Skip to main content

விஷ்ணுபுரம் - ஹம்பி



விஷ்ணுபுரம் நாவலை நான் மிகத் தாமதமாகத்தான் வாசித்தேன். ஹம்பி செல்வதற்கு முன்னர் நாவலை வாசித்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.

நகரங்கள், கலாசாரங்கள், மதங்கள், தத்துவங்கள் எப்படி உருவாகி, கோலோச்சி, அதிகார உச்சங்களை அடைந்து பின்னர் அப்படியே நலிந்து ஒழிந்து போகின்றன என்பதை விஷ்ணுபுரம் எழுத்துகளில் விபரித்தது என்றால் ஹம்பியில் அதனைக் கண்கூடாகவே அறியலாம். அதன் வரலாற்றை, உச்சங்களை இன்றைய எச்சங்களினூடே காணமுடியும். ஹம்பியின் சமகால நிலையைத்தான் விஷ்ணுபுரத்தின் மூன்றாவது பாகம் விபரிக்கிறது.

சில வருடங்களுக்கு முன்னர் அலுவலக வேலையாக பெங்களூர் செல்லவேண்டியிருந்தது. அப்போது வார இறுதி ஒன்றில் ஹம்பிக்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆறு மணி நேர ரயில் பயணம். அவ்வளவு நேரம் பயணம் செய்ய வேண்டுமா என்று முதலில் தயங்கினாலும் பின்னர் பஞ்சியைப் பார்க்காமல் போகலாம் என்று முடிவெடுத்துச் செய்த பயணம். அது வாழ்நாளில் மறக்கமுடியாத வரலாற்றின் அற்புதமான காலங்களையும் அந்த நிலங்களின் தற்போதையை நிலையையும் மனிதர்களையும் எனக்கு அறியத்தந்தது. பயணங்கள் நமக்குக் கிடைக்கும் கொடை. அவற்றை ‘அடுத்தமுறை பார்க்கலாம்’ என்று ஒத்திப்போடுவது எத்தகு மன்னிக்கமுடியாத குற்றம் என்பதை கடந்த இரு வருடங்கள் நிரூபித்துக்கொண்டிருக்கின்றன. ‘ஹம்பி’ சுற்றிவர துங்கபத்ரா நதி பாய, மலையும் மலை சார்ந்த நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘ஹம்பி’ விஜய நகரப் பேரரசின் தலைநகரமாக இருந்தது. பதினான்காம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் பல மிக்க பேரரசாக இருநூறு ஆண்டுகளுக்கு விஜய நகரம் விளங்கியது. அதன் உச்சகாலத்தில் சக்கரவர்த்தியாக இருந்த கிருஷ்ணதேவராயரையும் தெனாலி ராமன் கதைகளையும் அறிந்திராதவர்கள் இருக்கமாட்டார்கள். பதினாறாம் நூற்றாண்டளவில் பீஜிங்கும் ஹம்பியும் உலகின் செல்வமிக்க நகரங்களாகத் திகழ்ந்தன என்று அக்காலத்து வணிகர்களினதும் பயணிகளதும் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஹம்பி முழுதையும் சுற்றிவரும்போது அந்தச் செல்வாக்கின் எச்சங்களை இன்றைக்கும் அறியக்கூடியதாக இருக்கும். பரந்து விரிந்த அங்காடித்தெருக்களும் நகரமெங்கும் செதுக்கப்பட்டுக்கிடக்கும் சிற்பங்களும் ஹம்பியின் புராதன சிறப்பை இன்றைக்கும் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன. செல்வம் செழிக்கும் நிலையான ஒரு ஆட்சியில் இயல்பாகவே கலையும் எழுச்சி அடையும். குன்றுகளும் பெரும்பாறைகளும் இயல்பாக குவிந்து கிடக்கும் இந்நகரில் சிற்பக்கலை வளர்ந்ததில் ஆச்சரியமில்லை. நடனமும் கர்னாடக சங்கீதமும், ஓவியக்கலையும் இதே காலத்தில் இங்கே கோலோச்சின. கர்னாடக சங்கீதத்தின் தந்தை என்று அறியப்படும் புரந்திரதாசர் ஹம்பியிலேயே தன் வாழ்நாளில் பெரும் நாட்களைக் கழித்தார். பெண்கள் வீர விளையாட்டுகளில் பங்கெடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. மல்யுத்தம் செய்யும், கம்புச்சண்டையில் ஈடுபடும் பெண்களின் சிற்பங்களைப் பல இடங்களில் இன்றைக்கும் காணக்கூடியதாக இருக்கிறது. மதம் ஒரு முக்கிய புள்ளியாக இங்கே இருந்திருக்கிறது. ஹம்பி என்பதே சிவன் பார்வதி காதல் கதையை ஒட்டி உருவான பெயர்தான். கோயில்களில் காமசூத்திரச் சிற்பங்கள் பெருவாரியாகக் காணக்கிடைக்கும். திருமணங்கள் கோயில்களில்தான் இடம்பெறுவதுண்டு. புதுத்தம்பதிகளுக்கு உடலுறவு பற்றிய அறிவு இருக்காது என்பதால் திருமணம் முடிந்தபின்னர் கோயிலில் வைத்தே இந்தச் சிற்பங்களை காட்டுவார்கள் என்று என்னுடைய வழிகாட்டி விளக்கம் கொடுத்தார். என்னிடம் இரண்டு கேள்விகள் எழுந்தன. திருமணம் முடிக்கமுன்னர் அவர்கள் கோயில்களுக்கே போவதில்லையா? மற்றது புதுத்தம்பதிகளுக்குத்தான் சிற்பங்கள் என்றால் குதிரைக்கு உறவு கொள்வதும் மூவர் சேர்ந்து கொள்ளும் உறவும் ஏன் சிற்பமாகியிருக்கின்றன என்பது? கலையைக் கலையாக வைத்து அணுகாமல் தம் சமகால காலச்சாரத்துடன் இணைத்து சப்பை கட்டுவதை என்றைக்குத்தான் இவர்கள் நிறுத்தப்போகிறார்களோ? அங்கிருக்கும் விருபாட்சர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஹம்பியின் அநேகமான ஆண்களின் பெயர்களில் ‘விரு’ என்று பெயர் ஒட்டியிருக்கும். கடைவீதியில் நின்று ‘விரு’ என்று அழைத்தால் குறைந்தது ஐம்பது முகமாவது ஏக சமயத்தில் திரும்பும். விஜய நகரத்திடம் மிகப் பலமான இராணுவமும் இருந்திருக்கிறது. குறிப்பாக யானைப்படை. இங்கிருக்கும் யானைகளையும் பராமரிக்கும் இலாயங்களின் பிரமாண்டம் கண்களை விரியவைப்பன. ஹம்பிக்கு முகாலயர்களிடமிருந்து தொடர்ச்சியாக அச்சுறுத்தல் இருந்து வந்திருக்கிறது. பலதடவைகள் முகாலய படையெடுப்புகளை வென்றுமிருக்கிறார்கள். முகாலயப் படையினரை சிறைப்பிடித்து அடைத்துவைக்கத் தனியான சிறைச்சாலை இருந்திருக்கிறது. ஆச்சரியமாக பல முகாலயர்கள் ஹம்பியின் படையிலும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் இரண்டாம்பட்சமாக நடத்தப்பட்டு அவர்களுக்கென்று தனிப்பிரிவுகளும் அமைக்கப்பட்டிருந்தன. தொடர் முயற்சிகளின் பின்னர், பதினாறாம் நூற்றாண்டில் சுல்தான்களின் கூட்டணிப்படை இறுதியில் விஜயநகரை வெற்றிகொண்டது. அப்போது அங்கு ஆட்சியிலிருந்த ராமராயரின் (கிருஷ்ணதேவராயரின் மருமகன்) தலை கொய்யப்பட்டது. அடுத்த ஆறு மாதங்களில் ஹம்பி மொத்தமாக சூறையாடப்பட்டது. அங்கிருந்த கோயில் சிலைகளின் தலைகள் எல்லாம் உடைத்தெறியப்பட்டன. தலைகள் இல்லாத கோயில்களுக்குள் இந்துக்கள் கால் வைக்கவே மாட்டார்களாம். காலப்போக்கில் அந்நகரத்தில் மனித இருப்பே அருகிப்போக, இன்றைக்கு வரலாற்றுச் சிதைவுகளின் சுற்றுலாத்தலமாக ஹம்பி மிளிர்கிறது. அதே தலையற்ற சிலைகளோடு. ஹம்பியைச் சுற்றிச் சுற்றி வந்தபோது ஆரம்பத்தில் என்னுள் ஏற்பட்ட வியப்பும் ஒருவகைப் பெருமிதமும் போகப்போக அடங்கிவிட்டன. உலகின் எல்லா இராச்சியங்களுக்கும் நகரங்களுக்கும் நாகரிகங்களுக்கும் காலம் எழுச்சியையும் வீழ்ச்சியையும் கொடுத்துக்கொண்டேயிருக்கிறது. எழுச்சியின்போது பெருமிதம் கொள்வதிலும் வீழ்ச்சியில் அழுங்குவதிலும் எந்த அர்த்தமும் இல்லை. இங்கே எதுவும் சாசுவதம் இல்லை. ஒருநாள் மனிதகுலமும் இந்நிலத்தில் அழிந்துபோகும். வரலாறு நமக்கு ஒரு ஆசிரியர் என்றால் நம்மைச்சுற்றியுள்ள பிரபஞ்சம் பேராசிரியர. பிரபஞ்சத்தின் கால நீட்சியில் நம் பூமியும், அதிலுள்ள உயிரிகளும், குறிப்பாக மனிதர்களும் தனித்த முக்கியத்துவங்கள் எவையுமற்ற பொருட்கள்தான். எம்மை நிரந்தரமாக்க நாம் செய்யும் முயற்சிகள் எல்லாம் வீண் செயல்கள். சிந்திக்கத் தெரிந்த, இக்கணத்தை ஓரளவுக்குப் புரிந்துகொண்ட உயிரி என்ற அளவிலே நாம் நமக்குக் கிடைத்த இந்த தற்செயல் வாழ்வைக் கொண்டாடி மகிழ்தல் அவசியமானது. நேற்று என்னாகியது என்பது அவசியமில்லை. இறந்து என்னாவோம் என்று சிந்திப்பது பைத்தியக்காரத்தனம். இது ஏனைய உயிரிகளுக்கும் பொதுவானது என்ற பிரக்ஞையோடு, அவர்களுக்கு இடையூறு செய்யாது, இந்த இக்கணத்தைக் திகட்டத் திகட்ட அனுபவிப்பது ஒன்றே உன்மத்தம். ஹம்பியின் எழுச்சியும் வீழ்ச்சியும் எனக்கு உணர்த்தி நின்ற செய்தியும் அதுவே.
பயணங்களும் புத்தகங்களே. புத்தகங்களும் பயணங்களே.

































Comments

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .