மாலைப் பொழுதிலொரு மேடை

Aug 21, 2017 2 comments


பொம்பே ஜெயஸ்ரீயின் இசை நிகழ்ச்சி முடிந்து இரண்டு நாள்களாகிவிட்டன. ஆனாலும் இன்னமும் மழை நின்றும் தூறல் அடங்காத கதைதான். எந்நேரமும் அவர் பாடல்களோடே இருக்கிறேன். இதை எப்படி விவரிப்பது என்று விளங்கவில்லை. உணர்ச்சி மிகுந்த நிலையில் எழுதக்கூடாது என்று நினைத்திருந்தேன். இப்போது எழுதியாவது கடக்கலாமா என்று பார்க்கிறேன்.

கர்நாடக சங்கீதம் பற்றிய அறிவு எனக்குக் கிஞ்சித்தேனும் கிடையாது. ஆனால் அதை ஓரளவு ரசிக்கத் தெரியும். “சாமஜவரகமணா” என்ன இராகம் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதைக் கேட்க அவ்வளவு பிடிக்கும். இசை அரங்குகளில் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லோரும் தாளம் போடுகையில் திருவிழாவில் தொலைந்தவனின் நிலை ஏற்படுவது என்னவோ உண்மைதான். ஆனால் மற்றவர் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல், என் எல்லைக்குள் நின்று இவ்விசையை நீக்கமற எனக்கு இரசிக்கத்தெரியும். அதிலிருக்கும் சீவன் விளங்கும். சுற்றிவர இசை சார்ந்தவர்கள் இருப்பதால், இப்போதெல்லாம் ஓரளவுக்கு அதன் கணக்கு வழக்குகளும் புரியத்தொடங்கியிருக்கிறது. அவ்வளவுதான். ஆகப்பட்ட நான் பொம்பே ஜெயஸ்ரீயின் இசையைப்பற்றி என்னத்தைச் சொல்லிவிடமுடியும்? இசை நுணுக்கங்களை நான் ஒருபோதும் இங்கே குறிப்பிடப்போவதில்லை. ஆனால் உணர்வைப் பற்றிப் பக்கம் பக்கமாகப் பேசலாம். பேசாவிட்டால் இந்த மூட்டம் இலகுவில் அகன்றுவிடாது என்றே தோன்றுகிறது.

எங்கிருந்து தொடங்க? ஒரு கர்நாடக சங்கீதக் கச்சேரியை இவ்வளவு மென்மையாக, இணக்கமாக ஒருவரால் இசைக்கத்தான் முடியுமா? இந்த மனிதரால் எப்படி அது சாத்தியமாகிறது? எங்கோ வானவெளியில், வெகு உயரத்தில், தனக்கென ஒரு மேடையை அமைத்து, அங்கிருக்கும் மேகக்கூட்டங்கள் அதிராவண்ணம் இசையை மீட்டி, கடவுள் என்ற அகத்தேடலுக்கு மிக நெருக்கமாக எப்படி அவரால் செல்ல முடிகிறது? தான் சென்றதும் போதாதென்று எம்மையும் அங்கே அழைத்துச்சென்ற வித்தையை என்னென்பது? ஜெயஸ்ரீ நெட்டுருகிப் பாடுகையில் மிகச்சிறிதாக ஒடுங்கிய நிலையே எனக்கு ஏற்பட்டது. கடல் அள்ளக் காத்துக்கிடக்கும் ஒரு மணல் துகள்போல என்னை அப்போது உணர்ந்தேன். மணிவாசகர் இப்படித்தான் கடவுளை நினைந்து பாடியிருப்பாரோ என்ற எண்ணமும் வந்துபோனது. கடவுள் நம்பிக்கையின் மீதான பொறாமையை ஏற்படுத்தும் கணங்கள் இவை. இருந்து தொலைத்தால் குடியா மூழ்கிவிடும்? ப்ச். என்ன செய்வது? 

ஜெயஸ்ரீயின் இசைக்கு ஏற்றாற்போல பக்கவாத்தியங்கள். வயலின்காரர் இன்னொரு மேகதூதர். அவருக்குத் தான் ஒரு அரங்கில் உட்கார்ந்திருக்கிறோம் என்கின்ற பிரக்ஞைகூட இருக்கவில்லை. தன்னுடையப் பெருவெளியில் அவர்பாட்டுக்குச் சஞ்சாரம் செய்துகொண்டிருந்தார். கடம் வாசித்தவரும் அப்படித்தான். மிருதங்கமும். எல்லோருமே அவரவர் மேகங்களில் உட்கார்ந்து இசை மீட்க, அவை எல்லாம் சேர்ந்து, கலந்து மழையாகி எம் எல்லோர் காதுகளிலும் இதமாகப் பொழிந்தது. டிவைன்.

நான் ஒரு நிலைத்தகவலில், ஜெயஸ்ரீ முன்னர் இசைக்கோப்புகளில் பாடிய மூன்று பாடல்களைக் குறிப்பிட்டு, அவர் இவற்றில் ஏதாவது ஒன்றையேனும் பாடினால் தன்யனாவேன் என்று குறிப்பிட்டிருந்தேன். நிகழ்ச்சி முடிந்தபிற்பாடு அதை நினைக்கச் சிரிப்பாக இருந்தது. அவ்வளவுதான் நம்முடைய அறிவு. என் காதுகளை மென்மையாகப் பிடித்துத் திருகி, “அவையெல்லாம் ஒன்றுமேயில்லை ராசா, இந்தா இதைக்கேட்டுப்பார்” என்று நிகழ்ச்சியில் அவர் பாடிய உருப்படிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். முன்னென்றும் நான் அறிந்திராத புதுத்தளம். ஒன்று மட்டும் புரிந்தது. கலைஞர்களிடம் ஒருபோதும் நாம் நினைப்பதை எதிர்ப்பார்ப்பது ஊறு. அவர்களை நம் நிலையில் வைத்துப்பார்ப்பதால் நிகழ்வது அது. மிகச்சிறந்த கலைஞர்கள் எப்போதுமே நாம் எதிர்ப்பார்ப்பதற்கும் மேலாகவே நமக்குத்தருவார்கள். அதற்காக நம்மைத்தயார்படுத்துதல் மாத்திரமே நம் வேலை. அதைக்கூட சமயத்தில் அவர்களே செய்துவிடுவதுமுண்டு.

ஜெயஸ்ரீ நிகழ்வில் பாடியவை பெரும்பாலும் பிறமொழி உருப்படிகள். எனக்கு எந்தப்பாடலின் வரிகளுமே ஞாபகத்தில் இல்லை. ஒரு பல்லவியும் (கண்டன கண்கள் கலந்தன நெஞ்சம்), தில்லானாவும் (உன்னைச் சரணடைந்தேன் ஓம்காரி கௌரி) தமிழில் பாடினார். இசையின் மயக்கத்தில் அவற்றின் முழுவரிகளும் இப்போது மறந்துவிட்டது. சரி, தாலாட்டுக்கு வரிகள் எதற்கு?ஜெயஸ்ரீ திடீரென்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றி கூறிவிட்டுத் தில்லானா பாட ஆரம்பித்ததும்தான், நிகழ்ச்சி முடியப்போகிறது என்ற உண்மை உறைத்தது. இரண்டரை மணித்தியாலம் என்னத்துக்குக் காணும்? இன்னமும் ஒரு மணித்தியாலமாவது பாடியிருக்கலாமோ? அப்படிப் பாடியிருந்தாலும் இதைத்தானே சொல்லியிருப்பேன். அவரின் கச்சேரி இந்தவார இறுதியில் சிட்னியில் நடைபெறுகிறது. இசையை ரசிக்கும் சிட்னி நண்பர்கள் இச்சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு விடாதீர்கள். அதென்ன சிட்னி நண்பர்கள்? பேசாமல் நாமே காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டு வந்தாலும் வருவோம். இருக்கும் மனநிலை அப்படி. 

“Life of Pi” படத்தின் “கண்ணே கண்மணியே” தாலாட்டுப்பாடலுக்கு இசைச்சேர்ப்புச் செய்து பாடியவர் பொம்பே ஜெயஸ்ரீ. பரந்து விரிந்த சமுத்திரத்தின் நடுவே, தனியே ஒரு படகில் தத்தளிக்கிறது ஒரு புலி. காட்டின் ராஜாவான புலிக்கு அந்தச் சமுத்திரத்தில் கிடைக்கும் ஒரே கொழுகொம்பு “பை”. அவன்தான் அதற்கு உணவும் நீரும் கொடுத்து ஆதரவு கொடுப்பான். அதனைத் தன் மடியில் வைத்துத் தலையை வருடிவிடுவான். அவனின் மடியில் அந்தப்புலி ஒரு குழந்தையாட்டம் படுத்துத் தூங்கும். அப்போது மெல்லிய தென்றலாய் ஜெயஸ்ரீயின் தாலாட்டு திரைப்படத்தில் ஒலிக்கும்.

எனக்கென்னவோ கிட்டத்தட்ட அதே வருடலைத்தான் இந்த இரண்டரை மணிநேரச் சங்கீதக் கச்சேரியிலும் ஜெயஸ்ரீ கொடுத்தார் என்று தோன்றுகிறது.
“சாலப் பல பல நற்பகற் கனவில்
தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்”

000 Comments

 1. We are all blessed to have such concerts to lose ourselves to be found.

  ReplyDelete
 2. நீங்கள் சொல்வது போல சூரியனுக்கு வெளிச்சம் அடிப்பது மாதிரி தான் பாம்பே ஜெயஸ்ரீ பற்றி நான் கதைப்பது .எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடகி சங்கீதத்தை பற்றி தவறி கூட நான் கதைப்பதில்லை ஏனெனில் சுற்றி இருப்பவர்கள் எல்லாமே பாண்டித்யம் பெற்றவர்கள் .எனது பெற்றோர்கள் இசையில் ஆர்வம் இல்லையோ அல்லது நேரம் இன்மையோ தெரியாது என்னை விடவில்லை . அதே பிழையை எனது பிள்ளைக்கும் செய்ய கூடாது என்பதில் மிக பிடிவாதம் .எத்தனையோ தடவை நான் தாழ்வு மனப்பான்மைக்கு சென்று வந்திருக்கிறேன்சுற்றி இருப்பவர்களால்ச.ரி அதை விடுவோம்
  சில வருடங்களின் முன் ஒரு நிகழ்ச்சிக்கு மெட்லி ஒன்றுக்கு " எந்த காற்றின் அளாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ "
  என்று சரணத்தில் இருந்து நான் பாடியது இப்பவும் இனிக்கிறது ।மறக்க முடியாத நாட்கள் அவை ।
  அந்த ஹஸ்கி வாய்ஸ் என்னமோ செய்யும் ।எதோ ஒரு சோகம் இழையோடும் ।
  எண்ணி எண்ணி பார்த்திடிலோர் என்னமில்லை நின் சுவைக்கே பாரதியார் பாடல்களை உன்னிகிருஷ்ணனின் குரலிலும் இவரின் குரலிலும் மட்டுமே உயிர் இருப்பதாக தோன்றும்

  ReplyDelete

Post a comment

Contact form