பள்ளி நினைவுகளுக்கு வயதாவதேயில்லை.
பசுமரத்தாணிபோல அவை நம்முள் புதைந்துபோய் மீட்டும்பொழுதெலாம் சுகமான வலியைக் கொடுத்து மாய்த்துவிடுகின்றன . வழுக்கைத் தலையும் வண்டித் தொப்பையுமாய்க் கிழப்பருவமெய்திய பின்னுங்கூட நம் பள்ளி நண்பர்கள் மட்டும் காற்சட்டையிலும் அரும்பு மீசையிலும் காட்சி கொடுப்பதன் மாயமெதுவோ யாமறியோம். அறுபது வயதாகிப் பேரப்பிள்ளையையும் கண்டபின்னருங்கூட நம் வயது சுண்டிக்குளிப் பெட்டைகள் என்னவோ இன்றும் நல்லூர் வடக்குவீதியில் ஹாஃப் சாறி அணிந்து உலா வரக் காண்கின்ற அதிசயமும் ஏதறியோம்.
பள்ளி நினைவுகளுக்கு வயதாவதேயில்லை.
ஜூட் அண்ணாவின் ‘பரியோவான் பொழுதுகள்’ அந்த பசுமரத்தாணியை மீளவும் நமக்குள் அருட்டிவிடுகிறது. நான் பரியோவானில் படித்த காலமும் ஜூட் அண்ணாவின் காலமும் வேறு வேறு. ஆசிரியர்களும் பலர் வேறு. பிக் மட்ச்சின் ஹீரோக்கள் வேறு. நாட்டுச் சூழலுங்கூட கொஞ்சம் வேறு. ஆனால் பதின்மம் என்னவோ ஒன்றுதான். அந்தப் பதின்மத்துக்கேயுரிய அனுபவங்கள் ஒன்றுதான். பெயர்கள் மாறினாலும் மனிதர்களும் ஒன்றுதான். இதே கதைதான் பத்திரிசியானுக்கும் யாழ் இந்துக்காரனுக்கும் கொழும்பு இந்துக்காரனுக்கும் இருந்திருக்கக்கூடும். ஏன் வேம்படி மகளிருக்கும் உடுவிலின் பெண்களுக்கும்கூட இவை ஒன்றாக இருக்கவே சாத்தியம் அதிகம். இன்னும் சொல்லப்போனால் உலகம்பூராவும் பள்ளிப்பருவத்தினரது கதை இதுவாகவே இருக்கக்கூடும்.
ஜூட் அண்ணா தன் மகன்களுக்கு பரியோவானின் சீருடை அணிந்து அழகுபார்த்ததுபோல, ‘பரியோவானின் பொழுதுகள்’ நூலும் நமக்குச் சீருடையும் சாப்பாட்டுப்பெட்டியும் டிரிங்ஸ் பொட்டிலும் கொடுத்து மீண்டும் பள்ளிக்கு அனுப்பிவிடுகிறது. பாடசாலை முடிந்தபின்னும் வீடுபோகாமல் நின்று மைதானத்தில் விளையாடியதுபோல, வாசித்து முடித்தபின்னும் மனம் பள்ளிப்பருவத்திலேயே தரித்துவிடுகிறது.
வீடு மீள விருப்பேயின்றி.
Comments
Post a Comment