வெள்ளம் தேங்கி வீடு கசியாதவரைக்கும் தின்னவேலியின் மழை மிக அழகுதான்.
ஏன் அப்படிச் சொன்னேனோ தெரியாது. ஆனால் இதனைச் சொல்லிய சில வாரங்களிலேயே தீவு முழுதும் மழையும் வெள்ளமும் நிலச்சரிவும் பெருங் கோரத்தாண்டவத்தை ஆடிவிட்டன. மழை நம் வீட்டுக்குள் நுழையாதவரைக்கும்தான் அழகு. அப்புறம் அது ஒரு கொடிய அரக்கியாகிவிடுகிறது. சிரங்கு. முட்டு. கக்கூஸ் அடைப்பு. நுளம்பு. காயாத உடுப்பு. மின் வெட்டு. நிலமெல்லாம் கசிந்து சகதி ஆவது. இவை எல்லாமே சிறு வெள்ளத்துக்கே வந்து சேரக்கூடிய துன்பங்கள். நிலம் சரிந்து மொத்த வீடுமே அமுங்குவதும் குழந்தைகள் உள்ள வாகனங்கள் அடித்துப்போவதும் பெரு வெள்ளத்தின் சொல்லொணாத் துன்பங்கள்.
இந்நிலையில்தான் எனக்கு தர்ஷனா என்ற வாசகரிடமிருந்து இந்த மடல் புகைப்படத்துடன் வந்தது.
வீடெல்லாம் தண்ணி.
நிலமெல்லாம் ஊறி,
கவரேஜ் இல்ல.
கரெண்ட் இல்ல.
காட்போட் மட்டை விரித்து
தங்களின் கொல்லைப்புறத்து காதலிகளுடன்
அம்மா பொழுதைப்போக்கினார்.
நிலமெல்லாம் ஊறி,
கவரேஜ் இல்ல.
கரெண்ட் இல்ல.
காட்போட் மட்டை விரித்து
தங்களின் கொல்லைப்புறத்து காதலிகளுடன்
அம்மா பொழுதைப்போக்கினார்.
எனக்கு இதனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. எனினும் மழை மனிதரை முடக்கிப்போட்டிருக்கும் சூழலில் ஏதோ ஒரு ஆறுதலை வாசிப்பு கொடுக்கிறது என்பது சிறு திருப்தியையே கொடுத்தது. கூடவே, சிறு வயதில் கடும் மழை நாளில் பாடசாலைக்குக் கள்ளம் அடித்து வீட்டிலிருந்து புத்தகங்கள் வாசித்த காலங்கள் வந்து போயின. எனக்கு இன்னமும் ஞாபகமிருக்கிறது. அது ஒரு நாவலாகத்தான் இருக்கவேண்டும். மட்டக்களப்பில் அறுபதுகளிலோ எழுபதுகளிலோ ஏற்பட்ட பெரு வெள்ளத்தை அடிப்படையாகக்கொண்ட கதை அது. எழுதியவர் பெயரோ, நூலின் பெயரோ ஞாபகமில்லை. வெள்ளத்தால் ஏற்படக்கூடிய பலரின் துன்பங்கள் அதிலே பதியப்பட்டிருக்கும். ஒரு காட்சியில் வீட்டுக் கூரையில் சிலர் தவித்திருக்க, படகு ஒன்று வந்து அவர்களைக் காப்பாற்றுகிறது. ஊருக்குள்ளே படகு வரும் அளவுக்கு வெள்ளமா என்று சிறு வயதில் அதனை வாசித்து வியந்திருக்கிறேன்.
மழை நாளில் வீட்டு முன் ஹூட்டுக்குள் போடப்பட்டிருக்கும் பின்னல் கதிரையில் அம்மா உட்கார்ந்து புத்தகம் வாசிக்க, அவருடைய சோட்டி மடி ஊஞ்சலில் நான் அமர்ந்து வாசித்த புத்தகங்கள்தாம் இவை. அப்போது வளர்ப்பு நாய் ஹீரோவும் என்னோடு சூட்டுக்கு அண்டி உட்கார்ந்து தூங்கிக்கொண்டிருக்கும். ரயில் வண்டிகள்போல ஊருகின்ற சிவப்பு, கறுப்பு அட்டைகளை அது கிட்ட வந்தால் தட்டிவிடும். மழை அடங்கும்வரை வீட்டுக் கோழிகளும் அங்கு வந்து ஒதுங்கியிருக்குமாதலால் நிலம் முழுதும் கோழிப்பீயும் கிடக்கும். காலையில் நான் மடித்து விட்டக் காகிதக் கப்பல் கைவிடப்பட்டு, கரை புரண்டு சீமெந்து நிலத்தில் படர்ந்திருக்கும். ஆச்சரியம் என்ன என்றால் அப்போது நான் அந்த அனுபவத்தை உணராது வேறேதோ நூலில் எழுதப்பட்டிருந்த அனுபவத்தை வாசித்துக்கொண்டிருந்திருக்கிறேன். ஆனால் இப்போது எப்போதோ நிகழ்ந்த அப்பொழுதை நினைவூட்டி எழுதி மீளுருவாக்கிக்கொண்டிருக்கிறேன். இந்த இப்பொழுதில் வெளியே இள வெயில் சாமரம் வீசிக்கொண்டிருக்கிறது. மரங்களில் காற்று இல்லை. வீட்டில் யாருமேயில்லை. யாவுமே ஒரு stillnessபோல. இதையும் எப்போதாவது ஒரு நாள் நான் எழுதக்கூடும். எழுதுவதாலேயே பல கணங்கள் காலத்துக்கும் தரித்துவிடுகின்றன. புத்தகங்களுக்குள் கடந்த காலங்கள் குறண்டிக்கிடக்கின்றன. வாசிக்கும்போதெல்லாம் அவை தாயிடம் பால் குடிக்க அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளைப்போலத் துள்ளித் திரிகின்றன.
அன்றொரு நாள் ஒரே குடும்பத்தின் பாட்டி, மகள், பேத்தி மூவருமே என் எழுத்து பற்றித் தனித்தனியாக என்னோடு உரையாடினார்கள். நான் அனுபவித்திராத, அறிந்திராத பல விடயங்களையும் மனிதர்களையும் உணர்வுகளையும் புத்தகங்கள் என்றென்றைக்கும் எனக்கு அறிமுகப்படுத்திக்கொண்டேயிருக்கின்றன. என் எழுத்தினூடாகவும் அவ்வகை அனுபவங்களைத் தலைமுறை வேறுபாடுகளின்றி ஒரு சிலர் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதை அறியும்போது சின்னதான ஒரு முறு நகை வந்துபோகிறது. அப்போது யாரேனும் அந்நகையைப் பார்த்துவிடுவார்களோ என்ற சங்கடமும் கூடிவர, நகையினின்று எழுந்த சிரிப்பு அடுத்த கணமே மழுங்கியும் போகிறது.
இவை யாவுமே மகோன்னதங்கள்தாம்.

Comments
Post a Comment