Skip to main content

Still Counting The Dead.


வைத்தியர்

Eelam_1269113gமே 15, 2009. ஒரு சின்ன கட்டிடத்தில் இயங்கிக்கொண்டிருந்த கடைசி வைத்தியசாலையையும் கைவிட்டாயிற்று. ஏனைய வைத்தியர்கள் இராணுவத்திடம் சரணடைய சென்றுவிட்டார்கள். வைத்தியர் நிரோனும் அவரின் உதவியாளர் மட்டுமே பங்கருக்குள். முந்தைய தினத்து பொஸ்பரஸ் குண்டு தாக்குதலில் நிரோனின் முதுகு, கைப்பகுதி எல்லாமே எரிந்து சிதிலமாகி இருந்தது. அகோர பசி. வெளியேயோ குண்டு மழை. பங்கருக்கால் கொஞ்சம் தலையை நீட்டி எட்டிப்பார்த்தால் ஒரே புகை மூட்டம். தூரத்தே கடற்கரை மணலில் ஒரு பனங்காய் விழுந்துகிடக்கிறது. ஓடிச்சென்று அதை எடுத்துவருமாறு தன் உதவியாளரிடம் நிரோன் சொல்லுகிறார். தாமதித்தால் இன்னொரு பங்கருக்குள் இருப்பவர்கள் முந்திவிடலாம். கொஞ்சம் குண்டுகள் தணிந்த சமயம் பார்த்து உதவியாளரும் ஓடிச்சென்று அதை எடுத்துக்கொண்டு வேகமாக பங்கருக்குள் திரும்புகிறார். அப்போது தான் அந்த உதவியாளன் கையில் இருந்ததை நிரோன் கவனிக்கிறார்.
அது பனங்காய் இல்லை … ஒரு கைக்குழந்தையின் அறுபட்ட வெறும் தலை.
இறுதிப்போரில் உயிர்தப்பிய ஒரு சில வைத்தியர்களில் நிரோனும் ஒருவர். தன்னை வைத்தியர் என்று காட்டிக்கொள்ளாமல் மானிக் தடுப்பு முகாமில் பிடிபடாமல் சமாளித்து, நண்பர்களின் உதவியால் நாட்டைவிட்டு தப்பி இருப்பவரின் கதை இது. ஒவ்வொரு முறையும் வைத்தியசாலையை இடம்மாற்றும்போதும் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு தங்களது ஜிபிஎஸ் நிலைகளை வைத்தியர்கள் தெரிவித்திருக்கிறார்கள். செஞ்சிலுவை கொடி ஏற்றியிருக்கிறார்கள். கூரையில் பெயின்ட் அடித்திருக்கிறார்கள். அப்படி இருந்தும் ஷெல்களும் விமானக்குண்டுகளும் வைத்தியசாலையை மீண்டும் மீண்டும் தாக்கியிருக்கின்றன. ஒரு முறை இடம்பெயர்ந்த போது ஜிபிஎஸ் தகவலை கொடுக்காமல் விட்டபோது குண்டுத்தாக்குதல் அங்கே இடம்பெறவில்லை. புரிகிறதா? அரசாங்கம் எந்த அளவுக்கு திட்டமிட்டு படுகொலைகளை நிகழ்த்தியிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு ஒரு யுத்த சாட்சியம் வேண்டாம்.
alg-sri-lanka-hospital-jpg
கடைசியால இவரும் இவருடைய உதவியாளரும் அரசாங்கத்திடம் சரணடைய கழுத்தளவு தண்ணீர் உள்ள நீரேரியை கடந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு பெண் இவர்களின் காலைக்கட்டி கதறுகிறாள். அவளின் கணவனின் கால்கள் இரண்டும் குண்டுவெடிப்பில் சிதறிப்போய் கிடக்கிறது. தூக்குவதற்கு அந்த பெண்ணால் முடியவில்லை. இவர்களிடம் உதவி கேட்கிறாள். இவர்களும் தூக்குவோம் என்று நினைத்த சமயம் மீண்டும் துப்பாக்கி சூடுகள். குண்டுகள். முடியாது என்று தெரிந்த நிலையில் அந்த பெண்ணையும் கணவனையும் அப்படியே விட்டுவிட்டு நீரேரியை கடக்கிறார்கள்.

இந்த சம்பவம் நிரோனின் ண் முன்னே இன்னமும் நிழலாடிக்கொண்டிருக்கிறது. தன்னை ஒரு தோல்வியடைந்த வைத்தியர் என்று சொல்லி அந்த பெண்ணின் கணவரை காப்பாற்ற முடியாததற்கு வருந்துகிறார். யுத்தக்களத்தில் எண்ணற்ற மக்களின் உயிரை காப்பாற்றியவர். எந்த வித துணையுமின்றி, மயக்கமருந்து இன்றி இருக்கும் கொஞ்ச நஞ்ச  மருந்துகளை கொண்டே ஏராளமான சிகிச்சைகளை, சத்திர சிகிச்சைகளை செய்தவர், சனக்காடு நிறைந்தபோதிலும் எந்த ஒரு தொற்றுநோயும் பரவாதவகையில் சுகாதார அறிவுறுத்தல்களை அல்லும் பகலும் மக்களுக்கு வழங்கியவர். அவர் போய் இப்படி ஒரு சம்பவத்துக்காக மனம் வருந்தலாமா என்று கேட்டதுக்கு சொன்ன பதில்.
உண்மை தான் .. ஆனா அந்த பெண்னை மீண்டும் ஒருமுறை சந்தித்தால் என்ன பதிலை சொல்லுறது?

அருட் சகோதரி

அருட்சகோதரி இக்னேஷியஸ். சேவை செய்வதற்காகவே வன்னிக்குள் போனவர். எத்தனையோ சந்தர்ப்பங்களில் தப்பிசெல்லும் சூழ்நிலைகள் வந்தது. வன்னியை விட்டு வெளியேறவே இல்லை. பைபிளின் “யாரை நான் அனுப்புவேன்?” என்ற இறை வாசகத்தை கேட்ட நாள் முதல் விடாப்பிடியாக அந்த மக்களோடு மக்களாக இருந்து உளவியல் சேவை செய்த சகோதரி இவர். இலங்கையின் திருச்சபையில் காணப்படும் சிங்கள தமிழ் பிரிவினையை போட்டுடைக்கிறார். ஒரு தேவாலயம் தாக்கப்பட்டு பாதிரியார் காயப்பட்டபோதும் கண்டிக்காத சிங்கள திருச்சபைபாதிரியார்களை என்னவென்று சொல்லுவது என்கிறார். இன்னுமொரு பெண் பாதிரியார் இரண்டாயிரம் மக்களை சேர்த்துக்கொண்டு அரசாங்கப்பக்கம் போக முயன்றிருக்கிறார். முதலில் அரசாங்கப்பக்கம் இருந்து ஆர்மி சுட்டது. பின்னர் தப்பிப்போவதை தடுக்க விடுதலைப்புலிகள் சுடுகிறார்கள். என்ன மாதிரியான நிலைமை இது?

பாதிரியார்களிடம் தங்கள் குழந்தைகள் இருந்தால் பாதுகாப்பு என்று பெற்றோர்கள் இருநூறு பிள்ளைகளை தேவாலயத்தில் தஞ்சம் சேர்த்திருக்கிறார்கள். ஒரு நாள் தேவாலயத்தை சுற்றிவளைத்து அத்தனை பேரையும் புலிகள் வலுக்கட்டாயமாக பிடித்துச்சென்றிருக்கிறார்கள். ஒரு பக்கம் அரசாங்கள் குண்டு மழை பொழிகிறது. மற்றொரு பக்கம் யாருக்காக போராடுகிறார்களோ அந்த மக்களின் உயிரையே பணயம் வைக்கும் புலிகள். இன்னொரு பக்கம் இதுவெல்லாம் தெரிந்தும் வாய்மூடி மௌனமாக இருக்கும் சர்வதேசம். இலங்கையில் இனி என்ன நடக்கவேண்டும் .. நடக்கும் என்று கேட்டமைக்கு அந்த சகோதரி சொல்லுகிறார்.
“Forgiveness comes from confession. முதலில் எல்லோரும் தங்களது தவறுகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். 1958 இல் சிங்கள காடையர்களால் என் தந்தை கொல்லப்பட்டார். அப்போது எனக்கு வயது பதினாலு. என்னைப்போல பல சிறுவர்கள் தாயை தந்தையை சொந்தங்களை இழந்தார்கள். விளைவு எழுபதுகளில் அவர்கள் இளைஞர்கள் ஆகியிருந்தனர். மீண்டும் கலவரம் வெடித்தபோது, இளைஞர்கள் சும்மா இருக்கவில்லை. போராட்டம் வெடித்தது. மீண்டும் கலவரங்கள். உயரிழப்புகள். இடம்பெயர்வுகள். இப்போதும் அதுவே. பலர் சொந்தங்களை இழந்திருக்கிறார்கள். சிறுவர்கள், குழந்தைகள் வளர வளர இந்த அனுபவங்கள் அவர்களின் ஆழ்மனதில் உழன்று கொண்டே இருக்கும். அநீதியும் சமாதானமும் ஒருபோதும் ஒன்றாக இருக்கமுடியாது. பேச்சளவில் சமாதானம் எந்த விளைவையும் தராது. நியாயம் கிடைத்தே ஆக வேண்டும். அது கட்டாயம். ”

ஆசிரியை

உமா யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். கெட்டிக்காரி. ஆங்கில ஆசிரியை. உமாவினுடையது காதல் திருமணம். பவன் மட்டக்களப்பை சேர்ந்தவன். திரைப்படங்களில் வருமே காதல், அது. சாதிவிட்டு சாதி மாறி பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து வன்னியில் செட்டில் ஆகிறார்கள். சின்ன வீடு. மா, பலா வாழை, பூங்கன்றுகள் என்று ஈழத்தவரின் கனவு வாழ்க்கை.

உமாவுக்கு பதினாலு வயதிலேயே ஒரு பொம்மர் குண்டு பட்டு ஒரு பக்க மார்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருக்கிறது. முன்னாள் போராளி. பவனும் தான். பவனுக்கு ஒரு கால் இல்லை. உமாவுக்கு பல தடவை கரு உண்டாகி கலைந்துபோயிருக்கிறது. ஆனாலும் தைரியமான பெண். தன் காதல் கணவனையும், தன்னுடைய மருமகன் ஒருவனையும் துணைக்கு வைத்துக்கொண்டு உயிரோட்டமாக வாழ தலைப்பட்டிருக்கிறார். எல்லாமே இறுதிப்போர் வரை தான்.

இடம்பெயரும் நாளும் வருகிறது. இடம்பெயரும்போது எல்லோரும் சட்டி பானைகளை கட்டுவார்கள். உடுப்புகளை கட்டுவார்கள். நகைகளை எடுத்து வைப்பார்கள். குழந்தைகள் தங்கள் பொம்மைகளை அடம்பிடித்து பெட்டிக்குள் வைப்பார்கள். மாணவர்கள் புத்தகங்களை வைப்பார்கள். உமா வைத்ததோ கட்டு கட்டாக சானிடரி நாப்கின்களும் ஒரு தொகை உள்ளாடைகளும். பல தடவை கரு உண்டாகி அழிந்துபோனதால் மாதவிடாய் வந்தால் படாதுபாடு படுத்தும். அதற்காக தான் இந்த ஏற்பாடு.

tamilsஇடம்பெயர்வு ஆரம்பித்துவிட்டது. இனி வழமை போல. இராணுவம் எங்கே எப்போது தாக்கும் என்று தெரியாது. போகும் வழியில் கணவனுக்கு குண்டு பட்டு காயம் வேறு. இருந்த ஒரு காலையும் இழந்துவிடக்கூடாது என்று வைத்தியசாலைக்கு ஓடினால் அங்கேயும் செல் வந்து விழுகிறது. வைத்தியசாலை பாதுகாப்பில்லை என்று கணவனை தன்னோடே கூட வைத்து காப்பாற்றுகிறார்.  கடற்கரை பங்கருக்குள் வாழ்க்கை. கையோடு கொண்டுவந்த நாவல்களை மீண்டும் மீண்டும் வாசிக்கிறார்கள். கார்ட்ஸ் விளையாடுகிறார்கள். கக்கூசுக்கு வெளியே போகவேண்டுமென்றாலும் அனுமதி கேட்கவேண்டும். அவசரம் என்றாலும் “அடக்கிக்கொள்ள முடியாதா? போய்த்தான் ஆகோணுமா? என்று கணவனும் மருமகனும் பதட்டமாக கேட்பார்கள். ஏற்கனவே அப்படிப்போன இடத்தில் பலர் குண்டடிபட்டு இறந்திருந்தார்கள்.

கணவனின் காயம் ஆறுவதற்கு சரியான புரத உணவு வேண்டுமே. ஒரு நாள் கடற்கரையில் எங்காவது சின்ன துண்டு மீன் கிடைத்தால், சமைத்துக்கொடுக்கலாம் என்று உமா அலைகிறார். அப்போது ஒரு இடத்தில் செஞ்சிலுவை சங்கம் ஒரு கப்பல் கொண்டுவந்து காயப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு இருக்கிறது. சனம் எல்லாம் கூடி நின்று “எங்களை காப்பாற்றுங்கள், பனடோல் தாருங்கள், பிள்ளைக்கு பால்மா தாருங்கள்” என்று கெஞ்சுகிறார்கள். ஒரு வெள்ளைக்கார பெண்  நடுவில் ஏதோ புனித மீட்பர் போல நிற்கிறார். பக்கத்தில் ஒரு மொழிபெயர்ப்பாளர் திணறிக்கொண்டிருக்கிறார். உமா உள்ளே நுழைந்து கிழி கிழி என்று கிழிக்கிறார்.
FRS-photo-tents-300x225“என்ன செய்யிறீங்க இங்க?”

“காயப்பட்டவர்களை வெளியேற்றுகிறோம்”

“எவ்வளவு பேரை?”

“நானூறு ஐநூறு”

“மிச்சப்பேரை என்ன செய்ய போறீங்கள்?”

“எல்லாரையும் கொண்டுபோக வசதியில்லை…”
என்று அந்த பெண் சொல்ல, உமாவின் விஸ்வரூபம் வெளிப்படுகிறது.
“அப்பிடி எண்டால், நீங்க எல்லாம் எத்தினை பேரு சாகிறினம் எண்டு எண்ணுவீங்கள் .. சாகப்போகிற நிலையில இருக்கிற கொஞ்சபேரை கொண்டுபோவீங்கள். அவ்வளவும் தான். இதுக்கும் நாசிகளுக்கும் என்ன வித்தியாசம்? அவங்களும் எல்லாரையும் கொலை செய்து கணக்கெடுத்தவங்கள். நீங்களும் அதையே தானே செய்யிறீங்கள்? இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்? இந்த மனித படுகொலைகளை நிறுத்த மாட்டீங்களா? அட்லீஸ்ட் முயற்சி கூட செய்ய மாட்டீங்களா? உதவி செய்யிறது மாதிரி நடிக்கிறீங்கள். இங்க இருக்கிற எல்லோருமே தீவிரவாதியா? நானொரு தீவிரவாதியா? அப்பிடி நினைச்சீங்கள் என்றால் நான் உயிர்தப்பினாலும் பின்னால விட்டு வைக்கமாட்டீங்களா? இந்த சனங்கள் என்ன செய்யும் சொல்லுங்க? ஒரு பனடோலுக்கும், பிள்ளைக்கு ஒரு புட்டிப்பாலுக்கும் உங்களை கடவுள் மாதிரி பார்க்குதுகள். உலகம் அதை கூட செய்யாட்டி இந்த குழந்தைகள் என்ன செய்யும்? அவங்கள் எங்கள் எல்லாரையும் குண்டு போட்டுக்கொண்டு எங்களை தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கிறதா சொல்லுறாங்கள். பார்த்தா அப்பிடியா தெரியுது? ஷெல் அடிச்சு எங்களை எல்லாம் கொல்லுறதையா மீட்கிறது எண்டுறது? ”
அந்த வெள்ளைக்காரப்பெண் சர்வதேசம் போலவே ஒன்றுமே பேசாமல் விலகிச்சென்றுவிடுகிறார். இதை விவரிக்கும்போது உமாவின் கோபம் இன்னமும் குறையவில்லை. இன்றைக்கும் குறையவில்லை. புலம்புகிறார்.
“இதெல்லாத்தையும் அனுபவிக்க நாங்க என்ன பாவம் செய்தனாங்கள்? யாரு இப்படி எங்களுக்கு எழுதிவைத்தது? கடவுளா? அப்பிடி எண்டா கடவுளும் அந்த செஞ்சிலுவை சங்கம், ஐக்கியநாடுகள் சபை போல தான். கைவிட்டிட்டான். எதிர்காலத்தில இனி என்ன நடக்கும் எண்டு எனக்கு தெரியாது. ஆனா எனக்கிருக்கிற கோபத்துக்கு கடவுளை நேர்ல கண்டா அவர்ட கண்ணில ஓங்கி ஒரு குத்து விடுவன். அந்த பயத்தில தான் அவர் எங்களோட இல்லையோ தெரியாது”
உமா ஒரு தீவிர வாசகி. இரண்டாம் உலக போர்க்கதைகளில் தேர்ந்த லியோன் உரிஸ் என்ற எழுத்தாளரின் நூல்களை வாசித்த வாசித்த பெண்.  அவருடைய எக்சோடஸ் நாவல். ஹோலோஹோஸ்ட் யூத படுகொலைகளில் தப்பிய ஒரு யூதன் எப்படி தனக்கு நேர்ந்த அநியாயத்தை எதிர்த்து போராட தலைப்படுகிறான் என்ற கதையை உமா நினைவு படுத்துகிறார். “ஆனா இப்பவெல்லாம் திரும்பி எதிர்த்து போராடுவது தீவிரவாதம் ஆகிவிட்டது” என்று சிரிக்கிறார்.  கடைச்யில் அந்த யூதனும் எதிர்த்து போராடி குடும்பத்தை இழந்து ஒண்டியாகி நின்றானாம். தன் நிலைமையும் அது தான் என்கிறார்.

இறுதியாக, போகிற போக்கில், இறுதி கடற்கரை நாட்களில் தான் மீண்டும் கருவுற்று அது மீண்டும் கலைந்து போன கதையை சொல்கிறார். நல்ல காலம் கருவுற்று கலைந்தது, கொஞ்ச காலம் மாதவிடாய் இல்லாததால் அந்த நாப்கின்களை குண்டுக்காயத்துக்கு சுற்றிகட்ட கூடியதாக இருந்தது என்று கொஞ்சம் ஆசுவாசவும் செய்கிறார்.

நான் இந்த பதிவை எழுதி முடிக்கும் வரைக்கும் மனம் உடையாமல் இருக்கவேண்டும் …

தாய்

உஷா, இளம் வயதில் புலிகள் இயக்கத்தில் இணைந்து யுத்தக்கள புகைப்படப்பிடிப்பாளராக பல வருடங்கள் பணிபுரிந்துவிட்டு புலிகளின் அனுமதியின் பெயரில் முப்பது வயதில் திருமணம் செய்துகொண்டவர். கணவன் யார் என்று சரியாக தெரியாது. இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் தான் அறிமுகம். திருமணமாகி அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள். கணவன் புலிகளின் வேவுப்பிரிவாக இருக்கவேண்டும். சமாதான காலத்தில் இறந்துவிடுகிறான். உஷா இரண்டு குழந்தைகளுடன் திருமணமாகி சில வருடங்களிலேயே இளம் விதவை.

இரண்டு குழந்தைகளுடன் மாறி மாறி இடம்பெயர்ந்து, காலில் குண்டுக்காயம் பட்டு, முள்ளிவாய்க்கால் கடற்கரையை வந்தடைகிறார். இறுதி வாரத்தில், பங்கருக்கு வெளியே போகவே முடியாத நிலைமை. கக்கூஸ் பாத்ரூம் கூட பங்கருக்குள்ளேயே ஒரு ஓரமாய் போகவேண்டும். வெளியே குண்டுத்தாக்குதல் அனல் பறக்கிறது. தலையை எட்டிப்பார்த்தால் சன்னங்கள் பறப்பதையும் வாகனங்கள் எரிவதையும் தான் பார்க்க முடியும். தான் இறந்தால் தன் குழந்தைகள் படாத பாடு படுமே, பேசாமல் கடலுக்குள் விழுந்து குடும்பமாக உயிரை விடலாம் என்று உஷா நினைக்கிறார். இரண்டாவது மகள் ரெண்டு நாள் பொறுத்துப்பார்ப்போம் என்று கெஞ்சியதால் தற்கொலை முடிவை தள்ளிப்போடுகிறார்.

இறுதிநாள், இனியும் தாங்காது என்று நீரேரியை கடக்கிறார்கள். சுற்றும் முற்றும் பிணங்கள் பரவிக்கிடக்கின்றன. சிலர் காயப்பட்டவர்களை விட்டுவிட்டு எப்படி போவது என்று கூட இருந்து அழுகிறார்கள். குண்டு பட்டு அவர்களும் காயப்படுகிறார்கள். சில காயப்பட்டவர்கள் தங்களையும் கூட்டிச்செல்லுங்கள் என்று கெஞ்சுகிறார்கள். எப்படி கொண்டுபோவது? எல்லோரையும் அப்படியே விட்டுவிட்டு உஷாவும் பிள்ளைகளும் இராணுவத்திடம் செல்கிறார்கள்.

Srilanka Final Warபயங்கர தண்ணீர் தாகம். இராணுவத்தரப்பிடம் வந்தாயிற்று. பக்கத்தில் ஒரு சின்ன நல்ல தண்ணீர் குளம். எல்லோரும் தண்ணீர் குடிக்க ஓடுகிறார்கள். குளம் முழுதும் பிணங்கள் மிதக்கின்றன. “உங்கள் ஆட்கள் செத்துப்போய் மிதக்கிறார்கள்” என்று இராணுவம் சொல்லுகிறது. எவருமே ஒரு கணம் கூட தயங்கவில்லை.  மோந்து மோந்து தண்ணீர் குடிக்கிறார்கள். உஷாவும் பிள்ளைகளும் குடிக்கிறார்கள்.

கூட்டத்தை நோக்கி மலிபன் பிஸ்கட்டுகளை இராணுவ பெண் ஒருத்தி எறிகிறாள். ஆறேழு மாதங்களாக பிஸ்கட்டுகளை காணாத சிறுவர்கள் பாய்ந்து விழுந்து சண்டை பிடித்து பறிக்கிறார்கள். “இதுகள் மீனை மொய்க்கிற இலையாங்கள் மாதிரி” என்று அவள் நக்கல் அடிக்கிறாள்.

எல்லோரும் மேலும் இரண்டு கிலோமீட்டர் நடக்கவைக்கப்படுகிறார்கள். அங்கே பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டம். இரண்டு மீனவ படகுகளை தரையில் இழுத்துப்போட்டு அதற்குள் பவுசரால் குடிதண்ணீர் நிரப்பிவிடுகிறார்கள் இராணுவத்தினர். இருக்கும் இடத்தைவிட்டு அசைய முடியாது. சுற்றிவர முள்ளுக்கம்பி வேலி. வெட்ட வெளி. வெயில். ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லை. மலசலங்கள் கூட அங்கேயே இருந்த இடத்திலேயே இருக்கவேண்டும். எல்லோரும் பார்ப்பார்கள். இராணுவத்தினர் பார்ப்பார்கள். ஒன்றுமே செய்யமுடியாது. எவ்வளவு நேரமென்று உபாதைகளை கட்டுப்படுத்தமுடியும்?

இரண்டு நாள் கழித்து புலிகளின் தலைவர்கள் பலர் பாதர் ஜோசஃப் பிரான்சிஸோடு சேர்ந்து வந்து சரணடைகிறார்கள். பாதிரியாரோடு கூட வந்தால் பாதுகாப்பு என்று நினைத்திருக்கலாம். அத்தனை தலைவர்களும் அந்த பாதிரியாரும் இப்போது எங்கே என்று தெரியாது. அத்தனை பெரும் கொல்லப்பட்டிருக்கலாம்.

மனிக் முகாமில் சரளமாக பாலியல் வல்லுறவு இராணுவத்தாலும் மாற்றியக்க குழுக்களாலும் இடம்பெற்றிருக்கின்றன. கட்டிடவேலை, டென்ட் அடிக்க வந்த தொழிலாளர்கள் கூட இதை செய்திருக்கிறார்கள். குளிக்கும் கிணற்றடிகளுக்கு பக்கத்தில் சென்றி பாயிண்ட் இருக்கும். குளிக்கும் பெண்களை இராணுவத்தினர் கவனித்துக்கொண்டே இருப்பார்கள். சில டெண்டுகளை பாலியல் வல்லுறவுக்கேன்றே தனியா வைத்திருக்கிறார்கள்.
இதைப்பற்றி அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ராஜிவ விஜேசிங்கவிடம் கேட்டமைக்கு அவர் சொன்ன பதில்.
“சில படைவீரர்கள் இரவு பதினொரு மணிக்கெல்லாம் கூடாரங்களுக்குள் சென்று மூன்று மணிக்கு திரும்பியதாக தகவல் வந்தது உண்மை தான். அதை அந்த படைவீரரின் ஒருவித பாலியல் தொண்டாகவும் எடுத்துக்கொள்ளலாம். இல்லாவிடில் புராண கிரேக்க தத்துவங்களை பற்றி அவர்கள் அங்கே அலசியிருக்கலாம். வி டோண்ட் நோ. அதே சமயம் பிறந்த சில குழந்தைகளுக்கு நீலக்கண்கள் இருக்கின்றன. அப்படி என்றால் NGOக்களும் சேர்ந்து கும்மாளமடித்திருக்கின்றன என்று தான் அர்த்தம்”

புலிகள்

புலிகளின் வலுக்கட்டாயமான ஆட்சேர்ப்பு நினைத்துப்பார்க்கமுடியாத அளவுக்கு மோசமாக இருந்திருக்கிறது. ஒரு வீட்டில் பதினேழு வயதே ஆன பெண். பெற்றோர் பகல் முழுதும் தோட்டத்தில் இருந்த எண்ணெய் பரல் ஒன்றுக்குள் அவளை ஒளித்து வைப்பர். இரவில் அவள் வெளியே வந்து குளித்து, சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பாள். பகலானால் மீண்டும் பரலுக்குள். ஒரு நாள் கெட்ட வெயில். பரலுக்குள் இருக்கமுடியாமல் பிள்ளை வெளியே வந்துவிட்டது. பொறாமை பிடித்த பக்கத்துவீட்டுக்காரன் புலிகளிடம் போட்டுக்குடுக்க அடுத்த நிமிடமே அவளை இழுத்துக்கொண்டு போய்விட்டார்கள். மூன்று மாசத்துக்கு பிறகு அந்த பிள்ளை வீட்டுக்கு திரும்பிவந்தது. உடல் முழுதும் புலிக்கொடி போர்த்த உடலாய்.

இன்னொரு பெண்ணின் தாய், மகளை புலிகளிடம் இருந்து காப்பாற்ற ட்ரவலிங் பாக்கிற்குள் ஒளித்து வைக்க முயற்சி செய்திருக்கிறார். கால் வெளியே நீட்டி இருந்ததால் புலிகளிடம் அகப்பட்டுவிட்டாள். அந்த பெண் பின்னாளில் சினைப்பர் போராளியாக பயிற்சி எடுத்திருக்கிறாள். விதி என்று சொல்லி நொந்திருக்கிறாள். ஆனாலும் புலிகளின் தலைவர்கள் சரணடைய குடும்பங்களோடு ஏரியை கடந்தபோது அந்த பெண் மாத்திரம் தான் நின்று போராடபோவதாக மே 16 அன்று கூட சொல்லியிருக்கிறாள். இதை கடைசி நாளில் உயிர் தப்பிய கோபன் நினைத்துப்பார்த்து கலங்குகிறார்.

புலிகள் ஒரு கட்டத்தில் தொழில் சார் ஆட்செர்ப்புகளை நிகழ்த்தினார்கள். இரண்டு வாரத்துக்கு ஒருவரும் மயிர் வெட்ட முடியாமல் இருந்தது. காரணம் அத்தனை பாபர்களையும் அழைத்துச்சென்று விட்டார்கள். அடுத்த வாரம் பாடசாலை மாணவர்கள் போவார்கள். அதற்கப்புறம் கடைக்காரர்கள்.. இப்படி.
நிலைமை கட்டுமீறிப்போகவே பெற்றோர் சகட்டு மேனிக்கு தம் குழந்தைகளை திருமணம் முடித்து வைக்கலானார்கள். திருமணம் முடித்தவர் என்றால் புலிகள் பிடிக்கமாட்டார்கள் என்று ஒரு நம்பிக்கை. ஒரு பிள்ளை தாயின் தாலிக்கொடியை எடுத்து தான் மாட்டிக்கொண்டு தப்பிக்க பார்த்திருக்கிறது. இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டு அவளும் போர் முனைக்கு.

மே  16 அன்று கோபன் ஏரியை கடக்கும்போது புலிகளின் காயப்பட்டவர்கள் கூட ஆங்காங்கே சிதறிக்கிடந்தார்கள். கேட்க நாதியில்லை. இராணுவத்தின் பக்கம் செல்ல செல்ல, எங்கு பார்த்தாலும் உடல்கள். பெண்களின் உடல்கள் என்றால் உடை இல்லாமல் சிதைக்கப்பட்டு கிடக்கும். கூட்டமாக நகரும்போது குண்டுச்சத்தங்கள் கேட்டவண்ணமே இருக்கிறது. கோபன் பாதுகாப்புக்காக கூட்டத்தின் நடுவே நுழைந்துகொள்கிறார். குண்டு இலேசில் துளைக்காது இல்லையா. மேலும் போக திடீரென்று இராணுவம் சுடத்தொடங்குகிறது.

கோபனின் பக்கத்தில் கூட வந்த போராளி “இது சரிவராது, ரெட் குரோஸ் கப்பல் வருமாமே, அதில ஏறுவம்” என்கிறான். “சான்ஸ் இல்ல, இந்திய தேர்தலில திரும்பவும் காங்கிரஸ் தான் வந்திருக்கு” என்று கோபன் ரேடியோவில் கேட்டதை சொன்னவுடன், போராளி வந்தவழியே திரும்பி போய்விடுகிறான். இறுதிவரை போராடி சாகவென. இனி ஆகப்போவது ஒன்றுமே இல்லை என்ற நிலையிலும் ஆட்சேர்ப்பு நடைபெற்றது தான் மிகவும் சோகம். பலர் அலை அலையாக போய் குண்டை வெடித்து இறந்திருக்கிறார்கள். மே 16ம் திகதி பிரபாகரன் எல்லா போராளிகளையும் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சயனைட் குப்பிகளையும் எறிந்துவிடுமாறு உத்தரவு பிறப்பிக்கிறார். அதற்குப்பிறகு பிடிபட்டாலும் அழிவு தான் என்று தெரிந்து பலர் போராடி இறந்திருக்கிறார்கள். என்ன மாதிரி அவலம் இது?

பாலியல் வல்லுறவு

இராணுவத்தை பார்த்தால் ராம்போ தோற்றத்தில் இருக்கிறார்கள். கழுத்தில் தங்க தாலிகள் தொங்குகின்றன. நெக்லஸ், கைச்செயின் என எல்லோருமே குட்டி குட்டி நகைக்கடைகள். எல்லாமே சரணடைய வந்த பெண்களிடம் களவாடியது. தெற்குப்பகுதி ஏரியில் பொதுமக்கள் உடல்கள். அதுவும் அரை நிர்வாண இளம்பெண்களின் உடல்கள். பெண்களை பார்த்து இராணுவத்தினர் தமிழில் “இவர்கள் தான் எமக்கு சரியான் ஆக்கள் .. திருப்திப்படுத்தக்கூடிய ஆட்கள்” என்று கூறுகிறார்கள். அழகான இளம்பெண்களை வரிசையில் கண்டால் முள்ளுகம்பியை தாண்டி வரச்சொல்வார்கள். பதினெட்டு வயது பெண்ணொருத்தியை கூட்டிச்செல்கிறார்கள். சற்று நேரத்தில் அந்த பெண் வீரிட்டு அலறும் சத்தம் கேட்கிறது. யாருமே ஒன்றுமே செய்யமுடியாது. வரிசை போகும் பாதையில் ஒரு சென்றிப்பொயின்ட். அதற்கு பின்னால், அரை நிர்வாணமாய் ஒரு பெண், கதறிக்கொண்டு நிற்கிறாள். உடைகள் கசக்கி கிழிக்கப்பட்டு கிடக்கின்றன. எல்லோருமே பார்க்கிறார்கள். ஆனால் கவனிக்காதது போல நேரே பார்த்து நடக்கிறார்கள். ஒன்றுமே செய்யமுடியாது.

மணிமொழி, இளம்மனைவி, வவுனியாவில் வசிக்கிறாள். கணவன் புலிகளின் உளவாளி, நிறைய குண்டுவெடிப்புகளுடன் தொடர்பு பட்டவன் என்று, பாவம் மலையகத்தை சேர்ந்த இந்த பேதைப்பெண்ணுக்கு திருமணம் செய்யும் போது தெரியாது. பதினாறு மாசமே ஆன கைக்குழந்தை இருக்கிறது. யுத்தமும் முடிந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக அமைதிக்கு திரும்புகிறது.  மணிமொழி இப்போது நாற்பது நாள் கர்ப்பிணி. ஒரு நாள் இரவு போலிஸ் வீட்டுக்கு வருகிறது.

கணவன் எங்கே என்று கேட்கிறார்கள். அவன் இந்தியாவுக்கு போய்விட்டான் என்கிறாள். இவளை போலிஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்செல்கிறார்கள். பெண் போலீசார் நடு இரவில் அவளை CID இடம் ஒப்படைக்கிறார்கள். அவர்கள் ஒரு தனி வீட்டுக்கு கண்ணைக்கட்டி அழைத்துச்சென்று மிரட்டுகிறார்கள். ஒரு அதிகாரி இவளை நெருங்குகிறான். “நீ அழகாய் இருக்கிறாய்” என்கிறான். இவள் தன்னை தப்புவிக்க பகீரத பிரயத்தனம் செய்கிறாள். அவனோ இவளின் கைகளை கைவிலங்கை ஒரு கதிரையில் கட்டிவிட்டு பாலியல் வல்லுறவு செய்கிறான். சரி இதோடு முடிந்தது என்றால் இன்னொருவன் அடுத்ததாக வருகிறான்.

நாற்பது நாள் கர்ப்பிணியான மணிமொழியின் கரு சிதைகிறது. இரத்தம் கசிய தொடங்குகிறது.

Still Counting The Dead

Screen-Shot-2012-12-01-at-5.33.36-PM
அலுவலகத்துக்கு போகும் போதும் வரும்போதும் புகையிரதத்தில் வைத்து இந்த புத்தகத்தை வாசித்தேன். யன்னலோரமாய் ஒருவித பதட்டத்தோடே வாசிப்பு. அது பனங்காய் இல்லை. ஒரு குழந்தையில் தலை என்று தெரிந்த சமயம் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. முன்னால் இருந்த பெண்மணி Are you ok? என்றார். பதில் சொல்லவில்லை. பொது புகையிரதத்தில் நாலு பேர்கள் பார்க்கிறார்கள் என்ற பிரக்ஞையே இல்லை. கண்ணீர் ஓடத்தொடங்கியது.
எந்த தைரியத்துடன் இந்த புத்தகத்தை வாசித்து முடித்தேன். முடித்த பிறகும் சாப்பாடு இறங்குகிறது. நண்பர்களுடன் பேச முடிகிறது. எழுத முடிகிறது என்றால் .. என்ன மாதிரி மனுஷன் நான்? என்ன எழுதுவது என்று தெரியாமலேயே ஆரம்பித்த பதிவு இது. நேற்று கேதாவுக்கு சொல்லி கவலைப்பட்டேன். இதை எழுதிவிட்டு என்னால் இன்னொரு பதிவு எழுதமுடியுமா என்று தெரியவில்லையடா என்றேன்.

Still Counting The Dead, ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் மூன்று தரப்புகளாலும் நடாத்தப்பட்ட யுத்தக்குற்றங்களின் தொகுப்பை சாட்சியங்களின் நேரடி அனுபவங்கள் வாயிலாக கொண்டுவந்திருக்க்கும் புத்தகம். பெருமதிப்புக்குரிய பிபிஸி செய்தியாளர் பிரான்ஸிஸ் ஹாரிசன் எழுதியது. ஸ்ரீலங்கா அரசாங்கம், விடுதலைப்புலிகள், ஐக்கியநாடுகள் சபை. மூன்று தரப்புமே திட்டமிட்டு அந்த குழந்தையில் தலை அப்படி நட்ட நடு வெயிலில் சுடு மணலில் பனங்காய் போல கிடக்க காரணமானவர்கள். அந்த மூன்று பேர்களையும் ஆதாரபூர்வமாக யுத்தகுற்றவாளிகளாக நிரூபிக்கிறது ஹாரிசனின் புத்தகம். விஜய் நம்பியாரின் நம்பிக்கை துரோகத்தையும், மனிக் முகாமில் ஏஸி வாகனத்தில் யன்னல் கண்ணாடியை கூட இறக்காமல் சுற்றிப்பார்த்த பான்கிமூனையும் பற்றி விவரிக்கிறார். சமரசம் செய்யவந்த நோர்வே பிரதிநிதிகளை கேபி சந்தித்ததையும், சரணடைய புலிகள் மறுத்ததையும் விளக்குறார். இறுதி நாட்களில் புலித்தேவனுடனான ஸ்கைப் உரையாடல்கள் ஒரு விதமானவை. போராளி ஒருவருக்கு நிகழ்ந்த சித்திரவதையை இங்கே எழுதமுடியாது.

சர்வதேசத்தின் தோல்வி. இலங்கை அரசாங்கத்தை தூக்கு மேடையில் ஏற்றவேண்டிய தேவை என விரிவாக விளக்கும் இந்த புத்தகம் போன்று ஒரு புத்தகம் இது நாள் வரையில் ஈழத்தமிழர் வரலாற்றில் வந்ததுமில்லை. இனி வரப்போவதுமில்லை.
imgres
தனக்கென்று ஒரு பொறுப்பு இருக்கிறது என்று, எவருமே கவனிக்காத ஈழப்பிரச்சனையை நிதானத்துடன் நெறி தவறாமல், பாசாங்கு இல்லாமல் எழுதி உலகத்தின் கவனத்தை கொஞ்சமேனும் திருப்ப முயற்சி செய்த பிரான்ஸிஸ் ஹாரிசனுக்கு, என் தலைமுறை மட்டுமல்ல, எதிர்கால தலைமுறை கூட காலம்தோறும் காலில்விழுந்து கிடக்க கடமைப்பட்டுள்ளது. “நானே செய்திருக்கிறேன். நீ ஈழத்தவனாக இருந்து என்னடா செய்திருக்கிறாய்” என்று அவர் கேட்காமல் கேட்கும் கேள்வியும் முகத்திலடிக்கிறது. “உனக்கு இருக்கும் திறமை எழுத்து. அதை எமக்காக அவ்வப்போதேனும் பயன்படுத்துடா ப்ளீஸ்” என்று கெஞ்சியும் சிலநேரங்களில் உரிமையுடனும் கேட்கும் நண்பன் பாலா இதை எழுதும்போது நினைவுக்கு வருகிறான். நிச்சயம் எழுதுவண்டா...

குழந்தை

வைத்தியசாலையில் ஒரு தாய். கழுத்து நெஞ்சு என எல்லா இடத்திலும் காயம். உயிர் பிழைக்க வாய்ப்பில்லை.  தான் இன்னும் சில வினாடிகளில் இறந்து விடுவேன் என்று அவருக்கு தெரிகிறது. கதறுகிறார். வலியினால் அல்ல. தன்னுடைய ஆறு மாச கைக்குழந்தையை கொண்டுவரும்படி கீச்சிட்டு கத்துகிறார். பாட்டி அவரின் பச்சிளம் குழந்தையை கொண்டுவந்து நீட்டுகிறார். இந்த தாய் அந்த குழந்தையை கையில் ஏந்தி, உச்சி முகந்து முத்தமிட்டு, பாலூட்டவென தன் முலைக்காம்பை குழந்தையின் வாயில் சேர்க்கிறார். பல நாட்களாய் அந்த தாய் சாப்பிடவேயில்லை. ஆனால் குழந்தைக்கு பசி எடுக்கும் என்ற பிரக்ஞை. பால்மா இல்லை என்றும் அந்த தாய்க்கு தெரியும். குழந்தை கொஞ்ச நஞ்சம் இருக்கும் தாய்ப்பாலையேனும் குடிக்கட்டுமே. கொஞ்ச நேரத்தில் அவர் இறந்துவிடுகிறார். அந்த தாய் குழந்தைக்கு குடுத்த இறுதி பரிசு அது. இறந்தபின்னும் தொடர்ந்த பரிசு.
குழந்தை, அது தெரியாமல் இன்னமும் முலைக்காம்பை எம்பி எம்பி பாலைக்குடித்துக்கொண்டு இருக்கிறது.
wounded-tamil_child

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட