Skip to main content

படலை பொட்காஸ்ட்

சில வருடங்களாகவே பொட்காஸ்ட் தொடர் ஒன்றை ஆரம்பிக்கவேண்டும் என்றொரு ஆர்வம் உள்ளூற ஊறிக்கொண்டிருந்தது. அது நான் தொடர்ச்சியாகக் கேட்டுப் பயனடைந்துகொண்டிருக்கும் சில பொட்காஸ்டுகளின் பாதிப்பால் ஏற்பட்ட ஒன்று. The History of Literature, Paris Review, The New Yorker Fiction, The New Yorker Writer’s Voice, Not Stupid, The Minefield, If You’re Listening, Ladies We Need to Talk என்று பல பொட்காஸ்ட் தொடர்களின் ஆதர்ச இரசிகன் நான். இந்த பொட்காஸ்டுகள் அனைத்துமே ஆழமான விசயங்களையும் அன்றாட விசயங்களையும் மிக இயல்பாகவும் முன்முடிவுகள் இல்லாமலும் அலசுபவை. கேட்கும்தோறும் புதியவற்றை நமக்கு அறிமுகப்படுத்துபவை. பெரும்பாலானவற்றுக்குக் காணொளிகளும் இல்லை. வெறுமனே ஒலி மாத்திரம்தான். நடைப்பயிற்சியின்போதும் நீண்ட தூரப் பயணங்களின்போதும் காதுகளில் ஒலிக்கவிட்டால் நேரம் கரைவதே தெரியாது. பல சமயங்களில் புதிய அத்தியாயங்களைக் கேட்பதற்காகவே நடைப்பயிற்சிக்குப் போன சம்பவங்களும் உண்டு. அத்தனை அலாதியான அனுபவத்தையும் தேடலையும் கொடுப்பவை இவை.

இவ்வாறான பொட்காஸ்டுகளை செய்வதற்கு முன்னர் பெருந்தேடலும் தயார்படுத்தலும் தேவை என்று தோன்றியது. எழுத்துப்போலவே. அதனாலேயே பொட்காஸ்ட் செய்யவேண்டும் என்ற ஆர்வம் அண்மைக்காலத்தில் மேலும் அதிகரித்தது. அதைக் காரணம் காட்டி மேலும் தேடலாம் அல்லவா? இந்த வருடம் Unaccustomed Earth, Kite Runner என்ற இரண்டு புத்தகங்கள் பற்றியும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் பொட்காஸ்ட் அத்தியாயங்களில் பேசியிருக்கிறேன். ஆனால் பொதுவெளியில் அவற்றின் இணைப்புகளைப் பகிரவில்லை. இந்த ஆண்டு இறுதி விடுமுறையில் மேலும் இரண்டு புத்தகங்கள் பற்றி நானும் ஜீவியும் பேசியிருக்கிறோம். அவற்றையும் கூடிய விரைவில் பகிர்கிறேன். பொட்காஸ்டுக்கான மொழி நமக்கு சரியாக இன்னமும் வசப்படுவதாயில்லை. நாம் இந்த நிலத்தில் கேட்பதும் வாசிப்பதும் தொடர்பாடல் செய்வதும் ஆங்கிலத்தில் என்ற நிலை இருக்க, தமிழில் உரையாடலை ஆரம்பிக்கையில் தன்பாட்டுக்கு ஆங்கிலம் சொல்வழி கேட்காமல் வந்து உட்கார்ந்துவிடுகிறது. மொழியை இறுக்கிப்பிடித்தால் பொருள் விடுபட்டுப்போகிறது என்பதால் சொல்ல நினைத்தை, வசப்பட்ட வார்த்தைகளில் பகிர்ந்திருக்கிறோம்.

நேற்று ஸம்ரக்‌ஷணா வீட்டுக்கு வந்திருந்தார். அவரோடு சேர்ந்து செய்த அத்தியாயம் இது. ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகப் பேசியதை ஒரளவுக்கு எடிட் பண்ணியிருக்கிறேன். இப்படியான நீண்ட விரிவான உரையாடல்கள் உள்ள அத்தியாயங்களை அவ்வப்போது செய்யவேண்டுமென்று ஆசை. சொல்லும் பொருளும் பொறுமையும் காலமும் கூடிவருகையில் அத்தியாயங்களும் உருப்பெறும் என நம்புகிறேன்.

இந்த அத்தியாயம் - The River Carried Us - 2025

The river bore us through 2025; now it carries us on toward 2026.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

சுட்டிகள்
Apple Podcast

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.