Skip to main content

ஆறிடும். ஆறாது.

சில வாரங்களுக்கு முன்னர் எனக்கு மிக நெருக்கமான அக்கா ஒருவர் ஒரு வார்த்தை சொன்னார். அது என்ன வார்த்தை என்பதோ சொல்லப்பட்ட சூழலோ அவ்வளவு முக்கியமில்லை. ஆனால் அது என் ஆழ் மனதை மிகவும் பாதித்துவிட்டது. அவர் அப்படியொன்றும் மோசமாக எதையும் சொல்லவில்லை. அது சாதாரணமாகக் கடந்துபோகவேண்டிய ஒன்றுதான். ஆனால் என் நுண்ணுணர்வை அது தாக்கிவிட்டது. பிறரிடம் கடமைப்படுவது என்பது எனக்குக் கொல்லக்கொண்டுபோவதுபோல. அதனால் மனம் சஞ்சலத்தோடு அலைந்தது. அந்த மன அங்கலாய்ப்பு அர்த்தமற்றது என்று புத்தி எனக்குப் பாடம் புகட்டியது. ஆனால் என் மனதினால் அதனை விட்டுத்தள்ளமுடியவில்லை. நாள் முழுதும் அது புலம்பிக்கொண்டேயிருந்தது. அடுத்த நாளே, சொல்வழி கேட்கமாட்டாயா என்று புத்தி என் மனதைக் குட்டி அடக்கியதால் மனம் கூண்டுக்குள் பதுங்கிய நாய்க்குட்டியாட்டம் ஒடுங்கிவிட்டது. ஆனால் இரு வாரங்கள் கழித்து, புத்தி வேலைக்குப் போயிருந்த சமயம் மனம் கூண்டுக்குள்ளிருந்து மறுபடியும் வெளிவந்து வேலையைக் காட்டிவிட்டது. ஏனென்று தெரியவில்லை. சாதாரண விசயம்தான். சனியன்போல அலைக்கழிந்தது. சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது என்று ஒரு பாட்டு இருக்கு. கன்னி மனதென்றில்லை, சொன்னாலும் எந்தச் சனியன் மனதும் கேட்பதில்லை என்பதுதான் உண்மை.
எனக்கு ஏன் இப்படி ஒரு விறுமக் குணம் என்று யோசித்துப்பார்த்தேன். இது என் அம்மாவிடமிருந்துதான் வந்திருக்கவேண்டும். என்னுடைய டி.என்.ஏ பிரச்சனை. ஒரு சம்பவம் சொல்கிறேன்.

வெள்ளிக்கிழமையானால் எங்கள் அம்மா வீட்டிலே தோசைக்கடை திறப்பார். புதன் கிழமையே அம்மாவிடமிருந்து செய்தி வந்துவிடும். தோசைக்கு போட்டிருக்கிறன். வெள்ளிக்கிழமை இரண்டு பேரும் வாங்கோ என்பார். நாமும் போய் மூன்று எண்ணெய்த்தோசை, இரண்டு முட்டைத்தோசை, நாலு சாதா தோசை என்று சாப்பிட்டுவிட்டு வருவோம். இடிச்ச சம்பல், உருளைக்கிழங்குக் குழம்பு, பருப்பு என்று துணைகளையும் தோசைக்கு அம்மா ஆக்கி வைப்பார். தோசையைச் சாட்டாக வைத்து எம்மோடு சில மணி நேரங்கள் கழிக்கலாம் என்ற ஆசை அம்மாவுக்கு. தோசையும் சுட்டுத்தந்தபடி நாம் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டேயிருப்பார். தோசை மா எஞ்சினால் அதையும் போகும்போது எமக்குத் தந்துவிடுவார். எமக்குத் தந்துவிடுவதற்காகவே கூடுதலாக அம்மா மாவு அரைத்திருப்பார் என்று இப்போதுதான் இந்த முட்டாளுக்குப் புரிகிறது.

இந்த வருட ஆரம்பத்திலும் வழமைபோல அம்மா தோசைக்குக் கூப்பிட்டார். நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு அன்று எதையோ காரணம் காட்டிப் போகவில்லை. அம்மா ஒன்றுமே சொல்லவில்லை. அடுத்த வாரமும் அழைத்தார். அப்போதும் நான் செல்லவில்லை. அவ்வளவுதான். அதற்கு அடுத்த வாரம் அவர் எம்மை அழைக்கவில்லை. நானும் அவர் அழைக்காததைக் கவனிக்கவில்லை. இப்படியே ஒரு மாதம் கழிந்தது. அதன் பின்னர்தான் ஒரு நாள் அம்மா தோசைக்கு நம்மைப் பின்னர் கூப்பிடவேயில்லை என்பது ஞாபகம் வந்தது. உடனேயே அழைப்பெடுத்து ஏன் என்று கேட்டேன்.

ரெண்டு கிழமையும் உங்களுக்காக அரைச்சு வச்ச தோசை மா கெட்டுப்போயிற்று. சரி விடு. இண்டைக்குப் பயங்கர குளிர் என்ன?

அவ்வளவுதான். ஒரு வரியில் விசயத்தைச் சொல்லிவிட்டு அவர் அடுத்த விசயத்துக்குத் தாவிவிட்டார். ஏன் வரவில்லை என்று அவர் எம்மோடு கோபம் கொள்ளவில்லை. அதுபற்றி நான் கேட்கும்வரைக்கும் ஒற்றைச் சொல்லும் சொன்னதில்லை. ஆனால் இது நடந்து இன்றைக்குக் கிட்டத்தட்டப் பத்து மாதங்கள் ஆகிவிட்டன. மனிசி இறைச்சிக் கறி காய்ச்சினால் கூப்பிடும். ஒடியல் கூழ் காய்ச்சினால் கூப்பிடும். வடை சுட்டால் கூப்பிடும். முக்குழி அப்பம் செய்து தரும். ஆனால் ஒரு நாள்கூடத் தோசைக்குக் கூப்பிடவில்லை. எத்தனையோ வெள்ளிக் கிழமைகள் வந்து போய்விட்டன. நானும் எத்தனையோ தடவை, தோசை பசிக்குது, செஞ்சு தாங்கோ என்று கேட்டுப்பார்த்துவிட்டேன். ம்ஹூம். மனிசி செய்து தரமாட்டேன் என்றும் சொல்லாது. விளக்கமும் கொடுக்காது. ஆனால் செய்யாது.
ஏன் என் அம்மாவுக்கு இத்தனை கோபம் என்று நான் யோசிப்பதுண்டு. Because I taken her for granted. அவ்வளவுதான். எண்பது வயசில் ஒரு மனிசி உழுந்து ஊறப்போட்டு, அரைத்து, இலகுவில் புளிக்காத காலநிலை உள்ள ஊரில் ஹீட்டருக்குக் கீழேயும் ovenக்கு உள்ளேயும் மாவை வைத்துப் பல தகிடுத்தனங்கள் செய்து புளிக்க வைத்துத் தோசைக்குத் தயார் செய்தால், சொன்னதுபோல நான் போய்ச் சாப்பிடவில்லை. போகாததற்குத் தகுந்த காரணமும் நான் கொடுக்கவில்லை. அது மனிசியின் சுய மரியாதையைச் சீண்டிவிட்டது.

இதை யோசிக்கும்போதெல்லாம் எனக்குள் குற்ற உணர்வு பெருகுவதுண்டு. இரண்டு நாட்களுக்கு முன்னர்கூட, கூப்பிடேக்க வராதது பிழைதான், தோசைக்குப் போடுங்க, ஆசையா இருக்கு என்று கெஞ்சிப்பார்த்தேன். மனிசி எதுவுமே சொல்லவில்லை. இதை நினைக்கையில் எனக்குள் கவலையும் பெருக்கிடும். அதே நேரம் அம்மாமீதான மதிப்பும் பாசமும் பொங்கிவரும். மதியாவிட்டால் மகனே ஆனாலும் நீ எனக்கு வெறும் மயிர்தான் என்று சிந்திக்கின்ற மனிசிக்கு மகனாகப் பிறந்ததில் இதைவிட வேறென்ன பெருமை வேண்டும் எனக்கு?

எங்கள் ஊரில் வட்டு மிதித்தல் என்றொரு செயல் உண்டு. பருவத்தின்போது தொழிலாளர்கள் பனை, தென்னை மரங்களில் ஏறி அவற்றின் வட்டுகளை நன்றாக மிதித்து விரித்துவிடுவார்கள். அப்போதுதான் குலைகளில் காய்கள் நன்றாகப் பெருத்து விரியும் என்பார்கள். நான் அந்த அக்காமீது கோபம்கொண்டதுபோல. என் அம்மா என்மீது கோபம் கொண்டதுபோல. இந்தக் கோபம் எல்லாமே ஒருவித வட்டு மிதிக்கும் செயல்தான். பிறருக்கு அது சிறு பிள்ளை கோபம்போலத்தான் தோன்றும். சந்தேகமேயில்லை. அது சிறு பிள்ளைக் கோபமும்தான். ஆனால் பேரின்ப உறவுகள் இப்படியான சின்னச் சின்ன விரிசல்களால்தான் தழைக்கின்றன.

ஆதலினால் அன்புற்றிருப்போம்.

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.