Skip to main content

கதாவிலாசம்


274
ஒவ்வொரு கதையை வாசிக்கும்போதும் வாசகன் தானும் ஒரு படைப்பாளி ஆகிறான். பாத்திரங்களை படைக்கிறான். காட்சிகளை உருவாக்குகிறான். இன்செப்ஷன் படத்தில் அந்த ஆர்கிடெக்ட் பெண், கனவில் கட்டிடங்களையும் மனிதர்களையும் வடிவமைப்பாள். வாசிக்கும்போதும் அது நடக்கும். இராமநாதபுரமும் போஸ்டனும், நல்லூரும் கொழும்பும் அநேகமான நூலகங்களிலேயே அடிக்கடி உருவாகின்றன. மார்கழி மாதத்துகுளிர் வாஷிங்டன் பனி காலத்து நடையை உருவகிக்க போதுமானதாக இருக்கும்.

The namesake வாசிக்கும்போது நானே கொகுலாகவும் அஷோக்காகவும் ஆஷிமாவாகவும் உருவம் எடுத்திருக்கிறேன். அஷோக் இறந்தசெய்தி கேட்டு ஆஷிமாவுக்கு குளிர முதல் எனக்கு குளிர்ந்தது. பிரிவோம் சந்திப்போம் ரத்னாவுடன் பேசுவதற்கு வெட்கப்பட்டு தலை குனிந்திருக்கிறேன். மஞ்சளழகி கடற்கரையில் நீராடிவிட்டு வருகையிலே வசமிழந்திருக்கிறேன். கோபல்ல கிராமத்து அண்ணாச்சியின் புத்தக அலுமாரியை நோட்டம் விட்டிருக்கிறேன். ஐன்ஸ்டீனோடு பொன் நகரத்து புகையிரத மணிக்கூட்டை ஆச்சர்யமாக பார்த்திருக்கிறேன். ஒன்று கதை மாந்தராக நாங்கள் மாறுவோம். இல்லை கதை மாந்தரோடு அசரீரியாக உலாவுவோம்.

ஒவ்வொரு புத்தகத்தையும் வாசிக்கும்போது அதை எழுதிய எழுத்தாளன் தான் உலகிலேயே அதி சிறந்த எழுத்தாளன் என்ற எண்ணம் வரும். செல்லம்மாளை வாசித்தபோது புதுமைப்பித்தனை விட எவன் வருவான் என்று எண்ணினேன். கோர்த்சேயின் Disgrace வாசித்தபோது இப்படியும் எழுதமுடியுமா என்று தோன்றியது. கோயில் மண்டபத்து மூலையில் சிவனே என்றிருக்கும் குட்டி பிள்ளையார் சிலையை பார்க்கும்போது அதற்குள் தான் கடவுள் இருக்கிறார் என்ற எண்ணம் வரும். வணங்காமல் போக மனம் வராது. ஒரு அழகான கவர் ட்ரைவை சச்சின் அடித்தாலும் கௌரி அடித்தாலும் மெய் சிலிர்க்கிறது. இதில் பெரியோர் சிறியோர் ஏது?

வாசிப்பும் அப்படியே.

எஸ்ராவின் கதாவிலாசத்தை வாசித்தபோது சேம் பின்ச். மனுஷன் கதாசிரியர்களை கொண்டாடியிருக்கு. கூட வாழ்ந்திருக்கு. ஒப்பிடுதல் என்பது கொண்டாடுவதற்காகவே ஒழிய ஒருவரை உயர்த்தி மற்றவரை தாழ்த்த அல்ல. அதை எஸ்ரா சொல்லாமல் அழகாக செய்கிறார். தும்பைபூவின் நுனியில் இருக்கும் தேன்துளி சிறிதே என்றாலும் அதன் சுவைக்கு நிகரே இல்லை என்கிறார். தன் வாழ்வில் கண்ட நிகழ்வுகளை, மாந்தர்களை வாசிக்கும்போது கொண்டுவருகிறார். அல்லது அவர்களாக வந்து உட்கார்ந்து கொள்கிறார்கள். ரசிகன்டா.

வாசித்துக்கொண்டிருக்கும்போதே கேதா வீட்டு கழிவறை கொமெட் டாங்கில் கதாவிலாசம் இருந்த ஞாபகம் வந்தது!
மெசேஜ் அனுப்பினேன். பதில் வந்தது.
"That book changed me, rasikan bass. He get lost and make us get lost and immerse in it."
தன்னை தொலைத்து வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் எழுத்தாளன் ஆகலாம். எஸ்ரா எழுத்தாளன் ஆனதில் ஆச்சரியம் இல்லை. எப்போது எழுத்தாளன் வாசிப்பை நிறுத்துகிறானோ அவன் எழுத்துகளும் ஒரு குறித்த வடிவத்துக்குள் தேங்கிவிடும். அல்லது எழுதுவதை நிறுத்திவிடுவார்கள். வாத்தியார் மரணப்படுக்கையிலும் வாசித்தார். எழுதினார்.

s-ramakrishnan

கதாவிலாசம் … வாசிப்பின் கொண்டாட்டம்.

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.