மாலையில்தான் நிகழ்ச்சி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. அதனால் முதலில் நண்பர்கள் மூவரும் சேர்ந்து புரூக்லின் போகலாம் எனத் திட்டம் போட்டோம். புரூக்லின் என்றாலே எனக்கு மூன்று விசயங்கள் உடனேயே ஞாபகத்துக்கு வருவதுண்டு. முதலாவது புரூக்லின் என்ற திரைப்படம். ஐம்பதுகளில் அயர்லாந்திலிருந்து புலம்பெயர்ந்து புரூக்லினில் வந்து வாழும் ஒரு இளம் பெண்ணின் எளிமையான கதை அது. அடுத்தது லாகிரியினுடைய ஒரு கட்டுரை. லாகிரி இத்தாலிய மொழி படிக்கவேண்டுமென புரூக்லினில் வசித்துவரும் அவருடைய இத்தாலிய ஆசிரியரின் வீட்டுக்கு வாரவாரம் செல்வதுண்டு. அந்த அனுபவத்தைத் தனக்கேயுரிய லாஹிரித்தனத்தோடு அவர் எழுதியிருப்பார். மூன்றாவது புரூக்லினின் பிட்சா உணவு. நான் வாசித்த பல சிறு கதைகளில் புரூக்லின் பிட்சாவை சுவைத்திருக்கிறேன். அதன் மெல்லிய மொறுமொறு உரொட்டியைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதன் செவ்வக வடிவத்தைப் பலர் சொல்லியிருக்கிறார்கள். அதிகம் உணவுப் பொருட்களை மேலே தூவாத எளிமையான புரூக்லின் பிட்சாவை அந்த ஊரில் வைத்தே சாப்பிடவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. நியூ யோர்க் பயணம் முழுதுமே இவ்வகை எண்ணங்கள்தான் என் மனதை நிறைத்திருந்தன. ஒரு புதிய ஊருக்குச் செல்கிறோம் என்ற பிரக்ஞையே இருக்கவில்லை. நியூயோர்க்கின் ஒவ்வொரு தெருவையும் கட்டடத்தையும் ஊரையும் எங்கோ ஒரு திரைப்படத்திலோ நாவலிலோ நாம் தரிசித்திருப்போம். நேரில் காணும்போதும் நியூயோர்க் நம் கற்பனையைப்போலவே தோற்றமளித்தது கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது.
நியூ ஜேர்சியிலிருந்து பஸ் பிடித்து பென் புகையிரத நிலையத்தை அடைந்து அங்கிருந்து சப்வே ரயிலில் புரூக்லின் சென்றோம். அவ்விடம் கொஞ்ச நேரம் அலைந்துவிட்டு, புரூக்லின் பிட்சாவின் பல வகைகளை வாங்கி மூவரும் பகிர்ந்துண்டோம். பின்னர் புரூக்லின் பாலத்தில் நடக்க ஆரம்பித்தோம். நியூ யோர்க்கின் உண்மையான அழகை சுற்றுலாப் பயணிகளிடமிருந்து விலக்கி ரசிப்பது என்பது சவாலானது. நமக்கு அந்தப் பழமையான புரூக்லின் பாலத்தின் கடவையில் சாய்ந்துகொண்டு கீழ் செல்லும் வாகனங்களையும் உச்சிக் கோபுரங்களையும் மனிதர்களையும் வெறுமனே விடுப்புப்பார்ப்பது என்பது அலாதியான அனுபவத்தைக் கொடுக்கக்கூடியது. ஆனால் நடு நடுவே சுற்றுலாப்பயணிகள் புகைப்படங்கள் எடுப்பதன்மூலமோ அல்லது சத்தமாக அரட்டை அடித்தோ அதைக் கெடுத்துவிடுவார்கள். அதைவிட அங்கிருக்கும் நடமாடும் அங்காடிகளும் கூவல்களும் அவ்விடம் ஒரு காட்சிப்பொருள் என்பதை உணர்த்திக்கொண்டேயிருக்கும். அதனால்தான் நாமும் அங்கு சென்றோம் என்பதும் புரியும்போது யாரையும் நொந்துகொள்ளவும் இயலாமற்போகும்.
நண்பகலுக்குப் பின்னர் நண்பர்கள் அவரவர் பாட்டுக்குப் பிரிந்து அலைவது என்பதுதான் திட்டம். எனக்கு Strand புத்தகக் கடைக்குச் செல்லவேண்டியிருந்தது. அன்றுதான் லாஹிரியின் “Roman Stories” தொகுப்பு வெளியாகிறது. எப்போதுமே லாஹிரியின் நூல்களை, அவை வெளியாகும் முன்னமேயே முன்பதிவு செய்து வாங்கும் வழக்கம் எனக்கு உண்டு. இம்முறை புத்தகம் வெளியாகும் நாளில் நான் நியூ யோர்க்கில் இருப்பேன் என்று தெரியுமாதலால் முதல் நாள் புத்தகக் கடையிலேயே சென்று வாங்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். அதுவும் Strandல் சென்று வாங்கவேண்டும் என்றொரு ஆசை. உலகின் மிகப்பெரிய புத்தகக் கடைகளுள் ஒன்று இது. கிட்டத்தட்ட இருபத்தைந்து இலட்சம் புத்தகங்கள் இங்கு விற்பனைக்குக் கிடைக்கிறது. உள்ளே செல்லும்போது மிகப்பிரமாண்டமான நூலகம் ஒன்றுக்குள் செல்லும் அனுபவம்தான் அங்கு நமக்குக் கிடைக்கும். அங்கே போய் லாஹிரியை எங்கேயென்று தேடுவது? நான் நேரே அங்கு நின்ற பணியாளரிடம் சென்று ரோமன் ஸ்டோரிஸ் எங்கு கிடைக்கும் என்று கேட்டேன். ‘புது வரவு அல்லவா அது?’ என்றபடியே பணியாளர் புதுப்புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்த மேசைக்கருகே என்னை அழைத்துக்கொண்டு போனார். அங்கே லாஹிரி கையெழுத்து போட்டுக்கொடுத்த பிரதிகள் அடுக்கப்பட்டிருந்தன. நான் என் நண்பர்களுக்கும் சேர்த்து மூன்று புத்தகங்களைக் கையிலெடுத்தேன். பின்னர் அடுத்த இரண்டு மணி நேரங்கள் அங்கேயே அலைந்தேன். அலிஸ் மன்றோவின் சில புத்தகங்கள், மார்கரட் அட்வூடின் இரண்டு நாவல்கள் என பலதைப் பொறுக்கினேன். கிட்டத்தட்ட இருபது புத்தகங்களைக் கூடையில் எடுத்துப்போட்டுவிட்டுப் பின்னர் இவற்றை எப்படி மறுபடியும் மெல்பேர்ன் கொண்டுசெல்வது என்று தோன்றவே பத்துப் புத்தகங்களோடு நிறுத்திக்கொண்டேன்.
நேரம் இப்போது மாலை நான்கு மணியை எட்டிக்கொண்டிருந்தது. கூட்டம் ஏழு மணிக்குத்தான். கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியான பார்னாட் கல்லூரியின் படைப்பிலக்கிய பீடத்தின் இயக்குநராக லாகிரி நியமனம் பெற்றிருந்தார். அவரை அப்பதவிக்கு வரவேற்கும் நிகழ்ச்சிதான் அது. பல மாதங்கள் முன்னேயே நிகழ்ச்சி அறிவிப்பு வெளியாகியிருந்தது. நானும் நுழைவு அனுமதியை முன்பதிவு செய்து அந்நாளுக்கு ஏற்றமாதிரி நியூ யோர்க் பயணத்தைத் திட்டமிட்டிருந்தேன். அந்த நாளும் ஈற்றில் வந்துவிட்டது. நேரம் கொஞ்சம் இருந்ததால் மறுபடியும் சென்றல் பார்க் செல்லலாம் என்றொரு என்ணம் வந்தது. அங்கு சென்று எங்காவது ஒரு மரத்தடியில் உட்கார்ந்து ஒரு கதை படிக்கலாம். சென்றல் பார்க் பற்றியும் ஏராளம் நினைவுகள் எனக்கு இருந்தன. பல ஆங்கில தமிழ்த் திரைப்படங்களில் தவறாமல் வந்துபோகும் பூங்கா அது. விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தில் கார்த்திக் ஜெஸ்ஸியிடம் “வா, நாம் இப்போதே போய்த் திருமணம் செய்துகொள்ளலாம்” என்று கேட்கும்போது அவள் சம்மதம் சொல்லும் காட்சிகூட சென்றல் பார்க்கில்தான் எடுக்கப்பட்டிருக்கும். சென்றல் பார்க் என்பது நியூ யோர்க்கில் வானுயர் கட்டடங்களுக்கு நடுவே அமைந்திருக்கும் மிக அழகிய பூங்கா என்றுதான் பல ஆண்டுகளாக நினைத்துவைத்திருந்தேன். கடந்த வருடம் “When They See Us” என்ற தொடரை நெட்பிளிக்ஸில் பார்த்ததுமுதல் அந்தப் பூங்காவைப்பற்றிய நினைவே மொத்தமாக மாறியிருந்தது. பூங்காவின் வடக்கு வாசலுக்குச் சென்று அந்தக் கறுப்பின நால்வருக்கும் நிகழ்ந்த கொடுமையை நினைவுகூறும் கல்லையும் பார்த்தேன். அங்கு ஓரமாக உட்கார்ந்து ரோமன் ஸ்டோரிஸ் புத்தகத்திலிருந்த “The Boundary” என்ற சிறுகதையை வாசித்தேன். அக்கதை முன்னமேயே நியூ யோர்க்கரில் வெளியாகியிருந்த சமயம் வாசித்தது ஞாபகத்துக்கு வந்தது. ஒரு சுற்றுலாப்பயணிக்கும் குடியேறிக்குமிடையிலான ஒப்பீடு அந்தக் கதை. யார் ரோமன் என்பதுதான் மொத்த புத்தகத்தினுடைய ஆதார கேள்வி. முதலில் வந்தவர் பின்னர் வந்தவரை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் மாற்றாராக மதிப்பதும் பின்னர் வந்தவர் பலம் மிகுந்தவர் என்றால் மூத்த குடிகளை ஒடுக்குவதும் உயிரிகளின் நுண்ணுணர்வு. மனிதமும் அறமும் இலக்கியங்களும் அதனை நிராகரித்து, சமுக ஒழுங்கையும் சம நீதியையும் நிலை நாட்டி, நடைமுறையையும் இலட்சியத்தையும் எங்கோ ஒரு புள்ளியில் சேர்த்துவைக்கலாம் என முயற்சி செய்கின்றன. அதனை லாஹிரி தன் வழியில் எதிர்கொள்வதுதான் Roman Stories.
பார்னார்ட் கல்லூரி வாசலில் நான் தயங்கிப்போய் நிற்கும்போது காவலாளி என்ன நிகழ்வு என்று கேட்டு அந்தக் கட்டடத்தைச் சரியாக அடையாளம் காட்டினார். பார்னார்ட் என்பது ஒரு மகளிர் கலைக் கல்லூரி. கலை என்று இவர்கள் கருதுவது கவின்கலைகள் அன்றி ‘liberal arts’ எனப்படுகின்ற சுதந்திர சிந்தனை, பிரச்சனைகளை அலசல், தொடர்பாடல், கணிதம், தத்துவம், சமூக விஞ்ஞானம், இலக்கியம் என்ப்வற்றைத்தான். இக்கல்லூரியில் அனுமதி கிடைப்பதே மிகக்கடினமான விசயம் என்று கேள்விப்பட்டேன். கல்லூரி வளாகத்தையும் அங்கு திரிந்த மாணவிகளையும் பார்த்தபோது அது உண்மை என்றே தோன்றியது. ஆளாளுக்கு ஒரு புத்தகத்தோடோ அல்லது மடிக்கணினியொடோ புல்வெளியிலும் மரத்தடிகளிலும் உட்கார்ந்திருந்தார்கள். நியூ யோர்க்கின் கலாசாரமே ஒருவித விட்டேற்றியான சுயாதீன கலாசாரம் என்றால் இக்கல்லூரி வளாகத்தின் கலாசாரம் அதிலும் பன்மடங்கு வித்தியாசமாக இருந்தது. உடைகள் எல்லாம் தாறுமாறாக பலதரப்பட்ட வகைகளில் இருந்தன. அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் தாம் ஒரு தனித்துவமான, சுதந்திர சிந்தனையுள்ள மனிதர்கள் என்ற தொனியை உணரமுடிந்தது. அனேகமான எல்லா டீசேர்ட்டுகளிலும் மடிக்கணினி ஸ்டிக்கர்களிலும் ஏதோ ஒரு சமூகவியல் பிரச்சனை எதிரொலித்தது. பலர் எதையோ தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தார்கள். அல்லது வாசித்தார்கள். சிலர் தம் துணைகளோடு அமர்ந்திருந்தனர். நேரில் எதிர்கொள்ளும்போது புன்னகைத்தார்கள். அது நியூயோர்க்கின் கலாசாரத்திலிருந்து முற்றிலும் மாறானது. சுவர்களிலும் மரத்துப் பலகைகளிலும் பதாகைகள், அறிவுப்புகள் ஒட்டப்பட்டிருந்தன. இரண்டு நாட்களில் “My name is Andrea” என்ற திரைப்படமும் எழுத்தாளர் அண்டரியா டுவோர்கினோடான உரையாடலும் இடம்பெறும் என்ற அறிவிப்பு இருந்தது.
அப்போதுதான் ஒக்டோபர் ஏழு தாக்குதல் நிகழ்ந்து நான்கு நாட்கள் ஆகியிருந்தன. அதனால் இஸ்ரேலியர்களுக்கு ஆதரவாகவும் பல பதாகைகள் இருந்தன. கூடவே பாலத்தீனத்தின் விடுதலை சார்ந்த சுவரொட்டிகளையும் காணக்கிடைத்தது. நம் உடல், நம் தெரிவு என்று கருக்கலைப்பு சம்பந்தமான விசயம் பல சுவரொட்டிகளில் எதிரொலித்தது. இள வயதிலேயே சமூகவியலின் பல பக்கங்களையும் அறிந்துகொள்ளக்கூடிய சூழலை அக்கல்லூரி அந்த மாணவர்களுக்கு அனுமதித்துக்கொண்டிருந்தது. இவற்றையெல்லாம் உள்வாங்கும் ஒரு சுயாதீன சிந்தை உள்ள அறிவு மிகு மாணவர் தன் முப்பதுகளில் எப்படி சமூக அறிவியல் சார்ந்து புதிய போக்குகளை இவ்வுலகத்துக்கு அறிமுகப்படுத்துவார் என்ற நினைப்பே புளகாங்கிதத்தை உருவாக்கியது. நூறு பேரில் ஓரிருவர் அப்புள்ளியை அடைந்தாலே அது பெரும் புரட்சி அல்லவா?
நான் சிற்றுண்டிக்கடைக்குச் சென்று ஒரு கப்புசீனோவை வாங்கினேன். என் செல்பேசியின் பட்டரி பத்து வீதத்தில் சிவத்துப்போயிருந்தது. அதனை சார்ஜ் போடலாம் என்று பவர் பொயிண்ட் தேடிக்கொண்டிருந்தபோது அங்கிருந்த ஒரு பெண் பவர் பொயிண்ட் இருக்கும் மூலையைக் காட்டினார். கொஞ்ச நேரம் அங்கு உட்கார்ந்து லாகிரியின் இன்னொரு சிறுகதையை வாசிக்கத் தொடங்கினேன். பின்னர் கூட்டம் நிகழும் மண்டபத்துக்குள் சென்று மூன்றாவது வரிசையில் உட்கார்ந்தேன். முன் வரிசையில் சில தெரிந்த முகங்கள் அமர்ந்திருந்தன. லாகிரியின் கணவரும் இரண்டு பிள்ளைகளும் உட்கார்ந்திருந்தார்கள். லாஹிரியின் மகனின் முகமும் அலங்கோலத் தலைமுடியும் “The Namesake” கோகலைத்தான் நினைவூட்டியது. மகளுக்குத் தந்தையின் ஸ்பானிய முகம். Ken Chen, Laura Rosenbury, Tanya, Mira Nair என்று நான் நூல்களிலும் சஞ்சிகைகளிலும் திரைப்படங்களிலும் கேள்விப்பட்ட பெயர்கள் அங்கே உட்கார்ந்திருந்தன. சில நிமிடங்களிலேயே இருக்கைகள் நிரம்ப ஆரம்பித்தன. பெரும்பாலும் மாணவிகள்தான். எல்லோர் கையிலும் லாஹிரியின் நூல்கள் இருந்தன. என்னருகில் உட்கார்ந்திருந்தவன் காதுகளில் ஹெட்போன் போட்டபடி தீவிரமாக ஒரு நூலை வாசித்துக்கொண்டிருந்தான். அவனைப்பார்த்தால் காதில் ஒலிப்புத்தகத்தைக் கேட்டபடியே கையில் வேறு ஒரு புத்தகத்தை வாசிக்கும் வாசிப்பு வெறியன்போலத் தெரிந்தது. இந்திய முகங்கள் உடனேயே என் கண்ணுக்குத் தெரிந்தன. என் பின்னாலே உட்கார்ந்திருந்தவன் காதலிக்காக வந்திருக்கவேண்டும். தனக்கு வாசிக்க நேரம் கிடைப்பதில்லை. ஆனால் வாசிக்க ஆசை என்று காதலியின் நண்பிக்குச் சொல்லிக்கொண்டிருந்தான்.
திடீரென்று சபையில் பரபரப்பு எழுந்தது. லாஹிரி வந்துவிட்டார்.
Just like that. நான் லாஹிரியைப் பார்த்துவிட்டேன். எனக்கு ஜேஜே சில குறிப்புகள் ஞாபகத்துக்கு வந்து போனது. ஒரு ஐந்தடி இடைவெளியில்தான் லாகிரி நிற்கிறார். முன்வரிசையில் உட்கார்ந்த எல்லோரையும் கட்டியணைக்கிறார். கணவருக்கு முத்தம் கொடுக்கிறார். பச்சை பாண்ட்ஸ். சூட். அதுக்கு முரணான தோல் சப்பாத்து. Guicci கைப்பை. மனிசி கலக்கியது. நான் லாகிரியை சூம் நிகழ்வுகளில் பார்த்திருக்கிறேன். ஆனால் நேரில் காண்பது இதுதான் முதற்தடவை. கிட்டத்தட்ட இருபது வருடங்களாக என் நினைவுகளை நிறைத்து நிற்கும் என் ஆதர்ச எழுத்தாளர். பாதாளக்கிடங்கில் விழுந்து, மீள வழியின்றி அழுங்கிக்கிடந்தனுக்குக் கரம் கொடுத்து மீட்டெடுத்த ஆபத்பாந்தவர். என் மிக நெருங்கிய தோழி.
ஜூம்பா லாஹிரி பத்தடி தூரத்தில் தன் நண்பர்களோடு சிரித்துப்பேசிக்கொண்டிருக்கிறார்.
நிகழ்ச்சி ஆரம்பித்தது. முழு நிகழ்ச்சிக்குமான காணொளி இருப்பதால் அதைப்பற்றி விளக்கவேண்டிய தேவையில்லை. ஆனால் அன்றைக்கு அங்கு நிகழ்ந்த நேர்காணல் ஒருவித writing masterclass. எழுத்தை நேசிப்பவர்கள் நிச்சயம் முழுமையாகக் கேட்கவேண்டிய ஒரு காணொளி அது. நிகழ்வு முடிந்ததும் பெரும்பாலான சபை கலைந்துவிட்டது. லாஹிரிக்குத் தெரிந்தவர்கள் மாத்திரம் அவரோடு நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு சில வாசகர்கள் வரிசையில் நின்று ஒவ்வொருவராகப் போய் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். நானோ லாகிரியை நேரில் இரண்டு மணி நேரங்கள் பார்த்ததாலும் அவருடைய வகுப்பை செவிமடுத்ததாலும் மிகுந்த பரவசத்தில் இருந்தேன். நேரில் சென்று சந்தித்துப் பேசும் எண்ணமேயில்லை. பேசுவதற்கும் ஒன்றுமில்லை. பேசவேண்டியதையெல்லாம் நான் அவருடைய புத்தகங்களை வாசிக்கும்போதே பேசிவிட்டேன். அவரும் சொல்லவேண்டியதையெல்லாம் தன்னுடைய எழுத்துகளினூடே சொல்லியும்விட்டார். நமக்கிடையே பேச என்ன இருக்கிறது?
திரும்பிவிட்டேன்.
வாட்சப்பில் ஜீவிக்கும் நண்பர்களுக்கும் லாகிரியை நேரில் பார்த்த விசயத்தைத் தெரிவித்துவிட்டு, அடுத்து என்ன செய்வதென்று அறியாது மண்டபத்தைவிட்டு வெளியே வந்தேன். எழுதுவது என்பது ஒரு புது மனிதரை, புது மொழியை, புது இடத்தை தரிசிப்பதுபோல. நமக்கு இதுவரை தெரியாத ஒரு விசயத்தை நாம் அடுத்த வரியிலே எழுத முயற்சி செய்கிறோம். அது சமயத்தில் அச்சத்தைக் கொடுக்கலாம். உவகையைக் கொடுக்கலாம். அதீத பதட்டத்தைக் கொடுத்தலாம். லாஹிரியின் வார்த்தைகள் காதுகளில் எதிரொலித்துக்கொண்டிருந்தன. அடுத்து என்ன என்று தெரியாமல் ஆர்மோனியத்துக்கு முன்னாலே உட்கார்ந்திருப்பவருக்கு ‘உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன்’ என்று ஒரு மெட்டு வந்து விழுகிறது. இரண்டு கணங்களுக்கு முன்னர்வரை இப்படி ஒரு பாட்டே உலக வரலாற்றில் இல்லை. இனி இந்த மெட்டு எத்தனையோ ஆண்டுகளுக்கு நீடித்து நிலைக்கப்போகிறது. என் சிந்தனை எங்கெல்லாமோ அலைந்தது. இப்பிரபஞ்சம்கூட அப்படி உருவான ஒன்றுதானே. திடீரென்று ஒரு பெரும் அடிப்பு. The big bang. அதற்கு முன்னர் என்ற ஒரு பேச்சே கிடையாது அல்லவா. காலம்கூட அப்போதுதான் ஆரம்பிக்கிறது. ஈர்ப்புக்கேற்ப அது மாற்றமடைகிறது. நாமெல்லாம்கூட பிரபஞ்சம் உதிர்த்துவிடும் வார்த்தைகள் அல்லவா? அல்லது அது போடும் மெட்டுகள். ‘நினைக்க மறந்தாய், தனித்துப் பறந்தேன், மறைத்த முகத்திரை திறப்பாயோ’ என்று ஜேசுதாஸ் உச்சஸ்தாயியில் உருகிக்கொண்டிருந்தார். எத்தனை படிக்கட்டுகள் இறங்கியிருப்பேனோ தெரியாது. சில நிமிடங்கள் கழித்துத்தான் உணர்ந்தேன். மேலே செல்வதற்குப் பதிலாக படிக்கட்டுகளில் கீழே இறங்கி வேறெங்கோ வந்துவிட்டேன்.
I got to a place where there was nowhere left to go.
வாடசப்பில் செய்திகள் மின்னிக்கொண்டிருந்தன. கலா அக்கா ‘தம்பி அவ்வளவுதூரம் சென்றுவிட்டு லாஹிரியிடம் சென்று ஒரு வார்த்தைகூடப் பேசாமல் திரும்பினால் காலத்துக்கும் கவலைப்படுவீங்கள்’ என்று தகவல் அனுப்பியிருந்தார். எனக்கும் அது சரியென்றே பட்டது. ஆனால் என்னத்தைத்தான் பேச? உங்கள் புத்தகங்கள் என்றாலே எனக்கு அவ்வளவு பிடிக்கும் என்றா? அபத்தமாக இருக்காதா? ஆஷிமா கங்குலியும் கௌரியும், இத்தாலிய பியாசேகளில் உட்கார்ந்து தேநீர் குடிக்கும் பெயர், முகம் தெரியாத அந்தப் பெண்ணும் எனக்கு மிக நெருக்கமானவர்கள் என்றா? அவர்களை எல்லாம் ஒரு எழுத்தாளராக அவர் கடந்து சென்றிருக்கக்கூடும் அல்லவா? அவர் அருகில் சென்று ஹெட்லைட்டைப் பார்த்த கங்காருபோல மிரட்சியோடு நிற்பதா என்ன?
படிக்கட்டுகளில் மறுபடியும் ஏற ஆரம்பித்தேன். ‘மேடை போடும் பௌர்ணமி, ஆடிப்பாடும் ஓர் நதி’ என்று இளையராஜா வேறு மெட்டுக்குத் தாவியிருந்தார். நான் நிகழ்ச்சி நிகழ்ந்த மண்டபத்துக்குள் மறுபடியும் நுழைந்தேன். லாஹிரி இன்னமும் முன்வரிசை எழுத்தாளர்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததைத் தூரத்தில் கண்டேன். ஒரு சில மாணவர்கள் பத்தடி இடைவெளியில் அவர் திரும்பிப்பார்த்தால் ஹாய் சொல்லலாம் என்று காத்துக்கொண்டு நின்றார்கள். நான் அந்த வரிசையில் சென்று இணைந்துகொண்டேன். எல்லோருமே பார்னார்ட் மாணவர்கள். கையிலே “Interpreter of Maladies”, “Whereabouts” என்று லாஹிரியின் புத்தகங்களை வைத்திருந்தார்கள். இவற்றையெல்லாம் நான் எப்போதோ வாசித்துவிட்டேன் என்று ஒரு சிறுப்பிள்ளைத்தனமான பெருமிதம்வேறு எனக்கு. என் முன்னே நின்ற மாணவிகள் சிலர் பொறுமை இழந்து வெளியேறினார்கள். மற்றவர்கள் வலிந்து முன்னே சென்று லாகிரியிடம் பேச்சுக்கொடுத்தார்கள். நான் இப்போது திடீரென்று தனியே அக்கூட்டத்திடை நின்றேன். நிகழ்வைப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த பெண் என்னருகே வந்து, ‘நீ இப்படியே நின்றால் நாள் முழுதும் நிற்கவேண்டியதுதான், ஜூம்பா மிக இனிமையான ஒரு பெண், தயங்காமல் சென்று பேசு’ என்றார். நான் இரண்டடி முன்னே சென்றேன். சற்றுத்தள்ளி நின்ற லாஹிரியின் மகன் நான் தயங்கியபடியே பின்னடித்ததைக் கவனித்திருக்கவேண்டும். அவர் என்னிடம் வந்து தன்னை அறிமுகப்படுத்தினார். நானும் என் பெயர் சொல்லி அவரிடம் கைலாகு கொடுத்தேன். ‘சும்மா போய்ப் பேசுங்கள்’ என்றார். அதற்குள் லாகிரி எல்லோரையும் கட்டியணைத்துவிட்டுப் புறப்பட்டுவிட்டார். ஆனால் அந்தப் புகைப்படம் எடுத்த பெண் அவரருகே சென்று என்னைச் சுட்டிக்காட்டி ‘அவர் உங்களோடு பேசவேண்டுமாம்’ என்று மாட்டிவிட்டார்.
லாஹிரி சட்டென என் பக்கம் திரும்பினார். கண்கள் விரிய ‘ஹாய்’ என்றார். Are you getting it? ஜூம்பா லாஹிரி என்னைப் பார்த்து ‘ஹாய்’ என்கிறார்.
நான் அவரை நெருங்கித் தட்டுத்தடுமாறிப் பேசினேன்.
“நான் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்திருக்கிறேன். உங்களுடைய தீவிர வாசகர். நீங்கள் தொடர்ந்து எமக்காக எழுதுவதற்கு மிக்க நன்றி, உங்களோடு ஒரு புகைப்படம் எடுக்கமுடியுமா?”
லாஹிரி புன்னகைத்தபடியே ‘Thanks, Sure’ என்றார்.
பார்னார்ட் கல்லூரியிலிருந்து வெளியேறி புரோட்வே தெருவில் நுழைந்தபோது இரவு ஒன்பதைத் தாண்டியிருந்தது. மறுபடியும் புரூக்லின் செல்லவேண்டும் என மனம் ஏங்கியது. அங்கிருந்து இரவில் மன்ஹட்டனைப் பார்க்கும்போது கொள்ளை அழகாக இருக்கும் என்று மயூ சொல்லியிருந்தான். நள்ளிரவில் சுற்றுலாப்பயணிகள் சற்று அடங்கியிருக்கும் நேரத்தில் அங்குபோய்க் கொஞ்சநேரம் உட்காரந்தால் நன்றாகத்தான் இருக்கும். நான் சப்வே ரயில் எடுத்து புரூக்லின் சென்றேன். பின்னர் பாலத்தில் ஏறி நடக்க ஆரம்பித்தேன். தூரத்தில் பிரமாண்ட நியூயோர்க்கின் கட்டடங்கள் மின்னிக்கொண்டிருந்தன. கடந்த பத்து நாட்களாக நாம் விட்டேற்றியாக அலைந்து திரிந்த நகரம். ஒரு புதிய கலாசாரம், நுகர்வுப் பொருளாதாரம், தூங்காத அல்லங்காடிகள், உணவுச்சாலைகள், மதுபான விடுதிகள், கோமாளித்தனங்கள் என்று அத்தனையையும் தன்னகத்தே கொண்ட ஆச்சரிய நகரம் நியூயோர்க். ஆனால் இன்று அது தான் மறைத்துவைத்திருந்த முகத்திரையை முதன்முதலாகத் திறந்துகாட்டியது. சொல்லப்போனால் இவ்வதிசய நகரமும் ஒருவித மேடைபோடும் பௌர்ணமிதான். நாமெல்லாம் அதைப்பார்த்து ஆடிப்பாடும் நதிகள்.
நான் மன்ஹாட்டன் நட்சத்திரங்களைப் பார்த்தபடியே ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தேன். மனம் லாஹிரியிலேயே மறுபடியும் லயித்திருந்தது. நான் ‘The namesake’ நாவலை வாசித்து பதினைந்து வருடங்களாவது இருக்குமா? என்னைத்தவிர மற்ற எல்லோருக்கும் இச்சிந்தனை அபத்தமாகத்தானே தெரியும்? வீட்டுப்பெயர்கள் பற்றி அந்நாவலில் ஒரு குறிப்பு இருக்கும். வீட்டுப்பெயர்கள் நம் பால்யத்தை நினைவுபடுத்துகின்றன. வாழ்க்கை இவ்வளவு தீவிரமானதாகவும் சிக்கலானதாகவும் அப்போது இருக்கவில்லை என்று அது எமக்கு ஞாபகப்படுத்துகிறது. தவிர ஒன்று எப்போதும் எல்லோருக்கும் பெரிதாகத் தெரியவேண்டிய அவசியம் இல்லை என்பதையும் அது குறித்து நிற்கிறது. எனக்கும் லாஹிரிக்குமான நெருக்கமும் அப்படியான ஒன்றுதான். டைம்ஸ் சதுக்கத்தின் பெருந்திரையில் விரிவதுபோல மன்ஹாட்டனின் கட்டடத்திரை முழுதும் லாஹிரியின் முகமே வியாபித்திருந்தது. அவர் என்னைப்பார்த்து ஹாய் என்றார். நான் கொஞ்சம் சத்தமாகச் சொன்னேன்.
“You remind me of everything that followed”
மனிசி சிறு புன்னகயுடன் தாங்க்ஸ் என்று சொல்லிவிட்டு சட்டென மறைந்துபோனது.
*****
Comments
Post a Comment