Skip to main content

அங்காடிப் பெண்



இரவு உணவுக்கு நண்பர்கள் வருவதாக இருந்தது.

வீடு படு குப்பையாக இருந்தது. சமையல் சாமான்கள் எல்லாம் தீர்ந்திருந்தது. வாங்கவேண்டும். சமையலறை சின்ங் முழுதும் ஒருவாரத்துப் பாத்திரங்கள் நிறைந்திருந்தன. மினுக்கவேண்டும். வேலைக்கு லீவு போடலாம் என்றால் அன்றைக்கு என்று பார்த்து ஒரு ரிலீஸ் இருந்தது. போயே தீரவேண்டும். அவளும் பிஸி.

காலை ஐந்தரைக்கே அன்றைய நாள் மிரட்ட ஆரம்பித்தது. மிக நீண்ட நாளுக்கான காலை மிக அலுப்புடனேயே விடியும். அன்றும் அப்படித்தான். எல்லாவற்றையும் மறந்துவிட்டு சற்றுநேரம் தூங்கினால் என்ன என்று இருந்தது. முடியவில்லை. தேநீரை ஊற்றி ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தேன். “மாஸ்டர் அண்ட் மாகரிட்டா” நாவல் அலுப்படித்தது. கடவுள் தத்துவ விசாரங்கள் எல்லாம் இப்போது பயங்கரமாக அலுப்படிக்கின்றன. இருக்கு இல்லை என்ற விவாதங்கள் வெறும் வெற்று. இருக்கு என்றால் இருக்கு. இல்லை என்றால் இல்லை. இரண்டாலும் எந்தப்பயனும் இல்லை என்பதே உண்மை. புத்தக வாசிப்பு மனிதர்களின் இயல்புகளைப் பெரும்பாலும் மாற்றியமைப்பதில்லை. அவை கொடுக்கும் விசுவரூப தருணங்களின் நீளம் மிகக்குறைவு. அதிகம் போனால் சேம் பின்ஞ் சொல்ல வைக்கும். அவ்வளவுதான். நமக்குள் உள்ளதை நமக்கே நினைவுபடுத்தும் வேலையைத்தான் புத்தகங்கள் செய்கின்றன. மற்றும்படி பெரிதாக ஒன்றையும் அவை வெட்டி விழுத்துவதில்லை. அதுவும் கூட்டப்படாத வீட்டில், சமையலுக்குச் சாமான்கள் வாங்கவில்லையே என்ற டென்ஷனில் தத்துவவிசாரங்கள் ஒரு மண்ணுக்கும் பிரயோசனமில்லாதவை. மூடிவைத்துவிட்டேன்.

பாட்டைப் பிளே பண்ணிவிட்டு ஒவ்வொரு பாத்திரமாகக் கழுவ ஆரம்பித்தேன். “நான் பகல் இரவு. நீ கதிர் நிலவு” என்று நீத்தி மோகன் ஆரம்பித்தார். இசை அனிருத். அனிருத் இசை பற்றிப் பெரிதான அபிப்பிராயம் ஏதும் எனக்கு இதுவரை இருந்ததில்லை. ஆனால் இந்தப்பாட்டோடு அவர்மீதான மதிப்பு மிக மிக உயர்ந்துவிட்டது. நூறு வருடங்களுக்குப் பிறகும் அனிருத் இந்தப்பாட்டினூடாக நிலைப்பார் என்று தோன்றுகிறது. டிவைன். "நீ வேண்டுமே" என்று பாடும்போது நெகிழாதவர் ஒருவர்தன்னும் உண்டோ?

ஏழு மணிக்குப் பல்பொருள் அங்காடி திறக்கையில் அவசரமாக உள்ளே நுழைந்தேன். குறித்து வைத்திருந்த சாமான்களை எல்லாம் மடமடவென்று எடுத்துப்போட்டபடி கவுண்டருக்குத் திரும்புகையில் தள்ளுவண்டி நிறைந்திருந்தது. இங்கே பல்பொருள் அங்காடிகளில் தானியங்கிக் கவுண்டர்கள் உண்டு. வாடிக்கையாளர்களே பொருட்களை ஸ்கான் பண்ணி, காசையும் கொடுத்துவிட்டுப் போகலாம். எனக்கு ஒவ்வொன்றாக ஸ்கான் பண்ணிப் பையில் போடப் பஞ்சியாக இருந்தது. தானியங்கியைத் தவிர்த்து சாதாரணக் கவுண்டருக்குப் போனேன்.

“ஹவ் ஆர் யூ டுடே?”

வழமையாக இந்தக்கேள்வி இயந்திரத்தனமானதாக இருக்கும். நானும் “குட் தாங்க்ஸ். யுவர்செல்ப்?” என்று இயந்திரத்தனமாக பதிலளித்துவிட்டு பொருட்களைப் பரப்புவேன். ஆனால் இந்தக்குரலில் ஒரு சிநேகம் இருந்தது. நிமிர்ந்து கவுண்டரில் நின்றவரை வடிவாகப் பார்த்தேன். அறுபது வயது மதிக்கத்தக்கப் பெண்மணி. அவர் சிரிக்கும்போது கண், மூக்கு, நெற்றி, கன்னம், காது என்று எல்லாமே சேர்ந்து சிரித்தது. நானும் சிரித்துவிட்டு “ஹவ் ஆர் யூ?” என்றேன். சிநேகமாக. “இஸின்ட் இட் எ லவ்லி டே?” என்றார். அத்தோடு நிறுத்தவில்லை. “இவ்வளவு பொருட்களை காலையிலேயே வாங்குகிறீர்களே, இன்று வீட்டிலே என்ன சிறப்பு?” என்று கேட்டார்.

“நண்பர்கள் வருகிறார்கள்” என்றேன்.

“ஓ லவ்லி. சிறப்பாக ஏதும் சமைக்கிறீர்களா?”

“சிறப்பாக என்று சொல்ல முடியாது. பாஸ்டா செய்கிறோம். டேசெர்ட்டுக்கு அப்பிள் பை செய்யலாம் என்று ஒரு ஐடியா.”

“அற்புதம். உங்கள் ரெசிப்பியின் ரகசியம் என்ன?”

“ரகசியத்தை எப்படி வெளியே சொல்வது? தவிர எனக்கு பையை சாப்பிட மாத்திரமே தெரியும். மனைவிதான் செய்யவேண்டும்”

நான் பகிடி விட்டதாக நினைக்கவில்லை. ஆனால் அவர் விழுந்து விழுந்து சிரித்தார். கூடவே அந்தவழியால் சென்ற இன்னொரு பணியாளரை அழைத்துச்சொன்னார்.

“நான்ஸி. திஸ் ஜென்டில்மென் பமிலி இஸ் மேக்கிங் அன் அப்பிள் பை டுடே”

எனக்கு இப்போது சங்கடமாகப் போய்விட்டது. இருவரையும் இரவு உணவுக்கு வீட்டுக்கு வரச்சொன்னேன். அவர்களும் வருவதாகச் சொன்னார்கள். “வி வில் பலோ த ஸ்மெல்” யாருக்காக இல்லாவிட்டாலும் அவருக்காகவேனும் அந்த அப்பிள் பை அன்று சரியாக அமையவேண்டும் என்று தோன்றியது. பணம் செலுத்தி பில் வாங்கும்வரையிலும் அவர் பேசிக்கொண்டேயிருந்தார். “ஸீ யூ” சொல்லி விடைபெற்று காரில் வந்து ஏறிய பின்னரும் என் முகத்தில் சிரிப்பு மறையாமலிருந்தது. காது, மூக்கு, கன்னம், நெற்றி எல்லாம் சேர்ந்து சிரிக்கும் சிரிப்பு. அன்று முழுதும் அந்தச்சிரிப்பு என் முகத்திலிருந்து மறையவேயில்லை.

காலை ஏழு மணிக்கு அன்றைய நாளின் அத்தனை டென்சனையும் முகத்தில் தாங்கியபடி வந்தவனை அந்தப்பெண்மணியால் எப்படி மாற்றியமைக்க முடிந்தது? என்னுடைய காலைப்பொழுது எப்படி அவ்வளவு இனிமையாக மாறிப்போனது? அன்று நான் தானியங்கி எந்திரத்தில் சாமான்களை ஸ்கான் பண்ணியிருந்தால் அந்தச் சிரிப்பை இழந்திருப்பேன். அந்த நாளின் கொண்டாட்டத்தையும் தொலைத்திருப்பேன். அன்று மட்டும் எத்தனை மனிதர்களின் காலையை அந்தப்பெண்மணி இனிமையாக்கியிருப்பார்? ச்சைக். அவருடைய பெயரைக்கூட கேட்கவில்லை நான்.

மிகச்சிறந்த இலக்கியங்கள் எல்லாம் இப்படி நம்மைச் சுற்றி நடமாடிக்கொண்டிருக்கையில் வீணாகப் புத்தகங்களுக்குள் ஏன் மூழ்கிக்கிடக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...