Skip to main content

ஜெயலலிதா



பதினொரு வயது இருக்கலாம். எங்கள் ஊர்களில் எல்லாம் மண்ணெண்ணெய் ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து இரவு முழுதும் ஆறேழு படங்களைத் தொடர்ச்சியாகப் பார்க்கின்ற சீசன் அது. ஸ்பொன்சர்களுக்காகப் பழைய படங்களை முதலாவதாக ஏழு மணிக்கே போடவேண்டிய தேவை எமக்கு அப்போது இருந்தது. ஒருமுறை இரண்டு லீட்டர் எண்ணெய் இலவசமாகத் தந்தார் என்பதற்காக, அவர் சொல்லிப் போட்ட படம்தான் “எங்கிருந்தோ வந்தாள்”

ஹீரோ சிவாஜி. மனநிலை பாதிக்கப்பட்டவராக நடித்த படம். ஹீரோவுக்கு மனநிலை குழம்பிய சமயத்தில் அவரை எல்லோரும் கைவிட்டுவிட, ஹீரோயின் மாத்திரம் பரிவுகாட்டிப் பணிவிடை செய்வார். ஆனால் ஹீரோ குணமானதும் அவருக்கு நிகழ்ந்ததெல்லாம் மறந்துவிடும். தமிழில் இதுபோல் ஆயிரம் திரைப்படங்களும் நாவல்களும் வெளியாகிவிட்டன. “எங்கிருந்தோ வந்தாள்”தான் எல்லாவற்றுக்கும் ஆரம்பம் என்று நினைக்கிறேன்.
“எங்கிருந்தோ வந்தாள்” படத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவராக நடிப்பதற்கு நிறைய ஸ்கோப் உள்ள பாத்திரம் சிவாஜிக்கு. ஆனால் அடித்து ஆடியது என்னவோ அதில் ஹீரோயினாக நடித்த ஜெயலலிதா. வழமையாக ஜெயலலிதா எடுத்து நடிக்கும் பாத்திரங்களிலிருந்து சற்று வேறாக கொஞ்சம் அடக்கி வாசிக்கும் நடிப்பு. மிக இயல்பாகச் செய்திருப்பார். “நான் உன்னை அழைக்கவில்லை” என்று சுசீலாவில் குரலில் ஒரு பாடல் காட்சி உள்ளது. சிவாஜி உலகத்தில் உள்ள அத்தனை எக்ஸ்பிரஸனையும் ஒன்றாகப் பிழிந்து தள்ளுவார். ஜெயலலிதா சிம்பிளாக ஒரு flick. பந்து மைதானம் தாண்டிவிழும். பின்னாளில் “சுமதி என் சுந்தரி” படத்திலும் அப்படித்தான். நடிகை வேடம். ஆனால் மிக சப்டிலாக நடித்திருப்பார். “பொட்டுவைத்த முகமோ” பாடலில் தோன்றி நடித்த ஜெயலலிதாமீது காதல் கொள்ளாதவர்கள் எவரும் இலர். எக்காலத்திலும். 

எனக்கென்னவோ ஜெயலலிதா என்ற நடிகையை பல எம்.ஜி.ஆர் படங்களினால் இழந்துவிட்டோம் என்று தோன்றுகிறது. அவருடைய திறமை அவர் எம்ஜிஆர் தவிர்ந்த ஏனையோருடன் நடித்தபோதே வெளிப்பட்டது.

“இரு மாங்கனிபோல் இதழோரம்” என்ற பாடலைக் கணீரென்று பாடியிருப்பார் ஜெயலலிதா. பாடகியாகவே தனித்து ஜொலிக்கக்கூடிய அளவுக்கு குரல்வளம் கொண்டவர். சில பாடல்களுக்கிடையே அவர் குரல் கொடுத்ததுமுண்டு. “நான் என்றால் அது அவளும் நானும்” என்ற டிப்பிகல் எம்எஸ்வி மெலடியில் இடையிடையே ஜெயலலிதாவின் ஆங்கில சம்பாஷனைகள் இடம்பெறும். “கட்டிய கணவன், கட்டளைப் படியே.., காரிய மாச்சும் குணமுடையாள்” என்று சொல்ல அவர் “In thoughts, birds and bees!” என்பார். அந்த ஆங்கில சொலவடையின் அர்த்தம் புரிந்தால் ரசித்துப் புன்னகைக்கலாம். “புருஷனுக்கு அருகே, சரிசமமாக, அமர்ந்திடத் தயங்கும், பண்புடையாள்” என்று சற்று பயத்துடனேயே ஆண் சொல்ல “Ohh there he goes.., again” என்பார். “அவளொரு பாதி, நானொரு பாதி, என்பதுபோல நடப்பாளே.” எங்கையில் “The better half, than, the bitter half” என்பார். அப்போது அவருடைய எக்ஸ்ப்ரஷன் ... such a smart lady.

இவையெல்லாமே பதின்மங்களில் ஜெயலலிதாமீது எனக்கொரு சொப்ட்கோர்னரை உருவாக்கியிருக்கவேண்டும். போதாதற்கு 97ம் ஆண்டு "இருவர்" திரைப்படம் வெளியாகிறது. இருவரை எந்த முன்முடிபுகள் இல்லாமல் மீண்டுமொருமுறை பாருங்கள். இயல்பாகவும் நைச்சியமாகவும் ஜெயலலிதாவை கல்பனா பாத்திரம்மூலம் மணிரத்னம் செதுக்கியிருப்பார். ஓடும் ஜீப்பிலிருந்து ஆனந்தனுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே குதித்துவிடுவார் கல்பனா. ஆனந்தனும் பதட்டத்துடன் தேடிவந்து நெருங்கையில் கல்பனாவின் கோபம் மறைந்து கொஞ்சம் காதல் எட்டிப்பார்க்கும். எல்லாமே calculated moves. எல்லாமே தெரிந்து செய்வது. நிஜ உலக ஜெயலலிதாவின் அத்தனை அடிகளும் அதிகாரத்தினை நோக்கி, அதிகாரத்தைத் தக்கவைக்க, அளந்து எடுத்து வைக்கப்பட்டவைதாம். அதுவும் வாஜ்பாய் அரசாங்கத்தை ஒரு டீபார்ட்டி மூலம் கவிழ்த்த சம்பவத்தை எவர் மறப்பார்.
ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை நிறையவே பதிவு செய்யப்பட்டுவிட்டது. அவரின் அரசியல்வாழ்வு, தனிப்பட்ட வாழ்வு, ஆளுமை, தலைமைப் பண்புகள் பற்றி விமர்சனத்துடனான ஆய்வுசார் கண்ணோட்டங்கள் அவசியமானவை. அவருடைய சுயசரிதத்தை சசிகலா போன்றவர்கள் பிறர் உதவியுடன் முழு நேர்மையுடன் எழுதலாம். ஆனால் இவையெல்லாம் தமிழ்ச்சூழலில் சாத்தியமற்றவை. இக்கணத்தில் அவைபற்றிப் பேசத் தேவையுமில்லை.

கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களாக நம்மோடு, நம்காலத்தில் கூட வாழ்ந்த ஒரு பொது ஆளுமை. இப்போது இல்லை என்னும்போது ஏதோ ஒன்று அடிவயிற்றைப் பிசைகிறது. விளக்கம் கொடுக்கமுடியவில்லை. அது எங்கோ ஒரு மூலையில் தனியோர்மத்துடன் வாழ்ந்து கழித்த காஸ்ட்ரோவுடைய மரணமாகட்டும். அல்லது லீகுவான்யூவாக இருக்கட்டும். நம் அயல் தேசத்தின் ஜெயலலிதாவாகட்டும். இவர்களோடு நெருங்கிப்பழகியதில்லை. ஆனால் பாதிக்கிறார்கள்.
இரவு வானத்தை அண்ணாந்து பார்க்கையில், சமயத்தில் நட்சத்திரங்கள் காணக்கிடைக்காதபோது ஒரு வெறுமை கிடைக்குமே. நட்சத்திரங்கள் எல்லாம் தொலைந்துவிட்டனவோ என்ற ஏக்கம் கணம் தோன்றி மறையும். நட்சத்திரங்களுக்கும் நமக்குந்தான் என்ன உறவு?

மண்ணை வேர்கள் பிரிந்தாலும் விண்ணை நீலம் பிரிந்தாலும்
கண்ணை மணிகள் பிரிந்தாலும் உனை நான் பிரியேன்.

சங்கம் தமிழைப் பிரிந்தாலும் சத்தம் இசையைப் பிரிந்தாலும்
தாளம் சுருதியைப் பிரிந்தாலும் உனை நான் பிரிகிலேன்.

அஞ்சலிகள்.

Popular posts from this blog

அன்புள்ள கம்பவாரிதி ஐயாவுக்கு

  கம்பன் விழா நிகழ்வுகள் இனிதே நிறைவேறியிருக்கும் என்று நம்புகிறேன். விழாவிலே கலந்துகொள்ளமுடியாவிட்டாலும் விழா நாட்களை நானும் கம்பனோடே கழித்தேன். இம்முறை விழா நாட்களில் மிகச்சிரத்தை எடுத்து படிக்க முயன்ற பாடல்கள் வாலி வதை சார்ந்தவை. எனக்கு நீங்கள் அடிக்கடி சொல்லுவதொன்று ஞாபகம் வருகிறது. இராமனது அம்பு தோற்ற ஒரே இடம் வாலிவதை. “செம்மை சேர் இராம நாமம்” எனும் இடத்தில் கம்பன் கூட சற்றே சறுக்கினான் என்று சொல்வீர்கள். வாலிமீது மறைந்திருந்தேனும் கணை வீசும் தகுதியும் துணிச்சலும் எவருக்கும் கிடையாது. அதானாலே தன்மீது ஒரு சரம் பாய்ந்ததும் அவன் ஆச்சரிய மிகுதியில் குழம்புவான். யாரவன் என்று வினவுவான். 'தேவரோ?' என அயிர்க்கும்; 'அத் தேவர், இச் செயலுக்கு ஆவரோ? அவர்க்கு ஆற்றல் உண்டோ?' எனும்; 'அயலோர் யாவரோ?' என நகைசெயும்; 'ஒருவனே, இறைவர் மூவரோடும் ஒப்பான், செயல் ஆம்' என மொழியும். “ஒருவனே, இறைவர் மூவரோடும் ஒப்பான், செயல் ஆம்” எல்லாம் கம்பன் மாத்திரமே பண்ணக்கூடிய நுட்பங்கள். நீங்கள் சொல்லச்சொல்ல, தெரு மணலில் உட்கார்ந்து கேட்டதில் கையில் வைத்திருந்த கச்சான் பக்கற் இளகிப்ப...

டமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்!

  என் அன்புக்குரிய டமில் மக்களே, ஐ தின்க், எங்க பிரசிடெண்ட் செய்யுற அபிவிருத்தி இஸ் குட். என்னால ஸ்ரீலங்கன் கிரிக்கட் அணில லீடிங் ஸ்பின்னரா இருக்கமுடியுமின்னா ஏன் இந்த ஜனங்களால முடியாது? என்னால எய்ட் ஹண்ட்ரட் விக்கட்ஸ் எடுக்கமுடியுதுன்னா, வை கான்ட் அதர்ஸ்? தமிழ் சிங்களம் என்று யாரையும் பிரிச்சு பாக்காதீங்க. நான் டீமில இருக்கறப்போ பீஸ் இருந்தது. சமாதானம். ஒருதடவை ஏசியன் லெவன் டீமுல கப்டினாக இருந்தன் தானே. ஸ்ரீலங்கன் டீமுல வைஸ் கப்டினாவும் இருந்தன். கப்டினா ஆக முடியல்ல. பட் அதுக்கு வன் ரீசன் இருக்கி. நான் சிங்களம் மிச்சம் பேசுவேன். ஆல் டமில்ஸ் நிச்சயமா சிங்களம் படிக்கணும். பிரித் ஒதேக்க நூலைப்பிடிச்சுகிட்டு கும்பிடணும். நீங்க சிங்கள படிச்சா சிங்களீஸ் தமிழ் படிக்க தேவையில்ல தானே. எதுக்கு பிறகு அவங்களும் தமிழ் படிச்சு, அப்புறமா தமிழன் சிங்களத்திலயும் சிங்களவன் தமிழிலையும் பேசி குழம்பி போய், வேஸ்ட்டு. அச்சுவலி வி நீட் வன் பாஷா திட்டம்.

சப்புமல் குமாரயாவின் புதையல்

  குளித்துக்கொண்டிருக்கும்போது கிணற்றடிக்கு அம்மா வந்தார். "யாரோ ஒரு பொம்பிளைப் பிள்ளை உன்னை தேடிக்கொண்டு வந்திருக்கு" கிணற்றடியில்  நின்றவாறே அடைப்பு வேலி விரிசலுக்குள்ளால் முற்றத்தைப் பார்க்கலாம். சொப்பர் சைக்கிள், கறுப்புப்பாவாடை, சிவப்புச்சட்டை, முகம் கிளியராக தெரியவில்லை. தேவையில்லை. இது தாரணிதான். காதருகே மச்சம், இரட்டைப்பின்னல், ஒருபக்க கண் இமை நீளம், கிறங்கடிக்கும் .. என்று வழமையான கதை என்றால் வர்ணனையிலேயே புங்குடுதீவு வரையும் போயிருப்பேன். அந்தளவுக்கு தாரணியை விடாமல் முன்னே பின்னே துரத்தியிருக்கிறேன். 143 சொல்லியிருக்கிறேன். அதான், I LOVE YOU. அவள் கொஞ்சம் ஒபின் டைப். திருப்பி 143 என்றாள். எனக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. அன்றைக்கே கல்யாணியில் பெடியளுக்கு ஸ்பெஷல் வாங்கிக்கொடுத்தேன். ஒருநாள்தான். அடுத்தநாள் வந்து விளக்கம் கொடுத்தாள். 143 என்றால் அவள் அகராதியில் I HATE YOU வாம். இப்படி நிறையச் சொல்லவேண்டும்.  ஆனால் இந்தக் கதையில் அதைச் சொல்ல முடியாது. காரணங்கள் இரண்டு. முதலாவது, இந்தக்கதையில் அடுத்த இரண்டு வரிகளில் "உம்மளை ஒருக்கா பி.கே சேர் வரச்சொன்னார்...