Skip to main content

மாலைப் பொழுதிலொரு மேடை



பொம்பே ஜெயஸ்ரீயின் இசை நிகழ்ச்சி முடிந்து இரண்டு நாள்களாகிவிட்டன. ஆனாலும் இன்னமும் மழை நின்றும் தூறல் அடங்காத கதைதான். எந்நேரமும் அவர் பாடல்களோடே இருக்கிறேன். இதை எப்படி விவரிப்பது என்று விளங்கவில்லை. உணர்ச்சி மிகுந்த நிலையில் எழுதக்கூடாது என்று நினைத்திருந்தேன். இப்போது எழுதியாவது கடக்கலாமா என்று பார்க்கிறேன்.

கர்நாடக சங்கீதம் பற்றிய அறிவு எனக்குக் கிஞ்சித்தேனும் கிடையாது. ஆனால் அதை ஓரளவு ரசிக்கத் தெரியும். “சாமஜவரகமணா” என்ன இராகம் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதைக் கேட்க அவ்வளவு பிடிக்கும். இசை அரங்குகளில் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லோரும் தாளம் போடுகையில் திருவிழாவில் தொலைந்தவனின் நிலை ஏற்படுவது என்னவோ உண்மைதான். ஆனால் மற்றவர் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல், என் எல்லைக்குள் நின்று இவ்விசையை நீக்கமற எனக்கு இரசிக்கத்தெரியும். அதிலிருக்கும் சீவன் விளங்கும். சுற்றிவர இசை சார்ந்தவர்கள் இருப்பதால், இப்போதெல்லாம் ஓரளவுக்கு அதன் கணக்கு வழக்குகளும் புரியத்தொடங்கியிருக்கிறது. அவ்வளவுதான். ஆகப்பட்ட நான் பொம்பே ஜெயஸ்ரீயின் இசையைப்பற்றி என்னத்தைச் சொல்லிவிடமுடியும்? இசை நுணுக்கங்களை நான் ஒருபோதும் இங்கே குறிப்பிடப்போவதில்லை. ஆனால் உணர்வைப் பற்றிப் பக்கம் பக்கமாகப் பேசலாம். பேசாவிட்டால் இந்த மூட்டம் இலகுவில் அகன்றுவிடாது என்றே தோன்றுகிறது.

எங்கிருந்து தொடங்க? ஒரு கர்நாடக சங்கீதக் கச்சேரியை இவ்வளவு மென்மையாக, இணக்கமாக ஒருவரால் இசைக்கத்தான் முடியுமா? இந்த மனிதரால் எப்படி அது சாத்தியமாகிறது? எங்கோ வானவெளியில், வெகு உயரத்தில், தனக்கென ஒரு மேடையை அமைத்து, அங்கிருக்கும் மேகக்கூட்டங்கள் அதிராவண்ணம் இசையை மீட்டி, கடவுள் என்ற அகத்தேடலுக்கு மிக நெருக்கமாக எப்படி அவரால் செல்ல முடிகிறது? தான் சென்றதும் போதாதென்று எம்மையும் அங்கே அழைத்துச்சென்ற வித்தையை என்னென்பது? ஜெயஸ்ரீ நெட்டுருகிப் பாடுகையில் மிகச்சிறிதாக ஒடுங்கிய நிலையே எனக்கு ஏற்பட்டது. கடல் அள்ளக் காத்துக்கிடக்கும் ஒரு மணல் துகள்போல என்னை அப்போது உணர்ந்தேன். மணிவாசகர் இப்படித்தான் கடவுளை நினைந்து பாடியிருப்பாரோ என்ற எண்ணமும் வந்துபோனது. கடவுள் நம்பிக்கையின் மீதான பொறாமையை ஏற்படுத்தும் கணங்கள் இவை. இருந்து தொலைத்தால் குடியா மூழ்கிவிடும்? ப்ச். என்ன செய்வது? 

ஜெயஸ்ரீயின் இசைக்கு ஏற்றாற்போல பக்கவாத்தியங்கள். வயலின்காரர் இன்னொரு மேகதூதர். அவருக்குத் தான் ஒரு அரங்கில் உட்கார்ந்திருக்கிறோம் என்கின்ற பிரக்ஞைகூட இருக்கவில்லை. தன்னுடையப் பெருவெளியில் அவர்பாட்டுக்குச் சஞ்சாரம் செய்துகொண்டிருந்தார். கடம் வாசித்தவரும் அப்படித்தான். மிருதங்கமும். எல்லோருமே அவரவர் மேகங்களில் உட்கார்ந்து இசை மீட்க, அவை எல்லாம் சேர்ந்து, கலந்து மழையாகி எம் எல்லோர் காதுகளிலும் இதமாகப் பொழிந்தது. டிவைன்.

நான் ஒரு நிலைத்தகவலில், ஜெயஸ்ரீ முன்னர் இசைக்கோப்புகளில் பாடிய மூன்று பாடல்களைக் குறிப்பிட்டு, அவர் இவற்றில் ஏதாவது ஒன்றையேனும் பாடினால் தன்யனாவேன் என்று குறிப்பிட்டிருந்தேன். நிகழ்ச்சி முடிந்தபிற்பாடு அதை நினைக்கச் சிரிப்பாக இருந்தது. அவ்வளவுதான் நம்முடைய அறிவு. என் காதுகளை மென்மையாகப் பிடித்துத் திருகி, “அவையெல்லாம் ஒன்றுமேயில்லை ராசா, இந்தா இதைக்கேட்டுப்பார்” என்று நிகழ்ச்சியில் அவர் பாடிய உருப்படிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். முன்னென்றும் நான் அறிந்திராத புதுத்தளம். ஒன்று மட்டும் புரிந்தது. கலைஞர்களிடம் ஒருபோதும் நாம் நினைப்பதை எதிர்ப்பார்ப்பது ஊறு. அவர்களை நம் நிலையில் வைத்துப்பார்ப்பதால் நிகழ்வது அது. மிகச்சிறந்த கலைஞர்கள் எப்போதுமே நாம் எதிர்ப்பார்ப்பதற்கும் மேலாகவே நமக்குத்தருவார்கள். அதற்காக நம்மைத்தயார்படுத்துதல் மாத்திரமே நம் வேலை. அதைக்கூட சமயத்தில் அவர்களே செய்துவிடுவதுமுண்டு.

ஜெயஸ்ரீ நிகழ்வில் பாடியவை பெரும்பாலும் பிறமொழி உருப்படிகள். எனக்கு எந்தப்பாடலின் வரிகளுமே ஞாபகத்தில் இல்லை. ஒரு பல்லவியும் (கண்டன கண்கள் கலந்தன நெஞ்சம்), தில்லானாவும் (உன்னைச் சரணடைந்தேன் ஓம்காரி கௌரி) தமிழில் பாடினார். இசையின் மயக்கத்தில் அவற்றின் முழுவரிகளும் இப்போது மறந்துவிட்டது. சரி, தாலாட்டுக்கு வரிகள் எதற்கு?



ஜெயஸ்ரீ திடீரென்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றி கூறிவிட்டுத் தில்லானா பாட ஆரம்பித்ததும்தான், நிகழ்ச்சி முடியப்போகிறது என்ற உண்மை உறைத்தது. இரண்டரை மணித்தியாலம் என்னத்துக்குக் காணும்? இன்னமும் ஒரு மணித்தியாலமாவது பாடியிருக்கலாமோ? அப்படிப் பாடியிருந்தாலும் இதைத்தானே சொல்லியிருப்பேன். அவரின் கச்சேரி இந்தவார இறுதியில் சிட்னியில் நடைபெறுகிறது. இசையை ரசிக்கும் சிட்னி நண்பர்கள் இச்சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு விடாதீர்கள். அதென்ன சிட்னி நண்பர்கள்? பேசாமல் நாமே காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டு வந்தாலும் வருவோம். இருக்கும் மனநிலை அப்படி. 

“Life of Pi” படத்தின் “கண்ணே கண்மணியே” தாலாட்டுப்பாடலுக்கு இசைச்சேர்ப்புச் செய்து பாடியவர் பொம்பே ஜெயஸ்ரீ. பரந்து விரிந்த சமுத்திரத்தின் நடுவே, தனியே ஒரு படகில் தத்தளிக்கிறது ஒரு புலி. காட்டின் ராஜாவான புலிக்கு அந்தச் சமுத்திரத்தில் கிடைக்கும் ஒரே கொழுகொம்பு “பை”. அவன்தான் அதற்கு உணவும் நீரும் கொடுத்து ஆதரவு கொடுப்பான். அதனைத் தன் மடியில் வைத்துத் தலையை வருடிவிடுவான். அவனின் மடியில் அந்தப்புலி ஒரு குழந்தையாட்டம் படுத்துத் தூங்கும். அப்போது மெல்லிய தென்றலாய் ஜெயஸ்ரீயின் தாலாட்டு திரைப்படத்தில் ஒலிக்கும்.

எனக்கென்னவோ கிட்டத்தட்ட அதே வருடலைத்தான் இந்த இரண்டரை மணிநேரச் சங்கீதக் கச்சேரியிலும் ஜெயஸ்ரீ கொடுத்தார் என்று தோன்றுகிறது.
“சாலப் பல பல நற்பகற் கனவில்
தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்”

000 







Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.