வளர நடுத்தண்டு பாரத்துக்கு வளையும். நல்லா ஆடு முத்தின உடன, அது தரைக்கு வந்திடும். சுத்திவர இருக்கிற புல்லை எல்லாம் மேயும்”

“கழனித்தண்ணியும் வைக்கலாமா?”

“அந்த தண்டு முறிஞ்சுது எண்டால் ஆடு செத்துப்போயிடும்… இந்த ஆட்டில இருந்து பால் கறக்க ஏலாது. புழுக்கையும் போடாது .. ”

“அப்ப இந்த ஆட்டால என்ன பிரயோசனம்?”

“ஆக்கள் சாப்பிடலாம் … மரத்தில காய்க்கிறபடியா சுத்த சைவ ஆடுதானே .. ஐயர்மார் எல்லாம் இனிமேல் ஆட்டுக்கறி வெளுத்துக்கட்டலாம்”

இதுக்குமேலே கேட்டால் நானே நம்பிவிடுவேன் போல தோன்றியதால் சொல்லிவிட்டு நைசாக நழுவினேன். வளவு முழுக்க ஆட்டுமர தோட்டம் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்க சிரிப்பு வந்தது. தோட்டமே மே மே என்று கத்திக்கொண்டிருக்கலாம்.

மாமி கிணற்றடி கல்லில் உடுப்பு அடிச்சு தோய்த்துக்கொண்டிருந்தார். சொல்லாமல் கிளம்பினேன்.

ஒரு மாசம் ஓடியது. கிரிக்கட்,  புலி ரிலீஸ், பரீட்சை என்ற பரபரப்பில் மாமாவின் ஆட்டை நான் மொத்தமாக மறந்துபோனேன். தீபாவளியன்று ஆடு அடிக்கும் கதை வீட்டில் வந்தபோதுதான் “அட மறந்துவிட்டோமே” என்று ஞாபகம் வந்தது. உடனேயே சைக்கிளை புத்தூருக்கு விட்டேன். அதே மாமி, அதே விளக்குமாறு, அதே ஒட்டு செம்பரத்தை, அதே எலுமிச்சை. மாமா எங்கேயென்று கேட்க அதே கழுதை இருக்கும் இடத்தை மாமி சொல்ல நைசாக கனகு வேளாண் ஆய்வுகூடத்துக்குப் போனேன். மாமா குனிந்து இருந்து எதையோ ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். இம்முறை சாரம் கிழிந்திருந்தது.

“மாமா ..”

“நீயா வா .. இஞ்ச ஒருக்கா பாரு .. இந்த மொட்டில ஒரு செட்டை தெரியுது பாரு”

பூதக்கண்ணாடியை நீட்டினார். விலகி வழி விட்டார்.

“கவனமா .. பாரு .. மொட்டைத் தொட்டிடாத .. புறா பறந்திட்டுது எண்டால் பிடிக்க ஏலாது .. சனியன் .. ஏற்கனவே ஒண்டு ஓடிப்போயிட்டுது”

சொல்லிக்கொண்டே பூதக்கண்ணாடியை கையில் அழுத்தினார். அசையாமல் நின்றேன்.

“அந்த ஆடு பேந்து காய்ச்சதா மாமா?”

கேட்டுக்கொண்டே அவர் கண்ணை பார்த்தேன். மாமா சலனமே இல்லாமல் சொன்னார்.

“ஓ அதுவா .. தீபாவளிக்கு அடிக்கலாம் எண்டு பார்த்தன்.. ஆனா போன கிழமையே முத்தீட்டுது. சாரதாதான் சமைச்சவள். அப்பிடி ஒரு பொரியல் கறி வாழ்க்கைல சாப்பிட்டிருக்க மாட்டாய்”

சாரதா மாமி கிணற்றடியில் ஊத்தை உடுப்பை கிழிய கிழிய அடிச்சுத் தோய்க்கும் சத்தம் கேட்டது.

 

********************

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக