Skip to main content

நாயகிகள்


எங்கள் அலுவகத்தில் இரண்டு நாய்கள் இருக்கின்றன. அல்லது இருக்கிறார்கள். ஒருத்தி பெயர் லூசி. மற்றையவள் கிரேஸ். நிறுவனத்தின் உரிமையாளர்கள் வளர்க்கும் நாய்கள் அவர்கள். இருவருமே அவுஸ்திரேலிய ஷெப்பர்ட் வகை. லூசிக்குப் பத்து வயது ஆகிறது. அனுபவம் நிறைந்தவள். புலோண்ட் முடி. கிரேஸுக்கு இரண்டு வயதுதான். கறுப்பு வெள்ளை. ஒரு இளம் நாய்க்குரிய துடிப்பும் விட்டேற்றியும் பரபரப்பும் அவளிடம் எப்போதுமே குடிகொண்டிருக்கும். அவ்விரு நாய்களையும் அவர்கள் தம் குழந்தைகள்போலவே வளர்த்தார்கள். அவர்கள் ஈழத்தமிழர்களாக இருந்திருந்தால் எக்கணம் லூசியையும் கிரேசையும் ஊருக்குக் கூட்டிப்போய் மண்டபம் பிடித்து சாமத்திய வீடு செய்திருப்பார்கள். அவ்வளவு பாசம்.

நான் அந்த அலுவலகத்துக்கு முதன்முதலாக நேர்முகத்தேர்வுக்கு உள்ளே நுழையும்போது லூசியும் கிரேசும்தான் குரைத்தபடி என்னை வரவேற்றார்கள். நேர்முகத்தேர்வுக்கேயுரிய சிறு பதட்டத்தோடுதான் உள்ளே நுழைந்தேன். நாய்கள் குரைத்ததும் “என்னடா ரிசல்ட் இப்பவே வந்துட்டுதா?” என்று சிறு அதிர்ச்சி. பின்னாலேயே வந்த நிறுவன உரிமையாளர் அவ்விருவரையும் அதட்டி, நட்போடு என்னை உள்ளே அழைத்ததும் நிலைமை சுமூகமாகிவிட்டது. இவ்வாறான முதல் அறிமுகங்களின்போது பொதுவாக காலநிலையைத்தான் எடுத்துப்பேசுவதுண்டு. அன்றைக்கு லூசியும் கிரேசியும் பேசுபொருள் ஆனார்கள்.

"டோண்ட் பி ஸ்கெயார்ட். தே ஆர்  குட் டோக்ஸ்"

“ந நா, ஐ ஜஸ்...ட் லவ் டோக்ஸ்!”

பச்சைப்பொய். நான் வளர்த்த ஜிம்மி, ஹீரோ, சீஸர் நாய்களைத் தவிர வேறு எந்த நாய்களையும் என்றைக்குமே எனக்குப் பிடித்ததில்லை. குறிப்பாகச் சில நாய்களை என் வாழ்க்கை முழுதும் என்னால் மறக்க இயலாது. குமாரசாமி வீதியில் ஒரு நாய் இருந்தது. ஒரு சிறிய ஒல்லிக் கறுவல் நாய். சண்முகநாதன் மிஸ் காலை ஐந்தரைக்கு ஆங்கில வகுப்பு வைப்பார். கார்த்திகை, மார்கழி என்றால் அந்த நேரம் கும்மிருட்டாக இருக்கும். அந்த இருட்டில் இந்தக் கறுவல் நாய் றோட்டில் படுத்துக்கிடந்தாலும் தெரியாது. நான் இராமநாதன் ரோட்டிலேயே சைக்கிளை வேகமாக மிதிக்க ஆரம்பித்துவிடுவேன். குமாரசாமி வீதியின் இறக்கத்தினில் இறங்கியதும் சைக்கிள் சுப்பர்சோனிக் வேகம் பிடிக்கும். குழந்தைவேல் மாஸ்டர் வீட்டுக்குக்கிட்டச் செல்லும்போதுதான் அந்த நாய் பெருத்த குரைப்புடன் கலைக்க ஆரம்பிக்கும். அது நெருங்க நெருங்க, என் சைக்கிளின் வேகம் இன்னமும் அதிகமாகும். அது மிக அண்மையில் வந்தவுடன் நான் கால்களைத் தூக்கிச் சைக்கிள் முன் பாரில் வைத்துவிடுவேன். இப்போது கிட்டத்தட்ட எந்நிலை பொக்சினுள் அகப்பட்ட ஆர்மிக்காரன் நிலை. அந்த நாய் தொடர்ந்து துரத்தினால் கதை கந்தல். ஒரு கட்டத்தில் என் சைக்கிள்  வேகம் குறைந்து நிற்கும்போது என்னைக் கடிப்பது அதற்கு இலகுவாக இருக்கும். ஆனால் என் வேகம் குறைவதாலோ என்னவோ அதுவும் வேகத்தைக் குறைக்கும். சைக்கிளின் வேகம் குறைந்து, சிவகுருநாத குருபீடத்தின் கேற்றுச் சுவரோரம் சைக்கிளைச் சாய்த்து நான் கவர் எடுக்கும் நிலை வருகையில், திடீரென்று அந்த நாய் பின்வாங்கத்தொடங்கும். உடனேயே எனக்குத் துணிச்சல் வந்துவிடும். ஏனோ தெரியாது. அந்த நாயைப் பார்த்துக் காறித்  துப்புவேன். ஓடிவிடும்.

இப்படிப்பல நாய்கள் என் வாழ்க்கையில் குறுக்கிட்டுத் துரத்தியிருக்கின்றன. அல்லது அவற்றின் வாழ்க்கையில் நான் குறுக்கிட்டதால் துரத்தப்பட்டிருக்கிறேன். பொற்பதி வீதியில் ஒன்று. மணத்தரைக்குள் ஒன்று. கலட்டிச் சந்தியில் ஒன்று. சில வீடுகளையும் வீதிகளையும் அங்கிருக்கும் நாய்களாலேயே அடையாளப்படுத்தி வைத்திருந்தேன். சில நாய்கள் சாகவேண்டும் என்று நேர்த்தி எல்லாம் வைத்திருந்திருக்கிறேன். லொறியில் சிக்கி. செல்லடி பட்டு. விசர் பிடித்து. சொறி பிடித்து. ஆனால் என்னைத் துரத்திய நாய்களுக்கெல்லாம் நீண்ட ஆயுள் அருளப்பட்டிருந்தது. அப்படியும் ஒன்றிரண்டு செத்துப்போனாலும் அவற்றுக்குப் பதிலாக புதிதாக வந்தவை முன்னயதிலும் மோசமாகத் துரத்தின. சில இடங்களில், அதுவும் அதிகாலைப்பொழுதுகளில் நாய்கள் கூட்டமாகக் கலைத்துவைக்கும். பிரதான வீதிகளில் பெரும்பாலும் நாய்கள் மனிதர்களைத் துரத்துவதில்லை. ஒழுங்கைகளிலும் ரயில்பாதையோரங்களிலும் மனித நடமாட்டம் குறைந்த இடங்களிலுமே அவற்றின் வீச்சு அதிகமாக இருக்கும். யோசித்துப்பார்க்கையில் நம்மூர் நாய்கள் தம்முடைய பயத்தை மறைக்கும் ஆயுதமாகத் துணிச்சலைக் கையில் எடுக்கின்றன என்று தோன்றுகிறது. கடிக்கிற நாய் குலைக்காது என்று ஒரு பழமொழி உண்டு. அது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. நானறிந்து பல குரைக்கிற நாய்கள் கடித்தும் இருக்கின்றன. குரைக்காத நாய்கள் கடிக்காமலும் இருந்திருக்கின்றன. நாய்களை அவ்வளவு இலகுவாக எடைபோட்டுவிட முடியாது. 

இலங்கை நாய்களுக்கும் அவுஸ்திரேலிய நாய்களுக்கும் பெருத்த வித்தியாசம் இருக்கின்றது. இலங்கையில் நாய்கள் தங்கள் உரிமையாளர்களைத் தவிர்த்து ஏனையோரோடு நட்பு பாராட்டமாட்டா. வாலை கிஞ்சித்தேனும் ஆட்டமாட்டா. அப்படிப்பட்ட நாய்களோடு வளர்ந்ததோ என்னவோ, அவுஸ்திரேலியாவிலும் நாய்களைக் கண்டவுடன் என்னுடைய முதல் இம்ப்ரெஷன் தப்பி ஓடுவதாகவே ஆரம்பத்தில் இருந்தது. நாய்களைத் தூரத்தில் கண்டதுமே அவற்றின் பாதையிலிருந்து விலகி நடக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தேன். அவை குரைத்தால் குலை நடுங்கும். ஆனால் உண்மையில் அவுஸ்திரேலிய நாய்கள் அப்பிராணிகள். எல்லாமே முறையாகப் பயிற்றப்பட்ட நாய்கள். மனிதர்களைக் கடிக்கக்கூடாது என்று அவற்றின் டி.என்.ஏயில் எழுதிவைத்திருக்கிறார்கள். ஒரு நாய் இந்த நாட்டில் மனிதர்களைக் கடித்த சம்பவத்தை நான் கேள்விப்பட்டதில்லை. அவற்றுக்குக் குரைக்கத்தெரியும். ஆனால் அந்தக் குரைப்பிலும் ஒரு சிநேகம் இருக்கும். கியூட்னஸ் இருக்கும். எம்மைக் கவருவதற்காகவே குரைப்பதுபோலத் தோன்றும். அதில் ஒரு சின்னச் சுயநலம் தெரியும். இங்கே நாய்கள், தமது உரிமையாளர்களோடு மட்டுமன்றி எல்லோருடனுமே சுமுகமாகப் பழகும் தன்மையை உடையவை. அவற்றின் வால்கள் கொழும்பு பிளாட்டுகளில் சுற்றிக்கொண்டிருக்கும் மின்விசிறிபோல எக்காலத்திலும் சுற்றிக்கொண்டேயிருக்கும். அறிமுகம் இல்லாதவரா, சும்மா கடமைக்கு இரண்டு குரைப்பு குரைத்தாலும், அவற்றின் வால்களைக் கவனித்தால் தெரியும். ஆடிக்கொண்டேயிருக்கும். இந்தநாட்டில் நாய்களை அவன் அவள் என்று மனிதர்களாகவே விளிப்பார்கள். எனக்கு இன்னமும் அது முழுதாகப் படியவில்லை. ஒரு நாயை அவளாகப் பார்ப்பது கடினமாக இருக்கிறது. பயிலவேண்டும்.

என்னைக் குரைத்து வரவேற்ற லூசியும் கிரேசும் நேர்முகத்தேர்வு முழுதும் கூடவே அறைக்குள் சுற்றித்திரிந்தன. சுற்றித்திரிந்தார்கள். ஒரு டெனிஸ் பந்தும் ஒரு ரப்பர் பன்றியும்தான் அவர்களின் விளையாட்டுப்பொருட்கள். அவற்றைத் தூர எறிந்தால் இருவரும் சீறிக்கொண்டு பறந்துபோய் எடுத்துவந்து கொடுப்பார்கள். திரும்பவும் நாம் அவற்றை எறியும்வரைக்கும் நம்மோடு தனகிக்கொண்டு இருப்பார்கள். நாம் கதையில் கவனமாகிவிட்டால் கால்களுக்குள்ளே புகுந்து கதிரை இடைவெளிக்குள்ளால் தலையை வெளியே நீட்டி “பந்தை எறி” என்று சொல்வார்கள். 

அந்த முதல்நாள் மாத்திரம்தான். அதற்குப்பின்னர் லூசியும் கிரேசும் என்றைக்குமே என்னைப்பார்த்துக் குரைத்ததில்லை. நான் ரகுமானையோ ராஜாவையோ கேட்டபடி வேறு உலகத்தில் வேலை செய்துகொண்டிருக்கையில், எப்போதாவது என் முழங்கையைக் கிரேசி வந்து நக்குவதுண்டு. பிறகுதான் தெரியும். அன்றைக்கு மதிய உணவாக நான் மீன் குழம்போ, கருவாட்டுப்பொரியலோ, ஹாம் சான்ட்விச்சோ கொண்டுபோயிருப்பேன். கிரேசுக்குக் குளிப்பதென்றால் கொல்லக்கொண்டுபோவதுபோல. உரிமையாளர்களும் அவளுக்குக் குளிக்கப்பிடிக்காது என்றுசொல்லி அவளை அடிக்கடி குளிப்பாட்டுவதில்லை. அருகில் செல்லமுடியாது. செனி நாற்றம் நாறுவாள். இளம் நாய், பயிற்சி போதாதோ என்னவோ, உடம்பு சரியில்லை என்றால் அதனைச் சாட்டாக வைத்து சிச்சாவும் கக்காவும் அலுவலகத்துக்கு உள்ளேயே இருந்து தொலைத்துவிடுவாள். நாங்கள் கத்துவோம். ஸி.ஈ.ஓ ஓடிவந்து, எல்லோரிடமும் மன்னிப்புக்கேட்டபடி, கிரேசியைச் செல்லமாகத் திட்டிக்கொண்டு, கக்காவை அள்ளி, சிச்சாவைத் துடைத்து, கிளீனர்போட்டு மொப் பண்ணுவார். 

ஆனால் லூசி அப்படியானவள் அல்ல. அவளுக்குப் பக்குவம் உண்டு. தன்பாட்டுக்கு அவள் திரிவாள். தண்ணீர் விடாய்த்தால் கிச்சினுக்கு வருவாள். அங்கு வருபவர்களிடம் நாக்கை நீட்டி ஆ, ஆ என்று விடாய் காட்டுவாள். அவளின் கிண்ணத்தில் நீரை ஊற்றிக்கொடுத்தால் விறுவிறு என்று குடித்துவிட்டு வந்தவழியே போய்விடுவாள். யோகா அமர்வுகளில் தம் பிடித்துக்கொண்டு ஏதாவது ஒரு ஆசனம் செய்யும்போது லூசி முன்னாலே வந்துநின்று என்னைப்புதினமாகப் பார்ப்பாள். "அடச்சிக்.. அங்காலே போ நாயே" என்றால் ஹீரோ ஓடிவிடும். லூசி பார்த்துக்கொண்டே நிற்பாள். என்னுடைய மூக்கு அவளின் கடி எல்லைக்குள்ளேயே இருக்கும். சற்று நான் அசைந்தால் பலன்ஸ் தவறிவிடும். லூசி நினைத்தால் ஒரே ஒரு கவ்வு. என் மூக்கு அவளின் வாயில் சாலட் ஆகிவிடும். ஆனால் அந்த லூசி பார்ப்பதோடு நிறுத்திவிடுவாள். “உனக்கெல்லாம் எதுக்கு யோகா?” என்றுவிட்டு அப்பாலே போய்விடுவாள். 

அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை என்பது கொண்டாட்டத்துக்குரிய நாள். மதியம், அனைவருக்கும் பீட்ஸாவோ, வியட்நாம் உணவோ, சான்ட்விச் உணவோ, ஏதோ ஒன்று பரிமாறப்படும். கூடவே குடிக்க பியர், சைடர், வைன் என்று குடிபானங்கள். நான் கடலுணவு பீட்ஸாவின் அடிமை. ஆர்வமாக ஒரு வாய் வைக்கலாம் என்று ஒரு பீட்ஸாத் துண்டை வாய்க்குக் கிட்டே கொண்டுபோகையில்தான், கால்களுக்கிடையால் தலையை வெளியே நீட்டியபடி லூசி “எனக்கும் தா” என்று கேட்பாள். பாவமாய் இருக்கும். ஆனால் நான் கொடுக்கமாட்டேன். “கண்ட கண்ட நாய்களுக்கெல்லாம் சாப்பாடு போட்டுப் பழக்காதே, பிறகு அவை உனக்குப் பின்னாலேயே திரியும்” என்று சின்ன வயதில் அம்மா சொல்லிச் சொல்லி வளர்த்திருக்கிறார். லூசி நக்கி எல்லாம் பார்ப்பாள். ஈர மூக்கால் என் கையை முட்டிப்பார்ப்பாள். "எவ்வளவு தாளமும் போடு. நான் தரமாட்டேன்". பின்னர் அவளாக இன்னொருவரிடம் போய்விடுவாள். போகும்போது அவளின் முகத்தைக் கவனிப்பேன். ஏதாவது முகச்சுழிப்பு, வன்மம், கோபம், குரோதம், ஏதாவது அவள் முகத்தில் தெரிகிறதா என்று கவனிப்பேன். ம்ஹூம். ஒரு சின்னச் சலனமேனும் அவளிடம் இருக்காது. வெள்ளி மாலை நான்கு மணியளவில் அலுவகத்துக்குள்ளேயே கிரிக்கட் விளையாடுவார்கள். லூசியும் கிரேசியும் பீல்டர்ஸ். என்ன ஒன்று, சமயத்தில் பந்து துடுப்பில் படமுன்னமேயே அவர்கள் அதைப் பாய்ந்து பிடித்துவிடுவார்கள். எவ்வளவு சொல்லிக்கொடுத்தாலும் அவர்களுக்குக் கிரிக்கட் ஆட்டத்தின் விதிமுறைகள் புரிவதில்லை. எறியப்படும் பந்துகள் எல்லாமே தமக்கானவை என்ற எண்ணம் அந்த இரண்டு நாய்களுக்கும் சிறுவயதுமுதல் மூளையில் ஏறிவிட்டது.

நாய்களை வளர்ப்பது எவ்வளவு சிரமம் என்பது அவர்களின் உரிமையாளர்கள் படும்பாட்டைப்பார்த்தாற் புரியும். காலையும் மாலையும் அவர்களை வெளியே நடைப்பயிற்சிக்கு அழைத்துச்செல்லவேண்டும். அவர்கள் கக்கா இருந்தால் அள்ளிக் குப்பைத்தொட்டியில் போடவேண்டும். போகிறபோக்கில் இன்னொரு நாயைக் கடித்தாலோ, தப்பித்தவறி மனிதர்களைக் கடித்தாலோ கடிபட்டவரின் மருத்துவச்செலவு உங்களுடையது. அதைவிட நாய்களின் வைத்தியச்செலவு. வெளியூர்ப்பயணம் என்றால் அவர்களை நாய்கள் காப்பகத்தில் விடும் செலவு. தவிர, அவர்கள் சாகும்போது செத்தவீட்டுச் செலவு. வீட்டுக்குள்ளே விட்டு வளர்க்கும்போது வீடு பூராக அவர்களின் மயிர் கொட்டிக்கிடக்கும். கட்டில், கக்கூஸ், சோபா, செட்டி, டிவி ரிமோட், கணினி, கிச்சின், சாப்பாட்டுத்தட்டு, தேத்தண்ணிக்கோப்பை, துவாய், உங்கள் உடம்பு என எல்லாவிடமும் நாய் மயிர் பரந்து கிடக்கும். பல்லிடுக்கில் ஏதோ சிக்கிக்கிடக்கிறது என்று நாள் பூராகக் கிண்டி ஈற்றில் எடுத்துப்பார்த்தால் அதுவும் ஒரு நாய் மயிர். எல்லாத்தையும் விட, எவ்வளவு லீட்டர் வாசனைத் திரவியம் அடித்தாலும் எப்போதுமே ஒரு செனி நாற்றம் வீடு முழுதும் படர்ந்திருக்கும்.  உங்களுக்குக் பழகியிருக்கும். வருபவர் தொலைந்தார்.

லூசி, கிரேஸ் தவிர வேறு சில நாய்களும் அலுவலகத்துக்கு அவ்வப்போது விஸிட் அடிப்பார்கள். நாய் வளர்க்கும் ஊழியர்கள் எவருமே தங்கள் நாய்களை அங்கே கொண்டுவரலாம். சிறிய "பக்"ரக நாய்கள் தொடங்கி மிகப்பெரிய "புல்டோக்"ரக  நாய்கள்வரை அலுவலகத்துக்கு வருவதுண்டு. சில நாய்கள் யானை சைஸில் வந்து நிற்பார்கள். யானை சைஸ் என்றாலும் பூனை சைஸ் என்றாலும் இங்கே நாய்களைக் கண்டதும் உடனே பின்வாங்கி வெருளக்கூடாது. பேசாமல் நின்றால் அவர்களாக வந்து முகர்ந்துபார்த்து நீங்கள் ஆணா, பெண்ணா என்று கண்டுபிடித்துவிட்டுக் கடந்துவிடுவார்கள். அவர்கள் சிநேகமாகத்தான் முகர்கின்றார்கள் என்று நினைத்து அவர்களின் உச்சித்தலையைத் தடவினீர்கள் என்றால் “வள்”. 

ஒருநாள் மதிய உணவுக்கு நான் சொசேஜும் பாணும் கொண்டுபோயிருந்தேன். சாப்பிட்டு முடிந்ததும், பாண் சுற்றியிருந்த தாளை அருகிலிருந்த குப்பைக்கூடைக்குள் போட்டுவிட்டு நான் தொடர்ந்து என் வேலையைக் கவனிக்க ஆரம்பித்தேன். காதில் ஹெட்போன் அணிந்திருந்ததில் லூசி அருகில் வந்ததைக் கவனிக்கவில்லை. அவள் அந்தக் குப்பைக்கூடைக்குள் தலையை விட்டு மிச்சசொச்ச சொசெஜைத் தேடியதையும் கவனிக்கவில்லை. நான் சிறு துகள்கூட மீதி வைக்கவில்லை. அது தெரியாமல் லூசி சொசேஜ் வாசத்தை நம்பி குப்பைக்கூடைக்குள் மேலும் மேலும் தலையை ஓட்டித் தேடியிருக்கிறாள். ஒருகட்டத்தில் இனித் தேடிப்பயனில்லை என்று தலையை வெளியே எடுக்க அவள் முயன்றிருக்கவேண்டும். முடியவில்லை. தலையை நிமிர்த்த, குப்பைக்கூடையும் அவள் தலையோடு கூடவே சேர்ந்து வந்துவிட்டது. எனக்கு இது தெரியாது. சற்று நேரத்தில் என் கையில் ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. திரும்பிப்பார்த்தேன். 

குப்பைகள் நாலாபுறமும் சிதறிப் பறந்துகொண்டிருக்க, தலைகீழ் குப்பைக்கூடை ஒன்று என்னைப்பார்த்து நகைத்துக்கொண்டிருந்தது. வாலை விசிறியபடி.

000

Comments

  1. நாய்களுக்கு பிறந்த நாள் கொண்டாடும் அளவுக்கு புலம்பெயர்ந்த நாமும் முன்னேறிவிட்டோம்

    ReplyDelete
  2. இது நாய்களை பற்றித் தானா எழுதியிருக்கிறீர்கள்????

    ReplyDelete
  3. "அடச்சிக்.. அங்காலே போ நாயே" என்றால் ஹீரோ............. ஓடிவிடும். லூசி பார்த்துக்கொண்டே நிற்பாள்

    உங்கட நாய் கதைதான் தொடர்ந்து தலையை சுத்துது . எல்லா நாயையும் தொடர்ந்து (அறிந்த ) வாசித்த பின்னும் ஒரு மண்ணும் விளங்குதில்லை ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு மாதிரி மண்டையை குடையுது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .