96

Oct 8, 2018 3 comments


அலுவலகத்திலிருந்து காரை எடுத்துப் பிரதான வீதிக்குள் திரும்பமுதலே சசி அண்ணாவிடமிருந்து அழைப்பு வந்தது. அப்போதே தெரியும் அண்ணர் 96 பார்த்துவிட்டுத்தான் இருப்புக்கொள்ளாமல் எடுக்கிறார் என்று. அடுத்த முக்கால் மணிநேரம் நானும் அவரும் பேசிக்கொண்டதன் தொகுப்பு இது. படம் பார்க்காதவர்கள்கூட வாசிக்கலாம். ஒரு ஸ்பொயிலரும் கிடையாது. மே பி, கலாச்சார காவலர்கள், ஸ்கிப் இட். 

’96’ என்னுடைய பதின்மக்காதலை ஞாபகப்படுத்தியதா என்றால், ம்ஹூம். 96ல் நாங்கள் இடம்பெயர்ந்து வன்னியில் தங்கியிருந்தோம். பாடசாலை மொத்தமாகவே மூன்றோ நான்கு நாட்கள்தான் அந்த வருடம் இயங்கியது. அது கிடக்கட்டும். பொதுவாகவே எனது பதின்மக் காலத்தில் பள்ளித்தோழிகளின் நட்பு என்பது செவ்வாயில் தண்ணீர்தான். எதிரே சைக்கிளில் வருபவள் தற்செயலாகச் சிரித்துவைத்தாலே அது செவ்வாயில் டைனோசர் இருப்பதற்கு ஒப்பானது. நான் படித்தது முழுதும் ஆண்கள் கல்லூரியில். டியூஷனில் பெண்கள் தனிவரிசை, ஆண்கள் தனிவரிசை. எங்கள் பட்ச் பெட்டைகளை எங்களுக்கு சான்ஸ் கொடுக்காமல் எங்கள் வாத்திமாரே சைட் அடித்துக்கொண்டார்கள். தவிர நான் ஒன்றும் பெரிய விளையாட்டு வீரனோ, பாட்டுக்காரனோ கிடையாது. படிப்பிலும் சராசரி. எங்கள் வீடு ஒரு சாதாரண அரசாங்க உத்தியோகத்தர் குடும்பம். காத்தடிக்கக்கூட அம்மா கணக்குப்பார்த்துதான் காசு தருவா. இதில எவள் நம்மளபார்த்துத் திரும்பி, சிரிச்சு… ஒரு மண்ணும் கிடையாது. அப்படியே ஒன்றிரண்டு பார்த்துச்சிரித்தாலும் ஒன்று, அது என் பெரியப்பாவின் சித்தப்பாக்களின் பிள்ளைகளாக இருக்கும், அல்லது என்னருகில் யாரும் பேமசான பெடியன் சைக்கிளில் வந்திருப்பான். பேசிக்கலி நாங்கள் அந்த குட்டி ராமச்சந்திரனின் பிரண்ட்ஸ் வகையறாக்கள். ஆக நோ பீலிங். அப்படியே ஒன்றிரண்டின் மேலே பீலிங் இருந்திருந்தாலுங்கூட தற்சமயம் அதுகளைக்காணும்போது நெஞ்சும் பஞ்சும் அடித்துக்கொள்ள சான்ஸ் கிடையாது. Life moved on. தவிர அதுகள் ஷேர் பண்ணும் ‘மீன ராசிக்காரர்கள் சனிஸ்வரனுக்கு எள்ளுச்சட்டி எரிக்கவேண்டும்’ வகை போஸ்டுகளைப்பார்க்கையில் ‘அம்மாடி, தப்பீட்டம்டா’ எண்ணம்தான் வரும். 

சில வருடங்களுக்கு முன்னர் “Before Sunset” என்றொரு திரைப்படம் வந்தது (மூன்று படங்களில் இது இரண்டாவது). இங்கே ராம் ஜானுவுக்குப் பதிலாக அங்கே ஜெஸ்ஸி (ஆண் பெயர்), செலின். ஜெஸ்ஸியும் செலினும் அதில் ஒன்பது வருடங்களுக்குப்பின்னர் மீளவும் சந்திக்கிறார்கள். ஜெஸ்ஸி ஒரு எழுத்தாளன். செலின் பாடுவாள்! ஒரு நாள் பொழுது முழுதையும் இருவரும் பேசியே தீர்ப்பார்கள். சேர்ந்து நடந்து, கஃபேயில் கோப்பி குடித்து, காரில் பயணித்து. இருவரும் தத்தமது வாழ்க்கையைப்பற்றிப் பகிர்வார்கள். ஜெஸ்ஸிக்குத் திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும் உண்டு. செலினுக்கு ஒரு காதலன். இருவரும் முதற் சந்திப்புக்குப் பின்னர் சொல்லிவைத்தாற்போல ஏன் பின்னர் சந்தித்துக்கொள்ளவில்லை என்று பேசிக்கொள்வார்கள். ஜெஸ்ஸி செலினைத் தேடி வியன்னாக்குப்போன சமயத்தில் அவள் வீட்டில் ஒரு துக்கம் நிகழ்ந்ததால் சந்திப்பு நிகழாமலேயே போய்விட்டதை அறிந்து இருவருக்குமே ‘விசர்’ பிடிக்கும். பகல் முழுதும் பாரிஸ் முழுதும் பேசியபடியே அலைபவர்கள் மாலையில் செலினின் அபார்ட்மெண்டுக்கு வருகிறார்கள். ஜெஸ்ஸி செலினை கிட்டார் வாசிக்கச் சொல்கிறான். அவள் அவர்களிருவருக்கும் சம்பந்தமான பாடல் ஒன்றைப்பாடுகிறாள். நேரம் கரைகிறது. “Baby, you gonna miss that plane” என்று அவள் பாட “I know” என்கிறான் ஜெஸ்ஸி. அப்போது அவனது விரல்கள் தடுமாற்றத்துடன் அவன் அணிந்திருந்த திருமண மோதிரத்தைத் உருட்டியபடி இருக்கும்! Before Sunrise, Before Sunset, Before Midnight என மூன்றுமே ‘கெட்ட’ படங்கள். அதிலும் முதலிரண்டையும் அடுத்தடுத்துப் பார்த்துவிட்டு அவற்றின் தாக்கம் கலையாமல் மண்டை விறைத்துப்போய் திரிந்த காலமும் உண்டு. ’96’ திரைப்படம் ‘Before Sunset’ படத்தினுடைய அழகான தமிழாக்கம் என்று சொல்லலாம். முன்னம் ஜில்லென்று காதலில் இந்தவகைக் கருவை எடுத்துக் கடித்துத் துப்பி மண்ணைக் கிளறிப் புதைத்திருப்பார்கள். ’96’ ஆதார இழைக்கு நியாயம் சேர்த்த படம். மிக நிதானமான ஓட்டம். காட்சிகளோடு இணைந்து, கிறங்கி, மூழ்கி எழுவதற்கு அவகாசம் கொடுத்த மெது கவிதை. அதற்கேற்ப மிருதுவான இசை. போதாது என்று இளையராஜா பாடல்கள். “பூவில் தோன்றும் வாசம், அதுதான் ராகமோ” என்று சரணத்தில் ஆரம்பிக்கும்போது அடி வயிற்றில் கிபிர் பதியாவிட்டால் அவன் மனுசன் கிடையாது. ஆங்கிலப்படத்தைப் பார்க்காதவர்களுக்கு இதன் தாக்கம் மேலும் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் ஒன்று, எனக்கென்னவோ பள்ளிக்காதலை அதிகமாக நீட்டியதன்மூலம் அந்த இரண்டு பாத்திரங்களை வைத்து பின்னப்பட்டிருக்கக்கூடிய அழகான ஓரிழைக் கதைக்குக் கொஞ்சம் இழுக்கு சேர்த்துவிட்டார்களோ என்று தோன்றியது. இரண்டு பாத்திரங்களை மட்டும் வைத்து வந்த படங்கள் என்ற பேச்சு வந்தபோது ‘மேஜர் சந்திரகாந்த்’ திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் பாலச்சந்தரும் அப்படிச் செய்திருப்பார் என்று சசி அண்ணா சொன்னார். அதைவிட “In the name of the father” திரைப்படம் பற்றியும் சிலாகித்தார். இரண்டையும் பார்க்கவேண்டும். 

96 படத்தில் ரசித்து ரசித்துப் பல காட்சிகளை வைத்திருந்தார்கள். காரில் ஈற்றில் இருவரும் சேர்ந்து கியர் மாற்றுவது அவற்றின் சிகரம் என்று நினைக்கிறேன். லொஜிக்குகளும் நன்றாக இருந்தன. சிங்கப்பூருக்குத் திரும்பிச்செல்லும்போது திருச்சியூடாகத் தனக்கு ட்ரான்ஸிட் என்று ஜானு ஆரம்பத்தில் சொல்லுவாள். பிற்பகுதியில், ராம் பாஸ்போர்ட் இல்லாமலேயே டிக்கட் எடுத்து டேர்மினல் கேற்வரையும் செல்வதற்கு அந்த லொஜிக் உதவி செய்யும். இடித்த ஒரே லொஜிக், ராம் கவிதை சொல்லும்போது ஜானு கண்ணயர்ந்ததுதான். இத்தனை காதலுடன் இருந்தவர்கள், இத்தனை வருடங்கள் கழித்துத் தனியாகச் சந்தித்துப்பேசிக்கொண்டிருக்கையில், தூக்கம் மசிருக்கு வந்துது. உடலீர்ப்புக்கூட தவிர்க்கவியலாத ஒன்று. காலனித்துவத்துவத்துக்குப் பின்னரான தமிழ் கலாச்சாரத்துக்கு அது பொருந்தாததால் தவிர்த்துவிட்டார்கள்போல. 

படம் பார்த்து முடிந்ததும் என் ஆர்வம் எல்லாம் இனி ராம், ஜானு வாழ்க்கையில் என்ன நிகழக்கூடும் என்பதில்தான் இருந்தது. ஆங்கிலத்தில் ‘Before Sunset’ க்குப் பின்னர் வந்த ‘Before Midnight’ திரைப்படத்தில் ஜெஸ்ஸியும் செலினும் அவரவர் துணைகளிடமிருந்து பிரிந்துவந்து இருவரும் மணம் முடித்திருப்பார்கள். இருவருக்கும் இரட்டைக் குழந்தைகளும் பிறந்திருக்கும். எனக்கென்னவோ அது கொஞ்சம் நேர்மையான முடிவுபோலப் படுகிறது. யோசித்துப்பாருங்கள். இங்கே ராமும் ஜானுவும் இனிமேல் பேசாமல் இருப்பதற்குச் சாத்தியமேயில்லை. எப்போதாவது யாராவது மனசளவில் வீக்காக இருக்கும்போது ஒருவர் மற்றவருக்கு மெசேஜ் பண்ணத்தான் போகிறார்கள். அல்லது ராம் எங்காவது கோயிலில் ஜானகிராமன் சிலையைப் போட்டோ பிடித்தால் இவளுக்கு அனுப்பி வைக்கப்போகிறான். அவள் smule ல் ‘சொல்லத்தான் எண்ணியும் இல்லையே பாஷைகள், என்னமோ ஆசைகள், நெஞ்சத்தின் ஓசைகள்’ என்று ஜானகி பாட்டைப் பாடி ஷெயார் பண்ணப்போகிறாள். கியூட், சூப்பர் என்று பரஸ்பரம் மெசேஜுகள். இருவருமே “What if … What if” என்று ஏங்கி ஏங்கி தங்கள் இருவர் வாழ்க்கையையும் அழித்து அந்த சிங்கப்பூர் சரவணன் வாழ்க்கையையும் அழித்து. எதுக்கு? பேசாமல் சரவணன் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்டுவிட்டு ஜோடி சேர்ந்து ‘பார்ட் டூ’ எடுப்பதுதான் நேர்மையானது. தமிழ் கலாச்சாரம். ஹெல் வித் இட். 

உதிரியாக ஒரு சின்ன கிளைமோர். 

இந்தப்படத்தின் மிகப்பெரிய வெற்றி எதுவென்று என்னைக்கேட்டால் இந்தக் கண்டறியாத ‘Batch Reunion’ களுக்கு வைக்கப்பட்ட ஆப்புத்தான் என்பேன். இனி எவனும் எவளும் தன் மனைவியிடமோ கணவனிடமோ ‘பட்ச் ரி-யூனியன் பட்டிக்கலோவில வைக்கப்போகிறோம்’, ‘எங்கள் பட்ச்காரர் எல்லாம் திரும்பவும் யாழ்ப்பாணத்தில் சந்திக்கிறம்’, ‘நானும் போகட்டா?’ என்று வீட்டில் வந்து கேட்கிறான்(ள்) என்று வை. 

பச்சை மட்டைதான். 

000

Comments

 1. last para , sema sema sema sema sakka sema

  ReplyDelete
 2. "எங்களுக்கு சான்ஸ் கொடுக்காமல் எங்கள் வாத்திமாரே சைட் அடித்துக்கொண்டார்கள்."
  கடுப்பேத்திராங்கப்பா

  "தவிர நான் ஒன்றும் பெரிய விளையாட்டு வீரனோ, பாட்டுக்காரனோ கிடையாது. படிப்பிலும் சராசரி."
  யாராவது சோடா சொல்லுங்கப்பா

  "தங்கள் இருவர் வாழ்க்கையையும் அழித்து அந்த சிங்கப்பூர் சரவணன் வாழ்க்கையையும் அழித்து. எதுக்கு?
  விடுவமா ,,,,அதுவும் தமிழ் படத்தில் ,,,,,,,,

  "உதிரியாக ஒரு சின்ன கிளைமோர்."
  ஒரு கிழமைக்கு முன்னர் இதனை வாசித்திருக்கலாமோ ?????? கிளைமோர் எப்ப வெடிக்க போகுதோ

  ReplyDelete

Post a comment

Contact form