கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே!

Dec 24, 2011 2 comments

♫உ.. ஊ.. ம ப த ப மா♪  தொடரை நிறுத்தலாம் என்று தான் அக்காவும் அபிப்பிராயப்பட்டார். உன் ரசனை இது. உன்னோடு வைத்துகொள். ஆளுக்கு ஆள் அது மாறுபடும் என்றார். ஒரு வாரம் பொறுத்துப்பார்த்தேன். முடியல! இந்த பதிவு வேணாம்னு சொல்றது மேகலாவையே வேணாம்னு சொல்ற மாதிரி! என் பாட்டுக்கு எழுதப்போறன். பாட்டு பிடிச்சிருக்கா சொல்லுங்க!
இந்த வாரம் கொஞ்சம் பின்நவீனத்துவ பாணியில் பாடல்களை கோர்த்து இருக்கிறேன். புள்ளி என்னவோ ஒரே வகை சிந்தனையில் அமைந்த பாடல் வரிகள் தான். ஆனால் அதையொற்றி வரும் பாடல்கள் வேலிகள் எல்லாம் தாண்டி ஓடும். டென்ஷன் ஆக வேண்டாம். பதிவுக்கு போவோம்!
சிலவேளைகளில் வைரமுத்துவின் கற்பனைகள் ஒரே பாணியில் அமைந்துவிடும். ஒரு முறை தான் காதலித்து இருப்பார் போல! இந்த வரிகள் பெண்ணை தொலைத்த ஏக்கத்தில் வரும் வார்த்தைகள். என்ன ஒரு அழகான கற்பனை. வைரமுத்து வைரமுத்து தான்!“கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே”
“அதை தேடி தேடி பார்த்தேன்”

உயிரே படம் சந்திரன் மாஸ்டரிடம் நானும் ப்ரியாவும்(அல்லது பார்த்தியா?) முதல் ஷோ பார்த்தோம் என்று நினைக்கிறேன். பாடல் காட்சி கொஞ்சமே இருவர் படத்து “பூ கொடியின் புன்னகை” பாணி வடிவமைப்பு. உன்னிமேனன் பரவாயில்லாமல் பாடியிருப்பார்! ஆனால் ஹிந்தியில் உதித் நாராயணன் ஒரு அதகளமே பண்ணியிருப்பார்.

உதித்திடம் ஒரு வித தாள நடை இருக்கிறது. சரியான கணத்தில் வெட்டி வெட்டி பாடுவார். ஒரு வித casualness இருக்கும். இந்த படத்தில் வரும் அமர் காரக்டருக்கு அவர் குரல் மிகப்பொருத்தம். அருமையான பாடகர். தமிழிலும் பல பாடல்களில் கலக்கி இருப்பார். அவர் பாடியதில் எனக்கு பிடித்த பாடல் சமுத்திரம் படத்து விடிய விடிய பாடல். என் அக்கா இந்த பாடலுக்கு சொத்தை கூட எழுதிக்கொடுக்கும்! பாடல் ஒலிபரப்பானால், இருக்கும் வேலையை எல்லாம் விட்டு விட்டு இருவருமே கேட்டு ரசித்துக்கொண்டு இருப்போம். தேடிப்பார்த்தால் யூடியூபில் கிடைக்கவில்லை. விடுவோமா? ஏத்தீட்டோம்ல!

முதல் சரணத்தில் இறுதி
நீ வேர்வை ஓற்றிட கையில் வைத்திடும்
கர்சீப்-ஆக வேண்டும்
பின் கொஞ்சம் கொஞ்சமாய் கச்சையாக
நான் கட்சி மாற வேண்டும்
டும் டும் டும் எப்போது?
உதித் பாடும் style ஐ கேளுங்கள். Brilliant rendering!


பூங்காற்றிலே பாடல் வரிகள் போல தான் டூயட் படத்து அஞ்சலி அஞ்சலி பாடலிலும் ஒரு வரி வருகிறது.

"கடலிலே மழை வீழ்ந்த பின் எந்தத் துளி
மழைத்துளி?
காதலில் அது போல நான் கலந்திட்டேன்
காதலி"என்ன சிந்தனை ஒன்றல்லவா? இப்போது புரிகிறதா இது ஏன் வைரமுத்துவுக்கு பிடித்த சிந்தனை என்று? பாடலில் மூன்று சரணங்கள். இந்த பாடலை ஏற்கனவே எல்லோரும் பிரித்து மேய்ந்து விட்டதால், இதன் ஹிந்தி version க்கு தாவலாம். ரகுமான் அழகாக மாற்றி improvise அமைத்திருக்கிறார். ஒப்பிடவேண்டாம் போல் தோன்றுகிறது. அப்படியே ரசிப்போம், குறை நிறைகளுடன். காதலியை போல!

ப்ரியதர்ஷன் படம். “அஞ்சலி அஞ்சலியை” ரகுமானிடம்  கேட்டு வாங்கியதாக கூறுவார்கள். காரியமில்லை. அழகான ஒரு version கிடைத்தது.
எனக்கு அந்த ஆரம்ப pan flute மிகவும் பிடிக்கும். அப்புறம் அந்த strings. ரகுமான், அடுத்த பிறப்பில் பெண்ணாக பிறந்து பாருங்களேன்! துரத்தி துரத்தி காதலிப்பேன். மாட்டேன் என்று சொன்னாலும்!


அடுத்த பாடல் தெரிவு செய்தமைக்கு காரணமும் வைரமுத்துவே. அவரின் இன்னொரு காதல் வார்த்தை விளையாட்டு.
நான் என்றும் நீ என்றும் இரு வார்த்தை ஒன்றாகி
நாம் என்ற ஓர் வார்த்தை உண்டானதே
இந்த நான், நீ, நாம் மாட்டரை தமிழ் பாடலாசிரியர்கள் விடுவதாயில்லை. இந்த பாடல் கருத்தம்மாவுக்காக! கருத்தம்மா இசையை, கிராமத்தில் அவிழ்த்துவிட்ட பொமனேரியன் நாய்க்குட்டி போல இருந்ததாக விகடன் அந்த காலத்தில் விமர்சனம் செய்தது. அடுத்தடுத்த வாரங்களில் “போறாளே பொன்னுத்தாயி” பாடலுக்கு தேசிய விருது கிடைக்க விகடன் மூக்கில் கரி. கிராமிய இசையின் இன்னொரு படிமத்தை காட்ட முயற்சி செய்தவர் ரகுமான்.
Legends never follow the trends. They set the trends for others to follow.


1994 ம் ஆண்டு. இந்த பாடல் இலங்கை வானொலி வர்த்தகசேவையில் ஒலிபரப்பான “பவர் தரும் ஒளிச்சுடர்” நிகழ்ச்சியில் ஐந்தாம் இடத்தில் நீண்ட காலம் இருந்தது. பாடலில் வரும் “வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே” என்ற வரிகளை நான் சின்ன வயதில்,  ஒரு கதையில் வரும் பெண்ணை வர்ணிக்க பயன்படுத்தினேன். இந்த வரிகளுக்கு மேட்ச் ஆகவேண்டும் என்று வானதி என்று இருந்த பெயரை மேனகை என்று மாற்றினேன். அதை அக்கா கண்டு பிடித்து, நான் வைரமுத்துவை  காப்பி பண்ணுவதாய் நக்கல் அடித்தது ஞாபகம் வருகிறது. பதினெட்டு வருஷம் ஆகி விட்டது .. ம்ஹூம் கதையில் வரும் மேனகை, சைக்கிளில் போகும் போது பொம்மர் குண்டு விழுந்து உயிரிழப்பதாக முடித்திருந்தேன். சுஜாதாவின் ஆண்டாள் சிறுமியால்  வந்த inspiration என்று இப்போது நினைக்கும் போது புரிகிறது. கதையை வாசித்த குமரன் மாஸ்டர், ஆச்சரியப்பட்டு அடுத்தடுத்த வகுப்புகளுக்கும் வாசித்து காட்டினார். எனக்கு முதலில் கிடைத்த அங்கீகாரம். அவரை யாரோ சென்ற மாதம் யாழ்ப்பாணத்தில் வெட்டிப்போட்டு விட்டார்கள்! உடலை இன்டர்நெட்டில் பார்த்தபோது பகீர் என்றது! 

“நான் என்பதில் ன் மறைந்து இம் வந்ததும் ஏனோ”
“போ என்பதில் போ ஒழிந்து வா வந்ததும் ஏனோ”
என்ன அதே வரிகளா? மீண்டும் சாட்சாத் வைரமுத்துவே தான். அப்பு திரைப்பட பாடல். வசந்த் தேவா கம்பினேஷனில் வந்த இன்னொரு classic ஆல்பம். இந்த படப்பாடல்கள் பற்றி தனிப்பதிவே போடலாம். ஹரிணி ஹரிஹரனின் legendary song. உங்களில் யாருக்காவது பிடிக்குமா?  நான் வாரம் இரு முறையாவது கேட்பேன்.  ஆனால் ஆச்சரியம் இந்த பாடல்கள் எல்லாம் facebook ல் காண கிடைப்பதில்லை. நமக்கு ராஜா ரகுமான் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறார்களோ? இல்லாவிடில் படமாவது பிரபலமாக இருக்கவேண்டும்!


இந்த வகை “நான் நீ நாம்” வகையறா வரிகள் அந்த காலத்திலும் வந்து இருக்கின்றன. இது சூரசம்காரம் பட பாடல். இசை நம்ம ராஜா தான். கங்கை அமரன் பாடல் வரிகள். அருண்மொழி சித்ராவின் இன்னொரு காதலிக்க வைக்கும் பாடல்.
நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி

இந்த படத்தில் இரண்டு பாடல்கள் அருண்மொழி பாடியிருக்கிறார். ஆச்சரியம்.சித்ரா full form இல் இருந்த காலம். பாடும் போது ஏங்க வைப்பார். காதல் வடியும் குரல்.
கூடினேன் பண் பாடினேன்- என்
கோலம் வேறு ஆனேன்.
தாவினேன் தள்ளாடினேன்-உன்
தாகம் தீர்க்கலானேன்
மிகச்சாதாரணமான வரிகள். ஆளை போட்டுத்தாக்கும் மெட்டும் குரலும் இசையும். சொல்லுங்கள்? மெட்டா வரிகளா ஒரு பாடலுக்கு முக்கியம்? இரண்டும் முக்கியம் என்று எக்ஸ்ட்ரா சப்பை கட்டு கட்ட வேண்டாம்!

Comments

  1. I am pretty sure you would like the below.

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=4sAh02JRtpk

    ReplyDelete
  2. Thanks Shakthivel ...German music .. fast paced bach like music .. tough composition.. I love it although I am more of a melody guy.

    ReplyDelete

Post a comment

Contact Form