Skip to main content

குரங்கு


 

அம்மோய் .. குரங்கு வந்திட்டுது

தகப்பனினுடைய மோட்டர்சைக்கிளின் சத்தம் கேட்கவும் அதற்காகவே காத்திருந்தவன்போலத் தம்பியன் கேற்றடியை நோக்கி ஓடினான். பின்வளவில் உடுப்புக் காயப்போட்டுக்கொண்டிருந்த அவனின் தாய்க்காரியும் போட்டது போட்டபடியே முற்றத்துக்கு விரைந்தார். பக்கத்து வீட்டு மதில்களுக்கு அப்பாலிருந்தும் பல தலைகள் அவசரமாக எட்டிப்பார்த்தன. தம்பியன் போய்க் கேற்றை வேகமாகத் திறந்துவிடவும் மோட்டர்சைக்கிள் முற்றத்துக்குள் நுழைந்தது. எல்லோர் கண்களும் அதன் பின் சீற்றிலிருந்த கூட்டையே பின்தொடர்ந்தன.  வீட்டுப் போர்டிகோவில் மோட்டர் சைக்கிள் போய் நிற்கவும் பின்னாலேயே ஓடிவந்த தம்பியன், அந்தக்கூட்டின் அருகே போய்,  அதை மூடிக்கட்டியிருந்த சாக்கினைச் சற்று விலத்திப் பார்த்தான். 


உள்ளே, ஒரு மூலையில் ஒடுங்கிப்போய், மிரட்சியோடு கண் சிமிட்டாமல் அவனையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தது அந்தக் குரங்கு.


000


ஒரு டிவி நிகழ்ச்சியில் வந்த குரங்கைப் பார்த்தபிறகே தம்பியனுக்குத் தானும் ஒரு குரங்கினை வளர்க்கவேண்டுமென்ற ஆசை வந்தது. உடனே அதைத் தாயிடம் கேட்கவும் செய்தான். முதலில் தாய்க்காரி அவனுடைய கோரிக்கையைப் கணக்கில் எடுக்கவில்லை. குரங்குகளை வீடுகளில் எவரும் வளர்ப்பதில்லை என்று அவனுக்குச் சொல்லிவிட்டாள். ஆனால் அவன் விடவில்லை. இரவு கடையைச் சாத்திவிட்டு வீடு திரும்பிய தகப்பனிடம் தன் ஆசையைச் சொன்னான். ‘குரங்குதானே, உது சின்னப்பிரச்சனைஎன்று சொல்லி, தகப்பனும் அடுத்தநாள் டவுனுக்குப்போன இடத்தில் ஆயிரம் ரூபாய்க்கு ஒரு குரங்குப்பொம்மையை வாங்கிக்கொண்டுவந்து தம்பியனிடம் கொடுத்தான். அந்தக்குரங்கு பொம்மை தன்னாலே நடந்தது. முன்னே கதிரைக்கால் முட்டினால் கீச்சிட்டது. பல்டி அடித்தது. ஆடு என்றால் ஆடியது. பாடியது. மற்றவர்கள் சொல்வதையெல்லாம் அப்படியே அதன் குரலில் ஒப்புவித்தது. ஆனால் தம்பியனுக்கு அந்தக் குரங்கு பொம்மையைப் பிடிக்கவில்லை. ‘எனக்குக் கதைக்கிற குரங்கு வேணாம்என்று அதைக் கொண்டுபோய்க் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டான். உயிருள்ள பேசாத குரங்குதான் வேண்டுமென்று அடம்பிடித்தான். அவன் அழவும், குப்பைத்தொட்டிக்குள் கிடந்த குரங்கு பொம்மையும் அவனோடு சேர்ந்து அழுதது. அவன் கோபத்தில் குப்பைக்குள் கிடந்த பொம்மையின் பட்டறிகளைப் பிடுங்கி எறிந்துவிட்டுத் திரும்பவும் அழத்தொடங்கினான்.

எனக்கு உயிரோட ஒரு குரங்கு வேணும்

உலகின் மிகச்சிறந்த அகிம்சைப்போராளிகள் குழந்தைகளாகத்தான் இருக்கமுடியும். உண்ணாவிரதத்திலும் ஒத்துழையாமைப் போராட்டத்திலும் குழந்தைகளே காந்தியத்துக்கும் முன்னோடிகள். அதிலும் தம்பியனை இந்த விசயத்தில் ஒரு மகாத்மா என்றே சொல்லவேண்டும். எப்போது ஒரு போராட்டத்தை ஆரம்பிக்கவேண்டும்? எந்த வகையான போராட்டம்அதன் வழிமுறைகள் படிமுறைகள் என்னென்ன? எப்போது அதனை முடித்துவைக்கவேண்டும்? அடுத்ததாக எப்படியான போராட்டத்தைத் தொடங்கலாம்? ஆரம்பக் கோரிக்கையைத் தொடர்ந்து மறக்காமலும் நீர்த்துப்போகாமலும் வைத்திருப்பது எப்படி? இப்படி அகிம்சைப் போராட்டத்தின் ஆதார நுட்பங்கள் எல்லாம் அவனுக்கு அந்த வயதிலேயே அத்துப்படியாகியிருந்தன.  


முதலில் ஒரு சாதாரணக் கேவலோடுதான் அவனுடைய குரங்குக் கோரிக்கை ஆரம்பித்தது.  பின்னர் படிப்படியாக அவனது போராட்டங்கள் பெரு வடிவங்களை எடுக்க ஆரம்பித்தன. உணவு மறுப்பு என்பது அதில் முக்கியமானது. தாய்க்காரி எதனைத் தீத்திவிட்டாலும் தம்பியன் வேண்டுமென்றே ஓங்காளித்துச் சத்தியெடுப்பான். தட்டைத் தள்ளிவிடுவான். அவனுக்கு மிகவும் பிடித்த முட்டைப்பொரியலைத் தூக்கி எறிந்தான். ஒருநாள் முழுதும் அப்படி அழிச்சாட்டியம் பண்ணிவிட்டு இரவு படுக்கைக்குப் போகும் சமயத்தில் சற்றுப் பஸ் அடித்துவிட்டுப் பின்னர் நன்றாகப் பால் குடிப்பான். அடுத்தது தூய்மையாக இருப்பதையும் குளித்தலையும் எதிர்ப்பது. தம்பியனை எப்போது தனியே விட்டாலும் மண்ணை அள்ளித் தன் தலையில் கொட்டினான். தாய்க்காரி அவனை இழுத்துக்கொண்டுபோய்க் குளிப்பாட்டித் தலையைத் துவட்டிவிட்டுத் தானும் குளிக்கலாம் என்று போனால் தொலைந்தது. திரும்பிவந்து பார்க்கையில் தம்பியன் குப்பைக்கூடையைத் தலையில் கவிழ்த்துக் கொட்டிக்கொண்டுகுரங்கு வாங்கித்தாங்கோஎன்று அழுதபடி நிற்பான். நள்ளிரவில் தானும் எழுந்து, மற்றவர்களையும் கூப்பாடுபோட்டு எழுப்பிஇப்போதே எனக்குக் குரங்கு வேண்டும்என்று கத்துவான். ஒருநாள் சோற்றுக்கோப்பைக்குள் மண்ணை அள்ளிப்போட்டுத் தாயிடமிருந்து குட்டு வாங்கினான். அப்பாவின் மோட்டர் சைக்கிளின் டயரின் காற்றைத் திறந்துவிட்டான். அவனது ஒவ்வொரு போராட்ட முயற்சிகளுக்கும் எதிராக மிரட்டலோ, நுள்ளலோ, குட்டோ, பிரம்படியோ என ஏதோவொன்று விழுந்துகொண்டுதானிருந்தது. ஆனாலும் தம்பியன் அசரவில்லை. இப்படித் தொடர்ச்சியாக இரண்டு மாதங்களுக்கு அவனுடைய குரங்குக்கான போராட்டம் நீடித்தது. ஏனைய குழந்தைகள் என்றால் இரண்டு நாட்களிலேயே இயலாமையால் போராட்டங்களைக் கைவிட்டிருப்பார்கள். அல்லது ஆரம்பக் கோரிக்கையை மறந்துவிட்டுப் புதிதான ஒன்றுக்கு ஆசைப்படத் தொடங்கியிருப்பார்கள். தாய் தகப்பன் காட்டுகின்ற பிராக்குகளுக்கு  அக்குழந்தைகள் எடுபட்டிருக்கும். ஆனால் தம்பியன் எதையும் இலேசில் மறக்கவும் மாட்டான். அத்தோடு விறுமம் பிடிப்பதிலும் அவன் விண்ணன்.  தொடர்ந்து அடம்பிடித்து அழுதால்  தான் கேட்பதை என்றோ ஒருநாள் அடைந்துவிடலாம் என்கின்ற முழுமையான நம்பிக்கை தம்பியனுக்கு இருந்தது. அதற்குக் காரணம் இதற்குமுதல் அவன் அடம்பிடித்தபோதெல்லாம் அடைந்த வெற்றிகள். ஒரே விசயத்தை மறக்காமல், தொடர்ந்து அழுதும் அரற்றியும் கேட்டுக்கொண்டேயிருந்தால் ஒருநாள் இல்லை ஒருநாள் அது கிடைத்துவிடும் என்பதை அவன் உணர்ந்திருந்தான். பெற்றோர்களுக்கு அவனைத் தொடர்ந்து எதிர்த்துக்கொண்டிருக்க நேரமோ பொறுமையோ இல்லை என்பது அவனுக்குத் தெளிவாகவே தெரிந்திருந்தது. 


எல்லாமே அந்தப் பனைமரப் போராட்டம் கொடுத்த அனுபவம்தான்.


இரண்டு வருடங்களுக்கு முன்னர் தம்பியனுக்கு முடியிறக்கவென அவனை நயினாதீவுக்குக் கூட்டிச் சென்றிருந்தார்கள். போகும் வழி நெடுகிலும் இரு மருங்கிலும் பனைமரங்கள் காடெனப் பற்றிப்போயிருந்தன. அவற்றைக் கண்டதும் தம்பியனுக்கு ஏனோ பயங்கரமாகப் பிடித்துப்போயிற்று.  நயினாதீவில் போயிறங்கியதுமே பனைமரம் ஒன்றை அவன் ஓடிப்போய்த் தொட்டுப்பார்த்தான். பின்னர் வடலியைப் பார்த்ததும் அதனைப் போய்க் கட்டிப்பிடித்தான். சிறிய பனங்கன்று ஒன்றைப் பிடுங்கமுயன்று தோற்றான். பனம்பாத்தியில் கிடந்த முளைகளைக் கிளறி விளையாடினான். பெற்றோர்களும் அவன் அழாமல் ஏதோ பிராக்கில் இருக்கும்வரைக்கும் தமக்கு நிம்மதி என்று விட்டுவிட்டார்கள். அதுதான் பிழைத்துவிட்டது. முடியிறக்கும் திடலுக்கு அவனை அழைத்துப்போக வெளிக்கிடையில் ஆரம்பித்தது அவனது புராணம்.  தனக்கு ஒரு பனைமரம் வேண்டும் என்று அழத் தொடங்கினான். அதுவும் கன்றில்லை, முளையில்லை, முழுதாக வளர்ந்த ஒரு பனைமரமே வேண்டுமென்று அடம்பிடித்தான். அப்படியெல்லாம் பனைமரத்தைப் பிடுங்கிச்செல்லமுடியாது என்று அவனுக்கு விளக்கம் சொல்லிப்பார்த்தார்கள். ஆனால் அவன் விடுவதாயில்லை. அவன் அழுது ஆர்ப்பாட்டம் செய்ததில், முடியிறக்கும்போது சவரக்கத்தி தலையில் கீறி, நான்கைந்து இடங்களில் இரத்தம் வடிய ஆரம்பித்துவிட்டது. அன்றைக்கு வீடு திரும்பும் வழியிலெல்லாம் பனைமரங்களைப்பார்த்து அழுதபடியே வந்தான். தீவுப்பகுதி கழிந்து, சத்திரத்துச் சந்தி தாண்டி, பனைக்காடுகள் கண்களிலிருந்து மறைந்தபின்னருங்கூட அவனது அழுகை நின்றபாடில்லை. களைத்துப்போய் தாயின் நெஞ்சில் சாய்ந்துகிடந்து தூங்கும்போதும் அடிக்கடி அவன்  கேறிக்கொண்டேயிருந்தான். வீட்டுக்கு வந்தும் ஐந்து நாட்களுக்கு அவனுடைய அழுகை நின்றபாடில்லை. அக்கம்பக்கத்தவர்களும் வந்து அவனுக்கு விளையாட்டுக்காட்டிப் பார்த்தார்கள். ம்ஹூம். கடைசியில்மொட்டையடித்த குழந்தை எந்நேரமும் அழுதுகொண்டேயிருந்தால் சளி பிடித்து நிமோனியா ஆக்கிவிடும்என்று பக்கத்து வீட்டுச் சித்திர டீச்சர் சொன்னதில், வேறு வழியில்லாமல் அவனுடைய தகப்பன் எங்கிருந்தோ ஒரு பனங்கன்றைக் கொண்டுவந்து வீட்டு முற்றத்தில் நடவேண்டியிருந்தது.  இரண்டே வருடங்களில் அந்தக் கன்று வீட்டிலிருந்த தென்னை அளவுக்கு வளர்ந்துவிடும் என்று அவனுக்கு நம்பிக்கை ஊட்டவேண்டியிருந்தது. இது நிகழ்ந்தபோது தம்பியனுக்கு மூன்று வயதுகூட நிரம்பியிருக்கவில்லை. 


அப்போது பிடித்த பிடி.


இப்போது தம்பியனின் வீட்டு முற்றத்திலிருந்த அந்த ஒற்றைப்பனை வடலியாகிவிட்டது. கூடவே அடுத்தவருடத்து மொட்டையடிப்போடு இன்னொரு பனங்கன்றும் வளர்க்கவேண்டியிருந்தது. பக்கத்திலேயே ஒரு தென்னை மரம். பின் தோட்டத்தில் செவ்வாழை,  கொய்யா, ஜம்பு, நாவல் மரங்கள். வீட்டுக்குப் பளிச்சென்று குருத்துப் பச்சை நிறத்தில் பூச்சு அடித்திருந்தார்கள். அதைவிடக் கொல்லைப்புறத்தில் ஒரு மிருகக்காட்சிச் சாலையே அமையப்பெற்றுவிட்டது. ஒரு மறி ஆடு. இரண்டு குட்டிகள். பசு மாடு ஒன்று. ஒரு ஊர்நாய். ஒரு பொமனேரியன். ஒரு அல்சேசன். இரண்டு கறுவல் பூனைகள். மண்ணிறத்தில் ஒரு முயல். வெள்ளையில் இன்னொன்று. மூன்று கழுத்துவெட்டிச் சேவல்கள். இருபது ஊர்க்கோழிகள். மீன் தொட்டிக்குள் கறுப்பு மொரிஸ். வெள்ளை மொறிஸ் எனப் பலவகை மீன்கள். ஒஸ்காருக்கும் தங்க மீனுக்குமெனப் பிறிம்பானத் தொட்டிகள். தேங்காய்க் கோம்பைக்குள் ஒரு சோடி லவ் பேர்ட்ஸ். இன்னொரு கூட்டுக்குள் ரிவேர்ஸ் கர்நம் புறாக்கள். அதைவிட ஒரு தனிக்கிளி. கிணற்றுக்குள் ஒரு ஆமைவேறு நீந்தித்திரிந்தது.


கூடவே தம்பியனின் தாய்க்காரிக்கு இப்போது ஆறாவது மாசம்.


எல்லாமே தம்பியன் கடந்த இரண்டே வருடங்களில் போராடிப் பெற்றுக்கொண்டவை. இவை எல்லாம் பரவாயில்லை. ஆனால் திடீரென்று குரங்கைக் கொண்டுவா என்று கேட்டால் எப்படி வாங்கிக்கொடுப்பதாம்? நீ என்ன சாதித்தாலும் இது மட்டும் முடியவே முடியாது என்று தாய்க்காரி உறுதியாகச் சொல்லிவிட்டார். தினமும் தம்பியனின் அழுகைச் சத்தங்களைக்கேட்டுச் சகிக்கமாட்டாமல் புறுபுறுக்கும் அக்கம் பக்கத்தார்கூட,  பிள்ளைக்கு எதை வேண்டுமென்றாலும் வாங்கிக்கொடுங்கள் ஆனால் குரங்கு புகுந்த வீடு விளங்காது, வேணாம்என்று அறிவுரை சொன்னார்கள். எல்லோருக்கும் குரங்கு வீட்டுக்குக் கூடாது என்று தெரிந்திருந்ததே ஒழிய தம்பியனை எப்படிச் சமாதானப்படுத்துவது என்பது தெரிந்திருக்கவில்லை. அவன் அழுதுகொண்டேயிருந்தான். ஒரு குழந்தை காலை எழுந்ததுமுதல் இரவு படுக்கைக்குப் போகும்வரைக்கும் அழுதுகொண்டேயிருந்தால் எப்படியிருக்கும்? அதுவும் தகப்பன் வீட்டில் இருக்கும்போது தம்பியன் இரட்டிப்பாக அழுவான். இவனுடைய அழுகையைச் சகிக்கமாட்டாமல் தகப்பன்காரன் காலையில் தம்பியன் எழும்ப முன்னரேயே வீட்டிலிருந்து புறப்பட்டுப் போய்த் கடையைத் திறந்துவிடுவான். பின்னர் இரவு பத்துமணிவரைக்கும் கடையைச் சாத்தாமல் அங்கேயே இருந்து, தம்பியன் நித்திரையான பின்னரே வீட்டுக்கு வருவான். 


ஆனால் தாய்க்காரிதான் பாவம். ‘பிள்ளைத்தாய்ச்சி இருக்கிற வீட்டில குழந்தை எப்பவுமே அழுதுகொண்டிருந்தால் அது தரித்திரம்என்று அந்தச் சித்திர டீச்சர் சொன்னதிலிருந்து அவளுக்கு அடிவயிற்றில் இலேசாகப் பயம் ஒட்டிக்கொண்டுவிட்டது. அத்தோடு வயிற்றுப்பிள்ளையோடு சேர்த்து அடம்பிடிக்கும் தம்பியனையும் தானே தனியனாகச் சமாளிக்க, கணவன் நள்ளிரவில் வீடு திரும்புவதில் விசனமும் சேர்ந்துகொண்டது.  அதனால் கணவன் மனைவிக்குள் நாளடைவில் சண்டை ஏற்படத் தொடங்கியது. பகல் முழுதும் குரங்கு வேண்டும் என்று தம்பியன் அழுவான்.  இரவு அவன் நித்திரையாகி, புருசன்காரன் வீட்டுக்குத் திரும்பியதும் மனைவி முறைப்பாடு வைத்து அழுவாள். இதனால் ஆரம்பத்தில் கொஞ்சமாகக் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்த கணவனும் பின்னர் நிறைவெறியிலே வீடு திரும்ப ஆரம்பித்தான்.  ஒருநாள் அப்படி வெறியில் வந்து நடு வீட்டில் அமர்ந்து அவன் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். மனைவிக்குத் திடீரென்று வயிற்றைக் குமட்டிக்கொண்டுவர அவள் பாத்ரூமுக்குள் விரைந்துபோய் சத்தி எடுக்க ஆரம்பித்தாள். அவள் ஓங்காளித்த சத்தத்துக்கு அருட்டப்பட்டு விழித்த தம்பியன் தூக்கக்கலக்கத்திலும்குரங்கு வேணும்என்று அழத் தொடங்கிவிட்டான். அப்போது தகப்பனுக்கு வந்ததே கோபம். 

அரியண்டம்எனக்கெண்டு ஒரு குரங்குச் சனியன் வந்து பிறந்திருக்குது 

என்று கத்தியபடி அவன் போய்த் தம்பியனை வெளுக்கத் தொடங்கினான். சத்தம் கேட்டு ஓடிவந்து தடுத்த மனைவியைச் சுவரோரம் தள்ளிவிட்டான். அவள் தன் வயிற்றைப்பிடித்தபடியேஐயோ, என்ர அடி வயிறு நோவுதே, என்ர பிள்ளை, என்ர பிள்ளையை கொண்டிட்டார்என்று சுவற்றோடு அப்படியே சளிந்தாள். ‘இந்த நாயளோட வாழுறதைவிடச் செத்துத் துலையிறது நல்லம்என்று புருசன்காரன் ஓடிப்போய்க் கிணற்றுக்குள் குதித்துவிட்டான். இந்தச் சம்பவம் நிகழும்போது இரவு பதினொரு மணி ஆகியிருந்தது. ஆனாலும் அயலில் நிகழ்ந்துகொண்டிருந்த இந்தக் குடும்பச் சண்டையை ஒட்டுக்கேட்டுக்கொண்டிருந்த அத்தனை பக்கத்து வீட்டாரும் கிணற்றுக்குள் ஆள் விழுந்த சத்தம் கேட்டதும் ஓடிவந்துவிட்டார்கள்.  கடைசியில் பார்த்தால் சேதாரம் என்னவோ சாதாரணம்தான். மனுசிக்காரி கவனமாகத்தான் சுவற்றோடு சரிந்து விழுந்திருந்தாள். புருசன்காரனோடு சேர்த்து உள்ளிருந்த அவனது வாரிசும் உதைத்ததில்தான் அவளுக்கு வயிற்றுவலி வந்திருக்கவேண்டும். அவள் கணவனுமே நிறைவெறியில்  போய்க்  கிணற்றுக்குள் பாய்ந்திருந்தாலும், ஆளுக்கு நன்றாகவே நீச்சல் தெரியுமாதலால், நீந்திக் கல்லுக்கட்டைப் பிடித்து அடுத்த நிமிடமே மேலே ஏறி வந்துவிட்டான். அதன் பின்னருங்கூட இருவரும் வாக்குவாதப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.  இருவர் சண்டையையும் தீர்த்துவைக்க அக்கப்பக்கத்தார் பெரும் பிரயத்தனப்படவேண்டியிருந்தது.


சித்திர டீச்சர் வந்து கூடியிருந்த எல்லோருக்கும் பிளேன் கோப்பி ஊற்றிக்கொடுத்தார்.  இத்தனை அமளியில்கூட அவர் சோட்டியிலிருந்து மாறி சேலைகட்டிக்கொண்டே வந்திருந்தார்.

ஒரு குரங்குக்காக வயித்துப்பிள்ளை இருக்கிற இடத்தில ஏன் இப்பிடி சண்டை பிடிக்கிறியள்


அவருக்கென்ன, அவர் ஊருலகம்பூரா அடிபுன்னிட்டு இரவு வீட்டவருவார். நாந்தானே எல்லாத்தையும் படவேண்டிக்கிடக்கு


அது சனியன் எப்பப் பாத்தாலும் குரங்குவேண்டுமென்று அழுதா நான் என்னெய்யிறது? அது காணாது எண்டு இந்தக்குரங்கு வேறை, எனக்கெண்டு வந்து வாச்சுதுகள்


அவர்களிருவரும் தொடர்ந்து புறுபுறுக்க சித்திர டீச்சர் புதிதாக ஒரு ஆலோசனையைச் சொன்னார்.

எனக்கெண்டா இந்த வீட்டுக்க முனி பூந்துட்டுதுபோலத் தெரியுது. இது இனி பரியாரம் செய்யாமப் போகாது

அவருடைய ஆலோசனையை எல்லோருக்குமே ஆமோதித்தார்கள். டீச்சர் சொன்னதோடு நின்றுவிடாது கல்வியங்காட்டில் இருந்த அவருக்குத் தெரிந்த பரியாரியார் ஒருவரின் பெயரையும் தொலைபேசி இலக்கத்தையும் எடுத்துக் கொடுத்தார். வந்திருந்த அயலார் எல்லோருமே அந்த இலக்கத்தைக் குறித்துவைத்துக்கொண்டார்கள். அடுத்த பதினைந்து நிமிடங்களுக்கு அவர்களின் பேச்சு அந்தப் பரியாரியார் குணப்படுத்திய நோய் நொடிகளைப்பற்றியே இருந்தது. அலோபதி வைத்தியம் கைவிட்ட புற்றுநோயாளிகளையும், செய்வினை மந்திரம் செய்யப்பட்டு மனநோயாளிகளான பலரையும் அவர் குணப்படுத்தியிருக்கிறார். திருமணமாகி பத்து வருடங்களாகக் குழந்தைப்பேறு கிட்டாத சித்திர டீச்சரின் உறவுப்பிள்ளை ஒருத்திக்கு இரணைப்பிள்ளைகள் பிறந்திருக்கின்றன. பரியாரியார் சாத்திரமும் குறிப்பும் வாஸ்துவும்கூட நன்றாகப் பார்ப்பார் என்றும் டீச்சர் சொன்னார். கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு ஒவ்வொருவராக விடைபெற ஆரம்பித்தார்கள். அழுதுகொண்டிருந்த தம்பியன் மூசியபடியே திரும்பவும் நித்திரையாகிவிட்டான். தாய்க்காரி அவனைக்கொண்டுபோய் அறைக்குள் வளத்திவிட்டு வந்தாள். எல்லோரும் போனபின்னர் கொஞ்ச நேரம் கணவனும் மனைவியும் பேசாமலேயே அமர்ந்திருந்தார்கள். கிணற்றில் விழுந்து எழுந்த கணவனின் தலையிலிருந்து இன்னமும் ஈரம் சொட்டிக்கொண்டிருந்தது. அதைக்கவனித்த மனைவி உள்ளேபோய் ஒரு துவாயை எடுத்துக்கொண்டுவந்து அவனிடம் நீட்டினாள். அவன் அதனை வாங்காமால் விறுமனாக அமர்ந்திருக்கவும் மெல்லிய சிரிப்புடன் அவளே அவனுடைய தலையைத் துவட்டிவிட ஆரம்பித்தாள். சற்றுநேரம் அவள் அப்படித் துவட்டுவதை அனுபவித்தவன், பின்னர் அவளை இழுத்துத் தன் மடியில் இருத்தி ஆவேசமாக முத்தம் கொடுக்கத்தொடங்கினான். 

எல்லாருக்கும் முன்னால என்னைக் குரங்கு எண்டனி என்ன?”

அவள் கோபத்தோடு அவனைத் தள்ளிவிட்டாள். அவன் மெலிதாகச் சிரித்தபடி மேலும் பலமாக அவளைப் பிடித்து இழுத்து இறுக்கக் கட்டிப்பிடித்தபடி செல்லம் கொஞ்சினான்.

என்ர செல்லத்தை நான் அப்பிடிச் சொல்லுவனா?”


அனை கத்தாதைபேந்து உந்தப் பக்கத்துவீட்டு விசர்க்கூட்டம் எல்லாம் வந்துசேர்ந்திடும்


குரங்குக்கூட்டம் இதுக்கெண்டே இருக்குதுகள்


ஐயோஅந்தப்பெயரை மூச்சுவிடவேணாம், பிறகு பிள்ளை எழும்பிடப்போகுது, , மெதுவா

அவள் கிசுகிசுத்தபடியே தன் இடது கையால் அடி வயிற்றைக் கவனமாகப் பிடித்தபடி வலது கையால் அவன் கழுத்தை இறுக்கக் கட்டிக்கொண்டாள். இருவரும் ஆவேசத்துடன் முத்தமிட்டபடி அந்த நடுவீட்டின் வெறும் நிலத்தில் அப்படியே சளிந்தார்கள். 

எனக்கு ஒரு குரங்கு வேணும் 

அறைக்குள் கிடந்த தம்பியன் பிதற்றிக்கொண்டே புரண்டு படுத்தான்.


000


காவி வேட்டியும் விபூதி பூசிய வெற்று மேலுமாய்ப் பரியாரியார் ஒரு பலகைக்கட்டையில் சப்பாணி கட்டி அமர்ந்திருந்தார். அவருடைய வாய் ஒரு கூத்துப்பாடலைச் கொஞ்சம் சத்தமாகவே பாடிக்கொண்டிருந்தது.


"அரக்கர் தலை பாதம் விழுமே

மயக்கம் போடும் காலம் வருமே

தயக்கம் விட்டேன் வாடா நீயும் 

பயந்து ஓட பரிகாரம் எதுக்கு

முயன்று பாரு வெற்றி கொள்ள

வியக்க வைத்தே கொள்வேன் பாரு


முன்னே தம்பியன் தன் தகப்பனின் மடியில்  திருதிருவென முழித்தபடி உட்கார்ந்திருந்தான். அவன் தாய்க்காரியும் அருகில் அமர்ந்திருந்தாள். பரியாரியாருக்கும் அவர்களுக்குமிடையே  ஒரு அம்மிக்கல்லு  பொன்னாடையால் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அதன் மேலே சில பூசைக்கான பொருட்கள். பிடி பிள்ளையார். அறுகம்புற்கள். வெட்டிய எலுமிச்சங்காய்கள்.  அம்மிக்கல்லைச் சுற்றிப் பல பழைய புத்தகங்கள். அழுக்கேறிய அப்பியாசக் குறிப்புகள். மருந்துக் குடுவைகள். காய்ந்த பட்டைகள். வேர்க்கம்புகள். இப்படிப் பலவிதமான பொருட்கள் இரைந்து கிடந்தன.  நடுவிலே ஒரு ஆஞ்சநேயர் சிலை தன் நெஞ்சைப்பிளந்து உள்ளே இராமரையும் சீதையையும் காட்டிக்கொண்டு நின்றது. தம்பியன் அந்தச் சிலையையே மிரட்சியோடு பார்த்தான். அவன் தன் அழுகையைப் பயத்தில் அமுக்கிக்கொண்டிருந்து தெளிவாகவே தெரிந்தது. பரியாரியார் ஒரு வேப்பங்குழையை எடுத்து மண்ணிறத் தைலம் ஒன்றினுள் தோய்த்து,  தம்பியனின் தலைமுதல் கால்வரைத் தடவிட்டார் . முகத்தில் வேப்பங்குழை படவும் அவன் கண்களை மூடிக்கொண்டான்.

உனக்கு என்ன வேணும் எண்டு கேட்டனி, சொல்லு?”

தம்பியன் அண்ணாந்து தகப்பனின் முகத்தைப் பார்த்தான். அவரும் பதில் சொல்லு என்று தலையசைக்க அவன் பயத்துடன்குரங்குஎன்றான். குரல் எழவில்லை.

நீண்ட குரங்கை நெடிய பருந்தினை

வேண்டப் பயன் வருமோ? குதம்பாய்

வேண்டப் பயன்வருமோ?”

அவர்கள் எதுவுமே புரியாமல் பரியாரியார் பாடுவதையே கேட்டுக்கொண்டிருந்தார்கள். தாய்க்காரி கொஞ்சம் பயத்தோடு தன் அடிவயிற்றில் கைவைத்திருந்தாள்தேவையில்லாமல் அங்கு வந்துவிட்டோமோ என்ற சந்தேகம் அவள் முகத்தில் தெரிந்தது. முன்னே இருப்பவர் நாட்டு வைத்தியரா, சித்த மருத்துவரா அல்லது மாந்திரீகம், செய்வினை செய்பவரா என்கின்ற குழப்பத்தில் அவள் இருந்தாள். 


பரியாரியார் பாட்டை நிறுத்திவிட்டு இப்போது கொஞ்சம் பொறுமையாக அவனிடம் கேட்டார்.

குரங்கைப் பிறகு வாங்குவம் தம்பி. இப்ப உனக்கொரு முயல் வாங்கித்தரச்சொல்லட்டா?”


அது இருக்கு

தம்பியன் தனக்குள்ளேயே முணுமுணுத்தான். பரியாரியார் விளங்காமல் திரும்பவும் கேட்க தகப்பன்காரன்தான் சத்தமாகச் சொன்னான்.

ஏற்கனவே ரெண்டு முயல் வீட்டில வளக்கிறம் ஐயா


அப்ப அது வேணாம்பேசாம நாங்க ஒரு புறா வளப்பமா?”


அதுவும் வீட்டில இருக்கு”, இம்முறையும் தகப்பனிடமிருந்தே பதில் வந்தது.


நாய்க்குட்டி?”


நாய்க்குட்டி, ஆடு, மாடு, கிளி எல்லாமே வச்சிருக்கிறம் ஐயா


பிள்ளைக்கு மிருகங்களில ஒரு பாசம், எதைக் கண்டாலும் தனக்கும் அப்பிடி ஒண்டு வேணுமெண்டு கேப்பான்

தாய்க்காரி இடையில் நுழைந்து சொல்லவும் பரியாரியார் அவளை நோட்டம் விட்டவாறே கேட்டார்.

பொம்பிளைப்பிள்ளையா?”

அவள் பரியாரியின் பார்வைபோன இடத்தைச் சேலைத்தலைப்பால் மூடியவாறு தன் கணவனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் கவனமோ ஒரு பித்தளைத் தட்டத்தில் குவிந்துகிடந்த குட்டிக் குட்டிப் பாம்புச்சிலைகளின்மீது கிடந்தது.  

கழறும் கிளிமொழி காலஞ் சென்றாலது

குளறி அழியுமடி குதம்பாய்

குளறி அழியுமடி

பரியாரியார் இப்போது தம்பியனின் தகப்பனைப் பார்த்துச் சொன்னார்.


இஞ்ச முனி பெடியனுக்கு பிடிக்கேல்ல. உங்களுக்குத்தான். கேட்ட எல்லாத்தையும் வாங்கிக்குடுத்தா நாளைக்கு சிங்கம், புலி, யானை, பேய், பிசாசு எண்டு போய் நிக்கும். என்ன செய்வியள்? பிள்ளை வளக்கினமாம் பிள்ளை


இல்லை ஐயா, ஒண்டுக்கும் அவன் இப்பிடி அடம்பிடிச்சு அழுது நாங்கள் பார்த்ததில்லை


ஏனெண்டா அவன் அழ முதலே வாங்கிக் குடுத்துப் பழக்கிட்டியள். அவன் நாயைக் கேக்கையே மாட்டன் எண்டு சொல்லியிருந்தா பிரச்சனை குரங்கில வந்து நிண்டிருக்காது. இப்ப நல்லாப் பழகிட்டான். பிரச்சனையா ஒண்டைக்கேக்கிறான். புதுசா நீங்கள் மாட்டம் எண்டு சொன்னதால விடாப்பிடியா நிக்கிறான். கேக்கிறது எல்லாமே கிடைச்சிடாது எண்டது அவனுக்குத் தெரியேல்ல. கொஞ்சநாள் விட்டுப்பிடியுங்க … ஒரு கிழமைல எல்லாத்தையும் மறந்திடுவான்


அப்பிடித்தான் முதலில நினைச்சம். ஆனா இரண்டு மாசமா இப்படியே அழுதுகொண்டிருக்கிறான். பிள்ளைக்குச் சளி பிடிச்சு மூச்சு முட்டிக்கொண்டுவருது இரவில


இரண்டு மாசமா இது நடக்குதாபரியாரியார் யோசித்தார். அவர் வாயிலிருந்து இன்னொரு பாடல் உதித்தது.


கன்றை விடாதுசெல் கற்றாவைப்போல் வத்தை

ஒன்றினால் முத்தியடி குதம்பாய்

ஒன்றினால் முத்தியடி


அவர் பாட, முன்னே மூவரும் சத்தம்போடாமல் அமர்ந்திருந்தார்கள்.  பரியாரியார் ஏதோ பூசைக்கான சில ஆயத்தங்களைச் செய்துவிட்டு, தம்பியனை அவரோடு தனியே விட்டுவிட்டுப் பெற்றோரைக் கொஞ்சநேரம் வெளியே போகச்சொன்னார். அவனோ தகப்பனுடைய கழுத்தில் தொங்கியபடி அழத் தொடங்கினான்.

அழட்டும், நெடுகத்தானே அழுறான், நீங்க விட்டிட்டுக் கதவைச் சாத்திட்டு வெளியே நில்லுங்கோ. என்ன சத்தம் கேட்டாலும் உள்ளிடக்கூடாது. இவனைப் பிடிச்சிருக்கிற அந்தக் குரங்கை விரட்டிட்டுத்தான் உங்களை கூப்பிடுவன்

தள்ளிவிடாக்குறையாக அவனை விலத்திவிட்டு அவர்கள் இருவரும் வெளியே போனார்கள். தம்பியன் இப்போது வீறிட்டு ஓலமிட ஆரம்பித்தான். சாத்தப்பட்டிருந்த கதவைப்போய்ப் பலம்கொண்டவரைக்கும் தட்டினான்.  இவை எவற்றையும் சட்டை செய்யாத பரியாரியார் மணி அடித்துத் தன் பூசையைச் செய்ய ஆரம்பித்தார். தம்பியனின் கத்தலுக்கும் மேலாக அவருடைய பூசை ஆரம்பித்தது.

பாரப்பா அனுமந்தன் வசியக் கட்டு,

பகன்றிடுவேன் பதறாது உற்று நோக்கு

பின்னர் பூசையை நிறுத்திவிட்டு தம்பியனைப் பார்த்துவீரவானுக்குக் குரங்கு கேக்குதா குரங்கு?’ என்று  ஆக்ரோசமாகக் கத்தினார். அவன் அவரை மீறிக் கத்தினான். பரியாரியார் மணியை அடித்தபடி இன்னமும் சத்தமாகப் பாடத்தொடங்கினார்.

யாரப்பா அறிவார் இவரின் கூத்து

ஆணவத்தை வென்றவர்கள் அறிவாரப்பா


சென்றுமே சஞ்சீவி ராயா மேலும்

சீக்கிரமே ஓடிவா உக்கிரமாவே ஓடிவா


வென்று நீ படித்து படித்து வரும்

விதமான பில்லி சூனியம் பேய் பிசாசும்


கொன்றுமே பிரம ராச்சசிகளை பிடி பிடி

குலுங்க அடி அடி கட்டுக் கட்டே


கட்டிப் பின் வெட்டு வெட்டுக்

கதற கொட்டு கொட்டு நீ


முட்டி நீ தாக்கு தாக்கு ஓம்

பாடிக்கொண்டிருந்த பரியாரியார் திடீரென்று எட்டித் தம்பியனின் காதுகளைப் பிடித்துத் தன் விரல் நகத்தால் நன்னத் தொடங்கினார்.

குரங்கு கேப்பியாடா? சொல்லுடா செம்மறி , குரங்கு கேப்பியா?”


“…இல்லைவிடுங்கோ என்னை .. ஐயோ

தம்பியன் போட்ட கூப்பாடு மணிச்சத்ததில் அமுங்கிப்போனது. பரியாரியார் அவனின் காதுகளை மேலும் அழுத்தினார்.

இல்லை வேணாம்எனக்குக் குரங்கு வேணாம்


அப்பிடியெண்டா அழுறத நிப்பாட்டு. நான் விடுறன்நிப்பாட்டு…”

அவன் அழுகையை நிறுத்தவில்லை. அவர் நன்னிய நன்னலில் சின்னதாகக் காதுத்துண்டு கையில் வந்துவிட்டது.

முதல்ல அழுறதை நிப்பாட்டு


நிப்பாட்டுடா

ஒரு கட்டத்தில் அவனும் முடியாமல் அழுகையை நிறுத்தினான். பரியாரியாரும் சற்றுத் தன்னுடைய பிடியை இளக்கினார்.

குரங்கு கேப்பியா சொல்லு?”


ல்லை 

தம்பியன் விக்கினான். அவன் காதிலிருந்து இரத்தம் கசிந்துகொண்டிருந்தது. கன்னங்கள் எல்லாம் சிவந்து, கண்களிலிருந்து கரைந்தோடிய கண்ணீர் மூக்கிலிருந்து வழிந்த சளியோடு கலந்து அவன் வாய்க்குள்ளும் புகத்தொடங்கிற்று. பரியாரியார் தன்னுடைய அழுக்கேறிய சால்வையால் அவனுடைய முகத்தை அழுத்தமாகத் துடைத்துவிட்டார்.

சரி, இப்ப சத்தம்போடாம இரு

அவன் மீளவும் அழ ஆரம்பித்தான்.

அழுதா அடுத்த காதைக் கிழிச்சு இந்த அம்மியில சம்பல் அரைச்சுத்தருவன். அப்பிடியே சாப்பிடோணும். செய்யட்டுமா?

தம்பியன் அடங்கினான். பரியாரியார் அவனுடைய காயம்பட்ட காதில் ஏதோ ஒரு மருந்தைப் பூசினார். இதுவரையும் அடித்துக்கொண்டிருந்த மணிச்சத்ததை நிறுத்தி, வெளியில் நின்றிருந்த பெற்றோரைக் கத்திக் கூப்பிட்டார். உள்ளே ஓடிவந்த தாய்க்காரி தம்பியனை வாரி எடுத்து அணைத்துக்கொண்டாள். பெற்றோரைக் கண்டபோதும் தம்பியன் அழாமல் இன்னமும் பயத்துடன் விறைத்துப்போயிருந்தான். அவனுடைய மூச்சுகளுக்கிடையே பெரும் தயக்கம் இருந்தது. தாய்க்காரி தன் சேலைத்தலைப்பால் அவன் கண்ணீரோடு தன் கண்ணீரையும் சேர்த்துத் துடைத்துக்கொண்டாள்.

பெண்ணாலே வாதம் பிறப்பதே அல்லாமல்

மண்ணாலே இல்லையடி குதம்பாய்

மண்ணாலே இல்லையடி"

தம்பியன் தொடர்ந்து விக்கியபடியே இருந்தான். அவர்களுக்கு அவ்விடத்திலிருந்து போனால் போதுமென்றிருந்தது. பரியாரியார் மிக நிதானமாக அவனைக் கேட்டார். அவர் குரலில் இரண்டு மாதங்களாக இழுபட்ட பெரும் பிரச்சனையை ஒரே நுள்ளலில் தீர்த்துவிட்டோம் என்ற பெருமிதமும் தொனித்தது.
“தம்பிக்குக் குரங்குக்குப் பதிலா ஒரு வாத்து வாங்கித்தரட்டா”
தம்பியன் தொடர்ந்து விக்கியபடியே சன்னமாகச் சொன்னான்.
“எனக்குக் குரங்குதான் வேண்டும்”

பரியாரியார் அதனை எதிர்பார்க்கவில்லை. அவர் இம்முறை கண்களை மூடிக்கொண்டு முணுமுணுத்தார். அவர் குரல் பெரிதாக எழவில்லை.

"நாயாட்ட மாய் நகைத்துழல் மூடர்க்குப்

பேயாட்ட மேதுக்கடி குதம்பாய்

பேயாட்ட மேதுக்கடி."

அவர் கண்களைத் திறந்தபோது முகம் சற்று வாடியிருந்தாற்போலத் தோன்றியது. தம்பியனின் பெற்றோர்கள் இன்னமும் உட்காராமல் அப்படியே நின்றிருந்தார்கள். அவர்களுக்கு அங்கிருந்து ஓடித்தப்பினால் போதும் என்கின்ற நிலைமை. பரியாரியார் அம்மிக்கல்லுக்கு அருகே இருந்த சில குடுவைகளில் என்னென்னவோ மருந்துகளைக் கொட்டிச் சரை செய்து, மந்திரம் ஒன்றை ஓதிவிட்டு அவர்களிடம் கொடுத்தார்.

அஞ்சு நாளைக்கு இந்த மஞ்சள் சரையைப் பிள்ளைக்குத் தேனோடு கலந்து குடுங்கோ. உந்த ரெண்டு தேசிக்காயையும் கிணத்தடில தாட்டுவிடுங்கோ. கரித்துண்டு அவண்ட தலைணிக்குக் கீழ எப்பவும் இருக்கட்டும். வெள்ளிக்கிழைமையெண்டால் அவனுக்குத் தோயவாருங்கோ. இந்தப்பிரச்சனை தீரும் மட்டும் நீங்க ரெண்டுபேரும் தள்ளி இருக்கிறது முக்கியம். அமாவாசை கழிச்சு திரும்பவும் என்னை வந்து பாருங்கோ

அவர்கள் எதுவும் பேசாமல் அவர் கொடுத்தவற்றை வாங்கிக்கொண்டுதட்சணை எவ்வளவு என்று கேட்டார்கள்.

அய்யய்யோசெய்யிற வேலைக்குத் தட்சணை கேக்கமாட்டன் அப்பன். வெளில ஒரு அம்மா இருப்பாஅவவிட்ட சொல்லிக்கோண்டு போங்கோ

வெளியே நின்ற பரியாரியாரின் மனைவி இவர்களிடம் ஐயாயிரம் ரூபாயைக் கறந்துவிட்டுத்தான் அனுப்பிவைத்தாள். கூடவே தேன், பஞ்சாங்கம், பழைய சித்தர்களின் செய்யுள் திரட்டு,  அகத்தியர் மலையிலிருந்து இட்டுவந்த தாயத்து என்று தனியாக மூவாயிரம் ரூபாய்களையும் அழவேண்டியிருந்தது. இவர்களும் விட்டாற்போதுமென்று கேட்டதையெல்லாம் கொடுத்துவிட்டுப் புறப்பட்டார்கள். தம்பியன் வீடு போய்ச்சேரும்வரைக்கும் பயத்தில் விக்கியபடியே இருந்தான்.  ஆனால் வீடு போயிறங்கிய மறுகணமே வழமைபோலப் புராணம் ஆரம்பித்தது.

எனக்குக் குரங்கு வேணும்


000


முதலில் ஆரம்பித்தது சித்திர டீச்சர்தான்.

என்ன இருந்தாலும் ஆஞ்சநேயர்தானே? வீட்டில வளர்க்கிறதுக்கு நாம எதுக்குப் பயப்பிடோணும்?”

எல்லோருக்கும் அதில் தவறில்லை என்றே தோன்றியது. உண்மையில் சொல்லுவதென்றால் எல்லோருமே களைத்துப்போய்விட்டார்கள். முடியவில்லை. பரியாரியார் வீட்டுக்குப் போய் வந்ததிலிருந்து தம்பியனுக்குக் கடுமையான காய்ச்சல் பிடித்துக்கொண்டது. காதில் நன்னுப்பட்ட இடத்தில் ஏற்பாக்கிச் சீழ் வடிய ஆரம்பித்ததில் பெரியாஸ்பத்திரிக்குச் சென்று மருந்துகட்டிக்கொண்டு வந்திருந்தார்கள். அவன் சாப்பிடுவதும் குறைந்து, ஆளே உருத்தெரியாமல் வயக்கெட்டுப்போயிருந்தான். அவனால் தாய்க்காரியும் சாப்பிடாமல் கிடந்தாள். தகப்பன்காரன் வீட்டுக்கே வராமல் இரண்டு நாட்கள் கடையிலேயே குடித்துவிட்டுப் படுத்துக்கிடந்தான். அந்த வீட்டில் சமையலும் இல்லாமல் அயலவர்கள்தான் முறையெடுத்துச் சமைத்துக் கொடுத்தார்கள். 

வயிற்றுப்பிள்ளையோட சாப்பிடாமக் கிடக்கக்கூடாது. சாப்பிடு பிள்ளை

தாய்க்காரிக்குச் சொல்லியபடியே தம்பியனுக்கும் சாப்பாடு தீத்த முயன்று தோற்றுக்கொண்டிருந்தார் சித்திர டீச்சர்.

அப்பனுக்கு நான் குரங்கு வாங்கித்தாரன்நீ சாப்பிடு

டீச்சர் நாக்கை மேலுதட்டுக்கு உள்ளே மடித்து குரங்குபோல நெக் காட்ட, தம்பியன் அவரை ஆர்வத்தோடு பார்த்தான்.

சத்தியமா?”


அம்மாணைஅப்பாட்டச் சொல்லி வாங்கித்தாறன். நீ சாப்பிடு

தம்பியனுக்கு இப்போது சாப்பாட்டுப் பருக்கை மெதுவாக வாயினுள் இறங்கியது. கூடவே தாயும் பெருமூச்சு விட்டபடி சாப்பிடத்தொடங்கினாள். டீச்சர் அங்கிருந்தபடியே தகப்பன்காரனுக்குக் கோல் பண்ணினார்.

நாந்தான் கதைக்கிறன். பேசாமை நாம ஒரு குரங்கை வாங்கிவிட்டா என்ன?”


ஒரு கொஞ்சநாளைக்கு வச்சிருந்திட்டுப் பிறகு கொண்டுபோய் விடலாம்தானே


என்ன, இந்த நாய் பூனைமாதிரித்தான் அதுவும். எல்லாத்தையும் பார்த்துக்கொள்ளலாம். நீர் பேசாமை ஒரு குரங்கை வாங்கியாரும்


மீசாலைப்பக்கம் இருக்கோணும்இல்லாட்டி எண்ட அவரிட்ட சொல்லிப்பாக்கிறன். மல்லாவில அவருக்குத் தெரிஞ்ச ஆக்கள் இருக்கினம், ஒரு சின்னக் குட்டி எண்டாப் போதும்தானே


இல்லவளத்துப்பார்ப்பம்நான் திரும்பவும் பரியாரியோட கதைச்சனான்அவர்தான் ஆஞ்சநேயர் வீட்டுக்கு நல்லம் எண்டு சொன்னார். ஒரு பரிகாரம் செய்தாப்போதுமாம்


பிள்ளைத்தாச்சிக்கு பிரச்சனை வராதுஅனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கினவர். அந்தரத்துக்கு உதவியாத்தான் இருப்பார்


குட்டிதானேநாயிண்ட சைஸ் கூடு சரியா வரும் …”


ஓமோம் எல்லா நேரமும் உள்ள வச்சிருக்கத்தேவையில்லைமரத்தடில கட்டியும் விடலாம்


சில குரங்குகள் மச்சமும் சாப்பிடுங்கள். நமக்கேன் சோலிய? நாங்கள் சைவக் குரங்காவே வளப்பம்


தம்பியன் பூராடம்தானே. அதுக்குக் கடுவன்தான் பொருத்தம்  …. திருவோணமெண்டாத்தான் பெட்டை வேணும்


அதுதான் நானும் பாத்தன், ஆம்பிளையெண்டாச் சோலியில்லை


சரிநான் பிள்ளைக்குச் சொல்லுறன்நீரும் நேரகாலத்துக்கு வீட்டுக்கு வந்து பழகும்உப்பிடி அங்கேயே குடிச்சு வெறிச்சுக் கிடக்கிறது சரியில்லைஉம்மட குடும்பம்தானே


ஓம்சந்தோசம்அவவோட கதைக்கப்போறீரோஓகே அப்ப நான் வைக்கிறன் என்ன

சித்திர டீச்சர் செல்பேசியைக் கட் பண்ணிவிட்டுத் தம்பியனிடம் குதூகலத்துடன் சொன்னார்.

எங்கடை வீட்டுக்கு ஒரு குரங்கு வரப்போகுது. அப்பா விசாரிக்கிறன் எண்டுட்டார்"


000


டீச்சர் அப்படிச் சொல்லிவிட்டாரே ஒழிய தம்பியனின் தகப்பன்காரனுக்கு ஒரு வளர்ப்புக் குரங்கைத் தேடுவது என்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. 


முதலில் அவன் மீசாலைப் பக்கம் போய் விசாரித்துப்பார்த்தான். அந்த ஊர்க் குரங்குகள் வளர்ப்பதற்கு உதவாதவை என்று சொல்லக்கேட்டதும் பளைப்பக்கம் போனான். அவர்களும் குடாநாட்டுப்பகுதியில் கிடைக்காது என்று சொல்லி  வன்னிப்பக்கம் போய்த் தேடச்சொன்னார்கள். அவனும் தன் கடையில் நிற்கும் பெடியனையும் அழைத்துக்கொண்டு விசுவமடு, புளியம்பொக்கனை, இராமநாதபுரம், வற்றாப்பளை, முள்ளியவளை என்று குரங்கைத்தேடி எல்லாவிடமும் சுற்றித்திரிந்தான். சின்னதாகவும் மண்ணிறத்திலும் இருக்கும் செங்குரங்குதான் வளர்ப்பதற்குச் சிறந்தது என்று பலர் சொல்லித் தெரிந்துகொண்டான். தண்ணிமுறிப்புக் குளத்தடியில் யாரோ குரங்கு பிடிப்பவர்கள் இருக்கிறார்கள் என்று அறிந்து,  அங்கு சென்று இரண்டு நாட்கள் தெரிந்தவருக்குத் தெரிந்தவர் வீட்டில் தங்கினான். அந்த இரண்டு நாட்களுமே விடியவெள்ளனவே குரங்கு பிடிப்பவர்களையும் அழைத்துக்கொண்டு நாவற்குளக் காட்டுப்பகுதி முழுதும் நல்ல குரங்கொன்றைத் தேடி அலையாய் அலைந்தான். 


குரங்குக் கூட்டங்களிலிருந்து தனியாகக் குட்டிகளைப் பிரித்தெடுப்பது அத்தனை இலகுவான காரியமாக இருக்கவில்லை. காட்டில் வாழும் குரங்குகள் மனிதர்களைத் தூரத்தில் கண்டதுமே ஓடத்தொடங்கிவிடும். அல்லது மூர்க்கமாக உறுமியபடி எல்லாமே ஏக கணத்தில் இவர்களை மிரட்டும் தொனியில் திரும்பிப்பார்க்கும். குரங்குகளின் குட்டிகள் எல்லாம் தாய்க்குரங்குகளோடு எந்நேரமும் கட்டிக்கிடந்தன. அதிலும் பிறந்து சில நாட்களேயான குட்டிகள் தாய்மாரை விட்டுப் பிரிவதேயில்லை. இரண்டாம் நாளும் தேடித் திரிந்து, எதுவுமே தனியாகச் சிக்காமல் போகவே, கடைசியில் எங்கோ ஒரு ஆறுமாசக் குட்டி தாயிடமிருந்து பிரிந்து ஏமலாந்திக்கொண்டிருந்த சமயத்தில் ஒருவாறு அதைப் பிடித்துவிட்டார்கள். ஆனால் உடனேயே தாய்க்குரங்கும் கூட்டமும் இவர்களைத் துரத்த ஆரம்பித்துவிட்டன. இவர்கள் அந்தக் குட்டியை ஒரு சாக்கில் போட்டுக்கொண்டு மோட்டர் சைக்கிளில் வேகமாக காட்டிலிருந்து தப்பி ஓடிவந்துவிட்டார்கள். 


அந்தக் குரங்கைப் பிடித்தமைக்கு குரங்குபிடிகாரருக்கு இரண்டு நாள் கூலியாகப் பத்தாயிரம் ரூபாய்கள் கொடுத்துவிட்டு அன்றே அவர்கள் யாழ்ப்பாணம் புறப்பட்டார்கள்.  வரும் வழியில் கிளிநொச்சியில் நாய்க்கூடு ஒன்றை வாங்கி, குரங்கை உள்ளே அடைத்துக் கொண்டுவந்ததில் எழுதுமட்டுவாழ் சந்தியில் அவர்களைப் பொலிஸ் மறித்துவிட்டது. அங்கே ஐயாயிரம் ரூபாய்கள். அதன்பிறகு கூட்டைச் சாக்கினால் மொத்தமாகப் போர்த்திக் கட்டி, ஒருவழியாகப் பொலீஸ், ஆர்மியின் கண்களில் சிக்காமல் வீட்டுக்குக் குரங்கைக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள்.


அந்தக்குரங்குதான்வாலி’.


000முதலில் வாலிக்கு அனுமன் என்றுதான் பெயர் வைத்தார்கள். பின்னர் கடவுளின் பெயரைக் குரங்குக்கு வைத்துக் கூப்பிடுவதா என்று சொல்லி மங்கி என்று அழைக்க முடிவெடுத்தார்கள். பின்னர் குரங்கை எந்த மொழியிலும் குரங்கென்று கூப்பிடுவது மரியாதையில்லை என்று சொல்லி தம்பியனின் தாய்க்காரிதான் வாலி என்ற பெயரை அதற்குப் பரிந்துரைத்தாள். தம்பியனுக்கும் அது பிடித்துக்கொண்டுவிட்டது.

 

முதல்வாரம் முழுதும் வாலி நாய்க்கூட்டுக்குள்ளேயே மிரட்சியோடு வெளியே வராமற் கிடந்தது. கொடுக்கும் வாழைப்பழங்களையும் மாங்காய்களையும் கத்தறிக்காய்களையும் சோற்றையும் அவுக் அவுக்கென்று விழுங்கியதில் அதன் கண்ணப்பை எந்நேரமும் வீங்கியே இருந்தது. அந்த வீட்டிலிருந்த நாய்கள் வாலியை அதன்பாட்டுக்கு இருக்கவிடாமல் எந்நேரமும் கூட்டுக்கு வெளியே நின்று குரைத்துக்கொண்டேயிருந்தன. அவற்றைப்பார்த்து வாலியும்கொர் கொர்என்று திருப்பி உறுமியது. அவ்வப்போது கூட்டைத்தாண்டிப்போகும் பூனைகளைப் பார்த்தும் அது உறுமும். ஆனால் பூனைகள் வாலியைக் கணக்கே எடுக்காமல் தம்பாட்டுக்குத் திரிந்தன. ஏனைய விலங்குகளும் வாலியைச் சட்டை செய்யவில்லை. ஆனால் நாய்கள் குரைக்கும்போது இது மிரள்வதும் இது உறுமும்போது கிளிகளும் புறாக்களும் மிரட்சியில் இறக்கை அடிப்பதுமாகவே முதல்வாரம் கழிந்தது. இவற்றின் சண்டைகளைப் பார்த்துப் பொறுக்கமுடியாமல் நாய்களை எந்நேரமும் கொல்லைப்புறத்திலே கட்டிப்போட்டு வைத்திருந்தார்கள். 


வீட்டுக்கு வாலி வந்ததுமுதல் தம்பியன் வாலியோடே அத்தனை நேரத்தையும் செலவழித்தான். வாலியின் தலைமுடி ஒரு தேர்ந்த சிகை அலங்காரியால் திருத்தப்பட்டதுபோல, உச்சியில் சிலுப்பிக்கொண்டும் காதோரங்களில் மழிக்கப்பட்டதுபோலவும் இருக்கும். தம்பியன் தனக்கும் அதேபோல மயிர் வெட்ட வேண்டும் என்று தகப்பனிடம் அடம்பிடித்து கடையில் போய் வெட்டிக்கொண்டான். விளக்குமாற்று ஈர்க்கில் வில்லும் அம்பும் செய்து தான் இராமன் என்று சொல்லி வாலியை நோக்கி எய்து விளையாடுவான். வாலி பொதுவாக இவனுடைய சேட்டைகளுக்கு அலட்டிக்கொள்வதில்லை. சாப்பிட்டு அலுத்துப்போய் விளையாட்டுக்குணத்தில் இருக்கையில் மாத்திரம் இவன்என்றால் வாலியும்என்று செய்யும். மற்றும்படி இவன் செய்வதையெல்லாம் வேடிக்கை பார்த்தபடியே கண்ணப்பையில் சேமித்துவைத்ததை இரை மீட்டிக்கொண்டு கிடக்கும். அது படுப்பதெற்கென ஒரு யூரியா உரப்பையை கூட்டுக்குள் விரித்துவிட்டிருந்தார்கள். சமயத்தில் வாலி அதனைச் சுருட்டுவதும் உருட்டுவதுமாகத் தனக்குள் விளையாடுவதுண்டு. பொதுவாக கனிந்த கதலிப்பழங்களைக் கொடுக்கும்போதெல்லாம் வாலி முரண்டு பண்ணாமல் இவர்கள் சொல்லுவதைக் கேட்கும். அந்தச்சமயத்தில்தான் அதற்குத் தோயவார்த்துக்,  கூட்டைத் துப்புரவு செய்துவிடுவார்கள். 


வாலியைப் பார்ப்பதற்கென அக்கப்பக்கத்தவர்கள் அந்தக்கிழமை முழுதும் வருவதும் போவதுமாக இருந்தார்கள். வருபவர்கள் கையோடு வாழைப்பழங்களையும் முருங்கைக்காய்களையும் மாங்காய்களையும் எடுத்துவருவார்கள். இரண்டு அனுமன் சிலைகளும் ஒரு சீதா ராமன் படமுங்கூட வாலிக்குப் பரிசாக எடுத்து வந்திருந்தார்கள். வாலி அனுமன் சிலையைப் பார்த்துக் கொஞ்சநேரம் உறுமியது. பின்னர் அதனைத் தட்டிவிழுத்திவிட்டுத் தன் வேலையைப் பார்க்கத்தொடங்கியது. சீதா ராமன் படத்தை அது முன் பக்கம் திருப்பாமலேயே கிழித்துப்போட்டுவிட்டது. தம்பியனின் தாய்தான் கிழித்த துண்டுகளைப்பொறுக்கி, அவற்றைப் பசைகொண்டு ஒட்டி, வீட்டு சாமியறைத் தட்டுக்குள் கொண்டுபோய் வைத்தாள்


கொழும்புக்கு அவசர வேலையாகப் போயிருந்தமையால், வாலி வீட்டுக்கு வந்து இரண்டு கிழமைக்குப் பின்னரே சித்திர டீச்சருக்கு அதைப் பார்க்க வரக்கிடைத்தது. வந்தவர் அதன் பெயரைக் கேட்டதுமே வெகுண்டுபோனார்.

என்ன வேலை இது? உது பெட்டைக் குரங்கு.  விசர்த்தனமா வாலி எண்டு பெயர் வச்சிருக்கிறியள்


என்ன டீச்சர் சொல்லுறீங்கள்? இது பெட்டையா?”

அதுவரைக்கும் அங்கிருந்த எவருமே வாலியின் பால்நிலையைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அப்போதுதான் கவனித்தார்கள். வாலி ஒரு ஆண் இல்லை பெண் என்ற விடயம் எப்படித் தெரியாமற்போனது என்று தம்பியனின் தாய்க்காரி தலையிலடித்துக்கொண்டாள்.

ஆண் குரங்கைக் கொண்டுவா எண்டா என்ர விசர் மனுசன் பெண் குரங்கைப் பிடிச்சு வந்திருக்கு. இப்ப என்னெய்யிறது? வாலி எண்டு பொம்பிளைக்கு பெயர் வைக்கேலாதா டீச்சர்? வேறை ஒரு பெட்டைக்குரங்கிண்ட பெயரும் எனக்குத் தெரியாதே?”

டீச்சர் யோசித்தார். பெரிதாகப் பெண் குரங்குகளுக்குப் பெயர்கள் இல்லை என்பது உண்மைதான். அவருக்குத் தெரிந்ததும்கூட ஒரேயொரு பெயர் மட்டுமே. 

தாரை எண்டு வையுங்கோவாலிண்ட மனிசியோட பேர்.  கெட்டிக்காரப் பொம்பிளை அவஉந்தக் குரங்கைப் பாத்தாலும் புத்திசாலியாத்தான் தெரியுது

சித்திர டீச்சர்தாரைஎன்று வாலியைப்பார்த்துக் கூப்பிட அது அவரை நிமிர்ந்துபார்த்துஉர்என்றது. 

தாரைண்ட விறுமன் அப்பிடியே இதிட்டயும் இருக்கு

டீச்சர் சொல்லிக்கொண்டே தான் கொண்டுவந்த கரட் துண்டைக் கூட்டுக்குள் போட்டார். வாலி அதனை எடுத்துக் கொறித்துப்பார்த்துவிட்டு வீசி எறிந்தது. தம்பியனுக்கு வாலியைத் தாரை என்று அழைத்தது பிடிக்கவில்லை. அவன் வாலி என்றே தொடர்ந்து கூப்பிட்டான். டீச்சர் அவனுக்கு அது ஆணில்லை பெண் என்று எடுத்துச்சொல்லிப்பார்த்தார். அவன் கேட்கவில்லை. அவன் டிவியில் பார்த்த சிறுவர் இராமயணத்தில் தாரை என்ற பாத்திரமே இல்லை.  தம்பியனின் தாய்க்கும் தாரை என்ற பெயர் பெரிதாகப் பிடிக்கவில்லை. என்னவோ தேரைக்கு வைத்ததுபோல இருக்கிறது என்று அவளும் புறுபுறுத்தாள்.

டீச்சர் தாரை எண்டது வாய்க்குள்ள நுழையுது இல்லைவாலி எண்டு பொம்பிளைக்குப் பெயர் வச்சா குறைஞ்சா போயிடும்குரங்குதானே?”

தாய்க்காரி சொல்லவும் தம்பியன் குரங்கைப் பார்த்துவாலி வாடா நாங்க விளையாடுவம்என்றான். சித்திர டீச்சருக்கு தான் பெயரை மாற்றப்போய் அவன் இன்னொரு மாதம் அழுதுதொலைத்துவிடுவானோ என்ற பயம் வந்தது.

பெட்டையோ கடுவனோ, நீங்களும் உங்கட குரங்கும் பட்டபாடு. எனக்கென்ன வந்துது?”

டீச்சர் அதற்குமேல் ஒன்றும் சொல்லாவிட்டாலும் தன் பேச்சு அங்கு எடுபடவில்லை என்ற கோபம் அவர் குரலில் தெரிந்தது. அவர் வாலியைத் திரும்பவும் பார்த்தார். அது இவர்களின் பேச்சை செவிமடுக்காமல் உரப்பையின்மீது படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தது.

காட்டிலையும் மலையிலையும் திரிஞ்ச குரங்கு. இப்பிடிக் கூட்டுக்குள்ளேயே வச்சிருக்காம, ஒரு நீட்டுக் கயித்தால மரத்தில கட்டிவிடுங்கோ,  பாவம்

டீச்சர் சொல்லவும் தம்பியனின் தாய்க்காரியும் அது சரிதான் என்று ஆமோதித்தாள். கணவனிடம் வாலியைக் கட்ட ஒரு நைலோன் கயிறு வாங்கிவரும்படி அழைப்பெடுத்துச் சொன்னாள். மாமரத்தடியில் வாலியைக் கட்டிவிட்டால் அது தன் பாட்டுக்கு மரத்தில் ஏறியும் தாவியும் விளையாடலாம். காற்று வாங்கலாம். அதேநேரம் மரத்திலிருக்கும் முற்றின காய்களைக் கொத்தவரும் பறவைகளை விரட்டவும் ஏதுவாக இருக்கும்.  வாலி அடைப்பட்டிருந்த கூடு வேறு குரங்குப் பீயாலும் மூத்திரத்தாலும் நாறத்தொடங்கியிருந்தது. பின்னேரம் தம்பியனின் தகப்பன் கயிற்றுடன் வந்து, கதலி கொடுத்து வாலியை வெளியே அழைத்து, அது அசந்த சமயம் ஒரு வழியாக மாமரத்தடியில் கட்டிவிட்டார். கூட்டுக்குள்ளிருந்து விடுதலையடைந்த புழுகத்தில் வாலியும் மர உச்சிக்கும் தரைக்குமாய்த் தாவித்தாவி விளையாடிக்கொண்டிருந்தது. கொப்பிலிருந்து வீட்டுக்கூரைக்குப் பாய முயன்றது. அப்படிப் பாயும்போது இடுப்பில் கட்டியிருந்த கயிறு பின்னால் இழுத்ததில் தவறி விழுந்தது. கொப்பில் கயிறு சிக்குப்பட்டுத் தலைகீழாய்த் தொங்கியது.  அரை மணிநேரம்கூட ஆகியிருக்காது. அதற்குள் அது மரத்தில் போட்ட அதகளத்தில் அதன் கயிறு மரத்தண்டில் சுற்றுப்பட்டு, அது அசையமுடியாமல் ஓரிடத்திலேயே கிடக்க, தம்பியனின் தகப்பன்தான் வந்து சிக்கெடுத்துவிடவேண்டியிருந்தது. பின்னர் அது குடிப்பதற்கு வைத்திருந்த தண்ணீர் வாளியைத் தலையில் கவிழ்த்து ஊற்றியது. சந்தோசத்திலா, கவலையிலா, அல்லது அச்சத்திலா வாலி இவற்றையெல்லாம் செய்கிறது என்று எவராலும் அனுமானிக்கமுடியவில்லை. மரத்தில் கட்டிப்போட்ட இரவு முழுதும் வாலி அரற்றிக்கொண்டேயிருந்தது.  இரவில் அவிழ்த்துவிடப்பட்ட நாய்கள்வேறு மரத்தடியில் வந்து வாலியைப் பார்த்துக் குரைத்துக்கொண்டு நின்றன. வாலி மரத்திலேயே இருந்தபடிஈய்க்என்று சிணுங்கியது. மரத்தில் ஏறியதும் அதற்குத் தன் தாயினதும் கூட்டத்தினதும் ஞாபகங்கள் வந்திருக்கவேண்டும். சாமம் முழுதும் அது அலறிக்கொண்டேயிருந்தது. அதன் சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்து நாய்கள் எல்லாம் பதிலுக்கு ஊளையிட்டுக் குரைக்கவே, அந்த வட்டாரம் முழுதும் அன்றிரவு தூக்கத்தைத் தொலைக்கவேண்டியிருந்தது. இதுநாள்வரை தம்பியனும் அவன் பெற்றோரும் போட்ட அட்டகாசம். இப்போது அவர்கள் கொண்டுவந்து கட்டிப்போட்ட குரங்கு போடும் அட்டகாசம். கடைசியில் நாய்களும் வாலியும் களைத்துப்போய் ஓய்ந்தபின்னரே ஊர் நிம்மதியாக உறங்கக்கூடியதாக இருந்தது.


அடுத்த நாள் காலையில் பல்லை மினுக்கியபடி தம்பியன் மரத்தில் கட்டப்பட்டிருந்த வாலியைப் பார்க்கவந்தான். அது முந்தைநாள் யாரோ கொண்டுவந்து போட்ட பீட்ரூட் கிழங்கைக் கொறித்துக் கொண்டிருந்தது. அதன் வாயெல்லாம் ஊதா நிறம். கைகளிலும்தான். ஊதா நிறத்தை முதன்முதலில் பார்த்த ஆச்சரியத்திலோ என்னவோ அது பீட்ரூட்டை மேலும் மேலும் விறாண்டி உள்ளே ஏதாவது கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருப்பதிலேயே அவதானமாக இருந்தது. தம்பியன் அருகில் வந்து நின்றதை அது கவனிக்கவில்லை.


ஒரு தென்னங்குரும்பை வந்து காலில் பட்டபோதுதான் வாலி கீழே குனிந்துபார்த்தது. தம்பியன் பற்தூரிகையும் வாயெல்லாம் பற்பசை அப்பியவனுமாய் நின்றிருந்தான். வாலியைப் பார்த்துக்கீழே இறங்குடாஎன்றான். அவன் கையில் சிறிய குச்சி இருந்தது. அதனைக்கண்ட வாலி மிரண்டுபோய் இன்னமும் இரண்டு கொப்புகள் மேலே ஏறிப்போய் நின்று அவனையே பார்த்தது. தம்பியன் திரும்பவும்இறங்கடாஎன்றான். பின்னர் ஞாபகம் வந்தவனாய்இறங்கடிஎன்று என்றான். அது மிரட்சியுடனே இவனை உற்றுப்பார்த்தபடியே அசையாமல் நின்றது. ஒரு கை மேல் கொப்பிலும் மறுகை தான் நின்ற கொப்பிலுமாய், தேவைப்படி மேலும் ஒரு கொப்புக்குத் தாவ அது தயாராக நின்றபடி அவனைப் பார்த்தது. தம்பியன் இன்னுமொரு குரும்பையை எடுத்து வாலியை நோக்கி எறிந்தான். பலம் போதாமையால் அது வாலியை எட்டவில்லை. அவன் உடனே சல்லிக்கற்களை எடுத்து எறியத்தொடங்கினான். இந்தச் சந்தடியில் கேற்று வாசலில் தூங்கிக்கிடந்த நாய்கள் எல்லாம் மாமரத்தடிக்கு ஓடிவந்துவிட்டன. அவையும் தம் பங்குக்கு வாலியைப்பார்த்து குரைத்தன. வாலிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அது மாங்காய்ப்பிஞ்சுகளைப் பறித்து தம்பியனை நோக்கி வீச ஆரம்பித்தது. சிறு குரங்கு என்பதால் எவ்வளவு வேகமாக வீசினாலும், அது என்னவோ மாங்காய்களைப் பறித்துக் கீழே போடுவதுபோலவே தெரிந்தது. தம்பியன் தொடர்ந்து கற்களை எறிவதும் வாலி பிஞ்சுகளைப் பறித்துப்போடுவதுமாக இது தொடர்ந்து நிகழ்ந்தது. இந்த ஆட்டத்தின் சுவாரசியம் தம்பியனுக்குப் பிடித்துப்போகவே அவன் கீழே கிடந்த விறகுத்துண்டு, குச்சு, மாதுளைக்காய்கள், எலுமிச்சைகள், வாலி வீசியெறிந்த மாங்காய்ப்பிஞ்சுகள் எனக் கண்ட எல்லாவற்றையும் எடுத்து வாலியை நோக்கி வீச ஆரம்பித்தான். தம்பியனுக்கு அவன் எறிபவை எல்லாம் மீளவும் கீழே பரவி விழுவதால் அவற்றை எடுத்துத் திருப்பி எறிவதில் பிரச்சனை இருக்கவில்லை. வாலிதான் பாவம், ஒரு கட்டத்தில் மரத்தில் பிஞ்சுகள் தீர்ந்துபோகவும் அது இலைகளையும் சிறு மரக்கிளைகளையுங்கூட ஒடித்து எறிய ஆரம்பித்திருந்தது. 


இந்த விளையாட்டு இப்படியே மூன்று நாட்களாகத் தொடர்ந்தது.


000


நான்காவது நாள் காலை தம்பியன் வந்து மரத்தில் வாலியைத் தேடியபோது அங்கே அதனைக் காணவில்லை.  மரத்தடியில் கட்டியிருந்த கயிறு எங்கே போகிறது என்று பார்த்தால், மரத்துக்குக் கீழே கிடந்த அதன் பழைய கூட்டுக்குள்ளே போய் வாலி ஒடுங்கிக்கிடந்தது.

இஞ்ச ஒளிஞ்சிருக்கிறியா, வெளிய வா

தம்பியன் கூப்பிடவும், வாலி மிரட்சியில் தன்னை மேலும் குறுக்கிக்கொண்டது. திரும்பவும் தம்பியனோடு எறிபட அது தயாராக இருக்கவில்லை. கூட்டுக்குள் இருப்பதே வசதிபோல அதற்குத் தோன்றியிருக்கவேண்டும்.

வா .. வந்து மரத்தில ஏறு. நாங்கள் விளையாடுவம்

அவன் சொல்லவும் வாலி தரையில் கிடந்த உரப்பையைச் சுருட்டி தம்பியனை நோக்கி எறிந்தது. அதைப்பார்த்த தம்பியனும் கீழே கிடந்த குரும்பையை எடுத்துக் கூட்டுக்குள்ளே எறிந்தான். மிக நெருக்கத்திலிருந்து எறிந்ததால் குரும்பை அதன் உடலில் பட்டுச் சுள்ளியது.  வாலிஎன்று  உதறிக்கொண்டு குரும்பையை அப்பால் தட்டிவிட்டது. தம்பியன் குனிந்து கூட்டுக்குள் கையைவிட்டு அந்தக் குரும்பையை எடுக்கப்போனான். அப்போது திடீரென்று வாலி தம்பியனின் கையைப் பிடித்து இழுத்தது. அது இழுத்த இழுவையில் அதன் விரல் நகங்கள் தம்பியனின் கையைக் கீறிக் கிழிக்கவும் தம்பியன்அம்மாஎன்று அலறத்தொடங்கினான்.  வாலி திடீரென்று அப்படி ஒரு தாக்குதலை நிகழ்த்தும் என்று அவன் எதிர்ப்பார்க்கவில்லை. அதிர்ச்சியில் அவன் வீறிட்டுக் கத்தினான். அவன் போட்ட கத்தலில் நாய்களெல்லாம் சத்தமாகக் குரைத்துக்கொண்டு ஓடிவந்தன. உள்ளே சமைத்துக்கோண்டிருந்த தாய்க்காரியும்என்னடாஎன்று பதறிக்கொண்டு வந்தாள். இந்த அமளியில் மிரண்டுபோன வாலி தம்பியனை இன்னமும் சராமாரியாகத் தாக்கத்தொடங்கியது. முகம், கழுத்து, நெஞ்சு என எல்லாவிடமும் கீறல்கள். வாலியின் விரல் நகங்கள் கிழித்ததில், தம்பியனின் பிடறியில் மண்டை ஓடு மெலிதாக வெளித் தெரிந்து, அதன் வெள்ளை நிரத்தை இரத்தம் கசிந்து மூட ஆரம்பித்திருந்தது. அவன்ஐயோஎன்று அலறி