Skip to main content

த கிரேட் பனங்கொட்டைக் குசினி


அம்மாவின் சமையலுக்கு அடிமையாகாதவர்கள் வெகுசிலரே. அதன் காரணமும் எளிமையானது. சிறுவயதுமுதலே அம்மாவின் சமையலுக்கே எங்கள் நாக்குகள் இசைவாக்கப்பட்டிருக்கும். சிலபேருக்கு அது அம்மம்மாவின் சமையலாகவோ அக்காவின் சமையலாகவோ அமைந்திருக்கலாம். ஆனால் அடிப்படை ஒன்றுதான். எந்தச் சுவைக்கு சிறுவயதில் நாக்கு சப்புக்கொட்டியதோ அதையே நிஜமான ருசி என்று பெரும்பாலானவர்கள் வாழ்நாள் முழுதும் நினைத்துக்கொண்டிருப்பார்கள். அற்புதமான பாஸ்டாக்களையும் விறகு நெருப்பு பிட்ஸாக்களையும் தென் கிழக்கு ஆசிய குவே தியோக்களையும் அவற்றின் ருசியே அறியாமல் நாம் எள்ளி நகையாடிக் கவிதை எழுதுவதும் அதனால்தான்.

நானும் அதற்கு விதிவிலக்கல்ல. அம்மாவின் சாப்பாட்டுக்கு நான் ஒரு கொத்தடிமை. என் சிறு பிராயத்து நினைவுகள் பல எங்கள் வீட்டுக் குசினியிலேயே நிறைந்திருக்கின்றன. அம்மா மீன் அரிந்து கழுவும்போது கிணற்றில் தண்ணி அள்ளிக் கொடுப்பதும் நெருங்கிவரும் ஹீரோவையும் காகங்களையும் கலைப்பதும் என் ஆரம்பகாலத்து நினைவுகள். பைப் வடிந்தால் கீழே ஈரச்சாக்கு எடுத்துப் போடுவதுகூட என் வேலை. அம்மா அதைக் கழுவிக்கொடுக்க பிழிந்து காயப்போட்டதும் ஞாபகம் இருக்கிறது. குப்பைபோடக் கிடங்கு வெட்டிக்கொடுத்ததும் நான்தான். ஊதக் கஷ்டமாக இருந்தால் அடுப்பைப் புணலால் ஊதிப்பற்றவைக்க அம்மா கூப்பிட்டதும் என்னைத்தான்.
முதன்முதலாக பழகிய சமையல் சம்பல் இடித்தல். அதன் பின்னர் அம்மியில் சம்பல் அரைக்கப் பழகிக்கொண்டேன். இரண்டுமே சுயநலம் சார்ந்தவை. எனக்குப் பழஞ்சோறும், பாணும் சம்பலும் பயங்கரமாகப் பிடிக்கும். பாண் என்றால் சம்பல் என்றால் பொரித்து இடிக்கவேண்டும். பழஞ்சோறு என்றால் அரைத்த சம்பல். நான் பழஞ்சோறு சாப்பிடவேண்டும் என்பதற்காகவே அம்மா முதல்நாள் அரைச் சுண்டு அரிசியை அதிகமாகப் போடுவதுண்டு. பழஞ்சோறு என்றால் அதற்குப் பொரிக்காத செத்தல்மிளகாயில் சம்பலை அம்மியில் அரைத்து அங்கேயே தேசிக்காய்ப்புளி விட்டுக் குழைக்கவேண்டும். வெறுமனே பழங்கறியோடு நான் பழஞ்சோறு சாப்பிடமாட்டேன். அப்படிச் செத்தமிளகாய்ச் சம்பல் அரைக்க அம்மாவுக்குக் கொஞ்சம் கஷ்டம் என்பதால்தான் அதை நான் பழகவேண்டிவந்தது. அடுத்த ஸ்டெப் முட்டை பொரித்தல். நறுக்காக சின்ன வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் வெட்டித் தனியாகப் பொரித்து பின்னர் அதை முட்டை, உப்பு, தூளுக்குள் போட்டு வெளுத்து, பிறகு மொத்தமாகப் பொரிப்பது. அதே ரெசிப்பி இன்றுவரை தொடர்கிறது. முட்டைப்பொரியலில் எனக்கு வேறு கிளைகள் இல்லை. தனி முட்டையைப் பொரிப்பதோ, வெங்காயத்தைப் பச்சையாகப் போட்டு அடித்துப் பொரிப்பதோ சோம்பேறிகளின் செயல் என்பது என் எண்ணம்.
புட்டு அவிக்கப் பழகியதும் தேவையின் நிமித்தம்தான். மொறட்டுவை என்பது ஒரு சிங்கள ஏரியா. அங்கே எங்கட சாப்பாடே கிடைக்காது என்று பலரும் சொன்னதும் நெஞ்சு டிக் என்றது. உடனேயே அம்மாவிடம் அவசர அவசரமாக ஒரு கிராஷ் கோர்ஸ் படித்து புட்டும் இறைச்சிக்கறியும் செய்யப் பழகிக்கொண்டேன். மீன் குழம்பு எப்படி செய்வது என்பதைப் படிக்கவில்லை. ஆனால் அதையும் பின்னாளில் சொந்தமாகப் பழகிக்கொண்டேன். சொந்தமாக என்றால், ஆழ்மனதில் அம்மாவின் மீன் சட்டி ஞாபகத்தில் இருந்தது. அம்மா மீனைக் கழுவித் துண்டுகளாக்கி சட்டிக்குள் போட்டு, மேலே மஞ்சள், தூள், உப்பு, வெந்தயம், உள்ளி, புளிக்கரைசல் என இன்னும் பலதைப்போட்டு இரண்டாம் பாலில் அவியவிடுவதும் பின்னர் முதற்பாலைப்போட்டு வற்றவிடுவதும் தானாக ஞாபகத்தில் வர, பல ஆண்டு சொதப்பல்களுக்குப் பின்னர் ஓரளவுக்கு எனக்கான வேர்சனைப் பிடித்துக்கொண்டேன்.
சிங்கப்பூர் வந்ததும் பழையபடி கதை யாழ்ப்பாணத்துக்கே மாறிவிட்டது. அக்காவுடன் இருந்ததால் சமைக்கவேண்டிய தேவை வரவில்லை. எனக்குச் சமைக்கத்தெரியும் என்ற அளவிலே மற்றவர் சமையலுக்குக் கருத்துச் சொல்லுவதும் என்ன சமைக்கவேண்டும் என்று அக்காவுக்கு ஓர்டர் செய்வதும் சந்தையில் போய்ச் சாமான் வாங்கிக்கொடுப்பதும் என்கின்ற ‘ஆண்களுக்கான’ வேலைகளை நான் செய்துவந்தேன். அவுஸ்திரேலியா வந்தும் அந்த மனப்போக்கு கூடவே இருந்தது. சமையல் ஆண்களுக்கான வேலை அல்ல என்று என் நண்பர்கள் பலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் உணர்த்திக்கோண்டே இருந்தார்கள். அவர்களுக்கு முன்னாலே சமைப்பது என்பதும் கோழைத்தனமாகத் தோன்றியது. அப்பாதான் ஸ்டார்டிங் பொயிண்ட். ஆண்களுக்கு சமையல் தெரிந்திருக்கவேண்டும். ஆனால் பெண்கள் இருக்கும்போது சமைப்பது அவமானம். அத்தோடு அவர்களுக்கு இடம் கொடுத்ததாக ஆகிவிடும் என்று அவர் கோடி காட்டுவார். எனினும் ஆண்கள் செய்யும் சமையல்களை நான் அவ்வப்போது செய்வதுண்டு. அதாவது அம்மா கறி வைத்துத் தந்தால், கடையில் வாங்கிய வெட்டிய ரொட்டிகளை பாபிகியூ தட்டில் கொத்து ரொட்டி போடுவதில் நான் விண்ணன். வீட்டுப் பார்ட்டிகளில் இந்த பில்டப்பைக் கொடுத்து ஹீரோ ஆவதில் அற்ப சந்தோசங்கள் உண்டு. ஆனால் நான் சமையலறைக்குள் புகுந்தால் அது கரடி புகுந்த வெங்கலக்கடை ஆகிவிடும். அததது போட்ட இடத்திலேயே கிடக்கும். சிங்க் அழுக்குப் பாத்திரங்களால் நிரம்பிவிடும். ஆனால் நான்தானே கொத்துப் போட்டுக் களைத்திருப்பேனே! அம்மாவின் தலையில்தான் கழுவும் வேலையும் கடைசியில் பொறியும்.
Then the magic happened. ஜீவி வந்தாள்.
புரட்சியோ மலர்ச்சியோ மயிரோ மட்டையோ எதுவாயினும் வீட்டிலிருந்தே ஆரம்பிக்கவேண்டும் என்பது அவளின் தத்துவம். பலருக்குமே அதுதான் தத்துவம். ஆனால் அவை மேடைகளிலும் புத்தகங்களிலும் மாத்திரம் தூங்கிக்கிடக்க இங்கே அது வீட்டில் நிஜமாகவே உருவெடுத்து நடமாடத்தொடங்கியது. சமையல் என்பது வெறுமனே அடுப்பில் வைத்து இறக்குவதல்ல. அதற்கு முன்னரான வெட்டுக் கொத்துகளிலிருந்து பின்னரான கழுவல் அடுக்கல்கள்வரை எல்லாமே சமையலுக்குள் அடங்கும் என்பது முதல் படிப்பினை. இரண்டாவது, ஒன்று சமைப்பதைச் சாப்பிடல் வேண்டும், அல்லது சாப்பிடுவதைச் சமைக்கவேண்டும். இரண்டுமே இல்லை என்றால் இருக்கவே இருக்கிறது ஊபர் ஈட்ஸ். மற்றபடி வேறு பம்மாத்து டிராமாக்கள் எதுவுமே இங்கே செல்லுபடியாகாது. மிக எளிமையான சமன்பாடு இது. எனக்குப் புட்டு என்றால் உயிர். அப்படி என்றால் புட்டை நானே அவிக்கவேண்டும் அல்லது உயிரை மாய்க்கவேண்டும். சிம்பிள் லொஜிக்தான். ஆனால் அற்புதமாக வேலை செய்தது. அவரவர் மனநிலைக்கு ஏற்ப சமைக்க ஆரம்பித்தோம். இயலாமற்போகும்போது கடையில் சாப்பிட ஆரம்பித்தோம். அடிக்கடி அம்மா வீட்டுக்கும் போவதால் சாப்பாடு என்பது அத்தனை சிக்கலாக இருக்கவில்லை.
ஆனாலும் ‘peer pressure’ என்றொரு மயிர் நம் சமூகத்தில் இருக்கிறது. ‘எதற்குக் குழந்தைகள் வேண்டாம் என்று வாழ்கிறீர்கள்?’ என்பதில் அந்த மயிர் ஆரம்பித்தது. ‘குழந்தைகளிலோ குழந்தை வளர்ப்பிலோ நம் வாழ்வின் இருபத்தைந்து வருடங்களைச் செலவிடுவதிலே எமக்கு இஷ்டமில்லை, எமக்கு வேறு சோலிகளில் ஆர்வம் அதிகம்’ என்றால் அது அவர்களுக்குப் புரியவே இல்லை. ஆயிரத்தெட்டு விளக்கங்கள். பலருக்கு இப்படி ஒரு சாத்தியம் இருப்பதே தெரியாது என்பதால் ஆளாளுக்கு அறிவுரைகள். அதை ஓரளவுக்கு இந்த எட்டு வருடங்களில் கடந்தாயிற்று என்று வைத்துக்கொள்ளுங்களேன். அடுத்தது இந்தச் சமையல். ஒரு ஆண் ‘manly’ வேலைகளை மாத்திரம் செய்யவேண்டும். அப்படிச் செய்யாமல் ‘பெண்களின் வேலைகளையும்’ இழுத்துச் செய்பவன் கோழை என்றொரு அழுத்தம் பல வழிகளில் கொடுக்கப்படும். வழமைபோல டீம் கப்டின் அப்பாதான். வீட்டுக்குள் தனியே இருக்கும்போது சமைக்கலாம். டீ ஊற்றலாம். ஆனால் ஆட்களுக்கு முன்னே செய்யாதே. விருந்தினர் வரும்போது நீ டீ ஊற்றாதே. படிச்சவன் உப்பிடிச் செய்தால் மரியாதை இல்லை. இப்படிப் பல அறிவுரைகள். கூடவே வகை தொகையில்லாத ஆண்களின் சமையல் ஜோக்குகள்.
இதுவெல்லாவற்றையும் கடந்து நம் வாழ்க்கையில் நானும் ஒரு சம பங்காளராக, ஆணுக்கு பெண்ணுக்கு என்று லூசுத்தனமாக வேலைகளைப் பிரிக்காமல் வாழ்கிறேன். ‘I am proud of who I am now’. இப்படி ஒரு பிட்டு என் மனதுள் பலகாலமாகவே ஓடிக்கொண்டிருந்தது.
Then I watched the movie ‘The great Indian kitchen’.
நேற்றுத்தான் பார்த்தோம். பார்க்கும்போதும் பின்னரும் நானும் ஜீவியும் செய்துகொண்ட உரையாடல் (அவள் அதைச் சண்டை என்பாள்) சூமில் வரவேண்டிய ஒன்று. அந்தப்படத்தைப் பார்க்கும்போது அதிலிருக்கும் ஆண்கள்போல நானில்லை என்று ஒரு திருப்தியும் பெருமையும் எனக்கு வந்தது. ஆனால் அவள் அந்தக் கிடங்குக்குள் ஒரு கிரனைட்டைப் போட்டாள். தன் டீ கப்பைத் தானே கழுவும் ஒரு ஆண்கூட அப்படித்தான் படத்தைப் பார்க்கும்போது யோசிப்பான். மேசையில் கொட்டாமல் சாப்பிடும், தான் சாப்பிட்ட பிளேட்டைத் தானே கழுவும், மனைவியோடு உட்கார்ந்து சாப்பிடும் குடும்ப ஆண்களும்கூட அப்படித்தான் நினைக்கக்கூடும். ஆனால் பனங்கொட்டைகளில் தொண்ணூற்றேழு வீதமானவை இந்தப் படத்தில் வரும் ஆண்களின் பெரும்பாலான கூறுகளைத் தம்வசம் தெரிந்தோ தெரியாமலோ கொண்டிருக்கின்றன. எப்போதாவது ஒருநாள் வேலை செய்வதும், விருந்தினர் வரும்போது பாத்திரம் கழுவுவதும் விசயமல்ல. Day in, day out, நீ வேலை முடிந்து களைத்து வந்திருக்கிறாயா, இல்லை டெனிஸ் விளையாடி தோற்பட்டை வலிக்கிறதா என்ற எந்தச் சமாளிப்பும் சொல்லாமல் வீட்டு வேலை செய்யவேண்டும். வாழ்க்கையில் சம அளவில் அந்த ரோல்கள் ரிவேர்ஸ் ஆகவேண்டும். யார் இங்கே இப்படி இருக்கிறார்கள் என்று கேட்டாள். உண்மைதான். ஆனால் நான் ஓரளவுக்கு ஓகேதானே? என்றேன்.
ம்ஹூம். No way.
நினைவுதெரிந்த நாள் முதலாய் அம்மாவோடு பல தருணங்களில் நான் குசினிக்குள் நின்றிருக்கிறேன். முன்னே சொன்னதுபோல சின்னச் சின்ன ‘manly’ உதவிகளைச் செய்திருக்கிறேன். ஆனாலும் அம்மா பாவம் என்ற எண்ணம் எனக்கு வந்ததேயில்லையே. நல்ல இறைச்சிக்கறி சாப்பாடு சாப்பிட்டு முடித்து அரை மணிநேரம் கழித்து இஞ்சி பிளேன்ரீவேறு கேட்டிருக்கிறேன். யோசித்துப்பார்த்தால் அம்மாவை நான் இன்னமும் அந்தப் பனங்கொட்டைக் கிச்சினிலேயே வைத்திருக்கிறேன் என்று தோன்றுகிறது. அம்மாவின் சமையல் உயிர், அம்மா நீங்கள்தான் தெய்வம் என்று பிட்டுகளைப் போட்டு புட்டுகளை அள்ளி எறிவதோடு சரி. அப்பாதான் ஒரு ‘write off’ என்று வைத்துக்கொண்டாலும் எனக்கெங்கே மதி போனது? அம்மா சாப்பிடக்கூப்பிட்டால் சாப்பிடும் நேரத்துக்குப் போய் அள்ளிக்கொட்டிவிட்டு வருவதே ஒழிய என்றைக்காவது கொஞ்சம் வெள்ளனவே போய் உதவி செய்திருக்கிறேனா? அல்லது நின்று பாத்திரங்களை கழுவிவைத்து விட்டுத்தான் வந்திருக்கிறேனா? அம்மா பத்து நாள் சாப்பிடக்கூப்பிட்டால் நான் ஒரு நாள் கூப்பிட்டுச் சீன் போட்டுவிட்டு அம்மாவுக்கு சாப்பாடு கொடுத்த பெருமையை வேறு எடுத்துக்கொள்கிறேன். சிங்கப்பூரில் அக்காவுக்கு செய்த அநியாயங்கள் எந்த வகையில் சேரும்?
அந்தப்படத்திலுள்ள வாழ்க்கை என்பது பல நூறு ஆண்டுகளாக எம்முள் ஊறிப்போன ஒன்று. Very normalised life style. அதன் சமனிலித்தன்மை நம்மை இடறுவதேயில்லை. ஆளாளுக்குப் புள்ளிகள் அப்படி இப்படி மாறினாலும் அடிப்படை அப்படியே இருக்கிறது. திரைப்படங்கள் எப்போதாவது ஒருமுறைதான் இப்படி சிந்தனைகளைத் தூண்டுவதுண்டு. முன்னொருமுறை கரு பழனியப்பனின் ‘பிரிவோம் சந்திப்போம்’. இப்போது ‘The great indian kitchen’.
சாந்தி அக்கா அடிக்கடி சொல்லிக்கொள்ளும் வாசகங்கள் ஞாபகத்துக்கு வருகிறது.
“எல்லோருமே கிராம வாழ்க்கையை மிஸ் பண்ணுகிறோம், கிராமங்கள்தாம் உண்மையான தமிழரின் கலாசாரம் என்று ஏங்குகிறார்கள், ஆனால் எனக்கு அப்படி இல்லை, நான் சென்னை நகரத்தில் வளர்ந்த பெண். கிராமத்துப் பெண்களைவிட நகரத்தில் அதிகமாகவே உரிமை கிடைக்கிறது. குறைந்தபட்சம் எனக்குக் கிடைத்தது. இதுவே கிராமமாயின் நான் எப்படி இருந்திருப்பேனோ தெரியாது. அதனால் நானெல்லால் கிராமத்தை மிஸ் பண்ணுவதேயில்லை, யாராவது அப்படிச்சொல்லும்போதும் இந்தக் கேள்விகளைக் கேட்கத் தோன்றுகிறது”
எவ்வளவு உண்மையான வாக்கியங்கள் அவை. ஆனால் நகரங்களிலும் வெளிநாடுகளிலும்கூட நிலைமை பெரியளவில் முன்னேற்றமில்லை என்பதுதான் உண்மை. எந்த ஆணுமே தாமாகத் திருந்தப்போவதில்லை. அறைக்குள் ஏ.சி புல் ஸ்பீடில் வேலை செய்யும்போது வெய்யிலில் வந்து நிற்கப்போவதில்லை. இதுதான் பொதுப்புத்தியின் யதார்த்தம். நம்மை எதிர்த்துக் கேள்வி கேட்டும், நம்மைக் கொஞ்சமேனும் முன்னேற்றக்கூடிய துணைகள் அமைந்தால் ஓரளவுக்கு நிலைமை சரியாகும். அல்லாவிட்டால் அத்தனை மயிராண்டிகளும் மாலை போட்டு கறுப்புச்சட்டை வேட்டி அணிந்து கூட்டாக ஐயப்பனுக்கு பஜனை செய்வோம். அடிக்கடி டீ கொண்டுவரச் சொல்லுவோம். இதிலே மாற்றமேதும் நிகழப்போவதில்லை.
படத்தைப் பார்த்து உரையாடி இதை எழுதிய பின்னரும்கூட என்னுள் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டதா என்பதும் கேள்விக்குறிதான். நான் ஒரு பெரிய இவன் மாதிரிதான் இங்கே எழுதியிருக்கிறேன் என்பதும் தெரிகிறது. இறுதி வரிகளைத் தொடும்போது ஒரு தன்னிகரற்ற பனங்கொட்டையாக தஞ்சைக்கோபுரம் அளவுக்கு நான் உயர்ந்து வளர்ந்து நிற்பதும் புரிகிறது.
ஒரு சக பனங்கொட்டையாகச் சொல்கிறேன். படத்தைப் போய் பாருங்கடா டேய்.

Comments

Popular posts from this blog

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .