என் சொல்லே!

Dec 13, 2015
படைக்கும் வார்த்தைகளை விட
அழிக்கும் வார்த்தைகள் அதிகமாயின.

முதல்வரியிலேயே முழுநாளும்
சிறுகதைகள் தேங்குகின்றன.

எது எழுதியும் எழுதா வரியதைத் தேடி
மனம் அலைகிறது.

வார்த்தைகளுக்காய் காத்திருந்து
வாயிலிலே கறையான் ஏறிவிட்டது.

வருதும், வருதும் என்று
வழிபார்த்து கண்மூடி.
துளிசோர கிடந்தேனடி.

வருவாயோ. வரம் தருவாயோ.
என் மனது சஞ்சலிக்கிறது.

வருவதை எலாம் வீதியில் வைத்து
வேடிக்கை மனிதரலாம்
வெட்டிப் புதைத்தனரடி.

பசிக்கிறது.

வாசிப்பு,
இருக்கும் ஓரிரு வார்த்தைகளையும்
பிடுங்கிக்கொள்கிறது.

எல்லாமே இங்கே எழுதிச்
சிறை பிடிக்கப்பட்டுவிட்டது.

தப்பிய வார்த்தைகள்
கண்காணா பிரபஞ்சத்துள்
சுற்றித் திரிகின்றன.

எனக்கு அவை வேணும்.
எடுத்து வா.

எப்போதோ எனக்காக
புறப்பட்ட ஒளிக்கதிரின்
துணுக்குகளில் உட்கார்ந்து
கடுகதியில் பறந்துவா.

என் சொல்லே!

ஊடலுற்ற காதலிபோல
உம்மணாமூஞ்சியுடன்
என்னைப்பார்த்து நீ
திருப்பிக்கொள்ளாதே.

என் காதல் சொல்ல நீ வேண்டும்.
நான் காதலிக்க சொல் வேண்டும்.
வார்த்தைகளின் வரம் வேண்டும்.

அடியேய் சிவசக்தி.
அதை அருள்வதில் உனக்கெதுந்
தடையுண்டோ?

Contact Form