Skip to main content

அம்மா ஒரு கிரிக்கட் பைத்தியம்



இன்று நேற்று இல்லை. எங்கள் வீட்டில் டிவி வந்த காலத்திலிருந்தே அவர் கிரிக்கட்டை ரசித்துப் பார்ப்பது வீட்டில் சகஜமாக நடக்கும் விசயம். என் ஞாபகமறிந்து இந்தியன் ஆர்மிக்காலத்திலிருந்தே எங்கள் வீட்டில் கிரிக்கட் எப்போதும் டிவியில் போகும். அப்போது அவர் கபில்தேவ், கவாஸ்கரின் தீவிர விசிரி. பின்னர் தொண்ணூறூகளில் சச்சின், கங்குலியின் ரசிகையானார். கங்குலி நூறு அடித்தால் போதும், அடுத்தடுத்து ஸ்பின்னருக்கு வெளிய வந்து அடிக்கும் சிக்ஸர்களுக்கு அம்மாவின்
கண்கள் விரிந்து தயாராகிவிடும். அப்போதெல்லாம் கிரிக்கட் நாட்களில் இன்னிங்ஸ் பிரேக்கின்போதுதான் எங்கள் வீட்டில் புட்டு அவிக்கப்பட்டுவிடும். துணைக்கு எப்போதுமே மத்தியானக் கறிதான். பின்னேரம் அவர் டிவிக்கு முன்னர் ஈசிச்செயாரில் உட்கார்ந்துவிட்டால் மட்ச் முடிந்து பிரசெண்டேசனும் நிகழ்ந்தபின்னர்தான் ரிமோட் மற்றவர் கைக்குப் போகும். அப்படி ஒரு வெறி.

ஆச்சரியம் என்னவென்றால் எப்போதுமே அம்மா பெரிதாக நாடகங்கள் எதையும் பார்த்ததில்லை. இப்போதும் டிவியில் பார்ப்பது யூடியுப்தான். அதுவும் வீட்டுத்தோட்டம் பற்றிய வீடியோக்கள். Jaffna Suthan காட்டுகின்ற மாலைதீவும் டுபாயும். இடைக்கிடை லோஷன் சொல்லும் ஈழத்து நிலவரங்கள். இப்படி யூடியுப் பரிந்துரைப்பதை ரசித்துப்பார்ப்பார். ஆனால் ஒன்று மட்டும் மாறவேயில்லை.
அது இந்தக் கிரிக்கட்.
கிரிக்கட் என்றால் யார் விளையாடுகிறார்கள் என்ற கணக்கில்லை. பிக் பாஷ் பார்ப்பார். அவுஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் பார்ப்பார். பெண்களுடைய கிரிக்கட்டையும் இரசிப்பார். டிவியில் எப்போதெல்லாம் கிரிக்கட் போகிறதோ அப்போதெல்லாம் அதைப் பார்ப்பார். சென்றவாரம் அம்மாவுக்குத் தொலைபேசியில் அழைத்தபோது கொஞ்சம் பதட்டமாக இருந்தார். என்ன பிரச்சனை என்று கேட்டபோது “நீ போனை வை. நான் பிறகு அடிக்கிறன். கோலி வந்திட்டான்” என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவுஸ்திரேலியா இந்தியா தொடரை இங்குள்ள இலவச சானல்களில் பார்க்கமுடியாது. காயோ என்று ஒன்றிருக்கிறது. அதற்குக் காசு கட்டவேண்டும். அது வேலை செய்யக்கூடிய டிவி வேண்டும். அம்மா எப்படி இந்த ஆட்டத்தைப் பார்க்கமுடியும்? கேட்டேன்.
“யூ டியுபில போகுது. ஆக்களை பார்த்தா கார்ட்டூன்மாதிரித்தான் தெரியும். ஆனால் ஸ்கோர் போடுவாங்கள். கொமென்ரியும் கேக்கும்”
பிரமிப்பாக இருந்தது. யூடியூபில் சிலர் அனிமேசன் லைவ்வாக கிரிக்கட்டைப் போடுவதுண்டு. அதனைத்தான் இவ்வளவு உற்சாகமாகப் பார்க்கிறார் என்று தெரிந்தது.
“இதுக்குப் பேசாம காயோ வாங்கலாமே?”
“அதெல்லாம் எனக்குத்தெரியுமா? நீதான் வாங்கித்தரோணும். எவ்வளவு காசெண்டாலும் பரவாயில்லை. நான் தாறன்”
ஆஸ்பத்திரியில் சாகக்கிடக்கும் நோயாளியின் குடும்பத்தினர் வைத்தியரிடம் பேசுவதுபோல அம்மாவின் குரல் கெஞ்சியது.
“சரி நான் வாங்கித்தாறன்”
“ஆ… இப்பவே வாறியா, நான் வேண்டுமென்றால் புட்டு அவிச்சு முட்டை பொரிக்கவா? நீ செட் பண்ணுறதுக்குள்ள சமைச்சிடுவன்”
அம்மாவைப் பற்றிய தகவல்களை உடனேயே இலஞ்ச ஊழல் ஒழிப்புத்துறைக்கு அனுப்பிவைக்கவேண்டும்போலத் தோன்றியது.
“அனே … அது அமேசனில வாங்கோணும். இந்த மட்சு மூண்டு நாளில முடிஞ்சிடும். நான் அடுத்த மட்ச் தொடங்கமுதல் வாங்கித்தாறன்”
அம்மாவின் குரல் தொங்கிவிட்டது.
“சரி அப்ப ஆறுதலா வா. நான் மிச்ச மட்ச் பார்க்கோணும்.”
அவ்வளவுதான். புட்டு, முட்டைப்பொரியல் பற்றி எந்தக் கதையுமில்லை. மனிசி கட் பண்ணீட்டுது.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக